அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
புடைசெப் பென (பழநி)
பழநியப்பா!
வீணன் ஆகிய
அடியேனுக்கும் உண்மைப் பொருளை உபதேசித்து அருள்
தனனத்
தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
புடைசெப்
பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் ...... திணையாய
புளகக்
களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் ...... டமரேசெய்
அடைவிற்
றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் ...... கவமான
அசடற்
குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே
குடமொத்
தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் ...... கிளையோனே
குடிபுக்
கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் ...... பொரும்வேலா
படலைச்
செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள்
பழனக்
கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
புடைசெப்பு
என, முத்து அணி கச்சு அற,உள்
பொருமி, கலசத்து ...... இணை ஆய,
புளகக்
களபக் கெருவத் தனம், மெய்ப்
புணரத் தலைஇட்டு, ...... அமரேசெய்
அடைவில்
தினம் உற்று, அவசப்படும் எற்கு
அறிவுஇல் பதடிக்கு, ...... அவம் ஆன
அசடற்கு, உயர்வு ஒப்பு அது இல், நல் க்ருபை உற்று,
அடிமைக்கு ஒரு சொல் ...... புகல்வாயே.
குடம்
ஒத்த கடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக்கு ...... இளையோனே!
குடிபுக்கிட
மிட்டு அசுரப் படையைக்
குறுகித் தகரப் ...... பொரும்வேலா!
படலைச்
செறி நல் கதலிக் குலையில்
பழம் உற்று ஒழுக, ...... புனல் சேர் நீள்
பழனக்
கரையில், கழைமுத்து உகுநல்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
குடம் ஒத்த கட கரட கலுழி --- குடம்
போன்ற மத்தகத்தினின்றும் மதநீர் ஒழுகுகின்ற,
குணம் மெய் களிறுக்கு --- குணமும் மெய்மையும்
உடைய விநாயகமூர்த்திக்கு,
இளையோனே --- தம்பியே!
குடி புக்கிட --- தேவர்கள் தமது உலகிற்
குடிபுகுமாறு,
மீண்டு அசுர படையை --- நெருங்கிய அசுர சேனையை,
குறுகி தகர நெருங்கி --- அச்சேனை அழியுமாறு,
பொரும் வேலா --- போர் புரிந்த வேலாயுதத்தை உடையவரே!
படலை செறி --- பறந்து நெருங்கியுள்ள,
நல் கதலி குலையில் பழம் --- நல்ல வாழைக்
குலையில் பழங்கள்,
முற்று ஒழுக --- முதிர்ந்து தேன் ஒழுகவும்,
புனல் சேர் நீள் --- தண்ணீர் நிறைந்து நீண்ட,
பழன கரையில் --- வயல்களின் கரையில்,
கழை முத்து உகு --- மூங்கிலின் முத்து
உதிர்கின்ற,
நல் பழநி குமர --- நல்ல பழநியம்பதியில்
வாழ்கின்ற குமார மூர்த்தியே!
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
புடை செப்பு என --- பருத்துள்ள சிமிழ்
போன்று,
முத்து அணி --- முத்து மணிமாலை அணிந்த,
கச்சு அற --- இரவிக்கை கிழியும்படி,
உள் பொருமி --- உள்ளே விம்மி,
கலசத்து இணை ஆய --- கலசத்துக்கு நிகராகி,
புளக --- பூரித்து,
களப --- சந்தனக் கலவை தரித்து,
கெருவ தன --- செருக்குற்ற கொங்கைகள் சேர்ந்த,
மெய் புணர தலை இட்டு --- சரீரத்தைப்
புணர்வதற்கு முனைந்து நின்று,
அமரே செய் --- கலவிப் போர் புரிகின்ற,
அடைவில் தினம் உற்று --- ஒழுக்க முறையைத்
தினமும் கொண்டு,
அவசப்படும் --- மயக்கம் பூணும்,
எற்கு --- என்மீது,
அறிவு இல் பதடிக்கு --- அறிவில்லாத பதர்
போன்றவன் மீது,
அவம் ஆன அசடற்கு --- வீணான மூடன் மீது,
உயர்வு ஒப்பது இல் --- உயர்வும் ஒப்பும்
இல்லாத,
நற்கிருபை உற்று --- இனிய கருணையை வைத்து,
அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே ---
அடியேனுக்கு ஒரு மொழியை உபதேசித்தருள்புரிவீர்.
பொழிப்புரை
குடம் போன்ற மத்தகத்தினின்றும் மதநீர், கலங்கல் நீர் போல் வழிகின்ற, அருட்குணமும் மெய்ம்மையும் உடைய
ஆனைமுகக் கடவுளுக்கு இளையவரே!
தேவர்கள் தமது பொன்னுலகில் குடிபுகுமாறு
நெருங்கி வந்த அசுர சேனையை அணுகி, அவை அழியுமாறு போர்
புரிந்த வேலாயுதரே!
பரந்த அடர்ந்துள்ள நல்ல வாழைக் குலையில்
பழங்கள் முதிர்ந்து தேன் ஒழுக, நீர் சேர்ந்து நீண்ட
வயல்களின் கரையில் மூங்கில்களின் முத்துக்கள் உதிர்கின்ற நல்ல பழநியம்பதியில்
வாழும் குமார மூர்த்தியே!
பெருமிதம் உடையவரே!
பருத்து உள்ளதும் சிமிழ் போன்றதும்
முத்துமணி மாலையைப் பெற்றதும், இரவிக்கை கிழியுமாறு
உள்ளே விம்மி இருப்பதும், கலசம் போன்று
பூரித்தும், சந்தனக் கலவை அணிந்தும்
செருக்கு உற்றதும் ஆகிய தனத்துடன் கூடிய உடலைப் புணர்தற்கு முனைந்து நின்று, கலவிப் போர் புரிகின்ற தன்மையை
நாடோறும் கொண்டு மயங்குகின்ற என் மீது, அறிவிலா
பதராகிய அடியேன் மீது, வீணான மூடன் மீது, உயர்வும் ஒப்பும் இல்லாத நல்ல கருணையைக்
காட்டி, அடிமையாகிய இச்
சிறியேனுக்கு ஒரு மொழிப் பொருளை உபதேசித்து அருள்புரிவீர்.
விரிவுரை
உயர்வு
ஒப்பு அது இல் நற்கிருபை உற்று ---
உயிர்கள்
மீது இறைவன் வைத்துள்ள கருணைக்கு உயர்வும் ஒப்பும் கிடையாது. ஒவ்வொரு கணமும்
உயிர்களை விட்டுப் பிரியாமல் அவற்றின் நன்மையை நாடிக் கருணை பொழிந்த வண்ணம் இறைவன்
துணை புரிகின்றான். அக்கருணைக்குச் சமானம் ஏது?
கருணை
நிறைந்து அகம்புறமும் துளும்பி வழிந்து
உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித்
தெருள்
நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
கண் உடையோய்” --- திருவருட்பா
அடிமைக்கு
ஒரு சொல் புகல்வாயே ---
ஒரு
சொல்-ஒரு மொழியாகிய பிரணவம். அருணகிரிநாதர் பிரணவ உபதேசத்தை இறைவன்பால்
வேண்டுகின்றார்.
“ஓம்எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே ---
(காமியத்தழுந்தி)
திருப்புகழ்
குடமொத்த......களிறுக்
கிளையோனே
---
இங்கே
விநாயகரைப் பற்றிக் கூறுகின்றார். யானைக்குக் கன்னமதம் கரடமதம் கபோலமதம் என்று
மும்மதங்கள் உண்டு. இங்கே விநாயகருக்கு இச்சாசக்தி, கிரியாசக்தி ஞான சக்தி என்ற
முச்சக்திகள் உண்டு. அருட் குணங்களை யுடையவர்; உண்மைப் பொருளானவர். இத்தகைய ஞான
விநாயகருடைய இளைய சகோதரர் முருகர் என்று அழகாகக் கூறுகின்றார்.
படலைச்
செறிநற் கதலி.....முத்து உகு நல் பழநி ---
பழநியின்
வளமையை இந்த இரண்டு அடிகளில் மிக அழகாகச் சுவாமிகள் வருணிக்கின்றார். பரந்து
அடர்ந்து நிற்கின்ற வாழை மரங்களில் நன்கு பழுத்து நிற்கும் குலைகளில் தேன்வழிந்து
வயல்களில் விழுகின்றது. வயலின் அருகில் உள்ள மூங்கில்கள் முத்துக்களை உதிர்க்கின்றன.
கருத்துரை
விநாயகருக்கு இளையவரே! பழநிப்
பரம்பொருளே! அடியேனுக்கு ஒரு மொழியை உபதேசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment