திரு வடகுரங்காடுதுறை
(ஆடுதுறைபெருமாள் கோயில்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவையாறு சாலையில்
சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய
பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர்
வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம்
உள்ளது.
இறைவர்
: தயாநிதீசுவரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.
இறைவியார்
: ஜடாமகுடேஸ்வரி,
அழகுசடைமுடியம்மை.
தல
மரம் : தென்னை.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - கோங்கமே
குரவமே.
திருவையாறு அருகே காவிரியின் வடகரையில்
வாலியால் வழிபடப்பட்ட இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம்
- மயிலாடுதுறை சாலை வழியில் திருவிடைமருதூருக்கு அருகாமையில் சுக்ரீவனால்
வழிபடப்பட்ட ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில்
பெருமாள்கோயில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு, வடகுரங்காடுதுறை என்ற இந்த தேவாரத் திருத்தலம்
இன்று ஆடுதுறை பெருமாள்கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஊர். சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற் போல் கோயில்
தென்படுகிறது.
ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமும் இரண்டு
பிரகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே
நுழைந்தால், வலப் பக்கம் பழைய
வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி.
சமீபகாலப் பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள்
சந்நிதி. மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே பிரதோஷ நந்தியைக்
காணலாம். இவற்றைத் தவிர, இந்த வெளிப்
பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு
மடம் உள்ளது. உள் வாயில் வழியே நுழைந்து உள் பிராகாரத்தை அடையலாம். வாலி
இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி
வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீசுவரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் வாலி
இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப்
பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
இறைவன் கருவறை வலம் வரும்போது மூலவர்
சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற
இடத்தில், வாலி சிவபெருமானை
வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம் உள்ளது. மூலவர் பின்புறக் கோஷ்டத்தில்
வழக்கமாக லிங்கோத்பவர் இருப்பதற்கு பதில் இங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இந்த
அர்த்த நாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாகவுள்ளது. தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி உள்ளது. அடுத்து
வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு முருகப்பெருமான் ஒரு
திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில்
எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமான்
மீது 3 பாடல்கள் உள்ளன.
அடுத்து காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும் உள்ளனர். வடக்குச் சுற்றில் வடகிழக்கு
மூலையில், தெற்குப் பார்த்த
நடராஜர் சபை உள்ளது. இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான்
மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை)
காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது
வெகு விசேஷம். கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர், தேவாரம் பாடிய மூவர் மற்றும் . அவர்களை
அடுத்து எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண் சிலையும் உள்ளன.
கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன்
காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை
சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில்
அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது
மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும்
என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால்
எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.
இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில்
ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால்
தாகம் தாங்க முடியவில்லை. தாகமும்,
களைப்பும்
மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார்.
தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு
அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து
கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள்.
தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர்
பெற்றார்.
இறைவன் சந்நிதி முன் உள்ள முகமண்டபத்
தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன் சிவலிங்க வழிபாடு
செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண்
ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.
கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும்
விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும்
இவ்வாலயத்தில் இறைவன் கருவறை வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை
மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால்
அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில்
துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம்
கைகூடும் என்பது ஐதீகம்.
முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன்
கூடிய சந்நிதியில் அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் பெயருடன் அம்பாள் நின்ற
கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது
வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி, கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம்
வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில்,
மடியில்
பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள்
மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு
சித்திக்கும். அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி
அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற
பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட
திருமணங்கள் கூடி வரும் எனபது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "உய்யும் வகை, காத்தும் படைத்தும்
கலைத்து நிற்போர் நாள்தொறும் ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே" என்று போற்றி உள்ளார்.
காலை 7
மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 297
இன்னம்பர்
மன்னும்பி ரானை இறைஞ்சி, இடைமடக்கு ஆன
பன்னும்த
மிழ்த்தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி,
பொன்அம்க
ழல்இணை போற்றி, புறம்போந்து அணைந்து
புகுந்தார்,
மன்னும் தடங்கரைப் பொன்னி வடகுரங் காடு
துறையில்.
பொழிப்புரை : திருஇன்னம்பரில்
வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி,
இடைமடக்கான
யாப்பால் அமைந்த `திருமுக்கால்\' என்ற இறைவரின் புகழைப் பரவும்
திருப்பதிகத் தமிழ்ப் பாடல் மாலைகளைச் சாத்தி, வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப்
புறப்பட்டுச் சென்று, நிலை பெற்ற பெரிய
கரையையுடைய காவிரியின் வட கரையில் உள்ள வடகுரங்காடுதுறையில் வந்து அணைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 298
வடகுரங்
காடு துறையில் வாலியார் தாம்வழி
பட்ட
அடைவும், திருப்பதி கத்தில் அறியச் சிறப்பித்து
அருளி,
புடைகொண்டு
இறைஞ்சினர், போந்து புறத்துஉள்ள தானங்கள்
போற்றி,
படைகொண்ட
மூவிலை வேலார் பழனத் திருப்பதி
சார்ந்தார்.
பொழிப்புரை : வடகுரங்காடுதுறையில்
வந்து, வாலி வழிபட்டுப்
புகலிடமாகக் கொண்ட வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியச் சிறப்பித்துப் பாடி, திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப்
புறப்பட்டு அதன் அருகில் உள்ள திருப்பதிகளை யெல்லாம் வணங்கிய வண்ணம் மூவிலைச்
சூலத்தைக் கைக்கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனத் திருப்பதியைச் சென்றடைந்தார்.
குறிப்புரை : வடகுரங்காடுதுறையில்
அருளிய பதிகம் `கோங்கமே' (தி.3 ப.91) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
3. 091திருவடகுரங்காடுதுறை பண்
- சாதாரி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கோங்கமே
குரவமே கொழுமலர்ப் புன்னையே
கொகுடிமுல்லை
வேங்கையே
ஞாழலே விம்மு பாதிரிகளே விரவிஎங்கும்
ஓங்குமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச்
சடைமுடி அடிகளார் இடம்என விரும்பினாரே.
பொழிப்புரை : கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும்
காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது
இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
பாடல்
எண் : 2
மந்தமாய்
இழிமதக் களிற்றுஇள மருப்பொடு
பொருப்பின்நல்ல
சந்தம்ஆர்
அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
எந்தையார்
இணையடி இமையவர் தொழுதெழும்
இயல்பினாரே.
பொழிப்புரை : சிறு அளவில் மதம்
சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன் தரக்கூடிய
மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்து
வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும்
தன்மையர்.
பாடல்
எண் : 3
முத்துமா
மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
மத்தமா
மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேல்
சித்தம்ஆம்
அடியவர் சிவகதி பெறுவது திண்ணம்அன்றே.
பொழிப்புரை : முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம்
இவற்றை வாரி, தள்ளி மோதும்
காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த
பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து
உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி
பெறுவது உறுதி.
பாடல்
எண் : 4
கறியுமா
மிளகொடு கதலியின் பலங்களும் கலந்துநுந்தி
எறியுமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
மறிஉலாம்
கையினர் மலர்அடி தொழுதுஎழ மருவும்உள்ளக்
குறியினார்
அவர்மிகக் கூடுவார் நீடுவான் உலகின்ஊடே.
பொழிப்புரை : உறைக்கும் மிளகுச்
செடிகளோடு, வாழையும் கலந்து
தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள்
வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர்.
பாடல்
எண் : 5
கோடுஇடைச்
சொரிந்ததேன் அதனொடும் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுஉடைப்
பீலியும் கடறுஉடைப் பண்டமும் கலந்து நுந்தி
ஓடுஉடைக்
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
பீடுஉடைச்
சடைமுடி அடிகளார் இடம்எனப் பேணினாரே.
பொழிப்புரை : மரக்கிளைகளில்
சொரிந்த தேனோடு, மேகம் பெய்த
முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும்
உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தை, பெருமையுடைய
சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார்.
பாடல்
எண் : 6
கோலமா
மலரொடு தூபமும் சாந்தமும்
கொண்டுபோற்றி
வாலியார்
வழிபடப் பொருந்தினார், திருந்துமாங்
கனிகள்உந்தி
ஆலுமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
நீலமா
மணிமிடற்று அடிகளை நினையவல்
வினைகள்வீடே.
பொழிப்புரை : அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார்
வழிபட்டதும், இனிய மாங்கனிகளை
அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை
நினைந்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.
பாடல்
எண் : 7
* * * * * * * * * *
பாடல்
எண் : 8
நீலமா
மணிநிறத்து அரக்கனை இருபது கரத்தொடுஒல்க
வாலினால்
கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு
இலைஇல வங்கமே இஞ்சியே மஞ்சள்உந்தி
ஆலியா
வருபுனல் வடகரை அடைகுரங் காடுதுறையே.
பொழிப்புரை : நீலமணிபோன்ற கருநிற
அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும்
வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள
குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 9
பொருந்திறல்
பெருங்கைமா உரித்துஉமை அஞ்சவே ஒருங்குநோக்கி,
பெருந்திறத்து
அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்,
வருந்திறல்
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறை
அருந்திறத்து
இருவரை அல்லல்கண்டு ஓங்கிய அடிகளாரே.
பொழிப்புரை : போர்செய்யும்
தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து
வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல்
அழியுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை
அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் அப்பெருமான்,
பிரமனும், திருமாலும் தம்மைத் தேடித்
துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார்.
பாடல்
எண் : 10
கட்டுஅமண்
தேரரும் கடுக்கள்தின் கழுக்களும் கசிவுஒன்றுஇல்லாப்
பிட்டர்தம்
அறவுரை கொள்ளலும், பெருவரைப்
பண்டம்உந்தி
எட்டுமா
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறைச்
சிட்டனார்
அடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.
பொழிப்புரை : கடுக்காய்களைத்
தின்கின்ற கழுக்களான கட்டுப் பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை
கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள
குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின்
திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.
பாடல்
எண் : 11
தாழ்இளங்
காவிரி வடகரை அடைகுரங் காடுதுறைப்
போழ்இள
மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான்
அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா
அழைப்பினும் கூடுவார் நீடுவான் உலகின்ஊடே.
பொழிப்புரை : பள்ளம் நோக்கி
ஓடிப்பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை
அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல
ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும்
அழியாத முக்தியுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment