பழநி - 0188. முருகுசெறி குழல்அவிழ





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முருகுசெறி குழலவிழ (பழநி)

பழநியப்பா! 
மாதர் மயலில் கிடந்தாலும்,
உமது திருவடியை மறவேன்.

தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான


முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
     முறுவல்தர விரகமெழ ...... அநுராகம்

முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
     முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
     அகமகிழ இருகயல்கள் ...... குழையேற

அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
     அலர்கமல மலரடியை ...... மறவேனே

நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
     நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா

நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
     நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே

வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
     மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே

வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
     மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முருகு செறி குழல் அவிழ, முலை புளகம் எழ, நிலவு
     முறுவல் தர, விரகம் எழ, ...... அநுராகம்

முதிர, வசம் அற, இதரி எழு கைவளை கலகல என,
     முக நிலவு குறு வெயர்வு ...... துளி வீச,

அரு மதுர மொழிபதற, இதழ் அமுது பருகி, மிக
     அகம் மகிழ, இருகயல்கள் ...... குழை ஏற,

அமளிபடும் அமளி மலர் அணையின்மிசை துயிலுகினும்,
     அலர்கமல மலர் அடியை ...... மறவேனே.

நிருதனொடு வருபரியும், அடுகரியும், ரதநிரையும்,
     நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா!

நிகழ் அகள சகள குரு! நிருப! குருபர! குமர!
     நெடிய நெடு ககனமுகடு ...... உறைவோனே!

வரும் அருவி நவமணிகள் மலர் கமுகின் மிசை சிதற,
     மதுவின் நிரை பெருகு வளி ...... மலைமீதே,

வளர்குறவர் சிறுமி இரு வளர் தனமும் இருபுயமும்
     மருவி, மகிழ் பழநி வரு ...... பெருமாளே.

பதவுரை

     நிருதனொடு வரு --- சூரபன்மனுடன் வந்த,

     பரியும் --- குதிரைகளும்,

     அடு கரியும் --- கொல்லுந் தன்மையுடைய யானைகளும்,

     ரத நிரையும் --- தேர் வரிசைகளும்,

     நெறு நெறு என முறிய விடும் --- நெறு நெறு என்று முறிந்து அழியுமாறு விடுத்த,

     வடிவேலா --- கூரிய வேலாயுதரே!

      நிகழ் --- அமைந்துள்ள,

     அகள --- அருவமாகியும்,

     சகள --- உருவமாகியும் உள்ள,

     குரு நிருப –-- குரு ராஜனே!

      குருபர --- மேலான ஆசாரியரே!

      குமர --- குமாரக் கடவுளே!

      நெடிய நெடு ககன முகடு உறைவோனே --- நீண்ட பெரிய வானத்து உச்சியில் உறைகின்றவரே!

      வரும் அருவி நவமணிகள் --- வருகின்ற அருவிகளில் அடித்துக் கொண்டுவரும் நவரத்தினங்களும்,

     மலர் --- மலர்களும்,

     கமுகின் மிசை சிதற --- பாக்கு மரங்களின் மீது சிந்தவும்,

     மதுவின் நிறை பெருகும் --- தேனின் ஒழுக்கம் பெருகவும் விளங்கும்,

     வளிமலை மீதே --- வள்ளி மலையின் மீது,

     வளர் குறவர் சிறுமி --- வளர்கின்ற குறவர் மகளாகிய வள்ளிபிராட்டியின்,

     இரு வளர் தனமும் --- வளர்கின்ற இரு தனபாரங்களையும்,

     இருபுயமும் மருவி மகிழ் --- இரண்டு தோள்களையும் தழுவி மகிழ்கின்ற,

     பழநி வரு பெருமாளே --- பழநியில் உறையும் பெருமையில் மிகுந்தவரே!

      முருகு செறி --- வாசனை நிறைந்த,

     குழல் அவிழ --- கூந்தல் அவிழ்ந்து விழவும்,

     முலை புளகம் எழ --- முலைகள் புளகங்கொள்ளவும்,

     நிலவு முறுவல் தர --- நிலாவொளியைப் பற்கள் வீசவும்,

     விரகம் எழ --- மோக உணர்ச்சி உண்டாகவும்,

     அநுராகம் முதிர --– மிகுந்த ஆசை வளர்ந்து பெருகவும்,

     வசம் அற --- தன் வசம் அழியவும்,

     இதரி ஏழு கைவளை கலகல என --- அசைந்து வேறுபடும் கைகளின் வளையல்கள் கலகல என்று ஒலிக்கவும்,

     முக நிலவு --- முகமாகிய சந்திரனிலிருந்து,

     குறு வெயர்வு துளி வீச --- குறு வியர்வைத் துளி சிந்தவும்,

     அரு மதுர மொழி பதற --- அருமையான இனிய சொற்கள் நிலைகுலைந்து வெளிப்படவும்,

     இதழ் அமுது பருகி --- இதழின் அமுதத்தைப் பருகி,

     மிக அகம் மகிழ --- மிகவும் உள்ளங் களிக்கவும்,

     இரு கயல்கள் குழை ஏற --- இரு கயல் மீன் போன்ற கண்கள் காதளவு பாயவும்,

     அமளி படும் --- போர்க்களம் போல் ஆரவாரம் ஆகும்.

     அமளி மலர் அணை மிசை --- படுக்கையாகிய மலர்ச் சயனத்தின் மீது,

     துயிலுகினும் --- தூங்கினாலும்,

     அலர் கமல மலர் அடியை --- விரிந்த தாமரை மலர் போன்ற திருவடியை,

     மறவேனே --- அடியேன் மறக்க மாட்டேன்.

பொழிப்புரை
  
         சூரபன்மனுடன் போருக்கு வந்த குதிரைகள், கொல்லும் யானைகள், வரிசையாக நின்ற தேர்கள் முதலியன நெறு நெறு என்று முறிந்து அழியுமாறு விடுத்த கூரிய வேலாயுதரே!

         அருவமாயும் உருவமாயும் உள்ள குருமணியே!

         குருபரனே!

         குமாரக் கடவுளே!

         நீண்ட பரந்துள்ள ஆகாய முடிவில் உறைபவரே!

         பெருகிவரும் அருவியில் கொழித்து வரும் நவமணிகளும் மலர்களும் பாக்கு மரங்களின் மீது சிதறவும், தேன் ஒழுகி வரவும் விளங்கும் வள்ளிமலையில் வளர்கின்ற வள்ளிநாயகியின் வளர்கின்ற இரு தனங்களையும் இரு தோள் களையும் தழுவி மகிழ்கின்றவரே!

         பழநியில் வாழும் பெருமிதம் உடையவரே!

         மணம் நிறைந்த கூந்தல் அவிழ்ந்து விழவும், தனங்கள் புளகிதம் அடையவும், நிலவின் ஒளி போன்ற புன்னகை பொலியவும், காம விருப்பம் மிகுதிப் படவும், மிக்க ஆசை வளரவும், கரங்களில் வளைகள் கலகல என்று ஒலிக்கவும், முகமாகிய சந்திரனில் சிறு வெயர்வை துளிக்கவும், அரிய இனிய மொழி பதறவும், இதழின் அமுதைப் பருகி மிகவும் உள்ளங் களிக்கவும், இரு கயல் மீன் போன்ற கண்கள் காதுவரை செல்லவும், அமர்க்களம் போன்ற மலர் பரப்பிய பஞ்சு மெத்தையில் துயில் புரிந்தாலும் விரிந்த தாமரை மலர் போன்ற தேவரீருடைய திருவடியை மறக்க மாட்டேன்.

விரிவுரை

அணையின் மிசை துயிலுகினும்.....மலரடியை மறவேனே ---

மிகுந்த ஆசையால் மாதரை மருவி மயங்கினாலும் முருகன் திருவடியை மறக்கமாட்டேன்” என்று அருணகிரிநாத சுவாமிகள் இப்பாடலில் கூறுகின்றார்.

கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
 மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன்”

என்று கந்தரலங்காரத்திலும், பிற பாடல்களிலும் கூறுகின்றார். இதனால் சுவாமிகள் அப்படி மாதர் மயக்கில் இருந்தார் என்று கருதுதல் கூடாது.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது           ---  திருக்குறள்

நெருப்பின் மீதும் தூங்கலாம்; வறுமை கொண்டபோது தூங்க இயலாது’ என்று வள்ளுவர் கூறுகின்றார்.

இதனால் நெருப்பின் மிசை தூங்கலாம் என்பது பொருளன்று.

அதுபோல் மாதர் மயக்கு உற்றாலும் இறைவனை மறக்கக் கூடாது என்று கூறுகின்றார்.

அகள சகள குரு ---

இறைவனுக்கு உருவநிலை, அருவநிலை, உருவருவநிலை என்று மூன்றுண்டு.

வளிமலை ---

வள்ளிமலை என்ற சொல் வளிமலை என வந்தது. வள்ளிமலை சிறந்த ஞான பூமி.

கருத்துரை


பழநியாண்டவனே! உன்னை ஒருபோதும் மறவேன்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...