அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வரதா மணி நீ (பழநி)
பழநியப்பா!
இரசவாதம் செய்வதால்
பயனில்லை.
உன்னைத் தொழுதால் எல்லாம்
கிடைக்கும்.
தனனா
தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
வரதா
மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாராது
இரதா
திகளால் ...... நவலோகம்
இடவே கரியாம் ...... இதிலேது
சரதா
மறையோ ...... தயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத
பரதே
வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வரதா!
மணி நீ ...... என ஒரில்,
வருகாது எதுதான் ...... அதில்வாராது,
இரத
ஆதிகளால் ...... நவலோகம்
இடவே கரியாம், ...... இதில் ஏது?
சரதா!
மறை ஓது ...... அயன்மாலும்
சகல ஆகமநூல் ...... அறியாத
பர
தேவதையாள் ...... தருசேயே!
பழனாபுரி வாழ் ...... பெருமாளே.
பதவுரை
சரதா --- சத்திய வடிவினரே!
மறை ஓது --- வேதங்களைச் சொல்லுகின்ற,
அயன் மாலும் --- பிரம விட்டுணுக்களாலும், சகல ஆகம நூல் --- எல்லா ஆகம சாத்திரங்களாலும்,
அறியாத --- அறிந்து கொள்ளமாட்டாத
பெருமிதமுடையவராகிய,
பர தேவதையாள் --- மகாதேவியாகிய உமையம்மையார்,
தருசேயே --- பெற்றருளிய திருக் குழந்தையே!
பழனாபுரி வாழ் --- பழநியம்பதியில் உறைகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
வரதா --- வரத்தை வழங்குபவரே!
மணி நீ என --- நினைத்தபடி வழங்கும் சிந்தாமணி
தேவரீரே என்று,
ஓரில் --- ஆராய்ந்து உணர்ந்து அன்பு செய்தால்,
ஏது தான் வருகாது ---- எண்ணிய எப்பொருள் தான்
கிடைக்காது?
(எல்லாம்
கிடைக்கும்)
அதில் வாராது --- அப்படி ஆறுமுகக் கடவுள்
அருளால் அடையாமல்,
இரத ஆதிகளால் --- இரசம் முதலியவற்றைக் கொண்டு
வாதித்து,
நவலோகம் இடவே கரியாம் --- ஒன்பது
லோகங்களையும் கூட்டி நெருப்பிலிட்டு ஊதுவதனால் எல்லாம் கரியாகவே போய்விடும்.
இதில் ஏது --- இதனால் பயன் யாது? (ஒன்றுமில்லை).
பொழிப்புரை
உண்மை வடிவினரே!
வேதங்களை ஓதுகின்ற பிரமதேவராலும், விட்டுணு மூர்த்தியாலும், சகல ஆகம சாத்திரங்களாலும், அறியமுடியாத பரமேஸ்வரியார் ஈன்றருளிய
திருக்குமாரரே!
பழநிமலையில் வாழும் பெருமிதமுடையவரே!
எல்லா வரங்களையும் எண்ணியவாறு வழங்கும்
வரதரே! சிந்தாமணி தேவரீரே என்று ஆராய்ந்து, உமது திருவடியில் அன்பு செய்தால்
எப்பொருள்தான் கிடைக்காது? (எல்லாம் கிடைக்கும்.)
இதனையறியாமல், நவலோகங்களையும்
நெருப்பிலிட்டு ஊதி இரவாதஞ் செய்து அலைவதனால் கரியாகுமே யன்றி வேறு அதனால் அடையும்
பயன் ஒன்றுமில்லை.
விரிவுரை
வரதா ---
தேவர்களுக்கும், அயன், அரி, அரன் என்ற மூவர்களுக்கும், முனிவர் களுக்கும், மனிதர்களுக்கும், மற்ற யாவர்களுக்கும் வரங்
கொடுத்தருளுகின்ற வரதர் முருகப் பெருமான் ஒருவரேயாவர். “ஓம் பக்தாபீஷ்ட வரதாய நம:”
“ஓம் ஆச்ரிதேஷ்டார்த்த வரதாய நம”. என்ற சுப்ரமண்ய மஹாமந்திரங்களாலும் “பிரமதேவர்
வரதா முருக தம்பிரானே” “வரதா முருகா மயில்வாகனனே” என்ற சுவாமிகளது
திருவாக்குகளாலும் இக்கருத்து நன்கு வலியுறுமாறு காண்க. தேவரும் மூவரும்
சூரபன்மனால் பன்னெடுங்காலம் வருந்தி, “இனி
உய்வு உண்டா? என்று ஏங்கி, எம் குமாரநாயகனை இறைஞ்சி ஏத்தி முறையிட, அவர்களது அலக்கணை யகற்றி, கேட்ட வரங்களை எல்லாம் வழங்கியருளினார்.
மணி
நீ
---
சிந்தித்ததைத்
தரும் சிந்தாமணியும், தெய்வ மணியும்
முருகவேளேயாம் என்று ஆராய்ந்து அறிந்து துதித்தால் வாராத பொருள் ஒன்றுமில்லை. “அடியவர் இச்சையில்
எவையெவை உற்றன, அவை தருவித்து அருளும் பெருமாள்” ஆதலால் எல்லாவற்றையும் விரைவில்
பெறலாம்.
இரதாதிகளால்...........கரியாம்
---
இரசவாதஞ்
செய்து புடம் வைத்து, நவலோகங்களையும் ஊதி
ஊதி ஆசைவயத்தராய் அலைவதனால் பயன் கிடையாது.
மறையோதும்
அயன்மாலும்........அறியாத பரதேவதையாள் ---
வேதம், அயன் மால் ஆகமங்கள் இவற்றால்
அறியமாட்டாத அறிவுவடிவாக விளங்குபவர் அம்பிகை.
கருத்துரை
உண்மைப்
பொருளே! உமாசுதரே! பழனாபுரிவாழ் பெருமாளே! தேவரீரை நினைத்தால் எல்லாம்
சித்தியாகும். இரசவாதத்தால் யாது பயன்? நினது
திருவடிப் பேற்றைத் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment