திரு வைகாவூர்




திரு வைகாவூர்

        சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன.

        சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.


இறைவர்              : வில்வவனேசுவரர், வில்வவனநாதர்.

இறைவியார்           : சர்வஜனரட்சகி, வளைக்கைநாயகி.

தல மரம்               : வில்வம்

தீர்த்தம்                : எமதீர்த்தம்,

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - கோழைமிட றாககவி.


         திருவைகாவூர் மகாசிவராத்திரி நாளுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம். வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு அருளிய தலம். வேடன் ஒருவன் கொள்ளிடக் கரையிலுள்ள ஒரு புதரில் ஒரு மானைக் கண்டு அதை துரத்திச் தென்றான். மான் வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பூஜை செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. மானைத் துரத்திச் சென்ற் வேடன் முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான். மானின் மீது குறி பார்த்து அம்பெய்யச் சித்தமானான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேண்டினார். மானை விடாவிட்டால் முனிவரையே கொன்று விடுவேன் என்று வேடன் மிரட்டினான். முனிவர் தஞ்சமடைந்த மானை விடமாட்டேன் என்று கூற, அவர் மீது அம்பு தொடுக்க ஆயத்தமானான். அடியார்களை எப்போதும் காக்கும் இறைவன் ஒரு புலி வடிவில் அங்கு தோன்றி வேடனை துரத்தினார். வேடன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது. இரவு வந்துவிட, பயத்தினாலும், பசியினாலும் வேடன் தூங்காமல் மரத்தில் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான்.

         அன்று மகாசிவராத்திரி தினம். புலியாக மரத்தடியில் இருந்த சிவபெருமான் மீது அவன் பறித்துப் போட்ட இலைகள் விழுந்தன. அவன் உட்கார்ந்திருந்த மரம் விலவமரம். இரவு முழுவதும் சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்ததால் அவனுக்குச் சிவபதம் கிடைத்தது. சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார். சிவராத்திரியை அடுத்த நாள் விடியற் காலையில் வேடன் ஆயுள் முடிகிறது. யமன் அவன் உயிரைப் பறிக்க வந்தான். நந்திதேவர் அவன் வருவதைக் கவனிக்கவில்லை. சிவன் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு யமனை விரட்டி அடித்தார். யமனை உள்ளே விட்டதற்காக சிவன் நந்திதேவரைக் கடிந்து கொள்ள, நந்தி வெளியே ஓடிவரும் யமனை தன் மூச்சுக் காற்றால் நிறுத்தி விட்டார். பின்னர் யமன் சிவனை வேண்டி மன்னிப்புக் கேட்க, யமனை வெளியேற அனுமதிக்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார்.

         யமன் தன் பக்தியை இறைவனுக்குக் காட்ட, ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றான். யமன் பணி செய்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

         இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.

         அக்கினி தீர்த்தம் என்று அக்கினியால் தோற்றுவிக்கப்பட்ட வேறொரு தீர்த்தமும் இங்கே இருக்கிறது. வேதங்கள் வில்வ மரங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம்.

         ஆலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், வாசலை நோக்கி காட்சி தரும் நந்தியையும் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால், இடதுபுறம் இத்தல வரலாறான வேடன் முக்தி பெற்ற நிகழ்ச்சி சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

     இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். அரிய வேலைப்பாடுடையது. லிங்கோத்பவரும், அர்த்தநாரீசுவரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள். திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் பீடமிட்டு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மண் உலகில் வைகா ஊர் நம் பொருட்டால் வைகியது என்று அன்பர் தொழும் வைகாவூர் மேவிய என் வாழ்முதலே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 240
விசயமங் கையினிடம் அகன்று, மெய்யர்தாள்
அசைவுஇல் வைகாவினில் அணைந்து, பாடிப்போந்து,
இசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

         பொழிப்புரை : விசயமங்கை என்ற பதியினின்றும் நீங்கிச் சென்று, இறைவரின் திருவடி என்றும் நிலைபெற்றிருக்கும் திருவைகாவூர் என்னும் திருப்பதியை அடைந்து திருப்பதிகம் சாத்தியருளினார். பின் அப்பதியினின்றும் சென்று, நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் திருஞானசம்பந்தர், எண் திசைகளையே ஆடையாகக் கொண்ட இறைவரின் `திருப்புறம்பயம்' என்ற பதியை அடைந்தார்.

         குறிப்புரை : திருவைகாவூரில் இவர் பாடிய பதிகம் `கோழை மிடறாக கவி' (தி.3 ப.71) என்று தொடங்கும் சாதாரிப் பண்ணமைந்த பதிகமாகும்.



3. 071    திருவைகாவூர்                   பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கோழைமிடறு ஆக,கவி கோளும்இல
         ஆக,இசை கூடும்வகையால்,
ஏழையடி யார்அவர்கள் யாவைசொன
         சொல்மகிழும் ஈசன்இடமாம்,
தாழைஇள நீர்முதிய காய்கமுகின்
         வீழநிரை தாறுசிதறி
வாழைஉதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
         சேறுசெயும் வைகாவிலே.

         பொழிப்புரை : சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத ஏழையடியவர்கள் , கோழை பொருந்திய கழுத்து உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின் முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ , அதன் வரிசையான குலைகள் சிதறி வாழைக்குலையில் விழ , அவ்வாழை மரங்களினின்றும் உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச் செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 2
அண்டம்உறு மேருவரை அங்கிகணை
         நாண்அரவு அதாகஎழில்ஆர்
விண்டவர்த முப்புரம் எரித்தவிகிர்
         தன்அவன் விரும்பும்இடமாம்,
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை
         யாடுவயல் சூழ்தடம்எலாம்
வண்டுஇனிசை பாடஅழ கார்குயின்மி
         ழற்றுபொழில் வைகாவிலே.

         பொழிப்புரை : வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும் , அக்கினியைக் கணையாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு , பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி , வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட , அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
ஊனம்இலர் ஆகிஉயர் நற்றவமெய்
         கற்றுஅவை உணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளும்அருள்
         செய்யவல நாதன்இடமாம்,
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு
         கேபொழில்கள் தோறும்அழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள்
         வந்துஅணவும் வைகாவிலே.

         பொழிப்புரை : மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களால் செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய் , நல்ல தவத்தை மேற்கொண்டு , பதிநூல்களை நன்கு கற்று , கேட்டுத் தெளிய உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க , நாடோறும் அருள்செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நல்ல வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த மதில்களும் , மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும் விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
இன்னஉரு இன்னநிறம் என்றுஅறிவ
         தேல்அரிது, நீதிபலவும்
தன்னஉரு ஆம்எனமி குத்ததவன்
         நீதியொடு தான்அமர்விடம்,
முன்னைவினை போய்வகையி னான்முழுது
         உணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதும்மரு வித்தொழுது
         சேரும்வயல் வைகாவிலே.

         பொழிப்புரை : சிவபெருமானை இன்ன உருவம் உடையவன்; இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால் அறியமுடியாது . புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன் . அப்பெருமான் அருளோடு வீற்றிருந்தருளும் இடம், முன்னை வினைகளெல்லாம் நீங்க , அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை , மாலை என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும் , வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
வேதமொடு வேள்விபல ஆயினமி
         குத்து,விதி ஆறுசமயம்
ஓதியும் உணர்ந்தும்உள தேவர்தொழ
         நின்றுஅருள்செய் ஒருவன்இடமாம்,
மேதகைய கேதகைகள் புன்னையொடு
         ஞாழல்அவை மிக்கஅழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல
         பாடுபொழில் வைகாவிலே.

         பொழிப்புரை : வேதங்களை ஓதியும் , ஓதுவித்தும் , வேள்விகள் பல செய்தும் , விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும் , உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , சிறந்த தாழைகள் , புன்னை , புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும் , மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
நஞ்சுஅமுது செய்தமணி கண்டன், நமை
         ஆள்உடைய ஞானமுதல்வன்,
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவ
         லோகன்அமர் கின்றஇடமாம்,
அஞ்சுடரொடு ஆறுபதம் ஏழ்இனிசை
         எண்ணரிய வண்ணம்உளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது
         சேரும்வயல் வைகாவிலே.

         பொழிப்புரை : சிவபெருமான் நஞ்சை அமுது போன்று உட்கொண்டவன் . நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன் . சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன் , பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்து உச்சரித்து , ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களைப் பாடி , எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும் , வயல்வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
நாளுமிகு பாடலொடு ஞானமிகு
         நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும்
         அவர்க்குஅருள்செய் சோதிஇடமாம்,
நீளவளர் சோலைதொறு நாளிபல
         துன்றுகனி நின்றதுஉதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர்
         விரியும்வயல் வைகாவிலே.

         பொழிப்புரை : நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி , ஞானமலர்களான கொல்லாமை , அருள் , ஐம்பொறி அடக்கல் , பொறை , தவம் , வாய்மை , அன்பு , அறிவு இவை கொண்டு தோள்களும் , கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர , அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய , அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 8
கையிருப தோடுமெய்க லங்கிட,வி
         லங்கலைஎ டுத்தகடியோன்
ஐஇருசி ரங்களை ஒருங்குஉடன்
         நெரித்தஅழ கன்தன்இடமாம்
கையில்மலர் கொண்டுநல காலையொடு
         மாலைகரு திப்பலவிதம்
வையகம் எலாம்மருவி நின்றுதொழுது
         ஏத்தும்எழில் வைகாவிலே.

         பொழிப்புரை : இருபது கைகளும் , வலிமையான உடம்பும் துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இவ்வையகத்திலுள்ள அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு, காலையும், மாலையும் தியானித்து, பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப் போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
அந்தமுதல் ஆதிபெரு மான்அமரர்
         கோனைஅயன் மாலும்இவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ
         நின்றுஅருள்செ ஈசன்இடமாம்,
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய்
         பூசிஎழு தொண்டர்அவர்கள்
வந்துபல சந்தமலர் முந்திஅணை
         யும்பதிநல் வைகாவிலே.

         பொழிப்புரை : இவ்வுலக ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணனான சிவபெருமான் , பிரமனும் , திருமாலும் தங்கள் செருக்கொழிந்து ` எம் தந்தையே ! தலைவனே ! இறைவனே ` என்று தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்துவீற்றிருந்தருளும் இடமாவது , சிந்தித்துப் பாடும் அடியார்களும் , தன் மேனியிலே திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும் மலர்களை ஏந்தி , வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற , நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .


பாடல் எண் : 10
ஈசன்எமை ஆள்உடைய எந்தைபெரு
         மான்இறைவன் என்றுதனையே
பேசுதல்செ யாஅமணர் புத்தர்அவர்
         சித்தம்அணை யாஅவன்இடம்
தேசமது எலாமருவி நின்றுபர
         வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவிஅணை
         யும்பதிநல் வைகாவிலே.

         பொழிப்புரை : சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும் தந்தை , தலைவன் , இறைவன் என்று போற்றுதல் செய்யாத சமணர்கள் , புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற , நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .


பாடல் எண் : 11
முற்றுநமை ஆள்உடைய முக்கண்முதல்
         வன்,திருவை காவில்அதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன்
         ஞானசம் பந்தன் உரைசெய்
உற்றதமிழ் மாலை ஈர்ஐந்தும்இவை
         வல்லவர் உருத்திரர்எனப்
பெற்றுஅமர லோகமிக வாழ்வர்பிரி
         யார்அவர்பெ ரும்புகழொடே.

         பொழிப்புரை : முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி , தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...