ஆலகால
விடத்தையும் நம்பலாம்;
ஆற்றையும் பெரும்
காற்றையும் நம்பலாம்;
கோல
மாமத யானையை நம்பலாம்;
கொல்லும் வேங்கைப்
புலியையும் நம்பலாம்;
காலனார்
விடு தூதரை நம்பலாம்;
கள்ளர் வேடர் மறவரை
நம்பலாம்;
சேலை
கட்டிய மாதரை நம்பினால்,
தெருவில் நின்று
தியங்கித் தவிப்பரே! 11.
உலகிலு உள்ள ஆண்மக்கள், உலகை எல்லாம்
அழிக்கக் கூடிய ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சையும் நம்பி அதனிடத்தில் நெருங்கலாம்.
வெள்ளம் பெருகியதும், அதில் இறங்கியவரை
இழுத்துச் சென்று கொல்லுகின்ற ஆற்றையும், யுக முடிவில் இந்த உலகத்தை அழிக்கும்படி
வீசும் பெரும் காற்றையும் கூட நம்பலாம்.
அழகு பொருந்திய, பெரிய மதம் கொண்ட
யானையையும்,
கொல்லுகின்ற
வேங்கைப் புலியையும் நம்பி அதன் அருகே செல்லலாம்.
உயிர்களைக் கவருகின்ற எமன், உயிர்களைப் பிடித்து
வர ஏவுகின்ற தூதர்களையும் நம்பலாம்.
வழி மறித்துப் பொருள் பறிக்கும் கள்ளர்களை நம்பலாம்.
கொடும் தொழில் புரியும் வேடர்களை நம்பலாம்.
கொல்லும் செய்கை உடைய மறவரையும் நம்பலாம்.
பொருள் கருதி, ஆடவரை மயக்குதற்கு அலங்காரமாக
ஆடையைத் தரித்துக் கொண்டு, பசப்புகின்ற பொதுமாதரை நம்பி, அவர்களுடன் சகவாசம்
கொண்டால்,
கைப்
பொருள் எல்லாவற்றையும் இழந்து, தெருக்களிலே நின்று, பிச்சையும் கிடைக்காமல் உடல்
தளர்ந்து வருந்துவர்.