பழநி - 0187. முத்துக் குச்சு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முத்துக் குச்சு (பழநி)

பழநியப்பா!
மாதர் வீட்டில் துன்புற்ற அடியேன்,  
உம்மைப் புகழ்ந்து பாடி 
ஞான வீட்டை அடைய அருள்.


தத்தத்தத் தத்தத் தத்தன
     தத்தத்தத் தத்தத் தத்தன
          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான


முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
     டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
          முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே

முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
     ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
          முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத்

தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
     நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
          செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத்

திட்டத்தைப் பற்றிப் பற்பல
     லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
          சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ

மெத்தத்துக் கத்தைத் தித்தியி
     னிச்சித்தத் திற்பத் தத்தொடு
          மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே

வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
     முக்கட்சித் தர்க்குப் புத்திர
          விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே

நித்யக்கற் பத்திற் சித்தர்க
     ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
          நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும்

நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
     முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
          நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்



முத்துக் குச்சு இட்டு, குப்பி
     முடித்து, சுக்கைப் பின் சுற்றியும்,
          முன்பக்கத்தில் பொற்பு உற்றிட, ...... நுதல் மீதே

முக்யப் பச்சைப் பொட்டு இட்டு, அணி
     ரத்நச் சுட்டி,  பொன் பட்டு, இவை
          முச்சட்டை, சித்ரக் கட்டு அழகு ...... எழில் ஆட,

தித்திக்கச் சொல் சொற்று, துப்பு இதழ்,
     நச்சுக் கண் கற்புச் சொக்கியர்,
          செப்புக்கு ஒக்கக் கச்சுப் பெறு ...... தனமேரு

திட்டத்தைப் பற்றி, பற்பல
     லச்சைக்கு உட் பட்டுத் தொட்டு, யிர்
          சிக்கிச் சொக்கிக் கெட்டு இப்படி ...... உழல்வேனோ?

மெத்தத் துக்கத்தைத் தித்தி,
     இனிச் சித்தத்தில் பத்து அத்சொடு
          மெச்சி, சொர்க்கத்தில் சிற்பரம் ...... அருள்வாயே.

வித்தைக்குக் கர்த்ரு, தற்பர!
     முக்கண் சித்தர்க்குப் புத்திர!
          விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே!

நித்யக் கற்பத்தில் சித்தர்கள்,
     எட்டுத் திக்குக்கு உட்பட்டவர்,
          நிஷ்டைக்கு அற்பு உற்றப் பத்தர்கள், ...... அமரோரும்,

நெட்டுக்குப் புட்பத்தைக் கொடு
     முற்றத்து உற்று அர்ச்சிக்க, பழ-
          நிக்குள் பட்டத்துக்கு உற்று உறை ...... பெருமாளே.

 
பதவுரை

         வித்தைக்கு கர்த்ரு --- கல்விக்குத் தலைவரே!

         தற்பர --- பரம்பொருளே!

         முக்கண் சித்தர்க்கு புத்திர --- மூன்று கண்களையுடைய சிவபெருமானுடைய புதல்வரே!

         விசித்திர --- அழகிய,

     செச்சை கத்திகை புனைவோனே - வெட்சி மாலையைத் தரித்தவரே!

         நித்ய கற்பத்தில் சித்தர்கள் --- கற்ப காலத்திலும் அழிவின்றி நித்தியமாக நிற்கும் சித்தர்களும்,

     எட்டு திக்கு உட்பட்டவர் --- எட்டு திசைகளின் எல்லைக்கு உட்பட்டவர்களும்,

     நிஷ்டைக்கு அற்பு உற்ற பக்தர்கள் --- தியானத்தில் அன்பு கொண்ட பக்தர்களும்,

     அமரோரும் --- தேவர்களும்,

     நெட்டுக்கு புட்பத்தை கொடு --- நெடுந் தொலைவிலிருந்து மலர்களைக் கொணர்ந்து,

     முற்றத்து உற்று --- தேவரீருடைய சந்நிதியை அடைந்து,

     அர்ச்சிக்க --- அருச்சனை செய்து நிற்க,

     பழநிக்குள் பட்டத்துக்கு உற்று உறை --- பழநியம்பதியில் ஆட்சி பூண்டு உறைகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      முத்துக் குச்சு இட்டு --- முத்துக்கள் பதிந்த குச்சினை அணிந்து,

     குப்பி முடித்து --- குப்பி என்ற அணிகலனையும் தலையில் தரித்து,

     சுக்கை பின் சுற்றியும் --- பூமாலையைப் பின்புறத்தில் சுற்றி,

     முன்பக்கத்தில் பொற்பு உற்றிட --- முன்புறத்திலே அழகு நிரம்புமாறு, 

     நுதல் மீது --- நெற்றியில்,

     முக்ய பச்சை பொட்டு இட்டு --- சிறந்த பச்சை நிறமுள்ள திலகத்தை அணிந்து,

     அணி ரத்ன சுட்டி --- அழகிய இரத்தினச் சுட்டி,

     பொன்பட்டு --- பொன் இழைப்புடன் கூடிய பட்டுச்சேலை,

     முச்சட்டை இவை --- மூன்று விதமான ரவிக்கைகள் முதலியவற்றை,

     சித்ர கட்டு அழகு எழில் ஆட --- விசித்திரமாகவும் நல்ல அழகாகவும் அணிந்து அழகு பொழிய விளங்கி,

     தித்திக்க சொல் சொல் --- இனிமையாக பேசும் பேச்சு,

     துப்பு இதழ் --- பவளம் போன்ற இதழ்,

     நச்சு கண் --- நஞ்சைக் கக்கும் கண்,

     கற்பு சொக்கியர் --- கற்பனை உரைகள் இவற்றைக் கொண்டு மயங்குகின்ற பொது மகளிரது,

     செப்புக்கு ஒக்க --- சிமிழை ஒத்ததும்,

     கச்சு பெறு --- இரவிக்கை அணிந்துமான,

     தன மேரு திட்டத்தைப் பற்றி --- தனமாகிய மேரு மலையைச் செவ்வையாகப் பற்றி,

     பற்பல லச்சைக்கு உட்பட்டு --- பலப்பல நாணுதற்கரிய செயல்களில் ஈடுபட்டு,

     தொட்டு உயிர் சிக்கி --- மாயையை அடைந்து உயிர் அதில் சிக்குண்டு,

     சொக்கி இட்டு இப்படி உழல்வோனோ --- மயக்கமுற்று அழிந்து இவ்வண்ணம் அடியேன் திரியலாமோ?

     மெத்த துக்கத்தை தித்தி --- அதிகமான துன்பத்தை அனுபவித்த நான்,

     இனி சித்தத்தில் பத்தத்தோடு --- இனிமேல் உள்ளத்தில் நன்றியறிவுடன் மெச்சி உம்மைப் புகழ்ந்து பாடி,

     சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே --- சொர்க்கலோகத்திலும் சிறந்ததான ஞானப் பொருளை பெறுமாறு அருள் புரிவீர்.

பொழிப்புரை


         கலைஞானத்துக்குத் தலைவரே!

         பரம்பொருளே!

         முக்கட் பெருமானுடைய குமாரரே!

         விசித்திரமான வெட்சி மலர்மாலையை அணிந்தவரே!

         கற்பகாலத்திலும் அழியாத சித்தர்களும், எண்திசைகட்குள்ளே வாழ்பவர்களும், தியானத்தில் அன்புள்ள பக்த சீலர்களும், தேவர்களும், நெடுந்தூரத்திலிருந்தும் மலர்களைக் கொணர்ந்து, உமது சந்நிதியில் அர்ச்சனை செய்து துதித்து நிற்கப் பழநி யம்பதியில் ஆட்சிபுரிந்து கொண்டு வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

         முத்துக் குச்சம், தலையில் அணியும் குப்பியும் தரித்து, பூமாலையைத் தலையில் சுற்றிவிட்டு, முன்புறத்தில் அழகாக நெற்றியில் சிறந்த பச்சை நிறப் பொட்டினை இட்டு, அழகிய இரத்தினச் சுட்டியைத் தரித்து, நல்ல பட்டுப் புடவை இரவிக்கைகள் இவற்றை விசித்திரமாக உடுத்தி, அழகு பொலிய இனிய மொழிகளை மொழிந்தும், பவள இதழும் விஷத்தைக் கக்கும் கண்ணும் கற்பனைப் பேச்சும் உடைய பொதுமாதர்களின் சிமிழை ஒத்த கச்சணிந்த மேருமலை போன்ற கொங்கைகளைப் பற்றிப் பலவிதமான வெட்கப்படும் செயல்களைச் செய்கைக்கு உட்பட்டு, உயிர் சிக்குண்டு, மயங்கி, அல்லல்பட்டு இவ்வாறு திரிவேனோ? இங்ஙனம் அதிக துன்பத்தை அனுபவித்த அடியேன் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உம்மைப் புகழ்ந்து சொர்க்கத்திலும் மேம்பட்ட ஞான வீட்டினைப் பெறுமாறு அருள்வீராக.

விரிவுரை


இத்திருப்புகழ் வல்லின ஒற்றெழுத்து மிகுந்த கடினமான சந்தத்தாலானது.

முத்துக்குச் சிட்டுக் குப்பி முடித்து ---

முத்துக் குச்சு என்பது பெண்கள் தலை மயிரைப் பின்னி அதில் தொங்கவிடும் நகை; முத்துக்கள் பதித்துச் செய்வது.

குப்பி என்றது பின்னலில் வைக்கும் அணிகலன். சடையில் வைத்தலினால் சடை வில்லை என்பர்.

சுக்கைப்பிற் சுற்றி ---

சுக்கை-பூமாலை. பெண்கள் பின்புறத்தில் கூந்தலை பின்னிவிட்டு அதில் மலர் மாலையை வளைத்துச் சுற்றி அழகு செய்வார்கள்.

முற்பக்கத்தில் பொற்புற்றிட......பொட்டிட்டு ---

முன் புறத்திலே - நெற்றியிலே நல்ல நிறம் என்று கருதிப் பச்சை நிறத்தில் திலகம் அணிவார்கள்.

முச்சட்டை ---

உள்ளே ஒரு சிறு சட்டையும் அதற்குமேல் பூ வேலை செய்த ஒரு சட்டையும், அப்பூக்கள் தெரியுமாப் போல் ஒரு மெல்லிய சட்டையும் ஆக மூன்று வகையான ரவிக்கைகள் அணிந்து அழகு செய்வார்கள்.

தித்திக்க சொற்சொல் ---

கற்கண்டு போல் கனி மதுரமாக தித்திக்குமாறு சொற்களைச் சொல்லுவார்கள்.

துப்பிதழ் ---

துப்பு-பவளம். பவளம் போன்ற சிவந்த இதழ்.

நச்சுக்கண் ---

பொது மாதர்கள் கண்களில் நஞ்சைப் பொழிவார்கள். (அருளாளர்கள் அமுதத்தைப் பொழிவார்கள்)

கற்புச் சொக்கியர் ---

கற்பு என்ற சொல்லுக்கு இங்கே கற்பிதமாகப் பேசுதல் என்று பொருள். கற்பிதமாகப் பேசி ஆடவனைச் சொக்கவைப்பார்கள். பொது மகளிரது தன்மையை இங்ஙனம் சுவாமிகள் கூறுகின்றனர்.

செப்புக் கொக்கக் கச்சுப்பெறு ---

செப்பு-சிமிழ்; செப்புக்கு ஒக்க கச்சு பெறு என்று பதச்சேதஞ் செய்க.

பற்பல லச்சைக்குட்பட்டு ---

நாணப்படுகின்ற தொழில்கள் பல செய்து உழல்வர்.

மெத்தத் துக்கத்தைத் தித்தியினிச் சித்தத் திற்பத் தத்தொடு ---

மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்ததொடு என்று பதப் பிரிவு செய்க. “மிகுந்த துன்பத்தை அனுபவித்து உழல்கின்ற நான் இனி மிகுந்த நன்றியறிதலுடன் உம்மை மெச்சிப் புகழ்ந்து பாடும் அருள் ஞானத்தைத் தருவீர்” என்று இப்பாடலில் அருணகிரிநாதர் வரங்கேட்கின்றார்.

சொர்க்கத்திற் சிற்பரம் ---

சுவர்க்க இன்பத்திலும் மேலானது சிவஞானம்; அதனை இறைவன்பால் இறைஞ்சி வேண்டுகின்றார் அருணைமுனிவர்.

வித்தைக்குக் கர்த்ரு ---

சகல வித்தைகளுக்கும் முருகப் பெருமானே தலைவன் என அறிக. நாதம், விந்து, கலை இந்த மூன்றுக்கும் முருகன் தலைவன் ஆதலின், “நாத விந்து கலாதீ நமோ நம” என்கிறார்.

தற்பர ---

தனக்குத்தானே தலைவனான தனிப்பொருள். தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்.

முக்கட் சித்தர்க்குப் புத்திர ---

சிவபெருமானை இங்கே சித்தர் என்றார். இது அவர் மதுரையிலே எல்லாம் வல்ல சித்தராக வந்த விளையாடலை நினைவு படுத்துகிறது.


விசித்திர செச்சைக் கத்திகை ---

விச்சித்திர என்பது சந்தத்தைக் கருதி வல்லொற்று மிகுந்து விசித்திர என வந்தது. விசித்திரம்-அழகு. செச்சை-வெட்சி மலர். கத்திகை-மாலை. முருகனுக்கு உவந்த மலர் வெட்சி.

செச்சைத் தொடை இளையான் நுகர் தீம்பால் மணநாறும்
 கச்சைப் பொரு முலையாள் உறை கச்சிப் பதி கண்டான்”     ---  வில்லிபுத்தூரார்

நித்தியக் கற்பத்திற் சித்தர்கள் ---

மாநுட வருடம் 360 தேவ வருடம் ஒன்று;

தேவ வருடம் 4000 கிருதயுகம்

அதன்  ஆதி 400 அந்தம் 400 தேவ வருடம் 3000 திரேதாயுகம்;

அதன் ஆதி 300 அந்தம் 300 தேவ வருடம் 2000 துவாபரயுகம்;

அதன் ஆதி்  200 அந்தம் 200 தேவ வருடம் 1000 கலியுகம்;

அதன் ஆதி் 100  அந்தம் 100

ஆக தேவவருடம் 12000ம் சேர்ந்து சதுர்யுகம்.

கலியுகம் பத்து பிராமணம் கொண்டது ஒரு சதுர்யுகம்.

இதற்கு 43,20,000 ஆண்டுகள்.

இத்தகைய சதுர்யுகம் ஆயிரம் கொண்டது பிரமதேவருடைய பகல்;

அதற்கு ஆண்டுகள் 4,32,00,00,000 இவ்வளவு கொண்டது ஓர் இரவு.

எனவே பிரமனுடைய ஒரு நாள் 8,64,00,00,000 ஆண்டுகள்.

இப்படி நாள் 30 கொண்டது ஒரு மாதம்.

இந்த மாதம் 12 கொண்டது ஓர் ஆண்டு.

இந்த ஆண்டுகள் 100 கொண்டது பிரமாவுடைய ஆயுள்.

பிரமனுடைய இந்த 100 ஆண்டுகள், 7 கல்பங்களை யுடையது.

அதாவது 7 கல்பம் கொண்டது பிரமாவின் ஆயுள்.

முன் நடந்தது லட்சுமி கல்பம்;
இப்போது நடப்பது சுவேதவராக கல்பம்.

பிரமனுடைய பகலில் 14 மநுவந்தரம் நடக்கும்.
இப்போது ஏழாவது வைவஸ்த மநுவந்தரம். 

ஒரு மநுவந்தரத்திற்கு 71 சதுர்யுகம்.
இதில் இப்போது நடப்பது 28 ஆவது சதுர்யுகம்.

இந்த கல்பங்களை வென்ற சித்தர்கள் பழநியில் வந்து ஞான தண்டாயுத பாணியை வணங்குகிறார்கள். பழநிக்குச் சித்தன் வாழ்வு என்று பேருண்டு. அங்கு சித்தர்களும் முத்தர்களும் பத்தர்களும் வந்து பரவுகின்றார்கள்.

நிஷ்டைக்கு கற்புற்றப் பத்தர்கள் ---

நிஷ்டை-தியானத்தில் நிலைத்து நிற்றல்.

நெட்டுக்குப் புட்பத்தைக் கொடு --

நல்ல மலர்களை வேண்டி நெடுந்தூரம் சென்று கொண்டு வருகிறார்கள்.

முற்றம் ---

இறைவன் திருமுன்.

கருத்துரை


பழநியப்பா! ஞான வீட்டினை அருள் புரிவாய்.




No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...