திரு ஐயாறு
(திருவையாறு)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
திருவையாற்றின் மையப்பகுதியில்
இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் திருவையாறு
இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
இறைவர்
: பஞ்சநதீசுவரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீசுவரர், பிரணதார்த்திஅரன்.
இறைவியார்
: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
தல
மரம் : வில்வம்.
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.
தேவாரப்
பாடல்கள்: 1. சம்பந்தர் -1. கலையார் மதியோடு
2. பணிந்தவர் அருவினை
3. புலனைந்தும்
பொறிகலங்கி
4. கோடல் கோங்கம்
5. திருத்திகழ்
மலைச்சிறுமி
2. அப்பர் -1. மாதர் பிறைக்கண்ணியானை
2. விடகிலேன் அடிநாயேன்
3. கங்கையை சடையுள்
4. குண்டனாய்ச் சமணரோடே
5.
தானலாது
உலகமில்லை
6. அந்திவட்டத் திங்கள்
7. குறுவித்வா குற்ற
8.
சிந்திப்
பரியன
9. சிந்தை வாய்தலு
10.
சிந்தை
வண்ணத்த
11.
ஆரார்
திரிபுரங்கள்
12.
ஓசை
யொலியெலா)
3. சுந்தரர் - பரவும் பரிசொன்று
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக்
கருதப்படும் 6 சிவத்தலங்களில்
திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவத்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.
ஏழு நிலைகளையுடைய இராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய
கோயிலாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய திருத்தலம்.
முதல் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள
தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது.
இரண்டாம் திருச்சுற்றில் சோமஸ்கந்தருக்கு தனி
ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிட்டை
செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிட்டை
செய்யப்பட்டுள்ளன.
மூன்றாம் திருச்சுற்றில் கிழக்கிலும்
தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.
நான்காம் திருச்சுற்றில் சூரியபுஷ்கரணி
தீர்த்தமும், அப்பர் கைலாயக்
காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் நானுக் புறமும் கோபுரங்கள்
இருக்கின்றன.
ஐந்தாம் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய
ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி
சந்நிதியிலும், அம்பாள்
சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை
விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் சிற்பம் சற்று
மாறுபட்டது.
வழக்கமாக இந்த அர்த்தநாரீசுவரர் சிற்பங்களில்
சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும்
தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக்
காணலாம். இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது. இறைவனின் கருவறையில் விரிசடை
படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்று வலம்
வரக்கூடாது என்பது கடைபிடிக்கப்படுகிறது.
இத்திருத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள்
முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் திருச்சுற்றின் வடபுறம் "ஓலோக
மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கயிலாயம்"
எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின்
பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. தென்புறம் "தென் கைலாயம்"
எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான
பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சந்நிதி
முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம்,
கீழைக்
கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.
இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள
சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோயில்கள் உள்ளன. மூலவர் ஐயாறப்பர் சுயம்பு
லிங்கமாகும். இந்த இலிங்கம் பிருதிவி இலிங்கம் ஆகையால் அபிஷேகம்
செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இலிங்கத்
திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.
திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர்
ஏகாம்பரநாதரும் ஒரு பிருதிவிலிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே
சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருதிவி லிங்கம் என்பது
குறிப்பிடதக்கது.
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப்
போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32
அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இறைவி
இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல்
இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை
மஹாவிஷ்னு கோலத்தில் தோற்றமளிக்கிறாள்.
இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய
வேலவனாக "தனுசு சுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு
திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில்
விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில்
இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல்
உள்ளது.
இங்குள்ள தட்சினமூர்த்தி
ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில்
கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து
ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு
ஸ்ரீபஞ்சநதீசுவரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து
ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால்,
வேதங்களின்
பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு
வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்)
அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு தலம் எனப் போற்றப்படுகிற இந்தக்
கோயிலில், மாதந்தோறும்
உத்திரட்டாதி நட்சத்திர நாளில்,
குரு
பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள்
நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு,
அபிஷேகம்
செய்து தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சி நிலைக்கும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள
ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம்
இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம்
அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய
சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோயிலுக்குச் செல்வது ஒரு
மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும்
போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில்
நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த
விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப்
பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட
விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு
மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்.
திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.
அப்பரின் கைலாயக்
காட்சி:
திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். கயிலாயப்
பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க
முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப்
பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு
முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கயிலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை
எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கயிலைநாதனைக் காணாமல்
ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து
அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்!
அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில்
மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான்
கூறியபடி அவருக்கு கயிலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்
மாதர்
பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு
நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ்
சுவடு படாம லையா றடைகின்றபோது
காதன்
மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்திருப்
பாதங் கண்டறி யாதன கண்டேன்
என்ற
பாடலுடன் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை தரிசித்தார்.
இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின்
வெளிச்சுற்றில் உள்ள வடகயிலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கயிலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய
ஒன்றாகும்.
இறைவன் ஆதி சைவராக
வந்தது:
திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி
யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய
நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக்
கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு
வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும்
எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர்
ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில
நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற
குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி
சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும்
உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர்
இத்தலத்து இறைவன் ஐயாறப்பர்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "பண்பு அகன்ற வெய்ய ஆற்றில் நின்றவரை, மெய் ஆற்றில் ஏற்று திரு
ஐயாற்றின் மேவிய என் ஆதரவே" என்று போற்றி உள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------
சப்தத் தானங்கள்
என்று வழங்கப்படுபவை
திருவையாறு
சப்தஸ்தானம்
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
கும்பகோணம்
சப்தஸ்தானம்
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி
சக்கரப்பள்ளி
சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை
மயிலாடுதுறை
சப்தஸ்தானம்
மயிலாடுதுறை
ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை, துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
கரந்தட்டாங்குடி
சப்தஸ்தானம்
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)
நாகப்பட்டினம்
சப்தஸ்தானம்
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்
திருநல்லூர்
சப்தஸ்தானம்
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை
திருநீலக்குடி
சப்தஸ்தானம்
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி
திருக்கஞ்சனூர்
சப்தஸ்தானம்
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 299
பழனத்து
மேவிய முக்கண் பரமேட்டி யார்பயில்
கோயில்
உழைபுக்கு
இறைஞ்சி நின்று ஏத்தி, உருகிய சிந்தையர் ஆகி,
விழைசொல்
பதிகம் விளம்பி, விருப்புடன் மேவி
அகல்வார்,
அழல்
நக்க பங்கய வாவி ஐயாறு சென்று
அடைகின்றார்.
பொழிப்புரை : திருப்பழனத்தில்
வீற்றிருக்கும் முக்கண்களை உடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று
போற்றி உருகிய உள்ளத்தையுடையவராகி,
விரும்புதற்குரிய
தமிழ்ச்சொல் பதிகத்தைப் பாடிப் பெருவிருப்புடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்தும் நீங்குபவராய்த்
தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவர்.
பெ.
பு. பாடல் எண் : 300
மாடநிரை
மணிவீதித் திருஐயாற்றினில் வாழும் மல்கு
தொண்டர்,
'நாடு உய்யப் புகலி வரு
ஞானபோனகர் வந்து நண்ணி னார்'என்று
ஆடலொடு
பாடல்அறா அணிமூதூர் அடைய அலங்காரம்
செய்து,
நீடு மனக்
களிப்பினொடும் எதிர்கொள்ள, நித்தில யானத்து
நீங்கி.
பொழிப்புரை : நிரல்பட அமைந்த
மாடங்களைக் கொண்ட திரு வையாற்றில் வாழ்கின்ற அடியவர்கள், உலகம் உய்யும் பொருட்டுச் சீகாழியில்
தோன்றி ஞான அமுதம் உண்ட பிள்ளையார் வருகின்றார் என்னும் பதைப்பு உளங்கொண்ட
ஆர்வத்தால், ஆடலொடு பாடல் அறாத
அழகிய அப்பழமையான நகரை முழுமையாக அணிசெய்து, பெருகிய உள்ள மகிழ்வுடன் வரவேற்கப்
பிள்ளையாரும் முத்துச் சிவிகையினின்றும் இறங்கிவந்து,
பெ.
பு. பாடல் எண் : 301
வந்துஅணைந்து, திருத்தொண்டர்
மருங்குவர,
மான்ஏந்து கையர்
தம்பால்
நந்திதிரு
வருள்பெற்ற நல்நகரை
முன்இறைஞ்சி நண்ணும்
போதில்,
ஐந்துபுலன்
நிலைகலங்கும்இடத்துஅஞ்சல்
என்பார்தம் ஐயாறு என்று
புந்திநிறை
செந்தமிழின் சந்தஇசை
போற்றி இசைத்தார்
புகலி வேந்தர்.
பொழிப்புரை : திரண்டுவந்த
தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர,
மானை
ஏந்திய கையையுடைய இறைவனிடத்தில் நந்தியெம் பெருமான் அருளைப் பெற்ற அத்திருப்பதியை
வணங்கி, புலனைந்தும்
பொறிகலங்கி நெறி மயங்கியவிடத்து,
`அஞ்சற்க\' என்று அருளுரை வழங்கும் இறைவரது
திருவையாறு இதுவாகும் எனும் திருவுளத்துடன், மனம் நிறைந்து எழுந்த செந்தமிழினது சந்த
இசைப் பதிகத்தால் வணங்கிப் போற்றினார், சீகாழித்
தலைவரான சம்பந்தர்.
குறிப்புரை : திருவையாற்றை நண்ணிய
அளவில் அருளிய பதிகம் `புலனைந்தும்' (தி.1 ப.130) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப்
பண்ணிலமைந்த பதிகமாகும். `புலனைந்தும்
பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி, அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா
னமருங்கோயில்\' எனவரும்
இப்பதிகத்தின் முதற்பாட்டினை முகந்து நின்று, ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச்
செய்கின்றார்.
திருஞானசம்பதந்தர்
திருப்பதிகம்
1.130 திருவையாறு பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
புலன்ஐந்தும்
பொறிகலங்கி, நெறிமயங்கி,
அறிவுஅழிந்திட்டு, ஐம்மேல்உந்தி
அலமந்த
போதாக, அஞ்சேல்என்று
அருள்செய்வான்
அமருங்கோயில்,
வலம்வந்த
மடவார்கள் நடம்ஆட,
முழவுஅதிர, மழைஎன்றுஅஞ்சி,
சிலமந்தி
அலமந்து மரம்ஏறி
முகில்பார்க்கும்
திருஐயாறே.
பொழிப்புரை :ஐம்புலன்களும் தத்தம்
பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து,
கபம்
மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய
சிவபிரான் அமரும் கோயிலை உடையது,
நடனக்கலையில்
வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற
கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக்
கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று
மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.
பாடல்
எண் : 2
விடல்ஏறு
படநாகம் அரைக்கசைத்து ,
வெற்பரையன்
பாவையோடும்,
அடல்ஏறுஒன்று
அதுஏறி, அம்சொலீர்
பலிஎன்னும், அடிகள்கோயில்,
கடல்ஏறித்
திரைமோதிக் காவிரியின்
உடன்வந்து, கங்குல்வைகித்
திடல்ஏறிச்
சுரிசங்கம் செழுமுத்துஅங்கு
ஈன்றுஅலைக்கும்
திருஐயாறே.
பொழிப்புரை :கொல்லுதலாகிய குற்றம்
பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு
வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய
சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது
கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய
கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண்
திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.
பாடல்
எண் : 3
கங்காளர், கயிலாய மலையாளர் ,
கானப்பே ராளர்,மங்கை
பங்காளர், திரிசூலப் படையாளர் ,
விடையாளர், பயிலும்கோயில்,
கொங்குஆள்அப்
பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுஉலர்த்திக்
கூதல்நீங்கிச்
செங்கால்நல்
வெண்குருகு பைங்கானல்
இரைதேரும் திருஐயாறே.
பொழிப்புரை :சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு
எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில்
உறைபவரும், கானப்பேர் என்னும்
தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும்
முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும்,
விடை
ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக்
குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக்
கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும்
திருவையாறாகும்.
பாடல்
எண் : 4
ஊன்பாயும்
முடைதலைகொண்டு ஊர்ஊரின்
பலிக்குஉழல்வார், உமையாள்பங்கர்,
தான்பாயும்
விடையேறும் சங்கரனார்,
தழல்உருவர்
தங்குங்கோயில்,
மான்பாய
வயல்அருகே மரம்ஏறி,
மந்திபாய்
மடுக்கள்தோறும்
தேன்பாய
மீன்பாயச் செழுங்கமல
மொட்டுஅலரும்
திருஐயாறே.
பொழிப்புரை :புலால் பொருந்தியதாய், முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக்
கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று
உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற
பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய
சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான்
துள்ளித்திரிய, வயலருகே உள்ள
மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான
தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய
திருவையாறாகும்.
பாடல்
எண் : 5
நீரோடு
கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும்
நிறைந்தகொன்றைத்
தாரோடு
தண்கரந்தை சடைக்குஅணிந்த
தத்துவனார்
தங்கும்கோயில்,
கார்ஓடி
விசும்புஅளந்து கடிநாறும்
பொழில்அணைந்த
கமழ்தார்வீதித்
தேர்ஓடும்
அரங்குஏறிச் சேயிழையார்
நடம்பயிலும்
திருஐயாறே.
பொழிப்புரை :கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச்
சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை
அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும்
வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய
திருவையாறாகும்.
பாடல்
எண் : 6
வேந்துஆகி, விண்ணவர்க்கும்
மண்ணவர்க்கும்
நெறிகாட்டும்
விகிர்தன்ஆகி,
பூந்தாம
நறுங்கொன்றை சடைக்குஅணிந்த
புண்ணியனார்
நண்ணும்கோயில்,
காந்தாரம்
இசைஅமைத்துக் காரிகையார்
பண்பாட, கவின் ஆர்வீதித்
தேந்தாம்என்று
அரங்குஏறிச் சேயிழையார்
நடம்ஆடும் திருஐயாறே.
பொழிப்புரை :அனைத்துலகங்களுக்கும்
வேந்தனாய், விண்ணவர் களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை
அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட
அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும்
திருவையாறாகும்.
பாடல்
எண் : 7
நின்றுஉலா
நெடுவிசும்புள் நெருக்கிவரு
புரமூன்றும்
நீள்வாயம்பு
சென்றுஉலாம்
படிதொட்ட சிலையாளி,
மலையாளி சேரும்கோயில்,
குன்றுஎலாம்
குயில்கூவ, கொழும்பிரச
மலர்பாய்ந்து, வாசமல்கு
தென்றலார்
அடிவருடச் செழுங்கரும்பு
கண்வளரும் திருஐயாறே.
பொழிப்புரை :நீண்ட வானவெளியில்
நின்று உலவி, தேவர்கள்
வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை
தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய
சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில்
குயில்கள் கூவவும், செழுமையான தேன்
நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண்
வளரும் வளமுடைய திருவையாறாகும்.
பாடல்
எண் : 8
அஞ்சாதே
கயிலாய மலைஎடுத்த
அரக்கர்கோன்
தலைகள்பத்தும்
மஞ்சுஆடு
தோள்நெரிய அடர்த்து,அவனுக்கு
அருள்புரிந்த
மைந்தர்கோயில்,
இஞ்சாயல்
இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி
இரிந்துஅங்குஓடிச்
செஞ்சாலிக்
கதிர்உழக்கிச் செழுங்கமல
வயல்படியும்
திருஐயாறே.
பொழிப்புரை :அஞ்சாமல் கயிலை மலையை
எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன்
தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான்
எழுந்தருளிய கோயிலைஉடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று
அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப்
பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.
பாடல்
எண் : 9
மேல்ஓடி, விசும்புஅணவி, வியன்நிலத்தை
மிகஅகழ்ந்து, மிக்குநாடும்
மாலோடு
நான்முகனும் அறியாத
வகைநின்றான்
மன்னும்கோயில்,
கோல்ஓடக்
கோல்வளையார் கூத்துஆடக்
குவிமுலையார்
முகத்திந்நின்று
சேல்ஓடச்
சிலைஆடச் சேயிழையார்
நடம்ஆடும் திருஐயாறே.
பொழிப்புரை :அன்னமாய் மேலே பறந்து
சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக
அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால்
ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது, கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும்
அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார்
முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும்
செல்லவும், நடனமாடும்
திருவையாறாகும்.
பாடல்
எண் : 10
குண்டுஆடு
குற்றுஉடுக்கைச் சமணரொடு
சாக்கியரும், குணம்ஒன்றுஇல்லா
மிண்டுஆடு
மிண்டர்உரை கேளாதே,
ஆள்ஆமின்
மேவித்தொண்டீர்,
எண்தோளர், முக்கண்ணர், எம்ஈசர்,
இறைவர்,இனிது அமருங்கோயில்
செண்டுஆடு
புனல்பொன்னிச் செழுமணிகள்
வந்துஅலைக்கும்
திருஐயாறே.
பொழிப்புரை :இழிசெயல்களில்
ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத
சொற்களையும், வஞ்சனை பொருந்திய
உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து
அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய
இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி
ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு
வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
பாடல்
எண் : 11
அன்னமலி
பொழில்புடைசூழ் ஐயாற்றுஎம்
பெருமானை, அந்தண்காழி
மன்னியசீர்
மறைநாவன், வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்,
இன்னிசையால்
இவைபத்தும் இசையுங்கால்
ஈசன்அடி ஏத்துவார்கள்
தன்இசையோடு
அமர்உலகில் தவநெறிசென்று
எய்துவார்
தாழாதுஅன்றே.
பொழிப்புரை :அன்னப் பறவைகள்
நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும்
சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும்
நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப்
பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள்
புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.
குறிப்புரை :ஐயாற்றெம்பெருமானைச்
சம்பந்தசுவாமிகள் பாடல்களால் தோத்திரிப்பவர்கள் புகழோடு தேவருலகிற் செல்வார்கள்
என்கின்றது. இசையோடு அமர் உலகு - தேவருலகு. தாழாது - தாமதியாது.
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பதந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 302
மணிவீதி
இடம்கடந்து, மால்அயனுக்கு
அரியபிரான் மன்னும்
கோயில்
அணிநீடு
கோபுரத்தை அணைந்துஇறைஞ்சி,
உள்எய்தி அளவுஇல்
காதல்
தணியாத
கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலம் கொண்டு, தாழ்ந்து,
பணிசூடும்
அவர்முன்பு பணிந்து, வீழ்ந்து,
எழுந்து அன்பால் பரவு
கின்றார்.
பொழிப்புரை : அழகிய திருவீதிகளைக்
கடந்து சென்று திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிதற்கு அரிய சிவபெருமான் நிலையாய்
வீற்றிருக்கும் கோயிலின் அழகு பொருந்திய கோபுரத்தைச் சார்ந்து பணிந்து கோயிலுள்
சென்று அளவில்லாத ஆசையானது பெருகித் தணியாத மனத்துடன் இறைவரின் திருக்கோயிலை
வலமாய் வந்து பாம்பை அணிந்த அப்பெருமானின் திருமுன்பு வணங்கி நிலமுற விழுந்து, எழுந்து, அன்பால் போற்றுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 303
கோடல்கோங்
கம்குளிர்கூ விளம்என்னும்
திருப்பதிகக் குலவு
மாலை
நீடுபெருந்
திருக்கூத்து நிறைந்ததிரு
உள்ளத்து நிலைமை
தோன்ற
ஆடுமாறு
அதுவல்லான் ஐயாற்றுஎம்
ஐயனே என்று நின்று
பாடினார்
ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து
பாய.
பொழிப்புரை : `கோடல்கோங் கங்குளிர் கூவிளம்' ( தி.2 ப.6) எனத் தொடங்கும் திருப்பதிகமான சிறந்த
சொல்மாலையை, நீடிய
பெருந்திருக்கூத்தின் சிறப்பு நிறைவாகத் தம் உள்ளத்திலே தோன்ற `ஆடு மாறுவல் லானும்ஐ யாறுடை யையனே\' என்ற கருத்தை நிறைவாகக் கொண்ட
பதிகத்தைப் பாடி, அன்பினால் இன்பமார்ந்திருக்கும்
விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் இடையீடின்றிப் பரந்து பாய்ந்திடப் பாடினார்; ஆடினார்.
குறிப்புரை : கோடல் கோங்கம்' எனத் தொடங்கும் இப்பதிகம் இந்தளப்
பண்ணிலமைந்ததாகும். இத்தொடக்கமுடைய பதிகத்தின் முதற்பாடல், `ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே' என நிறைவு பெறுகிறது. பதிகம் முழுதும்
இவ்வாறமைந்த முடிபு கொண்ட தொடர்களை முகந்த நிலையில் சேக்கிழார் இவ்வாறு அருளிச்
செய்கின்றார்.
இஃது
அன்றி, பிள்ளையார்
திருவையாற்றில் ஆடிப் பாடியவாறு அருளிய பதிகங்கள் மூன்று:
1. `கலையார்மதி': (தி.1 ப.36) -தக்கராகம்.
2. `பணிந்தவர்': (தி.1 ப.120) – வியாழக்குறிஞ்சி.
3. `திருத்திகழ்': (தி.2 ப.32) - இந்தளம்.
பெ.
பு. பாடல் எண் : 304
பலமுறையும்
பணிந்துஎழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட
ரோடு
நிலவுதிருப்
பதிஅதன் கண்நிகழும்நாள்
நிகர்இலா நெடுநீர்க்
கங்கை
அலையும்மதி
முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து
போற்றிக்
குலவுதமிழ்த்
தொடைபுனைந்து மீண்டுஅணைந்து
பெருகுஆர்வம் கூரும்
நாளில்.
பொழிப்புரை : பலமுறையும் வணங்கி
எழுந்து வெளியே வந்து, வணங்கி எழும்
திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதியில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை
அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது `பெரும் புலியூர்' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித்
தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும்
திருவையாற்றை அடைந்து, பெருகும் ஆசை மிக
அங்கிருந்து வரும் நாள்களில்,
திருஞானசம்பதந்தர்
திருப்பதிகங்கள்
2.006 திருவையாறு பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கோடல்,கோங் கம்,குளிர் கூவிள மாலை
குலாயசீர்
ஓடுகங்
கை,ஒளி வெண்பிறை சூடும்
ஒருவனார்,
பாடல்
வீணைமுழ வம்,குழல் மொந்தைபண் ஆகவே
ஆடு
மாறுவல் லானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு
கங்கை, ஒளி வெண்பிறை
ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில்
வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.
பாடல்
எண் : 2
தன்மை
யாரும்அறி வார்இலை, தாம்பிறர் எள்கவே
பின்னும்
முன்னுஞ்சில பேய்க்கணம் சூழத் திரிதர்வர்,
துன்ன
ஆடை உடுப்பர், சுடலைப்பொடி பூசுவர்,
அன்னம்
ஆலுந்துறை யானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :அன்னங்கள் ஒலிக்கும்
ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு
சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத்திரிவார். கந்தலான ஆடையை இடையிலே
கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.
பாடல்
எண் : 3
கூறு
பெண்,உடை கோவணம், உண்பது வெண்தலை,
மாறில்
ஆருங்கொள் வார்இலை, மார்பில் அணிகலம்,
ஏறும்
ஏறித் திரிவர் இமை யோர்தொழுது ஏத்தவே
ஆறு
நான்கும்சொன் னானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண
ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள
அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமையோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்
திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.
பாடல்
எண் : 4
பண்ணின்
நல்லமொழி யார்,பவ ளத்துவர் வாயினார்,
எண்ணின்
நல்லகுணத் தார்,இணை வேல்வென்ற கண்ணினார்,
வண்ணம்
பாடி,வலி பாடி,தம் வாய்மொழி பாடவே,
அண்ணல்
கேட்டுஉகந் தானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :பண்ணிசையினும் இனிய
மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த
வாயினை உடையவரும், எண்ணற்ற நல்ல
குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற
விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச்செயல்களையும் தம் வாய்
மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.
பாடல்
எண் : 5
வேன
லானை வெருவ,உரி போர்த்து,உமை அஞ்சவே,
வானை
ஊடுஅறுக் கும்மதி சூடிய மைந்தனார்,
தேன்நெய்
பால்தயிர் தெங்குஇள நீர்,கரும் பின்தெளி,
ஆன்அஞ்சு
ஆடுமுடி யானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :கொடிய யானையைப்
பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை
முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும்
ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.
பாடல்
எண் : 6
எங்கும்
ஆகிநின் றானும், இயல்புஅறி யப்படா
மங்கை
பாகங்கொண் டானும், மதிசூடு மைந்தனும்,
பங்கம்
இல்பதி னெட்டொடு நான்குக்கு உணர்வுமாய்
அங்கம்
ஆறுஞ்சொன் னானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :எங்கும் நிறைந்தவனும்
பிறர் அறியவாராத இயல் பினனும், உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டவனும் மதி சூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும்
ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.
பாடல்
எண் : 7
ஓதி
யாரும்அறி வார்இலை, ஓதி யுலகெலாம்
சோதி
யாய்நிறைந் தான்,சுடர்ச் சோதியுள்
சோதியான்,
வேதி
ஆகி,விண் ஆகி,மண் ணோடுஎரி
காற்றுமாய்
ஆதி
ஆகிநின் றானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :யாவராலும் ஓதி
அறிதற்கு அரியவனும், உயிர்கள் தாமே
அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச்சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேதவடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகி உலகின் முதல்வனாய்
விளங்குபவனும் ஆகிய பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.
பாடல்
எண் : 8
குரவ
நாள்மலர் கொண்டுஅடி யார்வழி பாடுசெய்
விரவு
நீறுஅணி வார்சில தொண்டர் வியப்பவே,
பரவி
நாள்தொறும் பாடநம் பாவம் பறைதலால்,
அரவம்
ஆர்த்துஉகந் தானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :ஐயாறுடைய ஐயன்
அடியவர் அன்றலர்ந்த குராமலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்பூசிய
தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய்
எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.
பாடல்
எண் : 9
உரைசெய்
தொல்வழி செய்துஅறி யாஇலங் கைக்குமன்
வரைசெய்
தோள்அடர்த் து, மதி சூடிய மைந்தனார்,
கரைசெய்
காவிரி யின்வட பாலது காதலான்,
அரைசெய்
மேகலை யானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :வேதங்கள் உரைத்த
பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலைமலைக்கீழ் அகப்படுத்தி
அவனது தோள் வலிமையை அடர்த்தவரும்,
மதி
சூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில்
மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.
பாடல்
எண் : 10
மாலும், சோதி மலரானும்
அறிகிலா வாய்மையான்,
கால்அம்
காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல்,
கோல
மாய்க்கொழுந்து ஈன்று பவளம் திரண்டதுஓர்
ஆல
நீழல் உளானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :ஐயாறுடைய ஐயன்
திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால்போலத் திரண்ட
அழகிய காம்பினையும் கழல்போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட
கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.
பாடல்
எண் : 11
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப்
போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய்யல,
மைகொள்
கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயந்
தேர்ந்துஅளிப் பானும் ஐயாறுஉடை ஐயனே.
பொழிப்புரை :கையில் உணவை வாங்கி
உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும்
துவராடையால் உடலைப் போர்த்துத் திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை
அறிந்து, நீலகண்டமும் எண்
தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம் பொருள் எனத்தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக்
காத்தருளுவான்.
பாடல்
எண் : 12
பலிதி
ரிந்துஉழல் பண்டங்கன் மேய,ஐ யாற்றினைக்
கலிக
டிந்தகை யான்,கடற் காழியர் காவலன்,
ஒலிகொள்
சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள்
விண்இடை மன்னிய சீர்பெறு வார்களே.
பொழிப்புரை :பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான்
எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை
பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள
காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப்
பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
1.036 திருவையாறு பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கலைஆர்
மதியோடு உரநீரும்
நிலைஆர்
சடையார் இடம்ஆகும்,
மலைஆ
ரமும்மா மணிசந்தோடு
அலைஆர்
புனல்சே ரும்ஐயாறே.
பொழிப்புரை :ஒரு கலைப்பிறைமதியோடு
வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள்
சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு
ஆகும்.
பாடல்
எண் : 2
மதிஒன்
றியகொன் றைவடத்தான்,
மதிஒன்
றவுதைத் தவர்வாழ்வு,
மதியின்
னொடுசேர் கொடிமாடம்
மதியம்
பயில்கின் றஐயாறே.
பொழிப்புரை :பிறைமதி பொருந்திய
சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும்,
தக்கயாகத்தில்
வீரபத்திரரை ஏவிச்சந்திரனைக் காலால் பொருந்த உதைத்தவனுமான சிவபெருமான் வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி
தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 3
கொக்கின்
இறகின் னொடுவன்னி
புக்க
சடையார்க்கு இடம்ஆகும்,
திக்கின்
இசைதே வர்வணங்கும்
அக்கின்
அரையா ரதுஐயாறே.
பொழிப்புரை :கொக்கிறகு என்னும்
மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரியஇடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால்
வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய
இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.
பாடல்
எண் : 4
சிறைகொண்
டபுரம் அவைசிந்தக்
கறைகொண்
டவர், காதல்செய்கோயில்
மறைகொண்
டநல்வா னவர்தம்மில்
அறையும்
ஒலிசே ரும்ஐயாறே.
பொழிப்புரை :சிறகுகளோடு கூடிய முப்புரங்களும்
அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து
இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு
ஆகும்.
பாடல்
எண் : 5
உமையாள்
ஒருபா கம்அதாகச்
சமைவார்
அவர்சார் விடம்ஆகும்,
அமைஆர்
உடல்சோர் தரமுத்தம்
அமையா
வரும்அந் தண்ஐயாறே.
பொழிப்புரை :உமையம்மை ஒருபாகத்தே
விளங்கப்பொருந் தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள்
முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த திருவையாறாகும்.
பாடல்
எண் : 6
தலையின்
தொடைமா லைஅணிந்து
கலைகொண்
டதொர்கை யினர்சேர்வாம்,
நிலைகொண்
டமனத் தவர்நித்தம்
மலர்கொண்
டுவணங் கும்ஐயாறே.
பொழிப்புரை :தலையோட்டினால்
தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த
மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவிவழிபாடு செய்யும்
திருவையாறாகும்.
பாடல்
எண் : 7
வரம்ஒன்
றியமா மலரோன்தன்
சிரம்ஒன்
றைஅறுத் தவர்சேர்வாம்,
வரைநின்று
இழிவுஆர் தருபொன்னி
அரவம்
கொடுசே ரும்ஐயாறே.
பொழிப்புரை :வரங்கள் பல பெற்ற
தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலையினின்று இழிந்துபெருகி வரும் காவிரி
நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 8
வரைஒன்று
அதுஎடுத்த அரக்கன்
சிரம்அங்
கம்நெரித் தவர்சேர்வாம்,
விரையின்
மலர்மே தகுபொன்னித்
திரைதன்
னொடுசே ரும்ஐயாறே.
பொழிப்புரை :கயிலை மலையைப்
பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான்
எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி
அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 9
சங்கக்
கயனும் அறியாமைப்
பொங்கும்
சுடர் ஆனவர்கோயில்
கொங்கில்
பொலியும் புனல்கொண்டு
அங்கிக்கு
எதிர்காட் டும்ஐயாறே.
பொழிப்புரை :சங்கத்தைக் கையின்கண்
கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும்
கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு
வந்து, அழல் வடிவான இறைவன்
திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.
பாடல்
எண் : 10
துவர்
ஆடையர்தோல் உடையார்கள்
கவர்வாய்
மொழிகா தல்செய்யாதே,
தவரா
சர்கள்தா மரையானோடு
அவர்தாம்
அணைஅந் தண்ஐயாறே.
பொழிப்புரை :துவராடை தரித்த
புத்தர், ஆடையின்றித் தோலைக்
காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து
வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.
பாடல்
எண் : 11
கலைஆர்
கலிக்கா ழியர்மன்னன்
நலம்ஆர்
தருஞா னசம்பந்தன்,
அலைஆர்
புனல்சூழும் ஐயாற்றைச்
சொலுமா
லைவல்லார் துயர்வீடே.
பொழிப்புரை :கலைவல்லவர்களின்
ஆரவாரம் மிக்க சீகாழிப்பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன்
அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ்
வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
1.120 திருவையாறு பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பணிந்தவர்
அருவினை பற்றுஅறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல்துதை
மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர்எழில்
ஆமைகொண்டு
அணிந்தவன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :தன்னை வணங்கும்
அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத்
துணிந்திருப்பவனும், மார்பின்கண்
மான்தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப்
பூண்டவனும், ஆகிய சிவபிரானது
வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
பாடல்
எண் : 2
கீர்த்திமிக்
கவன்நகர், கிளரொளி யுடன்நடப்
பார்த்தவன், பனிமதி படர்சடை
வைத்துப்
போர்த்தவன்
கரியுரி புலியதள், அரவுஅரை
ஆர்த்தவன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின்
முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது
வைத்துள்ளவனும், யானையின் தோலை
உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப்
பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
பாடல்
எண் : 3
வரிந்தவெம்
சிலைபிடித்து அவுணர்தம் வளநகர்
எரிந்துஅற
எய்தவன், எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன்
சிரம்அது இமையவர் குறைகொள
அரிந்தவன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :இருமுனைகளும்
இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள்
எரிந்து அழியுமாறு கணை எய்தவனும்,
தேவர்கள்
வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய
சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
பாடல்
எண் : 4
வாய்ந்தவல்
அவுணர்தம் வளநகர் எரிஇடை
மாய்ந்துஅற
எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்துஎழு
சடையினன், தொல்மறை ஆறுஅங்கம்
ஆய்ந்தவன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :வலிமை வாய்ந்த
அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன
தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு
வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது
நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.
பாடல்
எண் : 5
வான்அமர்
மதிபுல்கு சடைஇடை அரவொடு
தேன்அமர்
கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான்அன
மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன், வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :வானின்கண் விளங்கும்
பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய
திருவையாறாகும்.
பாடல்
எண் : 6
முன்பனை, முனிவரோடு அமரர்கள்
அடிதொழும்
இன்பனை, இணையில இறைவனை, எழில்திகழ்
என்பொனை, ஏதம்இல் வேதியர்
தாந்தொழும்
அன்பன
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :வலிமையுடையவனும் முனிவர்களும்
அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும்
அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
பாடல்
எண் : 7
வன்திறல்
அவுணர்தம் வளநகர் எரிஇடை
வெந்துஅற
எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்துஅமர்
மெல்விரல் பாகம் அதுஆகிதன்
அந்தம்இல்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :பெருவலி படைத்த
அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல்
விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர்
அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.
பாடல்
எண் : 8
விடைத்தவல்
அரக்கன்நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்
தால்இறை ஊன்றிமற்று அவனது
முடித்தலை
தோள்அவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :செருக்கோடு வந்த வலிய
இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய
சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.
பாடல்
எண் : 9
விண்ணவர்
தம்மொடு வெங்கதி ரோன்நல்
எண்இலி
தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும்
பிரமனும் காண்புஅரிது ஆகிய
அண்ணல்தன்
வளநகர் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :வானகத்தே வாழ்வார்
தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய்
நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர்,
அழகும்
தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
பாடல்
எண் : 10
மருள்உடை
மனத்துவன் சமணர்கள், மாசுஅறா
இருள்உடை
இணைத்துவர்ப் போர்வையி னார்களும்,
தெருள்உடை
மனத்தவர் தேறுமின், திண்ணமா
அருள்உடை
யடிகள்தம் அந்தண் ஐயாறே.
பொழிப்புரை :தெளிந்த மனத்தினை
உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு
துவர்நிறஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத்
தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய
ஐயாறாகும்.
பாடல்
எண் : 11
நலமலி
ஞானசம் பந்தனது இன்தமிழ்
அலைமலி
புனல்மல்கும் அந்தண் ஐயாற்றினைக்
கலைமலி
தமிழ்இவை கற்றுவல் லார்மிக
நலமலி
புகழ்மிகு நன்மையர் தாமே.
பொழிப்புரை :அலைகள் வீசும் ஆறு
குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப்
பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார்
நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
2.032 திருவையாறு பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
திருத்திகழ்
மலைச்சிறுமி யோடு,மிகு தேசர்
உருத்திகழ்
எழில்கயிலை வெற்பில்உறை தற்கே
விருப்புஉடைய
அற்புதர் இருக்கும்இடம் ஏர்ஆர்
மருத்திகழ்
பொழிற்குலவு வண்திருஐ யாறே.
பொழிப்புரை :அழகிய மலைமகளோடு
மிக்க ஒளிவடிவினராய சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலைமலையில் உறைவதற்கு
விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும்
வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.
பாடல்
எண் : 2
கந்துஅமர
வந்துபுகை உந்தலில் விளக்குஏர்
இந்திரன்
உணர்ந்துபணி எந்தைஇடம், எங்கும்
சந்தமலி
யுந்தருமி டைந்தபொழில் சார
வந்தவளி
நந்துஅணவு வண்திருஐ யாறே.
பொழிப்புரை :பற்றுக் கோடாக
விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற
அச்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும் மரம்
நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்துள்ளதும்
வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 3
கட்டுவடம்
எட்டும்உறு வட்டமுழ வத்தில்
கொட்டுகரம்
இட்டஒலி தட்டும்வகை நந்திக்கு
இட்டம்மிக
நட்டம்அவை இட்டவர் இடம்,சீர்
வட்டமதில்
உள்திகழும் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :எட்டு வடங்களால்
கட்டப்பட்ட வட்டமான முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும தாளச்சதிக்கும் ஏற்ப
அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள் விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு
ஆகும்.
பாடல்
எண் : 4
நண்ணியொர்
வடத்தின்நிழல் நால்வர்முனி வர்க்குஅன்று
எண்இலி
மறைப்பொருள்வி ரித்தவர் இடம், சீர்த்
தண்ணின்மலி
சந்துஅகிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை
வந்துஅணவு வண்திருஐ யாறே.
பொழிப்புரை :கல்லால மரநிழலை
அடைந்து சனகாதியர் நால்வருக்கு அக்காலத்தில் வேதப்பொருளை விரித்துரைத்த சிவபிரானது
இடம்; குளிர்ந்த சந்தனம், அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற
பொன்னியாற்றின் கரையின்மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான
திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 5
வென்றிமிகு
தாருகனது ஆர்உயிர் மடங்கக்
கன்றிவரு
கோபமிகு காளிகதம் ஓவ,
நின்றுநடம்
ஆடிஇடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி
யும்பொழில்கொள் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :வெற்றிகள் பல பெற்ற
தாருகன் உயிர் போகுமாறு சினந்து அவனை அழித்த கோபம்மிக்க காளிதேவியின் சினம் அடங்க
அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம்,
பெரிய
மலர்மணம் நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு
ஆகும்.
பாடல்
எண் : 6
பூதமொடு
பேய்கள்பல பாட,நடம் ஆடிப்
பாதமுதல்
பையரவு கொண்டுஅணி பெறுத்திக்
கோதையர்
இடும்பலி கொளும்பரன் இடம்,பூ
மாதவி
மணங்கமழும் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :பூதங்களும் பேய்களும்
பாட நடனமாடி அடிமுதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக்
கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச்
செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 7
துன்னுகுழல்
மங்கைஉமை நங்கைசுளிவு எய்தப்
பின்ஒரு
தவஞ்செய்துஉழல் பிஞ்ஞகனும்,
அங்கே
என்னசதி
என்றுஉரைசெய் அங்கணன் இடம்சீர்
மன்னுகொடை
யாளர்பயில் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :செறிந்த கூந்தலையுடைய
உமைமங்கை சினம் கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, `உமையே! நீ சினம் கொள்ளக்காரணம் யாதென` வினவி, அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய
கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய
கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 8
இரக்கம்இல்கு
ணத்தொடுஉலகு எங்குநலி வெம்போர்
அரக்கன்முடி
யத்தலை புயத்தொடும் அடங்கத்
துரக்கவிர
லில்சிறிது வைத்தவர் இடம்,சீர்
வரக்கருணை
யாளர்பயில் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :இரக்கமற்ற குணத்தோடு
உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள், தோள்கள் ஆகியன அழியுமாறு கால்விரலால்
செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும்
திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 9
பருத்துஉருவது
ஆகிவிண் அடைந்தவன்,ஒர் பன்றிப்
பெருத்துஉருவ
தாய்உலகு இடந்தவனும் என்றும்
கருத்துஉரு
ஒணாவகை நிமிர்ந்தவன் இடம்,கார்
வருத்துவகை
தீர்கொள்பொழில் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :பருந்து உருவமாய்
விண்ணிற்சென்று தேடிய பிரமன், பெரிய பன்றி உருவமாய்
நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு
ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம், வெம்மையைப்
போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 10
பாக்கியம்
அதுஒன்றும்இல் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்கள்
என்றுஉடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய
தத்துவன் இடம், படியின் மேலால்
மாக்கம்உற
நீடுபொழில் வண்திருஐ யாறே.
பொழிப்புரை :நல்லூழ் இல்லாத சமண்
பாதகர்கள், புத்தராகிய, சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித்
திரிவோரின் பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு
வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர்
வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
பாடல்
எண் : 11
வாசமலி
யும்பொழில்கொள் வண்திருஐ யாற்றுள்
ஈசனை
எழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுரன்
உரைத்ததமிழ் பத்தும்இவை வல்லார்
நேசமலி
பத்தர்அவர் நின்மலன் அடிக்கே.
பொழிப்புரை :மணம் நிறைந்த
பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய
ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர், சிவபிரான் திருவடிக்கண் மிக்க
அன்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
----- தொடரும் -----