திரு ஐயாறு - 2




திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

         தென்கயிலையாகிய திருக்காளத்தி, அப்பர் பெருமானுக்கு வடகயிலையை நினைவூட்டியது போலும்.  திருக்கயிலையைக் காண, அப்பர் பெருமான் உறுதி பூண்டார்.  வடதிசை நோக்கிச் சென்றவர், வழியில் திருப்பருப்பதத்தை அடைந்து பாடி, தெலுங்கு, கன்னடம், மாளவம் ஆகிய நாடுகளைக் கடந்து காசியை அடைந்தார்.  விசுவநாதரை வணங்கினார். அனல் உமிழும் கல்பாதையிலே நடக்கலானார்.  பாதங்கள் தேயந்தன. கைகளால் தாவிச் சென்றார். கைகள் தேய்ந்தன. திருமார்பினால் ஊர்ந்தார்.  மார்பும் நைந்து தேய்ந்தது.  எலும்புகளும் முறிந்தன.  புரண்டு புரண்டு பார்த்தார்.  உடலும் தேயத் தொடங்கியது.  மெல்ல மெல்ல நகர முயன்றார்.  அதற்குமேல் செயலற்றவர் ஆனார்.

         பெருமானார் வாயிலாக இன்னும் தமிழ்வேதம் வெளிவருதல் வேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட திருக்கயிலை நாதன், அப்பர் பெருமானுக்கு வடகயிலையில் காட்சி அருளத் திருவுள்ளம் கொள்ளவில்லை.  சிவபெருமான் ஒரு முனிவராய், ஒரு பொய்கையையும் உண்டாக்கி, அப்பர் பெருமானார் எதிரிலே தோன்றி, "உறுப்புக்கள் எல்லாம் தேய்ந்து சிந்த, இந்த அரிய காடுகள் நிறைந்த இம் மலையிலே நீர் வந்ததன் நோக்கம் என்ன" என்று அறியாதவர்போல் வினவினார்.  அத் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டதுமே அப்பர் பெருமானுக்கு, சிறிது பேசும் ஆற்றல் கிடைத்தது.  அப்பர் பெருமானார் திருமுனிவரிடம் தமது கருத்தைத் தெரிவித்தார்.  முனிவர், "கயிலையா? அது தேவர்களுக்கும் கிட்டுதல் அரியது.  மானிடரால் அடைய முடியுமா? நீர் திரும்புவதே நலம்" என்றார்.  அதற்கு அப்பர் பெருமான், "ஆளும் நாயகன் திருக்கயிலையில் இருக்கை கண்டு அல்லால், மாளும் இவ் உடல் கொண்டு மீளேன்" என்றார்.  உடனே, சிவபெருமான் திருவுருக் கரந்து, "நாவுக்கரசனே, எழுந்திரு" என்று அருளினார்.  அப்பர் பெருமான் தீங்கு எல்லாம் நீங்கி, ஒளி திகழ் திருமேனியுடன் எழுந்தார்.

"அண்ணலே, எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே,
விண்ணிலே மறைந்து அருள்புரி வேதநாயகனே,  
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ, நயந்து அருள் புரி" 

என அப்பர் பெருமான் பணிந்தார்.

         அடியார்கள் வேண்டுவதை அருளும் இறைவனும், "நாவுக்கரசனே, இப் பொய்கையில் மூழ்கு. நமது திருக்கயிலைக் கோலத்தைத் திருவையாற்றில் காண்பாய்" என்று அருளினார்.  அப்பர் பெருமானார் அஞ்செழுத்து ஓதிப் பொய்கையில் மூழ்கினார்.  புண்ணிய முனிவராக, திருவையாற்றிலே உள்ள குளத்தில் தோன்றினார்.  அத் திருத்தலத்தில் நிற்பனவும் சரிப்பனவும் சத்தியும் சிவமுமாகப் பொலிவதைக் கண்ணாரக் கண்டார். "கண்டேன் அவர் திருப்பாதம், கண்டு அறியாதன கண்டேன்" என்று உடல் குழைய, எலும்பு எல்லாம் நெக்கு உருக, விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற,  படபட என நெஞ்சம் பதைத்து, பாடி ஆடிக் குதித்தார்.  திருவாயாறு என்னும் அற்புதத் திருத்தலத்தில் பெருமானார் சிறிது காலம் தங்கித் தமிழ்த் தொண்டும், கைத் தொண்டும் செய்து வந்தார்.

     இந் நிகழ்வைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருள்வாக்கால் சிந்தித்து வழிபடுவோம்...


பெரிய புராணப் பாடல் எண் : 354
மாக மீதுவ ளர்ந்த கானகம் ஆகி, எங்கும் மனித்தரால்
போக லாநெறி அன்றி யும்,புரிகின்ற காதல் பொலிந்துஎழ,
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து, தனித்து நேர்
ஏகினார் இரவும் பெருங்கயிலைக் குலக்கிரி எய்துவார்.

         பொழிப்புரை :வானளாவ உயர்ந்த பெருங்காடாகி எங்கும் மனிதர்களால் சேரற்கு அரிய வழியாய் இருந்தபோதும், இடைவிடாது எழும் காதல் மிகுந்து மேல் ஓங்குவதால், இலைகளும் சருகுகளும், கிழங்குகளும் பழங்களும் என்னும் இவற்றை உண்பதையும் விடுத்துத் தனியாய், நேரே பெரிய கயிலாயமான ஒப்பில்லாத மலையை அடையும் பொருட்டு, இரவிலும் தங்காது மேற்செல்வாராகி.


பெ. பு. பாடல் எண் : 355
ஆய ஆர்இரு ளின்கண் ஏகும்அவ் அன்பர் தம்மை அணைந்து, முன்
தீய ஆய விலங்கு வன்தொழில் செய்ய அஞ்சின, நஞ்சு கால்வு
ஆய நாகம் மணிப் பணங்கொள் விளக்கு எடுத்தன, வந்துகால்
தோய வானவர் ஆயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார்.

         பொழிப்புரை : அத்தகைய செறிந்த இருளில் மேற்செல்லும் அன்பரைத், தீய விலங்குகள் நெருங்கிக் கொடுஞ்செயலைச் செய்ய அஞ்சின. நஞ்சை உமிழும் வாயையுடைய பாம்புகள் தம் படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கெடுத்தன. தேவர்களே எனினும் இங்கு வந்து கால் வைத்துப் பெயர்த்துத் தனியே சேர்வதற்கு அஞ்சுகின்ற காடுகளை நாவரசர் முன் அடைந்தனராக,


பெ. பு. பாடல் எண் : 356
வெங்க திர்ப்பகல் அக் கடத்து இடை வெய்யவன் கதிர் கைபரந்து
எங்கும் மிக்க பிளப்பின் நாகர்தம் எல்லை புக்கு எரிகின்றன,
பொங்கு அழல்தெறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும்பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்.

         பொழிப்புரை : அக்காட்டில், கொடிய பகலில், கதிரவனின் கதிர்கள், மிகவும் எப்பக்கமும் பரவுவதால் எங்கும் மிகுதியாய் உள்ள நிலப் பிளவுகளிடையே, கீழே நாகர் உலக எல்லை வரை புகுந்து எரிக்கின்றன. பொங்கும் வெப்பத்தினால் அழிவு செய்யும் பாலையினது வெவ்விய புகுந்த இடத்தில் புகும் அப்பகலோனின் செவ்விய கதிர்களின் வெம்மையை ஒத்துள்ள அத்திசையில் திண்மையுடைய மெய்த்தவத்தவரான நாவரசர் சென்றடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 357
இங்ஙனம் இரவும் பகல் பொழுதும் அரும் சுரம் எய்துவார்,
பங்கயம் புரை தாள் பரட்டு அளவும் பசைத் தசை தேயவும்,
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை வைத்த சிந்தை மறப்பரோ?
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.

         பொழிப்புரை : இவ்வாறு இரவும் பகலும் கடப்பதற்கரிய பெருஞ் சுரத்தில் செல்பவரான நாவரசர், தாமரை மலர் போன்ற தம் திருவடிகள் கணைக்கால்வரை தேய்ந்து போகவும், உமையொரு கூறரின் பெரிய வெள்ளி மலையின் மீது ஊன்றிய நினைவை மறந்து விடுவரோ? மறவாத நிலையில் தம் இரு கைகளையுமே கொண்டு தாவிச் செல்வாராகி.


பெ. பு. பாடல் எண் : 358
கைகளும் மணி பந்து அசைந்து உறவே, கரைந்து சிதைந்தபின்,
மெய்  கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட,
மொய் கடுங்கனல் வெம்பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே,
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.

         பொழிப்புரை : கைகளும் மணிக்கட்டுகளும் அசைந்து போகும் படி தேய்ந்து சிதைந்த பின்பு, மெய்யுடன் கலந்து எழும் அன்பு மிகுதியால் ஆய பெருவிருப்பம் மீதூர, நெருங்கிய தீப்போலும் பரற் கற்களின் புகை எழும் வழியை அடைந்து, கருநிறம் பொருந்திய திருக்கழுத்தினையுடைய சிவபெருமானின் அடியவரான நாவரசர், மேலும் செல்வதற்காக மார்பால் வருத்தத்துடன் உந்திச் சென்றவராய்,


பெ. பு. பாடல் எண் : 359
மார்பமும் தசை நைந்து சிந்தி, வரிந்த என்பு முரிந்திட,
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு
ஆர்வம் அங்குஉயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன்கெடச்
சேர்வு அரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.

         பொழிப்புரை : மார்புத் தசைகள் தேய்ந்து சிதற, ஒன்றுடன் ஒன்று வரிந்து கட்டப்பட்ட எலும்புகளும் முரிந்த நிலையில், அடைதற்கரிய குறிக்கோளினின்றும் தளராத உள்ளத்தே கொண்டிருந்த அன்பினால், சிவபெருமானை நாடிக் காண வேண்டும் என்ற நிலைத்த ஆர்வமானது, அங்கு உயிரால் செலுத்துகின்ற உடல் முழுதும் தசைகள் கெடும் படியாய்ச் சேர்வதற்கு அரிய காட்டில் செம்மை நெறி நிற்பவரான நாவுக்கரசர் புரண்டு புரண்டு செல்வாராய்.


பெ. பு. பாடல் எண் : 360
அப்புறம் புரள்கின்ற நீள்இடை அங்கம் எங்கும் அரைந்திட,
செப்ப அருங் கயிலைச் சிலம்படி சிந்தை சென்றுஉறும் ஆதலால்,
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்தபின், மெல்ல உந்து முயற்சியும்
தப்புறு, செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழாளியார்.

         பொழிப்புரை : அதன்பின்பு, மேலும் புரண்டு செல்கின்ற நீண்ட வழியின் இடையில், உடல் முழுதும் தேய்ந்து போகவே, செல்வதற் கரிய கயிலாயமலையில் திருவுள்ளம் போய்ச் சேருமாதலால், திருமேனியின் புறத்து உறுப்புக்கள் அழிந்த பின்பு மெல்ல மெல்ல உந்திச் செல்லும் முயற்சியும் நீங்கிட, வேறு செய்யும் செயல் அற்றவராய் அந்நெறியில் தமிழ் வல்லுநரான நாவுக்கரசு நாயனார் தங்கியிருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 361
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்,
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த,
நல்நெ டும்புனல் தடமும்ஒன்று உடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமர்ஓர் முனிவர்ஆம் படியால்.

         பொழிப்புரை : அத்தன்மையினரான நாவுக்கரசர், நிலையான இனிய தமிழ்ப் பதிகங்களால் உலகில் மேலும் தம்மைப் போற்றி செய்யும் பொருட்டாகக் கயிலையைச் சென்று அடைவதற்கு அருள் செய்யாதவராய், நல்ல பெரிய நீர் மிக்க ஒரு பொய்கையையும் உளவாக்கிக் கொண்டு தாம் முனிவர் வடிவில் பாம்பைச் சூடிய சிவபெருமான் நடந்து வந்தாராய்,

 
பெ. பு. பாடல் எண் : 362
வந்து மற்றுஅவர் மருங்குஉற, அணைந்துநேர் நின்று,
நொந்து நோக்கி, மற்று அவர்எதிர் நோக்கிட நுவல்வார்,
"சிந்தி இவ்வுறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என்?" என இசைத்தார்.

         பொழிப்புரை : நாவரசர் அருகில் பொருந்தச் சேர்ந்து, நேரே நின்று வருந்தி, அவரைப் பார்த்து, அவரும் தம்மை எதிர் நோக்கச் சொல்பவராய், `உம் உடல் உறுப்புகள் எல்லாம் சிந்தி அழிந்திடுமாறு வருந்திய நிலையில், இக்கொடிய பாலையில் வந்தது என்ன காரணம் பற்றி?` என வினவினார்.


பெ. பு. பாடல் எண் : 363
மாசுஇல் வற்கலை ஆடையும், மார்பில்முந் நூலும்,
தேசு உடைச்சடை மவுலியும், நீறும்மெய் திகழ
ஆசுஇல் மெய்த்தவர் ஆகிநின் றவர்தமை நோக்கி,
பேச உற்றதுஓர் உணர்வுஉற விளம்புவார் பெரியோர்.

         பொழிப்புரை : அழுக்கற்ற மரவுரி ஆடையும், திருமார்பில் முப் புரிநூலும், ஒளி பொருந்திய சடைமுடியும், திருமேனியில் விளங்கும் திருநீறும் ஆக, குற்றமில்லாத மெய்ம் முனிவராய் நின்ற இறைவரைப் பார்த்துப் பெரியோரான நாவுக்கரசர் பேசுதற்குப் பொருந்திய ஓர் உணர்ச்சி தோன்ற உரைப்பாராய்.


பெ. பு. பாடல் எண் : 364
"வண்டு உலாம்குழல் மலைமகள் உடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப் பரிசு,அவர் அடியேன்
கண்டு, கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்,
கொண்ட என்குறிப்பு இது முனியே" எனக் கூற.

         பொழிப்புரை : `வண்டுகள் உலவும் கூந்தலையுடைய உமை யம்மையாருடன் கயிலை மலையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அத்தன்மையை, அவருடைய அடியவனான நான் கண்டு வணங்க வேண்டும் என்ற விருப்புடன், வந்துள்ளேன், முனிவரே! என் உளம் கொண்ட குறிப்பு இதுவாகும்` என்று சொல்ல.


பெ. பு. பாடல் எண் : 365
"கயிலை மால்வரை யாவது, காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ,
அயில்கொள் வேல்படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத்து என்செய்தீர் வந்து"என விளம்பி.

         பொழிப்புரை : `பெரிய கயிலை மலையானது இவ்வுலக மக்கள் சென்றடைதற்கு எளியதோ? கூர்மையான வேற்படையையுடைய தேவர் முதலியவரும் சென்று அடைய இயலாத அருமையுடையதாகும். வெம்மை மிக்க கொடிய இப்பாலை நிலத்திடை வந்து என்ன செயல் செய்து விட்டீர்!` என்பாராய்,


பெ. பு. பாடல் எண் : 366
"மீளும் அத்தனை உமக்குஇனிக் கடன்"என விளங்கும்
தோளும் ஆகமும் துவளுமுந் நூல்முனி சொல்ல,
"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டுமீ ளேன்"என மறுத்தார்.

         பொழிப்புரை : இங்கிருந்து மீண்டு செல்வதே இனி உமக்குக் கடனாகும் என்று, விளங்கும் தோளிலும் மேனியிலும் கிடந்து துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைக்க, `என்னை அடிமையாகவுடைய தலைவராய், சிவபெருமான் திருக் கயிலையில் இருக்கும் கோலத்தைக் கண்டு வணங்கியபின் அல்லது அழியும் இயல்புடைய இவ்வுடலுடன் திரும்பிச் செல்ல ஒருப்படேன்` என்று திருநாவுக்கரசர் மறுத்தனராக.


பெ. பு. பாடல் எண் : 367
ஆங்கு மற்றுஅவர் துணிவுஅறிந்து அவர்தமை அறிய
நீங்கும் மாதவர் விசும்புஇடைக் கரந்து,நீள் மொழியால்,
"ஓங்கு நாவினுக் கரசனே எழுந்திர்" என்று உரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கைகொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.

         பொழிப்புரை : அவ்விடத்தே அவர் கொண்டிருக்கும் துணிவை உலகம் அறிந்து உய்யுமாறு தாம் எண்ணி, அவர், தம்மை இன்னார் என அறிந்து கொள்ளுமாறு நீங்குகின்ற முனிவரான இறைவர், விண்ணில் மறைந்து, நீண்ட தம் மொழியில் வான்வழியாக, `உயர்ந்த நாவுக் கரசனே! எழுந்திரு!` எனக் கூறினர். அந்நிலையில் ஊறுகள் எல்லாம் நீங்கிய உடலுடனே எழுந்து ஒளியில் விளங்குவார் ஆகி,


பெ. பு. பாடல் எண் : 368
"அண்ண லே,எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே,
விண்ணி லேமறைந்து அருள்புரி வேதநா யகனே,
கண்ணி னால்திருக் கயிலையில் இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ, நயந்துஅருள் புரி"எனப் பணிந்தார்.

         பொழிப்புரை : `பெருமை பொருந்திய தலைவரே! எனை ஆண்டு கொண்டருளிய அமுதே! விண்ணினிடமாக மறைந்து அருள் செய்யும் நான்மறையின் தலைவனே! திருக்கயிலை மலையில் வீற்றிருந்தருளும் நும் திருக்கோலத்தை நான் கண்ணால் கண்டு வணங்கும்படியாக விரும்பி அருள் செய்வீராக!` என வேண்டியவாறு கீழே விழுந்து பணிந்தாராக,


பெ. பு. பாடல் எண் : 369
தொழுது எழுந்தநல் தொண்டரை நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால் இறைவர். "இப் பொய்கை
முழுகி, நம்மைநீ கயிலையில் இருந்தஅம் முறைமை
பழுதுஇல் சீர்த்திரு ஐயாற்றில் காண்"எனப் பணித்தார்.

         பொழிப்புரை : அவ்வாறு வணங்கி எழுந்து நின்ற நல்தொண்ட ரான அரசரைப் பார்த்து, வான் ஒலியாய தம் பெருவாக்கினால், `இப்பொய்கையில் மூழ்கி, நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் அம்முறையை, குற்றம் இல்லாத சிறப்புடைய திருவையாற்றிலே சென்று காண்பாயாக!` என்று பெருமானாரும் பணித்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 370
ஏற்றி னார்அருள் தலைமிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
"வேற்றும் ஆகிவிண் ஆகிநின் றார்"மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்து ஓதிப்
பால்த டம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.

         பொழிப்புரை : மேற்கூறியவாறு அருளிய ஆனேற்றினை ஊர்தி யாக உடைய சிவபெருமானின் திருவருளைத் தலைமேற் கொண்டு, எழுந்து வணங்கி, `வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி` எனத் தொடங்கும் திருப்பதிகங்கொண்டு விருப்புடன் வழிபட்டுத் திருவருள் வன்மை பெற்ற நாயனார், இறைவரின் திருவைந்தெழுத்தை ஓதியவாறு, இறைவர் தம் ஆணைப்படி புனித நீர்ப் பொய்கையில் மூழ்கினார்.

         `வேற்றாகி, விண்ணாகி`` (தி.6 ப.55) எனத் தொடங்கும் இத்தாண்டகம், பாடல் தொறும் `கயிலை மலையானே போற்றி போற்றி` எனும் நிறைவுடையதாகும். ஒவ்வொரு பாடலிலும் போற்றி எனும் சொல் ஒன்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதனால் இத்திருப்பதிகம் போற்றித் திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் அமைந்த தாண்டகங்கள் மேலும் இரண்டுள. அவை திருவையாற்றில் பாடப் பெற்றனவாம். (பா. 381 காண்க.)


பெ. பு. பாடல் எண் : 371
ஆதி தேவர்தம் திருவருள் பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ யாற்றில்ஓர் வாவி
மீது தோன்றிவந்து எழுந்தனர்உலகுஎலாம் வியப்ப.

         பொழிப்புரை : முதல் தேவரான சிவபெருமானின் திருவருட் பெருமையை எவர் அறிவார்? உலகமெல்லாம் வியப்பு அடையுமாறு ஞானத் தவமுனிவரான நாவுக்கரசு நாயனார் பனிமலையில் விளங்கிய அப்பொய்கையில் முழ்கி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவையாற்றில் ஒரு பொய்கையின் மேல் வந்து எழுந்தார்.

         கயிலைச் சாரலிலுள்ள ஒரு பொய்கையில் முழ்கியவர், ஐயாற்றில் உள்ள ஒரு பொய்கையில் தோன்ற வந்தது, மனித முயற்சிக்கும் நினைவிற்கும் அப்பாற்பட்ட, திருவருள் வயப்பட்டதாகும். ஆதலின் ஆசிரியர் `ஆதிதேவர் தம் திருவருட் பெருமை யாரறிவார்` எனத் தொடங்கி, இவ்வருட் செயலைக் கூறுவாராயினர். இப்பொய்கை, திருவையாற்றில் திருக்கோயிலின் வடமேற்கில் உள்ளதாகும். சமுத்திர தீர்த்தம், உப்பங்குட்டைப் பிள்ளையார் கோயில் குளம் என்றெல்லாம் இக்காலத்தே அழைக்கப் பெறுகிறது.


பெ. பு. பாடல் எண் : 372
வம்பு உலாமலர் வாவியின் கரையில்வந்து ஏறி
உம்பர் நாயகர் திருவருள்  பெருமையை உணர்வார்
எம்பி ரான்தரும் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியில் படிந்துஎழும் படியார்.

         பொழிப்புரை : மணம் கமழும் மலர்கள் பொருந்திய பொய்கையின் கரையில் வந்து மேல் ஏறி, சிவபெருமானின் பெருமையைத் தம் அநுபவத்தின் உணர்பவராகி, ``எம் இறைவர் அருளும் கருணையோ இது`` என்று இரு கண்களினின்றும் பொங்கித் தாரையாய் வழிகின்ற கண்ணீரின் பொய்கையுள் மூழ்கி எழுகின்ற தன்மை உடையவர் போன்றவராய் ஆகி,

         இதுகாறும் நாவரசர் இறைவனின் அருட்பொய்கையில் மூழ்கி வந்தது, தாம் இறைவரிடத்துச் செலுத்தும் அன்புப் பொய்கையில் மூழ்கி வந்த வகையினாலாம். இறைவர் இவருக்கு அருளியது அருளாக, இவர் அவருக்குக் கொடுத்தது அன்பாக அமைந்தமை எண்ணி மகிழ்தற்குரியது.


பெ. பு. பாடல் எண் : 373
மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணியவந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவம் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.

         பொழிப்புரை : நெருங்கிய நீண்ட கொடிகள் கட்டிய வீதிகளால் சிறப்புற்று விளங்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கும் குறிப்பில் வருகின்ற நாவுக்கரசர், அது பொழுது நிற்பனவும் நடப்பனவுமாய உயிர்கள் அனைத்தும், அருகில் விளங்கி நிற்கும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டனராகி.


பெ. பு. பாடல் எண் : 374
பொன்ம லைக்கொடி யுடன்அமர் வெள்ளிஅம் பொருப்பில்
தன்மை ஆம்படி சத்தியும் சிவமும்ஆம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார்.

         பொழிப்புரை : அழகிய திருக்கயிலை மலையில், கொடி என விளங்கும் பார்வதியம்மையாருடன் விரும்பி வீற்றிருக்கும் தன்மையை, இங்கும் காணும் வண்ணம், சத்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டு வணங்கியவாறே, நிலை பெற்ற முனிவரான திருநாவுக்கரசர் தம் இறைவரது திருக்கோயில் முன் வந்தார்.

         முன்னைய பாடலில், நாவரசர் அனைத்துயிர்களையும் ஆணும் பெண்ணுமாகக் கண்ட அநுபவத்தைக் கூறினார்; இப்பாடலில் அவை சத்தியும் சிவமுமாகக் காணும் அநுபவத்தைக் கூறினார்.

சத்தியும் சிவமும் ஆய தன்மை, இவ் உலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும், உணர்குண குணியும் ஆகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார், பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்.

 -சிவஞானசித்தி.சுபக்.சூ.1 பா.69 எனவரும் மெய்ந்நூற் கருத்தையும் காண்க.


பெ. பு. பாடல் எண் : 375
காணும் அப்பெரும் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன் முதல்பெரும் தேவர்
பூணும் அன்பொடு போற்றுஇசைத்து எழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையும் தனித்தனி முழங்க.

         பொழிப்புரை : தோன்றும் அப்பெரிய கோயிலே பெரிய கயிலாய மலையாக, இறைவரின் தொண்டிற்கு ஆளாக எதிர் நோக்கி இருக்கும் திருமால், நான்முகன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் உள்ளத்துக் கொண்டு அன்புடன் வழிபட, அதனால் எழுகின்ற ஒலிகள் எங்கும் தனித் தனியே ஒலிக்கவும், நிலைபெற்ற மறைகள் யாவும் தனித் தனியே முழங்கவும்.


பெ. பு. பாடல் எண் : 376
தேவர் தானவர் சித்தர்விச் சாதரர் இயக்கர்
மேவும் மாதவர் முனிவர்கள் புடைஎலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும் பெருகுஒலி தழைப்ப.

         பொழிப்புரை : தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்தியாதரர்களும், இயக்கர்களும், பொருந்தும் மாதவர்களும், மாமுனிவர்களும் என்னும் இவர்கள், பக்கங்களில் எங்கும் திரண்டு நிறைந்து விளங்கவும், குவளை மலரையும் வாளையும் போன்ற கண்களையுடைய தேவ அரம்பையர்களின் பாடலும் முழவு ஒலியும் அழிவில்லாத ஏழு கடல்களின் ஒலியினும் மிகுதியாகப் பேரொலி செய்யவும்.


பெ. பு. பாடல் எண் : 377
கங்கை யேமுதல் தீர்த்தம்ஆம் கடவுள்மா நதிகள்
மங்க லம்பொலி புனல்பெரும் தடங்கொடு வணங்க
எங்கும் நீடிய பெருங்கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கு இயங்களால் பூதவே தாளங்கள் போற்ற.

         பொழிப்புரை : கங்கை முதலான தூய தெய்வத் தன்மையுடைய பெரிய நதிகள் பலவும் மங்கல நீர் நிறைந்த பெரும் பொய்கைகளாக வந்து வணங்கவும், எவ்விடத்தும் பரந்த பெரிய சிவகணத் தலைவர்கள் வணங்கவும், ஒலியால் மிகும் பலவகை இயங்களையும் முழக்கிப் பூதகணங்களும் பேய்க்கணங்களும் போற்றவும்.


பெ. பு. பாடல் எண் : 378
அந்தண் வெள்ளிமால் வரைஇரண் டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவுஇடை ஆடிமுன் நணுக.

         பொழிப்புரை : அழகும் குளிர்ச்சியும் பொருந்திய பெரிய வெள்ளிமலைகள் இரண்டாம் என்று அங்கு வந்தவர்கள் எண்ணுமாறு சிவந்த கண்களையுடைய பெரிய ஆனேறு முன்னே நிற்கவும் முன்னாளில் அத்திருப்பதியில் செய்த பெருந்தவப் பயனாகப் பெறும் முதன்மையால் மகிழ்ந்து நந்தியெம் பெருமான், சிவபெருமானுக்கும் அவரை வழிபட வரும் அடியவர்களுக்கும் நடுவில் நடந்து இறைவன் திருமுன்னிலையில் நிற்கவும்.


பெ. பு. பாடல் எண் : 379
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேர்ஒளிப் பவளவெற்பு எனஇடப் பாகம்
கொள்ளும் மாமலை யாள்உடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார்.

         பொழிப்புரை : வெள்ளி மலைமீது மரகதக் கொடியுடனே விளங்கும் தெளிந்த பேரொளியுடைய பவளமலை என்று கூறும் படியாய் இடமருங்கில் உமையம்மையாருடன் வீற்றிருந்தருளும் வள்ளலாரான சிவபெருமானைத் திருநாவுக்கரசு நாயனார் தம் கண் முன்னம் கண்டார்.


பெ. பு. பாடல் எண் : 380
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கைகுவித்து எதிர்விழுந்து எழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்ட னார்க்குஅங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்.

         பொழிப்புரை : அவ்வாறு கண்ட ஆனந்தக் கடலைத் தம் இருகண்களாலும் முகந்து கொண்டவராய்க் கைகளைத் தம் தலைமீது குவித்துத், திருமுன்பு விழுந்து, பின் எழுந்து உடலெல்லாம் அசையும்படி உலகுயிர்கட்கெல்லாம் தலைவரான சிவபெருமான் திருமுன்பு நின்று கொண்டு, திருநாவுக்கரசு நாயனார் ஆடினார், பாடினார், அழுதார். அத்தொண்டருக்கு அங்கு அதுபொழுது நிகழ்ந்தனவாகிய வியத்தகு மெய்ப்பாடுகளைச் சொல்ல வல்லார் யார்? எவரும் இலர்.

         இதுபோது பாடிய நேரிசை, `கனகமா வயிரமுந்து` (தி.4 ப.47) எனத் தொடங்கும் பதிகமாம்.

        
4. 047   திருக்கயிலாயம்                            திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கனகமா வயிரம் உந்து மாமணிக் கயிலை கண்டும்
உன்அகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்
மன்அகனாய் ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான் . எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது .


பாடல் எண் : 2
கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை ஓடி
அதிர்த்துஅவன் எடுத்தி டல்லும் அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவன் ஊன்றி இட்ட நிலைஅழிந்து அலறி வீழ்ந்தான்
மதித்துஇறை ஊன்றினானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில் , பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான் . பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது .


பாடல் எண் : 3
கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்கு
நெறித்துஒரு விரலால் ஊன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்துஇறை ஊன்றினானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான் . மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது .


பாடல் எண் : 4
கடுத்தவன் கண் சிவந்து கயிலைநன் மலையை ஓடி
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு
நொடிப்புஅளவு விரலால் ஊன்ற நோவதும் அலறி இட்டான்
மடித்துஇறை ஊன்றினானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான் . கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

பாடல் எண் : 5
கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை ஓடி
வென்றித்தன் கைத்த லத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான் . அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


பாடல் எண் : 6
களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை ஓடி
நெளித்துஅவன் எடுத்தி டல்லும் நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றி இட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்
மளித்துஇறை ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த , இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான் . விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


பாடல் எண் : 7
கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேனல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான் . இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


பாடல் எண் : 8
கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை ஓடி
வடிவுடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரல்லால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுஉற ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


பாடல் எண் : 9
கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டல்லும் ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , ஈசன் இராவணன் உடல் நெரியுமாறு தன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான் . அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


பாடல் எண் : 10
கற்றனன் கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றுஇறை ஊன்றா முன்னம் உணர்வுஅழி வகையால் வீழ்ந்தான்
மற்றுஇறை ஊன்றி னானேல் மறித்துநோக்கு இல்லை அன்றே.

         பொழிப்புரை : சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .

                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 381
முன்பு கண்டுகொண்டு அருளின்ஆர் அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவிலா ஆர்வம்முன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப் போற்றுதாண் டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்.

         பொழிப்புரை : தம்முன் நேரே கண்டு கொண்டு, திருவருளாய அவ்வரிய அமுதத்தை உண்ணுதற்கேற்ற அளவற்ற அன்பையுடைய வரும், எல்லையற்ற தவத்தை உடையவருமான நாயனார், அளவில்லாத ஆசை முன்னே ததும்பப் பொன் நிறமாய சடையையுடைய சிவபெருமானைப் போற்றும் திருத்தாண்டகங்களை இன்பம் பெருகப் பாடியருளினார்.

         இது பொழுது பாடிய திருத்தாண்டகங்கள் இரண்டாம்.  

1. `பொறையுடைய` (தி.6 ப.56) 
2. `பாட்டான நல்ல` (தி.6 ப.57) 

ஆகிய இவ்விரு திருத்தாண்டகங்களும் கயிலைக் காட்சியை இறையருளால் திருவையாற்றில் கண்டு மகிழ்ந்தபொழுது அருளியவையாம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

                                    6. 056    திருக்கயிலாயம்
                                          திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொறைஉடைய பூமிநீர் ஆனாய் போற்றி
         பூதப் படைஆள் புனிதா போற்றி
நிறைஉடைய நெஞ்சின் இடையாய் போற்றி
         நீங்காதுஎன் உள்ளத்து இருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
         வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறைஉடைய கண்டம் உடையாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே ! பூதப்படையை ஆளும் தூயவனே ! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே ! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே ! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே ! தேவர்களால் வணங்கப்படுபவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 2
முன்பாகி நின்ற முதலே போற்றி
         மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
         ஆறுஏறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி
         என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே ! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே ! அன்பர்களுக்கு ஆபரணமே ! கங்கைச் சடையனே ! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! கண்ணில் பரவியுள்ள ஒளியே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 3
மாலை எழுந்த மதியே போற்றி
         மன்னிஎன் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
         மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
         அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :மாலை மதியமே ! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே ! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே ! வானில் உலவும் பிறை முடியனே ! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ் சாற்றின் தெளிவே ! அடியார் அமுதமே ! காலையில் தோன்றும் இளஞாயிறே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 4
உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
         ஒள்எரி வீசும் பிரானே போற்றி
படரும் சடைமேல் மதியாய் போற்றி
         பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
         தோன்றிஎன் உள்ளத்து இருந்தாய் போற்றி
கடலில் ஒளிஆய முத்தே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே ! எரியை ஏந்தி ஆடும் பிரானே ! பிறையை அணிந்த சடையனே ! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே ! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே ! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே ! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

 
பாடல் எண் : 5
மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
         மாலுக்கும் ஓர்ஆழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
         போகாதுஎன் உள்ளத்து இருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீறு ஆடீ போற்றி
         மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :நீலகண்டனே ! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே ! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே ! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 6
ஆறுஏறு சென்னி முடியாய் போற்றி
         அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
நீறுஏறு மேனி உடையாய் போற்றி
         நீங்காதுஎன் உள்ளத்து இருந்தாய் போற்றி
கூறுஏறும் அங்கை மழுவா போற்றி
         கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
காறுஏறு கண்ட மிடற்றாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :கங்கைச் சடையனே ! அடியார்களுக்கு ஆரமுதே ! நீறு பூசிய மேனியனே ! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே ! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே ! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே ! நீலகண்டனே ! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 7
அண்டம் ஏழ்அன்று கடந்தாய் போற்றி
         ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி
         பாரோர்விண் ஏத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
         தொழில்நோக்கி ஆளும் சுடரே போற்றி
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :ஏழுலகம் கடந்தவனே! ஆதிப்பழம் பொருளே! பழையவினைகளை நீக்குபவனே! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.


பாடல் எண் : 8
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி
         பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகிநினை வார்தம் உள்ளாய் போற்றி
         ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
         யாரும் இகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்துஓடும் நீரே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :பெருகி அலைவீசும் ஆறுபோல்பவனே ! நீங்காத நோய்களை நீக்குபவனே ! உருகி நினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே ! குறைபாடுகளை நீக்கும் பெருமானே ! அரிதில் கிட்டப் பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே ! ஒருவராலும் குறை கூறப் படாதவனே ! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 9
செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி
         தேடிஉணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ்சு உண்ட பொறையே போற்றி
         பொருளாக என்னைஆட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ்சு உகந்தாய் போற்றி
         மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே ! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே ! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே! சான்றோர்கள் புகழும் நற்குணனே ! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 10
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
         மேலாடு புரமூன்றும் எய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
         சிலைஎடுக்க வாய்அலற வைத்தாய் போற்றி
கோலத்தால் குறைவில்லான் தன்னை அன்று
         கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே ! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை, உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே ! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல .

                                             திருச்சிற்றம்பலம்


                                    6. 057    திருக்கயிலாயம்
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாட்டுஆன நல்ல தொடையாய் போற்றி
         பரிசைஅறியாமை நின்றாய் போற்றி
சூட்டுஆன திங்கள் முடியாய் போற்றி
         தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டுஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
         அடங்கார் புரம்எரிய நக்காய் போற்றி
காட்டுஆனை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :மேம்பட்ட பாமாலை சூடியவனே ! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே ! பிறையை முடியில் சூடியவனே ! ஊமத்த மாலையை அணிந்தவனே ! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே ! யானையின் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
         ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
         சாம்பர்மெய் பூசும் தலைவா போற்றி
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
         என்றும்மீ ளாஅருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்குஓர் கண்ணே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே ! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே ! திறமை உடையவனே ! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே ! சாம்பலை உடலில் பூசும் தலைவனே ! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே ! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 3
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
         செல்லாத செல்வம் உடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
         ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
         வேளாத வேள்வி உடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே ! நீங்காத செல்வம் உடையவனே ! வியக்கத்தக்கவனே ! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே ! ஆகாயத்தின் தன்மை உடையவனே ! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே ! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே ! அனல் ஏந்திய அழகனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 4
ஆட்சி உலகை உடையாய் போற்றி
         அடியார்க்கு அமுதுஎலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி
         சூழ்ந்த கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
         மன்னிஎன் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிதும் அரியாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :உலகை ஆள்பவனே ! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே ! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே ! கடல் விடம் உண்டவனே ! மேம்பட்ட மாண்புகளை உடையவனே ! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே ! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 5
முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
         மூவாத மேனி உடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி
         ஏழி னிசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
         மந்திரமும்  தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :தவக்கோலம் பூண்ட முதல்வனே ! மூப்படையாத திருமேனியனே ! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே ! ஏழிசையை விரும்புபவனே ! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே ! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே ! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 6
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி
         உணர்வுஎன்னும் ஊர்வது உடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
         யேசுமா முண்டி உடையாய் போற்றி
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி
         அறிவே அடக்கம் உடையாய் போற்றி
கரியானுக்கு ஆழிஅன்று ஈந்தாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே ! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே ! எரி போன்ற அருள் விளக்கே ! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே ! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே ! அறிவு வடிவானவனே ! நுண்ணியனே ! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .


பாடல் எண் : 7
எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
         ஏறுஅறிய ஏறும் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித்து இருந்தாய் போற்றி
         பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
         மேலார்கள்  மேலார்கள் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ஒன்று உடையாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே ! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே ! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே ! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே ! மேலோருக் கெல்லாம் மேலோனே ! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 8
முடியார் சடையின் மதியாய் போற்றி
         முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியார் இடைஉமையாள் பங்கா போற்றி
         சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
         அமரர் பதிஆள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்றும் எய்தாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :சடையில் பிறை சூடி , திருநீறு பூசிய மூர்த்தியே ! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே ! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே ! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே ! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே ! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .
  
 
பாடல் எண் : 9
போற்றிஇசைத்துஉன் அடிபரவ நின்றாய் போற்றி
         புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி
ஏற்றுஇசைக்கும் வான்மேல் இருந்தாய் போற்றி
         எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நால்திசைக்கும் விளக்காய நாதா போற்றி
         நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றுஇசைக்கும் திசைக்குஎல்லாம் வித்தே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே ! புண்ணியனே ! முயற்சியால் அணுக அரியவனே ! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே ! எண்ணிறந்த பெயர்களை உடையவனே ! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே ! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே ! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .


பாடல் எண் : 10
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
         முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி
         சென்றுஏறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி
         அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

         பொழிப்புரை :மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே ! எங்கும் பரவி யிருப்பவனே ! ஐயோ ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே ! கனகத்திரள் போல்பவனே ! கயிலை மலையானே ! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன் . என்னைக் காப்பாயாக. உனக்கு வணக்கங்கள் பல.
                                                   திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 382
ஆய வாறு மற்று அவர்மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர்தம் துணையொடும் வீற்றிருந்து அருளித்
தூய தொண்டனார் தொழுது எதிர் நிற்கஅக் கோலம்
சேயது ஆக்கினார் திருஐயாறு அமர்ந்தமை திகழ.

         பொழிப்புரை : இவ்வாறாக, நாயனாரின் உள்ளம் மகிழுமாறு திருக்கயிலையில் வீற்றிருக்கும் இறைவர் தம் துணைவியாருடன் வீற்றிருந்தருள, தூயவரான திருத்தொண்டனார் வணங்கிய வண்ணம் நின்று கொண்டிருக்க, திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் தன்மை வெளிப்பட விளங்குமாறு, முன் காட்டியருளிய அக்கயிலைக் கோலத்தைச் சேய்மையாகுமாறு மறைத்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 383
ஐயர் கோலம்அங்கு அளித்து அகன் றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுஉளம் மகிழ்ந்திட வருந்திமற்று இங்குச்
செய்ய வேணியர் அருள்இது வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து.

         பொழிப்புரை : சிவபெருமான் இவ்வாறாகத் திருக்கயிலையில் இருந்த கோலத்தை அங்குக் காணும்படி அளித்து மறைத்தருளினாராக, திருவடித் தொண்டை மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசு நாயனார் மயங்கி, உள்ளத்தில் முன்போலவே இன்னும் மகிழ்ச்சி பெற்றிருக்கும் வண்ணம் வேண்டி, வருந்தி `இனி இங்குச் சிவந்த சடையையுடைய இறைவரின் திருவருள் இவ்வகையதோ?` என்று தெளிவு கொண்டு, உலகம் உய்யும் பொருட்டுத் தாம் கண்ட அவ்வருட் செய்தியை மகிழ்வுடன் பாடுவாராகி.


பெ. பு. பாடல் எண் : 384
"மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்" என்னும்
கோதுஅறு தண்டமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதி கங்கள்
"வேத முதல்வர்ஐ யாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணையொடும் கூடக் கண்டேன்" எனப்பாடி நின்றார்.

         பொழிப்புரை : `மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்` எனத் தொடங்குகின்ற, குற்றம் அற்ற தண்ணிய தமிழ்ச் சொல்லால் ஆய திருப்பதிகத்தை `மறை முதல்வரான இறைவரைத் திருவையாற்றிலே, பொருந்தி நடப்பனவும் நிற்பனவுமான உயிர்கள் யாவும் காதல் பொருந்திய தம் துணைகளுடனே இயைந்து வரக்கண்டேன்` என்னும் கருத்துப்படப் பாடினார்,

         `மாதர்ப் பிறைக் கண்ணியானை` (தி.4 ப.3 பா.1) எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். இப்பாடலில் `யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது` எனவரும் பகுதி, கயிலையிலிருந்து திருவையாற்றிற்குச் சுவடு படாமல் வந்த அருமையைப் புலப்படுத்துகின்றது.

        சரம் - இயங்குவன. அசரம் - நிற்பன. இவ்வரிய திருப்பதிகத்தில் வரும் உயிர்ப் பெயர்கள் யாவும் இயங்குவனவே. இவையனைத்தும் அம்மையும் அப்பனுமாக நாவரசருக்குக் காட்சியளிப்பதோடு, இவை இயங்கும் திருவையாற்றுத் திருக்கோயிலும் பிறதிருக்கோயில்களும் ஆகிய அனைத்தும் உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக விளங்கும் அம்மையப்பரின் திருக்கோலமாகக் காட்சி தருகின்றன. நோக்குவ அனைத்தும் அவையே போல்வதான நிலை பேரின்பக் காட்சிக்கும் உண்டு ஆதலின் சராசரங்கள் எல்லாம் காதல் துணையொடும் கூடக் கண்டேன் என்றார்.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்


4.    003    திருவையாறு        பண் - காந்தாரம்
                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .


பாடல் எண் : 2
போழ்இளம் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம் இட்டு ஆடா வருவேன்
ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 3
எரிப்பிறைக் கண்ணியி னானை ஏந்திழை யாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகமலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்ற போது
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க. இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.


பாடல் எண் : 4
பிறைஇளம் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறைஇளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறைஇளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது
சிறைஇளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 5
ஏடு மதிக் கண்ணியானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 6
தண்மதிக் கண்ணியி னானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள்மெலி சிந்தையன் ஆகி, உணரா உருகா வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 7
கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடிஇணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது
இடிகுரல் அன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 8
விரும்பு மதிக்கண்ணி யானை மெல் இயலாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்,
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 9
முற்பிறைக் கண்ணியி னானை மொய் குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறுஅறுக் கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்ற போது
நல்துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி , அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன் , பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது , சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 10
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி,
எங்குஅருள் நல்கும் கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன்,
அங்குஇள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ , இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : 11
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்
அளவு படாதது ஒர்அன்போடு ஐயாறு அடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்

கண்டேன் அவர்திருப் பாதம் கண்டுஅறி யாதன கண்டேன்.

         பொழிப்புரை :வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி , வீணாகக் கழிக்கப்படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன் , எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும் பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை , ஏறு தழுவ , இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .
                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 385
கண்டு தொழுது வணங்கிகண்ணுத லார்தமைப் போற்றி,




கொண்ட திருத்தாண் டகங்கள், குறுந்தொகை, நேரிசை, அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி, வணங்கி, திருத்தொண்டு செய்தே,
அண்டர் பிரான் திரு ஐயாறு அமர்ந்தனர் நாவுக் கரசர்.

         பொழிப்புரை : இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் கண்டும் தொழுதும் வணங்கியும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைப் போற்றியும், திருத்தாண்டகங்களும் திருக்குறுந்தொகையும், திருநேரிசையும் அன்புடைய திருவிருத்தங்களும் முதலான பதிகங்களைப் பாடியும் திருத்தொண்டுகளைச் செய்த வண்ணம் திருவையாற்றில் தங்கியிருந்தார்.

         குறிப்புரை : இது பொழுது அருளிய பதிகங்கள்: 

1. தாண்டகங்கள்:   (அ) `ஆரார் திரிபுரங்கள்` (தி.6 ப.37)
                                    (ஆ) `ஓசை ஒலியெலாம்` (தி.6 ப.38) 

2. குறுந்தொகைகள்: (அ) `சிந்தைவாய்தல்` (தி.5 ப.27)
                                    (ஆ) `சிந்தை வண்ணத்த ராய்` (தி.5 ப.28)

3. திருநேரிசை:    (அ) `கங்கையை` (தி.4 ப.38)
                                    (ஆ) `குண்டனாய்` (தி.4 ப.39)
                                    (இ) `தானலாது` (தி.4 ப.40)

4. விருத்தங்கள்:   (அ) `அந்திவட்டத்து` (தி.4 ப.98)
                                    (ஆ) `குறுவித்தவா` (தி.4 ப.91)
                                    (இ) `சிந்திப் பரியன` (தி.4 ப.92)

5. பண்:     `விடகிலேன்` (தி.4 ப.13) - பழந்தக்கராகம்.


பெ. பு. பாடல் எண் : 386
நீடிய அப்பதி நின்று நெய்த்தான மேமுத லாக
மாடுஉயர் தானம் பணிந்து மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற அப்பதியாய திருவையாற்றில் இருந்தும், திருநெய்த்தானம் முதலாக அருகில் உள்ள பதிகளை எல்லாம் வணங்கித், திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிச் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் பாடித் திருப்பணிகளையும் செய்து போற்றி, பின்பு தேடிய மாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

        
6. 037    திருவையாறு            திருத்தாண்டகம்
                                       திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
         அனல்ஆடி, ஆரமுதே, என்றேன் நானே,
கூர்ஆர் மழுவாள் படைஒன்று ஏந்திக்
         குறட்பூதப் பல்படையாய் என்றேன் நானே,
பேர் ஆயிரம்உடையாய் என்றேன் நானே,
         பிறைசூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே,
ஆரா அமுதே, என் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே ! தீயில் கூத்து நிகழ்த்துபவனே ! கிட்டுதற்கு அரிய அமுதமே ! கூரிய மழுப்படையை ஏந்துபவனே ! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே ! ஆயிரம் பெயர் உடையவனே ! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே ! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன் .


பாடல் எண் : 2
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும்
         தீர்த்தா, புராணனே என்றேன் நானே,
மூவா மதிசூடி என்றேன் நானே,
         முதல்வா,முக் கண்ணனே என்றேன் நானே,
ஏஆர் சிலையானே என்றேன் நானே,
         இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆஆஎன்று அருள்புரியும் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே ! பழையோய் ! பிறைசூடி ! முதல்வா ! முக்கண்ணா ! அம்பு பூட்டிய வில்லினனே ! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே ! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன் .


பாடல் எண் : 3
அம்சுண்ண வண்ணனே என்றேன் நானே,
         அடியார்கட்கு ஆர்அமுதே என்றேன் நானே,
நஞ்சுஅணி கண்டனே என்றேன் நானே,
         நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே,
நெஞ்சுஉணர வுள்புக்கு இருந்த போது
         நிறையும் அமுதமே என்றேன் நானே,
அஞ்சாதே ஆள்வானே, ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின்றேனே.

         பொழிப்புரை :அழகிய நறுமணப் பொடி பூசியவனே ! அடியவர்களுக்கு ஆரமுதே ! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே ! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே ! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே ! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

  
பாடல் எண் : 4
தொல்லைத் தொடுகடலே என்றேன் நானே,
         துலங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே,
எல்லை நிறைந்தானே என்றேன் நானே,
         ஏழ்நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே,
அல்லல் கடல்புக்கு அழுந்து வேனை
         வாங்கி,அருள் செய்தாய் என்றேன் நானே,
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :பழைய மேல் கடலே ! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே ! விளங்கும் இளம் பிறை சூடீ ! உலகம் முழுதும் நிறைந்தவனே ! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே ! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே ! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

  
பாடல் எண் : 5
இண்டைச் சடைமுடியாய் என்றேன் நானே,
         இருசுடர் வானத்தாய் என்றேன் நானே,
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே,
         துருத்திநெய்த் தானத்தாய் என்றேன் நானே,
கண்டம் கறுத்தானே என்றேன் நானே,
         கனல்ஆகும் கண்ணானே என்றேன் நானே,
அண்டத்துக்கு அப்பால்ஆம் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :சடையில் முடி மாலை அணிந்தவனே ! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே ! அடியவரால் வணங்கப் படுபவனே ! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே ! நீல கண்டனே ! தீக் கண்ணனே ! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .


பாடல் எண் : 6
பற்றார் புரம்எரித்தாய் என்றேன் நானே,
         பசுபதீ, பண்டரங்கா என்றேன் நானே,
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே,
         கடுவிடை ஒன்றுஊர்தியாய் என்றேன் நானே,
பற்றுஆனார் நெஞ்சுஉளாய் என்றேன் நானே,
         பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே,
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :பகைவர் திரிபுரத்தை எரித்தவனே ! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே ! விரைந்து செல்லும் காளை வாகனனே ! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே ! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .


பாடல் எண் : 7
விண்ணோர் தலைவனே என்றேன் நானே,
         விளங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே,
எண்ணார் எயில்எரித்தாய் என்றேன் நானே,
         ஏகம்பம் மேயானே என்றேன் நானே,
பண்ணார் மறைபாடி என்றேன் நானே,
         பசுபதீ பால்நீற்றாய் என்றேன் நானே,
அண்ணாஐ யாறனே என்றேன் நானே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :தேவர் தலைவனே ! விளங்கும் பிறை சூடியே ! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே ! ஏகம்பத்தில் உறைபவனே ! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே ! ஆன்மாக்களின் தலைவனே ! வெள்ளிய நீறணிந்தவனே ! அண்ணால் ! ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .


பாடல் எண் : 8
அவன்என்று, நான்உன்னை அஞ்சா தேனை
         அல்லல் அறுப்பானே என்றேன் நானே,
சிவன்என்று நான்உன்னை எல்லாம் சொல்லச்
         செல்வம் தருவானே என்றேன் நானே,
பவன்ஆகி என்உள்ளத்து உள்ளே நின்று
         பண்டை வினைஅறுப்பாய் என்றேன் நானே,
அவன்என்றே ஆதியே ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :வீணன் என்று சொல்லுமாறு , உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே ! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே ! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே ! ஆதியே ! ஐயாற்றுப் பெருமானே ! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன் .


பாடல் எண் : 9
கச்சி எகம்பனே என்றேன் நானே,
         கயிலாயா காரோணா என்றேன் நானே,
நிச்சன் மணாளனே என்றேன் நானே,
         நினைப்பார் மனத்துஉளாய் என்றேன் நானே,
உச்சம்போது ஏறுஏறீ என்றேன் நானே,
         உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே,
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின்றேனே.

         பொழிப்புரை :கச்சியில் ஏகம்பத்து உறைபவனே ! கயிலாயனே ! குடந்தை நாகைக் காரோணனே ! நித்திய கல்யாணனே ! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே ! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே ! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே ! அச்சம் , நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .


பாடல் எண் : 10
வில்லாடி வேடனே என்றேன் நானே,
         வெண்ணீறு மெய்க்குஅணிந்தாய் என்றேன் நானே,
சொல்லாய சூழலாய் என்றேன் நானே,
         சுலாவாய தொல்நெறியே என்றேன் நானே,
எல்லாம்ஆய் என்உயிரே என்றேன் நானே,
         இலங்கையர்கோன் தோள்இறுத்தாய் என்றேன் நானே,
அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே,
         என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.

         பொழிப்புரை :வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே ! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே ! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே ! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே ! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே ! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே ! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

                                    திருச்சிற்றம்பலம்
     
6. 038    திருவையாறு            திருத்தாண்டகம்
                                     திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஓசை ஒலிஎலாம் ஆனாய் நீயே,
         உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே,
வாச மலர்எலாம் ஆனாய் நீயே,
         மலையான் மருகனாய் நின்றாய் நீயே,
பேசப் பெரிதும் இனியாய் நீயே,
         பிரானாய் அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
தேச விளக்குஎலாம் ஆனாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய் .


பாடல் எண் : 2
நோக்கஅரிய திருமேனி உடையாய் நீயே,
         நோவாமே நோக்குஅருள வல்லாய் நீயே,
காப்புஅரிய ஐம்புலனும் காத்தாய் நீயே,
         காமனையும் கண்அழலால் காய்ந்தாய் நீயே,
ஆர்ப்புஅரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே,
         அடியான்என்று அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
தீர்ப்புஅரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய் ! பசி, பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன் . நீ , அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய் . மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய் . கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய் . உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய் . மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய் . இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய் .


பாடல் எண் : 3
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே,
         கடல்வரைவான் ஆகாயம் ஆனாய் நீயே,
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே,
         சார்ந்தாரைத் தகைந்துஆள வல்லாய் நீயே,
மனத்துஇருந்த கருத்துஅறிந்து முடிப்பாய் நீயே,
         மலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய் நீயே,
சினத்துஇருந்த திருநீல கண்டன் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொன் சோதியே! நீ மேகத்தில் மின்னல்களாகவும் , கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும் , மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும் , உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும் , அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும் , என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும், சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய் .


பாடல் எண் : 4
வான்உற்ற மாமலைகள் ஆனாய் நீயே,
         வடகயிலை மன்னி இருந்தாய் நீயே,
ஊன்உற்ற ஒளிமழுவாள் படையாய் நீயே,
         ஒளிமதியோடு அரவுபுனல் வைத்தாய் நீயே,
ஆன்உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே,
         அடியான்என்று அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
தேன்உற்ற சொல்மட வாள் பங்கன் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய். புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய். சடையில் பிறை, பாம்பு, கங்கை இவற்றை வைத்தாய். பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய். அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய். தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய்.


பாடல் எண் : 5
பெண்ஆண் பிறப்புஇலியாய் நின்றாய் நீயே,
         பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே,
உண்ணா அருநஞ்சம் உண்டாய் நீயே,
         ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே,
கண்ணாய் உலகுஎலாம் காத்தாய் நீயே,
         கழற்சே வடிஎன்மேல் வைத்தாய் நீயே,
திண்ணார் மழுவாள் படையாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய் , மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய் , வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய் .


பாடல் எண் : 6
உற்றுஇருந்த உணர்வுஎலாம் ஆனாய் நீயே,
         உற்றவர்க்குஓர் சுற்றமாய் நின்றாய் நீயே,
கற்றுஇருந்த கலைஞானம் ஆனாய் நீயே,
         கற்றவர்க்குஓர் கற்பகமாய் நின்றாய் நீயே,
பெற்றுஇருந்த தாய்அவளின் நல்லாய் நீயே,
         பிரானாய் அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
செற்றுஇருந்த திருநீல கண்டன் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய். அடியவர்கள் சுற்றமாக உள்ளாய். கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய். பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய். பிரானாய் அடி என்மேல் வைத்தாய். நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய்.


பாடல் எண் : 7
எல்லா உலகமும் ஆனாய் நீயே,
         ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே,
நல்லாரை நன்மை அறிவாய் நீயே,
         ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே,
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே,
         புகழ்ச்சே வடிஎன்மேல் வைத்தாய் நீயே,
செல்வாய செல்வம் தருவாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய் , ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய் , நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய் , ஞான ஒளி வீசும் விளக்காய் , கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய் .


பாடல் எண் : 8
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே,
         அளவுஇல் பெருமை உடையாய் நீயே,
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே,
         போர்க்கோலம் கொண்டுஎயில் எய்தாய் நீயே,
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே,
         நண்ணி அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
தேவர் அறியாத தேவன் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய் , எல்லையற்ற பெருமையை உடையவனாய் , பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய், போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய், நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய், நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய், ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 9
எண்திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே,
         ஏகம்பம் மேய இறைவன் நீயே,
வண்டுஇசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே,
         வாரா உலகுஅருள வல்லாய் நீயே,
தொண்டுஇசைத்துஉன் அடிபரவ நின்றாய் நீயே,
         தூமலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய் நீயே,
திண்சிலைக்குஓர் சரம்கூட்ட வல்லாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய் . ஏகம்பம் மேவிய இறைவன் நீ . வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன் . சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன் . அடியார்கள் உன் திருத் தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய் . தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய் . திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய் .


பாடல் எண் : 10
விண்டார் புரமூன்றும் எய்தாய் நீயே,
         விண்ணவர்க்கு மேல்ஆகி நின்றாய் நீயே,
கண்டாரைக் கொல்லுநஞ்சு உண்டாய் நீயே,
         காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே,
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே,
         தூமலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய் நீயே,
திண்தோள்விட்டு எரிஆடல் உகந்தாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய் . தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய் . பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய் . பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய் . அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய் . தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் . திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய் .


பாடல் எண் : 11
ஆரும் அறியா இடத்தாய் நீயே,
         ஆகாயம் தேர்ஊர வல்லாய் நீயே,
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
         பெரிய முடிபத்து இறுத்தாய் நீயே,
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே,
         ஒண்தா மரையானும் மாலும் கூடித்
தேரும் அடிஎன்மேல் வைத்தாய் நீயே,
         திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.

         பொழிப்புரை :ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய் . வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய் . பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய் . வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய் . பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய் . அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய் .
                                             திருச்சிற்றம்பலம்

5. 027    திருவையாறு            திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சிந்தை வாய்தல் உளான் வந்து, சீரியன்,
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்,
முந்தி வாயதுஓர் மூவிலை வேல்பிடித்து,
அந்தி வாயதுஓர் பாம்பர், ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றின் கண் எழுந்தருளியுள்ள இறைவர், அன்பர்களின் சிந்தையின்கண் வந்து பொருந்துதல் உடையவர் ; சீர்மை உடையவர் ; பொந்துகளை உடைய நீண்ட புலால் உடைய வெண் தலையைக் கையில் ஏந்தியவர் ; முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலைவேல் பிடித்து , அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர் .


பாடல் எண் : 2
பாகம் மாலை மகிழ்ந்தனர், பால்மதி,
போக ஆனையின் ஈர்உரி போர்த்தவர்,
கோக மாலை குலாயதுஓர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ்து ஆடும் ஐயாறரே.

         பொழிப்புரை : ஒருபாகத்தே திருமாலை உடையவர் . பால்மதியை மகிழ்ந்தளித்தவர் . இடர்கள்போக ஆனையின் உரியைப் போர்த்தவர் , தோள்களில் கொன்றைமலர் சூடியவர் . ஆனைந்து ஆடுபவர் .


பாடல் எண் : 3
நெஞ்சம் என்பதுஓர் நீள்கயம் தன்னுளே
வஞ்சம் என்பதுஓர் வான்சுழிப் பட்டு,நான்
துஞ்சும் போழ்து,நின் நாமத் திருஎழுத்து
அஞ்சும் தோன்ற அருளும், ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவரே ! நெஞ்சமாகிய ஆழமுடைய நீர் நிலைக்குள்ளே வஞ்சம் என்கின்ற தப்பவியலாத சுழியிலே நான்பட்டு இறக்கும் போது . தேவரீர் திருநாமமாகிய திருவைந்தெழுத்தும் தோன்ற அருள்வீராக .


பாடல் எண் : 4
நினைக்கும் நெஞ்சின்உள் ளார், நெடு மாமதில்
அனைத்தும் ஒள்அழல் வாய்எரி ஊட்டினார்,
பனைக்கை வேழத்து உரிஉடல் போர்த்தவர்,
அனைத்து வாய்தல்உள் ளாரும் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் தம்மை நினைக்கின்றவர்தம் நெஞ்சில் உள்ளவர் ; நீண்ட முப்புரங்கள் மூன்றையும் சுடர்விடுகின்ற அழல் உண்ணுமாறு எரி யூட்டியவர் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துத் தம்திருமேனியிற் போர்த்தவர் ; எல்லாப் பொருள்களினுள்ளும் கலந்து நிற்கும் இயல்பினர் .


பாடல் எண் : 5
பரியர், நுண்ணியர், பார்த்தற்கு அரியவர்,
அரிய பாடலர், ஆடலர், அன்றியும்
கரிய கண்டத்தர், காட்சி பிறர்க்குஎலாம்
அரியர், தொண்டர்க்கு எளியர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றில் எழுந்தருளும் இறைவர் , பருப் பொருளாயவர் . நுண்பொருளாயவர் . பார்த்தற்கு அரியவர் . அரிய பாடலையும் ஆடலையும் உடையவர் . கரிய கழுத்தினர் ( திருநீல கண்டர் ). பிறர்க்கெலாம் காண்டற்கு அரியவர் . தொண்டருக்கோ எளியவர் .


பாடல் எண் : 6
புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளால் பணி யச்சிலர்,
இலரும் போதும் இலாததும், அன்றியும்,
அலரும் போதும் அணியும் ஐயாறரே.

         பொழிப்புரை : இருள்புலரும் காலைப் பொழுதிலும் சூரியன் மறையும் அந்திப்பொழுதிலும் இதழ்விரியும் மலர்களால் விதிமுறை தெரிந்தோர் சிலர் பணிய , அங்ஙனம் ஆகமவிதி அறியாதார் இறைவன் சூடும் மலரல்லாத மலர்களையும் , இலைகளையும் கொண்டு அருச்சிக்க அவற்றையும் அணிவன் ஐயாறன் .


பாடல் எண் : 7
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர், காதன்மை செய்தவர்,
மங்குஐ மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே.

         பொழிப்புரை : இம் மங்கையைக் காதன்மை செய்தவர் இடப் பாகத்தே அழகிய மாலையணிந்த கூந்தலையுடைய பார்வதியைக் கொண்ட கங்கை மாலையர் , அங்கமாலை முதலியவற்றைச் சூடும் ஐயாறர் .


பாடல் எண் : 8
முன்நை ஆறு முயன்றுஎழு வீர்எலாம்
பின்நை ஆறு பிரிஎனும் பேதைகாள்,
மன்ஐ யாறு மருவிய மாதவன்
தன்னை ஆறு தொழத்தவம் ஆகுமே.

         பொழிப்புரை : முன் துன்ப நெறியின்கண் முயன்றொழுகுவீர் எல்லோரும் பின் அத்துன்ப நெறியினின்று பிரித்தருளுவீராக என்று வேண்டும் அறியாமையுடையவர்களே ! நிலைத்த ஐயாற்றில் எழுந்தருளிய மாதவனை முறையே தொழத்தவமாகும் .


பாடல் எண் : 9
ஆன்ஐ ஆறுஎன ஆடுகின் றான்,முடி
வான் ஐஆறு வளாயது காண்மினோ,
நான்ஐ யாறுபுக் கேற்குஅவன் இன்னருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.

         பொழிப்புரை : பஞ்சகவ்வியங்களைத் திருவபிடேகம் கொண்டு ஆடுகின்றவனாகிய பெருமான் திருமுடியில் வானையளாவிய கங்கை பாய்வதைக் காண்பீராக ; ஐயாறு புகுந்த அடியேனுக்கு அவன் இன்னருள் தேன் ஆறு திறந்து பாய்ந்தாற் போன்று தித்தித்திருக்கும் .


பாடல் எண் : 10
அரக்கின் மேனியன், அந்தளிர் மேனியன்,
அரக்கின் சேவடி யாள்அஞ்ச, அஞ்சல்என்று
அரக்கன் ஈர்ஐந்து வாயும் அலறவே
அரக்கி னான்அடி யாலும் ஐயாறனே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செவ்வரக்கினைப் போன்று சிவந்த மேனியனும் , அழகிய தளிர் போன்று விளங்கும் மேனியனும் ஆவன் ; செவ்வரக் கனைய சிவந்த அடி உடைய உமாதேவி அஞ்சுதலும் , ` அஞ்சேல் ` என்று கூறி இராவணனது பத்து வாய்களும் அலறுமாறு தன் திருவடி விரலால் அரக்கியவன் ஆவன் .
                                                      திருச்சிற்றம்பலம்

   
5. 028    திருவையாறு       திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சிந்தை வண்ணத்த ராய், திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறுஅணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதுஓர்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியவர்களின் சிந்தை வண்ணமும் ; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும் , முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும் , தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர் .


பாடல் எண் : 2
மூல வண்ணத்த ராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தர் ஆகி நெடும்பளிங்கு,
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும் , முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும் , வளமையான சுடர்விடுகின்ற நீலநிறமும் நீண்ட பளிங்கனைய தம் திருவுருவத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர் .


பாடல் எண் : 3
சிந்தை வண்ணமும், தீயதுஓர் வண்ணமும்,
அந்திப் போதுஅழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்த தொர் வண்ணமும்,
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும் , தீயின் வண்ணமும் , அழகாகிய அந்திப்போதின் வண்ணமும் , தானும் , கடாவும் , பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர் .


பாடல் எண் : 4
இருளின் வண்ணமும், ஏழ்இசை வண்ணமும்,
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் . இருளின் வண்ணமும் , ஏழிசைகளின் வண்ணவேற்று மைகளும் , சுருண்ட சடையின் வண்ணமும் , ஒளியின் வண்ணமும் , நான்முகனும் திருமாலும் விண்பறந்தும் மண் புகுந்தும் காண்டற் கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர் .


பாடல் எண் : 5
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும், கூடியும்
மழைக்கண் மாமுகில் ஆகிய வண்ணமும்,
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணை வண்ணமும் , மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும் , தம்மடியார்களை அழைத்து அருள்வழங்கும் வண்ணமும் உடையவர் .


பாடல் எண் : 6
இண்டை வண்ணமும், ஏழ்இசை வண்ணமும்,
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும் , ஏழிசை வடிவாகிய இயல்பும் , தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும் , ஒளி இயல்பும் , கண்ட வண்ணங்கள் அனைத்தும் , கனல்போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்கவண்ணமும் , அண்டங்களின் வண்ணமும் ஆகியவர் .


பாடல் எண் : 7
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்,
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்,
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் , வேதத்தின் இயல்பும் , கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும் , தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும் , அரும்பின் இயல்பும் உடையராவர் .


பாடல் எண் : 8
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ ஈர்உரி போர்த்ததொர் வண்ணமும்,
வாழித் தீஉரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஒளிரும் இயல்பும் , ஒளிச்சுடர் இயல்பும் , யானையின் பச்சைத்தோலைப் போர்த்தருளிய இயல்பும் , ஊழித்தீ உருவாகிய இயல்பும் , கடல்வண்ணமும் உடையவராவர் .


பாடல் எண் : 9
செய்த வன்திரு நீறுஅணி வண்ணமும்,
எய்த நோக்குஅரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியதுஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன் , ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன் . காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன், மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன் . மென்மை தழுவிய அழகினன் .


பாடல் எண் : 10
எடுத்த வாள்அரக் கன்திறல் வண்ணமும்,
இடர்கள் போல்பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம் பால்இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே.

         பொழிப்புரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல் , துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும் , மிகுந்த தன் கைநரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர் .

                                    திருச்சிற்றம்பலம்

4. 038    திருவையாறு                     திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கங்கையைச் சடையுள் வைத்தார், கதிர்ப்பொறி அரவும் வைத்தார்,
திங்களைத் திகழ வைத்தார், திசைதிசை தொழவும் வைத்தார்,
மங்கையைப் பாகம் வைத்தார், மான்மறி மழுவும் வைத்தார்,
அங்கையுள் அனலும் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : நம் தலைவனாராகிய ஐயாறனார் , சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய் , மான்குட்டியையும் , மழுப்படையையும் , உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார் .


பாடல் எண் : 2
பொடிதனைப் பூச வைத்தார், பொங்குவெண் நூலும் வைத்தார்,
கடியது ஓர் நாகம் வைத்தார் , காலனைக் கால வைத்தார்,
வடிவுடை மங்கை தன்னை மார்பில்ஓர் பாகம் வைத்தார்,
அடிஇணை தொழவும் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : ஒளி விளங்கும் பூணூலை அணிந்து , கொடிய நாகத்தைப் பூண்டு , கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து , அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார் .


பாடல் எண் : 3
உடைதரு கீளும் வைத்தார், உலகங்கள் அனைத்தும் வைத்தார்,
படைதரு மழுவும் வைத்தார், பாய்புலித் தோலும் வைத்தார்,
விடைதரு கொடியும் வைத்தார், வெண்புரி நூலும் வைத்தார்,
அடைதர அருளும் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : கீளொடு கோவணம் அணிந்து , உலகங்களை நிலை நிறுத்தி , மழுப்படை ஏந்தி , பாய்கின்ற புலியின் தோலை உடுத்து , காளை எழுதிய கொடியை உயர்த்தி , வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார் .


பாடல் எண் : 4
தொண்டர்கள் தொழவும் வைத்தார், தூமதி சடையில் வைத்தார்,
இண்டையைத் திகழ வைத்தார் , எமக்கு என்றும் இன்பம் வைத்தார்,
வண்டுசேர் குழலி னாளை மருவி ஓர் பாகம் வைத்தார்,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார் , சடையில் தூய பிறையைச் சூடி , முடி மாலையை விளங்க வைத்து , வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய் , அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார் .


பாடல் எண் : 5
வானவர் வணங்க வைத்தார், வல்வினை மாய வைத்தார்,
கான்இடை நடமும் வைத்தார், காமனைக் கனலா வைத்தார்,
ஆன்இடை ஐந்தும் வைத்தார், ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்,
ஆனையின் உரிவை வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய், அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய் , சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய் , மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து , பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து , யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார் .


பாடல் எண் : 6
சங்குஅணி குழையும் வைத்தார், சாம்பர்மெய் பூச வைத்தார்,
வெங்கதிர் எரிய வைத்தார், விரிபொழில் அனைத்தும் வைத்தார்,
கங்குலும் பகலும் வைத்தார், கடுவினை களைய வைத்தார்,
அங்கம் அது ஓத வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய் , அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய் , சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய் , எல்லா உலகங்களும் படைத்தவராய் , இரவையும் , பகலையும் தோற்றுவித்தவராய் , கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய் , வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணர வைத்தவராய் உள்ளார் .


பாடல் எண் : 7
பத்தர்கட்கு அருளும் வைத்தார், பாய்விடை ஏற வைத்தார்,
சித்தத்தை ஒன்ற வைத்தார், சிவம் அதே நினைய வைத்தார்,
முத்தியை முற்ற வைத்தார், முறைமுறை நெறிகள் வைத்தார்,
அத்தியின் உரிவை வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய், காளையை ஏறியூர்பவராய் , அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய், அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய், அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய், அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய், யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார .


பாடல் எண் : 8
ஏறு உகந்து ஏற வைத்தார், இடைமருது இடமும் வைத்தார்,
நாறு பூங் கொன்றை வைத்தார், நாகமும் அரையில் வைத்தார்,
கூறு உமை பாகம் வைத்தார், கொல்புலித் தோலும் வைத்தார்,
ஆறும் ஓர் சடையில் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக் காளை வாகனத்தை உடையவராய் , இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய் , நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய், இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய், பார்வதிபாகராய் , கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார் .


பாடல் எண் : 9
பூதங்கள் பலவும் வைத்தார், பொங்குவெண் நீறும் வைத்தார்,
கீதங்கள் பாட வைத்தார், கின்னரம் தன்னை வைத்தார்,
பாதங்கள் பரவ வைத்தார், பத்தர்கள் பணிய வைத்தார்,
ஆதியும் அந்தம் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய் , ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய், இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய், இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார்.


பாடல் எண் : 10
இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார்,
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநர கங்கள் வைத்தார்,
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்,
அரக்கனுக்கு அருளும் வைத்தார், ஐயன் ஐயாற னாரே.

         பொழிப்புரை : தலைவராகிய ஐயாறனார் , பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய் , அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய் , நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய் , பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய் , இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார் .

                                             திருச்சிற்றம்பலம்

                                                                        -----   தொடரும் -----









12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...