அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகை முளரி (பழநி)
பழநியப்பா!
மாதர் இதழூறல்
பருகி வாடும் அடியேனுக்கு,
திருவடி
ஞானத் தேனைப் பருக அருள்
தனதனன
தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி
ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார ...... மடவார்தோள்
முழுகியமி
ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந்
தகமகிழ
விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி ...... மிகவேயுண்
டழியுமொரு
தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான ...... மருளாயோ
மகரமெறி
திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே
வரிசையவுண்
மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர ...... முருகோனே
பகர்வரிய
ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு ...... மிளையோனே
பணிலமணி
வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முகைமுளரி, ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும்,
முதிர்வு இல் இள தனபார ...... மடவார், தோள்
முழுகி, அமிழ் அநுபோக விழலன் என, உலகோர்கள்
மொழியும் அது மதியாமல், ...... தலைகீழ் வீழ்ந்து,
அகம்
மகிழ விதமான நகை அமுதம் என ஊறல்
அசடர் அகம் எழ ஆகி, ...... மிகவே உண்டு,
அழியும்
ஒரு தமியேனும், மொழியும் உனது இருதாளின்
அமுது பருகிட ஞானம் ...... அருளாயோ?
மகரம்
எறி திரை மோது பகர கடல் தட வாரி
மறுகுபுனல் கெட வேலை ...... விடுவோனே!
வரிசை
அவுண் மகசேனை உக முடிய மயில் ஏறி
வருபனிரு கர! தீர! ...... முருகோனே!
பகர்வு
அரியர் எனல் ஆகும் உமை கொழுநர் உளமேவும்
பரமகுரு எனநாடும் ...... இளையோனே!
பணிலம்
அணி வெயில் வீசு மணி சிகரம் மதிசூடு
பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
பதவுரை
மகரம் ஏறி திரை மோது --- மகர மீன்களை
எடுத்துக் கரையில் எறிகின்ற அலைகளை வீசும்,
பகர கடல் தடவாரி --- அழகிய கடலில் உள்ள பரந்த
நீர்,
மறுகு புனல் கெட --- சுழலுகின்ற நீராகிக்
கலங்கிக் கெடும்படி,
வேலை விடுவோனே --- வேலாயுதத்தை விடுத்தவரே!
வரிசை அவுண் மக சேனை --- வரிசை வரிசையாக
வந்த அசுரர்களுடைய பெரிய சேனைகளின்,
யுகம் முடிய --- கால அளவு முடியுமாறு,
மயில் ஏறி வரு --- மயிலில் ஆரோகணித்து
வந்தருளிய,
பன் இரு கர தீர --- பன்னிரண்டு கரங்களை உடைய
திருமூர்த்தியே!
முருகோனே --- முருகப் பெருமாளே!
பகர் அரியர் எனல் ஆகும் --- சொல்லுதற்கு
அரியர் என்று கூறத்தக்க,
உமை கொழுநர் உளம் மேவும் --- உமையம்மையின்
கணவனாராகிய சிவபெருமானுடைய திருவுள்ளத்தில் வீற்றிருக்கும்,
பரமகுரு என நாடும் --- பெரிய குரு என்று
விரும்பத்தக்க,
இளையோனே --- இளம் பூரணரே!
பணி மணி வெயில் வீசும் ---
சங்குகளிலிருந்த முத்து மணிகள் ஒளி வீசுகின்றதும்,
அணி சிகரம் மதி சூடும் --- அழகிய மலை உச்சி
சந்திரனைத் தரித்திருப்பதும் ஆகிய,
பழநி மலைதனில் மேவு --- பழநிமலையின் மீது
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
முளரி முகை --- தாமரை மொட்டினைப்
போலவும்,
ப்ரபை வீசும் எழில் கன மலை போலும் --- ஒளி
வீசுகின்ற அழகிய பொன் மலை போலவும்,
முதிர்வு இல் இள --- முதிர்ச்சியடையாத இளமைத்
தன்மையில் உள்ளதும் ஆகிய,
தன பார --- பெரிய கொங்கைகளை உடைய,
மடவார் தோள் முழுகி அமிழ் --- மாதர்களின்
தோள்களில் முழுகி அமிழ்கின்ற,
அநுபோக --- இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டுள்ள,
விழலன் என --- வீணன் என்று,
உலகோர்கள் மொழியும் அது மதியாமல் --- உலகில்
உள்ள பெரியோர்கள் கூறுகின்ற நன்மொழிகளைப் பொருள்படுத்தாமல்,
தலைகீழ் வீழ்ந்து --- தலைகீழாக விழுந்து,
அகம் மகிழ --- உள்ளம் களிப்புற,
இதம் ஆன --- இன்பமாகவுள்ள,
நகை அமுதம் என ஊறல் --- புன்னகையுடன் அமுதம்
போன்ற இதழில் ஊறும் நீரை,
அசடர் அகம் எழ ஆகி --- மூடராம் பொது மகளிர்
வீடுகட்குப் போய்,
மிகவே உண்டு --- மிகுதியாகப் பருகி,
அழியும் ஒரு தமியேனை --- அழிகின்ற
துணையில்லாத தனியனாகும் அடியேன்,
மொழியும் உனது இருதாளின் --- புகழ் பெறுகின்ற
தேவரீருடைய இரு திருவடித் தாமரையில்
ஊறும்,
அமுது பருகிய --- அமுதத்தைப் பருகுமாறு,
ஞானம் அருளாயோ --- ஞானத்தை அருள்புரிய
மாட்டீரோ? (அருளுவீர்)
பொழிப்புரை
மகர மீன்களை எடுத்துக் கரையில் எறிகின்ற
அலைகள் மோதுகின்ற அழகிய கடலின் பரந்த நீரானது, சுழன்று கலங்கிய நீராகிக் கெடுமாறு
வேலாயுதத்தை விடுத்தவரே!
வரிசை வரிசையாக வந்த அசுரர்களுடைய பெரிய
சேனை வாழ்நாள் முடிந்து மருளுமாறு மயிலில் ஏறி வந்த பன்னிரு கரங்களை உடைய
தீரமூர்த்தியே!
முருகக் கடவுளே!
சொல்லுதற்கு அரியரான பார்வதியின்
பதியாகிய பரமசிவனுடைய திருவுள்ளத்தில் விளங்கும் பரமகுரு என்று ஆன்றோர்
விரும்புகின்ற இளம் பூரணரே!
சங்குகளிலிருந்து பிறந்த முத்து மணிகள்
ஒளி வீசவும், அழகிய மலைச் சிகரம்
சந்திரனையளாவியும், விளங்கும்
பழநிமலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
தாமரை அரும்பைப் போலவும், ஒளி வீசுகின்ற அழகிய பொன்மலை போலவும், விளங்குகின்ற முதிராத இளந்
தனபாரங்களையுடைய மாதர்களுடைய தோளில் முழுகி அமிழ்ந்து, இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்ட வீணன் என்று
பெரியோர்கள் கூறும் அறிவுரையைப் பொருள்படுத்தாமல் தலைகீழாக வீழ்ந்து உள்ளம் உவக்க
இன்பமான புன்னகையுடன் கூடி அமுதம் போன்ற இதழ் ஊறலை, அந்த மூடர்களாகிய பொதுப் பெண்டிர்
வீடுகட்குச் சென்று, மிகவும் பருகி
அழிகின்ற துணையற்ற தனியனாகிய அடியேன், தேவரீருடைய
இரண்டு சரண கமலங்களில் ஊறும் அமுதினைப் பருகுமாறு மெய்ஞ்ஞானத்தை அருளமாட்டீரோ! (அருள்
செய்யும்.)
விரிவுரை
விழலன் ---
விழல்-பயனின்மை.
பயனில்லாத காரியம் புரிகின்றவன். அன்றி விழல் என்பது ஒருவகைப் புல். அது
ஒன்றுக்கும் பயனில்லாதது.
அழல்
அதுஓம்பும் அருமறை யோர்திறம்
விழல் அதுஎன்னும் ஆருகர்
திறத்திறம்
கழல
வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ
லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே. --- திருஞானசம்பந்தர்.
அழலுக்குள்
வெண்ணெய் எனவே உருகி, பொன்னம்பம்பலத்தார்
நிழலுக்குள்
நின்று தவம் உஞற்றாமல், நிட்டூர மின்னார்
குழலுக்கு
இசைந்த வகைமாலைகொண்டு குற்றேவல் செய்து,
விழலுக்கு முத்துலை இட்டு இறைத்தேன்
என் விதியின்மையே.
என்று
பட்டினத்தார் பாடுகின்றார்.
விழலன்
புல் போன்றவன்; ஒருவருக்கும், ஒன்றுக்கும் உதவாதவன்.
உலகோர்கள்
மொழியும் அது மதியாமல் ---
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே”
என்பது
தொல்காப்பியம். எனவே பெரியோர்கள் “இவன் அறிவற்றவன்” என்று கூறுவதைக் கேட்டும், ஆன்றோர் பழிப்புரையை ஒரு பொருளாக
மதியாது, தன் போக்கிலேயே
சென்று உழல்வது மதியின்மையாகும்.
தலைகீழ்
வீழ்ந்து ---
சிலர்
அகங்காரத்தால் தலை கீழாக நடப்பர். அது அழிவு காலத்தைக் காட்டுவது.
சூரபன்மன்
இறுதியில் மாமரமாகி தலைகீழாக நின்றான்.
.......................”கவிழ் இணர்
மாமுதல்
தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா
நல்லிசைச் செவ்வேல் சேஎய்” --- திருமுருகாற்றுப்படை
இருதாளின்
அமுது பருகிட ஞானம் அருள்வாயே ---
மாதர்
குமுத அமுதிதழ் பருகி வாடும் மாந்தர், முருகவேளின்
திருத்தாளில் ஊறிவரும் பேரின்பத் தேனைப் பருகி உய்தல் வேண்டும் என்று சுவாமிகள்
குறிப்பிடுக்கின்றார்.
மகரமெறி
திரை
---
மகரம்-என்பது
கடலில் வாழும் சுறாமீன்; இது மிக்க வீரம்
உள்ளது. இதனால் கடலுக்கு மகராலயம் என்று ஒரு பேருண்டு.
கடல்
அலை அம் மகர மீனை எடுத்துக் கரையில் வீசுகின்றது. அக்கடல் வற்றுமாறு முருகவேள் வேலை
விடுத்தருளினார்.
அகங்காரமாகிய
சுறா மீனையுடைய பிறவிப் பெருங்கடல் வற்ற,
ஞானமாகிய வேலை விடுத்தருளும் தெய்வம் முருகன் என்பது இதன் நுண் பொருள்.
பகர்வரியர்........உளமேவி
பரமகுரு
---
சிவபெருமான்
மாற்றம் மனம் கழிய நின்றவர். சொல்லாலும் எழுத்தாலும் அளவிட முடியாதவர். அவருடைய
திருவுள்ளத்தில் விளங்குபவர் முருகவேள். “உளமேவு பரமகுரு” என்ற சொற்றொடர் மிக்க
இனிமையானது.
பணிலமணி
வெயில் வீசு
---
பணிலம்-சங்குகள்.
சங்குகளிலிருந்து முத்து பிறக்கும். பழநி நீர்வளமுடையது. வயல்களில் உள்ள சங்குகள்
முத்துக்களை ஈனுகின்றன. அதனால் எங்கும் முத்தின் ஒளி வீசுகின்றது.
சங்குகளைப்
போன்ற உத்தம அன்னைகள் பரம ஞானிகளைப் பெறுகின் றார்கள். அந்த சிவஞானிகளின் ஞானவொளி
அங்கு வீசுகின்றது என்பது இதன் குறிப்பு.
அணி
சிகர மதி சூடு
---
சந்திரன்
தவழும் சிகரம் என்று அதன் பெருமையைக் கூறுகின்றார்.
கருத்துரை
முருகா; பழநிவேலா! உன் திருவடித்தேனைப் பருக
ஞானமருள்.
No comments:
Post a Comment