பழநி - 0192. வசனம் மிக ஏற்றி





அருணகிரிநாதர்  அருளிய
திருப்புகழ்

வசனமிக ஏற்றி (பழநி)

பழநியப்பா! 
ஆறெழுத்தை அன்புடன் ஓதி,  
இம்மை அம்மை நலன்களை எய்த அருள்.

தனதனன தாத்த ...... தனதான
     தனதனன தாத்த ...... தனதான


வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே

இசைபயில்ச டாட்ச ...... ரமதாலே
     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வசனம் மிக ஏற்றி ...... மறவாதே,
     மனது துயர் ஆற்றில் ...... உழலாதே,

இசைபயில் சடாட்சரம் ......  அதாலே,
     இகபர செளபாக்யம் ...... அருள்வாயே.

பசுபதி சிவாக்யம் ...... உணர்வோனே!
     பழநிமலை வீற்று ...... அருளும்வேலா!

அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
  
பதவுரை

       பசு பதி --- ஆன்மாக்களுக்குத் தலைவராகிய, சிவபெருமானுடைய திருமந்திரமாகிய,

     'சி'வாக்யம் உணர்வோனே --- "சி" என்ற பதி அட்சரத்தின் தத்துவங்களை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பவரே!

      பழநி மலை வீற்றருளும் வேலா --- பழநிமலையின் மேல் எழுந்தருளியுள்ள வேலாயுதரே!

      அசுரர் கிளை வாட்டி ---  இராக்கதருடைய சுற்றம் மாண்டொழியுமாறு சங்கரித்து,

     மிக வாழ --- இழந்த பொன்னுலகத்தைப் பெற்று இனிது வாழுமாறு,

     அமரர் சிறை மீட்ட பெருமாளே --- தேவர்களது சிறையை மீட்டருளிய பெருமையின் மிக்கவரே!
        
      வசன மிக ஏற்றி --- உலகப் பேச்சுக்களை மிகவும் பேசி,

     மறவாதே --- தேவரீரை மறந்துவிடாமல் இருக்கவும்,

     மனது துயர் ஆற்றில் உழலாதே --- அடியேனுடைய மனமானது துன்பமாகிய ஆற்றில் விழுந்து உழலாமலிருக்கவும்,

     இசை பயில் சடாட்சரம் அதாலே --- விதிப்படி உச்சரிக்கும் சடக்கர மந்திரத்தினாலே,

     இகபர சௌபாக்யம் அருள்வாயே --- இம்மை நலனும் மறுமையின் அத்துவித முத்தியின்பத்தையும் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை


         சிவபெருமானுடைய திருமந்திரமாகிய “சி” என்ற ஏகாட்சரத்தின் பொருள் இத்தன்மையது என்று உணர்பவரே!

         பழநி மலையில் எழுந்தருளியுள்ள வேலாயுதக் கடவுளே!

         அசுரர் குலத்தை அழித்து தேவர்கள் இனிது வாழுமாறு அவர்களது சிறையை மீட்ட பெருமாளே!

         (குக சம்பந்தமில்லாத) வீண் வார்த்தைகளைப் பேசிப்பேசி தேவரீரை மறந்துவிடாமலும், அடியேனுடைய உள்ளமானது துன்பமாகிய ஆற்றில் விழுந்து சுழலாமலும், இனிய ஓசையுடன் கூடிய சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபிப்பதனால் இம்மை மறுமை நலங்களை வழங்கியருள்வீர்.


விரிவுரை

வசனமிக ஏற்றி ---

மந்திரத்தை உரு ஏற ஜெபித்து என்ற பொருள் கூறுவாரும் உளர். வசனம் என்பதற்கு வெறும் வார்த்தை என்பதே சிறந்த பொருளாம். வசனங்களைப் பேசுவதால் இறைவனை மறக்க நேர்கின்றது. ஆகவே வெறும் வார்த்தைகளைப் பேசுவது கூடாது.

வன்சொல் உடன் அன்றி, வள்ளல், உனது அன்பர் தமக்கு
இன்சொல் உடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை -                                                        புன்சொல் எனும்
பொய்உரைக்க என்றால் புடைஎழுவேன், அன்றி, ஒரு
மெய்உரைக்க என்றும் விழைந்தது இலை.....
                                         ---  திருவருட்பா.

இசைபயில் சடாட்சரம் அதாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே ---

மந்திர நாயகமும், வேத இருதயமுமாகிய சடக்கர மந்திரத்தை விதிப்படி உச்சரிப்பவர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும். இம்மையில் சகல செல்வயோக மிக்க பெருவாழ்வில் வாழும் பெருமித முறுவர்; மறுமையில் இனிப் பிறவாப் பெற்றியாகிய சுத்தாத்துவித முத்தி பெறுவர். இக-இம்மை, பர- மறுமை.

பசுபதி சி வாக்யம் ---

பசுபதி சி வாக்யம் - சிவபெருமானுடைய திருவாக்கியமாகிய ஆகமம் என்றும் பொருள் கூறுவர்.

கருத்துரை

மெய்ஞ்ஞான சொரூபியே! பழநியாண்டவரே! அசுரகுலகால! அமரர் சிறை மீட்ட பெருமாளே! அடியேனுடைய மனது துன்பக்கடலில் விழாவண்ணம் தேவரீரை மறவாமல் சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபிக்கச் செய்து இகபர வாழ்வை வழங்கி அருள்வீர்.               

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...