அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பெரியதோர் கரி
(பழநி)
பழநியப்பா!
தீவினையால் மாதர் மயலில்
விழுந்து நொந்த யான்,
உனது திருவடியைத்
தொழுது இன்பம் உற அருள்
தனதனா
தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர்
கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு ......
மணியான
பிறையதோ
வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ
...... வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ......
மயலாலே
உருகியே
யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ......
தருள்வாயே
அரியதோ
ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமர்புரி கின்ற கூரிய ......
வடிவேலா
அரகரா
வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண ......முருகோனே
பரியதோர்
கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ......மருகோனே
பரமமா
நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பெரியது
ஓர் கரி இரு கொம்பு போலவெ
வடிவம் ஆர் புளகித கும்ப மாமுலை
பெருகியே, ஒளிசெறி தங்க ஆரமும், ...... மணியான
பிறை
அதோ எனும் நுதல், துங்க மீறு வை
அயில்அதோ எனும் இரு கண்கள், ஆரவெ
பிறகு எலாம் விழு குழல் கங்குல், ஆரவெ ...... வருமானார்,
உரியது
ஓர் பொருள்கொடு வந்த பேர்களை,
மனையிலே வினவியெ கொண்டு போகிய,
உளவிலே மருவிய, வஞ்ச மாதர்கள் ...... மயலாலே
உருகியே, உடல் அற வெம்பி
வாடியெ,
வினையிலே மறுகியெ நொந்த பாதகன்,
உனதுதாள் தொழுதிட இன்ப ஞானம்அது
......அருள்வாயே.
அரியது
ஓர் அமரர்கள் அண்டம் ஏறவெ,
கொடியது ஓர் அசுரர்கள் அங்கம் மாளவெ,
அடல் அதோடு அமர் புரிகின்ற கூரிய
...... வடிவேலா!
அரகரா
என மிக அன்பர் சூழவெ,
கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ,
அவனி ஓர் நொடி வருகின்ற காரண! ......முருகோனே!
பரியதோர்
கயிறு அனை கொண்டு வீசவெ,
உறிய தோய் தயிர் தனை உண்டு நாடியெ,
பசியதோ கெடஅருள் கொண்ட மாயவன் ......மருகோனே!
பரம
மா நதிபுடை கொண்டு அணாவவெ,
வனசமா மலரினில் வண்டு உலாவவெ,
பழநிமா மலைதனில் என்றும் மேவிய .....பெருமாளே.
பதவுரை
அரியது ஓர் அமரர்கள் --- அரிய பொருளினை
ஆராய்கின்ற தேவர்கள்,
அண்டம் ஏற வை --- பொன்னுலகில் குடியேறவும்,
கொடியது ஓர் அசுரர்கள் அங்கம் மாளவெ ---
தீமையையே ஆராய்கின்ற அசுரர்களின் உடல்கள் அழியவும்,
அடல் அதோடு அமர் புரிகின்ற --- வலிமையுடன்
போர் புரிகின்ற,
கூரிய வடிவேலா --- கூர்மையும் அழகும் உடைய
வேலாயுதரே!
அர அரா என மிக அன்பர் சூழவெ --- மிகுந்த
அன்பர்கள் அரகரா என்ற பேரொலியுடன் சூழ்ந்து துதி செய்ய,
கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறிய --- கடும்
வேகமுடைய மயிலின் மீது அந்நாள் ஏறி அருளி,
அவனி ஓர் நொடி வருகின்ற காரண --- உலகை ஒரு
நொடிப் பொழுதில் வலம் வந்த காரண மூர்த்தியே!
முருகோனே --- முருகக் கடவுளே!
அனை பரியது ஓர் கயிறு கொண்டு ---
அன்னையான யசோதை பெரிய கயிற்றைக் கொண்டு,
வீசவெ --- வீசிக்கட்ட,
உறிய தோய் தயிர் தனை நாடியே உண்டு --- உறியில்
தோய்ந்திருந்த தயிரை விரும்பி உண்டு,
பசியதோ கெட --- பசி நீங்குமாறு,
அருள் கொண்ட மாயவன் --- அருள்பூத்த
கண்ணபிரானுடைய,
மருகோனே --- திருமருகரே!
பரம மாநதி புடை கொண்டு அணாவவெ ---
மிகுந்த பெருமையுடைய ஆறுமுக நதி அருகில் சூழ்ந்து நெருங்க,
வனச மாமலரில் வண்டு சூழவெ --- வனச மாமலரினில்
வண்டு உலாவ விளங்கும்,
பழநி மாமலை தனில் என்றும் மேவிய --- பழநி
மாமலையில் எந்நாளும் வீற்றிருக்கின்ற,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
பெரியது ஓர் கரி --- பெரிய ஒரு யானையின்,
இரு கொம்பு போலவே வடிவம் ஆர் --- இரண்டு
கொம்புகள் போன்ற வடிவம் படைத்ததாய்,
புளகித --- புளகிதம் பூண்டதாய் விளங்கும்,
கும்ப மாமுலை --- குடம் போன்ற பெரிய முலைகளின்
மீது,
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் --- நிறைந்து
தோன்றும் ஒளிமிக்க பொன்மாலையும்,
அணி ஆன பிறை அதோ எனும் நுதல் --- அழகிய
பிறைமதியோ என்று காட்சி தருகின்ற நெற்றியும்,
துங்கம் மீறுறை அயில் அதோ எனும் இரு கண்கள் ---
உயர்ச்சி மிக்க கூரிய வேலோ எனும்படியான இரண்டு கண்களும்,
ஆரவே பிறகு எலாம் விழு குழல் --- நிறைந்து
பின்புறம் முழுவதும் நீண்டு தொங்குகின்ற கூந்தல்,
கங்குல் ஆரவெ --- இருள் மிக்கதாய் கொண்டு,
வரும் மானார் --- வருகின்ற மாதர்கள்,
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை ---
தமக்கு உரிய அளவில் பொருள் கொண்டுவந்த பேர்வழிகளை,
மனையிலே வினவியெ கொண்டு போகியெ உளவிலே ---
தங்கள் வீட்டுக்குள் இனிமையாகப் பேசி விசாரித்துக் கொண்டு போய் இரகசியத்தில்,
மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே --- தழுவிய
வஞ்சனையுடைய பொது மாதர்களின் மயக்கத்தால்,
உருகியே --- உள்ளம் உருகி,
உடல் அற வெம்பி வாடியெ --- உடம்பு மிகவும்
கொதிப்புற்று வாட்டமடைந்து,
வினையிலே மறுகியெ --- தீவினையில்
சுழற்சியுற்று,
நொந்த பாதகன் --- தளர்ச்சியுற்ற பாவியாகிய
அடியேனுக்கு,
உனது தாள் தொழுதிட --- தேவரீருடைய திருவடியை
வணங்கும்படியான,
இன்ப ஞான அது அருள்வாயே --- இன்பத்தைத் தரும்
மெய்ஞ்ஞானத்தைத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
அரும் பொருளை ஆராய்கின்ற தேவர்கள்
பொன்னுலகில் குடியேறவும், கொடுமையையே
ஆராய்கின்ற அசுரர்களின் உடல்கள் அழியவும், வலிமையுடன் போர் புரிகின்ற மிக்க
கூர்மையும் அழகும் உடைய வேற்படையை ஏந்தியவரே!
அரகரா என்று துதி செய்து மிகுந்த
அன்பர்கள் சூழ, மிக்க வேகமுடைய
மயிலின் மீது ஏறியருளி, அந்நாள் உலக
முழுவதும் ஒரு நொடிப் பொழுதுக்குள் வலம் வந்த காரணக் கடவுளே!
முருகப் பெருமானே!
பெரிய ஒரு கயிற்றைக் கொண்டு தாயாகிய
யசோதை கட்ட, உறியில்
தோய்ந்திருக்கின்ற தயிரை பசி நீங்குமாறு விரும்பியுண்ட அருள் நிறைந்த மாயவனுடைய
மருகரே!
சிறந்த பெருமையுடைய ஆறுமுக நதியானது
அருகில் சூழவும், அழகிய தாமரை மலரில்
வண்டு உலாவவும் விளங்கும் பழநி மாமலைதனில் எந்நாளும் நீங்காது வீற்றிருக்கின்ற
பெருமிதம் உடையவரே!
பெரிய யானையின் இரு தந்தங்களைப் போன்ற
உருவம் உடையதும், புளகித்த, பெரிய குடம்போல் விளங்குவதும் ஆகிய
தனங்களில் நிறைந்து ஒளிர்கின்ற பொன் மாலையும், அழகிய பிறைமதி போன்ற நெற்றியும், உயர்ச்சி மிக்க வேல் போன்ற கண்களும், பின்புறம் நிறைந்து நீண்டு தொங்குகின்ற
கரிய கூந்தலும் கொண்டு வருகின்ற மாதர்கள், தமக்கு உரிய பொருளைக் கொண்டு வருகின்ற
ஆடவர்களை, நன்கு விசாரித்து
தமது மாளிகைக்குக் கொண்டுபோய் இரகசியமாய் மருவுகின்ற வஞ்சனை மிக்க விலைமகளிரின்
மயக்கத்தால், உள்ளம் உருகி, உடம்பு மிகவும் வெப்பமுற்று வாடி, தீவினையால் சுழற்சியுற்று நொந்த
பாவியாகிய அடியேன் தேவரீருடைய திருவடியைத் தொழுமாறு இன்பத்தைத் தரும்
மெய்ஞ்ஞானத்தைத் தந்தருளுவீர்.
விரிவுரை
இத்திருப்புகழில்
முதலில் உள்ள மூன்று அடிகளிலும் வஞ்சனை மிக்க இருமனப் பெண்டிரின் செயல்களைச்
சுவாமிகள் கூறினார்.
இன்ப
ஞானம் அது அருள்வாயே ---
உலகிலே
உள்ள உயிர்கள் அனைத்தும் இன்பம் என்ற ஒன்றையே விரும்புகின்றன. ஆனால் இன்பத்தை
எய்தப் பெறாமல் துன்பத்தையே துய்த்துத் துயருறுகின்றன. இதற்கு என்ன காரணம்?
துன்பம்-அஞ்ஞானத்தால்
விளைகின்றது.
இன்பம்-மெய்ஞ்ஞானத்தால்
விளை கின்றது.
எனவே
துன்பத்தைத் துடைத்து இன்பத்தைப் பெற வேண்டுமானால், இறைவனை வழிபட்டு அறியாமையை யகற்றி
மெய்யுணர்வைப் பெறுதல் வேண்டும்.
இறைவனுடைய
திருவடி ஞானமே ஆகும். அத்திருவடி ஞானமாதலால் அங்கு இன்ப ஊற்று ஊறுகின்றது. அந்த
ஆனந்தம் இடையறாது பெருகும் இயல்புடையது. அந்த இன்பம் உண்ண உண்ணத் தெவிட்டாதது. அது
பேரின்பம். ஆதலால் “இன்ப ஞானமது அருள்வாயே” என்று ஞான பண்டிதனை அருணகிரி சுவாமிகள்
வேண்டுகின்றார்.
அரகராவென.....நொடி
வருகின்ற காரண
---
முருகப்பெருமான்
கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்து எங்கும் தான்
நிறைந்துள்ள இயல்பை உலகிற்கு உணர்த்தியருளினார்.
இலகு
கனி கடலைபயறு ஒடியல் பொரி அமுது செயும்
இலகு வெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலி,முது
திகிரிகிரி நெறிய, வளை கடல் கதற,
எழுபுவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்... ---
சீர்பாத
வகுப்பு
பரியதோர்
கயிறு அனை.....அருள் கொண்ட மாயவன் ---
திருமால்
பூபாரம் தீர்க்க வடமதுரையில் அவதரித்து, ஆயர்பாடியில்
தவம் புரிந்த யசோதை மனையில் வளர்ந்து, உறியில்
உள்ள பால் தயிரைக் களவு செய்து உண்டு, யசோதை
உரலிலே கயிறு கொண்டு கட்ட, கோபிகைகட்கும், மருத மரங்களாய் நின்ற கந்தருவர்கட்கும், அருள் புரிந்தார்.
பரமமா
நதிபுடை கொண்டு அணாவ ---
பழநி
மலைக்கு அருகில் சண்முகநதி ஓடுகின்றது. அது பரம புனிதமானது., பாவங்களைப் போக்க வல்லது
வனச
மாமலரில் வண்டு உலாவ ---
தாமரை
மலரில் வண்டுகள் உலாவுகின்றன. முருக வேளுடைய பாத மலரில் அடியார்களான வண்டுகள்
மொய்த்து சதா பாடுகின்றார்கள் என்பது குறிப்பு.
கருத்துரை
வேலாயுதா!
மால் மருகா! பழநியப்பா! இன்ப ஞானத்தைத் தந்தருள்.
No comments:
Post a Comment