பழநி - 0181. மருமலரினன்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருமலரினன் (பழநி)

பழநியப்பா! 
பிறப்பு இறப்பைக் கடக்க, 
உமது திருவடியை வணங்கும் பேற்றை அருள்

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
     தனதனன தந்த தந்த ...... தனதான


மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
     மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே

வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
     மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி

இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
     இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்

இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
     னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ

திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
     திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத

திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
     செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர்

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
     பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மரு மலரினன் துரந்து விட, வினை அருந்த, அந்தி
     மதியொடு பிறந்து, முன் பெய் ...... வதையாலே,

வகை தனை மறந்து எழுந்து, முலைதனை அருந்தி, அந்த
     மதலை என வந்து, குன்றின் ...... வடிவாகி,

இரு மயல் கொடும் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து,
     இரவுபகல் கொண்டு ஒடுங்கி, ...... அசடு ஆகும்

இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து, உன்
     இணை அடி வணங்க என்று ...... பெறுவேனோ?

திருவொடு பெயர்ந்த், இருண்ட வன மிசை நடந்து, இலங்கை
     திகழ் எரி இடும் குரங்கை, ...... நெகிழாத

திடம் உள முகுந்தர், கஞ்சன் வரவிடு மெல் வஞ்சகங்கள்
     செறிவுடன் அறிந்து வென்ற ...... பொறியாளர்,

பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு, மருது இடை தவழ்ந்து நின்ற,
     பரமபத நண்பர், ன்பின் ...... மருகோனே!

பதும மிசை வண்டு அலம்பு, சுனை பல விளங்கு, துங்க
     பழநிமலை வந்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


      திருவொடு பெயர்ந்து --- இலக்குமியாகிய சீதாதேவியுடன் அயோத்தியை விட்டு நீங்கி,

     இருண்ட வன மிசை நடந்து --- இருள் நிறைந்த கானகத்தில் நடந்து சென்று,

     இலங்கை திகழ் எரி இடும் குரங்கை --- இலங்கா புரியில் பெரிய நெருப்பையிட்ட அநுமானை,

     நெகிழாத --- அன்பினால் கைவிடாதவரும்,

     திடம் உள முகுந்தர் --- உறுதியுள்ள முக்தியை வழங்குபவரும்,

     கஞ்சன் வர விடு மெல் வஞ்சகங்கள் --- கம்சன் அனுப்பின நயவஞ்சக சூழ்ச்சிகளை,

     செறிவுடன் அறிந்து வென்ற --- கூர்மையாக உணர்ந்து அவற்றை வெற்றி பெற்ற,

     பொறியாளர் --- அறிவாளரும்,

     பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சும் --- அன்புடன் மகிழ்ந்து வணங்கும்,

     மருது இடை தவழ்ந்து நின்ற --- மருத மரங்களின் நடுவிலே தவழ்ந்து சென்றவரும்,

     பரம பத நண்பர் --- பரம பதத்தில் வாழும் நண்பரும் ஆகிய திருமாலின்,

     அன்பின் மருகோனே --- அன்புள்ள திருமருகரே!

      பதும மிசை வண்டு அலம்பு --- தாமரை மலரின் மீது வண்டுகள் ஒலி செய்கின்ற,

     சுனை பல விளங்கு --- சுனைகள் பல விளங்குகின்ற,

     துங்க பழநிமலை வந்து அமர்ந்த --- பரிசுத்தமான பழநிமலைமீது வந்து எழுந்தருளிய,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

     மரு மலரினன் துரந்து விட --- வாசனையுள்ள தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன் விதித்து அனுப்ப,

     வினை அருந்த --- வினைப்பயனை அநுபவிக்கும் பொருட்டு,

     அந்தி மதியொடு பிறந்து --- முடிவான (பத்தாவது மாதத்தில்) பிறந்தது,

     முன் பெய் வதையாலே --- முற்பிறப்பில் செய்த வினையினால்,

     வகைதனை மறந்து எழுந்து --- வந்த வகையை மறந்து எழுந்து,

     முலைதனை அருந்தி --- தாயின் பாலைக்குடித்து,

     அந்த மதலை என வந்து --- அழகிய குழந்தையென வந்து,

     குன்றின் வடிவு ஆகி --- மலை போன்ற பருத்த வடிவை அடைந்து,

     இருமயல் கொடும் துவண்டு --- பெரிய காம மயக்கத்தைக் கொண்டு வாடி,

     பொதுவையர் அகம் புகுந்து --- பொது மாதருடைய வீடுகட்குச் சென்று,

     இரவு பகல் கொண்டு ஒடுங்கி --- இரவும் பகலும் (அவருடன் ஆடி) ஒடுக்கமுறுகின்ற,

     அசடு ஆகும் --- மூடனாகும்,

     இருவினை பொதிந்த --- நல்வினை தீவினைகளால் மூடப்பெற்ற,

     இந்த ஜனன மரணம் துறந்து --- இந்த பிறப்பு இறப்பு என்பவற்றை விட்டு,

     உன் இணை அடி வணங்க --- தேவரீரது இரண்டு திருவடிகளையும் வணங்கும் பேற்றினை,

     என்று பெறுவேனோ --- அடியேன் என்று பெறுவேனோ?


பொழிப்புரை


     இலக்குமியான சீதாதேவியுடன் அயோத்திமா நகரை விட்டு நீங்கி இருண்ட காட்டில் நடந்தவரும், இலங்கா புரியில் பெரிய தீ வைத்த அனுமானைக் கைவிடாதவரும், உறுதியுள்ள முத்தியை வழங்குபவரும், கம்சன் அனுப்பிய நயவஞ்சகச் சூழ்ச்சிகளை எல்லாம் கூர்மையாக அறிந்து வென்றவரும், அறிவாளரும், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருதமரங்களின் இடையே தவழ்ந்து சென்றவரும், பரமபதத்தின் நண்பருமாகிய திருமாலின் அன்புள்ள மருகரே!

         தாமரை மலர்மீது வண்டுகள் ஒலிக்கின்ற சுனைகள் பல விளங்குகின்ற பரிசுத்தமான பழநிமலை மீது வந்து எழுந்தருளியிருக்கின்ற பெருமிதம் உடையவரே!

         நறுமணமுடைய நற்றாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விதித்து அனுப்ப, வினையை நுகரும் பொருட்டு, முடிவான பத்தாம் மாதத்தில் கருவினின்றும் பிறந்து, முன் செய்த வினையால் வந்த வகையை அறிந்து எழுந்து, தாய்ப்பாலை உண்டு, அழகிய மகவு என வளர்ந்து, குன்றுபோல் பருத்து, அழகுடன் விளங்கி, பெரிய காம மயக்கம் கொண்டு துவண்டு, பொதுமகளிரது வீடுகள் தோறும் சென்று, இரவு பகல் தெரியாது அங்கு அவருடன் உறவுகொண்டு, அதனால் கருவிகாரணங்கள் ஒடுங்கி, மூடனாகும் அடியேன், நல்வினை தீவினையென்ற வினைகளால் மூடப்பெற்ற பிறப்பு இறப்பு என்ற இவற்றை அகன்று, உமது இரு சரணாரவிந்தங்களை, வணங்கும் பேற்றினை என்று பெறுவேனோ?

விரிவுரை


மருமலரினன் துரந்து விட ---

ஒவ்வொருவரும் புரிந்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிரமதேவர் விதிவிலக்கு அவரவர் தலையில் எழுதி கருவில் விடுகின்றார்.

வறியவர்க்கு அன்னம் வழங்கிய ஒருவனை நிலபுலம் உள்ளவனுக்கு மகனாகவும்,

பொன் பொருள் வழங்கியவனைப் பெருந் தனவந்தனுக்கு மகனாகவும்,

ஏழை மாவணவர்கட்குப் புத்தகமும் பொன்னும் தந்து படிக்க உதவி செய்த ஒருவனை கல்விமானுக்கு மகனாக்கி கலைஞனாகவும்,

ஏழைகட்கு வீடுகட்டி உதவியோனைப் பல மாடமாளிகை உடையோன் மகனாகவும்,

பெருஞ்செல்வத்தைப் படைத்திருந்தும் ஏழைகட்கு உதவாத ஒருவனைப் பெரும் வறுமையாளனாகவும்,

ஏழைகள் மனத்தை நோவ வைத்தவனை நோயாளியாகவும்,

பெரியோர் மனத்தைப் புண்படுத்திய ஒருவனை உடம்பெல்லாம் அழுகிய தொழுநோயாளனாகவும்,

பிறன் மனைவியை விரும்பிப் பார்த்த ஒருவனைப் பிறவிக் குருடனாகவும்,

தெய்வம் இல்லை என்ற ஒருவனை ஊமையாகவும்,

இங்ஙனம் அவரவர் நல்வினை தீவினைகட்கு ஏற்ப அவரவர் தலைகளில் எழுதி பிரமதேவர் பிறப்பிக்கின்றனர்.

எழுதாக் குறைக்கு அழுதால் வருமா?”,  அன்று எழுதினவன் அழித்து எழுதப் போகிறானா?” என்ற பழமொழிகள் இது குறித்து எழுந்தன.

தாதாதா தாதாதா தாக்குறைக்கு என் செய்குதும், யாம்
 தாதாதா என்று உலகில் தான் அலைந்தோம் - போதாதா”

என்று பாடுகின்றார் வடலூர் வள்ளலார்.

(முதல் வரியில் ஏழு தா; எழுதாக்குறைக்கு என் செய்வேன்! தாதா - வள்ளலே! தா-கொடு என்று அலைந்தேன்)


வினை அருந்த ---

முன் செய்த வினைகளை நுகரும் பொருட்டு இந்தப் பிறவியை இறைவன் தந்துள்ளான். இந்த உடம்பு கொண்டு நுகரும் வினை பிராரப்த கன்மம் எனப்படும்.

பிராரப்த கன்மம் மூன்று வழியால் வரும்; ஆத்யான் மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதிகம்.

(1)   தன்னாலும் பிறராலும் விலங்கு, அரவம், தேள், எறும்பு, செல், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலிய உயிர்களாலும் வரும் நலம் தீங்கு முதலியன ஆதியான்மிகம்.

தன்னால் பிறரால் தனக்குவருந் தீங்குநலம்
இன்னா விலங்கரவம் தேளறும்பு-சென்முதனீர்
அட்டையல வன்முதலை மீனரவ மாதியினாங்
கட்டமுமிங் காண்மிகமே காண்.

(2)   கருவிலே ஏற்படும் துன்பமும், பிறக்கும்போது ஏற்படுந் துன்பமும், திரை, நரை, மூப்பு, மரணம் இவற்றால் எய்தும் இடர்ப்பாடும், சுவர்க்க நரகங்களில் ஏற்படும் இன்பதுன்பங்களும், செல்வம் வறுமை முதலியவற்றால் வரும் இன்ப துன்பங்களும் ஆதிதைவிகம்.

கருவிற் றுயர் செனிக்குங் காலைத் துயர் செய்
திரைநரைமுப் பிற்றிளைத்துச் செத்து-நரகத்தி
னாழுந் துயர் புவியை யாளின்ப மாதியெலாம்
ஊழுதவு தைவிகம் என்றோர்.

(3)   பனி, இடி, வாடை, தென்றல், நீர், நெருப்பு இவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஆதி பௌதிகம்.

பனியா லிடியால் படர்வா டையினாலும்
துனிதென் றலினால் சுகமும்-தனையனைய
நீரினாம் இன்பின் னலுநெறுப் பினாந்துயரின்
போரிற் பவுதிக மாகும்.

அந்தி மதியொடு பிறந்து ---

சேய் தாய் வயிற்றில் கிடந்து முற்றியபின் பத்தாவது மாதத்தில் தனஞ்சயன் என்ற வாயு பிடித்துத் தள்ள தலைகீழாகி மலையினின்றும் உருள்வது போன்ற இடுக்கண் எய்திப் பூமியில் வந்து பிறக்கும்.

வகை தனை மறந்து ---

இப்பிறவி வந்ததன் நோக்கம் பிறப் பிறப்பில்லாத பெருமானை நினைந்து இருவினையற்று இனிப் பிறவாத தன்மையைப் பெறுதலேயாம். அதனை மறந்து மண், பெண், பொன், முதலிய ஆசைக் கடலில் வீழ்ந்து அறிவு மயங்கி கானலை நீர் என மயங்கும் மான் போல், துன்பத்தை இன்பமெனக் கருதி, விழலுக்கு முத்துலை யிட்டிறைத்து மக்கள் தமது அரிய மானுடப் பிறப்பை வறிதே கெடுத்து மடிகின்றார்கள்.

வந்த வரவை மறந்து-மிக்க
மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும்
இந்த மயக்கை அறுக்க-எனக்கு
எந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான். ---  தாயுமானார்

வரும் வகையி தேது காயம் என நாடும் விதியிலி”
                                                                  ---  (மதிதனை) திருப்புகழ்

குன்றின் வடிவாகி ---

மகனாகப் பிறந்து, நல்ல உணர்வுகளை யுண்டு உறங்கி, உடம்பு நன்கு பருத்து குன்று போலாகி விடுகின்றது.

  மினுகுமினுகு எனும் உடலம் மற முறுகி நெகிழ்வு உறவும்”
                                                                      ---  (அறுகுநுனி) திருப்புகழ்

இருமயல் கொடும் துவண்டு ---

இரு பெரிய-பெரிய மயக்கங்கொண்டு அதனால் உடம்பு துவண்டு வாடுவர்.


பொதுவையர் அகம் புகுந்து............அசடாகும் ---

பொது மகளிரது வீடுகளிற் சென்று, இரவு பகல் என்ற வேற்றுமை தெரியாது திரிந்து இளைஞர்கள் கெடுவார்கள்.

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து
 கங்குல் பகல் என்று நின்று             விதியாலே”    ---  (கண்டுமொழி) திருப்புகழ்


இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் ---

நல்வினை தீவினையாலேயே பிறப்பும் இறப்பும் அமைகின்றன.

  அறம்பாவ மென்னும் அருங்கயிற்றால் கட்டி”       ---  சிவபுராணம்

இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத ---

தென் திசையில் சீதையைத் தேடிச்சென்று, சம்பாதியின் சொல்லால் தெளிவுற்று, இலங்கை சென்று அம்மாநகர் முழுவதும் தீயிட்டுக் கொளுத்திய அநுமானிடம் மிகுந்த அன்பு கொண்டவர் இராமர்.

திடம் உள முகுந்தர் ---

முகுந்தர் முத்தியைத் தருகின்றவர், திடம்-உறுதியுள்ளவர்.

கஞ்சன் வரவிடு மெல் வஞ்சங்கள்..........பொறியாளர் ---

மதுரையை அதர்ம வழியில் அரசு புரிந்து வந்த கம்சன், கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, வஞ்சகமாக பூதகி, திருணாவர்த்தன், சகடாசுரன் முதலிய பலரை அனுப்பினான். அவர்கள் வேறு வேறு மாய வடிவில் வந்து கண்ணனைக் கொல்ல முயன்றார்கள். அவர்களது மாயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவர்களை எல்லாம் கொன்று இறுதியில் கம்சனையும் மாய்த்து, உக்ரசேனனுக்கு முடிசூட்டி அறத்தை நிலைநாட்டி யருளினார்.

பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சும் பரம பத நண்பர் ---

நளகூபரன் மணிக்ரீவன் என்பவர் குபேரனுடைய குமாரர்கள். இருவரும் மது அருந்தி ஆடையின்றி நீர் விளையாட்டு புரிந்து கொண்டிருந்தார்கள். நாரத முனிவர் அங்கே வந்தனர். அவரைக் கண்டு நாணம் இன்றி கட்டைபோல் நின்றார்கள்.

நல்லோர் முன் ஆடையின்றி மரம்போல் நின்ற படியால் மரங்களாகப் பிறக்கக் கடவது” என்று நாரத முனிவர் சபித்தனர். அவர்கள் அஞ்சி அவரை அஞ்சலி செய்து மன்னிக்குமாறு வேண்டினார்கள். நாரதர் திருவுளம் இரங்கி, “நீவிர் ஆயர்பாடியில் நந்தகோபாலன் திருமாளிகையில் மருத மரங்களாக முளைப்பீர்கள், கண்ணபிரானுடைய வண்ண மலரடி தீண்டப் பெறுதலால் சாபம் நீங்கும்” என்று அருள் புரிந்தனர். கண்ணபிரான் உரலிலே கட்டப்பட்டு அம்மரங்களின் இடையே தவழ்ந்து சென்று, உரல் அம்மரங்களின் இடையே தடைப்பட்டதனால் சேவடி தீண்டி மரங்களை உதைத்தருளினார். உடனே அம்மரங்கள் வேருடன் வீழ்ந்தன. அவர்களது சாபம் பாபம் இரண்டும் வேரற்று வீழ்ந்தன. இருவரும் பண்டை வடிவம் பெற்று கமலக்கண்ணனைக் கைதொழுது துதி செய்து தங்கள் உலகம் பெற்றார்கள்.

கருத்துரை


மாயவன் மருகா! பழநியாண்டவா! பிறப்பிறப்பொழிய அருள்வாய்.


No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...