அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
போதகம் தரு (பழநி)
பழநியப்பா!
திருவருள்
புரிவாய்
தான
தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான
போத
கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ......
பணியாவும்
பூணு
கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம ......
அரிதான
வேத
மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ......
அழகான
மேனி
தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ......
அருள்தாராய்
பாத
கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ......
அருள்வோனே
பாதி
சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ......
கயிலாயர்
ஆதி
சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ......
அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
போதகம்
தரு கோவே! நமோ நம,
நீதி தங்கிய தேவா! நமோ நம,
பூதலம் தனை ஆள்வாய்! நமோ நம, ...... பணியாவும்
பூணுகின்ற
பிரானே! நமோ நம,
வேடர் தம் கொடி மாலா! நமோ நம,
போதவன் புகழ் சாமீ! நமோ நம, ...... அரிதான
வேத
மந்திர ரூபா! நமோ நம,
ஞான பண்டித நாதா! நமோ நம,
வீர கண்டைகொள் தாளா! நமோ நம, ...... அழகான
மேனி
தங்கிய வேளே! நமோ நம,
வான பைந்தொடி வாழ்வே! நமோ நம,
வீறு கொண்ட விசாகா! நமோ நம, ...... அருள்தாராய்.
பாதகம்
செறி சூர் ஆதி மாளவெ,
கூர்மை கொண்ட அயிலாலே பொராடியெ,
பார அண்டர்கள் வான்நாடு சேர்தர ......
அருள்வோனே!
பாதி
சந்திரனே சூடும் வேணியர்,
சூல சங்கரனார், கீத நாயகர்,
பார திண் புயமே சேரு சோதியர், ...... கயிலாயர்,
ஆதி, சங்கரனார், பாக மாது உமை,
கோல அம்பிகை, மாதா, மநோமணி,
ஆயி, சுந்தரி, தாய்ஆன நாரணி, ...... அபிராமி,
ஆவல் கொண்டு விறாலே சிராடவெ,
கோமளம் பல சூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ......
பெருமாளே.
பதவுரை
போதகம் தரும் கோவே --- ஞான உபதேசத்தைத்
தருகின்ற தலைவரே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
நீதி தங்கிய தேவா --- நீதிக்கு
இருப்பிடம் ஆகிய சோதியே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
பூதலம் தனை ஆள்வாய் --- இப் பூ
மண்டலத்தை ஆளுகின்றவரே! நம ஓ நம --- வணக்கம், வண்ணம்;
பணி யாவும் பூணுகின்ற பிரானே ---
அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
வேடர் தம் கொடி மாலா --- வேடர்
குலத்தில் அவதரித்த கொடி போன்ற வள்ளியம்மையாரிடம் அன்புடையவரே! நம ஓ நம ---
வணக்கம், வணக்கம்;
போது அவன் புகழ் ஸ்வாமீ - தாமரை மலரில்
வாழ்கின்ற பிரமதேவர் துதி புரிகின்ற சாமியே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
அரிது ஆன வேத மந்திர ரூபா --- அருமையான
வேத மந்திரங்களின் வடிவம் ஆனவரே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
ஞான பண்டித நாதா --- மெய்ஞ்ஞானப்
புலவரே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
வீர கண்டை கொள் தாளா --- வீரக்
கழலையணிந்துள்ள திருவடியை யுடையவரே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
அழகு ஆன மேனி தங்கிய வேளே --- அழகு
நிறைந்த திருமேனியுடைய உபகாரியே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
வான பைதொடி வாழ்வே --- தேவ வுலகில்
வளர்ந்த பசுமை தங்கிய வளையல் அணிந்த தெய்வயானையம்மைக்குக் கணவரே! நம ஓ நம ---
வணக்கம் வணக்கம்;
வீறு கொண்ட விசாகா --- வெற்றி நிறைந்த
விசாக மூர்த்தியே! நம ஓ நம --- வணக்கம், வணக்கம்;
பாதகம் செறி --- தீவினை நிறைந்த,
சூராதி மாளவெ --- சூரபன்மன் முதலிய அசுரர்கள்
இறக்குமாறு,
கூர்மை கொண்ட அயிலாலே போராடியே --- கூரிய
வேலாயுதத்தால் போர் புரிந்து,
பார அண்டர்கள் வான்நாடு சேர் தர --- பெருமை
பொருந்திய தேவர்கள் வானுலகில் சேருமாறு,
அருள்வோனே --- அருள் புரிந்தவரே!
பாதி சந்திரனே சூடும் வேணியர் --- பாதி
நிலவைத் தரித்த சடை முடியினரும்,
சூல சங்கரனார் --- திரிசூலத்தைத் தாங்கிக்
கொண்டிருக்கும் சுகத்தைச் செய்பவரும்,
கீத நாயகர் --- இசைத் தலைவரும்,
பார திண் புயமே சேரு சோதியர் --- வலிமையுந்
திண்மையுங் கொண்ட புயாசலங்களை உடைய ஒளிப்பொருளும்,
கயிலாயர் --- திருக்கயிலையில் வாழ்பவரும்,
ஆதி சங்கரனார் --- முதன்மையான
சிவபரம்பொருளும் ஆகிய சிவபிரானுடைய,
பாக மாது உமை --- இடப்பாகத்தில் இருக்கும்
உமையம்மையும்,
கோல அம்பிகை --- அழகிய அம்பிகையும்,
மாதா மநோமணி --- எல்வுலகங்கட்கும் அன்னையும்
மனோன்மணியும்,
ஆயி --- அன்னையும்,
சுந்தரி --- அழகியும்,
தாய் ஆன நாரணி --- உயிர்கட்குத் தாயான
அன்புக்கு உறைவிடமானவளும்,
அபிராமி --- மிக்க அழகியுமாகிய பார்வதி தேவி,
ஆவல் கொண்டு விறாலே சீராடவே --- அன்புகொண்டு
பெருமையுடன் சீராட்ட,
கோமளம் பல சூழ் கோயில் மீறிய --- அழகு பலவாக
அமைந்த திருக்கோயில் சிறந்து விளங்கும்.
ஆவினன்குடி வாழ்வான --- திருவாவினன் குடியில்
வாழ்வாக வீற்றிருக்கும்,
தேவர்கள் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமை மிகுந்தவரே!
அருள் தாராய் - உமது திருவருளைத் தந்து
உதவுவீர்.
பொழிப்புரை
ஞான உபதேசம் புரிகின்ற தலைவரே! வணக்கம்; வணக்கம்,
நீதிக்கு இருப்பிடம் ஆகிய ஒளிப் பொருளே!
வணக்கம்; வணக்கம்.
இப் பூமண்டலத்தை ஆளுகின்றவரே! வணக்கம்; வணக்கம்.
ஆபரணங்கள் அனைத்தையும் அணிகின்றவரே!
வணக்கம்; வணக்கம்.
வேடர் குடியில் வளர்ந்த கொடி போன்ற
வள்ளியம்மையிடம் அன்பு பூண்டவரே! வணக்கம்; வணக்கம்.
தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவர் துதி
செய்கின்ற சுவாமியே! வணக்கம்; வணக்கம்.
அருமையான வேத மந்திரங்களின் வடிவாய்
விளங்குபவரே! வணக்கம்; வணக்கம்.
மெய்ஞ்ஞானப் புலவர் தலைவரே! வணக்கம்; வணக்கம்.
வீரக் கழலையணிந்த திருவடியையுடையவரே!
வணக்கம்; வணக்கம்.
அழகிய திருமேனியுடைய உபகாரியே! வணக்கம்; வணக்கம்.
தேவவுலகில் வளர்ந்த பசிய வளையல்களை
யணிந்த தேவசேனைக்கு நாயகரே! வணக்கம்; வணக்கம்.
பெருமை நிறைந்த விசாக மூர்த்தியே!
வணக்கம்; வணக்கம்.
தீவினை நிறைந்த சூரபன்மன் முதலிய
இராக்கதர்கள் அழியுமாறு, கூரிய வேலாயுதத்தால்
போர் புரிந்து பெருமையுடைய தேவர்கள் வானுலகத்தில் குடியேறுமாறு அருள் புரிந்தவரே!
பாதி சந்திரனைத் தரித்த சடைமுடியினரும், திரிசூலத்தை யேந்தியவரும், சுகத்தைச் செய்பவரும், இசைக் கலைக்குத் தலைவரும், வலிமையுந் திண்மையும் பொருந்திய
தோள்களையுடைய சோதியரும், திருக்கயிலாய மலையில்
எழுந்தருளி யிருப்பவரும், ஆதி முதல்வரும் ஆகிய
சிவபெருமானுடைய இடப்பாகத்தில் எழுந்தருளிய அழகிய உமாதேவியும், அருட்கோல அம்பிகையும், எவ்வுலகங்கட்கும் தாயாகிய மனோன்மணியும், அன்னையும், அழகியும், எல்லா உயிர்கட்கும் அன்னையான அன்புக்கு
உறைவிடமானவரும், மிக்க அழகியும்
பார்வதியம்மை அன்பு கொண்டு சிறப்புடன் சீராட்ட பல அழகுகள் சூழ்ந்துள்ள
திருக்கோயில் சிறந்த விளங்கும்,
திரு
ஆவினன்குடியில் வீற்றிருக்கும் தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!
அடியேனுக்கு உமது திருவருளைத் தந்து
உதவுவீர்.
விரிவுரை
போதகம்
தரு கோவே
---
முருகவேள்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குக் குருமூர்த்தமாகி முன் தோன்றி, ஞான உபதேசம் புரிந்து அருளுவார்.
அருணகிரிநாதருக்கு அவ்வண்ணம் குருபரனாக உபதேசித்து அருளினார்.
“எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டு இரண்டும் இதுவாம் இலிங்கமென
எட்டு இரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே”
--- (கட்டி முண்ட)
திருப்புகழ்
இவ்வாறு
தனக்கு முருகன் குருவாக நின்று உபதேசித்த திறத்தை அருணகிரிநாதர் பலப்பலவாகப்
பாராட்டிக் கூறியிருக்கின்றார். “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று கூறி
கந்தரநுபூதியை முடிக்கின்றார். இதன் கருத்தென்ன? தனக்கு முன்னமேயே அப்பன் குருவாக வந்து
அருள் புரிந்தனன். அந்த வண்ணம் மற்ற உயிர்கட்கும் “குகனே நீ குருவாக வந்து அருள்
செய்” என்று வேண்டுகிறார். “அப் பரமனைக் குருவாக நினைத்துத் தியானிக்காதவர்
உண்மைப் பொருளை யுணரமாட்டார்” என்றுங் கூறுகின்றார்.
“முருகன், தனிவேல் முனி,நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?”
--- கந்தர் அநுபூதி.
அண்மையில்
உண்மையின் உருவான பாம்பன் அடிகள் பிரப்பன் வலசை என்ற ஊரில், மயானத்தில் குழியை உண்டாக்கி, அதில் அமர்ந்து 35 நாட்கள் தன்னை மறந்து நிஷ்டை
கூடியிருக்க, அவருக்கு முருகன்
குருவாக வந்து உபதேசித்தருளினார்.
அவ்வாண்டவன்
ஒருவனே, குருநாதன், குருபரன், குருசாமி, குருமூர்த்தி, ஆதிகுரு, சிவகுரு, ஞானகுரு என்ற திருநாமங்களை உடையவனாகத்
திகழ்கிறான்.
ஆகவே
அன்பர்கள் அக் குருபரனை ஒருமை மனதுடன் உறுதியாகத் தியானித்தால், அவன் உள்நின்று பல உண்மைகளை
உணர்த்துவான்.
நமோ
நம
---
நம
என்ற சொல்லுக்கு வணக்கம் என்ற பொருள்; இனி
மற்றொரு பொருளும் உண்டு. ம - என்னுடையது; ந
- இல்லை.
என்னுடையது
இல்லை என்று தற்போதத்தைத் தவிர்க்க வைக்கும் மந்திரம் நம. முதலில் “எனது” என்ற
புறப்பற்றை (மமகாரத்தை) விடுத்து,
பின்னர்
“நான்” என்ற (அகங்காரத்தை) அகப்பற்றையும் விடவேண்டும்.
“எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே” --- கந்தரநுபூதி
இறைவனை
மலர்தூவி அர்ச்சிக்கும்போதும் ‘நமநம’ என்று, என்னுடையது இல்லை; என்னுடையது இல்லை என்று கூறி அர்ச்சிக்க
வேண்டும்.
“பாதமலர் மீதில் போதமலர் தூவிப்
பாடும்அவர் தோழத் தம்பிரானே. --- (ஆலவிழி) திருப்புகழ்
நீதி
தங்கி தேவா
---
பூமியை
ஆளுகின்றவனுக்கு (அரசனுக்கு) நீதி மிக மிக இன்றியமையாதது. நீதியுடையவனே சிறந்த
வேந்தன். தேர்க்காலில் வீழ்ந்து இறந்த ஆண் கன்றுக்காகக் கோன் கன்றாகிய தன் மகனைத்
தெருவில் படுக்க வைத்துத் தேரை அவன் மீது செலுத்திய மனுநீதிச் சோழனுடைய நீதியின்
சிறப்பு நினைக்குந்தொறும் நெஞ்சை உருகவைக்கின்றது. முருகவேள் அகிலலோக சக்கரவர்த்தி, அப்பரமன் எளிய அமரர்களை வலிய சூரன்
வருத்தியபோது, தாம் சென்று உடனே
சூரனை அழிக்காது, செந்திலில் அமர்ந்து, வீரவாகு தேவரைத் தூது ஏவி, அரச முறைப்படி போர் புரிந்து அவனை
மாய்த்தருளினார்.
பூதலந்தனை
ஆள்வாய்
---
இம்
மண்ணுலகத்தையும் முருகன் உக்கிரப் பெருவழுதியை அநுஷ்டித்து ஆண்டு அருளினார்.
பணியாவும்
பூணுகின்ற பிரானே ---
பணி:
ஆபரணம். முருகன் இளம்பூரணன். வெள்ளி மலையையும் பொன்மலையையும் உடைய சிவகுமாரன்
எல்லா அங்கங்களிலும் எல்லா அணிகலன்களையும் அணிந்து கொண்டிருக்கிறான்.
இனி, பணி என்ற சொல்லுக்குப் பாம்பு எனக்
கொண்டு ‘நாகாபரணன்’ என்றும் அமையும்.
பிரியான்
என்ற சொல்லின் மருஉ-பிரான் எனக் கூறுவர் பாம்பனடிகள். உயிர்களை விட்டுப் பிரியா
துறையும் பெற்றியான் என்பது அதன் பொருள்.
வேடர்
தம் கொடி மாலா
---
மால்-அன்பு.
வள்ளிபிராட்டி அதிக தவஞ் செய்தவள் என்று அம்மையை அறிவிக்கின்றார் அருணகிரிநாதர்.
மிக்க தவம் செய்த அம்மான் பெற்ற அம்மான் பால் எம்மான் அன்பு கொண்டு அருள்
புரிந்தான்.
போதவன்
புகழ் சாமி
---
போதவன்-பிரமன்.
முதல் எழுத்துக்குப் பொருள் கூறமாட்டாது சிறை புகுந்த பிரமதேவர், முருகனைத் துதி செய்து நலம்
பெறுகின்றார்.
“திருமருவு புயன்
அயனொடு அயிராவதக் குரிசில் அடிபரவு”
--- (குமரகுருபர
முருககுருகனே) திருப்புகழ்
அரிதான
வேத மந்திர ரூபா ---
வேத
மந்திரங்கள் மிக்க அருமை வாய்ந்தவை. அம்மந்திரங்களையே தனக்கு வடிவமாகக் கொண்டு
விளங்குகின்றான் முருகன்.
ஞான
பண்டித நாத
---
மெய்ஞ்ஞானப்
புலவர்கட்கெல்லாம் முருகன் தலைமை பெற்றுத் தண்ணருள் புரிகின்றான்.
வீர
கண்டை கொள் தாளா ---
இனி
ஞான மூர்த்தியான முருகன் வீரமூர்த்தி யாகவும் விளங்குகிறான். வீரர்கள் பாதத்தில்
தரிப்பது வீரக்கழல். அதனை எம்பெருமான் அணிந்திருக்கிறான். அது அவனை வீரமூர்த்தி
என்று அடையாளம் காட்டுகின்றது.
“எழுதரிய அறுமுகமும்
அணிநுதலும் வயிரமிடை
இட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும்
துங்கநீள்பன்
இருகருணை
விழிமலரும் இலகுபதின் இருகுழையும்
ரத்னக் குதம்பையும் பத்மக் கரங்களும் செம்பொன்நூலும்
பொழிபுகழும்
உடைமணியும் அரைவடமும் அடியிணையும்
முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும்
செங்கைவேலும்
முழுதும்
அழகிய குமர” ---
(விழையுமனி) திருப்புகழ்
வான
பைந்தொடி வாழ்வே ---
தேவவுலகில்
வளர்ந்தவர் தெய்வயானை யம்மையார். அவர் பசிய வளையல்களை அணிந்துள்ளார். அது நித்ய
மங்கலத்தைக் குறிக்கின்றது. அவருக்கு வாழ்வு தருகின்ற பெருமான் முருகன்.
அழகான
மேனி தங்கிய வேளே ---
முருகன்
என்ற சொல்லுக்கே அழகன் என்பது பொருள். முடிமுதல் அடிவரை மிக்க அழகுள்ள தெய்வம்
குமார தெய்வம்.
வீறுகொண்ட
விசாகா
---
விசாக
நட்சத்திரம் மிக்க ஒளியுள்ளது. அக்கினி மயமானது. அதுபோன்ற பெருமையுடையவன் முருகன்.
அதனால் விசாகன் என்று பெரியவர்கள் துதிப்பார்கள்.
பாதகஞ்
செறி சூராதி மாள ---
அமரரை
அளவுக்கு மேல் இடர்ப்படுத்தினான் சூரபன்மன். தனக்கு வாழ்வும் வரமும் வழங்கிய
சிவகுமாரனை வணங்காதும் மதியாதும் தருக்கு உற்றான். இத்தகைய தீங்குகள் பல புரிந்த
அவனை அவன் குலத்துடன் வேல் கொண்டு மாய்த்து, தேவர்களைத் தங்கள் விண்ணுலகில்
குடியேறுமாறு எம்பெருமான்- குமாரன் அருள் புரிந்தான்.
பாதி
சந்திரனே சூடு வேணியர் ---
சிவபெருமான்
சந்திரனைத் தரித்திருப்பது அப்பெருமானது கருணையைக் குறிக்கின்றது.
சூல
சங்கரனார்
---
சூலம்
மூன்று கிளைகளாக இருக்கும். இச்சா சக்தி, கிரியா
சக்தி, ஞான சக்தி, என்ற மூன்று சக்திகட்கும் தலைவர்
என்பதைக் குறிக்கின்றது.
சம்-சுகம்.
கரம்-செய்வது. சுகத்தைச் செய்கின்றவன் சங்கரன், உயிர்கட்குச் சதா சுகத்தையே செய்து
கொண்டிருக்கிறான்.
கீத
நாயகர்
---
இசை
ஒரு சிறந்த கலை. அது உயிர்களை உவக்கச் செய்யும்; பயிர்களையுந் தழைக்கச் செய்யும்; கல்லையும் கனிவிக்கும்; மதயானையின் மதத்தை அடக்கும்; பாலையைச் சோலையாகச் செய்யும் பேராற்றல்
படைத்தது. இசை, ஓடும் மனத்தை ஒருமைப்
படுத்தும் அந்த இசைக்குத் தலைவர் சிவபெருமான்.
பார
திண் புயமே சேரு சோதியர் ---
சிவபெருமானுக்குப்
பத்துத் தோள்கள்; அவைகள் பத்துத்
திசைகளையுந் தாங்குகின்ற வலிமையுடையவை.
அபிராமி
ஆவல்கொண்டு விறாலே சீராட ---
சிவபிரான்
தன் பாகத்தில் வைத்த உமாதேவியார் மிக்க ஆவலுடன் இளங் குழவியாகிய முருகனைத்
தாலாட்டிச் சீராட்டுகின்றார்.
கோமளம்
பல சூழ் கோயில் ---
திருவாவினன்குடியில்
விளங்குங் கோயில் பற்பல அழகுகளுடன் கூடியது. கண்களையும் கருத்தையும் ஒருங்கே
கவர்வது.
கருத்துரை
திருவாவினன்குடி
மேவும் தேவா! உனது அருளைத் தருவாய்.
No comments:
Post a Comment