பழநி - 0193. வஞ்சனை மிஞ்சிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வஞ்சனை மிஞ்சிய (பழநி)

பழநியப்பா! 
மாதர் மயல் தீர அருள்

தந்தன தந்தன தான தந்தன
     தந்தன தந்தன தான தந்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான


வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி

மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
     தந்தக டம்பிக ளூற லுண்டிடு
          மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ......முரையாலே

சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
     இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
          சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே

தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
     கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
          தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ

கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
     வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
          கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே

கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
     கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
          கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே

குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
     மின்பமி குந்திட வேய ணைந்தருள்
          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா

கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
     பண்புத ருந்திரு வாவி னன்குடி
          குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்,
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்,
          வங்கணமும் தெரியாமல் அன்புகள் ...... பலபேசி,

மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள்
     தந்த கடம்பிகள், ஊறல் உண்டிடு
          மண்டைகள், கண்டிதமாய் மொழிந்திடும் ......உரையாலே

சஞ்சலமும் தரு மோக லண்டிகள்,
     இன்சொல் புரிந்து உருகாத தொண்டிகள்,
          சங்கமம் என்பதையே புரிந்தவன், ...... அயராதே

தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர்,
     கொஞ்சி நடம்பயில் வேசை முண்டைகள்,
          தந்த சுகம் தனையே உகந்து உடல் ......மெலிவேனோ?

கஞ்சன் விடும் சகடாசுரன் பட
     வென்று, குருந்தினில் ஏறி, மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்து அரு ......முறையாலே

கண்டு, மகிழ்ந்து அழகாய் இருந்து, இசை
     கொண்டு விளங்கிய நாளில், அன்பொடு
          கண் குளிரும் திருமால் மகிழ்ந்தருள் ...... மருகோனே!

குஞ்சர வஞ்சியும், மான் மடந்தையும்,
     இன்பம் மிகுந்திடவே அணைந்து, அருள்
          குன்று என வந்து, அருள் நீபம் உந்திய ......மணிமார்பா!

கொந்து அவிழும். தடமே நிரம்பிய
     பண்பு தரும் திரு ஆவினன்குடி,
          குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் ......பெருமாளே.


பதவுரை


      கஞ்சன் விடும் --- கம்சன் விடுத்த,

     சகடாசுரன் பட --- வண்டி உருவத்தில் வந்த அசுரன் மாண்டு ஒழியுமாறு,

     வென்று --- வென்றவரும்,

     குருந்தினில் ஏறி --- கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டவரும்,

     மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்து --- உருக்குமணி சத்தியபாமை முதலிய பெண்களின் கண்கள் சிவக்குமாறு புணர்ந்து,

     அருமுறையாலே கண்டு மகிழ்ந்து --- அரிய தருமமுறையை நிலைபெறுமாறு புரிந்து அதனால் மகிழ்ச்சியடைந்து,

     அழகாய் இருந்து --- அழகாக இருந்து,

     இசை கொண்டு விளங்கிய நாளில் --- வேணு நாதத்தை உண்டாக்கிச் சிறந்த அக்காலத்தில்

     அன்பொடு கண் குளிரும் --- உயிர்களிடம் அன்போடு கருணை செய்து கண்கள் குளிர்ந்தவரும் ஆகிய,

     திருமால் மகிழ்ந்து அருள் --- நாராயணமூர்த்தி மனம் மகிழ்ந்து அருள்கின்ற,

     மருகோனே --- திருமுருகரே!

      குஞ்சர வதியும் --- வெள்ளை யானை வளர்த்த தேவயானையம்மையாரும்,

     மான் மடந்தையும் --- மான் பெற்ற வள்ளி நாச்சியாரும்,

     இன்பம் மிகுந்திடவே அணைந்தருள் --- மிகுந்த இன்பத்தையடையுமாறு தழுவியருளுகின்ற,

     குன்று என வந்து அருள் --- மலையென்று புகழுமாறு ஓங்கியுயர்ந்த,

     நீபம் உந்திய --- கடப்ப மாலையை மிகுதியாகத் தரித்துள்ள,

     மணிமார்பா --- இரத்தின மணிகளுடன் கூடிய திருமார்பை உடையவரே!

      கொந்து அவிழும் தடமே நிரம்பிய --- பூங்கொத்துகள் மலர்கின்ற நீர் அலைகள் நிரம்பியதும்,

     பண்பு தரும் --- பண்பாட்டினைத் தருகின்றதும் ஆகிய,

     திருவாவினன்குடி --- திருவாவினன்குடி என்ற திருத்தலத்தினும்,

     குன்றுகள் எங்கணுமே வளர்ந்து அருள் --- ஏனைய மலைகள் எல்லாவற்றிலும் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      வஞ்சனை மிஞ்சிய --- வஞ்சனைகள் மிகுந்த,

     மாய வம்பிகள் --- மாய வம்புகள் புரிவோர்;

     வந்தவர் தங்களை வாதை கண்டவர் --- தம்பால் வந்தவர்களைத் துன்பம் புரிவோர்;

     வங்கணமும் அன்புகள் பல பேசி --- உண்மையான காதல் இல்லாமல் அன்புமொழிகள் பல விதமாகப் பேசி,

     மஞ்சம் இருந்து --- கட்டிலின்மீது அமர்ந்து,

     அனுராக விந்தைகள் தந்த கடம்பிகள் --- கலவி வேடிக்கைகள் தந்த பொல்லாதவர்கள்,

     ஊறல் உண்டிடு மண்டைகள் --- இதழ் ஊறலை உண்ணுகின்ற வேசையர்;

     கண்டிதமாய் மொழிந்திடும் உரையாடல் --- கண்டிப்புடன் பேசுகின்ற வார்த்தைகளினால்,

     சஞ்சலமும் தரு மோக லண்டிகள் --- மனக் கவலைகள் தருகின்ற மோக தூர்த்தைகள்;

     இன்சொல் புரிந்து உருகாத தொண்டிகள் --- இனிய வசனங்களை வெளியிற் பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத வேலைக்காரிகள்,

(இத்தகைய பொதுமகளிரின்)

     சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே --- கூட்டுறவையே விரும்பினவனாய் அதில் அயர்ச்சியின்றி,

     தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்து --- அவர்களிடத்திலேயே உள்ளம் உவக்கின்றவனாய்,

     அவர் கொஞ்சி --- அம்மகளிர் கொஞ்சியும்,

     நடம்பயில் வேசை முண்டைகள் தந்த --- நடனம் புரிந்திடும் வேசை முண்டைகளான அவர்கள் தந்த,

     சுகம் தனையே உகந்து --- சுகத்தையே விரும்பி,

     உடல் மெலிவேனோ --- உடல் மெலிந்து போவேனோ?

   
பொழிப்புரை


         கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரனைக் கொன்றவரும், (கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்து) குருந்த மரத்தின் மீது ஏறியவரும், (உருக்குமணி முதலிய) மாதர்களின் கண்கள் சிவக்குமாறு புணர்ந்தவரும், உலகில் தரும முறை நிலைபெறும்படி செய்து அதனைக் கண்டு மகிழ்ந்தவரும், அழகாக இருந்து வேணுகானம் புரிந்து அந்நாளில் அன்பு செய்து கண்கள் குளிர்ந்தவருமாகிய கண்ணபிரான் மகிழ்ச்சி கொள்கின்ற திருமருகரே!

         தெய்வயானையம்மையும் வள்ளியம்மையும் இன்புறுமாறு தழுவி அருளிய, மலைபோல் உயர்ந்து கடப்ப மாலை தரித்ததும் ஆகிய இரத்தின மணி மாலையுடன் கூடிய திருமார்பை உடையவரே!

         பூங்கொத்துகள் மலர்கின்ற நீர்நிலைகள் நிரம்பியதும், பண்பாட்டினைத் தருவதும் ஆகிய திருவாவினன்குடியிலும், ஏனைய மலைகள் எல்லாவற்றிலும் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         வஞ்சனை மிகுந்த மாயத்தைச் செய்யும் வம்புக்காரிகளும், தம்மிடம் வந்தவர்களைத் துன்புறுத்துவோர்களும், உண்மையான அன்பு இன்றி, அன்புபோல் பலவிதமாகப் பேசி, சயன மெத்தியின் மீது இருந்து கலவி வித்தைகளைத் தருகின்ற பொல்லாதவர்களும், இதழ் ஊறலையுண்ணும் வேசையரும், கண்டிப்பாகப் பேசி சஞ்சலத்தைத் தருகின்ற மோகப் பெண்களும், இன்சொற்களை மேலுக்குப் பேசி உள்ளம் உருகாத வேலைக்காரிகளும் ஆகிய விலைமாதர்களின் கூட்டுறவையே விரும்பிய யான், அதில் அயர்ச்சியின்றி அம்மகளிரிடமே உள்ளம் உவந்து, வாழ்ந்து, கொஞ்சியும், நடனம் புரிந்தும், அவ்வேசை மாதர்கள் தந்த சுகத்தையே விரும்பும் அடியேன் உடல் மெலியக் கடவேனோ?

விரிவுரை


இப்பாடலில் அருணகிரிநாத சுவாமிகள் பொதுமாதர்களின் இழிசெயலைக் கூறிக் கண்டிக்கின்றனர்.

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் ---

வஞ்சனை மிகுந்த மாயம் பல புரிகின்ற வம்புக்காரிகள். தம்பால் வந்த ஆடவர்கள் தம்மை உண்மை அன்புடையவராக நம்புமாறு நடந்தும், தாலி கட்டிய மனைவியையும் ஏனைய உறவினரையும் வெறுக்குமாறும் பல தோதக வித்தைகள் புரிவார்கள். தங்கள் ஆபரணங்கள் களவு போனதாக நடித்து அதுபோன்ற ஆபரணங்களைச் செய்து தருமாறு பெறுவார்கள்.

வந்தவர் தங்களை வாதை கண்டவர் ---

தம்மை விரும்பி வந்தவர்களைப் பலவகையிலும் துன்புறுமாறு செய்து விடுவார்கள். மோக வெறி பிடித்த ஆடவர், அம்மகளிர்க்கு ஒழியாது அள்ளி அள்ளி பணத்தை ஈந்து, அதனால் வீட்டையும், நிலத்தையும் விற்றுக் கடன்காரர்களாகக் கலங்கியும், நோய்வாய்ப் பட்டும், மனைவி முதலியவர்களின் பகைக்கு ஆளாகியும், ஊரவர்கள் ஏசும் இகழ்ச்சிக்கும், பழிக்கும் பாத்திரராகியும் ‘இனி நாம் என் செய்வோம்’ என்று கலங்குமாறும் செயல்புரிவர்.

வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி ---

உள்ளன்பு இன்றி, “உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்; வரவர இளைத்துப் போகின்றீரே! நல்ல மருந்தாக உண்டு உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பணத்தை அதிகம் செலவழிக்காதீர்கள்; பணம் இருந்தால் தானே யாரும் மதிப்பார்கள். உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கின்றது? நான் ஞாபகப்படுத்துகின்றேன்” என்று பகட்டாகப் பேசுவார்கள்.

மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ---

பஞ்சனையுடன் கூடிய கட்டிலில் ஆடவருடன் இருந்து, ஆசையை விளைவிக்குங் கலவி வித்தைகள் பல காட்டிய மயக்கும் பொல்லாதவர்கள். கடம்பு-தீமை.

ஆவியொடு காயம் அழிந்தாலும், மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே, - மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா, மடநெஞ்சே!
செத்தாரைப் போலே திரி.                ---  பட்டினத்தார்.

ஊறல் உண்டிடு மண்டைகள் ---

மோக வெறியால் இதழில் ஊறும் நீரை யுண்ணுகின்ற மட்டிகள்.

    குமுத அமுத இதழ் பருகி யுருகி மயல்
     கொண்டுஉற்              றிடுநாயேன்”       ---  (கொலைமத) திருப்புகழ்

கண்டிதமாய் மொழிந்திடு லண்டிகள் ---

பெரிய அன்புடையாரைப் போல் கண்டிப்பாகப் பேசி, மயக்கி மனத் துயரத்தைத் தருபவர். “இங்கே வாருங்கள்; எழுந்தவுடன் சிறிது பால் குடியுங்கள்; இல்லையேல் உடல் நலன் குன்றும். நீர் இதனை அருந்தவில்லையானால் நான் பிறகு உங்களுடன் பேசவே மாட்டேன். நீர் இன்று வெளியே போகக் கூடாது. போனால் செத்தே போவேன். கோபம் வரும்” என்றெல்லாம் ஏதோ மிகப்பெரிய அன்புடையாரைப் போலவும் அவர் நலத்தின் மிக்க அக்கறை உடையாரைப் போலவும் பேசி, தம்மை அன்புக் கருவூலமாக நம்புமாறு செய்து, பெரிய மனவேதனையை தரும் மோகத் தூர்த்தைகள்.

இன்சொல் புரிந்து உருகாத தொண்டிகள் ---

உதட்டுக்கு மேல் இன்னுரை கூறி, உள்ளத்தில் ஒரு துளி கூட உருக்கமே அல்லாத சமர்த்திகள்.

தந்த சுகந்தனையே உகந்து உடல் மெலிவேனோ ---

இத்தகைய மாய மகளிர் தந்த சுகத்தையே விரும்பி அதனால் என் உடல் மெலிந்து நலிந்து கெடக்கடவேனோ? அவ்வண்ணம் கெடாது அருள் புரிவீர் என்று இறைவனை இறைஞ்சுகின்றார்.

கஞ்சன் விடுஞ் சகடாசுரன் படவென்று ---

தீயவர்கள் மிகுந்தால் உலகம் அவர்களைத் தாங்க வருந்தும்.

    கண்ணோட்டத்து உள்ளது உலகியல், அஃதிலார்
    உண்மை நிலைக்குப் பொறை          --- திருக்குறள்

தயவு தாட்சண்யம் இல்லாதவர் பூமிக்குப் பாரம். எனவே தீயவர்கள் மலிந்துவிட்டபடியால் அவர்களைப் பொறுக்க அஞ்சி நிலமகள் நலமகன்று நடுகினாள். அவள் வருத்தந் தீரத் துவாபரயுக முடிவில் காத்தற் கடவுளாகிய திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்தருளினார்.

கம்சன் என்ற பரம துஷ்டனுடைய தங்கை தேவகி. அவள் திருவுதரத்தில் கண்ணபிரான் தோன்றி ஆயர்பாடியில் நந்தகோபாலன் மாளிகையில் யசோதையிடம், வளர்ந்தருளினார். தாய் மாமனாகிய கம்சனுக்கு “உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் வரும்” என்று அசரீரி வாக்கு உணர்த்தியது.

பூதனை என்ற அரக்கியைக் கண்ணனைக் கொல்லுமாறு கம்சன் ஏவினான். அவள் தனத்தில் நஞ்சினை வைத்துக் கண்ணனுடைய வாயில் தன் தனத்தை வைத்து, “கண்ணப்பா பால் உண்ணப்பா” என்று ஊட்டினாள். கண்ணபிரான் அவளுடைய பால் உதிரம் உணர்வு, நாடி, நரம்பு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே குடித்துவிட்டார்.

கண்ணனைக் கொல்லும் பொருட்டு பலப்பல அரக்கர்களை அடிக்கடி ஏவிக்கொண்டேயிருந்தான். ஒரு நாள் கண்ணனை யசோதை தனது மாளிகைக்கு விட்டிருந்த வண்டியில் துளிகட்டி, அதில் கண் வளரச் செய்தாள். கம்சனால் ஏவப்பட்ட கொடிய அரக்கன் அந்த வண்டியில் புகுந்து மிகுந்த வேகமாக உருட்டினான். கண்ணனைக் கொல்லும் உபாயமாக அவ்வாறு புரிந்தான். துயில்புரிந்த பெருமான் கண் விழித்து அரக்கனுடைய இரக்கமற்ற வஞ்சனையைத் திருவுளத்து உணர்ந்து, தமது இளந்திருவடியை நீட்டி உதைத்தருளினார். சகடாசுரனாகிய அந்த அரக்கன் தீயில் விழுந்த பஞ்சுபோல் மாய்ந்து ஒழிந்தான்.

குருந்தினில் ஏறி ---

கண்ணபிரானை மணந்துகொள்ளும் பொருட்டு ஆயர்பாடியில் சில இளங்கோபிகை மாதர்கள் யமுனையில் கௌரி நோன்பு நோற்கும் பொருட்டு சென்றார்கள். தமது உடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு யமுனா நதியில் நீராடினார்கள். புண்ணிய நதிகளில் நிர்வாணமாகக் குளிப்பது பெருங்குற்றம்.

உடுத்து அலால் நீராடார், ஒன்று உடுத்து உண்ணார்,
உடுத்த ஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.              --- ஆசாரக் கோவை

கோபிகையரது குற்றத்தை உணர்த்துவான் பொருட்டு, அந்த ஆடைகளை யெல்லாம் எடுத்துச் சுருட்டி மூட்டையாகக் கட்டி, அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டார் கண்ணன். நீராடிய இளஞ் சிறுமிகள் கரையை அடைந்து தமது உடைமைகளைக் காணாது, பிறகு நாணிக் கோணி, மீளவும் நீரில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார்கள். மரத்தின்மீது நின்ற மணிவண்ணனைக் கண்டு நாண மீதூர்ந்தார்கள். “யசோதை பெற்ற இளஞ் சிங்கமே! எங்கள் ஆடையைக் கொடுத்தருளும்” என்று வேண்டினார்கள். பகவான், “சிறுமியர்களே! புண்ணிய நதியில் ஆடையின்றி நீராடுவது, குற்றம். ஆதலால் அப் பிழை தீரக் கும்பிட்டால் தருவேன்” என்று அருளச் செய்தார். அங்ஙனமே அவர்கள் தொழுது உடைகளைப் பெற்றார்கள்.

மருமாலிகைப் பூங் குழல் மடவார்
     வாவி குடைய, அவர் துகிலை
வாரிக் குருந்தின் மிசை ஏறி,
         மட நாண் விரகம் தலைக்கொண்டு,
கருமா நாகம் செந்நாகம்
         கலந்தது என, அவ் வனிதையர்கள்
கையால் நிதம்பத் தலம் பொதிந்து,
         கருத்தும் துகிலும் நின்று இரப்ப,
பெருமா யைகள் செய்து இடைச்சியர்கள்
         பின்னே தொடர, வேய் இசைத்து,
பேய்ப்பெண் முலைஉண்டு உயிர் வாங்கி,
         பெண்களிடத்தில் குறும்பு செய்யும்
திருமால் மருகன் அலவோ நீ?
         சிறியேம் சிற்றில் சிதையேலே.
செல்லுத் தவழும் திருமலையில்
         செல்வா! சிற்றில் சிதையேலே.      ---  திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்

ஆடைகளைப் பெருமான் கவர்ந்தான் என்ற வரலாற்றின் உட்பொருள் தேகாபிமானத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.

மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்து ---

கலவியில் பெண்களின் கண்கள் சிவக்கும் என்ற தன்மையால் அவர்களது மென்மைத் தன்மையை உணர்த்துகின்றார்.

    கலவியிலே தோய்ந்து சிவந்தது மானார் விழிகள்”   ---  படிக்காசுப் புலவர்
  
அருமுறையாலே கண்டு மகிழ்ந்து ---

கண்ணபிரானுடைய திரு அவதாரம் மறநெறியை மாய்த்து அறநெறியை நிலைநிறுத்த வந்தது. ஆதலின் அக்காலத்துத் தலை விரித்தாடிய அதருமங்களை அழித்து, வேதநூல் தருமங்களை நிலைநாட்டி, உத்தமர்கள் மூலம் அதனை நிறுவியருளினார். எவ்வப்போது அறங் குன்றுமோ-அவ்வப்போது இறைவன் அவதரிப்பார். இன்றும் எங்கே மக்கள் கலகம் இடுவார்களோ, அங்கே அதிகாரிகள் வந்து கலகத்தை அடக்கிச் சாந்தியை நிலைநாட்டுவர்.

இசைகொண்டு விளங்கிய ---

எல்லா உயிர்களையும் எல்லாப் பொருள்களையும் தன் வசமாக இசைவிப்பதனால் இசை யெனப்பட்டது இசையில் உருகாதார் வசையுடையார், இன்னிசை சரசரங்களை யெல்லாம் உருக்கும் ஆற்றலுடையது. சிவபெருமான் வீணை வாசித்துப் பெரும் பிரளயத்திலிருந்து உலகத்தை யுண்டாக்குகின்றார் என்று அப்பர் தேவாரம் கூறுகின்றது. “மிக நல்ல வீணை தடவி” என்கின்றார் சம்பந்தர். சிவபிரானுடைய காதுகளில் இரு கந்தர்வர்கள் இரு குண்டல வடிவமாக இருந்து சதா இசையுடன் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். முருகவேளைப் பற்றி கூறவந்த நக்கீரர் “குழவன் கோட்டன் குறும்பல்லி யத்தன்” என்கிறார். பாம்பு, குழந்தை, பசு முதலிய யாவும் இசைக்கு உருகுகின்றன.

    சிகர் வேத்தி பகர்வேத்தி வேத்தி கானரசம் பணி”

உதயணன் வீணை வாசித்து மதயானையின் மதத்தை அடக்கினான் என்று பெருங்கதை கூறுகின்றது. கண்ணபிரான் புல்லாங்குழல் வாசித்து சராசரங்களை யெல்லாம் உருகுமாறு புரிந்தார். இசைக்கருவிகளில் தலையாயது துளைக் கருவியாகிய புல்லாங்குழல். வள்ளுவர் ‘குழலினிது யாழினிது’ என்று குழலை முற்படக் கூறுவதாலும் அறிக. வேய்ங்குழலை இசைத்தமையால் வேணு கோபாலன் என்ற பேர் பெற்றனர்.

திருமால் மகிழ்ந்தருள் மருகோனே ---

தன்னினும் பெருமையும், அருமையும், உடையாரைத் தக்கார் கண்டு மகிழ்ந்து மெச்சுவர். காத்தல்தொழிலைச் செய்யும் திருமால், முத்தொழிலையும் காக்கும் முருகனைக் கண்டு மெச்சி மகிழ்கின்றார்.

    பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்”   ---(முத்தைத் தரு) திருப்புகழ்.

    ஜெயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள்”    --- (சருவும்படி) திருப்புகழ்

குஞ்சர வஞ்சியும்.......அணைந்தருள் ---

முருகன் கிரியா சக்தியாகிய தெய்வயானையையும், இச்சா சக்தியாகிய வள்ளியம்மையாரையும் உயிர்கள் இன்பமுறும் பொருட்டுத் தழுவுகின்றார். கண்ணாடியில் தெரியும் நிழலை அசைக்கும் பொருட்டுத் தான் அசைவது போல். உலக உயிர்கள் இன்புறும் பொருட்டு ஞான பண்டிதன் சக்தியுடன் இன்புறுகின்றான் என உணர்க.

நீக்கம் இன்றி, ஆடி நிழல் அசைப்பான் போல், புவனம்
ஆக்கி,  அசைத்து,  அருளும் ஆணையும்;        ---  கந்தர் கலிவெண்பா

நீபம் உந்திய மணிமார்பா ---

நீபம்-கடப்பம். முருகனுடைய திருமார்பில் விளங்குவது கடப்ப மலர்.

    உருள் பூந் தண்தார் புரளும் மார்பினன்”         ---  திருமுருகாற்றுப்படை

    பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும் அணிவோனே”   ---  (மலரணி) திருப்புகழ்

பண்பு தரும் திருவாவினன்குடி ---

மனிதனை மனிதனாக்குவது பண்பு என உணர்க. கூர்மையான வடுவுடையவராக இருப்பினும் பண்பிலாதவரை மரம் என்கின்றார் திருவள்ளுவர்.

   அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
   மக்கட்பண்பு இல்லா தவர்.

அறிவு மூளையில் அமைந்துள்ளது. பண்பு உள்ளத்தில் அமைந்துள்ளது.

  வெள்ளத்து அனைய மலர்நீட்டம், மாந்தர்தம்
  உள்ளத்து அனையது உயர்வு”             --- திருக்குறள்

    மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி”     ---  திருப்புகழ்

இத்தகைய இனிய பண்பினை வழங்குகின்ற திருத்தலம் திருவாவினன்குடி.

கருத்துரை

         திருமால் மருகரே! ஆவினன்குடி அரசே! மாதர் மயல் தீர அருள்புரிவீர்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...