அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வனிதை உடல் (பழநி)
பழநியப்பா!
மாதர் மயலில்
உழன்ற இந்த மூடனுக்கு அருள் புரி.
தனதனன
தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல்
காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே
மனிதருரு
வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக்
கனகமுலை
மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக்
கனபொருளெ
லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய்
புனமதனில்
வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே
பொருமதனை
நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
புதியமயி லேறு கந்த ...... வடிவேலா
பனகமணி
மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே
பகையசுரர்
மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வனிதை
உடல் காய நின்று, உதிரம் அதிலே உருண்டு,
வயிறில் நெடு நாள் அலைந்து, ...... புவிமீதே
மனிதர்
உரு ஆகி வந்து, அநுதினமுமே வளர்ந்து,
வயது பதினாறு சென்று, ...... வடிவாகி,
கனகமுலை
மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று,
கனிவு அது உடனே அணைந்து, ...... பொருள்தேடி,
கன பொருள் எலாம் இழந்து, மயலில் மிகவே அலைந்த,
கசடன்எனை ஆள உன்தன் ...... அருள்தாராய்.
புனம்
அதனில் வாழுகின்ற வநிதை, ரகுநாதர் தந்த
புதல்வி, இதழ் ஊறல் உண்ட ...... புலவோனே!
பொரு
மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த,
புதிய மயில் ஏறு கந்த! ...... வடிவேலா!
பனகம்
அணி மா மதங்கி, குமரி,வெகு நீலி, சண்டி,
பரமகலியாணி, தந்த ...... பெருவாழ்வே!
பகை
அசுரர் மாள வென்று, அமரர் சிறை மீள வென்று,
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
பதவுரை
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ---
தினைப்புனத்தில் வாழுகின்ற பெண்மணியும்,
ரகுநாதர் தந்த புதல்வி --- ரகு குலத்தின்
தலைவராகிய திருமால் பெற்ற மகளுமாகிய வள்ளிபிராட்டியின்,
இதழ் ஊறல் உண்ட புலவோனே --- இதழின்
அமுதத்தைப் பருகிய அறிஞரே!
பொரும் மதனை நீறு கண்ட ---
மலர்க்கணையால் போர் செய்த மன்மதனைச் சாம்பராகச் செய்த,
அரிய சிவனார் உகந்த --- அருமையுடைய
சிவபெருமான் மகிழ்ந்த,
புதிய மயில் ஏறு கந்த --- புதுமையான
மயிலின்மீது ஏறுகின்ற கந்தக் கடவுளே!
வடிவேலா --- கூர்மையுடைய வேலாயுதரே!
பனகம் அணி மா மதங்கி --- பாம்பை
ஆபரணமாகப் பூண்ட சிறந்த பார்வதியும்,
குமரி --- இளமையானவரும்,
நீலி --- நீல நிறமுடையவரும்,
சண்டி --- வேகமுடையவரும்,
பரம கலியாணி --- நித்திய மங்களமுடையவருமாகிய
உமா தேவியார்,
தந்த --- பெற்றருளிய,
பெருவாழ்வே --- பெரிய வாழ்வே!
பகை அசுரர் மாள வென்று --- பகைத்த
அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று,
அமரர் சிறை மீள வென்று --- தேவர்கள்
சிறையிலிருந்து மீளுமாறு அருள்புரிந்து,
பழநிமலை மீதில் நின்ற --- பழநிமலை மேல்
நின்றருளிய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
வனிதை உடல் காய நின்ற --- தாயாருடைய
உடல் வற்றுமாறு நின்ற,
உதிரம் அதிலே உருண்டு --- இரத்தத்திலே
திரட்சி பெற்று,
வயிறில் நெடுநாள் அலைந்து --- அவளுடைய
வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று,
புவி மீதே --- பூதலத்தின் கண்,
மனிதர் உருவு ஆகி வந்து --- மனித வுருவுடன்
பிறந்து,
அநுதினமுமே வளர்ந்து --- தினந்தோறும்
வளர்ச்சி பெற்று,
வயது பதினாறு சென்று --- பதினாறு வயதை அடைந்து,
வடிவு ஆகி --- அழகனாகி,
கனகமுலை மாதர் தங்கள் --- அழகிய முலைகளையுடைய
பெண்களின்,
வலையில் மிகவே உழன்று --- வலையில் அகப்பட்டு
மிகவும் திரிந்து,
கனிவதுடனே அணைந்து --- அன்புடனே அப் பொதுமகளிரைத்
தழுவி,
பொருள் தேடி --- அவர்கள் பொருட்டு பணத்தைத்
தேடி,
கனபொருள் எலாம் இழந்து --- பெரும்பொருள்
எல்லாவற்றையும் இழந்து,
மயலில் மிகவே அலைந்த --- மயக்கத்தில் அதிகமாக
அலைந்த,
கசடன் எனை ஆள உன்றன் --- மூடனாகிய அடியேனை
ஆட்கொள்ள உமது,
அருள் தாராய் --- திருவருளைத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
தினைப்புனத்தில் வசிக்கின்றவரும்
ரகுநாதருடைய திருமகளும் ஆகிய வள்ளி நாயகியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவரே!
மலர்க் கணைகளால் போர் புரிந்த மன்மதனைச்
சாம்பலாகச் செய்த அருமையான சிவபெருமான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது
ஆரோகணிக்கின்ற கூரிய வேலாயுதரே!
நாகாபரணத்தை அணிபவரும், சிறந்த மதங்க முனிவருடைய புதல்வியரும், இளமையுடையவரும், நீலநிறமுடையவரும், நித்திய கல்யாணியும் ஆகிய உமாதேவியார்
பெற்றருளிய பெருவாழ்வே!
பகைகொண்ட சூராதியவுணரை மாய்த்து, தேவர்களை சிறை மீட்டு வெற்றி பெற்று, பழநிமலை மீது நின்றருளிய
பெருமிதமுடையவரே!
தாயாருடைய உடல் வற்றுமாறு உதிரத்தில்
திரட்சியுற்று, அவர் வயிற்றில் பல
நாள் துன்புற்று, பூமியில் மனிதக்
குழந்தையாக உதித்து, தினந்தோறும் வளர்ந்து, பதினாறு வயதை யடைந்து, அழகனாகி, அழகிய தனங்களுடைய பொது மகளிரின் வலையில்
அகப்பட்டு மிகவும் அலைந்து, அன்புடன் அவர்களைத்
தழுவி, பொருள் தேடி, அப்பொருள் அனைத்தும் அவர்கட்கு ஈந்து, மயக்கத்திலே மிகுதியாக அவதிப்பட்ட
மூடனாகிய அடியேனை ஆள, உமது திருவருளைத்
தந்தருளுவீர்.
விரிவுரை
வனிதை
உடல் காய நின்ற உதிரம் அதிலே உருண்டு ---
தாய்
வயிற்றில் கரு ஏற்பட்டவுடன், அருகுநுனிப்
பனித்துளி யளவுள்ள அக்கரு, தாயின் உதிரம் முதலிய
சத்துப் பொருள்கள் சேர்ந்து வளர்கின்றது. அதனால் தாய் உடல் வற்றுகின்றது. அவளின்
உதிரம் உருண்டு திரண்டு கரு வளர்கின்றது.
“பனியின் விந்துளி போலவே கருவினுறு
மளவிலங்கொரு சூசமாய் மிளகுதுவர்
பனைதெனங்கனி போலவே பலகனியின் வயிறாகி” --- திருப்புகழ்
வயிறில்
நெடு நாள் அலைந்த ---
தாய்
வயிற்றில் ஒவ்வோர் உயிரும் முன்னூறு நாட்கள் இருந்து வேதனைப்படுகின்றது.
ஜாடராக்கினி கொளுத்தும்; மல சல நாற்றம்; ஒரே இருள் மயம்; நெருக்கம்; திரும்ப முடியாத குறுகிய இடம்; இவ்வாறு துன்பம் நிறைந்த கருக்குழியில்
குழந்தை, அளவுபடுத்த இயலாத
அல்லலுற்று இடர்ப்படுகின்றது. ஆதலால் நாம் இறப்புப் பிறப்பில்லாத இறைவனை வேண்டி
மீண்டும் கருவுறாத திருவினைப் பெறுதல் வேண்டும்.
புவிமீதே
மனிதர் உருவாகி வந்து ---
கருவில்
இருந்த குழந்தை மலையிலிருந்து தலைகீழாக உருள்வது போல் தலைகீழாக நெருக்கமான வழியில்
இடர்ப் பட்டு இம்மண்ணில் பிறக்கின்றது. அம்மா! அத்துயர் எல்லையில்லாதது. ஆதலினால்
ஆன்றோர்கள் பிறவி வேண்டாம் என்று என்றும் இறைவனிடம் முறையிடுகின்றார்கள்.
“வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை” ...திருவள்ளுவர்
“இனிப் பிறவாது
நீயருள் புரிவாயே” --- (அப்படியே) திருப்புகழ்
“......................பாதிரிப்புலியூர்
இருந்தாய்
அடியேன்
இனிப் பிறவாமல் வந்து ஏன்றுக் கொள்ளே” ---
அப்பர்
“பாழ்த்தபிறப்பு அறத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே” --- மணிவாசகர்
மனிதர்
உருவாக வந்தவர் மனிதப் பண்பையும் பெறவேண்டும். உருவத்தினால் மட்டும் மனிதராக இருந்தால்
அமையாது குணங்களினால் மனிதனாக அமைவதே சிறப்பு.
அநுதினமுமே
வளர்ந்து
---
தாய்தந்தையர்
மிக்க பட்சத்துடன் நல்ல நல்ல இனிய உணவுகளைக் கொடுக்கவும், ஆடை அணிகளால் அலங்கரிக்கவும், மக்கள் நெடு நெடு என்று
வளர்ச்சியுறுகின்றனர்.
வயது
பதினாறு சென்று வடிவாகி ---
இசைப்
பயிற்சி உடையார்க்கு ஜண்டை வரிசை ஒரு கடினமான பகுதி. அத்துடன் இசைப்பயிற்சிக்கு
முற்றுப்புள்ளி வைப்பவர் பலர். அதுபோல மனிதனுக்குப் பதினாறாவது ஆண்டு. ஒருவர்
பதினாறு வயது எய்தியவுடன் சன்மார்க்கத்தில் சென்றாலும் செல்லுவர். அல்லது
வேறுமார்க்கத்தில் சென்றாலும் செல்லுவர்.
“வயது எட்டோடு மெட்டும் வர
வாலக்குணங்கள் பயில் கோலப் பெதும்பையர்க
ளுடனுறவாகி” (இத்தாரணிக்குள்)
திருப்புகழ்
வடிவு-அழகு.
பதினாறு வயதில் உடை நடை முதலிய செயற்கையாலும் இயற்கையாலும் அழகு நிரம்பி நிற்பர்.
கனகமுலை
மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று ---
பொன்போன்ற
அழகிய தனங்களையுடைய பொது மாதர்களின் ஆசை வலையில் அகப்பட்டு அதனின்றும் தப்புவதற்கு
வழியின்றி பெரிதும் உழலுவர்.
கனிவதுடனே
அணைந்து
---
அம்மாதர்களை
இன்பப் பொருளாக மாறுபடக் கருதி,
விட்டில்
பூச்சி விளக்கில் விழுவதுபோல் மிக்க அன்புடன் தழுவுவர்.
பொருள்
தேடி
---
தான்
விரும்பிய பொதுமகளிர்க்குத் தரும் பொருட்டு பலப்பல திசைகட்குஞ் சென்று பொன்னையும்
பொருளையும் தேடித் துன்புறுவர்.
“திக்கோடு திக்குவரை
மட்டோடி மிக்க பொருள்
தேடிச் சுகந்த அணை மீதில் துயின்று” --- (இத்தாரணிக்குள்) திருப்புகழ்
சிறிது
கூட்டிக் கொணர்ந்து தெரிவை மார்க்குச் சொரிந்து”
--- (அறிவிலாப்)
திருப்புகழ்
கனபொருள்
எலாம் இழந்து மையலில் மிகவே அலைந்த ---
பெரிய
பொருள்கள் யாவற்றையும் மகளிர் பால் ஈந்து வறியவனாகி, பெருமையும் அருமையும் இழந்து சிறுமையும்
வறுமையும் உற்று மாந்தர் பலர் மயங்குவர்.
கசடன்
எனை ஆள உன்றன் அருள்தாராய் ---
இவ்வாறு
அலைந்து திரிந்த அறிவில்லாத மூடனாகிய அடியேனை அருள் தந்து ஆட்கொண்டருள்வாய்.
புனம்
அதனில்...............புலவோனே ---
ரகுகுல
திலகனாகிய இராமராக அவதரித்த திருமாலின் திருமகளாகிய வள்ளிபிராட்டியின் இதழமுதம்
உண்ட புலவரே! (புலம்-அறிவு; புலவன்- அறிஞன்)
மா
மதங்கி
---
மதங்க
முனிவருடைய மாதவத்துக்கு இரங்கி அம்பிகை அவருடைய யாகத்தில் புதல்வியாகத்
தோன்றியருளினார். அதனால் அம்பிகைக்கு மாதங்கி என்று திருநாமம் ஏற்பட்டது.
குமரி ---
என்று
இளமைப் பருவத்துடன் இருப்பவர்.
சண்டி ---
சண்டம்-வேகம்.
வேகமுடையவர்-சண்டி.
பரம
கலியாணி
---
எப்போதும்
மங்களகரமாகத் திகழ்பவர்.
கருத்துரை
வேலவரே!
பழநியப்பரே! மாதர் மயலறுத்து அருள் புரிவீர்.
No comments:
Post a Comment