திருப் பெரும்புலியூர்




திருப் பெரும்புலியூர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) என்னும் திருத்தலத்தில் இருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது

இறைவர்                  : வியாக்ரபுரீசுவரர், பிரியாநாதர்

இறைவியார்               : சௌந்தரநாயகி

தேவாரப் பாடல்கள்      : சம்பந்தர் - மண்ணுமோர் பாகம்


         பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் திருத்தலமும் ஒன்றாகும். மற்ற 4 திருத்தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) எருக்கத்தம்புலியூர், 4) ஓமாம்புலியூர்.

     புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தனரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.

         இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. வெளிப் பிராகார வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.

         அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்ற நிலையில் அம்பாள் அருட்காடசி தருகிறாள். நவக்கிரக சந்நிதியில் எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பம்சம். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மைத்த கரும்புலி ஊர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் பெரும்புலியூர் வாழ் கருணைப் பேறே"

 
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 304
பலமுறையும் பணிந்து,எழுந்து, புறம்போந்து,
         பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதிஅதன் கண்நிகழும்நாள்,
         நிகர்இலா நெடுநீர்க் கங்கை
அலையும்மதி முடியார்தம் பெரும்புலியூர்
         முதலான அணைந்து போற்றி,
குலவுதமிழ்த் தொடைபுனைந்து, மீண்டுஅணைந்து,
         பெருகுஆர்வம் கூரும் நாளில்.

         பொழிப்புரை : பலமுறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து, வணங்கி எழும் திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதியில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது `பெரும்புலியூர்\' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித் தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும் திருவையாற்றை அடைந்து, பெருகும் ஆசை மிக அங்கிருந்து வரும் நாள்களில்,

         குறிப்புரை : திருப்பெரும்புலியூரில் அருளிய பதிகம் `மண்ணுமோர்' (தி.2 ப.67) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருப்பதி முதலான பதிகளுக்கும் சென்றார் எனக் குறிப்பதற்கேற்ப அப்பதிகள் இவை என அறிதற்கு இல்லை.



2.067 திருப்பெரும்புலியூர்            பண் - காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மண்ணும்ஓர் பாகம் உடையார்,
         மாலும்ஓர் பாகம் உடையார்,
விண்ணும்ஓர் பாகம் உடையார்,
         வேதம் உடைய விமலர்,
கண்ணும்ஓர் பாகம் உடையார்,
         கங்கை சடையில் கரந்தார்,
பெண்ணும்ஓர் பாகம் உடையார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.


பாடல் எண் : 2
துன்னு கடல்பவ ளம்சேர்
         தூயன நீண்டதிண் தோள்கள்,
மின்னு சுடர்க்கொடி போலும்
         மேனியி னாள்ஒரு கங்கை,
கன்னி களின்புனை யோடு
         கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.


பாடல் எண் : 3
கள்ளம் மதித்த கபாலம்
         கைதனி லேமிக ஏந்தி,
துள்ள மிதித்துநின்று ஆடும்
         தொழிலர், எழில்மிகு செல்வர்,
வெள்ள நகுதலை மாலை
         விரிசடை மேல்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித்துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.


பாடல் எண் : 4
ஆடல் இலையம் உடையார்,
         அருமறை தாங்கி ஆறுஅங்கம்
பாடல் இலையம் உடையார்,
         பன்மை ஒருமைசெய்து அஞ்சும்
ஊடலில்ஐயம் உடையார்,
         யோகுஎனும் பேர்ஒளி தாங்கிப்
பீடுஅல் இலயம் உடையார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள்இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.


பாடல் எண் : 5
தோடுஉடை யார்குழைக் காதில்,
         சுடுபொடி ஆர்அனல் ஆடக்
காடுஉடை யார்,எரி வீசும்
         கைஉடை யார்,கடல் சூழ்ந்த
நாடுஉடை யார்,பொருள் இன்பம்
         நல்லவை நாளும் நயந்த
பீடுஉடை யார்பெரு மானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார்.


பாடல் எண் : 6
கற்றது உறப்பணி செய்து
         காண்டும்என் பார்அவர் தங்கள்
முற்று இதுஅறிதும் என்பார்கள்
         முதலியர், வேதபு ராணர்,
மற்று இதுஅறிதும் என்பார்கள்,
         மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :கல்வி கற்றதன் பயனை அறிந்து பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.


பாடல் எண் : 7
மறைஉடையார் ஒலி பாடல், 
         மாமலர்ச் சேவடி சேர்வார்,
குறைஉடையார் குறை தீர்ப்பார்,
         குழகர், அழகர்,நம் செல்வர்,
கறைஉடை யார்திகழ் கண்டம்,
         கங்கை சடையில் கரந்தார்,
பிறைஉடை யார்சென்னி தன்மேல்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.


பாடல் எண் : 8
உறவியும் இன்புஉறு சீரும்
         ஓங்குதல், வீடுஎளிது ஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி,
         துன்பமும் இன்பமும் தோற்றி,
மறவிஅம் சிந்தனை மாற்றி,
         வாழவல் லார்தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.


பாடல் எண் : 9
சீர்உடை யார்அடி யார்கள்,
         சேடர்ஒப் பார்,சடை சேரும்
நீர்உடை யார்,பொடிப்பூசும்
         நினைப்புஉடை யார்,விரி கொன்றைத்
தார்உடை யார்,விடை ஊர்வார்,
         தலைவர்ஐந்நூற்றுப் பத்துஆய
பேர்உடை யார்,பெரு மானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்பவர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

  
பாடல் எண் : 10
உரிமை உடைஅடி யார்கள்
         உள்ளுற உள்கவல் லார்கட்கு
அருமை உடையன காட்டி,
         அருள்செயும் ஆதி முதல்வர்,
கருமை உடைநெடு மாலும்
         கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமை உடைப்பெரு மானார்,
         பெரும்புலி யூர்பிரி யாரே.

         பொழிப்புரை :உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரியதிருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமையுடைய பெருமான். அவ்விறைவர் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.


பாடல் எண் : 11
பிறைவள ரும்முடிச் சென்னிப்
         பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழில் காழி
         நல்தமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ரும்தமிழ் மாலை
         வல்லவர் தம்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினர் ஆகி
         நீடுஉல கத்துஇருப் பாரே.

         பொழிப்புரை :பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...