அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
புடவிக்கு அணி (பழநி)
பழநியப்பா! அருள் புரிவாய்.
தனனத்
தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக்
கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்
...... சதுர்வேதன்
புரமட்
டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ......
தனிமூவ
ரிடசித்
தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் .....குருநாதா
எதிருற்
றசுரர்கள் படைகொடு சண்டைக்
கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக்
...... கிரியாவும்
பொடிபட்
டுதிரவும் விரிவுறு மண்டச்
சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ......
தமுமாகப்
பொருதுக்
கையிலுள அயில்நிண முண்கக்
குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்
...... குமரேசா
படியிற்
பெருமித தகவுயர் செம்பொற்
கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற்
...... பதனாலே
பரன்வெட்
கிடவுள மிகவும்வெ குண்டக்
கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
புடவிக்கு
அணிதுகில் என வளல் அந்தக்
கடல் எட்டையும் அற குடி முனி, எண்கண்
புநிதச் சததள நிலைகொள் சயம்புச்
...... சதுர்வேதன்,
புரம்
அட்டு எரி எழ விழிகனல் சிந்தி,
கடினத்தொடு சில சிறுநகை கொண்ட, அற்-
புத கர்த்தர் அரகர பரசிவன் இந்தத்
...... தனிமூவர்
இட
சித்தமும் நிறை தெளிவுறவும், பொன்
செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்-
றிட உற்பன மொழி உரைசெய் குழந்தைக் .......குருநாதா!
எதிரஎ
உற்ற அசுரர்கள் படைகொடு சண்டைக்கு
இடம் வைத்திட, அவர் குல முழுதும் பட்-
டிட, உக்கிரமொடு வெகுளிகள் பொங்க, ......கிரியாவும்
பொடிபட்டு
உதிரவும், விரிவு உறும் அண்டச்
சுவர் விட்டு அதிரவும், முகடு கிழிந்து,அப்
புறம் அப் பரவெளி கிடுகிடு எனும் சத்
......தமும் ஆகப்
பொருது, கையில் உள அயில்நிணம் உண்க,
குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச,
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக்
...... குமரேசா!
படியில்
பெருமித தகவு உயர் செம்பொன்
கிரியைத் தனிவலம் வர, அரன் அந்தப்
பலனை, கரிமுகன் வசம் அருளும்பொற்பு ...... அதனாலே
பரன்
வெட்கிட, உளம் மிகவும் வெகுண்டு, அக்
கனியைத் தரவிலை என, அருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப்
...... பெருமாளே.
பதவுரை
புடவிக்கு அணி துகில் என --- பூமிக்கு
அழகிய ஆடை என்று கூறும்படி,
வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி ---
பரந்துள்ள அந்த எட்டுத் திசைகளிலும் உள்ள சமுத்திரத்தை முழுவதும் குடித்த
முனிவராகிய அகத்தியர்,
எண்கண் --- எட்டுக் கண்களையுடையவரும்,
புநித சததள நிலை கொள் --- தூய்மையான
நூற்றிதழ்த் தாமரைக் கமலத்தில் நிலையாக இருப்பவரும்,
சயம்பு --- பிரமதேவரும்,
சதுர் வேதன் --- நான்கு வேதங்களில்
வல்லவருமாகிய நான்முகக்கடவுள்,
புரம் அட்டு எரி எழ --- முப்புரங்களும்
அழிந்து தீப்பிடிக்கும்படி,
விழி கனல் சிந்தி --- நெற்றிக் கண்ணின் தீயை
சிதறி,
கடினத்தொடு சில சிறுநகை கொண்ட --- வன்மையுடன்
சிறிது புன்னகை புரிந்த,
அற்புத கர்த்த --- அற்புதத் தலைவரும்,
அரகர --- பாவங்களை நீக்குபவரும்,
பரசிவன் --- பெரிய மங்கல மூர்த்தியுமாகிய
சிவபெருமான்,
இந்தத் தனி மூவர் இட --- இந்த ஒப்பற்ற
மூவர்களுடைய,
சித்தமும் நிறை தெளிவுற --- உள்ளம் நிறைந்து
தெளிவுறும் வண்ணம்,
பொன் செவியுள் --- அழகிய செவியுள்,
பிரணவ ரகசியம் --- ஓம் என்ற ஒரு
மொழிப்பொருளின் உட்கிடையை,
அன்பு உற்றிட --- அன்பு கொள்ளுமாறு,
உற்பன மொழி உரை செய் --- (உமது
திருவாக்கிலிருந்து) தோன்றிய உபதேச மொழியைக் கூறிய,
குழந்தைக் குருநாதா --- இளங்குருநாதா!
எதிர் உற்று அசுரர்கள் --- அசுரர்கள்
எதிர்த்து வந்து,
படைகொடு சண்டைக்கு இடம் வைத்திட --- போருக்கு
இடம் கொடுத்து நின்றதனால்,
அவர் குலமுழுவதும் பட்டிட --- அவர்களுடைய
குலம் முழுவதும் அழியுமாறு,
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க --- வேகமாகக்
கோபம் மீறவும்,
கிரியாவும் பொடிபட்டு உதிரவும் --- மலைகள்
யாவும் பொடியாகி உதிரவும்,
விரிவு உறு அண்ட சுவர் விட்டு அதிரவும் ---
விரிந்த அண்டச் சுவர்கள் பிளவு பட்டு அதிர்ச்சியடையவும்,
முகடு கிழிந்து --- அண்டத்தின் உச்சி
கிழிபட்டு,
அப்புறம் அப்பரவெளி கிடுகிடு எனும் சத்தமும்
ஆக --- அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளியெல்லாம் கிடுகிடு என்று ஒலியுண்டாகுமாறும்,
பொரு --- போர் செய்து,
கையில் உளஅயில் நிணம் உண்க ---
திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதம், பகைவருடைய
கொழுப்பை யுண்ணவும்,
குருதி புனல் எழுகடலினும் மிஞ்ச --- உதிர
நீர் ஏழு சமுத்திரத்திலும் மிகுதியாகப் புரண்டு ஓடவும்,
புரவி கன மயில் நடவிடும் --- குதிரையான
பருத்த மயிலை நடத்திய,
விந்தை குமர ஈசா --- அற்புதம் நிறைந்த
குமாரக் கடவுளே!
படியில் பெருமித தகவு உயர் --- பூமியில்
மேன்மையும் தகுதியும் மிகுந்த
செம்பொன் கிரியை --- செம்பொன்மலையாகிய
மேருகிரியை,
தனி வலம் வர --- தனித்து நீர் வலமாக வர,
அரன் அந்த பலனை --- பரமன் அந்தப் பழத்தை,
கரிமுகன் வசம் அருளும் பொற்பு அதனாலே ---
யானை முகமுடைய விநாயகர் கரத்தில் தந்த தன்மையினால்,
பரன் வெட்கிட --- சிவபெருமான் நாணுமாறு,
உளம் மிகவும் வெகுண்டு --- திருவுள்ளத்தில்
மிக்க கோபங்கொண்டு,
அக் கனியை தரவிலை என --- அப்பழத்தை
தரவில்லையென்று,
அருள் செந்தில் --- அருள் நிறைந்த
திருச்செந்தூரிலும்,
பழநி சிவகிரி தனில் உறை --- பழநிமலை என்கின்ற
சிவகிரியின் மீதிலும் எழுந்தருளியுள்ள,
கந்த பெருமாளே --- கந்தக் கடவுளாகிய
பெருமிதம் உடையவரே!
பொழிப்புரை
பூமிக்கு அழகிய ஆடையாகப் பரந்துள்ள அந்த
எண்திசையின் கடலை முழுதும் குடித்த அகத்தியர், எட்டுக் கண்களை யுடையவரும், தூய நூறு இதழ்களைக் கொண்ட தாமரையில்
வீற்றிருப்பவரும், நான்கு வேதங்களில் வல்லவருமாகிய
பிரமதேவர், முப்புரங்கள் அழிந்து
தீப்பிடிக்குமாறு நெற்றிக் கண்ணிலிருந்து அனல் சிந்தி வன்மையுடன் சிறிது சிறு
நகைபுரிந்த அற்புதத் தலைவராகிய பாவத்தைத் தீர்க்கும் பரமசிவ மூர்த்தி என்ற இந்த
ஒப்பற்ற மூவர்களின் உள்ளம் நிறைந்து தெளிவு அடைய, அழகிய செவியில் பிரணவ மந்திரத்தின்
இரகசியத்தை அன்போடு (தோன்றிய மொழியை) உரை செய்த குழந்தைக் குருநாதரே!
எதிர்ப்பட்டு அசுரர்கள் படையொடு
போருக்கு இடம் வைக்க, அவருடைய குலம்
முழுவதும் அழியுமாறும், வேகமாகக் கோபம்
பொங்கவும், மலை முழுவதும்
தூள்பட்டு உதிரவும், பரந்த அண்டச் சுவர்கள்
பிளவு பட்டு அதிர்ச்சியடையவும், அண்டத்தின் உச்சி கிழியவும், அதற்கு அப்பாலுள்ள பெரிய ஆகாயத்தில்
கிடுகிடு என்று ஒலியுண்டாகுமாறும்,
போர்
புரிந்து, திருக்கரத்தில் உள்ள
வேலாயுதமானது அசுரரது கொழுப்பையுண்ணவும் உதிர நீர் ஏழு சமுத்திரத்திலும்
மிகுதியாகப் பெருகி ஓடவும், மயிலாகிய பருத்த
புரவியை நடாத்திய அதிசயமுடைய குமுாரக் கடவுளே!
பூதலத்தில் பெருமையும் தகுதியும் உடைய
செம்பொன் மேரு மலையைத் தனியே தேவரீர் வலம் வந்தபொழுது, சிவபெருமான் அந்த பழத்தை விநாயகரிடம்
தந்த காரணத்தினால், அப்பரமன் நாணுமாறு
மனம் மிகவுஞ் சினமுற்று, அப்பழத்தை தரவில்லை
என்ற காரணத்தினால், அருள் நிறைந்த
திருச்செந்தூரிலும், பழநிச்சிவகிரியிலும்
வீற்றிருக்கின்ற கந்தக் கடவுளே!
பெருமிதம்
உடையவரே!
விரிவுரை
புடவிக்கு
அணிதுகில் என வளர் அந்தக் கடல் எட்டையும்
அற குடி முநி
---
இந்திரனுடைய
பகைவனாகிய விருத்திராசுரன் இந்திரனுடன் போரிட்டு, அஞ்சி கடலில் ஒளிந்தனன். இந்திரனுடைய
வேண்டுகோளுக்கு இணங்கி அகத்திய முனிவர், தமது
தவ வலிமையால், கடலைச் சுருக்கி
கரத்தில் எடுத்து ஆசமனம் புரிவதுபோல் குடித்து விட்டார். கடலை ஒரு கையால்
எடுத்துக் குடிக்கும் அளவுக்கு அவருடைய தவத்தின் ஆற்றல் உயர்ந்திருந்தது.
கடல்
பூமிக்கு ஆடைபோல் அழகு செய்கின்றது. எட்டுத் திசைகளிலும் உள்ள கடல் என்பதைக்
குறிப்பிடும்படி எண்கடல் என்றார்.
தனி
மூவர்
---
அகத்தியர், பிரமதேவர், சிவமூர்த்தி இந்த ஒப்பற்ற மூவருக்கும்
முருகப் பெருமான் பிரணவப் பொருளின் இரகசியத்தை உபதேசித்தருளினார்.
உற்பன
மொழி ---
உற்பனம்-தோற்றம்.
முருகப்பெருமானுடைய திருமுகத்திலிருந்து தோன்றிய சொல். குழந்தைக் குருநாதனாகிய
முருகவேள் தெளிவாகவும் உள்ளம் நிறைவு பெறவும் உபதேசித்தனர்.
செம்பொற்
கிரியைத் தனி வலம் வர......பழநி சிவகிரி தனில் உறை கந்த ---
இந்த
7,8 அடிகளில் பழநித்
தலபுராண வரலாற்றினைக் கூறுகின்றார்.
நாரத
முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு
மாதுளங் கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து
வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி
அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு
இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள்
மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம்
வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும்
சிவத்துக்குள் அடங்கி நிற்றலால்,
சிவமூர்த்தியை
வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார்.
பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை
வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக
நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை
எடுத்து அணைத்து, “கண்மணி!
அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய
பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த
வரலாற்றின் உட்பொருள்
(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர் தானே சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள்
ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை
ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை தான் யாது? சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று
எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும்
சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.
இந்த
இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும்
பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
இதனையே
தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.
“அங்கு இங்கு எனாதபடி
எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்தது எது?”
இது
எங்கும் நிறைந்த தன்மை.
“தன்அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும் படிக்கு இச்சை வைத்து,உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எது?”
இது
எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு
உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.
கருத்துரை
இப்பாடல் துதிமயமானது,
No comments:
Post a Comment