அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகில் அளகத்தில்
(பழநி)
பழநியப்பா!
மாதர் மயல்
அற அருள் புரிவாய்
தனதன
தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ......
தந்ததான
முகிலள
கத்திற் கமழ்ந்த வண்பரி
மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய
...... ரங்கமீதே
முகம்வெயர்
வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ......
யெங்குமேவி
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி
......லொன்றிமேவி
ஒளிதிகழ்
பத்மக் கரங்க ளின்புற
முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ
...... ழிந்திடாதோ
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு
...... மங்கைநீடு
திகழ்வன
பச்சைப் பசங்கி யம்பண
கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை
...... யண்டமீதே
பகலிர
வற்றிட் டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி
...... யன்புகூரும்
பதிவ்ரதை
மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்
......தம்பிரானே.
பதம் பிரித்தல்
முகில்
அளகத்தில் கமழ்ந்த, வண் பரி-
மள அலர் துற்றக் கலந்து, இடம் தரு
முகிழ் நுதி தைத்து, துயர்ந்த மங்கையர் ......அங்கமீதே,
முகம்வெயர்வு
உற்றுப் பரந்து, செங்கயல்
விழி இணை செக்கச் சிவந்து, குங்கும
ம்ருகமத மத்தத் தனங்களின் மிசை ......எங்கும்
மேவி,
உக உயிர் ஒத்து, புயங்கள் இன்பு உற,
உறவினை உற்று, திரண்டு கொங்கு அளவு
உறும் அணை உற்றுத் திரங்கு மஞ்சமில்
...... ஒன்றி
மேவி,
ஒளிதிகழ்
பத்மக் கரங்களின் புறம்,
உறு வளை ஒக்கக் கலின்கல் என்கவும்
உயர் மயல் உற்று உற்று இரங்கும் என்பது ...... ஒழிந்திடாதோ?
செகம்
முழுது ஒக்கப் பயந்த சங்கரி,
அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை, ......சுமங்கை,நீடு
திகழ்வன
பச்சைப் பசங்கி, அம்பண
கரதலி, கச்சு உற்று இலங்கு கொங்கையள்,
திருவருள் நல்பொன் பரந்திடும் பரை, ......அண்டமீதே
பகல்
இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை,
திரிபுரை, முற்றிட்டு, இரண்டொடு ஒன்று அலர்
பரிவுற ஒக்கச் செயும் பரம்ப்ரமி, ......அன்புகூரும்
பதிவ்ரதை, மிக்கச் சிரம்தெரிந்து அருள்
பகிரதி, வெற்பில் பிறந்த பெண் தரு
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள்......தம்பிரானே.
பதவுரை
செகம் முழுது ஒக்க பயந்த --- உலகம்
முழுவதும் ஒருசேர ஈன்றவரும்,
சங்கரி --- சுகத்தைச் செய்பவரும்,
அடியவர் சித்தத்து உறைந்த --- அடியார்களுடைய
உள்ளக்கோயிலில் உறைகின்ற,
சம்ப்ரம --- சிறப்புடைய,
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை ---
சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் இடங்கொண்ட பெண் மணியும்,
சுமங்கை --- மேலான மாதாவும்,
நீடு திகழ்வன பச்சை பசங்கி --- பெரிதும்
விளங்குகின்ற பச்சைப் பசேல் என்ற நிறம் உடையவரும்,
அம்பண கரதலி --- அம்பணம் என்ற யாழைக்
கரத்தில் ஏந்தியவரும்,
கச்சு உற்று இலங்கு கொங்கையள் --- கச்சுடன்
விளங்கும் தனபாரங்களை உடையவரும்,
திருவருள் நல் பொன் பரந்திடும் பரை ---
திருவருளாகிய நல்ல செல்வத்தை எங்கும் பரவச் செய்யும் பராசக்தியும்,
அண்ட மீது பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த
அம்பிகை --- அண்டங்கட்கு அப்பால் பகலும் இரவும் இல்லாத உயர்ந்த இடத்தில் உள்ள
அன்பிகையும்,
திரிபுரை --- மூன்று உலகங்கட்குத் தலைவியும்,
முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர் ---
பூரணாராகி மூவரும் அல்லரான சிவபெருமான்,
பரிவு உற --- அன்பு கொள்ளுமாறு,
ஒக்க செயும் ---- பொருந்திய தவம்புரியும்,
பரப்ரமி --- பெரிய பொருளானவரும்,
அன்பு கூரும் --- அன்பு மிக்க,
பதிவ்ரதை --- பதிவிரதையும்,
மிக்க சிரம் தெரிந்தருள் பகிரதி ---
(சிவமூர்த்தியின்) சிறந்த சென்னியில் விளக்கமுற்றருளும் கங்காதேவி உற்பத்தியாகும்,
வெற்பில் பிறந்த பெண் தரு --- இமயமலையில்
உதித்தவருமாகிய உமாதேவியார் பெற்ற பாலகரே!
பழநியில் வெற்பில் --- பழநியம்பதியில்
மலைமீது,
திகழ்ந்து நின்று அருள் --- விளக்கமுற்று
நின்று ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்ற,
தம்பிரானே --- தனிப்பெரும் தலைவரே!
முகில் அளகத்தில் கமழ்ந்த --- மேகம்
போன்ற கூந்தலில் வாசனை வீசும்,
வண் பரிமள அலர் துற்ற கலந்து --- நல்ல
மணமலர்கள் நெருங்கிச் சேர்ந்து இடம்தரும்,
இடம் தரு முகிழ் நுதி தைத்து --- இடம்
பெறும்படி விளங்கும் நகநுனியால் அழுந்தப் பதித்து,
துயர்ந்த மங்கையர் அங்கமீது --- தொடர்கின்ற
பெண்களின் உடலின் மீது,
முகம் வெயர்புற்று பரந்து --- முகத்தில்
வேர்வை தோன்றிப் பரவவும்,
செம் கயல் விழிஇணை செக்க சிவந்து --- சிவந்த
கயல் மீனை யொத்த இரண்டு கண்களும் செக்கச் சிவக்கும்படியும்,
குங்குமம் --- குங்குமமும்,
ம்ருகமத --- கஸ்தூரியும் அணிந்து,
மத்த தனங்களின் மிசை எங்கு மேவி ---
செருக்குள்ள கொங்கைகளின் மேலெல்லாம் பொருந்தி,
உக உயிர் ஒத்து --- வெளிப்பட்டுத் தோன்றும்
உயிர் என அம்மாதரைக் கருதி,
புயங்கள் இன்பு உற --- தோள்கள் இன்புறுமாறு
தழுவியும்,
உறவினை உற்று --- சம்பந்தஞ் செய்தும்,
திரண்டு கொங்கு அளவுறும் --- திரண்டுள்ளதும்
வாசனை கலந்துள்ளதுமாகிய,
அணை உற்று --- படுக்கையில் அமர்ந்து,
திரங்கு மஞ்சமில் ஒன்றி மேவி --- சருக்கங்
கொள்ளும் அக்கட்டிலில் அவர்களுடன் ஒன்றுபட்டிருந்து,
ஒளிதிகழ் பத்ம --- ஒளி விளங்கும் தாமரை போன்ற,
கரங்களின் புறம் உறு --- கரங்களின் மேலுள்ள,
வளை ஒக்க கலின் கல் என்கவும் --- வளையல் ஒரு
சேர கலின்கல் என்று ஒலிக்கவும்,
உயர் மயல் உற்று உற்று - மிகுந்த மயக்கங்
கொண்டு இரங்கும்,
அன்பு அது - அம்மகளிர்க்காக இரக்கங் காட்டும்
அன்பானது,
ஒழிந்திடாதோ - என்னை விட்டு ஒழியாதோ?
பொழிப்புரை
உலகங்கள் முழுவதும் ஒரு சேர ஈன்றவரும், சுகத்தைச் செய்பவரும், அடியார்களுடைய உள்ளக் கோயிலில் உறைகின்ற
சிறப்புடைய சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் எழுந்தருளியவரும், மேலான பெண்மணியும் மிகவும் விளங்குகின்ற
பச்சைப் பசேல் என்ற மரகத நிறமுடையவரும், அம்பணம்
என்ற யாழை ஏந்திய கரத்தினரும், கச்சணிந்த தனபாரங்களை
உடையவரும், திருவருளாகிய நல்ல
செல்வத்தை எங்கும் பரவச் செய்பவரும், பராசக்தியும், அண்டங்களுக்கு அப்பால் அல்லும் பகலும்
இல்லாத நிலையில் விளங்கும் அம்பிகையும், மூவுலகங்கட்கும்
முதல்வியும், மூவருக்கும் மேற்பட்ட
சிவமூர்த்தி அன்பு கெள்ளும்படி தவம் புரிந்து கலந்தவரும், பரம்பொருளானவரும், அன்பு மிகுந்த மகா பதிவ்ரதையும், சிறந்த சிவபெருமானுடைய சென்னியில்
வீற்றிருந்தருளும் கங்காதேவி உற்பத்தியாகும் இமயமலையில் உதித்தவரும் ஆகிய
பார்வதியம்மையார் தந்த திருக்குமாரரே!
பழனாபுரியின் மலை மீது சிறப்புடன்
எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே!
மேகம் போன்ற கூந்தலில் வாசனை நிறைந்த
மலர்கள் சேர்ந்து, இடம் பெற்றுள்ள
நகநுனியால் அழுந்தப் பதித்து நான் தொடர்கின்ற மங்கையரது உடலின்மீதும் முகத்திலும்
வேர்வை உற்றுப் பரவவும், சிவந்த கயல்மீன்
போன்ற இரு கண்கள் மிக்க சிவப்பாகவும், குங்குமமும், கஸ்தூரியும் தரித்து பூரித்துள்ள
கொங்கைகளின் மீது பொருந்தி, வெளியே உலாவும் உயிர்
என்று அம்மாதர்களைக் கருதி, தோள்கள் இன்புறுமாறு
சம்பந்தஞ் செய்து, வாசனையுடன்
திரண்டுள்ள படுக்கையுடன் சுருக்கங் கொண்ட கட்டிலின் மீது பொருந்தியிருந்து, ஒளி மிகுந்த தாமரை போன்ற கரங்களில் உள்ள
வளையல்கள் கலீர் என்று ஒலிக்க, அவ் விலைமாதருடன்
சேரும் பெரிய மோக மயக்கத்தைக் கொண்டு, அம்மாதர்
மீது இயங்குகின்ற அன்பானது என்னை விட்டு நீங்காதோ!
விரிவுரை
இத்
திருப்புகழில், முன்னுள்ள நான்கு
அடிகளில் காமுகருக்கு, அவர்கள் காதலித்த
பரத்தையர் பால் நிகழும் நிலைகளைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
செகமுழுது
ஒக்கப் பயந்த
---
அகில
உலகங்களை ஈன்றவர் உமாதேவியார். சர்வலோக மாதா.
“அகிலாண்ட
கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்தரூப மயிலே!” என்கிறார்
தாயுமானார்.
“அகில
ஜக அண்ட நாயகி” என்று அருணகிரியார் திருவானைக்கா திருப்புகழில் கூறுகின்றார்.
“முழுது
உலகு ஈன்றாள் செங்கை பற்றினன், பற்று இலார்க்கே வீடு அருள் பரமயோகி” என்கிறார்
பரஞ்சோதி முனிவர்.
சங்கரி ---
சம்-சுகம்.
கரம்-செய்வது. சுகத்தைச் செய்கின்றவன் சங்கரன். தினத்தைச் செய்கின்றவன் தினகரன்.
செய்கின்ற கருவிக்குக் கரம் என்று பேர். கைக்குத் தெலுங்கில் “செய்” யென்றே பேர்.
எனவே
எல்லா
வுயிர்களுக்கும் சுகத்தைச் செய்கின்ற தேவிக்குச் சங்கரி என்று பேர்.
சுகம்
என்பது செல்வத்தாலும் மனைவி மக்களாலும் நிலபுலன்களாலும் எய்தமாட்டா. செல்வம் ஈட்டி
அச்செல்வத்தால் சுகம் பெறுவேன் என்பாருடைய முயற்சி, நெய்யை விட்டு நெருப்பினை அணைப்பாருடைய
முயற்சியை யொத்தது.
எனவே
ஞானம் ஒன்றே சுகத்திற்குக் காரணம். அந்த ஞானத்தின் சொரூபம் அம்பிகை. ஞானாம்பிகை.
ஆகவே ஞானபூரணியே தன்னை வழிபடும் அன்பர்க்கு ஞானத்தை நல்கி, ஞானத்தினால் சுகத்தைச் செய்கின்றாள்.
அடியவர்
சித்தத் துறைந்த சம்ப்ரம சிவன் ---
சிவபெருமான்
அனவரதமும் இடையறாது நீங்கா துறைகின்ற இடம் அடியாருடைய உள்ளம் என உணர்க.
“இமைப்பொழுதும்
என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” --- மணிவாசகர்
“நினைப்பவர் மனம்
கோயிலாகக் கொண்டவன்” --- அப்பர்
“கூற்று அறியாத
பெருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே” --- வள்ளலார்
பச்சை
பசங்கி
---
உமாதேவியாருடைய
நிறம் மரகத நிறம். பச்சை நிறம் பேரழகுடையது- பச்சைப் பயிர், பச்சை மணி முதலியன, கண்டார் கருத்தைக் கவர்வன. அது கருணையைக்
குறிக்கின்ற நிறம். அம்பிகை கருணையே வடிவமானவள். கருணாம்பிகை நாமம் படைத்தவள்.
அம்பணம் ---
அம்பணம்
என்பது ஒருவகை யாழ். அந்த யாழை அம்பிகை கரத்தில் ஏந்தியிருக்கிறாள்.
பகல்
இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை ---
பகல்-நினைப்பு; இரவு-மறப்பு. நினைப்பும் மறப்பும்
இல்லாத ஞானானந்த மயமான அருள் அநுபவத்தில் விளங்குகின்ற தாய் பராசத்தி என உணர்க.
சகல கேவலம் அற்ற சுத்தநிலையில் விளங்குபவள்.
இரண்டொடு
ஒன்று அலர்
---
இரண்டொ
டொன்று-மூன்று. சிவமூர்த்தி மும்மூர்த்திகளில் ஒருவரல்லர். வேதத்தில் அவரை
சதுர்த்தம் என்று-நான்காவது பொருள் என்று கூறுகின்றது. “மூவரும் அறிகிலர் யாவர்
மற்றறிவார்” என்று திருவாசகம் முரசறைகின்றது. மூவரில் ஒருவராக நினைப்பது தவறு.
பதிவ்ரதை
---
பதியை அன்றி வேறு ஒரு பொருளையும் விரும்பாத உத்தம குணமுடையவளுக்குப் பதிவிரதை என்று
பேர். பதிபக்தியில் தலைசிறந்தவரை உலகமெல்லாம் கைகூப்பி வணங்கும். பதிவிரதா
தருமத்திற்குச் சிகரமானவர் உமாதேவியார்.
கருத்துரை
பார்வதி
பாலகரே! பழநியப்பரே! மாதர் தொடர்பு அற அருள் புரிவீர்!
No comments:
Post a Comment