அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சினத்தவர் முடிக்கும்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பகையை அறுக்க வல்லது உனது திருப்புகழ்.
அடியவர்க்கு அருள வல்லது
உனது திருப்புகழ்.
வினைகளை அறுக்க வல்லது
உனது திருப்புகழ்.
உனது திருப்புகழை அன்புடன் ஓதி உய்ய
அருள்.
தனத்தன
தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
சினத்தவர்
முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர்
தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது
மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு
மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன
தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு
டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு
முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி
குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சினத்தவர்
முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்,
செகுத்தவர் உயிர்க்கும், ...... சினமாகச்
சிரிப்பவர்
தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பு என்று ...... அறிவோம்யாம்.
நினைத்ததும்
அளிக்கும், மனத்தையும் உருக்கும்,
நிசிக்கரு அறுக்கும் ...... பிறவாமல்,
நெருப்பையும்
எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்,
நிறைப்புகழ் உரைக்கும் ...... செயல்தாராய்.
தனத்தன
தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு
டுடுட்டுண்டு எனத் துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் ...... கொடு சூரர்
சினத்தையும்
உடல் சங்கரித்த மலை முற்றும்
சிரித்து எரி கொளுத்தும் ...... கதிர்வேலா!
தினைக்கிரி
குறப்பெண் தனத்தினில் சுகித்து,
எண்
திருத்தணி இருக்கும் ...... பெருமாளே.
பதவுரை
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந்தன பேரி --- தனத்தன......... . .தன என்ற ஒலிக்குறிப்புடன் பேரிகைகள்
முழங்கவும்,
தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும் ---
தடுட்டுடுஎன்று உடுக்கைகள் முழங்கவும்,
தளத்துடன் நடக்கும் --- சேனைகளுடன்
போர்க்களத்திற்கு அணிவகுத்து வந்த,
கொடுசூரர் --- சூராதியவுணர்களது,
சினத்தையும் --- கோபத் தீயையும்,
உடல் சங்கரித்த மலை முற்றும் --- துணித்த
பிணமலைகள் யாவையும்,
சிரித்து எரி கொளுத்தும் --- புன்னகை
புரிந்து அந்நகையில் எழுந்த அனற் பொறியால் சாம்பராக்கிய,
கதிர்வேலா --- ஒளிவீசும் வேற்படையை உடையவரே!
தினைக்கிரி குறப்பெண் --- தினைப் பயிர்
விளையும் வள்ளிமலையில் விளங்கிய வள்ளிபிராட்டியாருடைய,
தனத்தினில் சுகித்து --- பயோதரங்களில்
இன்புற்று,
எண் --- மாதவர்கள் மதிக்கின்ற,
திருத்தணி இருக்கும் பெருமாளே ---
திருத்தணிகை என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
சினத்தவர் முடிக்கும் ---
திருமுருகனடியார்களைக் கோபித்தவர்களுடைய தலைக்கும்,
பகைத்தவர் குடிக்கும் --- அவ்வடியார்களைப்
பகை செய்தவர்களுடைய குடும்பத்திற்கும்,
செகுத்தவர் உயிர்க்கும் --- அவ்வடியார்களைக்
கொன்றவர்களுடைய ஆருயிர்க்கும்,
சினமாக சிரிப்பவர் தமக்கும் ---
அவ்வடியார்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும்,
பழிப்பவர் தமக்கும் --- அவ்வடியார்களைப்
பழிக்குந் தன்மையினர்க்கும்,
திருப்புகழ் நெருப்பு என்று யாம் அறிவோம் ---
திருப்புகழே பெரு நெருப்பாக நின்று அடியுடன் அழித்துவிடும் என்பதை யாம்
அறிந்திருக்கின்றோம்,
நினைத்ததும் அளிக்கும் --- அடியார்களாகிய
நாங்கள் எதனை எதனை நினைக்கினும் அவற்றை நினைத்தவுடனே தரவல்லதும்,
மனத்தையும் உருக்கும் --- பாடுபவர்
கேட்பவர்களது கல்மனதையும் கரைந்து உருகச் செய்யவல்லதும்,
பிறவாமல் --- இன்னும் ஒரு தாய்உதரத்தில்
புக்குப் பிறவா வண்ணம்,
நிசி கரு அறுக்கும் --- இருட்செறிந்த
கருவடையும் துயரை அறுத்தெறிய வல்லதும்,
நெருப்பையும் எரிக்கும் --- எல்லாவற்றையும்
எரிக்கவல்லதாகிய நெருப்பையும் எரிக்கவல்லதும்,
பொருப்பையும் இடிக்கும் ---- மலையையும்
இடித்தெறிய வல்லதுமாகிய,
நிறைபுகழ் உரைக்கும் --- எல்லாப் பொருள்களும்
நிறைந்த திருப்புகழைப் பாடுகின்ற,
செயல் தாராய் --- நற்செயலை தந்தருள்வீர்.
பொழிப்புரை
பேரிகைகள் “தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தன” என்று முழங்கவும், உடுக்கைகள்
“தடுட்டுடு டுடுட்டுண்டு“ என்று முழங்கவும், சேனைகளுடன் அணி வகுத்து நடந்த கொடிய
சூராதியவுணர்களது கோபத் தீயையும்,
அறுத்து
வீழ்த்திய பிணமலைகளையும் சிரித்து எரித்தருளிய வேலாயுதக் கடவுளே!
தினைப்பயிர் விளையும் மலையிடத்து வசித்த
வள்ளிநாயகியாருடைய தனபாரங்களில் இன்புற்று திருத்தணிகை மலையில் வாழுகின்ற
பெருமையின் மிக்கவேர!
நினது அடியார்களைக் கோபித்தவர்களுடைய
முடிக்கும், அடியார்களைப்
பகைத்தவர் குடிக்கும், அடியார்களைக்
கொன்றவர்களுடைய உயிர்க்கும், அடியார்களைக் கண்டு
கோபமாகச் சிரிப்பவர்கட்கும், அடியார்களைப்
பழிப்பவர்கட்கும், திருப்புகழே
நெருப்பாக நின்று அழித்து ஒழிக்கும் என்பதனை யாங்கள் அறிந்துள்ளோம். அதுவேயும் அன்றி, நாங்கள் நினைத்தவைகளை எல்லாம்
நினைத்தவண்ணம் நினைத்த உடனே தரவல்லதும்,
படித்தாலும், பாடினாலும், கற்றாலும், கேட்டாலும், சிந்தித்தாலும் கல்மனத்தையும் கரைந்து உருகச்
செய்ய வல்லதும், இன்னொரு தாய்
வயிற்றில் புக்குப் பிறவா வண்ணம்,
இருள்
மிக்க கருப்பையை அறுத்து எறிய வல்லதும், எல்லாவற்றையும்
எரிக்க வல்லதாகிய நெருப்பையும் எரிக்க வல்லதும், மலையி்னை இடிக்க வல்லதுமாகிய தேவரீருடைய
திருப்புகழை நாடோறும் உரைத்து உய்யுமாறு திருவருள் புரிவீர்.
விரிவுரை
இத்திருப்புகழ்
பாடப்பெற்ற வரலாறு பின்வருமாறு:
நம்
பரமாசிரியராகிய அருணகிரிநாத சுவாமிகள் பல்லாயிரம் அடியார் குழாங்கள் சூழவும், “ஹரஹர“ என்ற முழக்கம் வானத்தை அளாவவும், கருப் புகாத கதிதனைக் காட்டும்
திருப்புகழைப் பண்ணுடன் பாடிக்கொண்டும் தணிகை மலையை வலம் வருவாராயினார்கள். அப்போது ஆங்கிருந்த அறிவிலிகளும்
அவநெறிபட்ட அசடர்களுமாகிய சிலர், சுவாமிகளது
தவவேடத்தையும் திருநீற்றின் மாண்மையும் கண்டிகையின் கவினையும் பாடலின் பண்பையும்
கண்டு, எள்ளி நகையாடி, திருப்புகழையும் அடியார்களையும்
பழித்துப் பரிகசித்தனர்.
அதுகண்டு
சுவாமிகள் சற்று மனம் வருந்தி, "என்னையனே! நின்
திருப்புகழையும் திருப்புகழைப் பாடுஞ் சீலமிக்க அடியார்களையும் இவர்கள்
நிந்தித்தது முறையா! வேலாயுதா! முருகா! இவர்களை அழிப்பதற்கு வேறு ஒரு நெருப்பு
வேண்டுமோ! திருப்புகழே நெருப்பாய் நீறாக்கும்".
“சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்,
செகுத்தவர் உயிர்க்கும்,
சினமாகச்
சிரிப்பவர்
தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பு, என்று
அறிவோம்யாம்”
என்று
பாடியருளலும், அப்புலவர்கள்
அத்தனைப் பேர்களும் சாம்பல் குவியலானார்கள். திருப்புகழின் அதி அற்புதமான
ஆற்றல்தான் என்னே!
அதனைக்
கண்ட “கருணைக்கு அருணகிரி“ என்று உலகம் பாராட்டுகின்ற, நம் பரம கருணாமூர்த்தியாகிய சுவாமிகள்
திருவுளமிரங்கி, “அந்தோ! அறுமுகத்தரசே!
இந்தக் குழந்தைகள் அறிவின்றிச் செய்த அபசாரத்திற்காக இப்பாடலைத் தொடங்கியவுடன்
அழிந்தொழிந்தனரே! ஏ! கருணாகரா! இவர்கள் செய்த அபராதத்தை மன்னித்து எழுந்தருளப்
புரிவீர் என்று உருகியுரைத்து,
“நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்,
நிசிக்கரு அறுக்கும் பிறவாமல்,
நெருப்பையும்
எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்,
நிறைப்புகழ் உரைக்கும் செயல்தாராய்”
என்று
பாடியருளவும் சாம்பல் குவியலான அத்தனைப் பேர்களும் துண் என்று உயிர் பெற்று
எழுந்தனர்.
திருப்புகழ்
அழிக்கவும் அருளவும் ஆற்றல் உடையது என்பதை
உணர்ந்த அவர்கள் சுவாமிகள் திருவடித் தாமரைகளின் மீது வீ்ழ்ந்து பன்முறை வணங்கி
“குருநாதா! அடியேங்கள் அறிவில்லாமல் பெரும் பாதகத்தைச் செய்துவிட்டோம்; எங்கள் தீமையைப் பொறுத்து எங்களை அடிமை
கொண்டு ஆட்கொண்டருள்வீர்” என்று வேண்டி நின்றனர்.
சுவாமிகள் அவர்கட்கு அபயம் தந்து, அவர்களையும் தமது அடியார்
திருக்கூட்டத்துள் சேர்த்துக் கொண்டு அவர்களைப் புனிதர்களாக்கி, ஆட்கொண்டருளினார்கள்.
அறிவோம்
யாம் ---
யாம் என்ற பதம் சிங்கநோக்காக நின்று
யாம் அறிவோமென்றும், யாம் நினைத்ததும்
அளிக்கும் என்றும் பொருள்படும்.
நெருப்பையும்
எரிக்கும் ---
புறத்தேயுள்ள நெருப்பை எரிப்பதோடும் அன்றி, அகத்தேயுள்ள பசித் தீ, காமத் தீ முதலிய நெருப்புகளையும் எரிக்க
வல்ல திருப்புகழ்.
பொருப்பையும்
இடிக்கும் ---
புறத்தேயுள்ள மலையை இடிப்பதோடு, நமது சஞ்சித வினைத் தொகுதியாகிய
மலையையும் இடிக்கவல்லது திருப்புகழ்.
நிறைப்புகழ்
---
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், உபநிஷதம், மருத்துவம், யோகம், சங்கீதம் முதலிய யாவும் திருப்புகழில்
நிறைந்துள்ளன. நுணுகி ஆராய்வோருக்கு இவை புலனாகும். இதனாலன்றோ,
வேதம்
வேண்டாம், சகல வித்தை வேண்டாம், கீத
நாதம்
வேண்டாம், ஞான நூல்வேண்டாம், - ஆதி
குருப்புகழை
மேவுகின்ற கொற்றவன் தாள்போற்றும்
திருப்புகழைக்
கேளீர் தினம்”
என்று
ஆன்றோர் வியந்தோதினர்.
சிரித்தெரி
கொளுத்துங் கதிர்வேலா ---
ஆறுமுகக் கடவுள் சூரபன்மனுடன் போர்
புரியுங்காலை பூமண்டலத்து உள்ள அவுணசேனைகள் முழுவதையுங் கொன்றருளினார். மேலும்
மேலும் அண்டங்களிலுள்ள அவுணசேனைகள் வந்து கொண்டேயிருந்தன. அவைகளையும் கொல்ல உதிர
வெள்ளம் ஓடிற்று. நிணமும் தசையும் உதிரமும் சேர்ந்து சேறாயின. பிணமலைகள் குவிந்தன.
அதனால் தேர் செல்லத் தடைப்பட்டது. அது கண்ட பெருமான் புன்முறுவல் பூத்தனர்.
அம்மூரலிற் சிறு நெருப்புப் பொறி பரந்தது. அப்பொறியால் பிணமலைகளும் அசுரசேனைகளும்
எரிந்து கரிந்து சாம்பராயின.
குறப்பெண்
தனத்தினில் சுகித்து ---
வள்ளியம்மை ஞானாம்பிகை. “சுந்தரஞான
மென்குறமாது” என்றார் பிறிதோரிடத்தில், அந்த
ஞானமடந்தையின் அபரஞானம், பரஞானம் என்ற
இருதனங்களில் ஞானபண்டிதன் இன்புறுகின்றனன் என்பது இதன் உள்ளீடு.
இப்பாடலை நாடோறும் பாராயணம்
புரிவோர்க்குச் சத்துரு பயம் சாராது என்பது ஒருதலை.
கருத்துரை
வேலாயுதரே! திருத்தணிகை துரையே! பகைவரை அழிக்க வல்லதும், அன்பருக்கு அருள வல்லதுமாகிய, கருப்பிணியைத் தவிர்க்கும் திருப்புகழை
ஓதும் திறத்தினை அருள்புரிவீர்.