திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்
4. 039 திருவையாறு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குண்டனாய்ச்
சமண ரோடே கூடிநான் கொண்ட
மாலைத்
துண்டனே, சுடர்கொள் சோதீ, தூநெறி ஆகி நின்ற
அண்டனே, அமரர் ஏறே, திருஐயாறு அமர்ந்த
தேனே,
தொண்டனேன்
தொழுதுஉன் பாதம் சொல்லி நான் திரிகின்
றேனே.
பொழிப்புரை : அறிவிலியாய் அடியேன்
சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே ! ஞானப் பிரகாசனே ! தூய வழியாக நின்ற
உலகத்தலைவனே ! தேவர்கள் தலைவனே ! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற
இனியவனே ! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு
நாட்டில் உலவுகின்றேன் .
பாடல்
எண் : 2
பீலிகை
இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று
எண்ணி,
வாலிய
தறிகள் போல மதிஇலார் பட்டது
என்னே,
வாலியார்
வணங்கி ஏத்தும் திருஐயாறு அமர்ந்த
தேனோடு
ஆலியா
எழுந்த நெஞ்சம், அழகிதா எழுந்த வாறே.
பொழிப்புரை : மயிற்பீலியைக்
கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி , மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக
உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள்
வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு
கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது .
பாடல்
எண் : 3
தட்டுஇடு
சமண ரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு
மனத்தி னீரே, உம்மையான் செய்வது
என்னே,
மொட்டுஇடு
கமலப் பொய்கைத் திருஐயாறு அமர்ந்த
தேனோடு
ஒட்டிடும்
உள்ளத் தீரே, உம்மை நான் உகந்திட்
டேனே.
பொழிப்புரை : உணவுக்குரிய
உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச்
செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே ! உனக்கு
நான் என்ன தண்டனை கொடுப்பேன் ? மொட்டோடு கூடிய
தாமரைகள் காணப்படும் , மானிடர் ஆக்காத
நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு
இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே ! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது
மெச்சுகின்றேன் .
பாடல்
எண் : 4
பாசிப்பல்
மாசு மெய்யர், பலம்இலாச் சமண ரோடு
நேசத்தால்
இருந்த நெஞ்சை நீக்குமாறு அறிய
மாட்டேன்,
தேசத்தார்
பரவி ஏத்தும் திருஐயாறு அமர்ந்த
தேனை
வாசத்தால்
வணங்க வல்லார் வல்வினை மாயும்
அன்றே.
பொழிப்புரை : பல்துலக்காததனால்
பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை
வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து
நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன் . உலகிலுள்ள
நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு
அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய
கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன் .
பாடல்
எண் : 5
கடுப்பொடி
அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று
எண்ணி,
வடுக்களோடு
இசைந்த நெஞ்சே, மதியிலீ, பட்டது என்னே,
மடுக்களில்
வாளை பாயும் திருஐயாறு அமர்ந்த
தேனை
அடுத்து நின்று, உன்னு நெஞ்சே! அருந்தவம் செய்த
வாறே.
பொழிப்புரை : கடுக்காய்ப் பொடியை
உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே
பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே ! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற
பயன்தான் யாது ? நீர்த்தேக்கங்களிலே
வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று
தியானிக்கும் மனமே ! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய் .
பாடல்
எண் : 6
துறவி என்று
அவம் அது ஓரேன், சொல்லிய செலவு செய்து
உறவினால்
அமண ரோடும் உணர்விலேன், உணர்வுஒன்று இன்றி,
நறவம்ஆர்
பொழில்கள் சூழ்ந்த திருஐயாறு அமர்ந்த
தேனை
மறவு இலா
நெஞ்சமே, நன் மதி உனக்கு அடைந்த
வாறே.
பொழிப்புரை : வீண் செயல் என்று
ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே
காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன் .
தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே !
உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே !
பாடல்
எண் : 7
பல்உரைச்
சமண ரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய
செலவு செய்தேன், சோர்வன் நான் நினைந்த
போது
மல்லிகை
மலரும் சோலைத் திருஐயாறு அமர்ந்த
தேனை
எல்லியும்
பகலும் எல்லாம் நினைந்த போது இனிய
வாறே.
பொழிப்புரை : வினவிய ஐயங்களுக்குப்
பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட
வழியில் வாழ்ந்து , அவ்வாறு வாழ்ந்த
வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன்
. மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை
இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே !
பாடல்
எண் : 8
மண்ணுளார்
விண்ணு ளாரும் வணங்குவார் பாவம்
போக.
எண்ணிலாச்
சமண ரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே,
தெள்நிலா
எறிக்கும் சென்னித் திருஐயாறு அமர்ந்த
தேனைக்
கண்ணினால்
காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த
வாறே.
பொழிப்புரை : அறிவில்லாத மனமே !
மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தெளிந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த்
திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக , நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு
இணைந்து காலத்தைப் போக்கினாயே . அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம்
விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று .
பாடல்
எண் : 9
குருந்தம்
அது ஒசித்த மாலும் குலமலர் மேவி னானும்,
திருந்துநல்
திருவடியும் திருமுடி காண
மாட்டார்,
அருந்தவ
முனிவர் ஏத்தும் திருஐயாறு அமர்ந்த
தேனைப்
பொருந்தி நின்று
உன்னு நெஞ்சே, பொய்வினை மாயும் அன்றே.
பொழிப்புரை : இடைக்குலச் சிறுமியர்
மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு
குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும் , மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய
பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக , மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும்
திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே ! அச்செயலால் நம்
பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தெளிவு .
பாடல்
எண் : 10
அறிவுஇலா
அரக்கன் ஓடி அருவரை எடுக்கல்
உற்று
முறுகினான், முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான்
சிறு விரலால், நெரிந்துபோய்
நிலத்தில் வீழ,
அறிவினால்
அருள்கள் செய்தான் திருஐயாறு அமர்ந்த
தேனே.
பொழிப்புரை : இறைவனுடைய ஆற்றலைப்
பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு
முழுமையாக முயன்ற செயலைக்கண்டு ,
உண்மையான
ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன்
கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன்
இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட , அவனுக்கு அப்பெருமான் அருள்களைச்
செய்தான் .
திருச்சிற்றம்பலம்
4. 040 திருவையாறு திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தான்அலாது
உலகம் இல்லை, சகம்அலாது அடிமை
இல்லை,
கான்அலாது
ஆடல் இல்லை, கருதுவார் தங்க
ளுக்கு
வான்அலாது
அருளும் இல்லை, வார்குழல் மங்கை
யோடும்
ஆன்அலாது
ஊர்வது இல்லை, ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : நம் தலைவராகிய
ஐயாறனார் தொடர்பின்றி உலகங்களின் நிலைபேறு இல்லை . உலகங்களிலுள்ள ஆன்மாக்களைத்
தவிர வேறு அடிமைகள் அவர்க்கு இல்லை . சுடுகாட்டினைத் தவிர வேறு கூத்தாடும் இடம்
இல்லை . தம்மை உண்மையால் தியானிப்பவர்க்கு வீடு பேற்றைத் தவிர வேறு சிறு
சிறப்புக்களை அவர் அருளுவதில்லை . நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடும் இவர்ந்து செல்வதற்குக்
காளையைத் தவிர வேறு வாகனமும் அவர்க்கு இல்லை .
பாடல்
எண் : 2
ஆல்அலால்
இருக்கை இல்லை, அருந்தவ முனிவர்க்கு
அன்று
நூல்அலால்
நொடிவது இல்லை, நுண்பொருள் ஆய்ந்து
கொண்டு
மாலும் நான்
முகனும் கூடி மலர்அடி வணங்க, வேலை
ஆல்அலால்
அமுதம் இல்லை, ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : ஐயன் ஐயாறனார்க்குக்
கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் உபதேச பீடமாக அமைவதில்லை . பெருந்தவத்தையுடைய
முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர
வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற
திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத்
தவிர அவருக்கு உணவு வேறு இல்லை .
பாடல்
எண் : 3
நரிபுரி
சுடலை தன்னில் நடம்அலால் நவிற்றல்
இல்லை,
சுரிபுரி
குழலி யோடும் துணைஅலால் இருக்கை
இல்லை,
தெரிபுரி
சிந்தை யார்க்குத் தெளிவுஅலால் அருளும்
இல்லை,
அரிபுரி
மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : திருமால் விரும்பிய
மலர்களைக் கொண்டு வழிபடும் ஐயன் ஐயாறனார் நரிகள் விரும்பி உலவும் சுடுகாட்டில்
நடமாடல் தவிர மற்றொன்றுஞ் செய்வதில்லை . சுருண்ட முறுக்குண்ட கூந்தலை உடைய
பார்வதியைத் தவிர வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டு வாழ்தல் இல்லை .
தன்னுண்மையை ஆராய்ந்து சிந்தித்தலையுடைய அடியார்களுக்கு உள்ளத் தெளிவினை
வழங்குவதைத் தவிர எம்பெருமான் அருளக் கூடியதும் வேறொன்றும் இல்லை .
பாடல்
எண் : 4
தொண்டுஅலால்
துணையும் இல்லை, தோல்அலாது உடையும்
இல்லை,
கண்டுஅலாது
அருளும் இல்லை, கலந்தபின் பிரிவது
இல்லை,
பண்டைநான்
மறைகள் காணாப் பரிசினன் என்றுஎன்று
எண்ணி
அண்டவா
னவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : பழைய நான்மறைகளாலும்
உள்ளவாறு உணர இயலாதவர் என்று தியானித்துத் தேவர்களும் துதிக்கும் ஐயன்
ஐயாறனார்க்குத் தொண்டர்களைத் தவிரத் துணையாவார் பிறர் இல்லை . தோல்களைத் தவிர வேறு
ஆடைகள் இல்லை . அடியார்களின் அநுபூதியிற் கண்டாலல்லாமல் அவர் அவர்களுக்கு
அருளுவதில்லை . அடியார்களோடு கூடிய பின்னர் அவர்களை அப்பெருமான் பிரிவதில்லை .
பாடல்
எண் : 5
எரிஅலால்
உருவம் இல்லை, ஏறுஅலால் ஏறல் இல்லை,
கரிஅலால்
போர்வை இல்லை, காண்தகு சோதி
யார்க்குப்
பிரிவுஇலா
அமரர் கூடிப் பெருந்தகைப்
பிரான்என்று ஏத்தும்
அரிஅலால்
தேவி இல்லை ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : ஐயன் ஐயாறனார்க்கு
நெருப்புருவம் தவிர வேற்றுருவமில்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர்
ஏறுவதில்லை . யானைத்தோலைத் தவிர வேறு போர்வை இல்லை . காணுவதற்கு ஏற்ற ஞானப்
பிரகாசம் உடைய அப்பெருமானுக்கு ,
பிரியாது
தேவர்கள் கூடி `மேம்பட்ட சிறப்பினை
உடைய பெருமான்` என்று துதிக்கும்
திருமாலைத் தவிர வேறு தேவி இல்லை .
பாடல்
எண் : 6
என்புஅலால்
கலனும் இல்லை, எருதுஅலால் ஊர்வது
இல்லை,
புன்புலால்
நாறு காட்டில் பொடிஅலால் சாந்தும்
இல்லை,
துன்புஇலாத்
தொண்டர் கூடித் தொழுதுஅழுது ஆடிப்
பாடும்
அன்புஅலாற்
பொருளும் இல்லை ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : ஐயன் ஐயாறனார்க்கு
எலும்புகளைத் தவிர வேறு அணிகலன்கள் இல்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர்
ஊர்வதில்லை . கீழான புலால் நாற்றம் வீசும் சுடுகாட்டுச் சாம்பலைத் தவிர வேற்றுப்
பொருள்களைப் பூசுவதில்லை . உலகத் துன்பங்களில் அழுந்துதல் இல்லாத அடியவர்கள் ஒன்று
கூடித் தொழுது , மனம் உருகிக் கண்ணீர்
வடித்து ஆடிப்பாடும் அன்பினைத் தவிர அவர் வேறு எதனையும் குறிப்பிடத்தக்க
பொருளாய்க் கருதுவதில்லை .
பாடல்
எண் : 7
கீள்அலால்
உடையும் இல்லை, கிளர்பொறி அரவம்
பைம்பூண்
தோள்அலால்
துணையும் இல்லை, தொத்துஅலர் கின்ற
வேனில்
வேள்அலால்
காயப் பட்ட வீரரும் இல்லை, மீளா
ஆள்அலால்
கைம்மாறு இல்லை, ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : அரை நாண் பட்டிகையோடு
கூடிய கோவணமாகிய கீள் உடையைத் தவிர ஐயன் ஐயாறனார்க்கு வேறு உடையும் இல்லை . ஒளி
வீசும் புள்ளிகளை உடைய பாம்புகளை அழகிய அணிகலன்களாக அணியும் தம் தோள்களைத் தவிர
வேறு துணையும் இல்லை . பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திற்கு அரசனாகிய
மன்மதனைத் தவிர அவரால் நெற்றிக்கண் பொறியால் எரிக்கப்பட்ட வீரன் வேறு ஒருவனும்
இல்லை . அப்பெருமானுக்கு அவரை விடுத்து என்றும் நீங்குதல் இல்லாத அடிமைத் தொழில்
செய்வதனைத் தவிரக் கைம்மாறாக அடியார்கள் செய்யத்தக்கது பிறிதொன்றுமில்லை .
பாடல்
எண் : 8
சகம்அலாது
அடிமை இல்லை, தான்அலால் துணையும்
இல்லை,
நகம்எலாம்
தேயக் கையால் நாள்மலர் தொழுது தூவி
முகம்எலாம்
கண்ணீர் மல்க முன்பணிந்து ஏத்தும்
தொண்டர்
அகம்அலால்
கோயில் இல்லை ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : ஐயன் ஐயாறனார்க்கு
உலக உயிர்களைத் தவிர அடிமையாவார் வேறு இல்லை . தமக்குத் தாமே ஒப்பாவார் அன்றி
ஒப்பாவார் வேறு இல்லை . நகங்களெல்லாம் தேயுமாறு கைகளால் புதுமலர்களைக் கொய்து
வணங்கி அவற்றை அவருக்கு அர்ப்பணித்து முகமெல்லாம் கண்ணீர் வழிந்துபரவ , அவர் திருமுன்னர் வணங்கித் துதிக்கும்
தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை .
பாடல்
எண் : 9
உமைஅலாது
உருவம் இல்லை, உலகுஅலாது உடையது
இல்லை,
நமைஎலாம்
உடையர் ஆவர், நன்மையே தீமை இல்லை,
கமைஎலாம்
உடையர் ஆகிக் கழலடி பரவும்
தொண்டர்க்கு
அமைவுஇலா
அருள்கொ டுப்பார், ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : ஐயன் ஐயாறனார்க்குப்
பார்வதியொடு இணைந்த உருவமன்றி வேற்று உருவம் இல்லை . இவ்வுலகங்களைத் தவிர அவருக்கு
வேறு உடைமைப் பொருள் இல்லை . அவர் அடியவராகிய நம்மை எல்லாம் தம் அடிமைகளாக உடையவர்
. உயிர்களுக்கு அவரால் நன்மையே அன்றித் தீமை சற்றும் இல்லை . பகைவரையும்
பொறுக்கும் பொறுமை உடையவராகித்தம் திருவடிகளை முன்நின்று துதிக்கும்
அடியவர்களுக்குக் குறைவில்லாத அருள்களை அவர் நல்குபவராவார் .
பாடல்
எண் : 10
மலைஅலால்
இருக்கை இல்லை, மதித்திடா அரக்கன்
தன்னைத்
தலைஅலால்
நெரித்தது இல்லை, தடவரைக் கீழ்
அடர்த்து,
நிலைஇலார்
புரங்கள் வேவ நெருப்பு அலால்
விரித்தது இல்லை,
அலையின்ஆர்
பொன்னி மன்னும் ஐயன் ஐயாற னார்க்கே.
பொழிப்புரை : அலைகளை உடைய காவிரி
நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமானுக்குக் கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான
இருப்பிடம் இல்லை . தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத்
தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர் .
நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர்
வேற்றுச் செயல் எதுவும் செய்யவில்லை . திருச்சிற்றம்பலம்
4. 098 திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அந்திவட்
டத்திங்கள் கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து,என்
புந்திவட்
டத்துஇடைப் புக்குநின் றானையும் பொய்என்பனோ?
சிந்திவட்
டச்சடைக் கற்றை அலம்பச்
சிறிதுஅலர்ந்த
நந்திவட்
டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
பொழிப்புரை : வட்டமாகச்
சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த
நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த , நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய் , மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும்
சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து
அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய
இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ ?
பாடல்
எண் : 2
பாடகக்
கால்,கழற் கால்,பரி திக்கதிர்
உக்கஅந்தி
நாடகக்
கால்,நங்கை முன்செங்கண்
ஏனத்தின் பின்நடந்த
காடகக்
கால்,கணம் கைதொழும் கால்,எம் கணாய்நின்றகால்
ஆடகக்
கால்,அரி மால்தேர வல்லன், ஐயாற்றனவே.
பொழிப்புரை : பாடகம் என்ற மகளிர்
கால் அணியை அணிந்த திருவடி , கழல் என்ற ஆடவர் காலணியை
அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள்
மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள் , பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய
பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள்
, எமக்குப்
பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள் , பொன்
போன்ற திருவடிகள் , அரியாகிய திருமால்
திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு
பேராற்ற லுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன .
திருச்சிற்றம்பலம்
4. 091 திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குறுவித்தவா குற்ற நோய்வினை காட்டி,
குறுவித்தநோய்
உறுவித்தவா, உற்ற நோய் வினை
தீர்ப்பான், உகந்து அருளி
அறிவித்தவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே,
செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை :என் முன்னைய
குற்றமாகிய வினைகள் இப்பிறப்பில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டி
என்னைக்குறுகச் செய்தன . அங்ஙனம் வினைப்பயனாக வந்த நோய்கள் என்னால் பொறுக்கும்
அளவினவாய் அல்லாதபடி மிகுவிக்கப்பட்டன . அந்நிலையில் யான் உற்ற நோயாகிய வினைப்
பயனைப் போக்க ஐயாறன் திருவுள்ளம்பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகள் செய்யுமாறு
அறிவித்துத் தன் பொன்போன்ற திருவடிக்கீழ் , பொருந்துமாறு தொண்டனாக செய்தச்
செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றி வேறு யாதாக இருத்தல் கூடும் ?
பாடல்
எண் : 2
கூர்வித்தவா குற்ற நோய் வினை காட்டியும், கூர்வித்த நோய்
ஊர்வித்தவா,உற்ற நோய் வினை
தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்தவாறு அடியேனை, ஐயாறன் அடிமைக்களே
சேர்வித்தவா, தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னைய
குற்றமாகிய வினைகள் இம்மையில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டித் துயரை
மிகுவித்தன . அங்ஙனம் வந்த நோய்கள் என்னைத் தவறான வழியில் செல்லச் செய்தன . அந்த
நிலையில் அடியேன் உற்ற நோயைத் தீர்க்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத்
தொண்டுகளில் பொருத்துவித்துத் தன் பொன்னடிக் கீழ்த் தொண்டனாகச் சேருமாறு ஐயாறன்
செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றிப் பிறிதில்லை .
பாடல்
எண் : 3
தாக்கினவா, சலமே வினை காட்டியும், தண்டித்த நோய்
நீக்கினவா,நெடு நீரில் நின்று
ஏற நினைந்து அருளி
ஆக்கினவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே,
நோக்கினவா,தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னைய வினை
என்னைத் தண்டித்தற்கு உரிய சூலை நோயால் தாக்கியது . பின் சமணர்களின் வஞ்சனைச்
செயல்களைக் காட்டி என் உயிரைப் போக்க முற்பட்டது . அந்நிலையில் ஐயாறன் என்னைக்
கடலினின்றும் கரையேறச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டு
செய்ய அடியேனை வழுக்களைந்து கொண்டு திருவடிக் கீழ்த் தொண்டனாகச் செய்த செயல்
நிர்ஹேதுக கிருபையாலாகியதே .
பாடல்
எண் : 4
தருக்கின
நான்,தகவு இன்றியும் ஓடச்
சலமதனால்
நெருக்கினவா,நெடு நீரில்நின்று ஏற
நினைந்து,அருளி
உருக்கினவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
பெருக்கினவா,தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : நான் வினைப் பயனைத்
தாங்கும் ஆற்றல் இல்லேனாய்த் தடுமாறி ஓடுமாறு செருக்குற்ற என் முன்னைவினை வஞ்சனையாக
என்னை நெருக்க அடியேனைத் துன்பக் கடலிலிருந்து கரையேறச் செய்யத் திருவுள்ளம் பற்றி
ஐயாறன் தன் அடிமைத் தொண்டில் உருகச் செய்து அடியேனைத் தன் பொன்னடிக் கீழ் தொண்டனாக
மேம்படுத்திய செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்
பாடல்
எண் : 5
இழிவித்தவாறு, இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து,
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான்,
கலந்து அருளி
அழிவித்தவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
தொழுவித்தவா,தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னைவினை
எனக்கு நோயைக் காட்டி என்னை நிலையிலிருந்து இறங்கச் செய்து துன்புறுத்தி உயிரைப்
போக்க முற்பட்ட அளவில் , ஐயாறன் அடியேனுடைய
துயரம் போக்கித் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தன்னைத் தொழுமாறு செய்த செயல்
அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும் .
பாடல்
எண் : 6
இடைவித்தவாறு, இட்ட நோய் வினை காட்டி, இடர்ப்படுத்து,
உடைவித்தவாறு, உற்ற நோய் வினை
தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்தவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
தொடர்வித்தவா, தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னை வினை
எனக்கு நோயைத் தந்து வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தி உயிரைப் போக்கும் நிலையினதாக , ஐயாறன் அடியேனுக்குத் துயரம் தந்த
வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி , அடியேனைத்
தன் அடிமைத் தொண்டில் சேர்த்துத் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தொடர்ந்து பணி
செய்யுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே யாகும் .
பாடல்
எண் : 7
படக்கினவா, பட நின்று பன்னாளும்
படக்கின நோய்
அடக்கினவாறு, அது அன்றியும் தீவினை
பாவம் எல்லாம்
அடக்கினவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
தொடக்கினவா, தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னை வினை
பலநாளும் துயருறுமாறு என்னைத் தாழ்த்தி நோயினால் என்னைச் செயலற்றவன் ஆக்கிய
நிலையில் ஐயாறன் அடியேனுடைய வினைப்பயனாகிய பாவங்களை எல்லாம் செயலற்றன ஆக்கித் தன்
அடிமைத் தொண்டில் அடியேனைத் திருப்பித் தன் பொன்னடித் தொண்டனாகத் தொடக்கி , திருத்தொண்டு செய்யுமாறு செய்த செயல்
அவன் கருணையின் விளைவேயாம்.
பாடல்
எண் : 8
மறப்பித்தவா, வல்லை நோய் வினை
காட்டி, மறப்பித்த நோய்
துறப்பித்தவா, துக்க நோய் வினை
தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்தவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
சிறப்பித்தவா, தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னை வினை
எனக்கு நோயைக் காட்டி என் அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்பனவற்றை மறக்கச்செய்ய
, அங்ஙனம் மறக்கச்
செய்த நோய் என் உயிர் உடலைத் துறக்கச்செய்ய முற்பட்ட நேரத்தில் ஐயாறன் அடியேனுடைய
வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் ஈடுபட்டுப்
பண்டைத் துயரங்களைக் கடக்கச் செய்து , தன்
திருவடிக்கண் தொண்டனாகுமாறு சிறப்பித்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும் .
பாடல்
எண் : 9
துயக்கினவா, துக்க நோய் வினை
காட்டி, துயக்கின நோய்
இயக்கினவாறு, இட்ட நோய் வினை
தீர்ப்பான், இசைந்துஅருளி
அயக்கினவாறு, அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
மயக்கினவா, தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : என் முன்னை வினை
எனக்கு நோயைத் தந்து சோர்வடையச் செய்ய , அந்நோய்
தான் விரும்பியபடி அடியேன் உடலைச் செயற்படுத்த அந்நிலையில் ஐயாறன் அடியேனுடைய
நோயையும் அதற்குக் காரணமான வினையையும் தீர்க்கத் திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத்
தொண்டில் , அடியேனை நோயிலனாக ஈடுபடுத்தித்
தன் பொன்னடித் தொண்டனாகத் தன் திருத்தொண்டில் கலக்குமாறு செய்த செயல் அவன்
கருணையின் விளைவேயாகும் .
பாடல்
எண் : 10
கறுத்தும் இட்டார் கண்டம், கங்கை சடைமேல்
கரந்து அருளி,
இறுத்தும்
இட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபதுதோள்
அறுத்தும் இட்டார், அடியேனை ஐயாறன்
அடிமைக்களே
பொறுத்தும்
இட்டார், தொண்டனேனைத் தன்
பொன்அடிக் கீழ்எனையே.
பொழிப்புரை : ஐயாற்றெம் பெருமானார்
நீலகண்டராய் , கங்காதரராய் , இராவணன் இருபது தோள்களையும்
நெரித்தவராய் , அடியேனைத் தம்
அடிமைத் தொண்டில் வேற்றுப் பணிகளை அறுத்து அதன் கண்ணேயே ஈடுபடுமாறு செய்தவராய்த்
தம் பொன்னடிக்கீழ் அடியேன் தொண்டனாகுமாறு அடியேனுக்கு ஆதாரமாக அமைந்து விட்டார் .
இதற்குக் காரணம் என்னை ? அப்பெருமானுடைய
காரணம் பற்றாக் கருணையின் விளைவே அடியேனை அப்பெருமானுடைய திருத்தொண்டில்
ஈடுபடுத்தியது .
திருச்சிற்றம்பலம்
4. 092 திருவையாறு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சிந்திப்பு
அரியன, சிந்திப் பவர்க்குச்
சிறந்து,செந்தேன்
முந்திப்
பொழிவன, முத்தி கொடுப்பன, மொய்த்துஇருண்டு
பந்தித்து
நின்ற பழவினை தீர்ப்பன, பாம்புசுற்றி
அந்திப்
பிறைஅணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : பாம்பினைத்
திருமேனியில் சுற்றி அணிந்து மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச்
சந்திரனை அணிந்து கூத்து நிகழ்த்தும் ஐயாறனுடைய திருவடிகள் நம் உள்ளத்தால்
உள்ளவாறு சிந்திப்பதற்கு அரியனவாய் , அவன்
அருளாலே தியானிக்கும் மெய்ஞ்ஞானியருக்கு மேம்பட்டுச் சிறந்த தேன்போன்ற இனிமையை
முன்னர்க்கொடுத்து , அவர்கள் உயிரைப்
பிணித்து நின்ற பழவினைகளைப் போக்கி அவர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்குவனவாகும்
.
பாடல்
எண் : 2
இழித்தன
ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன,
என்மனத்தே
பொழித்தன, போர்எழில் கூற்றை உதைத்தன, போற்றவர்க்காய்,
கிழித்தன
தக்கன் கிளர்ஒளி வேள்வியைக் கீழமுன்சென்று
அழித்தன, ஆறுஅங்க மான ஐயாறன்
அடித்தலமே.
பொழிப்புரை : வேதங்களின் ஆறு
அங்கங்களின் வடிவான ஐயாறன் அடித்தலங்கள் - ஒரு பிறப்பின் வினைப்பயன் தொடர்தற்குரிய
ஏழுபிறப்புக்கள் மக்கள், தேவர், நரகர், விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற ஏழுவகைப் பிறப்பினுள்
எப்பிறப்பாயினும் அறுவறுக்கத்தக்க அப்பிறவிப் பிணியைப் போக்குவனவாய் , அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிவனவாய்
, போரிடுவதில் வல்ல
கூற்றுவனை உதைத்தனவாய் , தக்கனுடைய மேம்பட்ட
வேள்வியை அழித்தனவாய் , தம்மை வழிபடும்
அடியவர்களுக்குக் கீழான பிறவிகளை முற்பட்டு முயன்று அழித்தனவாய் உள்ளன .
பாடல்
எண் : 3
மணிநிறம்
ஒப்பன, பொன்னிறம் மன்னின, மின்இயல்வாய்
கணிநிறம்
அன்ன கயிலைப் பொருப்பன, காதல்செய்யத்
துணிவன
சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாததொண்டர்க்கு
அணியன, சேயன தேவர்க்கு
ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
மாணிக்தத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மின்னலைப் போலவும் அடியவர்கள்
விரும்புகின்ற நிறத்தோடும் ஒளியோடும் விளங்குவனவாய் , கயிலைமலையில் உள்ளனவாய் , அன்பு செய்யத் தக்கனவாய் , நல்லொழுக்கத்துடன் இறைபணியைத் தொடர்ந்து
செய்யும் அடியவர்களுக்கு அணியனவாய்த் தேவர்களுக்குத் தொலைவில் உள்ளனவாய்
இருக்கின்றன .
பாடல்
எண் : 4
இருள்தரு
துன்பப் படலம் மறைப்ப,மெய்ஞ் ஞானம்என்னும்
பொருள்தரு
கண்இழந்து, உண்பொருள் நாடிப்
புகல்இழந்த
குருடரும்
தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்று
அருள்தரு
கைகொடுத்து ஏற்று ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
இருளைத் தரும் துன்பத்திரை மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும் பார்வையை இழந்த , நுகர்தற்குரிய பொருள்களைத் தேடிப்
பற்றுக்கோட்டினை இழந்த குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடிய நரகமாகிய குழியில்
இருந்து அவர்களை அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முத்தி நிலத்தின் கரைக்கண்
சேர்ப்பன .
பாடல்
எண் : 5
எழுவாய்
இறுவாய் இலாதன, எங்கள் பிணிதவிர்த்து
வழுவா
மருத்துவம் ஆவன, மாநர கக்குழிவாய்
விழுவார்
அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன,
மிக்கஅன்போடு
அழுவார்க்கு
அமுதங்கள் காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
- தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் நம்முடைய நோய்களைப் போக்கத்தவறாத
மருந்தின் தன்மையவாய் நரகக்குழியில் தம் வினைப்பயனால் விழும் உயிர்களை வினை
நுகர்ச்சிக்காக விழச்செய்து பின் கருணையினால் கரையேற்றுவனவாய் , மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி
அழுபவர்களுக்கு அமுதங்களாக உள்ளன .
பாடல்
எண் : 6
துன்பக்
கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை
இன்பக்
கரை முகந்து, ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு
ஒழுகப் பொருந்துஒளி செய்யும், அப்
பொய் பொருந்தா
அன்பர்க்கு
அணியன காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
அடியார்களைத் துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் செயலைச் செய்வனவாய் இன்பமாகிய
கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் மாற்று அறிய முடியாத வலியற்ற பொன்போல ஒளிவீசுவனவாய்ப்
பொய்ப் பொருள்களிடத்துப் பற்றற்ற மெய்யடியார்களுக்கு அணியனவாய் உள்ளன .
பாடல்
எண் : 7
களித்துக்
கலந்ததொர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத்
தொழுது,முன் நின்ற இப்
பத்தரைக் கோதுஇல் செந்தேன்
தெளித்து, சுவை அமுதூட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து,
பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
அடியார்குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியோடு காவிரியில்
நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தெளியச் செய்து அத்தேனை
அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு
வழங்கி எப்பொழுதும் செல்வன்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்ப்பினை
நல்குவன .
பாடல்
எண் : 8
திருத்திக்
கருத்தனைச் செவ்வே நிறுத்தி,
செறுத்துஉடலை
வருத்தி, கடிமலர் வாள்எடுத்து
ஓச்சி, மருங்குசென்று
விருத்திக்கு
உழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகைஇடுமால்
அருத்தித்து
அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : விரும்பிச் சிறந்த
தவத்தினை உடையவர்கள் துதிக்கும் ஐயாறனுடைய திருவடிகள் உள்ளத்தைப் பிற பொருட்கண்
செல்லாமல் திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து , தொடர்ந்து , அதனை அடக்கி உடலை யோகத்தால் வருத்தி , நறுமணம் கமழும் ஒளி பொருந்திய மலர்களை
எடுத்து உயர்த்தித் திருவடிகளில் தூவி எம்பெருமான் பக்கல் அடைந்து உடல் விருத்தி
உயிர் விருத்தி ஆகிய இரண்டற்கும் முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டுலகில் இடம்
பெறுவதற்குப் பட்டிகையில் பெயர்ப்பதிவு செய்துவிடும் .
பாடல்
எண் : 9
பாடும்
பறண்டையும், ஆந்தையும் ஆர்ப்பப்
பரந்து,பல்பேய்
கூடி
முழவக் குவிகவிழ் கொட்ட,
குறுநரிகள்
நீடும்
குழல்செய்ய, வையம் நெளிய, நிணப்பிணக்காட்டு
ஆடும்
திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள் , ஒலிக்கும் பறண்டை ஆந்தை என்ற
இசைக்கருவிகள் ஆரவாரம் செய்யப் பலபேய்களும் நாற்புறமும் பரவி முழவு முதலியவற்றின்
குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் ஒலியை எழுப்ப , குறுநரிகள் வேய்ங்குழல் போல ஒலிக்கப்
பூமி அதிர்ச்சி தாங்காமல் நெளிய ,
கொழுப்பு
உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துவனவாம் .
பாடல்
எண் : 10
நின்போல்
அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்து, உகுத்த
பைம்போது
உழக்கி, பவளந் தழைப்பன, பாங்குஅறியா
என்போலிகள்
பறித்து இட்ட இலையும் முகையும்எல்லாம்
அம்போது
எனக்கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஆகமப்படி செய்யும்
முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பறித்துச் சமர்ப்பித்த இலைகளையும்
மொட்டுக்களையும் எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் உடைய திருவடிகள் தேவர்கள்
நீண்ட முடிகளைச் சாய்த்து வணங்கிச் சமர்ப்பித்த புதிய பூக்களைத் துகைத்து
எம்பெருமானைப் போலப் பவள நிறத்தால் சிறந்து விளங்குவன .
பாடல்
எண் : 11
மலைஆர்
மடந்தை மனத்தன, வானோர் மகுடமன்னி
நிலையாய்
இருப்பன, நின்றோர் மதிப்பன, நீள்நிலத்துப்
புலைஆடு
புன்மை தவிர்ப்பன, பொன்னுல கம்அளிக்கும்,
அலையார்
புனல்பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : தேவருலகத்தை வழங்கும்
, அலையோடு கூடிய நீரை
உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின்
மனத்தனவாய் , தேவர்களின் முடிகள்
விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தியிருப்பனவாய் , வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய் , இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய
பிறவியைப் போக்குவன ஆகும் .
பாடல்
எண் : 12
பொலம்புண்டரீகப்
புதுமலர் போல்வன, போற்றி என்பார்
புலம்பும்
பொழுதும் புணர்துணை ஆவன,
பொன்அனையாள்
சிலம்பும்
செறிபா டகமும் செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும்
திருவடி காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய் , தம்மை வழிபடுபவர் தனித்து
வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய் , பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின்
சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும் .
பாடல்
எண் : 13
உற்றார்
இலாதார்க்கு உறுதுணை ஆவன,
ஓதிநன்னூல்
கற்றார்
பரவப் பெருமை உடையன, காதல்செய்ய
கிற்பார்
தமக்குக் கிளர்ஒளி வானகந் தான்கொடுக்கும்,
அற்றார்க்கு
அரும்பொருள் காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய் , சிவாகமங்களை ஒதி அனுபவப் பொருளை
ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய்
, தம்மை விரும்பும்
ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய
பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம் .
பாடல்
எண் : 14
வானைக்
கடந்துஅண்டத்து அப்பால் மதிப்பன, மந்திரிப்பார்
ஊனைக்
கழித்துஉய்யக் கொண்டுஅருள் செய்வன, உத்தமர்க்கு
ஞானச்
சுடராய் நடுவே உதிப்பன, நங்கைஅஞ்ச
ஆனை
உரித்தன காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய் , மந்திரங்களால் வழிபடு கின்றவர்களுடைய
பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய்
, மேம்பட்ட
சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய் , பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத்
தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன
.
பாடல்
எண் : 15
மாதிரம்
மானிலம் ஆவன, வானவர் மாமுகட்டின்
மீதன, மென்கழல் வெங்கச்சு
வீக்கின, வெந்நமனார்
தூதரை
ஓடத் துரப்பன, துன்பறத்
தொண்டுபட்டார்க்கு
ஆதரம்
ஆவன காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய் , மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும்
கட்டப்பட்டனவாய் , கொடிய தருமராசரின்
தூதர்களை ஒடச் செய்வனவாய் , உலகத் துன்பங்கள்
தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன .
பாடல்
எண் : 16
பேணித்
தொழும்அவர் பொன்உலகு ஆள,
பிறங்குஅருளால்
ஏணிப்
படிநெறி இட்டுக் கொடுத்து,இமை யோர்முடிமேல்
மாணிக்கம்
ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி
ஆணிக்
கனகமும் ஒக்கும், ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள் , விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட
வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை
அமைத்துக் கொடுத்து , தேவர்கள் முடிக்கு
அணியத்தக்க மாணிக்கம் , மரகதம் , வைரம் , தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம் .
பாடல்
எண் : 17
ஓதிய
ஞானமும், ஞானப் பொருளும், ஒலிசிறந்த
வேதியர்
வேதமும், வேள்வியும் ஆவன, விண்ணுமண்ணும்
சோதியும்
செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன,
தூமதியோடு
ஆதியும்
அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஆதியும் , அந்தமும் ஆகிய ஐயாறன் அடித் தலங்கள்
வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும் , ஞானப் பொருளாகிய பரஞானமும் , ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும்
வேதமும் , வேதத்தை ஒட்டிச்
செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை
உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன .
பாடல்
எண் : 18
சுணங்கு
முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்டு
அணங்குங்
குழலி அணியார் வளைக்கரம் கூப்பிநின்று
வணங்கும்
பொழுதும், வருடும்பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும்
அரவிந்தம் ஒக்கும், ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி
சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக்
குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால்
அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன . காந்தட்பூ - பார்வதிகைகள் , தாமரை - பெருமான் திருவடிகள் .
பாடல்
எண் : 19
சுழல்ஆர்
துயர்வெயில் சுட்டிடும் போது,அடித்
தொண்டர் துன்னும்
நிழல்
ஆவன, என்றும் நீங்காப்
பிறவி நிலைகெடுத்துக்
கழலா
வினைகள் கழற்றுவ, கால வனங்கடந்த
அழல்ஆர்
ஒளியன காண்க, ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : ஐயாறன் அடித்தலங்கள்
கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது
கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும்
செயலைப் போக்கி, விடுத்து நீங்காத
வினைகளை அப்புறப் படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின்
நிறைந்த ஒளியை உடையன.
பாடல்
எண் : 20
வலியான்
தலைபத்தும் வாய்விட்டுஅலற,
வரைஅடர்த்து,
மெலியா
வலிஉடைக் கூற்றை உதைத்து,
விண்ணோர்கள் முன்னே
பலிசேர்
படுகடைப் பார்த்து, பன் னாளும் பலர்இகழ
அலியா
நிலைநிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
பொழிப்புரை : நம் தலைவனாகிய
ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு
மலையால் அவனை அழுத்தி, குறையாத வலிமையை உடைய
கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள்
முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை
நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின.
திருச்சிற்றம்பலம்
4. 0 13 திருவையாறு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
விடகிலேன்
அடிநாயேன் வேண்டியக்கால் யாதுஒன்றும்
இடகிலேன், அமணர்கள்தம்
அறவுரைகேட்டு அலமந்தேன்,
தொடர்கின்றேன்
உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன்
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : கீழான நாய் போன்ற
யான் பொருட்பற்றை விடுவேன் அல்லேன் . வறியவராய் என்னிடம் இரந்து வந்தவர்களுக்கு
யாதொன்றும் பிச்சையாக இடுவேன் அல்லேன் . சமணத்துறவியரின் அறவுரைகளைக்கேட்டு மனம்
சுழன்றேன் . உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைத் தரிசித்து வழிபடத் தொடர்ந்து
அடைகின்றேன் . ஐயாறனாகிய உனக்கு அடிமைப்பட்டேனாய் அடியேன் கடைத்தேறினேன் . இனி உன்
திருவடிகளை விடமாட்டேன் .
பாடல்
எண் : 2
செம்பவளத்
திருவுருவர், திகழ்சோதி, குழைக்காதர்,
கொம்புஅமரும்
கொடிமருங்குல், கோல்வளையாள் ஒருபாகர்,
வம்புஅவிழும்
மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துஉகந்த
அம்பவள
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : செம்பவளம் போன்ற
அழகிய வடிவினராய் , ஒளி வீசும் குழைகளை
அணிந்தகாதினராய் , கொம்பினை
விரும்பிப்படரும் கொடி போன்ற இடையையும் திரண்டவளையல்களையும் உடைய பார்வதியின்
பாகராய் , புதிதாக மலரும்
கொன்றைப்பூவை வளரும் சடைமேல் வைத்து உகப்பவராகிய அழகிய பவளம் போன்ற நிறத்தையுடைய
ஐயாற்றெம்பெருமானுக்கு அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன்.
பாடல்
எண் : 3
நணியானே, சேயானே, நம்பானே, செம்பொன்னின்
துணியானே, தோலானே, சுண்ணவெண் ணீற்றானே,
மணியானே, வானவர்க்கு
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே, ஐயாறர்க்கு ஆளாய்நான்
உய்ந்தேனே.
பொழிப்புரை : அருகிலும்
சேய்மையிலும் உள்ளவனே ! பொன்மயமான ஆடையை உடையவனே ! தோலாடையையும் உடையவனே !
பொடியாகிய வெண்ணீறு அணிந்தவனே ! சிந்தாமணி போல்பவனே ! தேவர்களுக்கும்
பிணியைத்தீர்க்கும் மருந்தாகி நெருங்கியிருப்பவனே ! ஐயாறனாகிய உனக்கு அடிமையாய்
அடியேன் கடைத்தேறினேன் .
பாடல்
எண் : 4
ஊழித்தீ
யாய்நின்றாய், உள்குவார் உள்ளத்தாய்,
வாழித்தீ
யாய்நின்றாய், வாழ்த்துவார் வாயானே,
பாழித்தீ
யாய்நின்றாய், படர்சடைமேல்
பனிமதியம்,
ஆழித்தீ
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : உலகத்தை அழிக்கும்
ஊழித்தீயாய் நின்றவனே ! விரும்பித்தியானிப்பவர் உள்ளத்தில் உள்ளவனே ! உடம்பகத்து
இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீயாய் இருப்பவனே ! வாழ்த்தும்
அடியவர் வாயில் உள்ளவனே ! பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி பெரிய தீத்தம்பமாக
நின்றவனே ! பரவிய சடையின் மேல் ,
உலகத்தாருக்குக்
குளிர்ச்சி தரும் சந்திரனாய் , தலைவனைப் பிரிந்த
தலைவிக்குக் கடலின் உள்ளிருக்கும் குதிரை முகத்தீப்போல வருத்தும் பிறையைச்
சூடியவனே ! ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .
பாடல்
எண் : 5
சடையானே, சடைஇடையே தவழும்தண்
மதியானே,
விடையானே, விடையேறிப்
புரம்எரித்த வித்தகனே,
உடையானே, உடைதலைகொண்டு
ஊர்ஊர்உண்பலிக்கு உழலும்
அடையானே, ஐயாறர்க்கு ஆளாய்நான்
உய்ந்தேனே.
பொழிப்புரை : சடையை உடையவனே !
சடையில் தவழும் பிறையைச் சூடியவனே! காளைவாகனனே ! காளை மீது இவர்ந்து
முப்புரங்களையும் எரியச்செய்த திறமை உடையவனே! எல்லோரையும் அடிமையாக உடையவனே !
மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் பிச்சை உணவுக்கு அலைபவனாய் எல்லோரும் அடையத்தக்க
சரணியனே ! ஐயாறனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேனே .
பாடல்
எண் : 6
நீரானே, தீயானே, நெதியானே, கதியானே,
ஊரானே, உலகானே, உடலானே, உயிரானே,
பேரானே, பிறைசூடீ, பிணிதீர்க்கும்
பெருமான்என்று
ஆராத
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : ` நீரும் நெருப்பும் செல்வமும் செல்லும்
வழியும் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பலதிரு நாமங்களை உடையவனே !
பிறை சூடியே ! பிணிகளைப் போக்கும் பெருமானே !` என்று பலகால் அழைத்தும் ஆர்வம் அடங்கப்
பெறாது மேன்மேல் வளர்ந்து வரும் நிலையில் அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய
உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .
பாடல்
எண் : 7
கண்ஆனாய், மணிஆனாய், கருத்துஆனாய், அருத்துஆனாய்,
எண்ஆனாய், எழுத்துஆனாய், எழுத்தினுக்கு
ஓர்இயல்புஆனாய்
விண்ஆனாய், விண்ணிடையே
புரம்எரித்த வேதியனே,
அண்ஆன
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : கண்ணாகவும் கண்ணின்
மணியாகவும் , அக நோக்கத்திற்கு
உரிய கருத்தாகவும் , நுகர்ச்சியாகவும் , எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் , பரவெளியாகவும் , வானத்தில் இயங்கிய மும்மதில்களை அழித்த
வேதியனாகவும் , அடியேனுக்கு
நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .
பாடல்
எண் : 8
மின்ஆனாய், உரும்ஆனாய், வேதத்தின்
பொருள்ஆனாய்,
பொன்ஆனாய், மணிஆனாய், பொருகடல்வாய்
முத்துஆனாய்,
நின்ஆனார்
இருவர்க்கும் காண்புஅரிய நிமிர்சோதி
அன்னானே, ஐயாறர்க்கு ஆளாய்நான்
உய்ந்தேனே.
பொழிப்புரை : மின்னாகவும்
இடியாகவும் வேதத்தின் பொருளாகவும் ,
பொன்னாகவும்
மணியாகவும் அலைகள் மோதும் கடலில் உள்ள முத்தாகவும் உள்ளவனே ! நின்னைப் போலத்
தம்மைப் பரம்பொருளாகக் கருதிய பிரமனும் திருமாலும் காணமுடியாத உயர்ந்த
தீப்பிழம்பாய் நின்ற அத்தன்மையனே ! இவ்வாறு உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான்
உய்ந்தேனே .
பாடல்
எண் : 9
முத்துஇசையும்
புனல்பொன்னி மொய்பவளம் கொழித்துஉந்த,
பத்தர்பலர்
நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்துஏத்த,
எத்திசையும்
வானவர்கள் எம்பெருமான் எனஇறைஞ்சும்
அத்திசையாம்
ஐயாறார்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : முத்துக்களோடு
கூடிவரும் காவிரியின் வெள்ளம் ,
செறிந்த
பவளங்களை அரித்துக் கரைசேர்க்க ,
பத்தர்பலர்
காவிரி நீரில் மூழ்கிப் பலகாலும் வணங்கித் துதிக்க எல்லாத் திசைகளிலும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று கூப்பிட்டவாறே வழிபடும்
அத்திசைகளில் எல்லாம் அவர்கள் வழிபாட்டை ஏற்கும் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
.
பாடல்
எண் : 10
கருவரைசூழ்
கடல்இலங்கைக் கோமானைக் கருத்துஅழியத்
திருவிரலால்
உதைகரணம் செய்துஉகந்த சிவமூர்த்தி,
பெருவரைசூழ்
வையகத்தார் பேர்நந்தி என்றுஏத்தும்
அருவரைசூழ்
ஐயாறர்க்கு ஆளாய்நான் உய்ந்தேனே.
பொழிப்புரை : கடலிடையே பெரிய
மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகர் மன்னனாகிய இராவணனை அவன் எண்ணம் அழியுமாறு
திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்த
சிவமூர்த்தியாய் , பெரிய கடலால்
சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும் , பெரிய மூங்கிற் காடுகள் சூழ்ந்த ஐயாற்று
எம்பெருமானுக்கு , அடியேன் அடிமையாகிக்
கடைத்தேறினேன் .
திருச்சிற்றம்பலம்
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை
நாட்டுக்குச் செல்லும் பொழுது, திருக்கண்டியூர்
வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற, சேரமான் பெருமாள் நாயனார் அங்குச்
சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில்
பெருவெள்ளம் சென்றதைக் கண்டு பாடியருளியது இத்திருப்பதிகம். ஒவ்வொரு பாடல்
இறுதியிலும், "ஐயாறுடைய
அடிகேளோ" என்று அழைத்துப் பாடியிருத்தல் காணலாம். (தி. 12 கழறிற். புரா. 134)
பெரிய
புராணப் பாடல் எண் : 131
வடகரையில்
திருவையாறு எதிர்தோன்ற, மலர்க்கரங்கள்
உடல்உருக,
உள்உருக, உச்சியின்மேல்
குவித்து அருளி,
கடல் பரந்தது
எனப்பெருகும் காவிரியைக் கடந்து ஏறி,
தொடர்வுடைய
திருவடியைத் தொழுவதற்கு
நினைவுற்றார்.
பொழிப்புரை : காவிரிக்கு வடகரையில்
திருவையாறானது எதிரே தோன்றவும்,
உடலும்
உள்ளமும் உருக, மலர் போன்ற கைகளைத்
தலைமீது குவித்துக், கடல் பெருகி வந்தது
என்னுமாறு பெருகி வரும் காவேரி ஆற்றைக் கடந்து, வட கரையில் ஏறிச் சென்று, இடையறாத தொடர்பு பூண்ட இறைவரின்
திருவடியை வணங்குதற்குத் திருவுளம் கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 132
ஐயாறு
அதனைக் கண்டுதொழுத அருள் ஆரூரர்
தமைநோக்கிச்
செய்யாள்
பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச்
செய்கின்றார்,
"மைஆர் கண்டர்
மருவுதிரு ஐயாறு இறைஞ்ச,
மனம்உருகி
நையா
நின்றது, இவ்ஆறு கடந்து பணிவோம்
நாம்"என்ன.
பொழிப்புரை : திருமகள் என்றும்
பிரியாது உறைகின்ற சேரமான் பெருமாள் நாயனார், திருவையாற்றை நினைந்து நின்றவாறே வணங்கி, திருவருட்பெருக்குடைய நம்பியாரூரரைப்
பார்த்து, அருள் செய்பவராய், `நஞ்சுண்ட கழுத்தினை உடைய இறைவர்
வீற்றிருக்கின்ற திருவையாற்றிற்குச் சென்று பணிய உள்ளம் உருகிடலாயிற்று, நாம் இவ்வாற்றைக் கடந்து செல்வோம்!' எனக் கூற,
பெ.
பு. பாடல் எண் : 133
ஆறு
பெருகி இருகரையும் பொருது, விசும்பில்
எழுவதுபோல்
வேறு
நாவாய் ஓடங்கள் மீது செல்லா
வகைமிகைப்ப,
நீறு
விளங்குந் திருமேனி நிருத்தர் பாதம்
பணிந்து,அன்பின்
ஆறு
நெறியாச் செல உரியார், தரியாது அழைத்துப்
பாடுவார்.
பொழிப்புரை : காவிரி ஆறு
பெருக்கெடுத்து இரு கரைகளையும் அலைத்து வானத்தில் எழுவதைப் போல், வேறு மரக்கலங்களாவது ஓடங்களாவது மேல்
செல்லாதபடி மிகுத்துச் செல்லத்,
திருநீறு
விளங்கும் மேனியையுடைய இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பின்
வழிச் செல்லும் உரிமை கொண்ட நம்பியாரூரர், ஆறு தடுத்து நிற்பதைப் பொறுக்க இயலாது, இறைவரை விளித்துப் பாடத் தொடங்கி,
பெ.
பு. பாடல் எண் : 134
"பரவும்
பரிசொன்று" எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம்
புனைவார் தமை"ஐயாறு உடைய அடிக
ளோ"என்று
விரவும்
வேட்கையுடன் அழைத்து, விளங்கும் பெருமைத்
திருப்பதிகம்
நிரவும்
இசையில் வன்தொண்டர் நின்று தொழுது
பாடுதலும்.
பொழிப்புரை : : `பரவும் பரிசு' எனத் தொடங்கிப் பாடும் பாடல்கள்
ஒவ்வொன்றின் நிறைவிலும் பாம்பை அணியும் இறைவரை, `ஐயாறுடைய அடிகேளோ' என்று நிரம்பிய விருப்புடன் அழைத்து, விளக்கம் கொண்ட பெருமையுடைய
திருப்பதிகத்தை நிரவும் பண்ணிசையமைய வன்தொண்டப் பெருந்தகையார் நின்று தொழுது
பாடவும்,
`பரவும் பரிசு' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரபஞ்சமப்
பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.77). பாடல்கள் தொறும், `திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய
அடிகேளோ' எனும் தொடர் அமைந்து, ஆரூரர் தம் ஆர்வ மிகுதியைக் காட்டி
நிற்கின்றது. காவிரிக் கோட்டம் - காவிரிக்கரை. அடிகள் என்பது, ஓலப் பொருண்மையும் விளிப் பொருண்மையும்
அமைய `அடிகேளோ' என நின்றது.
பெ.
பு. பாடல் எண் : 135
மன்றில்
நிறைந்து நடமாட வல்லார், தொல்லை ஐயாற்றில்
கன்று
தடையுண்டு எதிர்அழைக்கக் கதறிக் கனைக்கும்
புனிற்றாப்போல்,
ஒன்றும்
உணர்வால் சராசரங்கள் எல்லாங் கேட்க, ஓலம் என
நின்று
மொழிந்தார், பொன்னிமா நதியு நீங்கி
நெறிகாட்ட.
பொழிப்புரை : பேரவையுள் நிறைந்து
திருக்கூத்து இயற்றுதலில் வல்ல இறைவர், தன்
கன்று தடைப்பட்டு எதிர் அழைக்கக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் இளைய பசுவைப்
போல், ஒன்றுபட்ட உணர்வால்
இயங்கியற் பொருள்கள், நிலையியற் பொருள்கள்
ஆகிய அனைத்தும் கேட்கும்படி `ஓலம்\' என்று மொழிந்தார். அந்நிலையில்
அக்காவிரியாறும் தொடர்ச்சி நீங்கி வழி காட்ட,
பெ.
பு. பாடல் எண் : 136
விண்ணின்
முட்டும் பெருக்குஆறு, மேல்பால் பளிக்கு
வெற்புஎன்ன
நண்ணி
நிற்க, கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி
பண்ணி, குளிர்ந்த
மணல் பரப்பக் கண்ட தொண்டர், பயில்மாரி
கண்ணில்
பொழிந்து மயிர்ப்புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்.
பொழிப்புரை : வானத்தை முட்டுமாறு
பெருக்கெடுத்துச் செல்லும் காவிரியாறு மேற்பக்கத்தில் பளிங்கு மலை போல் தாங்கி
நிற்க, கீழ்ப் பக்கத்தில்
நீர் வடிந்த இடையில், நல்ல வழியினை
உண்டாக்கிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்ட தொண்டர்கள், மிக்க மழைபோல் கண்ணீர் பொழிந்து
திருமேனியில் மயிர்க்கூச்சம் கொள்ளக், கைகளைத்
தலைமீது குவித்து வணங்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 137
நம்பி
பாதம் சேரமான் பெருமாள் பணிய, நாவலூர்ச்
செம்பொன்
முந்நூன் மணிமார்பர் சேரர் பெருமான்
எதிர்வணங்கி,
"உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ" என்ன, உடன்மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றிசைத்துத் தடம் காவேரி
நடுவு அணைந்தார்.
பொழிப்புரை : நம்பியாரூரரின்
திருவடிகளைச் சேரமான் பெருமாள் வணங்க, நாவலூரில்
வந்தருளிய செம்பொன் போன்ற முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய நம்பியாரூரரும்
சேரமான் பெருமாளை எதிர் வணங்கி,
`இது
தேவர்க்குத் தலைவராய இறைவர் உமக்கு அளித்த திருவருள் அன்றோ?\' எனக் கூற, இருவரும் கூடி மகிழ்ந்து இறைவரைப்
போற்றிப் பரவிப் பெரிய காவிரியின் நடுவே சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 138
செஞ்சொல்
தமிழ்நா வலர்கோனும் சேரர் பிரானும், தம்பெருமான்
எஞ்சல்
இல்லா நிறைஆற்றின் இடையே அளித்த
மணல்வழியில்,
தஞ்சம்
உடைய பரிசனமும் தாமும் ஏறித்
தலைச்சென்று,
பஞ்ச
நதிவா ணரைப்பணிந்து, விழுந்தார், எழுந்தார், பரவினார்.
பொழிப்புரை : திருவமைந்த செம்மையான
சொற்களை வழங்கியருளும் தமிழ் நாவலர் பெருமானும், சேரமானும் தம் இறைவர் குறைவில்லாமல்
நிறையப் பெருகிய ஆற்றின் நடுவில் அளித்தருளிய மணல் வழியில், தம்மைச்சார்ந்துள்ள ஏவலாளர்களும்
தாமுமாக ஏறிச் சென்று, திருவையாற்று
இறைவரைப் பணிந்து நிலத்தில் விழுந்தனர்; எழுந்தனர்; போற்றினர்.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 077 திருவையாறு
பண் - காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பரவும்
பரிசுஒன்று அறியேன்நான்,
பண்டே உம்மைப்
பயிலாதேன்,
இரவும்
பகலும் நினைந்தாலும்
எய்த நினைய
மாட்டேன்நான்,
கரவுஇல்
அருவி கமுகுஉண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க்
கருப்பாலை
அரவம்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : கரவின்றி வருகின்ற
நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க , தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும்
பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங் கரைக்கண் உள்ள
திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் ,
யான்
உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின் , முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்
; இரவும் பகலும்
உம்மையே நினைவேன் ; என்றாலும் , அழுந்த நினையமாட்டேன் ; ஓலம் !
பாடல்
எண் : 2
எங்கே
போவேன் ஆயிடினும்
அங்கே வந்துஎன்
மனத்தீராய்,
சங்கை
ஒன்றும் இன்றியே,
தலைநாள் கடைநாள்
ஒக்கவே,
கங்கை
சடைமேம் கரந்தானே,
கலைமான் மறியும், கனல்மழுவும்,
தங்குந்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : அடியேன் எங்கே
செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி
நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை
யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் !
பாடல்
எண் : 3
மருவிப்
பிரிய மாட்டேன் நான்,
வழிநின்று ஒழிந்தேன்
ஒழிகிலேன்,
பருவி
விச்சி மலைச்சாரல்
பட்டை கொண்டு
பகடுஆடிக்
குருவி
ஓப்பிக் கிளிகடிவார்
குழல்மேல் மாலை
கொண்டு,எட்டம்
தரவந்து
இரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : நீர் , பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில்
பல பிரிவுகளாய்க் காணப்பட்டு , யானைகளைப் புரட்டி , புனங்களில் குருவிகளையும் கிளிகளையும்
ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு
ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும் , காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை
உமதாக உடைய அடிகேள் , யான் , சிலர்போல, உறுவது சீர் தூக்கி , உற்ற வழிக்கூடி , உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும்
நீங்கேன் ; ஓலம் !
பாடல்
எண் : 4
பழகா
நின்று பணிசெய்வார்
பெற்ற பயன்ஒன்று
அறிகிலேன்,
இகழாது
உமக்காட் பட்டோர்க்கு
வேக படம்ஒன்று
அரைச்சாத்தி,
குழகா
வாழைக் குலைதெங்கு
கொணர்ந்து கரைமேல்
எறியவே
அழகுஆர்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : வாழைக் குலைகளையும் , தென்னங் குலைகளை யும் அழகாகக் கொணர்ந்து
கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை
யாற்றை உமதாக உடைய அடிகேள் , உமக்கு
அடிமைப்பட்டவர் முன்னே , நீர் ஒற்றை ஆடையையே
அரையில் பொருந்தஉடுத்து நிற்றலால் ,
உம்மை
அணுகிநின்று உமக்குப் பணி செய்பவர் , அதனால்பெற்ற
பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம்
!
பாடல்
எண் : 5
பிழைத்த
பிழைஒன்று அறியேன்நான்,
பிழையைத் தீரப்
பணியாயே,
மழைக்கண்
நல்லார் குடைந்துஆட
மலையும் நிலனும்
கொள்ளாமைக்
கழைக்கொள்
பிரசம் கலந்துஎங்கும்
கழனி மண்டி, கையேறி
அழைக்குந்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : மழைபோலும்
கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட , மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி
பெருகி , மூங்கிலிடத்துப்
பொருந்திய தேன் பொருந்தப்பெற்று ,
வயல்களில்
எல்லாம் நிறைந்து , வரம்புகளின் மேல் ஏறி
ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங்
கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள் , அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று
உளதாக அறிந்திலேன் ; யான் அறியாதவாறு
நிகழ்ந்த பிழை உளதாயின் , அது நீங்க அருள்செய் ; ஓலம் !
பாடல்
எண் : 6
கார்க்கொள்
கொன்றை சடைமேல்ஒன்று
உடையாய் விடையாய், கையினால்
மூர்க்கர்
புரமூன்று எரிசெய்தாய்,
முன்நீ, பின்நீ, முதல்வன்நீ,
வார்கொள்
அருவி பலவாரி
மணியும் முத்தும்
பொன்னும்கொண்டு
ஆர்க்கும்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : கார்காலத்தைக் கொண்ட
கொன்றைமலரின் மாலை யொன்றைச் சடைமேல் உடையவனே , விடையை ஏறுபவனே , அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச்
சிரிப்பினால் எரித்தவனே , ஒழுகுதலைக்கொண்ட பல
அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு
ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய , காவிரி
யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை நினதாக உடைய அடிகேள் , எல்லாவற்றுக்கும் முன்னுள்ள வனும் நீயே ; பின்னுள்ளவனும் நீயே ; எப்பொருட்கும் முதல்வனும் நீயே ; ஓலம் !
பாடல்
எண் : 7
மலைக்கண்
மடவாள் ஒருபாலாய்ப்
பற்றி உலகம்
பலிதேர்வாய்,
சிலைக்கொள்
கணையால் எயில்எய்த
செங்கண் விடையாய், தீர்த்தன்நீ,
மலைக்கொள்
அருவி பலவாரி
மணியும் முத்தும்
பொன்னும்கொண்டு
அலைக்கும்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : மலையிடத்துத் தோன்றிய
மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு ,
உலக
முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே ,
வில்லிடத்துக்கொண்ட
அம்பினால் முப்புரத்தை அழித்த ,
சிவந்த
கண்களையுடைய இடபத்தை யுடையவனே ,
மலையிடத்துப்
பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக் களையும்
கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள
திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் ,
இறைவனாவான்
நீயே ; ஓலம் !
பாடல்
எண் : 8
போழும்
மதியும் புனக்கொன்றை
புனல்சேர் சென்னிப்
புண்ணியா,
சூழும்
அரவச் சுடர்ச்சோதீ,
உன்னைத் தொழுவார்
துயர்போக,
வாழும்
அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை
உய்த்துஆட்ட
ஆழும்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : பகுக்கப்பட்ட
சந்திரனும் , புனங்களில் உள்ள
கொன்றை மலரும் , நீரும் பொருந்திய
முடியையுடைய புண்ணிய வடிவினனே ,
சுற்றி
ஊர்கின்ற பாம்பை அணிந்த , சுடர்களையுடைய ஒளி
வடிவினனே , உன்னை
வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும் , ஆங்காங்கு வாழ்கின்றவர்கள்
விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும் , மறித்து வீசுகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள
திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் ,
ஓலம்
!
பாடல்
எண் : 9
கதிர்க்கொள்
பசியே ஒத்தேன்நான்,
கண்டேன் உம்மைக்
காணாதேன்,
எதிர்த்து
நீந்த மாட்டேன்நான்,
எம்மான் தம்மான்
தம்மானே,
விதிர்த்து
மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து
நுரைசிதறி
அதிர்க்கும்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : என் தந்தை
தந்தைக்கும் பெருமானே , மேகங்கள்
துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே
முழங்குகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண்
உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , நான்
உம்மை , பசியுடையவன்
நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன் ; அவன்
உணவைக் கண்டாற்போலக் காணேனா யினேன் ; நீரின்
வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன் ; ஓலம் !
பாடல்
எண் : 10
கூசி
அடியார் இருந்தாலும்
குணம்ஒன்று இல்லீர், குறிப்புஇல்லீர்,
தேச
வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனும்
காண்கிலார்,
தேசம்
எங்கும் தெளிந்துஆடத்
தெண்ணீர் அருவி
கொணர்ந்துஎங்கும்
வாசம்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : நாடெங்கும்
உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த
நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங்
கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல
வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம்
குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும்
எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும்
இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங்
காண்பார் ! ஓலம் !
பாடல்
எண் : 11
கூடி
அடியார் இருந்தாலும்
குணம்ஒன்று இல்லீர், குறிப்புஇல்லீர்,
ஊடி
இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன்
ஊரனேன்,
தேடி
எங்குங் காண்கிலேன்
திருவா ரூரே
சிந்திப்பன்
ஆடுந்
திரைக்கா விரிக்கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ !
பொழிப்புரை : அசைகின்ற அலைகளையுடைய
, காவிரியாற்றங்
கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே
இருந்தாலும் நீர் , அவர்க்கு
அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர் , ` அருள்
பண்ணுதல் வேண்டும் ` என்னும் எண்ணமும்
இல்லீர் ; அது நிற்க , நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும் , யான் அதனை உணர்ந்திலேன் ; உம் அடியேனும் , ` நம்பியாரூரன் ` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை
இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன் ; அதனால் , உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே
நினைப்பேனா யினேன் ; ஓலம் !
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment