திரு விசயமங்கை
(திரு விஜயமங்கை)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவைகாவூர் சாலை
வழித்தடத்தில் கொள்ளிட ஆற்றின் வடகரையில் உள்ள கோவிந்தாபுத்துர் என்ற இடத்தில்
இறங்கி இத்திருத்தலத்தை அடையலாம்.
சுவாமிமலைக்கு மேற்கிலுள்ள அண்டக்குடி
என்னும் ஊரிலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
மற்றொரு திருத்தலமான திருவைகாவூரில் இருந்து ஆற்றோரமாக
இடதுபுறம் திரும்பிச் செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றும் இத்திருத்தலத்தை
அடையலாம்.
இறைவர்
: விஜயநாதர்.
இறைவியார்
: மங்களாம்பிகை - மங்கை
நாயகி.
தீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - மருவமர் குழலுமை.
2. அப்பர் - குசையும் அங்கையில்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்
நடக்கப் போகும் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான்.
பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற
அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க
துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவன் பார்வதியுடன் வேடன்
உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே
வந்தன. தன்னத் தாக்க வந்த அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை
யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும்
நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால்
வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது.
சிவபெருமான் அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரம் அளித்து மறைந்தார்.
அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர்
பெற்றது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது காணலாம்.
ஆலயத்திற்கு மதிற்சுவருடன் கூடிய ஓர்
நுழைவு வாயில் உள்ளது. நுழைவு வாயிலின் மேல் விடையின் மீது சிவனும், பார்வதியும் அமர்ந்தபடி காட்சி அளிககும்
சுதைச் சிற்பத்தைக் காணலாம். வாயில் வழியாக உற்றே நுழைந்தவுடன் நேரே ஒரு சிறிய
சந்நிதியில் விநாயகர் காட்சி தருகிறார். அவருக்குப் பின்னால் பலிபீடமும் அடுத்து
நந்தி மண்டபமும் உள்ளன. மூலவர் விஜயநாதேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் மங்கைநாயகி தெற்கு நோக்கியும்
அருளுகின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையார் மீது
அருள்பாலிக்கிறார். அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன்
அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில்
அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ
மலருடனும் அருளுகிறாள். கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
நால்வருக்கும் தனி சந்நிதி உள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மால் கருவின்கண்
விசையம் அம் கையில் கனி போல் பெற, தொண்டர் எண் விசையமங்கையில் வாழ் என் குருவே"
என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 238
பாவினது
இசைவழி பாடி அங்குஅகன்று
யாவரும்
தொழுது உடன் ஏத்த எய்தினார்,
மூவுலகு
உய்யநஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய
பெருந்திரு விசய மங்கையில்.
பொழிப்புரை : (திருப்பழுவூரில்) இத்திருப்பதிகத்தை
இசை வழியே பாடி, அங்கு நின்று சென்று, யாவரும் உடன்கூடி வணங்குமாறு, மூவுலகங்களும் உய்ய நஞ்சை உண்டருளிய
இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பெரிய `திருவிசயமங்கை\' என்ற பதியைச் சேர்ந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 239
அந்தணர்
விசயமங் கையினில் அங்கணர்
தம்தனி
ஆலயம் சூழ்ந்து, தாழ்ந்து, முன்
வந்தனை
செய்து, கோதனத்தை மன்னிய
செந்தமிழ்
மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
பொழிப்புரை : `மறையவர் வாழ்கின்ற விசயமங்கை என்ற
திருப்பதியில் சிவபெருமானின் ஒப்பற்ற திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, திருமுன் வணங்கி நின்று, அங்குப் பசுக்கள் வழிபட்ட செயலை, நிலைபெறச் செந்தமிழ்ப் பதிகத்தில்
வைத்துச் சிறப்பித்துப் போற்றி வழிபட்டனர்.
குறிப்புரை : இப்பதியில்
பாடப்பட்டது `மருவமர் குழலுமை' (தி.3 ப.17) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப்
பண்ணிலமைந்த பதிகமாகும். `கோதனம் வழிபடக் குலவு
நான்மறை வேதியர் தொழு தெழு விசய மங்கையே' எனவரும்
2ஆவது பாடலை
உளங்கொண்டு ஆசிரியர் அருளிச் செய்துள்ளார். கோதனம் - பசுக்களாகிய செல்வம்.
3. 017 திருவிசயமங்கை பண் -
காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மருஅமர்
குழல்உமை பங்கர், வார்சடை
அரவுஅமர்
கொள்கைஎ அடிகள் கோயிலாம்,
குரவுஅமர்
சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய
பொழில்அணி விசய மங்கையே.
பொழிப்புரை :நறுமணம் கமழும்
கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட , நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான்
எழுந்தருளியுள்ள கோயில் , குரவம் , சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும்
சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும்.
பாடல்
எண் : 2
கீதமுன்
இசைதரக் கிளரும் வீணையர்,
பூதமுன்
இயல்புடைப் புனிதர் பொன்நகர்,
கோதனம்
வழிபடக் குலவு நான்மறை
வேதியர்
தொழுதுஎழு விசய மங்கையே.
பொழிப்புரை :கீதங்களை முன்னே
இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும் , பூதகணங்கள்
சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது , இடபதேவர் வழிபட விளங்குவதும் , நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள்
தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . கோதனம் வழிபட -
பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர் . ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த
புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர் .
பாடல்
எண் : 3
அக்குஅரவு
அரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல்
விடைஉடைச் சோதி தொல்நகர்
தக்கநல்
வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர்
தொழுதுஎழு விசய மங்கையே.
பொழிப்புரை :உருத்திராக்கத்தையும்
, பாம்பையும் அணிந்த
இடுப்பையுடையவரும், உமாதேவியை ஒரு
பாகமாகக் கொண்ட வரும் , சிறந்த நல் இடபத்தை
வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர், தகுதியுடைய நல்ல தேவர்களும் , அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும்
வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
அக்கு -
உருத்திராக்கம் . இதனை ` அக்கு மாலைகொடங்கையி
வெண்ணுவார் ` ( தி .3 ப .307 பா .3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால்
அறிக .
பாடல்
எண் : 4
தொடைமலி
இதழியும் துன்எ ருக்கொடு
புடைமலி
சடைமுடி அடிகள் பொன்நகர்
படைமலி
மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி
கொடிஅணல் விசய மங்கையே.
பொழிப்புரை :கொன்றை மாலையும் , நெருக்கமாகத் தொடுக்கப் பட்ட எருக்க
மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் அழகிய நகரம் ,
மழுவை
ஆயுதமாக உடையவரும் , பசிய கண்களையுடைய
வலிமை யுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும்
திருத்தலமாகும் .
பாடல்
எண் : 5
தோடுஅமர்
காதினன், துதைந்த நீற்றினன்,
ஏடுஅமர்
கோதையோடு இனிது அமர்விடம்
காடுஅமர்
மாகரி கதறப் போர்த்ததுஓர்
வேடம்
அதுஉடைஅணல் விசய மங்கையே.
பொழிப்புரை :இறைவன் இடப்பாகத்தில்
தோடணிந்த காதினன் . நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன் . காட்டிலே வசிக்கின்ற
பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற
திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான் , பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய
உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .
பாடல்
எண் : 6
மைப்புரை
கண்உமை பங்கன், வண்தழல்
ஒப்புரை
மேனிஎம் உடைய வன்நகர்
அப்பொடு
மலர்கொடுஅங்கு இறைஞ்சி வானவர்
மெய்ப்பட
அருள்புரி விசய மங்கையே.
பொழிப்புரை :நீலோற்ப மலர் போன்ற
கண்ணுடைய உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் . சிறந்த நெருப்புப் போன்ற
திருமேனியுடையவன் . எம்மை ஆளும் அவரின் நகர் நீரும் , மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட
அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும்.
பூவும் , நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின்
பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும் , நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்
என்பதைப் புலப்படுத்தும்.
` பொக்கம்
மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை
இங்கு நினைவுகூர்க .
பாடல்
எண் : 7
இரும்பொனின்
மலைவில்லின் எரிச ரத்தினால்
வரும்புரங்
களைப்பொடி செய்த மைந்தன்ஊர்,
சுரும்புஅமர்
கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய
சடைஅணல் விசய மங்கையே.
பொழிப்புரை :பெரிய மேருமலையாகிய
வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடிசெய்த பெரும்
வீரமுடையவன் இறைவன் . வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும் , தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த
சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும்
திருத்தலம் ஆகும் .
பாடல்
எண் : 8
உளம்கைய
இருபதோடு ஒருபதும் கொடுஆங்கு
அளந்துஅரும்
வரைஎடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துஉடல்
நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்குஇழை
யொடும்புகும் விசய மங்கையே.
பொழிப்புரை :தன்னுடைய வழியில்
இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து , இருபது
தோள்களும் , பத்துத் தலைகளும்
கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி , எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப்
பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும்படி அடர்த்த
தன்மையுடைய சிவபெருமான் , ஒளிவீசும் ஆபரணங்களை
அணிந்த உமாதேவியோடு வீற்றிருந் தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் .
பாடல்
எண் : 9
மண்ணினை
உண்டவன், மலரின் மேல்உறை
அண்ணல்கள்
தமக்குஅளப்பு அரிய அத்தன்ஊர்,
தண்நறும்
சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர்
தொழுதுஎழு விசய மங்கையே.
பொழிப்புரை :மண்ணினை உண்ட
திருமாலும் , தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர் , குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும்
சந்தனமும் , பூவும் நீரும் கொண்டு
விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .
பாடல்
எண் : 10
கஞ்சியும்
கவளம்உண் கவணர் கட்டுரை
நஞ்சினும்
கொடியன, நமர்கள் தேர்கிலார்,
செஞ்சடை
முடிஉடைத் தேவன் நல்நகர்
விஞ்சையர்
தொழுதுஎழு விசய மங்கையே.
பொழிப்புரை :கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு உண்ணும் சமணர்களும்
உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும் . நம்மவர்கள் அவற்றை ஏற்றுக்
கொள்ளார் . சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது
வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .
பாடல்
எண் : 11
விண்ணவர்
தொழுதுஎழு விசய மங்கையை
நண்ணிய
புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய
செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்
சிவகதி புகுதல் திண்ணமே.
பொழிப்புரை :விண்ணவர்கள் தொழுது
வழிபடும் திருவிசய மங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து , திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய இச்செந்தழிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச்
செல்வர்களாவர் . அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும் .
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சி,
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்,
எங்கும்
நிறைந்த புகழாளர்,
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ள,
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : பொங்கி வருகின்ற
காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல
ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து
திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள
திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப்
பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5. திருப்பந்தணை
நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை:
`வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.
5. 071 திருவிசயமங்கை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குசையும்
அங்கையில் கோசமும் கொண்டஅவ்
வசைஇல்
மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய
மங்கையும் தானும்ஒன்று ஆயினான்
விசைய
மங்கையுள் வேதியன் காண்மினே.
பொழிப்புரை : விசயமங்கையுள்
வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான் , தம்
அங்கையில் தருப்பையும் , மலர்களும் கொண்ட
அழகிய , குற்றமற்ற
மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில்
நின்றான் .
பாடல்
எண் : 2
ஆதி
நாதன் அடல்விடை மேல்அமர்
பூத
நாதன் புலியதள் ஆடையன்
வேத
நாதன் விசயமங் கைஉளான்
பாதம்
ஓதவல் லார்க்குஇல்லை பாவமே.
பொழிப்புரை : ஆதிக்கண்
தோன்றியநாதனும் , வலியுடைய
இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும் ,
புலித்தோலாடையனும்
, வேதநாதனும் ஆகிய
பெருமான் விசயமங்கையில் உள்ளான் ;
அவன்
திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை .
பாடல்
எண் : 3
கொள்ளி
டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி
டைக்குஅருள் செய்விச யமங்கை
உள்ளி
டத்துஉறை கின்ற உருத்திரன்
கிள்ளி
டத்தலை அற்றது அயனுக்கே.
பொழிப்புரை : கொள்ளிடக்கரைக்
கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும் , விசயமங்கையுள் இடமாகக்கொண்டு
உறைகின்றவனும் ஆகிய உருத்திரன் ,
கிள்ளிய
விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது .
பாடல்
எண் : 4
திசையும்
எங்கும் குலுங்கத் திரிபுரம்
அசைய
அங்குஎய்திட்டு ஆரழல் ஊட்டினான்
விசைய
மங்கை விருத்தன் புறத்துஅடி
விசையின்
மங்கி விழுந்தனன் காலனே.
பொழிப்புரை : விசயமங்கையில் உள்ள
மிகப் பழையவனாகிய பெருமான் , திசைகள் எங்கும்
குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன்; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து
மயங்கி விழுந்தனன் கூற்றுவன் .
பாடல்
எண் : 5
பொள்ளல்
ஆக்கை அகத்தில்ஐம் பூதங்கள்
கள்ளம்
ஆக்கிக் கலக்கிய கார்இருள்
விள்ளல்
ஆக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல்
நோக்கிஎன் உள்உள் உறையுமே.
பொழிப்புரை : ஓட்டைகளை உடைய
உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே , அவ்விருளை விலக்குதல் புரிந்த
விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே
உறைவான் .
பாடல்
எண் : 6
கொல்லை
ஏற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை
ஏற்றுஉடை யான்விச யமங்கைச்
செல்வ
போற்றிஎன் பாருக்குத் தென்திசை
எல்லை
ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.
பொழிப்புரை : முல்லை
நிலத்துக்குரிய இடபக் கொடியையும்,
மேருமலையாகிய
வில்லையும் பொருந்த உடையவனாகிய விசய மங்கையின் அருட்செல்வ ! போற்றி ! என்று
உரைப்பார்க்குத் தென் திசையில் ஏறுதலும் , இனிய புகழும் உளதாகும் .
பாடல்
எண் : 7
கண்பல்
உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப
லிக்குஉழல் உத்தமன் உள்ஒளி
வெண்பி
றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப
னைத்தொழப் பெற்றது நன்மையே.
பொழிப்புரை : கண்ணும் பல்லும்
சிந்திவிட்ட கபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற
உத்தமனும் , வெண்பிறையைக்
கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது
நன்மையேயாகும் .
பாடல்
எண் : 8
பாண்டு
வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும்
நல்வரம் கொள்விச யமங்கை
ஆண்ட
வன்அடி யேநினைந்து ஆசையால்
காண்ட
லேகருத்து ஆகி இருப்பனே.
பொழிப்புரை : பாண்டுவின் மகனாகிய
பார்த்தன்
( அருச்சுனன் ) பணிகள்
செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசய மங்கையில் உறையும் ஆண்டவன்
திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன் .
பாடல்
எண் : 9
வந்து
கேள்மின் மயல்தீர் மனிதர்காள்,
வெந்த
நீற்றன், விசயமங் கைப்பிரான்,
சிந்தை
யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து
ஆக்கி உய்யக்கொளும் காண்மினே.
பொழிப்புரை : மயக்கந் தீர்தற்குரிய
மனிதர்களே ! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக ; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய
விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன்
உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்;
காண்பீராக
.
பாடல்
எண் : 10
இலங்கை
வேந்தன் இருபது தோள்இற
விலங்கல்
சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய்
வார்களும் வாழ்த்துஇசைப் பார்களும்
நலஞ்செய்
வார்அவர் நல்நெறி நாடியே.
பொழிப்புரை : இலங்கைக்கரசனாகிய
இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை
உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும் , வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித்
தமக்கு நலம் செய்வாராவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment