பழநி - 0186. முதிர உழையை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முதிர உழையை (பழநி)

பழநியப்பா! 
அறிவற்றவனும் முழுப்புரட்டனும் ஆகிய என் உள்ளம் மகி,  
திருவடியைத் தந்து அருள்.

தனன தனன தனத்த தனன தனன தனத்த
     தனன தனன தனத்த ...... தனதான


முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
     முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
     முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
     வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
     மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
     சகடு மருத முதைத்த ...... தகவோடே

தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
     தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
     அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே

அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
     ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முதிர உழையை வனத்தில் முடுகி, வடுவை அழித்து,
     முதிய கயல்கள் கயத்தின் ...... இடை ஓடி,

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
     முறைமை கெடவும் மயக்கி ...... வருமாதர்,

மதுர அமுத மொழிக்கும், மகுட களப முலைக்கும்,
     வலிய அடிமை புகுத்தி ...... விடும், மாய

மனதை உடைய அசட்டு மனிதன், முழுது புரட்டன்,
     மகிழ உனது பதத்தை ...... அருள்வாயே.

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வதைத்து,
     சகடு மருதம் உதைத்த ...... தகவோடே,

தழையு மரமும் நிலத்தில் மடிய, அமரை விளைத்த
     தநுவை உடைய சமர்த்தன் ...... மருகோனே!

அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து,
     அமரர் சிறையை விடுத்து, ...... வருவோனே!

அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள்
     அழகு மயிலை நடத்து ...... பெருமாளே.


பதவுரை

 
      சதுரன் --- ஆற்றல் படைத்தவரும்,

     வரையை எடுத்த நிருதன் உடலை வதைத்து --- கயிலை மலையை எடுத்த இராவணனுடைய உடலை அழித்தவரும்,

     சகடு --- வண்டி வடிவாக வந்த அசுரனை உதைத்தவரும்,

     தகவோடே தழையும் மருத மரமும் --- நன்றாகத் தழைத்து வளர்ந்த மருத மரத்தையும்,

     நிலத்தில் மடிய --- நிலத்தில் வீழ்ந்து சாயுமாறு,

     உதைத்த --- திருவடியால் உதைத்தவரும்,

     அமரை விளைத்த --- போர் புரிந்த,

     தநுவை உடைய சமர்த்தனன் --- வில் ஏந்திய சாமர்த்தியம் உடையவருமாகிய திருமாலின்,

     மருகோனே --- திருமருகரே!

      அதிர முடுகி எதிர்த்த --- பூமி அதிரும்படி வேகமாக எதிர்த்து வந்த,

     அசுரர் உடலை வதைத்து --- அசுரர்களுடைய உடல்களை அழித்து,

     அமரர் சிறையை விடுத்து --- தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து,

     வருவோனே --- வந்தருளியவரே!

      அரிய புகழை அமைத்த --- சிறந்த புகழைப் பெற்றுள்ள,

     பெரிய பழநி மலைக்குள் --- உயர்ந்த பழநி மலையின்கண்,

     அழகு மயிலை நடத்து --- அழகிய மயிலை நடத்தி உலாவும்,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      உழையை முதிர வனத்தில் முடுகி ---  மானைத் தளருமாறு கானகத்தில் துரத்தி ஓட்டி,

     வடுவை அழித்து --- மாவடுவை அழித்து,

     முதிய கயல்கள் கயத்தின் இடை ஓடி --- பெரிய கயல் மீன்களைக் குளத்தில் ஓட்டி,

     முரணவரும் விழிக்குள் --- இப்படி இவற்றுடன் மாறுபட்டு வளரும் கண்களால்,

     மதன விரகு பயிற்றி --- காம லீலைகளாகிய தந்திரங்களைச் செய்து,

     முறைமை கெடவும் --- ஒழுக்கம் கெடுமாறு மயக்கத்தைச் செய்து வருகின்ற பொது மாதருடைய,

     மதுர அமுத மொழிக்கும் --- இனிய அமுதம் போன்ற மொழிகளுக்கும்,

     மகுட களப முலைக்கும் --- சந்தனக் கலவை பூசப்பட்டு மகுடம் போன்ற முலைக்கும்,

     வலிய அடிமை புகுத்தி விடும் --- வலிய அடிமைப் படுத்தி வைக்கும்,

     மாய மனதை உடைய --- மாயத்தைப் புரியும் மனத்தை உடைய,

     அசட்டு மனிதன் --- அறிவற்ற மனிதனும்,

     முழுது புரட்டன் --- முழுப் புரட்டனுமாகிய அடியேன்,

     மகிழ உனது பதத்தை --- மகிழுமாறு தேவரீருடைய திருவடியை,

     அருள்வாயே --- தந்தருள்வீராக.

பொழிப்புரை
 

         ஆற்றல் படைத்தவரும், கயிலை மலையை எடுத்த இராவணனுடைய உடலை அழித்தவரும், சகடாசுரனை உதைத்தவரும், நன்கு தழைத்திருந்த மருத மரத்தை நிலத்தில் விழுமாறு உதைத்தவரும், போர் புரிந்த வில்லை ஏந்தியவரும், திறமையுடையவருமாகிய திருமாலின் மருகரே!

         பூமி அதிருமாறு எதிர்த்து வந்த அரக்கர்களின் உடல்களை வதைத்து, தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து அருள் புரிந்தவரே!

         அருமையான புகழைக் கொண்டுள்ள உயர்ந்த பழநி மலையின் மீது அழகிய மயிலை நடத்தி உலாவும் பெருமிதம் உடையவரே!

         மானைத் தளருமாறு காட்டில் முடுக்கி ஓட்டியும், மாவடுவை அழித்தும், பெரிய கயல்மீனைக் குளத்தில் ஓட்டியும் மாறுபட்டு வளர்கின்ற கண்களால், காம விளையாடல்களைச் செய்து, ஒழுக்கம் கெடுமாறு மயக்கி வருகின்ற விலை மாதர்களின் இனிய அமுதம் போன்ற சொற்களுக்கும், சந்தனம் பூசி மகுடம் போல் விளங்கும் முலைக்கும், வலிய என்னை அடிமைப்படுத்தி வைக்கும் மாயம் நிறைந்த மனத்தைப் படைத்த அறிவற்ற மனிதனும் முழுப் புரட்டனுமாகிய அடியேன் உள்ளம் உவக்குமாறு தேவரீருடைய திருவடியைத் தந்தருளுவீராக.


விரிவுரை


முதிர உழையை வனத்தில் முடுகி ---

புலவர்கள் பெண்களுடைய கண்களுக்கு உவமையாக மானைப் புகல்வார்கள். மான்போல் மிரண்டு பார்க்கும் இயல்புடையன கண்கள்.

அழகிற் சிறந்த மாதர்களுடைய கண்களுக்கு மான் தோல்வியுற்று தளர்ச்சியடைந்து காட்டுக்குள் ஓடி விட்டதாம்,

மான் இயல்பாக காட்டில் வாழும் தன்மை யுடையது. இவர்கள் கண்கள் காட்டுக்கு மானை ஓட்டி விட்டது என்று சதுரப்பாடாகக் கூறுகின்றார். தற்குறிப்பேற்றம் என்ற அணி.

வடுவை அழித்து ---

மாம் பிஞ்சினைப் பிளந்தால் கண்களைப்போல் அது காட்சி
தரும். அந்த மாவடுவை உப்பில் இட்டு ஊற வைத்து ஊறுகாயாக மக்கள் அருந்துவர். இதனை இக்கண்கள் தான் உப்பிலிட்டு அழித்துவிட்டதாகக் கூறுகின்றார். மாவடுவும் கண்களுக்குத் தோல்வியுற்றது. ஒளியின்மையால் எனவுணர்க.
  
முதிய கயல்கள் கயத்தின் இடையோடி முரண ---

பெரிய மீன்கள் கண்ணுக்கு உவமைப் பொருள்களாகும். மீன்கள் குளத்தில் வாழும் இயற்கையுடையன. விழிக்குத் தோல்வியுற்றுக் குளத்திற் சென்று ஒளிந்து வாழ்கின்றன என்கின்றார்.

அடிமை புகுத்தி விடுமாய மனதை உடைய அசட்டு மனிதன் ---

மனமானது நன்மைக்கும் தீமைக்கும் துணையாக நிற்கும் இயல்புடையது. தண்ணீரில் கற்கண்டையுங் கரைக்கலாம்; நஞ்சையுங் கரைக்கலாம்.

மாயத்தைப் புரியும் இம் மனம் இறைவனுக்கு அடிமைப்படாமல் பொதுமகளிருக்கு அடிமைப்பட்டு விட்டது. கீழ்மனம் படைத்தபடியால் அசட்டு மனிதனாகி விட்டான். 

நன்மனம் படைத்தால் மனிதரில் தெய்வமாக விளங்கலாம்.

முழுது புரட்டன் ---

எந்த ஒரு நல்ல செயலையும் புரட்டிப் பேசுவது சிலருக்குச் சொந்த சொத்தாக இருக்கும்.

ஒரு புண்ணியவான் அன்னதானம் புரிகின்றான். வறியவரது பசியாற்றுவது சிறந்த அறம். தானத்தில் சிறந்தது அன்னதானம். இந்த நல்லறச் செயலைக்கண்டு “இது சோம்பேறிக் கூட்டங்களை வளர்ப்பதாகும். அன்னம் போடுவதால் இவர்கள் சோம்பேறிகளாகக் கெட்டுவிடுகின்றார்கள். ஆதலால் இது அறமன்று” என்று புரட்சியாகப் பேசுவார்கள். இவ்வாறு புரட்டுகின்றவன் புரட்டன். இதில் கால் புரட்டன்; அரைப் புரட்டன்; முக்கால் புரட்டன் என்றும் உண்டு. அடியோடு புரட்டுகின்றவன் முழுப் புரட்டன்.

சதுரன் ---

சதுர்-சாமர்த்தியம். சாமம், தானம், பேதம், தண்டம் என்ற நான்கு உபாயங்களிலும் வல்லவர் திருமால்.

சாமபேத தான தண்ட”  --- (வில்லிபாரதம்) கண்ணன் தூது

வரையை எடுத்த நிருதன் ---

இராவணன் திக்கு விஜயம் புரிந்து வந்தபோது, கயிலை மலைக்கு மேல் பறக்க இயலாது, அவனுடைய புஷ்பக விமானந் தடைப்பட்டு நின்றது.

கயிலை மலையைக் காவல் புரிகின்ற திருநந்தி தேவர் “ஏ தசக்ரீவனே! இது கண்ணுதற் கடவுள் உறையும் எண்ணுதற்கரிய புகழுடைய கயிலாய மலை. மதியும் கதிரும் வலம் வருகின்ற இம் மலைக்குமேல் உன் விமானஞ் செல்லாது. வலமாகச் செல்” என்றார்.

தோள் வலியால் தருக்குற்று நின்ற அவ்வரக்கன் சீறி, “குரங்குபோல் முகம் வைத்திருக்கின்ற நீ எனக்கு அறிவுரை பகிர்கின்றனையோ?” என்றான்.

திருநந்திதேவர் சிறுநகை செய்து, “திறங்கெட்ட தீயவனே, குரங்கினால் உன் நாடும் நகரும் அழிந்து உனக்குத் தோல்வி எய்தக் கடவது” என்று சபித்தருளினார்.

இதை வீடணன் இராவணனிடம் கூறும் பாடலாலும் அறிக.

மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள்
நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,
கூலவான் குரங்கினால் குறுகும் கோளது
வாலிபாறல் கண்டனம் வரம்பில் ஆற்றலாய்.

இராவணன் வெகுண்டு, “இந்த நந்தியையும் நந்திக்குத் தவைனாம் ஈசனையும் இவ்வெள்ளி மலையையும் பறித்துக் கடலில் எறிவேன்” என்று கூறி, இருபது கரங்களாலும் வெள்ளி மலையைப் பேர்த்துத் தோளில் வைத்து அசைத்தான். இறைவி இறைவனை நோக்கிப் “பெருமானே! மலை நிலை குலைகின்றதே” என்றாள்.

புரமெரித்த அரனார் புன்னகை புரிந்து, இடக் காலின் பெருவிரல் நக நுனியால் சிறிது ஊன்றி அருளினார். இராவணன் அப்படியே மலையின் கீழ் எலிக் குஞ்சுபோல் அகப்பட்டுத் தாளும் தோலும் நெரிந்து விரிந்து ‘ஓ’ என்று கதறிப் பதறி அழுதான். அதனால் இராவணன் என்று அவனுக்குப் பேர் ஏற்பட்டது.

இராவணன்-கதறி அழுதவன்.

முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்”   ---  திருஞானசம்பந்தர்.

சகடு.....மருத முதைத்த.....தழையு மரமு நிலத்தில் மடிய ---

மதுரையில் தேவகியின் திருமகனாக அவதரித்த கண்ணபிரான் ஆயர் பாடியில் யசோதையின் மனையில் வளர்ந்தார். கண்ணன் தன்னைக் கொல்லும் பொருட்டு அவதரித்தவன் என்று அறிந்த கம்சன், கண்ணனைக் கொல்லுமாறு ஓர் அரக்கனை அனுப்பினான்.

யசோதை தன் வீட்டுக்குமுன் இருந்த வண்டியில் தொட்டில் கட்டிக் கண்ணனைத் தூங்க வைத்தாள். வந்த அசுரன் வண்டியுள் புகுந்து உருட்டினான். கண்ணபிரான் அதனை யறிந்து, தமது சிறிய இளந் திருவடியால் வண்டியை உதைத்து, வண்டியுருவில் வந்த சகடாசுரனை வதைத்தருளினார்.

நளகூபரன், மணிக்ரீவன் என்ற இரு கந்தர்வர்கள் நாரதர் சாபத்தால், ஆயர்பாடியில் நந்தகோபன் வளமனை வாசலின் மருத மரங்களாக முளைத்து ஓங்கி வளர்ந்திருந்தார்கள்.

வெண்ணெய் திருடிய கண்ணனை முனிந்த யசோதை, உரலில் கண்ணனைக் கட்டி வைத்தாள். கண்ணபிரான் மரங்கள் வடிவாயுள்ள கந்தருவர்கட்கு அருள்புரியும் பொருட்டு, உரலையுருட்டிக் கொண்டு இருமருத மரங்களின் இடையே தவழ்ந்து சென்றார். உரல் உருள்வதற்குத் தடையாயிருந்த மரங்களைச் சேவடி தீண்டி உதைத்தருளினார். மரங்கள், வேருடன் நிலத்தில் வீழ்ந்தன. சாபந் தீர்ந்து, கந்தருவர்கள் உய்ந்து, வெந்துயர் களைந்த கண்ணனைக் கை தொழுது பதம் புக்கனர்.

கண்ணன் திருவிளையாடல்கள் யாவும் இவ்வண்ணம் பல அருட் செயல்களேயாகும்.
  
தநுவையுடைய சமர்த்தன் ---

திருமாலின் திருக்கரத்தில் உள்ள அரிய வில் சாரங்கம் எனப்படும். அதனால் சாரங்கபாணி என்ற திருநாமம் படைத்தனர். இது பஞ்சாயுதங்களில் ஒன்று.

சாரங்கம் என்ற வில்லில் பாண மழை பொழிந்து அரிமுகுந்தன் அசுரரை யழித்தனர். அதனால் ஆண்டாளம்மையார், மேகத்தைப் பார்த்து, “ஏ மேகமே! ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து” என்று அருளிச் செய்தார்.

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
 வாழி உலகினில் பெய்திடாய்”

அரிய புகழை அமைத்த பெரிய பழநி ---

பழநி மிகப் பெரும் புகழை யுடையது. அகத்திய முனிவர், இடும்பன் என்ற அசுர குருவினால், கேதார மலைக்கு அருகில் இருந்து பெயர்த்துக் கொண்டு வந்த சிவ மலை எனப்பெயர் பூண்டது. இன்றும் பல சித்தர்களும் முத்தர்களும் வாழ்கின்ற மகிமையுடையது. போக முனிவர் அருள் பெற்றது. ஞானத் தண்டினை ஊன்றி முருகன் பாலவடிவுடன் எழுந்தருளிய ஞானமலை. வழிபடுவோருடைய வல்வினைகள் யாவும் வெஞ்சுடரில் வீழ்ந்த பஞ்சு போல் சாம்பராகி விடும்.

கருத்துரை


மால் மருகா! பழநி முருகா! உன் திருவடியைத் தந்தருள்வாய்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...