அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மந்தரமதெனவே (பழநி)
பழநியப்பா!
அடியேன் விலைமாதர்
வசம் ஆகி அழியாமல்,
அன்பு வைத்து வந்து
என்னையும் ஆட்கொள்.
தந்ததன
தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரம
தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி
மன்றுகமழ்
தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி
எந்தளவு
மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமா தர்தங்கள் ......
மனைதேடி
எஞ்சிமன
முழலா மலுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும்
விந்தையெனு
முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மே வுமெந்தை ......
புதல்வோனே
மிஞ்சுமழ
கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த ......
முருகோனே
சிந்தைமகிழ்
புலவோர் கள்வந்து
வந்தனைசெய் சரணா ரவிந்த
செந்தமிழி லுனையே வணங்கு ......
குருநாதர்
தென்றல்வரை
முநிநா தரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
மந்தரம்
அது எனவே, சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த,
மஞ்சள் மணம் அதுவே துலங்க, ...... வகைபேசி,
மன்றுகமழ்
தெரு வீதி வந்து
நின்றவரை, விழியால் வளைந்து,
வந்தவரை அருகே அணைந்து, ...... தொழில்கூறி,
எந்த
அளவும் இனிதாக நம்பு
தந்து, பொருள் தனையே
பிடுங்கி,
இன்பம் அருள் விலை மாதர் தங்கள் ......
மனைதேடி,
எஞ்சி
மனம் உழலாமல், உன்தன்
அன்பு உடைமை மிகவே வழங்கி,
என்தனையும் இனிது ஆள, இன்று ...... வரவேணும்.
விந்தை
எனும்உமை மாது தந்த
கந்த! குருபர! தேவ! வங்கம்
என்ற வரை தனில் மேவும் எந்தை ......
புதல்வோனே!
மிஞ்சும்
அழகினிலே சிறந்த
மங்கை, குற மடமாது கொங்கை
மென் கிரியில் இதமாய் அணைந்த ......
முருகோனே!
சிந்தை
மகிழ் புலவோர்கள் வந்து,
வந்தனை செய் சரண அரவிந்த!
செந்தமிழில் உனையே வணங்கு ...... குருநாதர்,
தென்றல்வரை
முநி நாதர், அன்று
கும்பிட, நல் அருளே பொழிந்த
தென்பழநி மலைமேல் உகந்த ......
பெருமாளே.
பதவுரை
விந்தை எனும் உமைமாது தந்த கந்த ---
துர்க்காதேவி யென்று கூறுகின்ற உமையம்மையார் பெற்ற கந்தக் கடவுளே!
குரு பர --- பெரிய குருவே!
தேவ --- ஒளியுருவினரே!
வங்கம் என்ற வரை தனில் மேவும் ---
வெள்ளி எனப்பட்ட மலையில் வீற்றிருக்கும்,
எந்தை புதல்வோனே --- எமது பிதாவாகிய
சிவபெருமானுடைய புத்திரரே!
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை ---
உயர்ந்த அழகினிற் சிறந்த மங்கைப் பருவமுடைய,
குற மடமாது --- குறவர் மடமகளாகிய வள்ளி
நாயகியின்,
கொங்கை மென் கிரியில் --- தனமாகிய மெல்லிய
மலையில்,
இதமாய் அணைந்த முருகோனே --- இன்பமுடன்
சேர்ந்த முருகப் பெருமானே!
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து ---
உள்ளம் மகிழ்ந்த புலவர்கள் வந்து,
வந்தனை செய் சரண அரவிந்த --- வணங்குகின்ற
பாதத் தாமரைகளை உடையவனே!
செம் தமிழில் உனையே வணங்கு குருநாதர் ---
செம்மையான தமிழில் துதி செய்து தேவரீரையே வணங்குகின்ற குருநாதரானவரும்,
தென்றல் வரை முநிநாதர் --- தென்றல் வீசும்
பொதியை மலையில் வாழும் முநிவர்கட்கு அதிபரும் ஆகிய அகத்திய முநிவர்,
அன்று --- அந்நாளிலே,
கும்பிட --- கும்பிட்டு வழிபாடு செய்ய,
நல் அருளே பொழிந்த --- நல்ல திருவருளைப்
பொழிந்த,
தென் பழநி மலைமேல் உகந்த --- அழகிய பழநி மலை
மீது மகிழ்ந்திருக்கும்,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
மந்த்ரம் அது என சிறந்த --- மந்த்ர மலை
என்று கூறுமாறு பருத்துள்ள,
கும்ப முலைதனிலே புனைந்த --- குடம் போன்ற முலைகளின்
மேல் பூசிய,
மஞ்சள் மணம் அதுவே துலங்க --- மஞ்சளின்
நறுமணம் நன்கு வீச,
வகை பேசி --- வகை வகையாகப் பேசி,
மன்று கமழ் தெருவீதி வந்து --- மணங்
கமழ்கின்ற, தெருவீதியில் வந்து,
நின்றவரை விழியால் வளைந்து --- அவ்வீதியில்
நின்றவர்களைத் தங்கள் கண்களால் வளைத்து,
வந்தவரை அருகே அணைந்து --- வந்தவரை அருகில்
நெருங்கி,
தொழில் கூறி --- தங்கள் வியாபாரத் தொழிலைக்
கூறி,
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து --- எந்த
அளவிலும் இனிமையாகத் தங்களை நம்புமாறு செய்து,
பொருள் தனையே பிடுங்கி --- பொருளைப் பறித்து,
இன்பம் அருள் --- சிற்றின்பத்தைத் தருகின்ற,
விலைமாதர் தங்கள் மனை தேடி --- விலை
மகளிருடைய வீடுகளைத் தேடிச்சென்று,
எஞ்சி மனம் உழலாமல் --- கெட்டு மனம் உழலா
வண்ணம்,
உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி ---
தேவரீருடைய அன்பு செல்வத்தை நிரம்ப அடியேனுக்கு வழங்கி,
என்றனையும் இனிது ஆள --- அடியேனையும்
இனிமையாக ஆட் கொள்ளும் பொருட்டு,
இன்று வரவேணும் --- இன்று வந்தருள வேண்டும்.
பொழிப்புரை
துர்க்கா தேவி என்னும் உமையம்மையார்
பெற்றருளிய கந்த நாதனே!
பெரிய குருவே!
ஒளியுருவினரே!
வெள்ளிமலையாகிய கயிலாயத்தில்
வீற்றிருக்கும் எமது பிதாவாகிய சிவபெருமானுடைய புதல்வரே!
உயர்ந்த அழகினில் சிறந்தவரும், மங்கைப் பருவம் உடையவரும், குறவர் மடமகளும், ஆகிய வள்ளி பிராட்டியின் தனமாகிய
மெல்லிய மலையில் இன்பமுடன் சேர்ந்த முருகக் கடவுளே!
உள்ளம் உவகையுறுகின்ற புலவர்கள் வந்து
வந்தனை புரிகின்ற பாத தாமரையை யுடையவரே!
செம்மையான தமிழினால் உம்மையே துதி
செய்து வணங்குகின்ற குருநாதரும்,
தென்றல்
காற்று வீசும் பொதிய மலையில் வாழ்கின்ற முனிவரும் ஆகிய அகத்திய முனிவர் அந்நாள்
கும்பிட்டு வழிபட, அவருக்கு நல்ல அருள்
பொழிந்த, இனிய பழநி மலை மீது
மகிழ்ந்துரையும் பெருமிதம் உடையவரே!
மந்தர மலைபோல் பருத்த குடம் போன்ற
தனங்களில் அணிந்த மஞ்சளின் நறுமணம் வீச, வகை
வகையாகப் பேசி, மணம் வீசுகின்ற தெரு
வீதியில் வந்து, அங்கு நின்ற ஆண்களை
விழியினால் வளைத்து, தம்மிடம் வந்தவரை
நெருங்கியணைந்து, வியாபாரத் தொழிலைக்
கூறி, எந்த அளவிலும் தம்மை
இனிதாக நம்புமாறு செய்து, பொருளைக் கவர்ந்து
சிற்றின்பத்தைத் தருகின்ற, விலைமாதருடைய
வீடுகளைத் தேடிக் கெட்டு என் மனம் உழலாவண்ணம், உமது அன்புச் செல்வத்தை மிகவும் தந்து, அடியேனை இனிமையாக ஆட்கொள்ளும் பொருட்டு
இன்று வந்தருள வேண்டும்.
விரிவுரை
இத்திருப்புகழில்
சுவாமிகள் முதல் மூன்று அடிகளில் விலை மகளிரின் தன்மைகளைக் கூறுகின்றார்.
எஞ்சி
மனம் உழலாமல்
---
எஞ்சுதல்-கெடுதல்.
அன்புடைமை
மிகவே வழங்கி
---
இறைவனிடத்தில்
ஒவ்வொருவரும் வேண்டிப் பெறுகின்ற வரம் அன்பு என்ற ஒன்றேயாகும். இறையன்பு தான்
எல்லா நலன்களினும் மேலான நலம்.
“கலந்த அன்பாகிக்
கசிந்துள் உருகும் நலம்.” --- திருவாசகம்
வீரவாகுதேவர்
பானுகோபனை வதைத்துவிட்டு வாகை மாலை சூடிக் கொண்டு வெற்றி முழக்கத்துடன் மீண்டு
முருகவேளிடம் வந்து பணிந்து நின்றார்.
குமரவேள்
தன் அருமைத் தம்பியை நோக்கி, “உனக்கு என்ன வரம்
வேண்டும்? கேள்” என்று அருளிச்
செய்தார்.
அப்போது
வீரவாகுதேவர், “அன்பு ஒன்றே
வேண்டும்” என்று கேட்டார்.
அடியில்
வரும் இப் பாடலை ஒவ்வொருவரும் வழிபாட்டின் போது நியதியாக ஓதவேண்டும்.
கோல
நீடிய நீதிபதி வாழ்க்கையும் குறியேன்
மேலை
இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன்
மால்அயன்
பெறு பதத்தையும் பொருள்என மதியேன்
சால
நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்.
இந்த
வரம் மிக அரியது. முத்தியிலும் சிறந்தது.
"அந்த
நல்வரம் முத்தியின் அரியது ஒன்று, அதனைச்
சிந்தை
செய்திடு தவத்தரும் பெறுகிலர்; சிறியேன்
உயந்திடும்
வகை அருள்செய வேண்டும்" என்றுஉரைப்ப,
எந்தை
கந்தவேள், "உனக்குஅது புரிந்தனம்" என்றான்.
வங்கமென்ற
வரை ---
வங்கம்-வெள்ளி.
வெள்ளிமலை-கயிலாயம்.
சிந்தை
மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த ---
முருகப்பெருமான்
ஞானமூர்த்தி. ஞானத்தை விரும்பும் புலவர்கள் யாவரும் வந்து முருகனை உத்தமமான
உள்ளன்புடன் வணங்குவார்கள்.
நக்கீரர், பொய்யாமொழிப் புலவர், சிகண்டி முனிவர், இடைக்காடர், ஒளவையார், குமரகுருபரர், சிதம்பர முனிவர் முதலிய புலவர்கள்
முருகனை வணங்கி அறிவும் அருளும் பெற்றார்கள்.
செந்தமிழில்
உனையே வணங்கு குருநாதர், தென்றல் வரை முநிநாதர்
அன்று கும்பிட நல் அருளே பொழிந்த ---
அகத்திய
முனிவர் பழநியில் வந்து தவஞ்செய்து,
முருகப்
பெருமானிடம் தமிழின் ஐந்து இலக்கணங்களையும் உபதேசித்துப் பெற்றார். இதன் விரிவைப்
பழநித்தல புராணம், அகத்தியச்
சருக்கத்தில் காண்க.
“சிவனை நிகர் பொதியவரை
முநிவன்அக மகிழ, இரு
செவிகுளிர, இனிய தமிழ் பகர்வோனே” --- (அறிவழிய) திருப்புகழ்
கருத்துரை
சிவபாலா!
வள்ளி மணாளா! பழநி வேலா! அன்புடைமை தந்து அருள்வாய்.
No comments:
Post a Comment