திருப் பழனம்




திருப் பழனம்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

              திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.


இறைவர்                  : ஆபத்சகாயர்.

இறைவியார்               : பெரியநாயகி.

தல மரம்                   : வாழை

தீர்த்தம்                    : மங்களதீர்த்தம்

தேவாரப் பாடல்கள்:        1. சம்பந்தர் -வேதமோதி வெண்ணூல்.

                                          2. அப்பர் -  1. சொல்மாலை பயில்,                                                                                        2. ஆடினார் ஒருவர்,                                                                                             3. மேவித்து நின்று,                                                                             4. அருவ னாய்அத்தி,
                                                            5. அலையார் கடல்நஞ்ச.

         ஒரு இராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள் கோபுரத்துடனும் அமைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

         உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பஙளுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.

         குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

----------------------------------------------------------------------------------------------------------

சப்தத் தானங்கள் விவரம்

திருவையாறு சப்தஸ்தானம்   
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானம்  
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி

சக்கரப்பள்ளி சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)   
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை

மயிலாடுதுறை சப்தஸ்தானம்
        
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை,  துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
        
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)
  
நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
        
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்

திருநல்லூர் சப்தஸ்தானம்
        
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை

திருநீலக்குடி சப்தஸ்தானம்
        
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
        
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை,  ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

----------------------------------------------------------------------------------------------------------

         நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

     அப்பர் பெருமான் தனது திருப்பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். விடம் தீர்த்த பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் திருப்பழனம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், மாத்தழைத்த வண் பழம் த்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட உண் பழனத்து என் தன் உயிர்க்கு உயிரே என்று போற்றி உள்ளார்.

         காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 298
வடகுரங் காடு துறையில் வாலியார் தாம்வழி பட்ட
அடைவும், திருப்பதி கத்தில் அறியச் சிறப்பித்து அருளி,
புடைகொண்டு இறைஞ்சினர், போந்து புறத்துஉள்ள தானங்கள் போற்றி,
படைகொண்ட மூவிலை வேலார் பழனத் திருப்பதி சார்ந்தார்.

         பொழிப்புரை : வடகுரங்காடுதுறையில் வந்து, வாலி வழிபட்டுப் புகலிடமாகக் கொண்ட வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியச் சிறப்பித்துப் பாடி, திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு அதன் அருகில் உள்ள திருப்பதிகளை யெல்லாம் வணங்கிய வண்ணம் மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனத் திருப்பதியைச் சென்றடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 299
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டி யார்பயில் கோயில்
உழை புக்கு, இறைஞ்சி, நின்று ஏத்தி, உருகிய சிந்தையர் ஆகி,
விழைசொல் பதிகம் விளம்பி, விருப்புடன் மேவி அகல்வார்,
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.

         பொழிப்புரை : திருப்பழனத்தில் வீற்றிருக்கும் முக்கண்களை உடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று போற்றி உருகிய உள்ளத்தையுடையவராகி, விரும்புதற்குரிய தமிழ்ச்சொல் பதிகத்தைப் பாடிப் பெருவிருப்புடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்தும் நீங்குபவராய்த் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவர்.

         திருப்பழனத்தில் அருளிய பதிகம் `வேதமோதி' (தி.1 ப.67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். 
  
1.067   திருப்பழனம்                            பண் - தக்கேசி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறிப்
பூதம் சூழப் பொலிய வருவார், புலியின் உரிதோலார்,
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.

         பொழிப்புரை :நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.


பாடல் எண் : 2
கண்மேல்கண்ணும் சடைமேல்பிறையும் உடையார், காலனைப்
புண்ஆறுஉதிரம் எதிர்ஆறுஓடப் பொன்றப் புறந்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான், இமவான் மகளோடும்
பண்ஆர் களிவண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

         பொழிப்புரை :மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழனநகரில் இமவான் மகளாகிய பார்வதிதேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.


பாடல் எண் : 3
பிறையும்புனலும் சடைமேல்உடையார், பறைபோல் விழிகண்பேய்
உறையும் மயானம் இடமா உடையார், உலகர் தலைமகன்
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல்செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

         பொழிப்புரை :அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறு மலர்களைக் கொண்டுவந்து சாத்தி, பரவி, ஆடல் பாடல்களைச் செய்தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும், பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.


பாடல் எண் : 4
உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.

         பொழிப்புரை :திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திரு விளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.


பாடல் எண் : 5
குலவெம் சிலையால் மதின்மூன்று எரித்த கொல்ஏறு உடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல்போல் காவேரி
நலம் அஞ்சு உடைய நறுமாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்திப்
பலவின் கனிகள் திரைமுன் சேர்க்கும் பழன நகராரே.

         பொழிப்புரை :தோகைகளையுடைய மயில்கள், குயில்கள் வாழ் வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழனநகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.


பாடல் எண் : 6
வீளைக் குரலும், விளிச்சங்கு ஒலியும், விழவின் ஒலிஓவா
மூளைத் தலைகொண்டு அடியார் ஏத்தப் பொடியா மதிள்எய்தார்,
ஈளைப் படுகில் இலைஆர் தெங்கில் குலைஆர் வாழையின்
பாளைக் கமுகின் பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

         பொழிப்புரை :ஈரத்தன்மையுடைய ஆற்றுப்படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.


பாடல் எண் : 7
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார், திருமேனி
செய்யார், கரிய மிடற்றார், வெண்நூல் சேர்ந்த அகலத்தார்,
கைஆடலினார், புனலால்மல்கு சடைமேல்  பிறையோடும்
பைஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

         பொழிப்புரை :திருப்பழனநகர் இறைவர் பொய்கூறாத அடியவர் களால் முறைப்படி ஏத்திப் புகழப்பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.


பாடல் எண் : 8
மஞ்சுஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடுஅஞ்சும் ஆறுநான்கும் அடர ஊன்றினார்,
நஞ்சுஆர் சுடலைப் பொடிநீறு அணிந்த நம்பான், வம்புஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

         பொழிப்புரை :மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலைமலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நச்சுத் தன்மை பொருந்திய சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.


பாடல் எண் : 9
கடிஆர்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார், விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள்தா மரைமேல் அயனும் நேடிக் காணாத
படியார், பொடிஆடு அகலம் உடையார், பழன நகராரே.

         பொழிப்புரை :திருப்பழனநகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திருமாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக்காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.


பாடல் எண் : 10
கண்தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறுசொல் ஓரார் பாராட்ட,
வண்தாமரையின் மலர்மேல் நறவ மதுவாய் மிகவுண்டு
பண்தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

         பொழிப்புரை :வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழனநகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக்கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.


பாடல் எண் : 11
வேய்முத்துஓங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்து அனைய திறலால் மிக்க ஞான சம்பந்தன்
பேசற்கு இனிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

         பொழிப்புரை :மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுரநகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப்பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.
                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 199
ஆள்உடைய நாயகன்தன் அருள்பெற்று, அங்கு அகன்றுபோய்,
வாளைபாய் புனல்பழனத் திருப்பழனம் மருங்கு அணைந்து,
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர்பெற்றார்.

         பொழிப்புரை : தம்மை ஆளாகவுடைய திருநல்லூர் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, வாளை மீன்கள் பாயும் நீர்வளமுடைய திருப்பழனத்தைச் சேர்ந்து, திருநீலகண்டரும், பாம்புகளை அணிந்து ஊழிக் காலத்தில் ஆடுபவருமான இறைவரின் திருவடிகளை நேரே வணங்கும் பேற்றை அடைந்தார்.

         குறிப்புரை : இங்கு அருளிய திருப்பதிகங்கள் ஐந்தாம்.
1.    `ஆடினார் ஒருவர்` (தி.4 ப.36) - திருநேரிசை.
2.    `மேவித்து நின்று` (தி.4 ப.87) - திருவிருத்தம்.
3.    `அருவனாய்` (தி.5 ப.35) - திருக்குறுந்தொகை.
4.    `அலையார் கடல்` (தி.6 ப.36) - திருத்தாண்டகம்.

திருப்பழனத்தில் இருந்து திங்களூர் சென்று, அப்பூதி அடிகளாரைக் கண்டு மகிழ்ந்து, அரவம் தீண்டிய அவர் திருகமனை உயிர்ப்பித்து, அப்பர் பெருமான் மீண்டும் திருப்பழனம் சார்கின்றார்.

பெ. பு. பாடல் எண் : 210
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடும் தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியஅன் பொடுவணங்கி முன்நின்று போற்றுஇசைப்பார்.

         பொழிப்புரை : அப்பூதியார் திங்களூரினின்றும் தம்மைப் பின்பற்றி வரப், பசுமையான கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாக உடைய ஒப்பற்ற சிவபெருமானின் திருப்பழனப் பதியுள் புகுந்து, நாவுக்கரசர் பெருங்காதலுடன் தம் பெருமானின் திருவடிகளைச் சார்ந்து, மீதூர்ந்த அன்புடன் வணங்கித் திருமுன்பு நின்று வணங்கியவராய்.


பெ. பு. பாடல் எண் : 211
புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன்கழல்கீழ்
அடைமாலைச் சீலம்உடை அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து, நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் சொல்மாலை பாடினார்.

         பொழிப்புரை : மாலைக்காலத்தில் தோன்றும் பிறைமதியின் மாலையை ஒரு மருங்கில் கொண்ட சடையையுடைய இறைவரின் அழகிய திருவடிகளின் கீழ், அடைதற்குரிய தன்மையாகும் பெரும் பேற்றினையுடைய அப்பூதியடிகளாரின் நாள் ஒழுக்கத்தை (வேள்வி செய்து வரும் பாங்கினை) உயர்வாகப் பாராட்டி, நலம் மிகுந்த இனிய தமிழின் மாலையான திருப்பதிகச் சொன்மாலையைப் பாடினார்.

         இத்திருப்பதிகம் `சொல் மாலை பயில்கின்ற` (தி. 4 ப.12) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும். இப்பதிகத்தில் பத்தாவது பாடலில்,

`அஞ்சிப் போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.`
                                                                                 (தி. 4 ப.12 பா.10)
எனவரும் பகுதியை நினைவு கூர்ந்து, `அடைமாலைச் சீலமுடை அப்பூதியடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து` என ஆசிரியர் கூறுகின்றார். அடைமாலைச் சீலம் - அடைதற்குரிய இயல்பாகிய சீலம். நடைமாணச் சிறப்பித்து - நாள்தொறும் மேற்கொண்டு வரும் ஒழுக்கத்தைச் சிறப்பித்து.


பெ. பு. பாடல் எண் : 212
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை, எம்மருங்கும்
தொழும்பணிமேற் கொண்டுஅருளி, திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்பு உறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பலபாடி,
செழும் பழனத்து இறைகோயில் திருத்தொண்டு செய்து இருந்தார்.

         பொழிப்புரை : எழுகின்ற படத்தையுடைய பாம்புகளையும் இளம் பிறையையும் அணிந்த சிவபெருமானை, எங்கும் எல்லாப் பதிகளிலும் வணங்கும் பணியைத் தலைமேற் கொண்டு, திருச்சோற்றுத்துறை முதலான பதிகளை அடைந்து, அவ்வவ்விடத்தும் உள்ள கோயில்கள் பலவற்றையும் பாடி வணங்கிச், செழுமையான திருப்பழனத்தை அடைந்து, அங்கு இறைவரின் திருக்கோயிலில் செயத்தக்க திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.


பெ. பு. பாடல் எண் : 213
சாலநாள் அங்குஅமர்ந்து, தம் தலைமேல் தாள்வைத்த
ஆலம்ஆர் மணிமிடற்றார் அணிமலர்ச்சே வடிநினைந்து,
சேல்உலாம் புனல்பொன்னித் தென்கரை ஏறிச்சென்று,
கோலநீள் மணிமாடத் திருநல்லூர் குறுகினார்.

         பொழிப்புரை : பலநாள்கள் அப்பழனத்தில் தங்கியிருந்து, தம்முடியின் மீது திருவடி சூட்டிய திருநீலகண்டரின் அழகிய மலர்ச் சேவடிகளை எண்ணியவாறு, சேல்மீன்கள் உலவும் நீர் நிறைந்த காவிரியின் தென்கரை வழியே சென்று, அழகு மிக்க நீண்ட மாடக்கோயிலான திருநல்லூரை நாவுக்கரசர் அடைந்தார்.


4. 036    திருப்பழனம்                 திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆடினார் ஒருவர் போலும், மலர்கமழ் குழலி னாளைக்
கூடினார் ஒருவர் போலும், குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும், தூயநன் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும் , மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும் , கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார்.


பாடல் எண் : 2
போவதுஓர் நெறியும் ஆனார், புரிசடைப் புனிதனார், நான்
வேவது ஓர் வினையில் பட்டு, வெம்மை தான் விடவும் கில்லேன்,
கூவல் தான் அவர்கள் கேளார், குணம்இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார் .


பாடல் எண் : 3
கண்டராய் முண்டர் ஆகிக் கையிலோர் கபாலம் ஏந்தித்
தொண்டர்கள் பாடி ஆடித் தொழுகழல் பரம னார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர், வேத நாவர்,
பண்டை என் வினைகள் தீர்ப்பார், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : வீரராய் , மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டை யோட்டை ஏந்தி , அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய் , பகைவருடைய மும்மதில்களையும அம்பு எய்து அழித்த வேதியராய் , வேதம் ஓதும் நாவினராய் என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்து எம்பெருமான் அமைந்து உள்ளார் .


பாடல் எண் : 4
நீர்அவன், தீயி னோடு நிழல்அவன், எழில்அதுஆய
பார்அவன், விண்ணின் மிக்க பரம்அவன், பரம யோகி,
ஆரவன், அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமிழ்தம் ஆனார், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார் .


பாடல் எண் : 5
ஊழியார், ஊழி தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார், பாவம் தீர்க்கும் பராபரர், பரம தாய
ஆழியான் அன்னத் தானும் அன்று அவர்க்கு அளப்புஅரிய
பாழியார் பரவி ஏத்தும் பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான் , ஊழிகளாய் , ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய , சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார் .


பாடல் எண் : 6
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச் செய்து,
நூலின் கீழ் அவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து , காலனைத் தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின், பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார் .


பாடல் எண் : 7
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதன்னும்
போதித்து நின்று உலகில் போற்றிசைத் தார், இவர்கள்
சோதித்தார் ஏழ்உலகும்   சோதியுள் சோதி ஆகிப்
பாதிப்பெண் உருவம் ஆனார் பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : சூரியன் , அக்கினி , சந்திரன் , பிரமன் , திருமால் , புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள் . இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள் . பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதி பாகராக உள்ளார் .


பாடல் எண் : 8
கால்தனால் காலற் காய்ந்து, கார்உரி போர்த்த ஈசர்,
தோற்றினார் கடல்உள் நஞ்சைத் தோடுஉடைக் காதர், சோதி
ஏற்றினார், இளவெண் திங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைகள் எல்லாம், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : காலினாலே கூற்றுவனை உதைத்து , யானைத்தோலைப் போர்த்தியவராய் , அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான் , கடலில் தோன்றிய விடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய் , தோடு அணிந்த காதினராய் , வெண்ணிறமுடைய காளையினராய் , பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச் செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார் .


பாடல் எண் : 9
கண்ணனும் பிரம னோடு காண்கிலர் ஆகி வந்தே,
எண்ணியும் துதித்தும் ஏத்த எரிஉரு ஆகி நின்று,
வண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்உலாம் பாடல் கேட்டார், பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து , தம்மை வாழ்த்தும் அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார் .


பாடல் எண் : 10
குடைஉடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின்
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி, மீண்டும்
படைகொடை அடிகள் போலும் பழனத்துஎம் பரம னாரே.

         பொழிப்புரை : அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை , அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் , காளையை வாகனமாக உடைய , உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான் , தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர் .

                                             திருச்சிற்றம்பலம்


4.  087    திருப்பழனம்                      திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம்எல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல் அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய், பழனத்து அரசே,
கூவித்துக் கொள்ளும் தனைஅடி யேனைக் குறிக்கொள்வதே.

         பொழிப்புரை :திருப்பழனத்தில் உகந்தருளியிருக்கும் அரசே! அடியேன் வாழ்க்கையில் தீவினையின் விளைவுகளாகிய துக்கங்கள் எல்லாம் கொடிய துயரத்தை அடையச் செய்து என்னை மேவி நிற்கின்றன. அவை தம் செயலில் சோர்ந்து கொட்டாவிவிட்டு அடியேனை விடுத்து நீங்கின அல்ல. அடியேன் அவற்றைப் போக்கச் சிவோகம் பாவனையில் இருக்கும் செய்தியை நீ அறிவாய். அடியேனை உன் அடிமைத் தொழிலில் கூவுவித்துக் கொள்ளுவதை உன் குறிக்கோளாகக் கொள்வாயாக.

பாடல் எண் : 2
சுற்றிநின் றார்புறம் காவல் அமரர் கடைத்தலையில்,
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்து,அடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்து அரசே, உன் பணிஅறிவான்,
உற்றுநின் றார், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை : பழனத்து அரசே ! எண் திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .


பாடல் எண் : 3
ஆடிநின் றாய் அண்டம் ஏழும் கடந்துபோய், மேல்அவையும்
கூடிநின் றாய்,குவி மென்முலை யாளையும் கொண்டு, உடனே
பாடிநின் றாய், பழனத்து அரசே, அங்குஓர் பால்மதியம்
சூடிநின் றாய், அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே.

         பொழிப்புரை : பழனத்து அரசே ! நீ மேல் உலகங்கள் ஏழனையும் கடந்து அதற்கு மேலும் உயர்ந்து கூத்து நிகழ்த்தி நின்றாய் . எல்லா உயிரோடும் பொருந்தியிருக்கின்றாய் . குவிந்த மெல்லிய முலைகளை உடைய பார்வதியையும் உடன் கொண்டு பால் போன்ற வெண்பிறை சூடிப் பாடிக் கொண்டு நிற்கும் நீ அடியேனையும் பிறவித் துயர்கருதி அஞ்சாதபடி ஆட்கொள்ள வேண்டுவதனை உன் திருவுள்ளத்துக் கொள்வாயாக .


பாடல் எண் : 4
எரித்துவிட் டாய் அம்பினால் புரம் மூன்றும், முன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை ஆண்டுக்கு எய்த ஒர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய், பழனத்தரசே, கங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாய், அடி யேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை : பழனத்து அரசே ! அம்பினால் மும்மதில்கள் முன்னொரு காலத்தில் அழியுமாறு எரியச் செய்து விட்டாய் . பார்வதி நடுங்குமாறு ஓர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாக அணிந்து விட்டாய் . நீண்ட சடையின் மீது கங்கையைப் பொறுத்துத் தாங்கியுள்ளாய் . அடியேனை உள்ளத்துக்கொண்டு அருள் செய்வாயாக .


பாடல் எண் : 5
முன்னியும் முன்னி முளைத்தன மூஎயி லும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை, மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசுஅறி வாய்,பழ னத்துஅரசே
முன்னியும் உன்அடி யேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை :பழனத்து அரசே ! மும்மதிலிலுள்ள அரக்கர்களும் எதிர்ப்பட்டு உள்ளத்துக் கருதி உன்னொடு போராட நீ அங்கும் நிலை பெற்று இருந்து அவர்களை அழித்தாய் . வஞ்சமனத்தவராகிய புறச் சமயப் புறப்புறச் சமயத்தவர்கள் இயற்றிவைத்துள்ள நூல்களின் பொருளியல்பையும் நீ அறிவாய். நீ பல செய்திகளை நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக் கொண்டு அருளுவாயாக.


பாடல் எண் : 6
ஏய்ந்து அறுத்தாய், இன்பன் ஆய் இருந்தே படைத்தான் தலையைக்
காய்ந்து அறுத்தாய், கண்ணி னால்அன்று காமனைகாலனையும்
பாய்ந்து அறுத்தாய், பழனத்து அரசே, என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை :பழனத்து அரசே ! நீ எல்லோருக்கும் இன்பத்தை நல்குபவனாய் இருந்தும் பிரமன் தலையை மனம் பொருந்தி நீக்கினாய் . மன்மதனைப் பார்வதியின் திருமணத்தின் முன்பு வெகுண்டு அழித்தாய் . கூற்றுவனையும் காலால் உதைத்து அழித்தாய் . அடியேனுடைய பழைய வினைகளின் பயனாகிய துன்பத்தை நுணுகுமாறு அழித்து அடியேனைக் குறிக்கொண்டு அருளுவாயாக .


பாடல் எண் : 7
மற்றுவைத் தாய் அங்குஒர் மால்ஒரு பாகம் மகிழ்ந்து,உடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடும் கூடும் பரிசுஎனவே,
பற்றிவைத் தாய், பழனத்து அரசே அங்குஒர் பாம்புஒருகை
சுற்றிவைத் தாய், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை : பழனத்து அரசே ! ஒப்பற்ற திருமாலை மகிழ்வோடு உன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்து , பார்வதிக்குத் திருமேனியின் ஒரு பாகத்தைக் கொடுத்து அவளோடு கூடியிருப்பது போலவே திருமாலொடும் பொருந்தியுள்ளாய் . ஒரு பாம்பைப் பிடித்து அஃது ஒருகையைச் சுற்றிக் கொண்டிருக்குமாறு செய்துள்ளாய் . அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .

  
பாடல் எண் : 8
ஊரின்நின்றாய், ஒன்றி நின்றுவிண் டாரையும் ஒள்அழலால்
போரின்நின் றாய், பொறையாய், உயிர் ஆவி சுமந்துகொண்டு
பாரின் நின்றாய், பழனத்து அரசே, பணி செய்பவர்கட்கு
ஆரநின் றாய்,அடி யேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை : கயிலைமலையில் உள்ளம் பொருந்தி உறைகின்றாய் . அத்தகைய பழனத்து அரசே ! கொடிய தீயினாலே பகைவர்களை அழிப்பதற்குப் போரில் ஈடுபட்டாய் . உயிர்களைப் பாரமாகச் சுமந்து கொண்டு உயிர்களுக்கு உயிராக இருக்கின்றாய் . உனக்குத் தொண்டு செய்யும் அடியவர்கள் மனநிறைவு அடையுமாறு திருக் கோயில்களில் நிலையாக இருக்கும் நீ அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .


பாடல் எண் : 9
போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் புனல்அதனை,
ஆகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துஉடனே,
பாகம்வைத் தாய், பழனத்துஅரசே, உன் பணிஅருளால்
ஆகம்வைத் தாய், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை :பழனத்து அரசே ! முறுக்கேறிய சிவந்த சடையின் மீது கங்கையை உனக்குப் போகசக்தியாக வைத்துள்ளாய் . உன் மார்பில் வைத்திருந்த பார்வதியை மகிழ்ந்து உன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விட்டாய் . அருளினாலே , உனக்குத் தொண்டு செய்வதற்கே அடியேனுடைய உடம்பை அமைத்துள்ள நீ அடியேனைக் குறிக்கொண்டு ( இனிப் பிறவித் துயர் அடியேற்கு நேராதவாறு ) அருளுவாயாக .


பாடல் எண் : 10
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள்நெரியக்
கெடுத்து இருந்தாய், கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே
படுத்து இருந்தாய், பழனத்து அரசே புலியின் உரிதோல்
உடுத்து இருந்தாய், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே.

         பொழிப்புரை :பழனத்து அரசே ! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய் . செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய் . புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய் . அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக .
                                             திருச்சிற்றம்பலம்



                                             5. 035    திருப்பழனம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அருவ னாய்,அத்தி ஈர்உரி போர்த்து, உமை
உருவ னாய், ஒற்றி யூர்பதி ஆகிலும்,
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னால் திருவேண்டும் இத் தேவர்க்கே.

         பொழிப்புரை : அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய் , உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும், பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும் .


பாடல் எண் : 2
வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னை அறி யார்சிலர் ஆதர்கள்,
பைகொள் ஆடு அரவு ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.

         பொழிப்புரை : படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும் , உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார் ; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர் .


பாடல் எண் : 3
வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவன் ஆயிரம்  நாமமே.

         பொழிப்புரை : அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச் சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண்பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக .


பாடல் எண் : 4
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்குஅப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொள் மாலை சடைக்குஅணிந் திட்டதே.

         பொழிப்புரை : பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சு விடவும் , அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ ?


பாடல் எண் : 5
நீலம் உண்ட மிடற்றினன், நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தால், நிறைந்தது ஓர்
பாலும் உண்டு, பழனன்பால் என்னிடை
மாலும் உண்டு,இறை என்தன் மனத்துஉளே.

         பொழிப்புரை : நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும் , பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உள தாகின்றது .


பாடல் எண் : 6
மந்த மாக வளர்பிறை சூடிஓர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்,
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.

         பொழிப்புரை : பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும் , பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும், தாயும் , தந்தையும் , எம்பெருமானும் ஆவன் .


பாடல் எண் : 7
மார்க்கம் ஒன்று அறி யார்மதி யில்லிகள்,
பூக்க ரத்தில் புரிகிலர் மூடர்கள்,
பார்க்க நின்று பரவும் பழனத்தான்,
தாள்கண் நின்று தலைவணங் கார்களே.

         பொழிப்புரை : எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலை வணங்காதவர்கள் , அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும் , பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர் .


பாடல் எண் : 8
ஏறி னார்இமை யோர்கள் பணிகண்டு,
தேறு வார்அலர் தீவினை யாளர்கள்,
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னான் உமை யாளொடுங் கூடவே.

         பொழிப்புரை : இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும் , தீவினையாளர்கள் தெளிவடைந்தாரல்லர் . இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன்

பாடல் எண் : 9
சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புரம் மூன்றுஎய்தான்,
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை,
எற்றி னால் மறக்கேன் எம் பிரானையே.

         பொழிப்புரை : திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன் ; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும் ?


பாடல் எண் : 10
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன், தாள்அடி யேனுடை உச்சியே.

         பொழிப்புரை : பழனத்தலத்து இறைவன் , பொங்குகின்ற பெருங்கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்கமானவற்றை இறுத்து அருள்செய்தவனும் , உமையொரு பங்கனும் , அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான் .
                                             திருச்சிற்றம்பலம்


                                             6. 036    திருப்பழனம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அலைஆர் கடல்நஞ்சம் உண்டார் தாமே,
         அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே,
கொலையாய கூற்றம் உதைத்தார் தாமே,
         கொல்வேங்கைத் தோல்ஒன்று அசைத்தார் தாமே,
சிலையால் புரமூன்று எரித்தார் தாமே,
         தீநோய் களைந்து என்னை ஆண்டார் தாமே,
பலிதேர்ந்து அழகாய பண்பர் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட் கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.


பாடல் எண் : 2
வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே,
         மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே,
கள்ளம் கடிந்துஎன்னை ஆண்டார் தாமே,
         கருத்துஉடைய பூதப் படையார் தாமே,
உள்ளத்து உவகை தருவார் தாமே,
         உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே,
பள்ளப் பரவைநஞ்சு உண்டார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் ஒற்றைச் சடையிலே கங்கை வெள்ளத்தை ஏற்றவர். மேம்பட்டவர் எல்லோருக்கும் மேம்பட்டவர். வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். ஞானம் பெற்ற பூதங்களைப் படையாக உடையவர். தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர். தீராத பெரிய நோய்களையும், சிறிய நோய்களையும் தீர்ப்பவர். ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்.


பாடல் எண் : 3
இரவும் பகலுமாய் நின்றார் தாமே,
         எப்போதும் என்நெஞ்சத்து உள்ளார் தாமே,
அரவம் அரையில் அசைத்தார் தாமே,
         அனல்ஆடி அங்கை மறித்தார் தாமே,
குரவம் கமழுங்குற் றாலர் தாமே,
         கோலங்கள் மேன்மேல் உகப்பார் தாமே,
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே.
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் இரவும் பகலும் எப்போதும் என் நெஞ்சத்து உள்ளவராய்ப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தீயில் கூத்தாடித் தம் கையால் எல்லோருக்கும் `அஞ்சன்மின்` என்று அபயம் அளிப்பவராய்க் குரா மலர் மணம் கமழும் குற்றாலத்தில் உறைபவராய்ப் பலபல வேடங்களை விரும்பு பவராய்த் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு என்றும் பக்கலில் இருந்து உதவுபவர்.


பாடல் எண் : 4
மாறுஇல் மதில்மூன்றும் எய்தார் தாமே,
         வரிஅரவம் கச்சாக வார்த்தார் தாமே,
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே,
         நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே,
ஏறுகொடும் சூலக் கையர் தாமே,
         என்பு ஆபரணம் அணிந்தார் தாமே,
பாறுஉண் தலையில் பலியார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய்க் கோடுகளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய், திருநீறணிந்த தூயவராய், நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க் கொடிய சூலத்தை ஏந்தியவராய், எலும்புகளை அணிகளாக அணிந்தவராய்ப் பருந்துகள் புலால் நாற்றமறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் உள்ளார்.


பாடல் எண் : 5
சீரால் வணங்கப் படுவார் தாமே,
         திசைக்குஎல்லாம் தேவாகி நின்றார் தாமே,
ஆரா அமுதமும் ஆனார் தாமே,
         அளவுஇல் பெருமை உடையார் தாமே,
நீறுஆர் நியமம் உடையார் தாமே,
         நீள்வரைவில் லாக வளைத்தார் தாமே,
பாரார் பரவப் படுவார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் எல்லோராலும் புகழ்ந்து வணங்கப்படுபவராய், எண் திசைகளுக்கும் உரிய தேவராய், தெவிட்டாத அமுதம் ஆவாராய், எல்லையற்ற பெருமை உடையவராய், நீர்வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய், மேருமலையை வில்லாக வளைத்தவராய், எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர்.


பாடல் எண் : 6
காலன்உயிர் வௌவ வல்லார் தாமே,
         கடிதுஓடும் வெள்ளை விடையார் தாமே,
கோலம் பலவும் உகப்பார் தாமே.
         கோள்நாகம் நாணாகப் பூண்டார் தாமே,
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே,
         நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே,
பால விருத்தரும் ஆனார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் காலன் உயிரைப் போக்க வல்லவராய், விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடையவராய்ப் பல வேடங்களையும் விரும்புபவராய்க் கொடிய பாம்பினைத் தம் வில்லின் நாணாக இணைத்தவராய், நீல கண்டராய்க் கயிலாயத்தின் உச்சியில் உள்ளாராய், பாலன் மூத்தோன் முதலிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார்.


பாடல் எண் : 7
ஏய்ந்த உமைநங்கை பங்கர் தாமே,
         ஏழ்ஊழிக்கு அப்புறமாய் நின்றார் தாமே,
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே,
         அளவுஇல் பெருமை உடையார் தாமே,
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே,
         தீவாய் அரவுஅதனை ஆர்த்தார் தாமே,
பாய்ந்த படர்கங்கை ஏற்றார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய், ஏழு ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவராய், அடியார்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய், எல்லை கடந்த பெருமை உடையவராய், உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய், விடம் கக்கும் வாயினை உடைய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தேவருலகிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார்.


பாடல் எண் : 8
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே,
         உள்ஊறும் அன்பர் மனத்தார் தாமே,
பேராதுஎன் சிந்தை இருந்தார் தாமே,
         பிறர்க்குஎன்றும் காட்சிக்கு அரியார் தாமே,
ஊர்ஆரும் மூவுலகத்து உள்ளார் தாமே,
         உலகை நடுங்காமல் காப்பார் தாமே,
பாரார் முழவத்து இடையார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை : பழன நகர் எம்பிரானார் தம்மை நினையாதவர் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய், உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக இருப்பவராய், என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய், தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய், ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவியிருப்பவராய், உலகம் துயரால் நடுங்காதபடி காப்பவராய், இவ்வுலகைச் சூழ்ந்த கடல்களிலும் பரவியிருப்பவராய் உள்ளார்.


பாடல் எண் : 9
நீண்டவர்க்குஓர் நெருப்புஉருவம் ஆனார் தாமே,
         நேரிழையை ஒருபாகம் வைத்தார் தாமே,
பூண்டஅரவைப் புலித்தோல்மேல் ஆர்த்தார் தாமே,
         பொன்நிறத்த வெள்ளச் சடையார் தாமே,
ஆண்டுஉலகுஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே,
         அங்கங்கே சிவம்ஆகி நின்றார் தாமே,
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழனநகர் எம்பிரானார் திருமாலுக்கு அடியினைக் காணமுடியாத தீப் பிழம்பின் வடிவில் காட்சி வழங்கியவராய், பார்வதி பாகராய், புலித்தோல் மீது பாம்பினை இறுகக் கட்டி இடையில் அணிபவராய், செஞ்சடையில் கங்கை வெள்ளத்தைத் தேக்கியவராய், ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவராய், பல இடங்களிலும் சிவமாகிக் காட்சி வழங்குபவராய், பாண்டவரில் அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள்புரிந்தவராய் உள்ளார்.


பாடல் எண் : 10
விடைஏறி வேண்டுஉலகத்து இருப்பார் தாமே,
         விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே,
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே,
         பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே,
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே,
         அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே,
படையாப் பல்பூதம் உடையார் தாமே,
         பழன நகர்எம் பிரானார் தாமே.

         பொழிப்புரை :பழன நகர் எம்பிரானார் காளையை இவர்ந்து தாம் விரும்பிய உலகத்து இருப்பவராய்ச் சூரியன் வழிபடும் சோற்றுத் துறையில் உறைபவராய்த் தேவர் கூட்டத்தால் நாற்பக்கமும் சூழப் பெற்றவராய்ப் பூந்துருத்தியையும் நெய்த்தானத்தையும் விரும்பியவராய், அடுத்துப் புனல்சூழும் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய், இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப் பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார்.
                                             திருச்சிற்றம்பலம்

4. 012     திருப்பழனம்                 பண் - பழந்தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள், சொல்லீரே,
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்,
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலம்உண்டு இகழ்வானோ.

         பொழிப்புரை :சொல் வரிசையைத் தவறாமல்கூவுகின்ற குயில் இனங்களே! பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய்ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ? தூது சென்று எம் பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்.


பாடல் எண் : 2
கண்டகங்காள், முண்டகங்காள், கைதைகாள், நெய்தல்காள்,
பண்டரங்க வேடத்தான், பாட்டுஓவாப் பழனத்தான்,
வண்டுஉலாம் தடம்மூழ்கி, மற்றுஅவன்என் தளிர் வண்ணம்
கொண்டநாள் தான்அறிவான், குறிக்கொள்ளாது ஒழிவானோ.

         பொழிப்புரை :நீர் முள்ளிகளே! கடல் முள்ளிகளே! தாழைகளே! நெய்தல்களே! பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத் தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்தபோழ்து அவன் என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாளை, தான் நினைவில் வைத்திருப்பவள் ஆதலின் என்னைத் தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது என்னைத் தனித்து வருந்துமாறு விடுபவனல்லன்.


பாடல் எண் : 3
மனைக்காஞ்சி இளங்குருகே, மறந்தாயோ, மதமுகத்த
பனைக்கைம்மா உரிபோர்த்தான், பலர்பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்புஎல்லாம் உரையாயோ, நிகழ்வண்டே,
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய்ச் சோர்வாளோ.

         பொழிப்புரை : வீட்டுக்கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கியிருக்கும் இளைய நாரையே! மறந்தாயோ! பிரகாசிக்கின்ற வண்டே! மதம் பொழியும் முகத்தை உடையதாய்ப் பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானைத் தோலை மேலே போர்த்தவனாய்ப் பலரும் பாடும் திருப்பழனத்து எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா? என் தூதாகச் சென்ற என் தோழி அவன்பால் தான் கொண்ட காதலால் தூது சொல்லவேண்டிய செய்தியை நெகிழவிட்டுவிட்டாளோ?


பாடல் எண் : 4
புதியைஆய் இனியைஆம் பூந்தென்றால், புறங்காடு
பதிஆவது இதுஎன்று பலர்பாடும் பழனத்தான்,
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன், என்உயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.

         பொழிப்புரை : புதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே! சுடுகாட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத் தானாய், தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்தவேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த, விதியைத் தன் இட்டவழக்காக ஆள்கின்ற பெருமான், என் உயிருடன் விளையாடுகின்றானோ?


பாடல் எண் : 5
மண்பொருந்தி வாழ்பவர்க்கும், மாதீர்த்த வேதியர்க்கும்,
விண்பொருந்து தேவர்க்கும், வீடுபேறாய் நின்றானை,
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனை,என்
கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவேனோ.

         பொழிப்புரை : இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ?


பாடல் எண் : 6
பொங்குஓத மால்கடலில் புறம்புறம்போய் இரைதேரும்
செங்கால்வெண் மடநாராய், செயல்படுவது அறியேன்நான்,
அம்கோல வளைகவர்ந்தான், அணிபொழில்சூழ் பழனத்தான்,
தம்கோல நறுங்கொன்றைத் தார்அருளாது ஒழிவானோ.

         பொழிப்புரை : மிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே! அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ?


பாடல் எண் : 7
துணைஆர முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்,
பணைஆர வாரத்தான், பாட்டுஓவாப் பழனத்தான்,
கணைஆர இருவிசும்பில் கடிஅரணம் பொடிசெய்த
இணைஆர மார்பன்,என் எழில் நலம் உண்டு இகழ்வானோ.

         பொழிப்புரை : துணையான பேட்டினைத் தழுவிச் சென்று நீர்த் துறையை அடையும் இளைய நாரையே! முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய், அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில் களையும் அடியோடு பொடியாக்கியவனும், முடிக்கப்படாமல் இரு பக்கமும் தொங்கவிடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமான எம்பெருமான், என் அழகையும் இனிமையையும் நுகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ?


பாடல் எண் : 8
கூவைவாய் மணிவரன்றிக் கொழித்துஓடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்துஇலங்கப் பாய்ந்துஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள்கோன் கொல்ஏற்றின் கொடிஆடைப்
பூவைகாள், மழலைகாள், போகாத பொழுது உளதே.

         பொழிப்புரை : திரளாக உள்ள மணிகளை வாரிக் கரையிலே சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிப் பாவையின்கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய், உள்ள எம்பெருமானுடைய காளை எழுதிய கொடியாடை மேலே உள்ள மழலைபோல் இனிமையாகப் பேசும் பூவைகளே! எம்பெருமானுடைய பிரிவாற்றாமல் அடியேனுக்குப் பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாய் நீண்டு, கழியாது துன்புறுத்துகின்றது.


பாடல் எண் : 9
புள்ளிமான் பொறிஅரவம் புள்உயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதுஏத்த இருக்கின்ற பழனத்தான்,
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுஉரைப்பர் உலகுஎல்லாம்,
கள்ளியேன் நான்இவர்க்குஎன் கனவளையும் கடவேனோ.

         பொழிப்புரை : புள்ளிகளை உடைய மானே! படப்புள்ளிகளை உடைய பாம்பே! அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும், படங்களை உடைய திருஅனந்தாழ்வானைப் படுக்கையாக உடைய திருமாலும், தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னைத் தியானிப்பவருடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர். உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பெறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ?


பாடல் எண் : 10
வஞ்சித்துஎன் வளைகவர்ந்தான், வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகுஅன்னம் பரந்துஆர்க்கும் பழனத்தான்,
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழல்ஓம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய், கோடுஇயையே.

         பொழிப்புரை : அஞ்சிப்போய்க் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின் குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கூடல் தெய்வமே! என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த, செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண் சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் பரவி ஆரவாரிக்கும் பழனத்து எம் பெருமான் அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்றாலும், கூடல் சுழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.

                                             திருச்சிற்றம்பலம்















12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...