அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மூல மந்திரம் (பழநி)
பழநியப்பா!
மெய்யடியார்
உறவை அருள்
தான
தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான
மூல
மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை ......
மடவார்கள்
மோக
முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றோரு பேரு முண்டருள் ......
பயிலாத
கோல
முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட ......
நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் ......
புரிவாயே
பீலி
வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ......
ளெழுதேடு
பேணி
யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு ......
முருகோனே
ஆல
முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா
ஆர
ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
மூல
மந்திரம் ஓதல் இங்கு இலை,
ஈவது இங்கு இலை, நேயம் இங்கு இலை,
மோனம் இங்கு இலை, ஞானம் இங்கு இலை, ...... மடவார்கள்
மோகம்
உண்டு, அதி தாகம் உண்டு, அப-
சாரம் உண்டு, அபராதம் உண்டு, இடு
மூகன் என்று ஒரு பேரும் உண்டு, அருள் ...... பயிலாத
கோலமும், குண ஈன துன்பர்கள்
வார்மையும், பல ஆகி, வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட ......
நினைவாகி,
கூடு கொண்டு உழல்வேனை, அன்பொடு
ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு
கூர்மை தந்து, இனி ஆள வந்து, அருள் ......புரிவாயே.
பீலி
வெந்து, உயர் ஆலி வெந்து,
அசோகு வெந்து, அமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட, வாது கொண்டு,அருள் ......எழுதுஏடு
பேணி
அங்கு, எதிர் ஆறு சென்றிட,
மாறனும் பிணி தீர, வஞ்சகர்
பீறு வெங்கழு ஏற, வென்றிடு ...... முருகோனே!
ஆலம்
உண்டவர், சோதி அம் கணர்,
பாகம் ஒன்றிய வாலை, அந்தரி,
ஆதி அந்தமும் ஆன சங்கரி ...... குமரஈசா!
ஆரணம்
பயில் ஞான புங்கவ!
சேவல் அம் கொடி ஆன பைங்கர!
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் ......
பெருமாளே.
பதவுரை
பீலி வெந்து --- (கூன்பாண்டியனது கொடிய
வெப்பு நோயை நீக்கும் பொருட்டு சமணர்கள் மந்திரத்துடன் அவன் உடம்பைத் தடவிய) மயிற்
பீலியானது வெந்து நீறாகவும்,
உயர் ஆவி வெந்து --- சிறந்த உயிரும் கருகவும்,
அசோகு வெந்து --- (அவர்கள் ஏந்தியுள்ள) அந்த
அசோகக் கொத்துகள் வேகவும்,
அமண் மூகர் நெஞ்சு இடை --- (சிவமந்திரஞ் சொல்லாத)
ஊமைகளாகிய சமணர்கள் உள்ளத்தில்,
பீதி கொண்டிட --- பயங்கரத்தை யடையுமாறும்,
வாது கொண்டு - சிவசமயமே மெய்ச் சமயம் என்று
வாதஞ்செய்து,
அருள் எழுது ஏடு --- அருள்மயமான தேவாரப்
பாடலை எழுதிய திரு ஏடானது,
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட --- அந்த
வைகையாற்றின்கண் திருவருளை விரும்பி நீரை எதிர்த்து ஏகவும்,
மாறனும் பிணி தீர --- பாண்டியன் சுரப்
பிணியும் கூனும் நீங்கியுய்யவும்,
வஞ்சகர் --- வஞ்சனையைச் செய்கின்ற சமணர்கள்,
பீறு வெம் கழு ஏற வென்றிடு --- உடம்பைக்
கிழிக்கின்ற வெவ்விய கழுவில் ஏறவும் திருஞானசம்பந்தராக வந்து வென்று சைவசமயத்தை
நிலைநாட்டிய,
முருகோனே --- தெய்வத்தன்மை உடையவரே!
ஆலம் உண்டவர் ட--- (விண்ணவரும்
மண்ணவரும் உய்யும் பொருட்டு) ஆலகால விடத்தை உண்டருளியவரும்,
சோதி அம் கணர் --- சோமசூரிய அக்னி என்ற
முச்சுடர்களையும், அழகிய கண்களாக
வுடையவருமாகிய,
பாகம் ஒன்றிய --- இடப்பாகத்தில்
பொருந்தியிருப்பவரும்,
வாலை --- என்றும் இளமைப் பருவமுடையவரும்,
அந்தரி --- முடிவில் இருப்பவரும்,
ஆதி அந்தமும் ஆன சங்கரி --- முதலும்
முடிவுமாக இருப்பவரும் ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவரும் ஆகிய பார்வதி
யம்மையாரது,
குமர --- குழந்தையாக வந்தவரே!
ஈசா --- எப்பொருட்குந் தலைவரே!
ஆரணம் பயில் --- வேதங்களை
விரித்துரைக்கும்,
ஞான புங்கவ --- ஞான பண்டிதரே!
சேவல் அம்கொடி ஆன பைங்கர --- அழகிய
சேவற் கொடியை ஏந்திய அழகு மிக்க திருக்கரத்தை உடையவரே!
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் ---
திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்வு கொண்டு ஆன்மகோடிகளுக்கு அருள்
புரிகின்ற,
பெருமாளே --- பெருமை மிக்கவரே!
மூலமந்திரம் ஓதல் இங்கு இலை ---
மூலமந்திரமாகிய சடக்கர மகாமனுவை (கசிந்து கண்ணீர் மல்கி அடியேன் ஒருநாளும்) ஈண்டு
ஜெபிக்கின்றேனில்லை.
ஈவது இங்கு இலை --- இல்லையென்று இரப்பவர்க்கு
இல்லையென்னாது ஈண்டு தருமஞ் செய்கின்றேனில்லை,
நேயம் இங்கு இலை --- அன்பு என்பதும் ஈண்டு
அடியேனிடத்தில் இல்லை.
மோனம் இங்கு இலை --- மௌன நிலையும் ஈண்டு
அடியேன் பெற்றேனில்லை,
ஞானம் இங்கு இல்லை --- மெய்யறிவும் ஈண்டு
பெற்றேனில்லை,
(இவைகட்கு
எதிர்மாறாக)
மடவார்மேல் மோகம் உண்டு --- பெண்களிடத்தில்
அடியேனுக்கு மிகவும் மோகம் உண்டு.
அதி தாகம் உண்டு --- அதனால் மிகுந்த
காமவிடாயும் உண்டு.
அபசாரம் உண்டு --- தேவரிடத்திலும்
அடியாரிடத்திலும் தீச்செயல் செய்தது உண்டு.
அபராதம் உண்டு --- அதனால் அடியேனுக்குத்
தண்டனையும் உண்டு.
இடு மூகன் என்று ஒரு பேரும் உண்டு --- (முருக
நாமங்களைச் சொல்லாமையால்) ஊமை என்று எனக்கு இட்ட ஒரு பேரும் உண்டு;
அருள் பயிலாத கோலமும் --- திருவருள் பெறும்
நெறியில் பழகாத வடிவமும்,
குண ஈன துன்பர்கள் வார்மையும் ---
நற்குணமில்லாத கீழ் மக்களுடைய கூட்டுறவும்,
பல ஆகி --- பற்பல தீக்குணங்களை உடையவனுமாகி,
வெந்து எழுகோர கும்பியிலே விழுந்திட நினைவு
ஆகி --- வெப்பத்துடன் தீ மூண்டு எழுகின்ற பயங்கரமான நரகத்திலே விழுகின்ற எண்ணத்தை
உடையவனாகி,
கூடு கொண்டு உழல்வேனை --- மீண்டும் மீண்டும்
உடம்பை எடுத்து (பிறவிக் கடலில் வீழ்ந்து) தடுமாறுகின்ற அடியேனை,
அன்பொடு --- அடியேன் பேரில் தேவரீர்
அன்புகொண்டு,
ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு --- மெய்யறிவு
நிரம்பிய உள்ளத்தையுடைய பெரியோர்கள்பால், கூடிப்பழகுவதற்குரிய,
கூர்மை தந்து இனி ஆள வந்து --- அறிவின்
நுட்பத்தைத் தந்து இனி ஆட்கொள்ள வந்து,
அருள்புரிவாயே --- திருவருள் புரியவேணும்.
பொழிப்புரை
கூன் பாண்டியனது கொடிய வெப்பு நோயை
நீக்கும் பொருட்டு சமணர்கள் தடவிய பீலி வெந்து நீறாகவும், சிறந்த உயிர் வெதும்பவும், அவர்கள் கரத்தில் பிடித்துள்ள, அசோகத் தழைக்கொத்து வெந்து அழியவும், சிவநாமங்களைச் சொல்லாத ஊமைகளைப் போன்ற
சமணர்கள் நெஞ்சில் பயத்தை அடையுமாறும், வாதுசெய்து, திருவருள் துணை கொண்டு, தேவாரப் பாடலுடைய திரு ஏடு வைகையாற்றில்
விரும்பி நீரை எதிர்த்துச் செல்லவும், பாண்டியன்
வெப்பு நோயும் கூனும் நீங்கி உய்யவும், வஞ்சனையால்
திருமடத்திற்குத் தீ வைத்த சமணர்கள்,
உடலைக் கிழிக்கும் வெவ்விய கழுவில் ஏறவும், திருஞானசம்பந்தராகத் திருவவதாரம்
புரிந்து வெற்றி கொண்ட முருகப்பெருமானே!
உலகெலாம் உய்யுமாறு ஆலகாலவிடத்தை உண்டருளியவரும், முச்சுடர்களையும் அழகிய கண்களாக
உடையவருமாகிய சிவபெருமானுடைய இடப்புறத்தில் எழுந்தருளியிருப்பவரும், என்றும் இளமையானவரும், முடிவாக விளங்குபவரும், முதலும் முடிவுமாக இருப்பவரும், சுகத்தைத் தருபவருமாகிய உமாதேவியாருடைய
குழந்தையே!
எப்பொருட்குந் தலைவரே!
வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளிய ஞான
பண்டிதரே!
அழகிய சேவற் கொடியைத் தாங்கிய அழகிற்
சிறந்த திருக்கரத்தையுடையவரே!
திருவாவினன் குடியென்னும்
திருத்தலத்தில் வாழ்வுகொண்டு, ஆன்மகோடிகளுக்கு
அருள் புரியும் பெருமிதமுடையவரே!
தேவரீருடைய மூல மனுவாகிய சடக்கர
மந்திரத்தை அன்புடன் இங்கு ஜெபிக்கின்றேனில்லை; இரப்பவாக்கு இல்லை யென்னாது தருமஞ்
செய்கின்றேனில்லை; அன்புமில்லை; மௌன நிலையை யடைகின்றேனில்லை; மெய்யறிவு பெற்றேன் இல்லை; இந்நற்குணங்களுக்கு
எதிர்மாறாக-பெண்களின் மீது மோகமுண்டு; மிகவும்
காமவிடாயுண்டு; செய்கின்ற தீமையுண்டு; அதனால் தண்டனையுண்டு; இதனால் பெரியோர் (சிவவாசகத்தை
உச்சரிக்காத) ஊமையென்று இட்ட பேருமுண்டு; அருள்
நெறியிற் பழகாத வடிவு, நற்குணமில்லாத
தீயவர்களுடைய நட்பு முதலிய பல தீக்குணங்களை யுடையவனாகி, தீ மூண்டு எழுகின்ற பயங்கரமான நரகத்தில்
விழுகின்ற எண்ணமுடையவனாகி, மீண்டும் மீண்டும்
உடம்பெடுத்து பிறவிச்சுழலில் பட்டு உழல்கின்ற அடியேனை, மெய்ஞ்ஞானிகள் பால் இணங்கி நற்கதி
பெறுமாறு கூர்த்த அறிவைத் தந்து ஆட்கொள்ளுமாறு அடியேனிடம் அன்பு கொண்டு எழுந்தருளி
வந்து திருவருள் புரியவேண்டும்.
விரிவுரை
மூலமந்திரம்
ஓதல் இங்கு இலை ---
முருகப்
பெருமானுடைய மந்திரங்களுள் மூலமந்திரமாகிய ஆறெழுத்தை யுரைப்பவர்களுடைய வல்வினை
மாயும்; தொல்லை வினை தேயும்; பிறவிப் பெரும்பிணி நீங்கும்; இம்மை நலமும் மறுமையின்பமும் உண்டாகும்.
“இசைபயில் சடாட்ச ரம்அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே” ---
(வசனமிக ஏற்றி)
திருப்புகழ்.
ஆறெழுத்தையோதி
திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால் இம்மை - மறுமை நலன் எய்தும், துன்பம் ஒருபோதும் உண்டாக மாட்டாது.
பெருமை
நிதியே, மால்விடைகொள்
பெம்மான் வருந்திப் பெறும் பேறே,
அருமைமணியே, தணிகைமலை
அமுதே,உனதன் ஆறெழுத்தை
ஒருமை
மனத்தின் உச்சரித்த்துஇங்கு
உயர்ந்த திருவெண்ணீ றிட்டால்,
இருமை
வளனும் எய்தும்,இடர்
என்பதுஒன்றும் எய்தாதே. --- திருஅருட்பா
நீராலும்
நெருப்பாலும் பூமியினாலும் காற்றாலும் ஆகாயத்தாலும் இரவிலும் பகலிலும் உண்டாகும்
சங்கடங்களைத் தீர்த்து அடியார்க்கு அருள்பாலிப்பது அவ்வாறக்கரங்களே.
பொங்கிடு
புனலிலும் பூவில்வெங் கனலில்
எங்கணும்
உள வெளியில் வளி பகலில்
கங்குலில்
அடியவர் கருத்து நன்காகச்
சங்கடந்
தீர்ப்பது சரவண பவவே. --- பாம்பனடிகள்
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களிலும் விளங்குவது
ஆறக்கரங்களே.
துய்ய
மூலமும் குய்யமுந் தொப்புளும்
மெய்ய
னாகத மும்மின் விசுத்தியும்
மைய
மானல லாடமு மாய்நிற்கும்
ஐய
னார்பெய ராறக் கரங்களே. ---
பாம்பனடிகள்
ஆறெழுத்து
உண்மை அறியார்கள் கன்மம் அறுக்க,அப்பால்
வேறுஎழுத்து
இல்லை, வெண் நீறில்லை மால்சிவ வேடமில்லை
தேறு எழுத்து
ஏது? அயன் கையும் கருங்குழிச் சேறலும், பின்
மாறு எழுத்து
அந்தகன் தென்புலத்தே என்றும் வௌவுவதே.
--- ஆறெழுத்தந்தாதி
இத்தகைய
வேத இருதயமாகிய எம்பெருமானுடைய ஆறெழுத்தை முறைப்படி குருமூர்த்தியிடம் உபதேச
வழியாகப் பெறுதல் வேண்டும். பெற்று,
காதலாகிக்
கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும்.
ஈவது
இங்கு இலை
---
ஆறெழுத்து
ஓதுவதுடன் ஈகையுமிருத்தல் அவசியம் என்று புலப்படுத்துகின்றார்.
நேயம்
இங்கு இலை
---
ஈகையுடன்
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் வேண்டும்.
மோனம்
இங்கு இலை
---
எல்ல
உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதால் அன்புமயமாகி, பேசா அநுபூதி பெற்று, மநோலயமுற்று அசைவற்ற நிலையையடைவர்.
ஞானம்
இங்கு இலை
---
மௌன
நிலையை மேவி நிற்க, மெய்ஞ்ஞானந்
தலைப்படும்.
மூகன்
என்று ஒரு பேரும் உண்டு ---
பேய்வாழ்
காட்டகத்து ஆடும்பிரான் நமக்கு வாய்த்தது அவனது வார்கழலை வாழ்த்துவதற்காகவே.
“வாழ்த்த வாயும்” “வார்கழல் வாய் வாழ்த்த வைத்து” “வாயே வாழ்த்து கண்டாய்” என்பவை
தமிழ் வேத வசனங்கள். ஊர் வம்புகளை ஓயாமல் பேசிக்கொண்டு இறைவனை வாழ்த்தாமையால்
வாயிருந்தும் ஊமை யாகின்றான்.
அருள்
பயிலாத கோலம்
---
சிவநெறிக்கு
அடையாளங்களாகிய விபூதி உருத்திராக்கம் அணிந்து கொள்ளாத பாழ்வடிவம்.
கோர
கும்பியிலே விழுந்திட ---
மூமந்திர
மோதுதல், ஈதல், அன்புசெய்தல், மோனம் ஞான மாதி நற்குணமின்றி, மோக, தாகம், அபராதம் முதலிய தீக்குணங்களுடையார்
நரகில் வீழ்ந்து பலகாலும் துன்புறுவர்.
கூடுகொண்டு ---
நரகில்
துன்பங்களை அநுபவித்து எஞ்சி நின்ற மிக்க கருமங்களை யனுபவிக்க வேண்டும். புல், பூண்டு, புழு, பறவை, மிருகம், மனிதனாகி பலப்பல பிறப்புக்களை எடுத்து
உழலுவர்.
ஞான
நெஞ்சினர்பால் இணங்கிடு கூர்மை ---
மேற்கூறிய
தீக்குணங்களை யொழித்து, நற்குணங்களை
யுண்டாக்கி நலம் பெறச் செய்யும் தன்மை நல்லோரிணக்கத்திற்கேயுண்டு. நல்லாரோடு
நாளும் இணங்குபவர்கட்கு நல்லருளும் பிறவாப் பெற்றியும் தானேயுண்டாகும்.
இனியது
கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது
இனிது ஏகாந்தம் இனிது
அதனினும்
இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும்
இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும்
இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும்
நனவிலும் காண்பது தானே. --- ஒளவையார்.
நல்லாரைக்
காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல்
கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் நன்று. --- ஒளவையார்.
நல்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று,
பொற்புஉடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று,
பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று,
சொல்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே.
--- விவேகசிந்தாமணி.
பீலிவெந்து
உயர் ஆவிவெந்து:-
சமணர் கழுவேறிய
வரலாறு
தொன்று
தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய
சீலங்கள் மாறின; உலகெலாஞ் செய்த
பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது
திருமகளாய், பாண்டிமா தேவியாய்
விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,
அவருக்கு
ஸ்ரீதனமாக சோழராஜனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற
குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாயண்ணலை
நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ
ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். அப்போது திருஞான சம்பந்தரது
அற்புத மகிமையையும், அவர்
திருமறைக்காட்டில் எழுந்தருளி யிருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில
தகுந்த ஏவலரை யனுப்பினார்கள்; அவர்கள்
வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண
நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து,
அதனை
ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்துவருமாறு அனுப்பினார்கள் என்று
தெரிவித்து நின்றார்கள். சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்:
திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க
சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.
“வேயுறு
தோளிபங்கன்விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்ற
திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று
கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு
எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரஞ் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த
பல்லாயிரஞ் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனமேற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி
நின்றார்கள். புகலிவேந்தர் வரவை யுணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு
அமைச்சர் பெருமானையனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து
நின்றனர்.
“சீகாழிச் செம்மல் பல
விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார்
ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி
கூகைகூப்பி, மண் மிசை வீழ்ந்து
வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை யறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான்
குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீருமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு
நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார்
கைகூப்பி, “சென்ற காலத்தின்
பழுதிலாத் திறமும் இனி யெதிர் காலத்தின் சிறப்பும், இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்;
நன்றியில்
நெறியிலழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து நலம் பெற்றனர்” என்றார்.
மதுரையும்
ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து
சம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார்
ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,
பிள்ளையார்
அவரை யெடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில்
தங்கியருளினார். சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று
பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார
மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும்
ஆற்றலற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே
இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால்
வந்ததென்றுணர்ந்து,
“செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே”
என்று
பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது
சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான
சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி,
மயிற்பீலியால்
பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த
அமணர்களுடைய உடலும் உயிருங் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி,
திருஞானசம்பந்தர்
திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச்சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றுங் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான்
சேருவேன்; அவரை அழைமின்”
என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,
“ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின்
மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க
மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தி
னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”
கண்டு
வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும்
உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில்
சென்று, தென்னவனாயுல காண்ட
கன்னிமதிச் சடையானைப் பணிந்து,
“ஞாலம்
நின்புகழே மிகவேண்டுந் தென் ஆலவாயிலுறை மெம்மாதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.
பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில்
பீடந்தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர்
பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,
“மானின்நேர்
விழிமாதராய், வழுதிக்கு மாபெருந்
தேவி,கேள்
பானல்வாய்
ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை
மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு
ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”
என்று
பாடித் தேற்றினார்.
அரசன் சமணரையும் சம்பந்தரையும்
சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புற நோயை நீக்குவோமென்று
மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி
வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற
திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில்
தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து
வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை
பணிந்து ஆனந்தமுற்றான்.
பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற
சமணர்கள் அனல்வாதம் தொடங்கினர். பெருநெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய
தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி
நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின.
புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர்
கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, “வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன்
கூன் நிமிர்ந்து, நின்ற சீர்
நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியு” மென்ற பதிகம் பாடினார். குலச்சிறையார்
ஓடி அவ்வேட்டை யெடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற சமணர் கழுவேறி
மாய்ந்தனர். பாண்டியன் சைவ சீலம் மேவி வாழ்ந்தனன்.
கருத்துரை
சமண இருளை இரித்து சைவ ஒளியை விரித்த
ஞானகுரவரே! சிவகாமசுந்தரியின் திருக்குமாரரே! சேவற்கொடியை உடையோனே!
பழனாபுரியாண்டவ! நற்குணமில்லாத நாயேனுடைய தீக்குணங்களொழிய மெய்ஞ்ஞானிகள் இணக்கத்தை
நல்கி அருள்புரிவீர்
No comments:
Post a Comment