திரு நெய்த்தானம்
(தில்லை ஸ்தானம்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில்
திருவையாற்றில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவு.
இறைவர்
: நெய்யாடியப்பர், கிருதபுரீசுவரர்.
இறைவியார்
: பாலாம்பிகை.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - மையாடிய
2. அப்பர் - 1. காலனை வீழ
2. பாரிடஞ் சாடிய,
3. கொல்லியான்குளிர்
4. வகையெலா முடையா
5. மெய்த்தானத் தகம்படியுள்.
திருநெய்த்தானம் திருவையாற்று
சப்தஸ்தானத் தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே
இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய திருத்தலம்.
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள
கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச்
சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி
அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி,
லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் மூலவர்
நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக்
காட்சி தருகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு
நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.
அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில்
தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு
அருட்காடசி தருகிறாள். காமதேனு,
சரஸ்வதி
மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான்
அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில்
மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது.
முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற
திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர்
எழுந்தருளியுள்ளனர்.
வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,
"பொய் அகற்றி மெய்த்தானம் நின்றோர் வெளித்தானம் மேவு, திரு நெய்த்தானத்து உள்
அமர்ந்த நித்தியமே" என்று போற்றி உள்ளார்.
காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------
சப்தத் தானங்கள்
என்று கொண்டாடப்படுபவை
1. திருவையாறு
சப்தஸ்தானம்
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
2. கும்பகோணம்
சப்தஸ்தானம்
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி
3. சக்கரப்பள்ளி
சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை
4. மயிலாடுதுறை
சப்தஸ்தானம்
மயிலாடுதுறை
ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை, துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
5. கரந்தட்டாங்குடி
சப்தஸ்தானம்
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)
6. நாகப்பட்டினம்
சப்தஸ்தானம்
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்
7. திருநல்லூர்
சப்தஸ்தானம்
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை
8. திருநீலக்குடி
சப்தஸ்தானம்
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி
9. திருக்கஞ்சனூர்
சப்தஸ்தானம்
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 304
பலமுறையும்
பணிந்து,எழுந்து, புறம்போந்து,
பரவுதிருத் தொண்ட
ரோடு
நிலவுதிருப்
பதிஅதன் கண்நிகழும்நாள்,
நிகர்இலா நெடுநீர்க்
கங்கை
அலையும்மதி
முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து
போற்றி,
குலவுதமிழ்த்
தொடைபுனைந்து மீண்டுஅணைந்து,
பெருகுஆர்வம் கூரும்
நாளில்.
பொழிப்புரை : திரு ஐயாறப்பரைப்
பலமுறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து, வணங்கி
எழும் திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதியில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை
அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது `பெரும் புலியூர்' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித்
தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும் திருவையாற்றை
அடைந்து, பெருகும் ஆசை மிக
அங்கிருந்து வரும் நாள்களில்,
பெ.
பு. பாடல் எண் : 305
குடதிசைமேல்
போவதற்குக் கும்பிட்டு,அங்கு
அருள்பெற்றுக்
குறிப்பி னோடும்,
படருநெறி
மேல்அணைவார், பரமர்திரு
நெய்த்தானப் பதியில்
நண்ணி,
அடையும்
மனம் உறவணங்கி, அருந்தமிழ்மா
லைகள்பாடி, அங்கு நின்றும்
புடைவளர்மென்
கரும்பினொடு பூகம்மிடை
மழபாடி போற்றச்
சென்றார்.
பொழிப்புரை : இப்பதியின் மேற்குத்
திசையில் செல்வதற்கு விடை பெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று, அங்ஙனம் பெற்ற அவ்வருட்குறிப்பின் வழியே
செல்கின்றவர் திருநெய்த்தானத்தை அடைந்து மனம் பொருந்த வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்த இருமருங்கும் வளரும்
கரும்புடன் பாக்கு மரங்களும் நெருங்கியுள்ள `திருமழபாடியை' வணங்கச் செல்லலானார்.
குறிப்புரை : திருநெய்த்தானத்தில்
அருளிய பதிகம் `மையாடிய கண்டன்' (தி.1 ப.15) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும்.
1. 015 திருநெய்த்தானம் பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மைஆடிய
கண்டன்,மலை மகள்பாகம்
அதுஉடையான்,
கைஆடிய
கேடுஇல்கரி உரிமூடிய ஒருவன்,
செய்ஆடிய
குவளைம்மலர் நயனத்துஅவ ளோடும்
நெய்ஆடிய
பெருமான்இடம் நெய்த்தானம் எனீரே.
பொழிப்புரை :கருநிறம் அமைந்த
கண்டத்தை உடையவனும், மலைமகளாகிய பார்வதியை
இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு
கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ்பெற்ற யானையைக் கொன்று அதன்
தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத்
தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய
உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய
நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.
பாடல்
எண் : 2
பறையும்பழி
பாவம்,படு துயரம் பலதீரும்,
பிறையும்புனல்
அரவும்படு சடைஎம்பெரு மான்ஊர்
அறையும்புனல்
வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை
மடவார்பயில் நெய்த்தானம் எனீரே.
பொழிப்புரை :காவிரி வடகரை மேல்
உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என
வினை முடிபு காண்க. ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில்
விளங்குவதும், பிறை கங்கை அரவம்
ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும்
நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம்
என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்;
பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.
பாடல்
எண் : 3
பேய்ஆயின
பாடப்பெரு நடம்ஆடிய பெருமான்,
வேய்ஆயின
தோளிக்குஒரு பாகம்மிக உடையான்
தாய்ஆகிய
உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேய்ஆடிய
பெருமான்இடம் நெய்த்தானம் எனீரே.
பொழிப்புரை :ஊழிக்காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய
உமையம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை
நிலைபேறு செய்தருளும் தாய்போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும்
ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.
பாடல்
எண் : 4
சுடுநீறுஅணி
அண்ணல்,சுடர் சூலம்அனல்
ஏந்தி
நடுநள்இருள்
நடம்ஆடிய நம்பன்உறை இடமாம்,
கடுவாள்இள
அரவுஆடு,உமிழ் கடல்நஞ்சம்
அதுஉண்டான்,
நெடுவாளைகள்
குதிகொள்உயர் நெய்த்தானம் எனீரே.
பொழிப்புரை :சுடப்பட்ட திருநீற்றை
அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள்
செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய
பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும்
இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற
ஊரின் பெயரைச் சொல்வீராக.
பாடல்
எண் : 5
நுகர்ஆரமொடு
ஏலம்மணி செம்பொன்ன்நுரை உந்திப்
பகராவரு
புனல்காவிரி பரவிப்பணிந்து ஏத்தும்
நிகரான்மணல்
இடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரான்அடி
ஏத்தந்நமை நடலைஅடை யாவே.
பொழிப்புரை :நுகரத்தக்க பொருளாகிய
சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை
பகர்வதுபோல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற
அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும்
சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.
பாடல்
எண் : 6
விடையார்
கொடி உடையவ்அணல் வீந்தார்வெளை எலும்பும்
உடையார்,நறு மாலைசடை
உடையார்அவர் மேய
புடையேபுனல்
பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவர்
என்றும்அமர் உலகம்அடை யாரே.
பொழிப்புரை :இடபக் கொடியை உடைய
அண்ணலும், மணம் கமழும்
மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும்
வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய
நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார்.
பாடல்
எண் : 7
நிழலார்வயல்
கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்து
அழல்ஆனவன்
அனல்அங்கையில் ஏந்தி, அழ காய
கழலான்அடி
நாளும்கழ லாதேவிடல் இன்றித்
தொழலார்அவர்
நாளும்துயர் இன்றித்தொழு வாரே.
பொழிப்புரை :பயிர் செழித்து
வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன்
கையில் ஏந்தியவனும் அழகிய வீரக்கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை
நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி
மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர்.
பாடல்
எண் : 8
அறைஆர்கடல்
இலங்கைக்குஇறை அணிசேர்கயி லாயம்
இறைஆரமுன்
எடுத்தான்இரு பதுதோள்இற உன்றி,
நிறைஆர்புனல்
நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறைஆர்கதிர்
வாள்ஈந்தவர் கழல்ஏத்துதல் கதியே.
பொழிப்புரை :அழகிய கயிலாயமலையைத்
தன் இருபது முன்கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஒசை கெழுமிய கடல் சூழ்ந்த
இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின்
அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு
முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான்
திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க
கதியாம்.
பாடல்
எண் : 9
கோலம்முடி
நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்அறிவு
அரிதுஆய்ஒளி திகழ்வுஆயநெய்த் தானம்
காலம்பெற
மலர்நீர்அவை தூவித்தொழுது ஏத்தும்
ஞாலம்புகழ்
அடியார்உடல் உறுநோய்நலி யாவே.
பொழிப்புரை :அழகிய முடியை உடைய
திருமாலும், கொய்யத்தக்க
தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில்
ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர்
சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா.
பாடல்
எண் : 10
மத்தம்மலி
சித்தத்து இறை மதிஇல்லவர் சமணர்
புத்தர்அவர்
சொன்னம் மொழி பொருளா நினையேன்மின்,
நித்தம்
பயில் நிமலன்உறை நெய்த்தானம் அதுஏத்தும்
சித்தம்
உடை அடியார்உடல் செறுநோய்அடை யாவே.
பொழிப்புரை :சித்தத்தில்
செருக்குடையவரும், சிறிதும்
மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும்,
புத்தர்களும்
கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான் உறையும்
நெய்த்தானத்தை வணங்கிப்போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும்
நோய்கள் அடையா.
பாடல்
எண் : 11
தலமல்கிய
புனல்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய
புகழாம்மிகு நெய்த்தானனை,
நிகரில்
பலமல்கிய
பாடல்இவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய
செல்வன்அடி சேர்வர்சிவ கதியே.
பொழிப்புரை :தலங்களில் சிறந்த
புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால்
மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத்தரும்
பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவ வல்லவர் புண்ணிய வாய்ப்புடைய சிலவே
நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 386
நீடிய
அப்பதி நின்று, நெய்த்தான மேமுத லாக,
மாடுஉயர்
தானம் பணிந்து, மழபாடி யாரை வணங்கிப்
பாடிய
செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய
மாலுக்கு அரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
பொழிப்புரை : நிலைபெற்ற அப்பதியாய
திருவையாற்றில் இருந்தும், திருநெய்த்தானம்
முதலாக அருகில் உள்ள பதிகளை எல்லாம் வணங்கித், திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிச்
செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் பாடித் திருப்பணிகளையும் செய்து போற்றி, பின்பு தேடிய மாலுக்கும் அரியவரான
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.
குறிப்புரை : திருநெய்த்தானத்தில்
அருளிய பதிகங்கள்:
1. `காலனை` (தி.4 ப.37) - திருநேரிசை.
2. `பாரிடம்` (தி.4 ப.89) - திரு விருத்தம்.
3. `கொல்லியான்` (தி.5 ப.34) - திருக்குறுந்தொகை.
4. `வகையெலாம்` (தி.6 ப.41) - திருத்தாண்டகம்.
5. `மெய்த்தானத்து` (தி.6 ப.42) - திருத்தாண்டகம்.
நெய்த்தானமே
முதலாக மாடுஉயர்தானம் என்பதால் கொள்ளப்படும் திருப்பதிகள், திருப்பெரும்புலியூர் முதலாயினவாகலாம்
என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). எனினும் திருப்பதிகங்கள் கிடைத்தில.
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
4. 037 திருநெய்த்தானம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
காலனை
வீழச் செற்ற
கழல்அடி இரண்டும்
வந்து,என்
மேலஆய்
இருக்கப் பெற்றேன்,
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த்
தானம் என்னும்
குளிர்பொழில் கோயில்
மேய
நீலம்வைத்து
அனைய கண்ட ,
நினைக்குமா
நினைக்கின் றேனே.
பொழிப்புரை :கூற்றுவன் கீழே
விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப்
பெற்றேன் . ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத்
திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற
நீலகண்டனே ! தற்போதம் அற்று நின்போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத்
தியானிக்கின்றேன் .
பாடல்
எண் : 2
காமனை
அன்றுகண் ணால்
கனல்எரி ஆக நோக்கித்
தூமமும்
தீபங் காட்டித்
தொழும்அவர்க்கு
அருள்கள் செய்து
சேமநெய்த்
தானம் என்னும்
செறிபொழிற் கோயில்
மேய
வாமனை
நினைந்த நெஞ்சம்
வாழ்வுஉற நினைந்த
வாறே.
பொழிப்புரை : மன்மதனை ஒரு
காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து , நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும்
அடியவர்களுக்கு அருள்கள்செய்து ,
எல்லா
உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும்
இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம்
நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது .
பாடல்
எண் : 3
பிறைதரு
சடையின் மேலே
பெய்புனற் கங்கை
தன்னை
உறைதர
வைத்த எங்கள்
உத்தமன் ஊழி ஆய
நிறைதரு
பொழில்கள் சூழ
நின்றநெய்த் தானம்
என்று
குறைதரும்
அடிய வர்க்குக்
குழகனைக் கூடல் ஆமே.
பொழிப்புரை : பிறைதங்கிய
சடையின்மேலே கங்கை தங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய் , பல ஊழிகளின் வடிவினனாய் , பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய
அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டிக் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு
இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான் .
பாடல்
எண் : 4
வடிதரு
மழுஒன்று ஏந்தி
வார்சடை மதியம்
வைத்துப்
பொடிதரு
மேனி மேலே
புரிதரு நூலர் போலும்
நெடிதரு
பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மேவி
அடிதரு
கழல்கள் ஆர்ப்ப
ஆடும்எம் அண்ண லாரே.
பொழிப்புரை : சிள்வீடு என்ற
வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து
திருவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர்
காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி , நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு
அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார் .
பாடல்
எண் : 5
காடுஇடம்
ஆக நின்று
கனல்எரி கையில்
ஏந்திப்
பாடிய
பூதம் சூழப்
பண்ணுடன் பலவும்
சொல்லி
ஆடிய
கழலர், சீர்ஆர்
அந்தண் நெய்த்
தானம்என்றும்
கூடிய
குழக னாரைக்
கூடுமாறு அறிகி லேனே.
பொழிப்புரை : கையில் ஒளிவீசும்
நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப்
பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய
குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும்
திறத்தை அறியாது இருக்கின்றேனே !
பாடல்
எண் : 6
வானவர்
வணங்கி ஏத்தி
வைகலும் மலர்கள்
தூவத்
தானவர்க்கு
அருள்கள் செய்யும்
சங்கரன் செங்கண்
ஏற்றன்
தேன்அமர்
பொழில்கள் சூழத்
திகழும்நெய்த் தானம்
மேய
கூன்இள
மதியி னானைக்
கூடுமாறு அறிகி லேனே.
பொழிப்புரை : தேவர்கள் நாடோறும்
வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க , அவர்களுக்கு
வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை
உடையவனாய் , வண்டுகள் விரும்பித்
தங்குகின்ற சோலைகள் நாற் புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற
, வளைந்த பிறை
சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!
பாடல்
எண் : 7
கால்அதிர்
கழல்கள் ஆர்ப்பக்
கனல்எரி கையில் வீசி
ஞாலமுங்
குழிய நின்று
நட்டம் அதுஆடு கின்ற
மேலவர்
முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மால்ஒரு
பாகம் ஆக
மகிழ்ந்தநெய்த் தான
னாரே.
பொழிப்புரை : திருமாலைத் தம்
திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற
கழல்கள் ஒலியெழுப்ப , ஒளிவீசுகின்ற
தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும் , விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத்
திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம் பட்டவராவார்.
பாடல்
எண் : 8
பந்தித்த
சடையின் மேலே
பாய்புனல் அதனை
வைத்து
அந்திப்போது
அனலும் ஆடி
அடிகள் ஐயாறு
புக்கார்,
வந்திப்பார்
வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயின்
உள்ளார்,
சிந்திப்பார்
சிந்தை உள்ளார்,
திருந்துநெய்த் தான
னாரே.
பொழிப்புரை : முடிக்கப்பட்ட
சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார்
திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று
வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று , தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து , சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி
விட்டார் .
பாடல்
எண் : 9
சோதிஆய்ச்
சுடரும் ஆனார்,
சுண்ணவெண் சாந்து
பூசி
ஓதிவாய்
உலகம் ஏத்த
உகந்துதாம் அருள்கள்
செய்வார்,
ஆதியாய்
அந்தம் ஆனார்,
யாவரும் இறைஞ்சி ஏத்த
நீதியாய்
நியமம் ஆகி
நின்றநெய்த் தான
னாரே.
பொழிப்புரை : ஆதியும் அந்தமும்
ஆகியவராய் , எல்லோரும் விரும்பித்
துதிக்க , நீதியாகவும் தவம்
முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும் ,
நிலைபெற்றிருக்கும்
திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும் , அவ்வொளியை
வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய் , திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி
, நன்மக்கள் தம்மைத்
துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார் .
பாடல்
எண் : 10
இலைஉடைப்
படைகை ஏந்தும்
இலங்கையர் மன்னன்
தன்னைத்
தலையுடன்
அடர்த்து, மீண்டே
தான்அவற்கு அருள்கள்
செய்து,
சிலையுடன்
கணையைச் சேர்த்துத்
திரிபுரம் எரியச்
செற்ற
நிலைஉடை
யடிகள் போலும்
நின்றநெய்த் தான
னாரே.
பொழிப்புரை : இலைவடிவமாக அமைந்த
வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின்
மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து , வில்லிலே அம்பினை இணைத்து
மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட , என்றும்
அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை
உகந்திருப்பவராவார் .
திருச்சிற்றம்பலம்
4. 089 திருநெய்த்தானம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பாரிடம்
சாடிய பல்உயிர், வான்அம
ரர்க்குஅருளிக்
கார்அடைந்
தகடல் வாயுமிழ் நஞ்சுஅமு தாகஉண்டான்,
ஊர்அடைந்து
இவ்வுல கில்பலி கொள்வது நாம்அறியோம்
நீர்அடைந்
தகரை நின்றநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : காவிரியாற்றங்கரையில்
அமைந்த நெய்த்தானத்தை உகந்தருளியிருக்கும் பெருமானே! பூமியில் ஆலகால விடத்தால்
தாக்கப்பட்ட பல உயிர்களுக்கும் தேவருலகிலுள்ள தேவர்களுக்கும் அருள் செய்து, கரிய கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக
உண்டருளிய நீ, பல ஊர்களையும்
அடைந்து இவ்வுலகில் பிச்சை உணவை ஏற்பதை நாங்கள் அறியோம்.
பாடல்
எண் : 2
தேய்ந்துஇலங்
குஞ்சிறு வெண்மதி யாய்,நின் திருச்சடைமேல்
பாய்ந்த
கங்கைப் புனல்பன் முகம்ஆகிப் பரந்துஒலிப்ப,
ஆய்ந்துஇலங்
கும்மழு வேல்உடை யாய்அடி யேற்குஉரைநீ
ஏந்துஇள
மங்கையும் நீயும்நெய்த் தானத்து இருந்ததுவே.
பொழிப்புரை : தேய்ந்து விளங்கும்
பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர்
பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும்,
ஆராய்ந்து
விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும்
நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
பாடல்
எண் : 3
கொன்றுஅடைந்து
ஆடிக் குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில்மேல்
சென்றுஅடைந்து
ஆடிப் பொருததும் தேசம்எல் லாம்அறியும்
குன்று அடைந்து ஆடும் குளிர்பொழில் காவிரி யின்கரைமேல்
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : குடகுமலையிலே தோன்றி
எல்லோரும் அடைந்து நீராடுமாறு பெருகியோடும், குளிர்ந்த சோலைகளை இரு மருங்கிலும்
கொண்ட, காவிரியின் கரைமேல்
உன்னை வந்து அடைந்தவர்களுடைய தீ வினைகளைப் போக்கும் நெய்த்தானப் பெருமானே! நீ
சென்று சேர்ந்து போரிட்டுக் கொன்று அழிக்கும் கூற்றுவனாய்ப் பகைவர் மதில்களை
அடைந்து செயற்பட்டுப் போரிட்டு அவற்றை அழித்த செயலை உலகமெல்லாம் நன்றாக
அறிந்துள்ளது.
பாடல்
எண் : 4
கொட்டு
முழவுஅர வத்தொடு கோலம் பலஅணிந்து
நட்டம்
பலபயின்று ஆடுவர், நாகம்
அரைக்குஅசைத்துச்
சிட்டர்
திரிபுரம் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்டம்
உமையொடு நின்றநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : ஒலிக்கின்ற முழவின்
ஓசையோடு பல வேடங்களைப் புனைந்து பல கூத்துக்களை அடிக்கடி ஆடுபவரும், பாம்பினை இடையில் இறுகக்கட்டியவரும், சிட்டர்க்காக மும்மதில்களும் தீக்கு
இரையாகுமாறு அழித்த வில்லை உடையவரும், ஆகிய
சிவ பெருமான் நெய்த்தானத்தில் தமக்கு விருப்பமான பார்வதியோடு விரும்பி
இருப்பவராவார்.
பாடல்
எண் : 5
கொய்ம்மலர்க்
கொன்றை துழாய்வன்னி மத்தமும் கூவிளமும்
மெய்ம்மலர்
வேய்ந்த விரிசடைக் கற்றை விண்ணோர் பெருமான்
மைம்மலர்
நீல நிறம்,கரும் கண்ணிஓர் பால்மகிழ்ந்தான்
நின்மலன்
ஆடல் நிலயநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : கொய்யப்பட்ட கொன்றை
மலர், திருத்துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை
அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க்
கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த
நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.
பாடல்
எண் : 6
பூந்தார்
நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்குஅணிந்து
கூர்ந்துஆர்
விடையினை ஏறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார்
புறஇசை பாடவும் ஆடவும் கேட்டுஅருளிச்
சேர்ந்தார்
உமையவ ளோடுநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : நெய்த்தானத்தில்
இருக்கும் சிவபெருமான் பூக்களை வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையை வளைத்துச்
சடைக்கண் அணிந்து, விரைவு மிக்குப்
பொருந்திய காளையினை ஏறி ஊர்ந்து பூதப்படைகள் பலவற்றின் நடுவே செல்பவராய்ப் புறத்தே
அடியார்கள் பாடும் பாடல்களைக் கேட்டு ஆடல்களைக் கண்டு பார்வதி யோடும் இணைந்து
உறைகின்றார்.
பாடல்
எண் : 7
பற்றின
பாம்பன், படுத்த புலிஉரித்
தோல்உடையன்,
முற்றின
மூன்று மதில்களை மூட்டி எரித்துஅறுத்தான்,
சுற்றிய
பூதப் படையினன், சூலம் மழுஒருமான்
செற்று, நம் தீவினை
தீர்க்கும்நெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : பாம்பினைப்
பற்றியவனாய், புலித்தோலை உடையாக
உடுத்தவனாய், எல்லா வலிமைகளும்
நிறைந்த மூன்று மதில்களையும் தீ மூட்டி அழித்தவனாய்ப் பூதப்படையால்
சூழப்பட்டவனாய்ச் சூலம், மழு, மான் எனும் இவற்றை ஏந்தியவனாய் நம்
தீவினைகளை அழித்து ஒழிப்பவனாய்ச் சிவபெருமான் நெய்த்தான நகரில் உறைகின்றான்.
பாடல்
எண் : 8
விரித்த
சடையினன் விண்ணவர் கோன்விடம் உண்டகண்டன்
உரித்த
கரிஉரி மூடி, ஒன் னார்மதில் மூன்று
உடனே
எரித்த
சிலையினன், ஈடுஅழி யாதுஎன்னை
ஆண்டுகொண்ட
தரித்த
உமையவ ளோடுநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : விரித்த சடையினனாய், தேவர்கள் தலைவனாய், விடத்தை உண்டு அடக்கிய கழுத்தினனாய், தான் உரித்த யானைத் தோலைப் போர்த்தவனாய், பகைவரின் மதில்கள் மூன்றனையும் எரித்த
வில்லினனாய், தன் பெருமைக்குக்
குறைவு வாராத வகையில் அடியேனை அடிமையாகக் கொண்டவனாய் உள்ளவன், தன் உடம்பில் பாதியாகக் கொண்ட
பார்வதியோடு நெய்த்தானத்தில் உறைகின்ற பெருமானாவான்.
பாடல்
எண் : 9
தூங்கான், துளங்கான், துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா
மதியமும் வாளர வும்கங்கை தான்புனைந்தான்,
தேங்கார்
திரிபுரம் தீஎழ எய்து, தியக்குஅறுத்து
நீங்கான்
உமையவ ளோடுநெய்த் தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : தாமதம் செய்யாமல்
விரைவு உடையவனாய், திருத்துழாயும்
கொன்றையும் பொருந்திய சிவந்த சடையின்மீது கைக்கொண்ட பாம்பு பிறை எனும் இவற்றைக்
கங்கையோடு அணிந்தவனாய், பகைவருடைய
முப்புரங்களையும் தீக்கு இரையாகுமாறு அம்பு செலுத்தி அசுரர்களால் மற்றவருக்கு
ஏற்பட்ட சோர் வினைப் போக்கி என்றும் நீங்காதிருக்கும் பெருமான் பார்வதியோடு
நெய்த்தானத்திருந்தவனே யாவன்.
பாடல்
எண் : 10
ஊட்டிநின்
றான்பொரு வானில் அம்மும்மதில் தீஅம்பினால்
மாட்டிநின்
றான்அன்றி னார்வெந்து வீழவும், வானவர்க்குக்
காட்டிநின்
றான்,கத மாக்கங்கை பாயவொர்
வார்சடையை
நீட்டிநின்
றான், திரு நின்றநெய்த்
தானத்து இருந்தவனே.
பொழிப்புரை : செல்வம் நிலைபெற்ற
நெய்த்தானப் பெருமான் வானில் நிலவிப் போரிட்ட மும்மதில்களையும் தீயாகிய அம்பினால்
எரித்துப் பகைவர்கள் வெந்து போகும்படி தீயினால் அழித்து அக் காட்சியைத் தேவர்கள்
காணச் செய்து விரைந்து வானினின்றும் இறங்கிய சினத்தை உடைய பெரிய கங்கை பாய்வதற்கு
நீண்ட சடைக் கற்றைகளுள் ஒன்றனைக் காட்டி நின்ற பெருமான் திருநெய்த்தானத்
திருந்தவனே யாவான்.
திருச்சிற்றம்பலம்
5. 034 திருநெய்த்தானம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கொல்லி
யான், குளிர் தூங்குகுற்
றாலத்தான்,
புல்லி
யார்புரம் மூன்றுஎரி செய்தவன்,
நெல்லி
யான்நிலை யானநெய்த் தானனைச்
சொல்லி
மெய்தொழு வார்சுடர் வாணரே.
பொழிப்புரை :கொல்லிமலையில்
வீற்றிருப்பவனும் , குளிர்ச்சி செறியும்
குற்றாலத்தில் வீற்றிருப்பவனும் ,
பகைவர்
புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும் , திருநெல்லிக்காவில்
உள்ளவனும் , நிலைபெற்றிருக்கும்
திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு
கூடி வாழும் உயர்நிலை பெறுவர் .
பாடல்
எண் : 2
இரவ
னை, இடு வெண்தலை ஏந்தியை,
பரவ
னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ
னை, நிலை யானநெய்த்
தானனைக்
குரவ
னைத்தொழு வார்கொடி வாணரே.
பொழிப்புரை : இரத்தலை உடையவனும் , வெண்தலை ஏந்தியவனும் , எல்லோராலும் பரவப்படுபவனும் , படையுடையார் முப்புரங்களையும் எரியால்
நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலை
பெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு
வாழ்வோராவர் .
பாடல்
எண் : 3
ஆன்இடை
ஐந்தும் ஆடுவர், ஆர்இருள்
கான்இடை
நடம் ஆடுவர் காண்மினோ,
தேன்இடை
மலர் பாயும் நெய்த் தானனை
வான்
உடைத்தொழு வார்வலி வாணரே.
பொழிப்புரை : பஞ்சகவ்வியங்களை
விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும் , நள்ளிருளில்
இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர் ;
காண்பீராக
! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு
வாழ்பவராவர் .
பாடல்
எண் : 4
விண்ட
வர்புர மூன்றும்வெண் ணீறுஎழக்
கண்ட
வன்,கடிது ஆகிய நஞ்சினை
உண்ட
வன், ஒளி யானநெய்த்
தானனைத்
தொண்ட
ராய்த்தொழு வார்சுடர் வாணரே.
பொழிப்புரை : பகைவர் புரமூன்றையும்
வெள்ளிய சாம்பலாகி யெழுமாறு கண்டு எரித்தவனும் , கடிதாகிய ஆலகாலத்தை உண்டவனும் ஆகிய
ஒளியான திருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர் .
பாடல்
எண் : 5
முன்கை
நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி
யாது சமுத்திர நஞ்சுஉண்டான்,
நங்கை
யோடு நவின்றநெய்த் தானனைத்
தம்கை
யால்தொழு வார்தலை வாணரே.
பொழிப்புரை : தம் முன்கைகள்
நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல்
நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும் ,
உமாதேவியோடு
விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார்
தலைமைத் தன்மையோடு கூடி வாழ்பவராவர் .
பாடல்
எண் : 6
சுட்ட
நீறுமெய் பூசி, சுடலையுள்
நட்டம்
ஆடுவர் நள்இருள் பேயொடே,
சிட்டர்
வானவர் தேரும்நெய்த் தானனை
இட்ட
மாய்த்தொழு வார்இன்ப வாணரே.
பொழிப்புரை : உலகெல்லாவற்றையும்
சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி , நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில்
நடம் ஆடுபவரும் , உயர்ந்த முனிவர்களும்
தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத்
தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர் .
பாடல்
எண் : 7
கொள்ளித்
தீஎரி வீசி, கொடியதுஓர்
கள்ளிக்
காட்டிடை ஆடுவர் காண்மினோ,
தெள்ளித்
தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத்
தால்தொழு வார்உம்பர் வாணரே.
பொழிப்புரை : தீக்கொள்ளியினின்று
எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக ; தெளிவு அடைந்து தேறிப் பின்னும்
தெளிந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம்
பொருந்தி வாழ்பவராவர் .
பாடல்
எண் : 8
உச்சி
மேல்விளங் கும்இள வெண்பிறை
பற்றி, ஆடுஅர வோடும்
சடைப்பெய்தான்,
நெற்றி
ஆர்அழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி
மெய்தொழு வார்சுடர் வாணரே.
பொழிப்புரை : சென்னியில்
உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண்
வைத்தவனும் , நெற்றிக்கண்ணனுமாகிய
திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர் .
பாடல்
எண் : 9
மாலொ
டும்மறை ஓதிய நான்முகன்
காலொ
டும்முடி காண்பரிது ஆயினான்,
சேலொ
டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ
டும்தொழு வார்வினை வாடுமே.
பொழிப்புரை : திருமாலோடும்
வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும் .
சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய
பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும் .
பாடல்
எண் : 10
வலிந்த
தோள்வலி வாள்அரக் கன்தனை
நெருங்க
நீள்வரை ஊன்றுநெய்த் தானனார்
புரிந்து
கைந்நரம் போடுஇசை பாடலும்
பரிந்த
னைப்பணி வார்வினை பாறுமே.
பொழிப்புரை : வலிமை பெற்ற
தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய
திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு
விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும் .
திருச்சிற்றம்பலம்
6. 041 திருநெய்த்தானம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வகைஎலாம்
உடையாயும் நீயே என்றும்,
வான்கயிலை மேவினாய்
நீயே என்றும்,
மிகைஎலாம்
மிக்காயும் நீயே என்றும்,
வெண்காடு மேவினாய்
நீயே என்றும்,
பகைஎலாம்
தீர்த்துஆண்டாய் நீயே என்றும்,
பாசூர் அமர்ந்தாயும்
நீயே என்றும்,
திகைஎலாம்
தொழச் செல்வாய் நீயே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :திருநெய்த்தானத்தில்
உகந்தருளி உறையும் பெருமானே ! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ, உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய் .
உயர்வற உயர்நலம் யாவும் உடையாய் ,
வெண்காடு
, பாசூர் இவற்றை
உறைவிடமாக விரும்புகிறாய் . பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய் .
எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன் பண்பு
நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம் .
பாடல்
எண் : 2
ஆர்த்த
எனக்குஅன்பன் நீயே என்றும்,
ஆதிக் கயிலாயன் நீயே
என்றும்,
கூர்த்த
நடம்ஆடி நீயே என்றும்,
கோடிகா மேய குழகா
என்றும்,
பார்த்தற்கு
அருள் செய்தாய் நீயே என்றும்,
பழையனூர் மேவிய பண்பா
என்றும்,
தீர்த்தன்
சிவலோகன் நீயே என்றும்
நின்ற,நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய் , பழைய கயிலாயம் , கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய் .
நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய் . அருச்சுனனுக்கு அருள்
செய்தாய் . தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள் நின்னை
துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 3
அல்ஆய்ப்
பகல்ஆனாய் நீயே என்றும்,
ஆதிக் கயிலாயன் நீயே
என்றும்,
கல்ஆல்
அமர்ந்தாயும் நீயே என்றும்
காளத்திக் கற்பகமும்
நீயே என்றும்,
சொல்ஆய்ப்
பொருள்ஆனாய் நீயே என்றும்,
சோற்றுத் துறைஉறைவாய்
நீயே என்றும்,
செல்வுஆய்த்
திருஆனாய் நீயே என்றும்
நின்ற,நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய் . பழைய கயிலாயம் , காளத்தி , சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய் .
கல்லாலின் கீழ் அமர்ந்தவனும் , சொல்லும் பொருளுமாய்
இருப்பவனும் , நீயே . உலகில் எல்லா
நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள்
நின்னைத் துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 4
மின்நேர்
இடைபங்கன் நீயே என்றும்,
வெண்கயிலை மேவினாய்
நீயே என்றும்,
பொன்நேர்
சடைமுடியாய் நீயே என்றும்,
பூத கணநாதன் நீயே
என்றும்,
என்நா
இரதத்தாய் நீயே என்றும்,
ஏகம்பத்து என்ஈசன்
நீயே என்றும்,
தென்னூர்ப்
பதிஉளாய் நீயே என்றும்,
நின்ற,நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ வெள்ளிய கயிலை மலை, ஏகம்பம் தென்னூர்
இவற்றில் விரும்பி உறைகின்றாய் . மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய் , பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை
முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய்
என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 5
முந்தி
இருந்தாயும் நீயே என்றும்,
முன்கயிலை மேவினாய்
நீயே என்றும்,
நந்திக்கு
அருள்செய்தாய் நீயே என்றும்,
நடம்ஆடி நள்ளாறன்
நீயே என்றும்,
பந்திப்பு
அரியாயும் நீயே என்றும்,
பைஞ்ஞீலீ மேவினாய்
நீயே என்றும்,
சிந்திப்பு
அரியாயும் நீயே என்றும்
நின்ற,நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
கயிலை , நள்ளாறு பைஞ்ஞீலி
என்ற தலங்களைக் கூத்தனாய நீ விரும்பி உறைகின்றாய் . எல்லாப் பொருளுக்கும்
முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய் , பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச்
சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்
.
பாடல்
எண் : 6
தக்கார்
அடியார்க்கு நீயே என்றும்,
தலைஆர் கயிலாயன் நீயே
என்றும்,
அக்குஆரம்
பூண்டாயும் நீயே என்றும்,
ஆக்கூரில் தான்தோன்றி
நீயே என்றும்,
புக்குஆய
ஏழ்உலகும் நீயே என்றும்,
புள்ளிருக்கு வேளூராய்
நீயே என்றும்,
தெக்குஆரும்
மாகோணத் தானே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர் , தெற்கே உள்ள மாகோணம் இவற்றில்
உறைபவனாகவும் உள்ளாய் . தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை
அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள்
நின்னைத் துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 7
புகழும்
பெருமையாய் நீயே என்றும்,
பூங்கயிலை மேவினாய்
நீயே என்றும்,
இகழும்
தலைஏந்தி நீயே என்றும்,
இராமேச்
சுரத்துஇன்பன் நீயே என்றும்,
அகழும்
மதில்உடையாய் நீயே என்றும்,
ஆலவாய் மேவினாய் நீயே
என்றும்,
திகழும்
மதிசூடி நீயே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
அழகிய கயிலை , இராமேச்சுரம் ஆலவாய்
இவற்றில் உகந்து உறைபவனே ! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய் , யாவரும் இகழும் மண்டை யோட்டை உண்கலமாக
ஏந்தியையாய் , ஆலவாயில் அகழும்
மதிலும் உடையையாய் , விளங்கும் பிறை
சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 8
வானவர்க்கு
மூத்துஇளையாய் நீயே என்றும்,
வானக் கயிலாயன் நீயே
என்றும்,
கான
நடம்ஆடி நீயே என்றும்,
கடவூரில் வீரட்டன்
நீயே என்றும்,
ஊன்ஆர்
முடிஅறுத்தாய் நீயே என்றும்,
ஒற்றியூர் ஆரூராய்
நீயே என்றும்,
தேன்ஆய்
அமுதுஆனாய் நீயே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ வானளாவிய கயிலாயனாய்க் கடவூர் வீரட்டனாய் , ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த்
தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய் . தேவர்களுக்கும் முற்பட்டவனாய் , சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க
யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத்
துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 9
தந்தைதாய்
இல்லாதாய் நீயே என்றும்,
தலைஆர் கயிலாயன் நீயே
என்றும்,
எந்தாய்எம்
பிரான்ஆனாய் நீயே என்றும்,
ஏகம்பத்து என்ஈசன்
நீயே என்றும்,
முந்திய
முக்கணாய் நீயே என்றும்,
மூவலூர் மேவினாய்
நீயே என்றும்,
சிந்தையாய்த்
தேனூராய் நீயே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம் , ஏகம்பம் , மூவலூர் , தேனூர் என்ற திருத்தலங்களிலும்
உறைகின்றாய் . தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய் , யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய் , எங்களுக்குத் தாய் தந்தையாகவும்
தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .
பாடல்
எண் : 10
மறித்தான்
வலிசெற்றாய் நீயே என்றும்,
வான்கயிலை மேவினாய்
நீயே என்றும்,
வெறுத்தார்
பிறப்புஅறுப்பாய் நீயே என்றும்,
வீழி மிழலையாய் நீயே
என்றும்,
அறத்தாய்
அமுதுஈந்தாய் நீயே என்றும்,
யாவர்க்கும் தாங்கஒணா
நஞ்சம் உண்டு
பொறுத்தாய்
புலன்ஐந்தும் நீயே என்றும்
நின்ற, நெய்த் தானா, என் நெஞ்சு உளாயே.
பொழிப்புரை :நின்ற நெய்த்தானா !
நீ உயரிய கயிலை , வீழிமிழலை இவற்றில்
உறைபவன் . தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய
பிறவிப் பிணியைப் போக்கி , அறவடிவினனாய் , வானோர்க்கு அமுதம் வழங்கி , ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை
உண்டு , பொறிவாயில் ஐந்து
அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .
திருச்சிற்றம்பலம்
6. 042 திருநெய்த்தானம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மெய்த்தானத்து
அகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக்
குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத்து
இருந்துஇங்ஙன் உய்வான் எண்ணும்
இதனைஒழி, இயம்பக்கேள், ஏழை நெஞ்சே,
மைத்தான
நீள்நயனி பங்கன், வங்கம்
வருதிரைநீர்
நஞ்சுஉண்ட கண்டன் மேய
நெய்த்தான
நல்நகர்என்று ஏத்தி நின்று,
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :அறிவில்லாத நெஞ்சமே !
யான் கூற நீ கேட்பாயாக . உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில் , ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று , விரும்பிய இன்றியமையாத பொருள்களைத்
தந்து நிரப்பி , வினைகளுக்குத்
தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து , ஐம்புல
நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு . நீண்ட
கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை
உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத்
துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால்
பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம் .
பாடல்
எண் : 2
ஈண்டா
இரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம், விதிஉண்டு என்று
சொல்ல
வேண்டாவே, நெஞ்சமே, விளம்பக் கேள்நீ,
விண்ணவர்தம்
பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அருவரையால்
புரமூன் றெய்த
அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான்
உறைதுறைநெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சமே ! நான்
கூறுவதனைக் கேள் ! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல்
தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல்
வேண்டா . தேவர்கள் தலைவராய் , இவ்வுலகிலே என்னை
அடிமை கொண்டவராய் , மலையை வில்லாகக்
கொண்டு மும்மதில்களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம்
தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத்
தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப் பிணியிலிருந்து தப்பித்தல்
கூடும் .
பாடல்
எண் : 3
பரவிப்
பலபலவும் தேடி ஓடி,
பாழ்ஆம் குரம்பைஇடைக்
கிடந்து, வாளா
குரவிக்
குடிவாழ்க்கை வாழ எண்ணிக்
குலைகை தவிர், நெஞ்சே, கூறக் கேள்நீ,
இரவிக்
குலமுதலா வானோர் கூடி
எண்ணஇறந்த கோடி அமரர்
ஆயம்
நிரவிக்க
அரியவன் நெய்த்தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே ! நான்
கூறுவதைக் கேள் . உலகெங்கும் தேவை என்று கருதிப் பலபொருள்களையும் தேடித் திரிந்து
பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது , உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப
வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு . பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர்
இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை
முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால்
உய்யலாம் .
பாடல்
எண் : 4
அலைஆர்
வினைத்திறம்சேர் ஆக்கை உள்ளே
அகப்பட்டு, உள்ஆசையெனும் பாசம்
தன்னுள்
தலையாய்க்
கடையாகும் வாழ்வில் ஆழ்ந்து,
தளர்ந்து, மிக நெஞ்சமே, அஞ்ச வேண்டா,
இலைஆர்
புனக்கொன்றை எறிநீர்த் திங்கள்
இரும்சடைமேல்
வைத்துஉகந்தான், இமையோர் ஏத்தும்
நிலையான், உறைநிறைநெய்த் தானம்
என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சமே ! அலைகள் போல
ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு , ஆசை என்னும் கயிற்றால்
சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து , கீழான
இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து , நீ அஞ்சுதல் வேண்டா . இலைகளிடையே
தோன்றும் கொன்றைப் பூ , கங்கை , பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து
மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான்
உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .
பாடல்
எண் : 5
தினைத்தனைஓர்
பொறைஇலா உயிர்போம் கூட்டைப்
பொருள்என்று மிகஉன்னி, மதியால் இந்த
அனைத்துஉலகும்
ஆளலாம் என்று பேசும்
ஆங்காரம் தவிர்,நெஞ்சே, அமரர்க்கு ஆக
முனைத்துவரும்
மதில்மூன்றும் பொன்ற, அன்று
முடுகியவெம்
சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த
பெருங் கருணையன்,நெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே ! உரிய காலம்
முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை
மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு
அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு . தேவர்களுக்காகப் பகைத்து
வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை
வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான்
உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .
பாடல்
எண் : 6
மிறைபடும்இவ்
உடல்வாழ்வை மெய்என்று எண்ணி,
வினையிலே கிடந்து, அழுந்தி வியவேல், நெஞ்சே,
குறைவுஉடையார்
மனத்துஉளான் குமரன் தாதை,
கூத்துஆடும்
குணம்உடையான், கொலைவேல் கையான்,
அறைகழலும்
திருவடிமேல் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயர,அரு நட்டம் நின்ற
நிறைவுஉடையான்
இடமாம்நெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே ! துன்பமே
விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே
கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து
இருப்பவனாய், முருகனுக்குத்
தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக
உடையவனாய், கொல்லும் முத்தலை
வேல் ஏந்திய கையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு
ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம்
என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம் .
பாடல்
எண் : 7
பேசப்
பொருள்அலாப் பிறவி தன்னைப்
பெரிதுஎன்று,உன் சிறுமனத்தால்
வேண்டி ஈண்டு
வாசக்
குழல்மடவார் போகம் என்னும்
வலைப்பட்டு வீழாதே, வருக நெஞ்சே,
தூசுஅக்
கரிஉரித்தான், தூநீறு ஆடித்
துதைந்து,இலங்கு நூல்மார்பன், தொடர கில்லா
நீசர்க்கு
அரியவன்நெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே ! வருக.
பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன்
அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும்
வலையில் அகப்பட்டு அழியாமல் , யானைத்தோலை உரித்துப்
போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து , தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு
அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .
பாடல்
எண் : 8
அஞ்சப்
புலன்இவற்றால் ஆட்ட ஆட்டுஉண்டு
அருநோய்க்கு இடம்ஆய
உடலின் தன்மை
தஞ்சம்
எனக்கருதித் தாழேல் நெஞ்சே,
தாழக் கருதுதியே, தன்னைச் சேரா
வஞ்ச
மனத்தவர்கள் காண ஒண்ணா
மணிகண்டன், வானவர்தம்
பிரான்என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு
இனியவன்நெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே !
ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய
இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து
போகாதே . தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த்
தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம்
என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .
பாடல்
எண் : 9
பொருந்தாத
உடலகத்தில் புக்க ஆவி
போமாறு
அறிந்துஅறிந்தே, புலைவாழ்வு உன்னி
இருந்து,ஆங்கு இடர்ப்படநீ
வேண்டா நெஞ்சே,
இமையவர்தம்
பெருமான்அன்று உமையாள் அஞ்சக்
கருந்தாள
மதகரியை வெருவச் சீறும்
கண்ணுதல்கண்டு, அமராடிக் கருதார்
வேள்வி
நிரந்தரமா
இனிதுஉறைநெய்த் தானம் என்று
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :நெஞ்சே ! தகுதியற்ற
இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து
நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக்
கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா . தேவர்கள் தலைவனாய் , ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு , கரிய அடிகளை உடைய மதயானை அஞ்ச அதனை
வெகுண்டவனாய் , நெற்றிக் கண்ணனாய் , தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி
நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய் , நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த்தானம்
என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .
பாடல்
எண் : 10
உரித்துஅன்று
உனக்குஇவ் வுடலின் தன்மை
உண்மை உரைத்தேன், விரதம் எல்லாம்
தரிந்தும், தவம்முயன்றும் வாழா
நெஞ்சே,
தம்இடையில்
இல்லார்க்குஒன்று அல்லார்க்கு அன்னன்,
எரித்தான்
அனல்உடையான் எண்தோ ளானே
எம்பெருமான்
என்றுஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவி
னானை
நினையுமா
நினைந்தக்கால் உய்ய லாமே.
பொழிப்புரை :விரதங்களை எல்லாம்
மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே ! நிலையாமையை உடைய இவ்வுடல்
என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று . உண்மையை உனக்குக்
கூறிவிட்டேன் . தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத்
தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய்
எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை
நெரித்த , நெய்த்தானம் என்ற
திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment