திரு மழபாடி




திரு மழபாடி

        சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         இத் திருத்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவு.

        தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம்.

       திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.

       அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம்.


இறைவர்              : வயிரத்தூண் நாதர்மழுவாடீசுவரர்.ச்சிரஸ்தம்பேசுவரர்      வயிரத்தூண் நாதர்.
                              
இறைவியார்        : சுந்தராம்பிகை, அழகம்மை

தல மரம்             : பனை மரம்

தீர்த்தம்              : இலக்குமி தீர்த்தம், கொள்ளிடம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. களையும் வல்வினை,
                                                            2. காலையார் வண்டினம்,
                                                            3. அங்கையாரழலன்

                                               2. அப்பர் 1. நீறேறு திருமேனி,
                                                                2. அலையடுத்த பெருங்கடல்.

                                               3. சுந்தரர்  -     பொன்னார் மேனியனே.

         இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

         இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது திருப்பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.

         இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

         கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.

          தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.

         இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் தடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு தடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.

         கொள்ளிட நதி இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாகினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு:

     திருநெய்த்தானப் பதியினை வணங்கிப் பாடித் திருமழபாடியை அடைந்து, பொன்னார் மேனியனாகிய வயிரமணித் தூணை வலங்கொண்டு எய்தித் தாழ்ந்து எழுந்து நின்று தொழுது ஆடிப் பாடிய நறுஞ்சொல் மாலைத் தொடை இத்திருப்பதிகம். இதில் இரண்டாவது திருப்பாட்டில் உள்ள திருவைந்தெழுத்தை உணர்ந்து, அக்காலத்துச் சிவஞானிகளின் நிலையை ஊகம் புரிந்து வாழ்தல் உத்தமர் கடனாம்.


பெரிய புராணப் பாடல் எண் : 305
குடதிசைமேல் போவதற்குக் கும்பிட்டு,அங்கு
         அருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேல்அணைவார், பரமர்திரு
         நெய்த்தானப் பதியில் நண்ணி,
அடையும் மனம் உறவணங்கி, அருந்தமிழ்மா
         லைகள்பாடி, அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகம்மிடை
         மழபாடி போற்றச் சென்றார்.

         பொழிப்புரை : திரு ஐயாறு என்னும் இப்பதியின் மேற்குத் திசையில் செல்வதற்கு விடை பெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று, அங்ஙனம் பெற்ற அவ் அருட்குறிப்பின் வழியே செல்கின்றவர் திருநெய்த்தானத்தை அடைந்து மனம் பொருந்த வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்த இருமருங்கும் வளரும் கரும்புடன் பாக்கு மரங்களும் நெருங்கியுள்ள `திருமழபாடியை' வணங்கச் செல்லலானார்.


பெ. பு. பாடல் எண் : 306
செங்கைமான் மறியார்தம் திருமழபா
         டிப்புறத்துச் சேரச் செல்வார்
"அங்கைஆர் அழல்" என்னும் திருப்பதிகம்
         எடுத்துஅருளி அணைந்த போழ்தில்,
டமங்கைவாழ் பாகத்தார் மழபாடி
         தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவம்உடையார்ட எனத்தொழுது
         போற்றி இசைத்தே கோயில் புக்கார்.

         பொழிப்புரை : சிவந்த மான் கன்றை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருமழபாடியின் புறத்தே செல்பவரான பிள்ளையார், `அங்கையாரழல்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தொடங்கி, மேலும் அப்பதியை அணுகும் பொழுது `உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் திருமழபாடியைத் தலையினால் வணங்குபவர்கள் மேன்மேலும் பெருகும் தவம் பெற்றவர்கள\' எனப் பாடிப் போற்றித் தொழுதவாறே கோயிலுள் புகுந்தார்.

         `அங்கையார் அழல்' (தி.3 ப.48) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடல், `திருமழ பாடியைத் தலையினால் வணங்கத் தவமாகுமே' என நிறைவு பெறுகிறது. இக்குறிப்பை உளங்கொண்ட வகையில், இவ்வாறு அருளுகின்றார் சேக்கிழார்.


பெ. பு. பாடல் எண் : 307
மழபாடி வயிரமணித் தூண் அமர்ந்து
         மகிழ்கோயில் வலம்கொண்டு எய்தி,
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
         சென்றுதாழ்ந்து, எழுந்து நின்று,
தொழுதுஆடிப் பாடி, நறும் சொல்மாலைத்
         தொடை அணிந்து துதித்துப் போந்தே,
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
         கும்பிட்டுஅங்கு உறைந்தார் சில்நாள்.

         பொழிப்புரை : அத்திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.

         இத் திருப்பதியில் சாற்றியருளிய பதிகங்கள் இரண்டு:

1. `களையும' : (தி.2 ப.9) - இந்தளம்.
2. `காலையார்' : (தி.3 ப.28) - கொல்லி.

இவற்றுள் முன்னையது இதுபொழுதும், பின்னையது இங்கிருந்த நாள்களிலுமாகப் பாடியிருக்கலாம்.

     இப்பதியில் இருந்தருளும் இறைவனின் திருப்பெயர் வயிரமணித்தூண் நாதர் என்பதாகும். `மழபாடி வயிரத்தூணே' என்பது அப்பர் திருவாக்காகும்.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகங்கள்

3. 048    திருமழபாடி                        பண் - கௌசிகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அங்கை ஆர்அழலன், அழ கார்சடைக்
கங்கை யான், கடவுள்இடம் மேவிய
மங்கை யான்உறை யும்மழ பாடியைத்
தம்கை யால்தொழு வார்தக வாளரே.

         பொழிப்புரை : இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன் . அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி, இடம் , பொருள் , காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர் .


பாடல் எண் : 2
விதியும் ஆம், விளைவு ஆம், ஒளி ஆர்ந்ததுஓர்
கதியும் ஆம், கசிவு ஆம், வசி ஆற்றமாம்
மதியும் ஆம், வலி ஆம், மழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நல் பாதமே.

         பொழிப்புரை : திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம் . மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக .


பாடல் எண் : 3
முழவி னான்,முது காடுஉறை பேய்க்கணக்
குழுவி னான்,குல வுங்கையில் ஏந்திய
மழுவி னான் உறை யும்மழ பாடியைத்
தொழுமிந் நும்துயர் ஆனவை தீரவே.

         பொழிப்புரை : இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன் . சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன் . அழகிய கையில் மழுப்படையை உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள் .


பாடல் எண் : 4
கலையி னான்,மறை யான், கதி ஆகிய
மலையி னான்,நரு வார்புர மூன்றுஎய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.

         பொழிப்புரை : இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர் . நான்கு மறைகள் ஆகியவன் . உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவன். பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய , மேருமலையை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும் .


பாடல் எண் : 5
நல்வி னைப்பயன், நான்மறை யின்பொருள்,
கல்வி ஆயக ருத்தன்,  உருத்திரன்,
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி எத்தும் அதுபுகழ் ஆகுமே.

         பொழிப்புரை : இறைவன் நல்வினையின் பயனாகியவன் . நான்மறையின் பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன். உருத்திரனாகத் திகழ்பவன். அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழ பாடியைப் போற்றுங்கள் . அது உமக்குப் புகழ் தரும் .


பாடல் எண் : 6
நீடி னார்உல குக்குஉயி ராய்நின்றான்,
ஆடி னான்எரி கான்இடை மாநடம்,
பாடின் ஆர்இசை மாமழ பாடியை
நாடி னார்க்குஇல்லை நல்குரவு ஆனவே.

         பொழிப்புரை : பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன். பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை .


பாடல் எண் : 7
மின்னின் ஆர்இடை யாள்ஒரு பாகமாய்
மன்னி னான்உறை மாமழ பாடியைப்
பன்னின் ஆர்இசை யால்வழி பாடுசெய்து
உன்னி னார்வினை ஆயின ஓயுமே.

         பொழிப்புரை : மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினை யாவும் நீங்கும் .


பாடல் எண் : 8
தென்இ லங்கையர் மன்னன் செழுவரை
தன்னில் அங்க அடர்த்துஅருள் செய்தவன்
மன் இலங்கிய மாமழ பாடியை
உன்னில் அங்க உறுபிணி இல்லையே.

         பொழிப்புரை : இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும் .


பாடல் எண் : 9
திருவின் நாயக னும்,செழுந் தாமரை
மருவி னானும் தொழ, தழல் மாண்புஅமர்
உருவி னான்உறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றுஅறுப் பார்களே.

         பொழிப்புரை : திருமகளின் நாயகனாகிய திருமாலும் , செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும் , தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர் .


பாடல் எண் : 10
நலியும் நன்றுஅறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும். மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை ஆனவே.

         பொழிப்புரை : நன்மை அறியாத சமணர்களும் , புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது , திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும் .


பாடல் எண் : 11
மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுஉகந்து ஏத்துவான்
கந்தம் ஆர்கடல் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்குஇல்லை பாவமே.

         பொழிப்புரை : தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி, வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

                                             திருச்சிற்றம்பலம்

2.009 திருமழபாடி                             பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
களையும் வல்வினை அஞ்சல்நெஞ் சே,கரு தார்புரம்
உளையும் பூசல்செய் தான்,உயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கிஎய் தான்,மதுத் தும்பிவண்டு 
அளையும் கொன்றைஅம் தார்மழ பாடியுள் அண்ணலே.

         பொழிப்புரை :உயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர் வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத் துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும் அண்ணல், நம் வல்வினைகளைக் களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.


பாடல் எண் : 2
காச்சு இலாதபொன் நோக்கும் கனவயி ரத்திரள்
ஆச்சு இலாதப ளிங்கின் நஞ்சுமுன் ஆடினான்,
பேச்சி னால்உமக்கு ஆவதுஎன் பேதைகாள், பேணுமின்,
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.

         பொழிப்புரை :அறிவற்றவர்களே! அவப்பேச்சால் உமக்கு விளையும் பயன்யாது? காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன்போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன்பாற்பட்டதை நுணுக்காது அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.


பாடல் எண் : 3
உரம்கெ டுப்பவன் உம்பர்கள் ஆயவர் தங்களை,
பரம்கெ டுப்பவன் நஞ்சைஉண்டு, பக லோன்தனை
முரண்கெ டுப்பவன், முப்புரந் தீஎழச் செற்றுமுன்
வரம் கொடுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.

         பொழிப்புரை :சிறந்த மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின் வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும் போக்கியவன். கடலிடை எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங் களையும் தீயெழச்செய்து அழித்தவன்.


பாடல் எண் : 4
பள்ளம் ஆர்சடை யில்புடை யேஅடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான், விடை ஏறிய வேதியன்,
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை ஆயின ஓயவே.

         பொழிப்புரை :நடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும் ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை, வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.


பாடல் எண் : 5
தேன் உலாமலர் கொண்டு,மெய்த் தேவர்கள், சித்தர்கள்,
பால்நெய் அஞ்சுஉடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்,
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடிஎம்
கோனை நாள்தொறும் கும்பிட வேகுறி கூடுமே.

         பொழிப்புரை :மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய் முதலிய ஆனைந்து ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள் கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம்மோடு கூடுவான்.


பாடல் எண் : 6
தெரிந்த வன், புர மூன்றுஉடன் மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழு வார்அவர் தம்மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்றுஉடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை ஆயின போகுமே.

         பொழிப்புரை :எல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும் அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில் பரவிவிளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.


பாடல் எண் : 7
சந்த வார்குழ லாள்உமை தன்ஒரு கூறுஉடை
எந்தை யான், இமை யாதமுக் கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாஎழு வார்வினை ஆயின தேயுமே.

         பொழிப்புரை :அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட பொழில் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச் சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து கெடும்.


பாடல் எண் : 8
இரக்கம் ஒன்றும் இலான்இறை யான்திரு மாமலை
உரக்கை யால்எடுத் தான்தனது ஒண்முடி பத்துஇற
விரல் தலைந்நிறுவி, உமை யாளொடு மேயவன்,
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.

         பொழிப்புரை :நெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன், திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால் விரலின் நுனியை ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில் வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்


பாடல் எண் : 9
ஆலம் உண்டுஅமு தம்அம ரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர்உயிர் வீட்டிய மாமணி கண்டனார்,
சால நல்அடி யார், தவத் தார்களும் சார்விடம்
மால் அயன்வணங் கும்மழ பாடிஎம் மைந்தனே.

         பொழிப்புரை :நஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும் தம்மைச்சாரும் புகலிடமாய் விளங்குபவர்.


பாடல் எண் : 10
கலியின் வல்அம ணும், கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியும் நாள்கெடுத்து ஆண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல ஓசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.

         பொழிப்புரை :துன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச் சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என் நாதனார் வாழும்பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய முழவொலியும் பிற மங்கல ஓசைகளும் நிறைந்து சிறந்த மழபாடி. அதனை வாழ்த்திவணங்குவோம்.


பாடல் எண் : 11
மலியும் மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடல் காழிக் கவுணியன்
* * * * *

         பொழிப்புரை :(இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில) மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் ...

                                             திருச்சிற்றம்பலம்

3. 028    திருமழபாடி                பண் - கொல்லி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
காலைஆர் வண்டுஇனம் கிண்டிய கார்உறும்
சோலைஆர் பைங்கிளி சொல்பொருள் பயிலவே
வேலைஆர் விடம்அணி வேதியன் விரும்புஇடம்
மாலைஆர் மதிதவழ் மாமழ பாடியே.

         பொழிப்புரை :காலைப் பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும், பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 2
கறைஅணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணிய
பிறைஅணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர்,
துறைஅணி குருகுஇனம் தூமலர் துதையவே
மறைஅணி நாவினான் மாமழ பாடியே.

         பொழிப்புரை :நீலகண்டராயும் , நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந்து உலவுசீர் மாமழ பாடியே.

         பொழிப்புரை :அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிற வேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன், இறைவன், பந்து வந்தடைகின்ற மென்மையான  விரல்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
அத்தியின் உரிதனை அழகுஉறப் போர்த்தவன்,
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்,
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

         பொழிப்புரை :யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன் . வீடுபேறாயும் , மும்மூர்த்தி கட்கு முதல்வனாயும் விளங்குபவன் . பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
கங்கைஆர் சடையிடைக் கதிர்மதி அணிந்தவன்,
வெங்கண்வாள் அரவுஉடை வேதியன், தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.

         பொழிப்புரை :கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான் . கொடிய கண்ணை யுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன் . வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன் . தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 6
பாலனார் ஆர்உயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்,
சேலின்ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.

         பொழிப்புரை :பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 7
விண்ணில்ஆர் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்இலார் முப்புரம் எரிஉண நகைசெய்தார்,
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

         பொழிப்புரை :சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 8
கரத்தினால் கயிலையை எடுத்தகார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும், சிவனடி சரண்எனா,
இரத்தினால் கைந்நரம்பு எடுத்துஇசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.

         பொழிப்புரை :தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம் காற்பெருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர். பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட , அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 9
ஏடுஉலா மலர்மிசை அயன்,எழில் மாலுமாய்
நாடினார்க்கு அரியசீர் நாதனார் உறைவிடம்,
பாடுஎலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடுஎலாம் மல்குசீர் மாமழ பாடியே.

         பொழிப்புரை :இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அடிமுடி தேட , காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.


பாடல் எண் : 10
உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித்து அறிவிலா நீசர்சொல் கொள்ளன்மின்,
பொறிபிடித்த அரவுஇனம் பூண்எனக் கொண்டு,மான்
மறிபிடித் தான்இடம் மாமழ பாடியே.

         பொழிப்புரை :நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும் , வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும் , புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா . படமெடுத்தாடும் , புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து , இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.


பாடல் எண் : 11
ஞாலத்துஆர் திரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.

         பொழிப்புரை :இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு , நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை , உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .
                                             திருச்சிற்றம்பலம்
   

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 386
நீடிய அப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக,
மாடுஉயர் தானம் பணிந்து, மழபாடி யாரை வணங்கி,
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து, பணிசெய்து, போற்றி,
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற அப்பதியாய திருவையாற்றில் இருந்தும், திருநெய்த்தானம் முதலாக அருகில் உள்ள பதிகளை எல்லாம் வணங்கித், திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிச் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் பாடித் திருப்பணிகளையும் செய்து போற்றி, பின்பு தேடிய மாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


6. 039    திருமழபாடி              திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீறுஎறு திருமேனி உடையான் கண்டாய்,
         நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்,
கூறுஆக உமைபாகம் கொண்டான் கண்டாய்,
         கொடியவிடம் உண்டுஇருண்ட கண்டன் கண்டாய்,
ஏறுஏறி எங்கும் திரிவான் கண்டாய்,
         ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்,
மாறுஅனார் தம்அரணம் அட்டான் கண்டாய்,
         மழபாடி மன்னும் மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன் . நெற்றிக்கண்ணன் . பார்வதி பாகன் . விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன் . பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்


பாடல் எண் : 2
கொக்குஇறகு சென்னி உடையான் கண்டாய்,
         கொல்லை விடைஏறும் கூத்தன் கண்டாய்,
அக்குஅரைமேல் ஆடல் உடையான் கண்டாய்,
         அனல்அங்கை ஏந்திய ஆதி கண்டாய்,
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்,
         அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனான் கண்டாய்,
மற்றுஇருந்த கங்கைச் சடையான் கண்டாய்
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன் . முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான் கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலைஉடையவன். தீயினை உள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன் .


பாடல் எண் : 3
நெற்றித் தனிக்கண் உடையான் கண்டாய்,
         நேரிழைஓர் பாகமாய் நின்றான் கண்டாய்,
பற்றிப்பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்,
         பல்ஊர் பலிதேர் பரமன் கண்டாய்,
செற்றார் புரமூன்றும் செற்றான் கண்டாய்,
         செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்,
மற்றுஒரு குற்றம் இலாதான் கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் , நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன் . பார்வதி பாகன் . பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன் . பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன் . பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . பிறையைச் சடையில் அணிந்தவன் . எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன் .


பாடல் எண் : 4
அலைஆர்ந்த புனல்கங்கைச் சடையான் கண்டாய்,
         அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய்,
கொலையான கூற்றம் குமைத்தான் கண்டாய்,
         கொல்வேங்கைத் தோல்ஒன்று உடுத்தான் கண்டாய்,
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்.
         செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்,
மலைஆர் மடந்தை மணாளன் கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் , அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன் . உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன் . கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன் . தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன் . வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன் .


பாடல் எண் : 5
உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்,
         உவகையோடு இன்அருள்கள் செய்தான் கண்டாய்,
நலம்திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்,
         நால்வேதம் ஆறுஅங்கம் ஆனான் கண்டாய்,
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்,
         உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்,
மலர்ந்தார் திருவடிஎன் தலைமேல் வைத்த
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன் . மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன் . அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன் . நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன் . இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன் . தேவர்களுக்குத் தலைவன் . எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல் வைத்தவன் .


பாடல் எண் : 6
தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்,
         தகவுடையார் நெஞ்சுஇருக்கை கொண்டான் கண்டாய்,
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்,
         புணர்ச்சிப் பொருள்ஆகி நின்றான் கண்டாய்,
ஏமருவும் வெஞ்சிலைஒன்று ஏந்தி கண்டாய்,
         இருள்ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்,
மாமருவும் கலைகையில் ஏந்தி கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் , பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கி நற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்த மலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய் , எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய் , அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய் , நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்திய மானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான்.


பாடல் எண் : 7
நீர்ஆகி நெடுவரைகள் ஆனான் கண்டாய்,
         நிழல்ஆகி நீள்விசும்பும் ஆனான் கண்டாய்,
பாராகிப் பௌவம் ஏழ்ஆனான் கண்டாய்,
         பகல்ஆகி வான்ஆகி நின்றான் கண்டாய்,
ஆரேனும் தன்அடியார்க்கு அன்பன் கண்டாய்,
         அணுஆகி ஆதியாய் நின்றான் கண்டாய்,
வார்ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் . நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி , ஆகாயமும் ஆகி , நிலமாகி , ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய் , நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான் .

  
பாடல் எண் : 8
பொன்இயலும் திருமேனி உடையான் கண்டாய்,
         பூங்கொன்றைத் தார்ஒன்று அணிந்தான் கண்டாய்,
மின்இயலும் வார்சடைஎம் பெருமான் கண்டாய்,
         வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்,
தன்இயல்புார் மற்றுஒருவர் இல்லான் கண்டாய்,
         தாங்குஅரிய சிவம்தானாய் நின்றான் கண்டாய்,
மன்னிய மங்கைஓர் கூறன் கண்டாய்,
         மழபாடி மன்னும் மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் , பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய் , ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய் , யானைத் தோலை விரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த் தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான் .


பாடல் எண் : 9
ஆலாலம் உண்டுஉகந்த ஆதி கண்டாய்,
         அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்,
காலால்அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்,
         கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய்,
பால்ஆரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்,
         பசுஏறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்,
மாலாலும் அறிவுஅரிய மைந்தன் கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.


பாடல் எண் : 10
ஒருசுடராய் உலகுஏழும் ஆனான் கண்டாய்,
         ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்,
விரிசுடராய் விளங்குஒளியாய் நின்றான் கண்டாய்,
          விழவுஒலியும் வேள்வுஒலியும் ஆனான் கண்டாய்,
இருசுடர்மீது ஓடா இலங்கைக் கோனை
         ஈடுஅழிய இருபதுதோள் இறுத்தான் கண்டாய்,
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்,
         மழபாடி மன்னு மணாளன் தானே.

         பொழிப்புரை :மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய் , உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று , ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும் , அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து , திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய் , தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 040    திருமழபாடி              திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அலைஅடுத்த பெருங்கடல்நஞ்சு அமுதா உண்டு
         அமரர்கள்தம் தலைகாத்த ஐயர், செம்பொன்
சிலைஎடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
         திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்,
நிலைஅடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
         நிரைவயிரப் பலகையால் குவையார்த்து உற்ற
மலைஅடுத்த மழபாடி வயிரத் தூணே
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் என்றும் , மேருவை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக் கோத்து முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும் , தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி இயற்றப்பட்ட மழபாடியில் உறையும் , மலை போல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன் .


பாடல் எண் : 2
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
         அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
         வழிபட்டார் வான்ஆளக் கொடுத்தி அன்றே,
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்பம் மேய
         கனவயிரத் திரள்தூணே, கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :ஓசை பொருந்திய குழல் , மொந்தை , வீணை , யாழ் என்ற இசைக் கருவிகளை இசைத்து வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து வேதமந்திரமும் ஓதி , நீரினால் அபிடேகம் செய்து வழிபட , அவர்களுக்கு வானுலகில் வெகுகாலம் அநுபவிக்கும் செல்வத்தைக் கொடுக்கும் , செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பியிருக்கும் மேம்பட்ட வயிரக்குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும் , வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும் , நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .


பாடல் எண் : 3
உரங்கொடுக்கும் இருள்மெய்யர் மூர்க்கர் பொல்லா
         ஊத்தைவாய்ச் சமணர்தமை உறவாக் கொண்ட
பரம்கெடுத்துஇங்கு அடியேனை ஆண்டு கொண்ட
         பவளத்தின் திரள்தூணே, பசும்பொன் முத்தே,
புரம்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
         பொடியாக விழித்துஅருளி, புவியோர்க்கு என்றும்
வரம்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :வலிமை மிக்க கறுத்த உடம்பினராய் , உண்மையறிவு அற்றவராய் , நல்லவரல்லாத ஊத்தை வாயை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்ட பாவமாகிய சுமையை நீக்கி , அடியேனை அடிமையாகக் கொண்ட பருத்த பவளத்தூணே ! பசிய பொன்னில் பதிக்கப்பட்ட முத்தே ! திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு தீ விழித்து உலக மக்களுக்கு என்றும் மேம்பட்ட வாழ்வை அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே ! என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .


பாடல் எண் : 4
ஊன்இகந்து ஊண்உறிக்கையர் குண்டர் பொல்லா
         ஊத்தைவாய்ச் சமணர்உற வாகக் கொண்டு
ஞானஅகம்சேர்ந் துஉள்ளவயி ரத்தை நண்ணா
         நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீன்அகஞ்சேர் வெள்ளநீர் விதியால் சூடும்
         வேந்தனே, விண்ணவர்தம் பெருமான், மேக
வானகம்சேர் மழபாடி வயிரத் தூணே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :சுவைத்து உண்ணுதலை விடுத்துக்கையில் உறியில் கரகத்தைத் தாங்கி உடல்பருத்த பொலிவற்ற , ஊத்தைவாயினை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்டு , உள்ளத்தில் நல்லறிவு பெற்று , உள்ளத்தில் வயிரம் போல ஒளி வீசும் எம்பெரு மானை நெருங்காத நாய் போன்ற கீழேனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமையாகக் கொண்ட , மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தலையிலே தங்குமாறு சூடிய அரசனே ! தேவர்கள் தலைவனே ! மேகத்தை உடைய வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்தருளியிருக்கும் வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .


பாடல் எண் : 5
சிரம்ஏற்ற நான்முகன்றன் தலையும் மற்றைத்
         திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி,
உரம்ஏற்ற இரவிபல் தகர்த்து, சோமன்
         ஒளிர்கலைகள் படஉழக்கி, உயிரை நல்கி,
நரைஏற்ற விடைஏறி, நாகம் பூண்ட
         நம்பியையே, மறைநான்கும் ஒல மிட்டு
வரம்ஏற்கும் மழபாடி வயிரத் தூணே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :ஐந்தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமாலுடைய தலைமை அழியுமாறும் போக்கி , வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிவீசும் கலைகள் அழியுமாறு கலக்கி , அவர்களை உயிரோடு விட்டு , வெண்ணிறக் காளையை இவர்ந்து , பாம்பினை அணிந்த குணபூரணனே ! தலைவனே ! நான்கு வேதங்களும் உன்புகழ் பாடிப் பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .

 
பாடல் எண் : 6
சினம்திருத்தும் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
         செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன், தேடிப்
புனம்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
         பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு,
தனம்திருத்தும் அவர்திறத்தை ஒழியப் பாற்றி,
         தயாமூல தன்மவழி எனக்கு நல்கி,
மனம்திருத்தும் மழபாடி வயிரத் தூணே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் நல்வினை யில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என் மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 7
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்கும்
         சுருள்சடைஎம் பெருமானே, தூய தெண்ணீர்,
இழிப்புஅரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
         என்துணையே, என்னுடைய பெம்மான் தம்மான்,
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
         பரிதியே, சுருதிமுடிக்கு அணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :நீர்ச் சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகிய துக்கத்தைப் போக்கும் சுருண்ட சடையை உடைய எம் பெருமானே ! சடையில் தூய தெளிந்த நீராகிய கங்கையை ஏற்றவனே ! போக்குதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என் துணைவனே ! என் தலைவனே ! எல்லோருக்கும் தலைவனே ! குறை கூறுதற்கரிய திருமாலும் பிரமனும் காணாத ஒளிப்பிழம்பே ! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .
                                             திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருவாலம்பொழிலில் பெருமானை வணங்கித் தங்கி, இரவு துயில் கொள்ளும்பொழுது, பெருமான் கனவில் தோன்றி, "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ?" என்று அருள, துயில் எழுந்து திருமழபாடி அடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12. ஏயர்கோன். புரா. 71-74)


பெரிய புராணப் பாடல் எண் : 71
தேவர் பெருமான் கண்டியூர்
         பணிந்து, திருஐ யாறுஅதனை
மேவி வணங்கி, பூந்துருத்தி
         விமலர் பாதம் தொழுதுஇறைஞ்சி,
சேவில் வருவார் திருவாலம்
         பொழிலில் சேர்ந்து தாழ்ந்து,இரவு
பாவு சயனத்து அமர்ந்து அருளிப்
         பள்ளி கொள்ளக் கனவின்கண்.

         பொழிப்புரை : தேவர்களின் தலைவனாய பெருமானின் திருக் கண்டியூரைப் பணிந்து, திருவையாற்றிற்குச் சென்று வணங்கி, திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றிய பின்னர், ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானின் திருவாலம்பொழிலை அடைந்து வணங்கி, அன்றிரவு அங்குத் தங்கித் துயில்கொள்ளும்பொழுது, அவர் கனவில்,

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 72
'மழபா டியினில் வருவதற்கு
         நினைக்க மறந்தாயோ' என்று
குழகு ஆகியதம் கோலம்எதிர்
         காட்டி அருள, குறித்து உணர்ந்து,
நிழல்ஆர் சோலைக் கரைப்பொன்னி
         வடபால் ஏறி, நெடுமாடம்
அழகுஆர் வீதி மழபாடி
         அணைந்தார் நம்பி யாரூரர்.

         பொழிப்புரை : `திருமழபாடி வருதற்கு மட்டுமின்றி நினைக்கவும் மறந்தனையோ?' என்று தோடணிந்த திருக்காதுடன் விளங்கும் பெருமானார் காட்சி தந்து உணர்த்தியருளலும், துயில் நீங்கிய சுந்தரர், நிழல் மிகும் சோலைகள் சூழ்ந்த காவிரியாற்றின் வடகரையில் ஏறிச் சென்று, நெடிய மாடங்களுடன் அழகிய வீதிகளையும் உடைய திருமழபாடியை அணைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 73
அணைந்து திருக்கோ புரம்இறைஞ்சி,
         அன்பர் சூழ உடன்புகுந்து,
பணங்கொள் அரவம் அணிந்தார்முன்
         பணிந்து வீழ்ந்து, பரங்கருணைக்
குணங்கொள் அருளின் திறம்போற்றிக்
         கொண்ட புளகத் துடன் உருகி,
புணர்ந்த இசையால் திருப்பதிகம்
         "பொன்னார் மேனி" என்றுஎடுத்து.

         பொழிப்புரை : அணைந்தவர், கோயிலின் திருக்கோபுரத்தை வணங்கி, அன்பர்கள் சூழ உள்ளே சென்று, படங்கொண்ட பாம்பை அணிந்த பெருமானின் திருமுன்னிலையில் பணிந்து வீழ்ந்து, மேலாய கருணையையே குணமாகக் கொண்ட பெருமானின் அருட்டிறத்தைப் போற்றி, மயிர்சிலிர்க்க உருகிப் பணிந்து, பொருந்திய இசையில் `பொன்னார் மேனியனே' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்து,


பெ. பு. பாடல் எண் : 74
"அன்னே உன்னை அல்லால் யான்
         ஆரை நினைக்கேன்" என ஏத்தித்
தன்நேர் இல்லாப் பதிகமலர்
         சாத்தித் தொழுது புறம்புஅணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
         வைகித் தொண்டர் உடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையின் இருமருங்கும்
         பணிந்து மேல்பால் போதுவார்.

         பொழிப்புரை : `அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக் கேனே?\' எனப் பாடிப் போற்றி, தனக்கு ஒப்பில்லாத அப்பதிகமாய மாலையைச் சாத்தித் தொழுது, வெளிவந்து, நிலைபெற்ற அப்பதியில் சில நாள்கள் தங்கி, அடியார்களுடன் மகிழ்ந்து, காவிரியின் இரு புறமும் உள்ள திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து, மேற்றிசையாகச் செல்பவர்,

         `பொன்னார் மேனியனே' (தி.7 ப.24) எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும். `அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்பது முதற் பாடலில் வரும் நான்காவது அடியாகும். இப்பதிகம் முழுவதும் இத்தொடர் நிறைவுத் தொடராக வந்துள்ளது.

சுந்தரர் திருப்பதிகம்


7. 024    திருமழபாடி                 பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொன்ஆர் மேனியனே, புலித் தோலை அரைக்குஅசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே,
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே,
அன்னே, உன்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 2
கீள்ஆர் கோவணமும் திரு நீறுமெய் பூசிஉன்தன்
தாளே வந்துஅடைந்தேன், தலைவா, எனை ஏன்றுகொள்நீ,
வாளார் கண்ணிபங்கா, மழ பாடியுள் மாணிக்கமே,
கேளா நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள்.


பாடல் எண் : 3
எம்மான் எம்அனை,என் தனக்கு எள்தனைச் சார்வுஆகார்,
இம்மா யப்பிறவி பிறந் தேஇறந்து எய்த்துஒழிந்தேன்,
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே,
அம்மான் நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

  
பாடல் எண் : 4
பண்டே நின்அடியேன் அடி யார்அடி யார்கட்குஎல்லாம்
தொண்டே பூண்டுஒழிந்தேன், தொட ராமைத் துரிசுஅறுத்தேன்,
வண்டுஆர் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே,
அண்டா, நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன்?


பாடல் எண் : 5
கண்ணாய், ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய்,
பண்ஆர் இன்தமிழாய், பரம் ஆய பரஞ்சுடரே,
மண்ஆர் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே,
அண்ணா நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 6
நாளார் வந்து அணுகி நலி யாமுனம், நின்தனக்கே
ஆளா வந்துஅடைந்தேன், அடி யேனையும் ஏன்றுகொள்நீ,
மாளா நாள்அருளும் மழ பாடியுள் மாணிக்கமே,
ஆளாய் நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .


பாடல் எண் : 7
சந்து ஆரும்குழையாய், சடை மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய், விடை ஏறிய வித்தகனே,
மைந்துஆர் சோலைகள்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே,
எந்தாய், நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?


பாடல் எண் : 8
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள்எல்லாம்
செய்ய மலர்கள்இட மிகு செம்மையுள் நின்றவனே,
மைஆர் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே,
ஐயா, நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 9
நெறியே, நின்மலனே, நெடு மால்அயன் போற்றிசெய்யும்
குறியே, நீர்மையனே, கொடி ஏர்இடை யாள்தலைவா,
மறிசேர் அங்கையனே, மழ பாடியுள் மாணிக்கமே,
அறிவே. நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே.

         பொழிப்புரை : உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 10
ஏர்ஆர் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை,
வார்ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை,
சீர்ஆர் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்து இருப்பாரே.

         பொழிப்புரை : அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...