அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மூலம் கிளர் ஓர்
(பழநி)
பழநியப்பா!
திருவடியில்
அன்பு வைத்து உய்ய அருள்.
தானந்தன
தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய ......
முதல்வேர்கள்
மூணும்பிர
காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள ......
விடவோடிப்
பாலங்கிள
ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ ......
மதின்மேவிப்
பாடுந்தொனி
நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் ......
அருள்வாயே
சூலங்கலை
மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு ......
முருகோனே
சூரன்கர
மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக ......
மயில்வீரா
காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே
கானங்கலை
மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மூலம்
கிளர் ஓர் உருவாய், நடு
நால் அங்குல மேல் நடு வேர்,இடை,
மூள்பிங்கலை நாடியொடு ஆடிய, ...... முதல்வேர்கள்
மூணும்
பிரகாசம் அதாய் ஒரு
சூலம்பெற ஓடிய வாயுவை,
மூலம் திகழ் தூண்வழியே அள ...... விட ஓடிப்
பாலம்
கிளர் ஆறு சிகாரமொடு,
ஆருமு சுடர் ஆடு பராபர
பாதம் பெற, ஞான சதாசிவம் ...... அதின்மேவிப்
பாடும் தொனி நாதமும், நூபுரம்
ஆடும் கழல் ஓசையிலே பரிவு
ஆகும்படியே அடியேனையும் ......
அருள்வாயே.
சூலம், கலை மான், மழு, ஓர்துடி,
வேதன் தலை ஓடும், அரா, விரி
தோடும் குழை சேர் பரனார் தரு ......
முருகோனே!
சூரன்கரம்
ஆர்சிலை வாள் அணி
தோளும் தலை தூள்படவே, அவர்
சூளும் கெட வேல்விடு சேவக! ......
மயில்வீரா!
காலின்
கழல்ஓசையும், நூபுர
வார் வெண்டைய ஓசையுமே, யுக
காலங்களின் ஓசை அதா நடம் ...... இடுவோனே!
கானம்
கலை மான் மகளார் தமை
நாணம் கெடவே அணை வேள்! பிர-
காசம் பழனாபுரி மேவிய ...... பெருமாளே.
பதவுரை
சூலம் --- திரிசூலத்தையும்,
கலை --- சந்திரனையும்,
மான் --- மானையும்,
மழு --- மழுவையும்,
ஓர் துடி --- ஒப்பற்ற உடுக்கையையும்,
வேதன் தலை ஓடும் --- பிரமதேவனுடைய கபால
ஓட்டையும்,
அரா விரி --- படத்தை விரித்துக் கொண்டுள்ள
பாம்பையும்,
தோடும் --- தோட்டையும்,
குழை --- குண்டலத்தையும்
சேர்பரனார் தரு --- தரித்துக் கொண்டிருக்கின்ற
இறைவராகிய சிவபெருமான் பெற்றருளிய,
முருகோனே --- முருகப் பெருமானே!
சூரன் கலை ஆர் சிலை --- சூரபன்மனுடைய
கரத்தில் பொருந்தியுள்ள வில்லும்,
வாள் --- வாளாயுதமும்,
அணி தோளும் --- அழகிய புயாசலமும்,
தலை --- சென்னியும்,
தூள்பட --- (ஏ-அசை) பொடிபட்டு அழியவும்,
அவன் சூளும் கெட --- அவனுடைய ஆணையும்
அழியுமாறு,
வேல்விடு சேவக --- வேற்படையை ஏவியருளிய
சிறந்த ஆண்டகையே!
மயில் வீரா --- மயிற்பரியை வாகனமாகவுடைய
வீரரே!
காலின் கழல் ஓசையும் --- திருவடிகளில்
அணிந்துள்ள வீரகண்டாமணியின் இனிய ஒலியும்,
நூபுர --- கிண்கிணியின் ஒலியும்,
வார் வெண்டைய ஓசையும் (ஏ-அசை) --- கச்சுடன்
கூடிய வெண்டையத்தின் ஒலியும்,
யுக காலங்களின் ஓசை அது ஆ --- யுக முடிவில்
உண்டாகும் பேரொலிபோல் ஒலிக்க,
நடம் இடுவோனே --- நிர்த்தனம் புரிபவரே!
கானம் --- காட்டில் வாழ்கின்ற,
கலைமான் மகளார் தமை --- ஒளிர்கின்ற மான்
வயிற்றில் பிறந்த வள்ளி நாயகியாரை,
நாணங்கெடவே அணை --- அந்த அம்மையாருடைய
அஞ்ஞானம் கெட்டொழியுமாறு மருவிய,
வேள் --- குமாரக் கடவுளே!
பிரகாசம் பழனாபுரி மேவிய --- ஞான ஒளி
வீசுகின்ற பழநிமலையின் மேல் எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமிதமுடையவரே!
மூலம் கிளர் ஓர் உருவாய் ---
மூலாதாரத்தினின்றும் மேலெழுந்து ஒருருவாய்,
நடு நால் அங்குல மேல் --- உடலுக்கு
நடுப்பாகமான இடத்திலிருந்து நான்கு அங்குலத்திற்கு மேலே,
நடு வேர் --- சுழுமுனை நாடியும்,
இடை --- இடைகலையும்,
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய --- மூளுகின்ற
பிங்கலை என்கின்ற நாடியினுடன் அசைகின்ற,
முதல் வேர்கள் மூணும் பிரகாசம் அது ஆய் ---
அந்த முதன்மையான (இடை, பிங்கலை, சுழுமுனை என்ற) மூன்று நாடிகளும்
ஒளிவிட்டு விளங்குவதாகி,
ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை --- ஒப்பற்ற
சூலாயுதம்போல் விசையாகச் செல்லுகின்ற பிராண வாயுவை,
மூலந்திகழ் தூண்வழியே அளவிட ஓடி ---
உடம்பிற்கு ஆதாரமாக விளங்கும் முதுகுத் தண்டின் (சுழுமுனை) வழியாக அளவுப்படி
சஞ்சரித்து,
பாலம் கிளர் --- நெற்றி (புருவமத்தி)யில் விளங்குகின்ற,
ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் --- ஆறாவது
ஆதாரமாகிய ஆக்ஞையென்னுமிடத்தில் சிகார அக்கரத்தோடு பொருந்திய ஜோதி வடிவாக நின்று,
ஆடு பராபர பாதம் பெற --- நிர்த்தனஞ்
செய்கின்ற மேலான பொருளாகிய தேவரீருடைய திருவடியை அடையும்படி,
ஞான சதாசிவம் அதின் மேவி --- ஞானத்தை
வழங்குகின்றதாகிய சதாசிவ தத்துவத்தில் பொருந்தி நின்று,
பாடும் தொனி நாதமும் --- இனிய இசையைப்
பாடுகின்ற நாதமுடனும்,
நூபுரம் ஆடும் --- கிண்கிணிகள் அசைகின்ற,
கழல் ஓசையிலே --- தேவரீருடைய திருவடி நாதத்தின்கண்,
பரிவு ஆகும்படி (ஏ- அசை) --- அன்பு பூண்டு
நிற்குமாறு,
அடியேனையும் அருள்வாயே --- அடியேனையும்
ஆட்கொள்ள வேண்டும். (உம் இழிவு சிறப்பு.)
பொழிப்புரை
திரிசூலத்தையும், பிறைமதியையும், மானையும் மழுவையும், ஒப்பற்ற உடுக்கையையும், பிரமகபாலத்தையும், படம் விரித்தாடுகின்ற பாம்பையும், தோட்டையும், குண்டலத்தையும் அணிந்து கொண்டுள்ள
சிவபெருமான் தந்தருளிய முருகக் கடவுளே!
சூரபன்மன் கரத்தில் பொருந்தியிருந்த
வில்லும் வாட்படையும், அழகிய புயாசலங்களும்
பொடிபட்டு அழியவும், அவனுடைய ஆணை அழியவும், வேற்படையை ஏவியருளிய சேவகரே!
திருவடியில் வீரகண்டா மணியின் ஓசையும், கிண்கிணி கச்சுடன் கூடிய வெண்டயம்
இவற்றின் ஓசையும், யுகாந்த
காலத்திலுண்டாகும் ஓசைபோல் ஒலிக்க திருநடனம் புரிபவரே!
காட்டிலே ஒளியுடன் கூடிய மான்மகளாகிய
வள்ளிநாயகியாரது அஞ்ஞான இருள் நீங்குமாறு தழுவுகின்ற அழகரே!
ஞான ஒளி வீசுகின்ற பழநியம்பதியில் எழுந்தருளியுள்ள
பெருமையின் மிக்கவரே!
மூலாதாரத்தினின்று மேலெழுந்து ஒருருவாய்
உடலுக்கு மத்திய ஸ்தானத்திலிருந்து நான்கு அங்குலத்திற்கு மேலே சுழுமுனை, இடை, பிங்கலை என்ற முக்கியமான மூன்று
நாடிகளும் ஒளிசெய்து விளங்க, சூலம்போல் விசைகொண்டு
ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுக் தண்டிலுள்ள சுழுமுனை நாடிவழியாக அளவுப்படி
சஞ்சரிக்கச் செய்து, புருவ மத்தியிலுள்ள
ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞாவிலே சிகார அக்கரத்தோடு பொருந்திய அருட்பெருஞ் சோதியாக
நின்று ஆடுகின்ற மேலான பரம்பொருளாகிய தேவரீருடைய திருவடியை யடையும்படி, ஞானத்தைத் தரும் சதாசிவ தத்துவத்துடன்
கலந்து, இனிய நாதத்துடன்
கூடிய பாதநூபுரம் வீரக்கழல் இவற்றின் இனிய ஓசையில் அன்புகொண்டு உய்யுமாறு
அடியேனையும் ஆண்டருள்வீர்.
விரிவுரை
நடு ---
பாயுவிற்கு
இரண்டங்குலம் மேலே உபஸ்தத்திற்கு இரண்டங்குலம் கீழே நடுவில் ஓரங்குலம்
தேகநடுவாகும்.
மூலந்திகழ்
தூண் வழியே
---
முதுகுத்
தண்டின் மத்தியிலுள்ள வெள்ளை நரம்பாகிய சுழுமுனை வழியாகப் பிராணவாயுவைச்
செலுத்துவது, இது முறைப்படி
ஆசிரியரை யடுத்து அஷ்டாங்க யோகங்களைப் பழகி அதன் மூலம் அநுசரிப்பது.
கலைமான் ---
கலை
என்பது மானுக்கு அடையாகக் கொண்டால் ஆண்மான் எனப் பொருள்படும்.
தோடுங்
குழை
---
தோடு-பெண்களுடைய
காதணி. குழை-ஆண்களுடைய காதணி. சிவபெருமான் பாதிவடிவு உமையுடன் கூடியிருப்பதால்
இரண்டையும் கூறினார்.
பிரகாசம்
பழனாபுரி
---
பழநி
ஞானக்ஷேத்திரம் “அதிசயம் அநேகம் உற்ற பழநி” என்றும், “பழநி வரு கற்பூர கோலாகலா” என்றும்
சுவாமிகளால் மிகவும் பாராட்டப்பட்ட அற்புதத் திருத்தலம். அங்கு சிவஞான ஒளி வீசிக்
கொண்டிருக்கின்றது. அங்கு செல்வோருடைய மன இருள் நீங்கும்; சிவ அருள் ஓங்கும்.
கருத்துரை
சிவகுமரரே!
சூரசம்மார! ஆனந்தக் கூத்த! வள்ளி கணவ! பழநியப்பா! சிவயோகமுற்று தேவரீர்
திருவடியில் அன்புகொண்டு உய்யுமாறு அருள் புரிவாய்.
No comments:
Post a Comment