அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முருகுசெறி குழல்முகில்
(பழநி)
பழநியப்பா!
மோகத் தீயில்
முழுகாமல்,
உமது திருவடி மலரில் முழுக
அருள்.
தனன
தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு
செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென ......இருபார்வை
முளரி
மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென
......மடமாதர்
உருவ
மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை ......யொழியாமல்
உவகை
தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் ......
புரிவாயே
அரவ
மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ ......னருள்பாலா
அமர்செய்
நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில்
...... விடுவோனே
பரவு
புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே
பரம
குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் .....பெருமாளே.
பதம் பிரித்தல்
முருகு
செறிகுழல் முகில் என, நகில் நறு
முளரி முகை என, இயல் என, மயில் என,
முறுவல் தளவு என, நடை மட அனம் என, ......இருபார்வை
முளரி
மடல் என, இடை துடி அது என,
அதரம் இலவு என, அடிஇணை மலர் என,
மொழியும் அமுது என, முகம் எழில் மதி என, ...... மடமாதர்
உருவம்
இனையன என வரும் உருவகம்,
உரை செய்து, அவர்தரு கலவியில் நிலவிய
உலையின் மெழுகு என உருகிய கசடனை, ...... ஒழியாமல்
உவகை
தரு கலை பல உணர் பிறவியின்
உவரி தனில் உறும் அவலனை, அசடனை,
உனது பரிபுர கழல் இணை பெறஅருள் ......
புரிவாயே.
அரவம்
மலிகடல் விடம் அமுதுடன் எழ,
அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும்
அபயம் மிக என, அதை அயில் இமையவன் ...... அருள்பாலா!
அமர்செய்
நிசிசரர் உடல் அவை துணிபட,
அவனி இடிபட, அலைகடல் பொடிபட,
அமரர் சிறைவிட, அடல் அயில் நொடியினில் ...... விடுவோனே!
பரவு
புனமிசை உறைதரு குறமகள்
பணைகொள் அணிமுலை முழுகு பனிரு புய!
பணில சரவணை தனில் முளரியின் வரு ...... முருகோனே!
பரம
குருபர எனும் உரை, பரசொடு
பரவி அடியவர் துதிசெய, மதிதவழ்
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள்
.......பெருமாளே.
பதவுரை
அரவ மலிகடல் --- ஓசை மிகுந்த
சமுத்திரத்தில்,
விடம் அமுதுடன் எழ --- ஆலகால விஷம்
அமிர்தத்துடன் தோன்றியபோது,
அரி --- திருமாலும்,
அயனும் --- பிரமாவும்,
நரை இபன் முதல் அனைவரும் --- வெள்ளை யானையை
உடைய இந்திரன் முதலிய யாவரும்,
அபயம் மிக என --- அடைக்கலம் என்று மிகவும்
ஓலமிட,
அதை அயில் இமையவன் --- அந்த விடத்தை உண்ட
தேவதேவராகிய சிவபெருமான்,
அருள் பாலா --- பெற்ற புதல்வரே!
அமர் செய் --- போர் செய்,
நிசிசரர் உடல் அவை துணி பட --- அசுரர்களின் உடல்கள்
அறுபட்டு விழவும்,
அவனி இடி பட --- பூமி இடிபடவும்,
அலைகடல் பொடி பட --- அலையுடன் கூடிய
சமுத்திரம் வற்றித் தூள்படவும்,
அமரர் சிறை விட --- தேவர்கள்
சிறைச்சாலையிலிருந்து விடுபடவும்,
அடல் அயில் --- வலிமையுள்ள வேலாயுதத்தை,
நொடியினில் விடுவோனே --- ஒரு நொடிப் பொழுதில்
விடுத்தவரே!
பரவு புனமிசை உறைதரு குறமகள் ---
புகழப்படுகின்ற தினைப்புனத்திலே வசித்த வள்ளியம்மையாரின்,
பணை கொள் அணிமுலை முழுகு --- பருத்துள்ள
அழகிய முலைகளில் முழுகிய,
பன் இரு புய - பன்னிரு தோள்களையுடையவரே!
பணில சரவணை தனில் --- சங்குகள்
விளங்கும் சரவணப் பொய்கையில்,
முளரியில் வரு --- தாமரை மலர்மீது
எழுந்தருளியுள்ள,
முருகோனே --- முருகக் கடவுளே!
பரம --- பெரிய பொருளே!
குரு பர --- குருமூர்த்தியே,
எனும் உரை பரசொடு பரவி --- என்னும் புகழ்
மொழிகளால் போற்றி செய்து,
அடியவர் துதி செய --- அடியார்கள் துதிசெய்ய,
மதி தவழ் --- சந்திரன் தவழ்கின்ற,
பழநிமலை தனில் இனிது உரை --- பழநி மலைமீது
இனிதாக எழுந்தருளியுள்ள,
அமரர்கள் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையிற் சிறந்தவரே!
முருகு செறி குழல் முகில் என --- வாசனை
நிறைந்த கூந்தல் மேகம் எனவும்,
நகில் நறு முளரி முகை என் --- தனங்கள்
மணமுள்ள தாமரையின் அரும்பு எனவும்,
இயல் என மயில் என --- சாயலானது மயில் எனவும்,
முறுவல் தளவு --- பற்கள் முல்லை அரும்பு
எனவும்,
நடை மட அனம் என --- நடை மடப்பமுடைய
அன்னம் எனவும்,
இரு பார்வை முளவி மடல் என --- இரு கண்களும்
தாமரையின் இதழ்கள் எனவும்,
இடை துடி அது என --- இடை உடுக்கையெனவும்,
அதரம் இலவு என --- இதழ் இலவம் பூ எனவும்,
அடி இணை மலர் என --- பாதங்கள் இரண்டும் மலர்
எனவும்,
மொழியும் அமுது என --- சொல் அமுதம் எனவும்,
முகம் எழில் மதி என --- முகமானது அழகிய
சந்திரன் எனவும்,
மடமாதர் --- மடமைக் குணம் உடைய பெண்களின்,
உருவம் இனையன எனவரும் உருவகம் --- வடிவங்களை
இவை இவையென்று உருவகப்படுத்தி,
உரை செய்து --- புகழ்ந்து கூறி,
அவர் தரு கலவியின் நிலவிய --- அம்மாதர்கள்
தரும் கலவி இன்பத்தில் பொருந்தி,
உலையின் மெழுகு என --- உலையில் அகப்பட்ட
மெழுகு போல்,
உருகிய கசடனை --- உள்ளம் உருகிய மூடனுக்கு,
ஒழியாமல் --- எப்போதும்,
உவகை தரு கலை பல உணர் --- மகிழ்ச்சி தரும்
கலைகள் பலவற்றையும் உணர்வதற்கு இடமான,
பிறவியின் உவரிதனில் உறும் அவலனை --- பிறவிக்
கடலில் கிடக்கும் வீணனுக்கு,
அசடனை --- அறிவில்லாதவனுக்கு,
உனது பரிபுர கழல் இணை பெற --- உமது சிலம்பு
அணிந்த பாதங்கள் இரண்டையும் பெறுமாறு,
அருள் புரிவாயே --- திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
ஒலி மிகுந்த கடலில் அமிர்தத்துடன் விடம்
எழுந்த போதும் மாலும் நான்முகனும் வெள்ளை யானையுடைய இந்திரன் முதலான எல்லாரும்
அடைக்கலம் என்று முறையிட, அவ்விடத்தையுண்ட
சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!
போர் புரிந்த அசுரருடைய உடல்கள்
அறுபடவும், பூவுலகம் இடிபடவும், அலைகள் நிறைந்த கடல் வற்றித்
துகள்படவும், தேவர்கள்
சிறையிலிருந்து விடுபடவும், நொடிப் பொழுதில்
வலிமை நிறைந்த வேலாயுதத்தை விடுத்தவரே!
புகழ் பெற்ற தினைப்புனத்தில் இருந்த
வள்ளியம்மையின் பருத்த தனங்களில் முழுகுகின்ற பன்னிரு புயங்களை உடையவரே!
சங்குகள் நிறைந்த சரவணப் பொய்கையில்
தாமரை மலர்மீது எழுந்தருளிய முருகக் கடவுளே!
பரம்பொருளே! குருநாதரே! என்று புகழ்
மொழி புகன்று அடியார்கள் துதி செய்யச் சந்திரன் தவழ்கின்ற பழநிமலையில் இனிதாக உறைகின்ற
தேவர் தொழும் பெருமையில் சிறந்தவரே!
வாசனை நிறைந்த கூந்தல் மேகம் எனவும், தனங்கள் மணமுடைய தாமரையின் அரும்பு
எனவும், சாயலானது மயில்
எனவும், பற்கள் முல்லையரும்பு
எனவும், நடை மடப்பமுடைய
அன்னம் எனவும், இரு கண்கள் தாமரையின்
இதழ் எனவும், இடை உடுக்கை யெனவும், இதழ் இலவமலர் எனவும், பாதங்கள் மலர் எனவும், மொழி அமுதம் எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், மடமையுடைய மாதர்களின் வடிவத்தை இவ்வாறு
உருவகஞ் செய்து உரைத்து, அவர்கள் தருகின்ற
கலவியின்பத்தில் பொருந்தி, உலையில் வைத்த மெழுகு
போல் உள்ளம் உருகிய மூடனுக்கு, எப்போதும் மகிழ்ச்சியைத்
தருகின்ற பல கலைகளை உணர்வதற்கு உரிய பிறவிக் கடலில் அகப்பட்ட வீணனுக்கு, அறிவில்லாதவனுக்கு, தேவரீருடைய சிலம்பணிந்த திருவடியைப் பெற
அருள் புரிவீர்.
விரிவுரை
இத்திருப்புகழில்
புலவர்கள் பெண்களின் வடிவங்களை என்ன என்ன உவமை தந்து உருவகப் படுத்துகின்றார்கள்
என்பதைச் சுவாமிகள் தெளிவு படுத்துகின்றார். இந்த வண்ணம் பெண்களின் கண், வாய் முதலிய உறுப்புகளை உயர்ந்ததாக
உருவகப்படுத்தி உரைப்பது ஆசையின் மிகுதியினால் விளைந்த விளைவு.
உலையின்
மெழுகு என உருகிய கசடனை ---
மோகமானது
நெருப்பு. ஊரில் எழுகின்ற எரிக்கு நீரில் முழுகி உய்யலாம்; அதை மோகமாகிய நெருப்பு நீரில்
குளிப்பினுஞ் சுடும்; குன்றேறி ஒளிப்பினும்
சுடும். நினைத்தாலும் சுடும்; காதில் கேட்கினுக்
சுடும்; அதனை அகற்றினாலும்
சுடும். வெறும் மயக்கத்தை மட்டுந் தருகின்ற கள்ளினும் காமங் கொடியது. அதனால்
இம்மோகத் தீயில் விழுந்தோருடைய உள்ளம் உலையிலிட்ட மெழுகென உருகியழிவர்.
ஊருள்
எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள்
குளித்தும் உயல் ஆகும்; - நீருள்
குளிப்பினும்
காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும்
காமம் சுடும். --- நாலடியார்.
ஒழியாமல்
உவகைதரு கலைபல உணர் பிறவி ---
இறைவன்
நமக்கு இந்த உடம்மையும் கருவி கரணங்களையும் தருகின்றான்; அதனால் அறிவு விளக்கம் பெறும் பொருட்டு, பெற்ற பிறவியைக்கொண்டு இனிப் பிறவாத
பெற்றியைப் பெறவேண்டும். ஏணியின் பயன் மாடிமீது ஏறுவது; ஏணிமீதே ஒழியாது நின்று ஆடிப் பாடிக்கொண்டிருக்கக்
கூடாது. அதுபோல் முத்திவீடு ஏறுவதற்கு இவ்வுடம்பு ஓர் ஏணி. இந்த உடம்புடனேயே
இருக்கவேண்டும் என்று விரும்பக்கூடாது.
இந்தப்
பிறவியில் பல கலைகள் மூலம் நல்ல அறிவில் இன்பம் உண்டாகும். அக் கலையின்பத்துடனேயே
நின்று விடக்கூடாது. அவற்றைக் கடந்து இறையின்பத்தை நாடவேண்டும். கலைகளைக் கற்பதன்
பயன் கடவுளையடைவதேயாகும். கடவுள் உணர்ச்சியில்லாத கலை, உயிரில்லாத உடம்பு போன்றது என வுணர்க.
அரவமலி
கடல்............அருள் பாலா ---
இது
ஐந்தாவது அடி. அரனார் ஆலகால விடமுண்டு அருளிய அருள் திறத்தை அழகாகக் கூறுகின்றது.
அமரர்கள்
அமுதத்தை வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள். சிவபெருமான் “வேண்டுவோர் வேண்டுவதே
ஈவான் கண்டாய்”. என்றதை அவர்கள் உணரவில்லை. அமுதம் வேண்டும் என்று சிவபெருமானை
வேண்டியிருந்தால் ஒரு கணத்தில் அமுதத்தை அருளியிருப்பார். இந்த சுலபமான வழியை
விடுத்து, அவர்கள் பாற்கடலைக்
கடைந்து வேதனைப் பட்டார்கள்.
மேரு
கிரியாகிய மத்துக்குத் தாம்புக்கயிறாகப் பிணிந்த வாசுகி என்ற அரவரசன் ஆலகால
விஷத்தைக் கக்கினான். அது உலகங்களை யெல்லாம் நடுக்கியது. அதன் வெப்பம் தேவர்களைச்
சுட்டது. தேவர் யாவர்களும் நடுங்கி ஒடுங்கி திருக்கைலாசஞ் சென்று “ஐயனே!
அருட்பெருங் கடலே! காப்பற்ற வேண்டும்” என்று முறையிட்டார்கள். கருணைக் கடலான
சிவபெருமான் நஞ்சையுண்டு அமுதத்தை அமரர்க்கு ஈந்து அருள் புரிந்தார். இத்தகைய
ஈசனார் பெற்ற திருப்புதல்வன் முருகன். நமக்கு வரும் இடர்களைக் களைந்து இன்னருள்
புரிவான் என்று குறிப்பிடுகின்றார்.
அமர்செய்
நிசிசரர்..........விடுவோனே ---
இந்த
ஆறாவது அடியில் முருகவேல் அசுரர்கள் மீது வேல் விடுத்த திறத்தைக் கூறுகின்றார்.
நிசி-இரவு. சரர்-உலாவுகின்றனர். நிசிசரர்-இரவில் சஞ்சரிக்கின்றவர்; இராக்கதர்.
பணில
சரவணை தனில் முளரியில் வரு ---
பணிலம்-சங்கு.
சரவணம்-இயற்கையில் உண்டாகிய நீர்நிலை, சரம்-
நாணல். வானம்-காடு, தருப்பைக்காடு, முளரி-தாமரை. முருகப்பெருமான் சரவணப்
பொய்கையில் 1008 இதழ்களையுடைய அழகிய
செந்தாமரை மீது தோன்றியருளினார்.
“உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்” --- வேடிச்சி காவலன் வகுப்பு
இந்தப்
பகுதியில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகின்ற அழகிய அருந்தமிழ்ப் பாடலைச்
சிந்தியுங்கள்.
மறைகளின்
முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன்
யாண்டும் ஆகி நின்றிடும் நிமலமூர்த்தி
அறுமுக
உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ்
கமலப் போதில் வீற்றிருந்து அருளினானே.
பெருந்தரை
நடுவண் ஆகிப் பிறங்கிய சரவணத்தில்
இருந்தனிக்
கமலம் ஒன்றில் குமரவேல் இருந்த பான்மை,
திருந்துநல்
அண்டப் புத்தேள் சிந்தையாம் புண்டரீக
புரந்தனில்
விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும்.
மாலயன்
எழிலி மேலோன் வானவர் ஏனோர் யாரும்
பால்உற
மரனும் மாவும் பறவையும் பிறவுஞ் சூழ
ஏல்உறு
குமரன் கஞ்சத்து இருந்தது, பரமன் ஆதிக்
காலையில்
உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும்.
சலம்
கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில்
நலம்
கிளர் குமரன் சேர்தல், நான்முகற் சிறைமேல்
வீட்டிப்
புலம்
கிளர் உயிர்கள் நல்கப் பொருந்து நற்பகலின் முன்னர்
இலங்கு
எழில் பதும பீடத்து ஏறிய இயற்கை போலும்.
கருத்துரை
பழநிப்
பெருமானே! மோகத் தீயில் முழுகாமல் உனது பாத மலரில் முழுக அருள்புரிவீர்.
No comments:
Post a Comment