அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மனக்கவலை ஏதும்
(பழநி)
பழநியப்பா!
மனதில் கவலைகள் ஏதும் இன்றி,
உமது திருவடியையே
தொழுது உய்ய அருள்
தனத்ததன
தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை
யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய
பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை
யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு
னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள
மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மனக்
கவலை ஏதும் இன்றி, உனக்கு அடிமையே புரிந்து,
வகைக்கும் மநு நூல் விதங்கள் ...... தவறாதே,
வகைப்படி
மனோ ரதங்கள் தொகைப்படியினால் இலங்கி,
மயக்கம் அற, வேதமும் கொள் ...... பொருள்நாடி,
வினைக்கு
உரிய பாதகங்கள் துகைத்து, வகையால் நினைந்து,
மிகுத்த பொருள் ஆகமங்கள் ...... முறையாலே,
வெகுட்சி
தனையே துரந்து, களிப்பின் உடனே நடந்து,
மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்.
மனத்தில்
வருவோனெ என்று, உன் அடைக்கலம் அதாக வந்து,
மலர்ப்பதம் அதே பணிந்த ...... முநிவோர்கள்,
வரர்க்கும்,
இமையோர்கள் என்பர் தமக்கும், மனமே இரங்கி,
மருட்டி வரு சூரை வென்ற ...... முனைவேலா!
தினைப்புனம்
முனே நடந்து, குறக்கொடியையே மணந்து,
செகத்தை முழுது ஆள வந்த ...... பெரியோனே!
செழித்த
வளமே சிறந்த மலர்ப் பொழில்களே நிறைந்த,
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
பதவுரை
மனத்தில் வருவொனெ என்று ---
“நினைப்பவருடைய மனத்தினில் எழுந்தருளுவோனே” என்று துதித்த,
உன் அடைக்கலம் அது ஆக வந்து --- தேவரீருக்கு
அடைக்கலமாக வந்து சேர்ந்து,
மலர் பதம் அதே பணிந்த --- மலர்ப் பாதங்களையே
பணிந்த,
முநிவோர்கள் --- முநிவர்கள் பொருட்டும்,
வரர்க்கும் --- சிறந்த சான்றோர் பொருட்டும்,
இமையோர்கள் என்பர் தமக்கும் --- தேவர்
என்பவர் பொருட்டும்,
மனமே இரங்கி --- திருவுள்ளம் கருணை செய்து,
மருட்டி வரு சூரை வென்ற --- உலகங்களைப்
பயமுறுத்தி வந்த சூரபன்மனை வென்ற,
முனை வேலா --- கூரிய வேலாயுதரே!
தினை புனம் முன்னே நடந்து ---
தினைப்புனத்தில் முன் நடந்து சென்று,
குறக் கொடியையே மணந்து --- குறவர்
புதல்வியாகிய கொடி போன்ற வள்ளிபிராட்டியை திருமணஞ் செய்தருளிய,
செகத்தை முழுது ஆள வந்த --- உலக முழுவதையும்
ஆட்கொள்ளும் பொருட்டு வந்த,
பெரியோனே --- பெரியவரே!
செழித்த வளமே சிறந்த --- செழிப்புற்ற
வளமையால் சிறந்த,
மலர் பொழில்களே நிறைந்த --- மலர்ச் சோலைகள்
நிறைந்துள்ள
திரு பழநி வாழ வந்த --- திருப்பழநி மலையில்
அடியவர்கள் வாழும் பொருட்டு வந்து உறையும்,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
மனக்கவலை ஏதும் இன்றி --- மனக் கவலை ஒரு
சிறிதும் இல்லாமல்,
உனக்கு அடிமையே புரிந்து --- தேவரீருக்கு
அடிமையாகி உமது பணியை செய்து,
வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே ---
வகையால் அமைந்துள்ள மநுவறத்தினின்றும் வழுவாமல்,
வகைப்படி மனோ ரதங்கள் --- நல்ல முறையில் மன
விருப்பங்கள்,
தொகைப் படியினால் இலங்கி --- எண்ணிய
கணக்கின்படி கை கூடி வந்து விளங்கி.,
மயக்கம் அற --- ஐயந்திரிபு மயக்க முதலியன
இல்லாமல்,
வேதமும் கொள் பொருள் நாடி --- வேதத்தில்
சொல்லப்பட்ட பொருளை விரும்பி,
வினைக்கு உரிய பாதங்கள் துகைத்து ---
தீவினைக்குரிய பாவச் செயல்களைக் கடிந்து விலக்கி,
வகையால் நினைந்து --- தியான முறைப்படி
நினைந்து,
மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே ---
உயர்ந்த பொருள்களைக் கொண்ட சிவாகமங்களில் சொன்ன முறைப்படி,
வெகுட்சி தனையே துறந்து --- கோபத்தை யகற்றி, களிப்பினுடனே நடந்து - மகிழ்ச்சியுடன்
ஒழுகி,
மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் ---
மேம்பட்டு விளங்கும் உம்மை வணங்குவதற்கு (வேண்டிய அருள் தரும் பொருட்டு) வந்தருள
வேண்டும்.
பொழிப்புரை
“நினைப்பவர்களுடைய
உள்ளக் கோயிலில் எழுந்தருளி வருபவரே!” என்று துதி செய்து, உம்மிடம் அடைக்கலம் புகுந்து, திருவடிக் கமலங்களை வணங்கிய முனிவர்கள், சான்றோர்கள், தேவர்கள் என்பவர்களின் பொருட்டுத்
திருவுள்ளம் இரங்கி, உலகை அச்சுறுத்திக்
கொண்டு வந்த சூரனை வென்ற கூரிய வேற்படையை உடையவரே!
தினைப்புனத்தின் முன் நடந்து சென்று, வள்ளி பிராட்டியைத் திருமணம் செய்து, உலம் முழுவதையும்
ஆளவந்த பெரியோனே!
நல்ல வளமுடன் செழிப்புற்ற பூஞ்சோலைகள்
நிறைந்த திருப்பழநி மலையில் அடியார்கள் உய்யும் பொருட்டு வந்த பெருமிதம் உடையவரே!
மனக்கவலை சிறிதும் இன்றி, தேவரீருக்கு
அடிமையாகிய திருத்தொண்டுகளையே புரிந்து, நீதிகளை வகுத்துரைக்கும் மநுநெறிப்படி
நடந்து, நல்ல மனோ
விருப்பங்கள் நிறைவேறி, மயக்கமின்றி, வேதங்கள் கூறும் பொருள்களை விரும்பி, தீவினையை விளைக்கும் பாவங்களை அகற்றி, முறைப்படி தேவரீரைத் தியானித்து, உயர்ந்த பொருள்களை உரைக்கும்
சிவாகமங்களின் முறையின்படி சினத்தை மாற்றி மகிழ்ச்சியுடன் ஒழுகி, பரம்பொருளான உம்மையே வணங்கி உய்யுமாறு, வந்தருள வேண்டும்.
விரிவுரை
மனக்கவலை
ஏதுமின்றி
---
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான மனக்கவலை; பிள்ளைகட்குப் படிக்க
வேண்டுமே என்ற கவலை; பரீட்சையில் தேர்ச்சி
பெற வேண்டுமே என்ற கவலை; மனைவிக்கு
வேண்டியவற்றை எல்லாம் வாங்குவதில் கவலை; பிள்ளை
இல்லை என்ற கவலை; நிரம்பவும்
பிறக்கின்றனவே என்ற கவலை; பணம் தேடவேண்டும்
என்ற கவலை; தேடிய பொருளைக்
கைப்பற்றுவதில் கவலை; பிள்ளைகள் சொற்படி
நடக்கவில்லையே என்ற கவலை; வயது
முதிர்ந்துவிட்டதே என்ற கவலை; நோய்களால் கவலை; மரணம் வருகின்றதே என்ற கவலை! இப்படி
எத்தனையோ கவலைகள்!
இந்த
மனக்கவலைகட்கு மருந்து எந்த மருத்துவரிடமும் கிடையாது. தனக்கு உவமை இல்லாத தனிப்
பரம்பொருளாம் இறைவன் திருவடிதான் மனக்கவலை மாற்றும் மருந்து.
தனக்கு
உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்
கவலை மாற்றல் அரிது.
என்றார்
திருவள்ளுவ தேவர்.
ஒரு
மேஜையின் மீது பல பொருள்கள் இருக்கின்றன. அந்த மேஜையின் மீது மிகப் பெரிய பொருள்
ஒன்றை எடுத்து வைப்போமானால் அதில் இருக்கும் பொருள்கள் தாமே கீழே விழுந்துவிடும். அதுபோல்
இறைவன் திருவடியாகிய (பெரிய) ஒன்றை நினைக்கும் போது, சிறிய சிறிய எண்ணங்களும் அவற்றால் வரும்
கவலைகளும் தாமே விலகி விடும்.
உனக்கு
அடிமையே புரிந்து ---
முருகப்
பெருமானுடைய அடிமையாக இருந்து அப்பரம கருணாமூர்த்தியின் திருப்பணிகளையே புரிதல்
வேண்டும். இறைபணியால் என்றும் குன்றாத இன்பம் உண்டாகும்.
வகைக்கு
மநு நூல் விதங்கள் தவறாதே ---
மநுநூல்
என்பது நீதி நூல். முதன் முதலாக மநு நூலைச் செய்தவர் முருகக் கடவுள். அதனை
உலக்குத் தந்தவர் மநு. அதனால் அவர் பேரால் விளங்குகின்றது.
“இந்திரை கேள்வர்
பிதாமகன் கதிர்
இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மநுநூல் விளம்பிய கந்தவேளே” --- (சந்திர) திருப்புகழ்
இப்போதுள்ள
மநுநீதி நூலில் இடைச் செருகல்கள் பலவும் சேர்ந்துவிட்டன. அதனால் அதன் தூய்மை மாறி
நிற்கின்றது. முந்திய மநு முறைப்படி மக்கள் தவறாமல் ஒழுகுதல் வேண்டும்.
மனோரதங்கள்
தொகை படியினால் இலங்கி ---
அடியார்கள்
எண்ணுகின்ற எண்ணங்களை எல்லாம் எம்பெருமான் முடித்துத் தருவார்.
“கருத்து அறிந்து முடிப்பான் தன்னை” ---
அப்பர்
“அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்தருள் பெருமாளே” --- (கலகலெனச் சில)
திருப்புகழ்
மயக்கமற
வேதமுங்கொள் பொருள்நாடி ---
வேதம்
எல்லாச் சமயத்தார்க்கும் பொது, எல்லாக் கலைகட்கும்
வேதம் மாதா.
வேதத்தை
ஓதுகின்றபோது சந்தேக விபரீதமின்றி குருமுகமாகக் கற்க வேண்டும். ஒரு நூலை ஐயம்
திரிபு மயக்கம் இன்றிக் கற்கவேண்டும்.,
இதுவோ
அதுவோ என்று எண்ணுவது ஐயம். ஒன்றை மற்றொன்றாக அறிவது திரிபு. பொருளை உணராமல்
மயங்குவது மயக்கம்.
வினைக்கு
உரிய பாதகங்கள் துகைத்து ---
தீவினையைத்
தரும் பாவ நினைவுகள், பாவச் சொற்கள், பாவச் செயல்கள் ஆகியவற்றை திருவருள்
துணையால் வரும் தியானாதி கருமங்களால் பொடி படுத்தவேண்டும்.
மிகுந்த
பொருள் ஆகமங்கள் முறையாலே ---
உயர்ந்த
பொருள்களை உரைப்பவை சிவாகமங்கள். வேதம் ஆகமம் என்ற இரண்டும் சிவபெருமான் அருளியவை.
வேதம்-பொது; ஆகமம்-சிறப்பு.
வெகுட்சி
தனையே துறந்து
---
கோபம்
கொடிய பகை. அக்கோபத்தால் கேடுற்றவர் பலர். தவம் புரிவோர்க்கு ஆசையும் கோபமும்
பெரும் பகையாகும். தவத்தை அழிக்குங் கருவிகள் ஆசையும் கோபமும்.
“தவஞ் செய்வோர்கள், வெருவறச் சென்றடை காம வெகுளி”
என்கிறார்
கம்பநாடார். சினத்தை விட்டார் சாந்தியாக வாழ்வார்.
களிப்பினுடனே
நடந்து
---
சினம்
அழிந்த இடத்தில் மகிழ்ச்சியுண்டாகும். மகிழ்ச்சியைக் கொல்லுவது சினம்.
மனத்தில்
வருவோனே
---
இறைவன்
எல்லா வுயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். எனினும், நினைப்பவர்களின் உள்ளத்தைக் கோயிலாகக்
கொள்ளுகின்றான்.
“நினைப்பவர் மனங்
கோயிலாகக் கொண்டவன்” --- அப்பர்
“கூற்று அறியாத
பெருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப் பெருங் குன்றே” ---
திருவருட்பா
“மருவும் அடியார்கள் மனதில்
விளையாடு
மரகத மயூரப் பெருமாள்காண்” --- (திருமகளுலாவு) திருப்புகழ்
செகத்தை
முழுதாள வந்த பெரியோனே ---
அகில
உலகங்களும் உய்யும் பொருட்டுச் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த ஞான
மூர்த்தி முருகவேள். “உதித்தனன் உலகமுய்ய” என்று கூறுகின்றது கந்தபுராணம்.
கருத்துரை
பழநிக்
குமரா! உன் பாத மலரை வணங்க அருள்செய்.
No comments:
Post a Comment