பழநி -0175. பாரியான கொடை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாரியான கொடை (பழநி)

பழநியப்பா! 
உலோபிகளைப் பாடாமல் உன்னையே பாட அருள்

தான தானதனத் தந்த தானன
     தான தானதனத் தந்த தானன
          தான தானதனத் தந்த தானன ...... தனதான


பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
     சீல ஞாலவிளக் கின்ப சீவக
          பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவி
     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
          சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே

சேய பாவகையைக் கொண்டு போயறி
     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
          சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
  
ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகு
     மார ஆறிருபொற் செங்கை நாயக
          வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே

வீறு காவிரியுட் கொண்ட சேகர
     னான சேவகனற் சிந்தை மேவிய
          வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாரி ஆன கொடைக் கொண்டலே! திரு
     வாழ் விசால தொடைத் திண்புயா! எழு
          பாரும் ஏறு புகழ்க் கொண்ட நாயக! ...... அபிராம!

பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள்
     சீல! ஞாலவிளக்கு! இன்ப சீவக!
          பாகசாதன! உத் துங்க மானத! ...... என ஓதிச்

சீர் அது ஆக எடுத்து ஒன்று மாகவி
     பாடினாலும் இரக்கம் செயாது, ரை
          சீறுவார் கடையில் சென்று, தாம் அயர்வு ....உற,வீணே

சேய பா வகையைக் கொண்டு போய், றி-
     யாமலே கமரில் சிந்துவார் சிலர்,
          சேயனார் மனதில் சிந்தியார் அருகு ......உறல்ஆமோ?

ஆரு நீர்மை மடுக் கண் கரா நெடு
     வாயின்நேர் பட உற்று அன்று, மூலம்
          என்ஆர வார மதத் தந்தி தான்உய ...... அருள்மாயன்,

ஆதி நாராணன் நல் சங்க பாணியன்,
     ஓதுவார்கள் உளத்து அன்பன், மாதவன்,
          ஆன நான்முகன்நல் தந்தை, சீதரன் ...... மருகோனே!

வீர சேவக! உத்தண்ட தேவ கு-
     மார! ஆறிரு பொன் செங்கை நாயக!
          வீசு தோகைமயில் துங்க வாகனம் ...... உடையோனே!

வீறு காவிரியுள் கொண்ட சேகரன்
     ஆன சேவகன் நல் சிந்தை மேவிய
          வீரை வாழ் பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.


பதவுரை

      ஆறு நீர்மை மடு கண் --- நிறைந்த நீருள்ள மடுவின் கண்,

     கரா --- முதலையினுடைய,

     வெளி வாயின் நேர்பட உற்று --- நீண்ட வாயில் நேராக அகப்பட்டு,

     அன்று --- அந்நாளில்,

     மூலம் என் ஆரவார --- “மூலமே” என்று பெரிய ஒலி செய்த,

     மத தந்தி தான் உய --- மதங்களைப் பொழியும் யானையானது பிழைக்கும் வண்ணம்,

     அருள் மாயன் --- அருள் புரிந்த மாயவரும்,

     ஆதி நாரணன் --- முதன்மையுடைய நாராயணரும்,

     நல் சங்க பாணியன் --- நல்ல சங்கத்தை ஏந்திய திருக்கரம் உடையவரும்,

     ஓதுவார்கள் உளத்து அன்பன் --- துதி செய்பவருடைய உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் அன்பரும்,

     மாதவன் --- பெரிய தவத்தினரும்,

     ஆன நான்முகன் நல் தந்தை --- படைப்புத் தலைவரான பிரம தேவருடைய நல்ல பிதாவாக விளங்குபவரும்,

     சீதரன் --- இலக்குமியை மார்பில் தரித்தவருமாகிய திருமாலின்,

     மருகோனே --- திருமருகரே!

      வீர சேவக --- வீரம் உடைய ஆற்றல் படைத்த, உத்தண்ட --- உக்கிரமானவரே!

      தேவ குமார --- தெய்வத் திருக்குமாரரே!

      ஆறு இருபொன் செய் கை நாயக --- அழகும் செம்மை நிறமும் உடைய பன்னிரு கரங்களைப் படைத்த தலைவரே!

      வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே --- கலாபத்தை வீசி நடக்கின்ற பரிசுத்தமான மயிலை வாகனமாக உடையவரே!

      காவிரி உட்கொண்ட --- பெருமை நிறைந்த காவிரி நதியைத் தன்னகத்தே கொண்ட,

     சேவகன் --- கலிசைக் சேவகனாருடைய,

     நல் சிந்தை மேவிய --- நல்ல மனத்தில் வீற்றிருக்கின்ற,

     வீரை வாழ் --- வீரை என்ற ஊரில் வாழ்கின்ற,

     பழநி துங்க --- பழநியிலும் வாழ்கின்ற பரிசுத்தமானவரே!

      வானவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையிற் சிறந்தவரே!

      பாரி ஆனகொடை கொண்டலே --- பாரி வள்ளல் போன்ற கொடைக் குணம் உடைய மேகமே!

     திரு வாழ் விசால தொடை திண் புய --- இலக்குமி வாழ்கின்ற அகன்ற மாலை புனைந்த வலிமையுடைய தோள்களை யுடையவனே!

     எழு பாரும் ஏறுபுகழ் கொண்ட நாயக --- ஏழு உலகங்களிலும் பரவிய புகழுடைய தலைவனே!

     அபிராம --- அழகனே,

     பாவலோர்கள் கிளைக்கு --- பாடவல்ல புலவர்களுடைய சுற்றத்தாருக்கு,

     என்றும் வாழ்வு அருள் சீல --- எந்நாளும் நல்வாழ்வைத் தருகின்ற சீலனே!

     ஞால விளக்கு --- உலகத்திற்கு விளக்கு போன்றவனே!

     இன்ப சீவக --- இன்பந்தரும் சீவகனே!

     பாக சாதன --- இந்திரனே!

     உத்துங்க மானத --- சிறந்த பரிசுத்த மனிதனே,

     என ஓதி --- என்றெல்லாம் கூறி,

     சீரது ஆக எடுத்து ஒன்று மாகவி பாடினாலும் --- சிறப்பாக எடுத்து ஒப்பற்ற அரிய கவியைப் பாடினாலும்,

     இரக்கம் செயாது --- மனம் இரங்காது,

     உரை சீறுவார் --- கோபித்துப் பேசுபவர்களுடைய,

     கடையில் சென்றுதாம் அயர்வுற --- கடை வாசலில் போய் தாங்கள் அயர்ச்சியடையும்படி,

     வீணே சேய பா வகையைக் கொண்டு போய் --- வீணாக செம்மையான பாமாலையைப் பாடிக் கொண்டு போய்,

     அறியாமலே --- அறிவில்லாமல்,

     கமரில் சிந்துவார் சிலர் --- நில வெடிப்பில் கொட்டுவது போல் இனிய தமிழைச் சிந்துகின்றவர் சிலர் உளர்;

     சேயனார் --- தரும குணத்திற்குத் தொலைவில் உள்ளவர்களும்,

     மனத்தில் சிந்தியார் --- அற நெறியை நினையாத வருமாகிய மாக்களுக்கு,

     அருகு உறலாமோ --- அருகில் சேரலாமோ? (சேரக்கூடாது)


பொழிப்புரை


         நீர் நிறைந்த மடுவில் முதலையின் நீண்டவாயில் அகப்பட்டுக் கொண்டு, அந்நாளில் “மூலமே” என்று பெரும் ஒலியுடன் அழைத்த கஜேந்திரம் என்ற யானை உய்யுமாறு அருள் செய்த மாயேசனும், ஆதிநாராயணரும், பாஞ்சஜன்யம் என்ற நல்ல சங்கினை ஏந்தியவரும், அருட்பாடல்களை ஓதுகின்றவர்களுடைய உள்ளத்தில் உறையும் அன்பரும், மாதவரும், படைப்புக் கர்த்தரான பிரம தேவருக்குப் பிதாவும், மார்பில் மலர்களைத் தரித்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

         வீரமுடைய சேவகரே!

         உக்ரமுடைய தெய்வத் திருக்குமாரரே!

         அழகிய சிவந்த பன்னிரு புயங்களையுடைய தலைவரே!      

        கலாபத்தை வீசி நடனமிடும் தூய மயிலை வாகனமாக உடையவரே!

         பெருமை மிகுந்த காவிரி நதியைத் தன்னகத்தே கொண்ட கலிசைச் சேவகனாருடைய உள்ளக் கோயிலிலும், வீரை என்ற பதியிலும், பழநியிலும் வாழ்கின்ற தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!

         பாரி போன்ற கொடைக் குணமுடைய மேகமே! இலக்குமி தேவி வாழ்கின்ற மாலையணிந்த அகன்ற வலிய தோள்களை உடையவனே! அழகனே! பாடவல்ல புலவர்களுடைய சுற்றத்தாருக்கும் என்றும் இனிய வாழ்வுதருஞ் சீலனே! உலக விளக்கே! இன்ப மிகுந்த ஜீவகனே! இந்திரனே! மிக்க பரிசுத்தமான மனிதனே!’ என்று சொல்லி, சிறப்பாக எடுத்து ஒப்பற்ற பாடலைப் பாடினாலும், மனம் இரங்காது கோபித்து உரைக்கின்ற உலோபிகளுடைய கடை வாசலிற் சென்று ஒன்றும் பெறாது அயர்ச்சியுறுமாறு, வீணாக செம்மை வாய்ந்த பாமாலைகளைக் கொண்டுபோய் அறிவு இல்லாமல் நிலவெடிப்பில் சிந்தி இறைக்கின்றவர்களும் சிலர் இருக்கின்றார்கள்; அறநெறிக்குத் தூரமானவர்களும், தரும சிந்தனையில்லாதவர்களும் ஆகிய மூடர்கள் அருகில் சேரலாமோ? (சேரக்கூடாது)

விரிவுரை


இந்தத் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் தமிழ் கற்ற புலவர்கள், தருமம் ஒரு சிறிதும் செய்யாத அரக்க மனம் படைத்த இரக்கமில்லாத தனவந்தர்களிடம் போய், தமிழ்ப் பாடல்கள் பாடி உலைந்து உழல்வதைக் குறித்து வருந்திக் கண்டிக்கின்றனர்.


பாரியான கொடைக் கொண்டலே ---

பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன். முல்லைக் கொடிக்குத் தனது சந்தனத் தேரைத் தந்தவன். தனக்கு உரிய முன்னூறு ஊர்களை ஒரு நொடியில் ஒரு புலவருக்கு ஈந்த உதார குணம் படைத்தவன். ஒளவையார், கபிலர் முதலிய பழம்பெரும் புலவர்களால் பாராட்டிப் பாடப்பெற்றவன்.

இத்தகைய சிறந்த வள்ளலே’! என்று பொருளை வேண்டிப் புலவர் உலோபியைப் பாடுகின்றனர்.

திரு வாழ் விசால தொடை திண் புய ---

இலக்குமி தேவி வாழ்கின்ற புயத்தினனே என்றும், மாலை யணிந்த புயாசலனே என்றும் பாடுவார்கள்.

இது வீரத்தைக் குறித்துப்பாடுவது. தொடுப்பதனால் மாலை, தொடையெனப்பட்டது.

எழுபாரும் ஏறு புகழ் கொண்ட நாயக ---

ஏழுலகங்களிலும் புகழ் பரவிய பெருந்தலைவனே” என்பர்.

வலிமையில்லாதவனை வலிமையாளன் என்றும், மெலிந்த தோளையுடைய வனை, வலிந்த தோளன் என்றும் அடுத்த வீட்டுக்குத் தெரியாத ஒருவனை உலகம் புகழும் உத்தமன் என்றும், வீண்புகழ் விளம்புவர்.

அபிராம ---

அபிராமம்-அழகு. கன்னங்கறேல் என்று கரித் துண்டுபோல் உள்ள ஒருவனைப் பேரழகனே என்பர்.

பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ---

புலவர்க்கேயன்றி, புலவருடைய சுற்றத்தார்க்கும் பொன்னும் பொருளும் வழங்கி வாழ்வு தருகின்ற குணசீலனே என்றும் புகழ்வர்.

ஞாலவிளக்கு ---

உலகத்தின் இருளைப் போக்குகின்ற தீபம் போன்றவரே!” என்பர்.

இன்ப சீவக ---

ஜீவகன் என்பவன் சீவக சிந்தாமணி என்ற நூலின் கதாநாயகன்.

பாகசாதன ---

பாகசாதனன்-இந்திரன்.

உத்துங்க மானத ---

உத் - மேலான, துங்கம் - தூய்மை, மானதன் - மனதையுடையவன், “உயர்ந்த தூயமனம் உடையவனே” என்பர்.

மா கவி பாடினாலும் இரக்கம் செய்யாது உரை சீறுவார் ---

புலவர்கள் வறுமையினால் வாடி வருந்திப் பொருள் படைத்த உலோபி களிடம் (உலோபி என்று தெரியாமல்) போய் இனிய கனியமுதம் போன்ற கவிகளைப் பாடினால், (அதன் தன்மையைத் தெரியாமல்) இவர்கள் இரக்கமின்றி அரக்கரைப் போல் சீறி மேல் விழுந்து கடிப்பதுபோல் பேசி அதட்டிவிடுவர்.

ஒரு புலவன் ஒரு தனவந்தனிடம் போய், "அரிச்சந்திரனே" என்றான்.  உடனே தனவந்தன் சீறி விழுந்து, "அறிவில்லாதவனே! என்னை அரிச்சந்திரனே என்றனையே? என் மனைவியை யான் யாருக்கு விற்றேன்" என்றான்.

புலவன்,          --- "தருமராஜனே" என்றான்.
தனவந்தன்   ---   "நான் சூதாடி மனைவியைத் தோற்றேனா" என்றான்.
புலவன்      ---   "கற்பகத் தருவே" என்றான்.
தனவந்தன்   ---   "ஓய்! நான் மரமா?” என்றான்.
புலவன்      ---   "காமதேனுவே" என்றான்
தனவந்தன்   ---   "நான் மாடா?” என்றான்.
புலவன்      ---   "சிந்தாமணியே" என்றான்
தனவந்தன்   ---   "நான் கல்லா?” என்றான்.

இவ்வாறு புலவர் என்ன என்னவாறு புகழ்ந்தாலும், அவற்றுக்கு எதிர்மாறு கூறி வைது, அரைக்காசும் தராது விரட்டுவர்.

வருமதுவொ போதும் என்று ஒருபணம் உதாசி னஞ்சொல்
     மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
     உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவே...          ---  (தருவர்இவர்) திருப்புகழ்.

சேய பா வகையைக் கொண்டுபோய் அறியாமலே கமரிற் சிந்துவார் சிலர் ---

சிறந்த பாமாலைகளைப் புலவர்கள் அறிவின்றி உலோபியான பணக்கார னிடம்போய்ப் பாடுவது, நிலவெடிப்பில் காமதேனுவின் பாலைச் சிந்துவதற்கு நிகர். கமர்-நிலவெடிப்பு. 

சேயனார் மனதிற் சிந்தியார் அருகு உறல் ஆமோ ---

சேயனார்-சிறுபிள்ளையைப் போன்றவர். சேய்கை-தூரம், சேயனார்-அற நெறிக்கு வெகு தூரத்தில் நிற்பவர் எனினும் பொருந்தும்.

சேயனார்-முருகவேள். முருகனை உள்ளத்தில் தியானிக்காத மூடர் எனவும் பொருள்படும். இத்தகைய குணக்கேடரது சமீபத்தில் சேரக்கூடாது என்று சுவாமிகள் உலகத்தில் உள்ள தமிழ்வாணருக்கு அறிவுரை பகர்கின்றார்.

ஆரு நீர்மை மடுக்கண் ---

தண்ணீர் நிறைந்த மடு. இதனைப் புஷ்கரம் என்று கூறுவர்.

கரா நெடுவாயில் நேர் பட ---

கார-முதலை. கொடிய முதலையானது கஜேந்திரன் என்ற யானையைப் பற்றித் துன்புறுத்திய பொழுது, அந்த யானை நம்பிக்கையோடு தும்பிக்கையைத் தூக்கி, உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி, ஆதிமூலமே என்று அழைத்தது.

அருள்மாயன் ---

அதனைக் கேட்ட திருமால், சிறிதும் தாமதிக்காமல் ஓடிவந்து முதலைக்கு நிக்கிரகமும், யானைக்கு அநுக்கிரகமும் செய்தனர்.

இந்தக் கருணைத் திறத்தை அருணகிரிநாத சுவாமிகள் பல இடங்களில் பாராட்டுகின்றனர்.

திருப்பாற் கடலாற் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயர முடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூட மென்ற ஒரு பெரிய மலையிருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த்தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத்தங்கிய ஒரு பெரிய தடாகமிருந்தது. அழகிய பூந்தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத்தடாகம். அந்தத் திரிகூடமலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரமென்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகந்தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த்துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக்கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடியவரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறுஞ் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது; கஜேந்திரம் உணவின்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாயிளைத்தது. யாதும் செய்யமுடியாமல் அசைவற்றிருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தைவிட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயந்தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

நற்சங்க பாணியன் ---

பாணி - கை. நீலமலைபோல் எழில்பெற நிற்கின்றான் நிமலன். அப்பெருமானுடைய கரமலர் மீது தூயவெண்சங்கம் மிகப் புனிதமாக விளங்குகின்றது. அது நாத தத்துவம். ஓங்கார ஒலியை உண்டாக்கி உலகங்களுக்கெல்லாம் உவகை யூட்டுவது.

இந்த நற்காட்சியைக் கண்ட நாச்சியாருக்கு இயற்கை எழில் நினைவுக்கு வருகின்றது, அழகிய ஒரு மலை; குளிர்ந்த மலை; அது பச்சைப் பசேல் என்று காட்சி தருகின்றது. அம் மரகத மலைமீது அஷ்டமி திதி அர்த்த சந்திரன் தோன்றுகின்றான். அதுபோல் இருக்கின்றதாம் இந்த அரிய காட்சி; பச்சை மாமலைபோல் நின்ற பவளவாய்க் கமலக்கண்ணனுடைய திருக்கரத்தில் வெண்சங்கம் வீற்றிருப்பது, சங்கம் பாதிமதி போல் பாங்கு பெறுகின்றது. இக்கருத்தமைந்த பாடலினைப் பாருங்கள்.

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ்சங்கே.

மேலும் வெண்சங்கு நீலக்கோல மேனியானுடைய தாமரை போன்ற சிவந்த திருக்கரத்தில் இருப்பது. குளிர்ந்த கரிய நீர்நிலையில் சிவந்த தாமரையில் வெளிய அன்னம் வீற்றிருந்து தாமரையின் தேனை நுகருமாப் போல் இருக்கின்றதாம். என்ன அழகிய உவமை! ஆ! ஆ! உள்ளத்தை அள்ளுகின்றது.

கருங்குளம்-திருமால்; சிவந்த தாமரை கரதலம்.
வெண்மை அன்னம்-பாஞ்சசன்ய சங்கம்.
என்ன நிறபேதம்? வர்ணசாலம் என்பர் வடமொழியில்.

செங்கமல நாள்மலர்மேல் தேன்நுகரும் அன்னம்போல்
செங்கண் கருமேனி வாசுதே வனுடைய
அம்கைத் தலம்ஏறி அன்னவாசம் செய்யும்
சங்குஅரையா! உன்செல்வம் சால அழகியதே.        ---  நாச்சியார் திருமொழி.

ஓதுவார்கள் உளத்து அன்பன் ---

இறைவனுடைய அருள்மயமான தெய்வத் தமிழ் பாடல்களை உள்ளம் உருகி உணர்ச்சிமயமாக நின்று பாடுகின்ற உத்தமர்களைத் தமிழகத்தில் “ஓதுவார்” என்று உரைப்பார்.

ஓதுவார்க்கு மூன்று இலக்கணங்கள் உள.

காதலாகி ஓதுவார்;
கசிந்து ஓதுவார்;
கண்ணீர் மல்கி ஓதுவார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்”       --- தேவாரம்

இங்ஙனம் ஓதுகின்ற உத்தமர்களுடைய உள்ளத்தில் இறைவன் உறைகின்றான்.

வீரசேவக உத்தண்ட தேவகுமார ---

இந்த சொற்றொடர் முருகனுடைய சிறந்த ஆற்றலை அழகாகக் கூறுகின்றது.

சேவகனற் சிந்தை மேவிய ---

கலிசைச் சேவகனார் சிறந்த முருக பக்தர். ஆதலின் எம்பிரான் அவருடைய இதயக் கோயிலில் நீக்கமற நிறைந்து வீற்றிருக்கின்றனன்.

இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன். இரவும் பகலும் பிரியாது வணங்கும் பெற்றியுடைய அன்பர்கள் உள்ளத்தில் இறைவனும் பிரியாது உறைகின்றான்.

    அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
    பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ?” --- கந்தர் அநுபூதி.


கருத்துரை

திருமால் மருகா! பழநியப்பா! உலோபிகள் அருகில் சேரா வண்ணம் அருள் செய்.


No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...