பாடல் 10 - கற்பகத் தருவை





கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்,
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்.
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிது அரிது ஆகும் அம்மா.    10.

     தேவலோகத்திலே இந்திரனுக்கு உரிமையாய் உள்ள கற்பக மரத்தைச் சேர்ந்து இருந்த காகம் கூட, அங்கிருந்த அமுதத்தை உண்ணும். அதுபோல, இந்த உலகத்தில் கல்வி அறிவு நிறைந்த மேலோராகிய அரசரைச் சேர்ந்து இருப்போர், அற்பர்களாக இருந்தாலும், உயர்ந்த வாழ்வைப் பெறுவர்.

     கிளியானது இலவ மரத்தை, அதில் உள்ள காய்கள் பழுக்கும், பின்னர் உண்ணலாம் என்று காத்திருந்து, அப் பழங்கள் வெடித்துப் பஞ்சாய்ப் பறந்த பிறகு, ஒரு பயனும் அடையாமல் போனதைப் போல, ஈகை முதலிய நல்ல குணங்கள் ஏதும் இல்லாத புல்லர்களை அடுத்து வாழ்ந்தோர் நல்ல வாழ்வை அடைவது மிகவும் அரிது ஆகும்.

     கல்வி அறிவு உள்ள அரசர் என்று இருப்பதை, கல்வி அறிவு உள்ள மேலோர் என்றும் கொள்ளலாம். மேலோரிடத்திலே தன்னிடம் உள்ளதை இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுகின்ற நல்ல குணமும் அன்பும் முதலான நல்ல குணங்கள் பொருந்தி இருக்கும். அவ்வாறு இருக்கவே, அவரைச் சேர்ந்தோர்க்கும் நன்மை உண்டாகும்.

     அல்லாத அற்பர்கள் யாருக்கும் பயன்பட மாட்டார்கள்.  எனவே, அவரைச் சேர்ந்தோர் வாழ்வு பெறுவது அரிது அரிது என்று அடுக்கிச் சொல்லபட்டது.  அரிது என்பது இன்மைப் பொருட்கண் வந்தது. "மற்று ஆதல் அரிது" என்னும் திருக்குறள் சொல்லுக்கு, பரிமேலழகர் வகுத்த உரையில், "ஒருகாலத்தும் ஆதல் இல்லை" எனப்பட்டது காண்க.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...