பழநி - 0182. மலரணி கொண்டை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மலரணி கொண்டை (பழநி)

பழநியப்பா! 
அடியேன் கீழ்மகன். ஆகிலும் அருள் புரிவாய்.

தனதன தந்தத் தனத்த தானன
     தனதன தந்தத் தனத்த தானன
          தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான


மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
     சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
          மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே

மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
     பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
          வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ......வலையாலே

நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
     வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
          நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே

நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
     வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
          நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய்

அலையநி னைந்துற் பநத்தி லேயநு
     தினமிகு மென்சொப் பனத்தி லேவர
          அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ
  
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
     கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய
          மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ......அருள்தாராய்

பலபல பைம்பொற் பதக்க மாரமு
     மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
          பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே

பதியினில் மங்கைக் கதித்த மாமலை
     யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
          பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மலர் அணி கொண்டைச் சொருக்கிலே, அவள்
     சொலும் மொழி இன்பச் செருக்கிலே, கொடு-
          மையும் அடர் நெஞ்சத் திருக்கிலே, முக ......மதியாலே,

மருவு நிதம்பத் தடத்திலே, நிறை
     பரிமள கொங்கைக் குடத்திலே, மிக
          வலியவும் வந்து ஒத்த இடத்திலே, விழி ......வலையாலே,

நிலவு எறி அங்கக் குலுக்கிலே, எழில்
     வளை புனை செங்கைக் குலுக்கிலே, கன
          நிதி பறி அந்தப் பிலுக்கிலே,செயும் ...... ஒயிலாலே,
  
நிதம் இயலும் துர்க் குணத்திலே, பர-
     வசமுடன் அன்பு உற்ற இணக்கிலே, ஒரு
          நிமிஷம் இணங்கி, கணத்திலே வெகு ...... மதிகேடாய்

அலைய, நினைந்து உற்பநத்திலே, அநு-
     தினம் மிகும் என் சொப்பனத்திலே, வர
          அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் ......உலைவேனோ?

அசடனை, வஞ்சச் சமர்த்தன் ஆகிய
     கசடனை, உன் சில் கடைக்கண் நாடிய
          மலர்கொடு, நின்பொன் பதத்தையே தொழ, ......அருள்தாராய்.

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,
     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,
          பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!

பதியினில் மங்கை, கதித்த மாமலை-
     யொடு, சில குன்றில் தரித்து வாழ், யர்
          பழநியில் அன்பு உற்று இருக்கும் வானவர் ......பெருமாளே.


பதவுரை


      பல பல பை பொன் --- பல பல விதமான பசும் பொன்னால் செய்த,

     பதக்கம் --- பதக்கங்களையும்,

     ஆரமும் --- மாலைகளையும்,

     அடிமை சொலும் சொல் தமிழ் பன்னீரோடு --- அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும்,

     பரிமளம் மிஞ்சு அக் கடப்ப மாலையும் அணிவோனே --- வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

      பதியினில் --- திருத்தலங்களில்,

     மங்கை --- விஜயமங்கையிலும்,

     கதித்த மாமலை --- அழகிய கதித்த மலையிலும்,

     சில குன்றில் தரித்து --- வேறு சில மலைகளிலும் வசித்து,

     வாழ் உயர் பழநியில் அன்பு உற்று இருக்கும் --- வாழ்வு சிறந்த பழநி மலையில் அன்புடன் வசிக்கும்,

     வானவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே!

     மலர் அணி கொண்ட சொருக்கிலே --- மலர்களை அணிந்துள்ள கொண்டை முடியிலும்,

     அவள் சொலும் மொழி இன்பச் செருக்கிலே --- அப் பொதுமகள் பேசும் பேச்சின் இன்பச் செல்வத்திலும்,

     கொடுமையும் அடர் நெஞ்ச திருக்கிலே --- கொடுமையும் நிறைந்துள்ள மனமுறுக்கிலும்,

     முக மதியாலே --- முகமாகிய சந்திரனிலும்,

     மருவு நிதம்ப தடத்திலே --- பொருந்துகின்ற அல்குலிடத்திலும்,

      நிறை பரிமள கொங்கை குடத்திலே --- வாசனை நிறைந்த குடம் போன்ற தனத்திலும்,

     மிக வலியவும் வந்து ஒத்த இடத்திலே --- மிக்க வலிய வந்து இசைந்த இடத்திலும்,

     விழி வலையாலே --- கண் வலையாலும்,

     நிலவு எறி அங்க குலுக்கிலே --- நிலாவொளி போல் குளிர்ந்து ஒளிவீசும் உடம்பின் குலுக்கிலும்,

     எழில் வளை புனை செம் கை குலுக்கிலே --- அழகிய வளையல்களைத் தரித்துள்ள செங்கையின் “கிலுக்” என்ற ஓசையிலும்,

     கன நிதி பறி அந்த பிலுக்கிலே --- மிகுதியாகப் பணத்தைப் பறிக்கின்ற அப் பகட்டிலும்,

     செயும் ஒயிலாலே --- செய்கின்ற ஒய்யாரத்திலும்,

     நிதம் இயலும் துர் குணத்திலே --- தினந்தோறுங் காட்டப்படுகின்ற துர்க்குணத்திலும்

     பரவசம் உடன் அன்பு உற்று இணக்கிலே --- தன் வசம் அற்று அன்பு பூண்டு சேரும் சேர்க்கையில், ஒரு நிமிஷம் இணங்கி,

     அ கணத்திலே வெகு மதி கேடாய் --- அக்கணமே மிகவும் அறிவு கெட்டு,

     அலைய நினைந்து உற்பனத்திலே --- அலையுமாறு எண்ணி அதே தோற்றமாய்,

     அநுதினம் மிகும் என் சொப்பனத்திலே வர --- நாள்தோறும் என்னுடைய கனவிலே வர,

     அறிவும் அழிந்து --- நல்லறிவு கெட்டு,

     அற்பன் அதிலே நிதம் உலைவேனோ? --- அற்பனாகிய அடியேன் அந் நினைவுகளிலேயே தினமும் அழியலாமோ?

     அசடனை --- கீழ்மகனை,

     வஞ்ச சமர்த்தன் ஆகிய கசடனை --- வஞ்சகம் புரிவதில் சாமர்த்தியமுள்ள குற்றவாளியை,

     உன் சித் கடைக்கண் ஆடியும் --- தேவரீருடைய ஞானக் கடைக்கண்ணால் நோக்கி யருளி,

     மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ --- மலர்களைக் கொண்டு உமது அழகிய திருவடிகளையே அடியேன் தொழுமாறு,

     அருள் தாராய் --- திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


         பலவிதமாக அமைந்த அழகிய பொற்பதக்கத்துடன் கூடிய மாலையையும், அடிமையேன் கூறுகின்ற திருப்புகழாகிய பன்னீரையும், நறுமணம் மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும், தரித்திருக்கின்றவரே!

         திருத் தலங்களிலும் விஜயமங்கையிலும், அழகிய கதித்த மலையிலும், வேறு சில குன்றுகளிலும் உறைந்து வாழ்வுக்கு உயர்ந்த பழநிமலையில் அன்புடன் வீற்றிருக்கின்ற தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         மலர்களை அணிந்துள்ள கொண்டை முடியிலும், அப்பொது மக்கள் பேசும் பேச்சின் இன்பச் செல்வத்திலும், கொடுமை நிறைந்த மனமுறுக்கிலும், சந்திரனை யொத்த முகத்திலும், பொருந்திய அல்குலிடத்திலும், வாசனை நிறைந்த குடம் போன்ற கொங்கையிலும், நன்கு வலிய வந்து இசைந்த இடத்திலும், கண்வலையிலும், நிலவின் ஒளிபோன்ற உடம்பின் அசைவிலும், அழகிய வளையல்கள் அணிந்த சிவந்த கரத்தின் ஓசையாலும், மிகுந்த பணத்தைப் பறிக்கின்ற அந்தப் பகட்டிலும், செய்கின்ற ஒய்யாரத்திலும், நாள்தோறும் காட்டப்படுகின்ற தீய குணத்திலும்,
தன்வசம் அழிந்து அன்புகொண்டு கலந்து ஒரு நிமிஷம் கூடி, அக்கணப் பொழுதில் மிக்க அறிவு கெட்டு, அலைய நினைந்து அதே தோற்றமாய், தினந்தினம், என் கனவிலேயும் அக்காட்சியே வந்து காட்சி தர, உள்ளத்துடன் உணர்வு அழிந்து அற்பனாகிய அடியேன், அச்செயலிலேயே தினமும் அழியலாமோ? கீழ்மகனும், வஞ்சனையில் சாமர்த்தியமுடைய மூடனும் ஆகிய அடியேனை உமது ஞானக் கடைக்கண்ணால் நோக்கியருளி, மலர்களைக் கொண்டு உமது அழகிய திருவடிகளையே தொழுமாறு திருவருள் புரிவீராக.

   
விரிவுரை
 

கொடுமையும் அடர் நெஞ்சும் ---

கொடுமையும் என்ற எச்சவும்மையால் ஆசை முதலியவை நிறைந்த உள்ளம் எனக் கொள்க

உற்பனத்திலே ---

உற்பனம்-தோற்றம்.

எங்கும் உற்பனமதாக அமர் உளவோனே” ---  (கருதிமுடி) திருப்புகழ்

சொப்பனத்திலே ---

சதா அப் பொதுமகளிரையே நினைந்து உருகுவதனால், அம்மகளிர் கனவில் வந்து காட்சி தருவார்கள்.

அற்பனத்திலே ---

அற்பன் அத்திலே எனப் பதப்பிரிவு செய்க. அதிலே, என்பது அத்திலே என சந்தத்தை நோக்கி வந்தது.

அடிமை சொலுஞ் சொற் தமிழ்ப் பன்னீர் ---

அருணகிரிநாதருடைய அற்புதத் தெய்வத் திருவாக்காம் திருப்புகழ் இனிய பன்னீராகக் கமழ்கின்றது.

இறைவனுக்கு மலர்மாலை சாத்தியபின் பன்னீர் தெளிப்பார்கள். அதனால் பரிமளம் மிகுதிப்படும்.

கடப்ப மலர்கள் முருகனுக்குச் சாத்தியபின் திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீர் தெளிக்கவேண்டும்.

அதனால் ஞான வாசனை மிகுதிப்படும். இதனால் திருப்புகழின் பெருமையை நன்கு உணர்தல் வேண்டும்.

பதியினில் மங்கை துதித்த மாமலை ---

மங்கை-விஜயமங்கை, ஈரோட்டிலிருந்து திருப்பூர் போகும் இருப்புப் பாதையில் இருக்கிறது. (விஜயமங்கலம்)

கதித்த மலை-ஊற்றுக்குழி, புகைவண்டி நிலையத்தின் அருகில் உள்ள திருத்தலம், கோவை மாவட்டத்தில் உள்ளது.

சில குன்றில் ---

கோவை மாவட்டத்தில் மருதமலை., சிவமலை, சென்னிமலை, ஊதிமலை, தென் சேரி கிரி, வட்டமலை, நாககிரி, கொங்கணகிரி இப்படி முருகனுடைய திருத்தலங்கள் பல திகழ்கின்றன.

முருகன் ஞான மணமுடையவன். அந்த ஞான மணம் வீசுவதனால் கொங்கு நாடு எனப்பெற்றது.

கருத்துரை


பழநியாண்டவரே! கடைக்கண் பார்வை தந்து அருள்புரிவாய்.


No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...