திருத்தணிகை - 0281. கொந்துவார் குரவடி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொந்துவார் குரவடி (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உனது அளவற்ற கருணையை ஒருபோதும் மறவேன்

தந்து தானன தனதன தனதன
     தந்து தானன தனதன தனதன
          தந்து தானன தனதன தனதன ...... தனதான


கொந்து வார்குர வடியினு மடியவர்
     சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
          கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா

கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
     செந்தில் காவல தணிகையி லிணையிலி
          கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
     சந்தி யாதது தனதென வருமொரு
          சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்

சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
     கிண்கி ணீமுக விதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே

சிந்து வாரமு மிதழியு மிளநவ
     சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
          செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே
  
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
     சந்த னாடவி யினுமுறை குறமகள்
          செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
     குங்கு மாசல யுகளமு மதுரித
          இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம

இந்த்ர கோபமு மரகத வடிவமு
     மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
          மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொந்து வார் குரவு அடியினும், அடியவர்
     சிந்தை வாரிஜ நடுவினும், நெறிபல
          கொண்ட வேத நல் முடியினும் மருவிய ....குருநாதா!

கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக!
     செந்தில் காவல! தணிகையில் இணைஇலி,
          கொந்து கா என மொழி தர வரு சமய ...... விரோத

தந்த்ர வாதிகள் பெற அரியது, பிறர்
     சந்தியாதது, தனது என வரும் ஒரு
          சம்ப்ரதாயமும் இது என உரைசெய்து, ...... விரைநீபச்

சஞ்ச ரீகரி கரம் முரல் தமனிய
     கிண்கி ணீ முக வித பதயுக மலர்
          தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...... மறவேனே.

சிந்து ஆரமும் இதழியும், ள நவ
     சந்த்ர ரேகையும் அரவமும் அணிதரு
          செஞ்சடாதரர் திருமகவு எனவரு ...... முருகோனே!

செண்பக அடவியினும் இதணினும் உயர்
     சந்தன அடவியினும் உறை குறமகள்
          செம்பொன் நூபுர கமலமும், வளைஅணி ......புதுவேயும்,

இந்து வாள் முக வனசமும், ம்ருகமத
     குங்கும அசல யுகளமும், துரித
          இந்தள அம்ருத வசனமும், முறுவலும், ...... அபிராம

இந்த்ர கோபமும், மரகத வடிவமும்,
     இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரும்
          இந்த்ர நீலமும் மடல்இடை எழுதிய ...... பெருமாளே.


பதவுரை

      சிந்து ஆரமும் இதழியும் --- நீரையும், ஆத்திமலரையும்,  கொன்ற மலரையும்.

     இள நவ சந்த்ர ரேகையும் --- இளமையும் புதுமையும் உடைய பிறைச் சந்திரனையும்,

     அரவமும் --- பாம்பையும்.

     அணி தரு செம் சடாதரர் --- தரித்துள்ள சிவந்த சடையை உடைய சிவபெருமானுடைய,

     திருமகவு எனவரும் --- அழகிய குழந்தை என அவதரித்த,

     முருகோனே --- முருகக் கடவுளே!

       செண்பக அடவியினும் --- செண்பகத்தருக்கள் நிறைந்த வனத்திலும்.

     இதணிலும் --- பரண் மீதிலும்,

     உயர் சந்தன அடவியிலும் --- உயர்ந்த சந்தனமரங்கள் மிகுந்த வனத்திலும்.

     உறை குறமகள் --- வாசம் பண்ணுகின்ற வள்ளியம்மையாருடைய,

     செம்பொன் நூபுர கமலமும் --- சிவந்த பொன்னாலாகிய சிலம்பை அணிந்திருக்கின்ற தாமரை போன்ற திருவடிகளையும்,

     வளையணி புதுவேயும் --- வளையல்களை அணிந்துள்ள புதிய மூங்கிலைப் போன்ற கரங்களையும்,

     இந்து வாள் முக வனசமும் --- சந்திரனையொத்த ஒளிமிக்க திருமுகத் தாமரையும்,

     ம்ருகமத குங்கும அசல யுகளமும் --- கஸ்தூரியும் குங்குமப் பூவுந் தரித்துள்ள இரண்டு தனபாரங்களையுயம்,

     மதுரித இந்தள அம்ருத வசனமும் --- இனிமை வாய்ந்த யாழ் போலவும், அமிர்தம் போலவும் தித்திக்கின்ற வசனத்தையும்,

     முறுவலும் --- இள நகையையும்,

     அபிராம இந்த்ர கோபமும் --- அழகிய சிவந்த அதரத்தையும்,

     மரகத வடிவமும் --- மரகதம் போன்ற பச்சை வடிவத்தையும்,

     இந்த்ர சாபமும் --- வானவில் போன்ற புருவங்களையும்,

     இருகுழையோடு பொரும் இந்த்ர நீலமும் --- இரண்டு குழைகளோடு போர் செய்வது போல் நீண்ட நீலமணியனைய கண்களையும்,

     மடல் இடை எழுதிய --- மடற்பரியில் எழுதிய,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      கொந்துவார் குரவு அடியினும் --- பூம்கொத்துகளுடன் நீண்டுள்ள குராமரத்து அடியிலும்,

     அடியவர் சிந்தை வாரிச நடுவினும் --- அடியார்களுடைய இதய தாமரையிடையிலும்,

     நெறிபல கொண்ட வேத நல் முடிவிலும் மருவிய --- நெறிகளைக் கொண்ட மறைகளில் நல்ல முடிவிலும் விளங்குகின்ற,

     குருநாத --- குருநாதரே!

      கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக --- கொங்கு நாட்டில் அழகுபெற்ற பழநியம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகக் கடவுளே!

      செந்தில் காவல --- திருச்செந்தூரில் விளங்குகின்ற காப்பதில் வல்லவரே!

      தணியையில் இணையிலி --- திருத்தணியில் மேவுகின்ற இணையில்லாதவரே!

      கொந்து கா என மொழி தர வரு --- கூட்டமாகத் திரண்டு “கா” என்று கதறிய வண்ணமாகத் தருக்கித்துக் கொண்டு வருகின்ற,

     சமய விரோத தந்த்ர வாதிகள் பெற அரியது --- அநேக யுக்திகளைக் கொண்டு விரோதிக்கின்ற சமயவாதிகளால் பெறுதற்கு அரியதும்,

     பிறர் சந்தியாதது --- அன்னியர்கள் சந்திக்க முடியாததும்,

     தனது என வரும் ஒரு சம்ப்ரதாயமும் இது என உரைசெய்து --- தனக்கே உரியதாகிய ஒப்பற்ற பரம்பரையாக வரும் பொருள் இது என்று அடியேனுக்கு உபதேசித்து,

     விரை நீப --- வாசனை பொருந்திய கடப்பமலர் மாலை புனைந்ததும்,

     சஞ்சரீகரிகரம் முரல் --- வண்டுகள் ஒலிப்பதும்,

     தமனிய கிண்கிணீ முக --- பொன்னாலாகிய கிண் கிணிகளைத் தரித்திருப்பதும்,

     இத --- இதத்தைச் செய்வதுமாகிய,

     பத யுகமலர் தந்த --- இரு திருவடித் தாமரைகளைத் தந்த,

     பேரருள் கனவிலும் நனவிலும் --- தேவரீருடைய பெரிய அருளை அடியேன் கனவிலும் நனவிலும்,

     மறவேனே --- மறக்க மாட்டேன்.

பொழிப்புரை


         கங்கா நதியையும், ஆத்தி மலரையும், கொன்றை மலரையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச் சந்திரனையும். பாம்பையும் அணிந்துள்ள சிவந்த சடைமுடியுடைய சிவ பெருமானது திருக்குமாரராக வந்த முருகப் பெருமானே!

     செண்பகவனத்திலும், தினைப்புனத்தில் அமைத்த பரண் மீதிலும், உயர்ந்த சந்தன வனத்திலும் உறைகின்ற வள்ளியம்மையாரது சிவந்த பொற்சிலம்பு புனைந்த பாதமலரையும், வளையல் அணிந்த மூங்கில் போன்ற கரங்களையும், சந்திரனையொத்த ஒளி மிகுந்த திருமுகத் தாமரையும், கஸ்தூரியையும், குங்குமப் பூவையும், தரித்துள்ள மலைபோன்ற இரண்டு தன பாரங்களையும், இனிமையான யாழ் போன்ற அமிர்த வசனத்தையும், இளம் புன்னகையையும், அழகிய சிவந்த அதரத்தையும், மரகத நிறமுடைய உருவத்தையும் வானவில் போன்ற புருவங்களையும் இரண்டு குழைகளுடன் போர் செய்யச் செல்லுவது போல் நீண்ட நீலமணியொத்த கண்களையும், மடல் குதிரையில் எழுதிய பெருமிதம் உடையவரே!

         பூங்கொத்துக்கள் நிறைந்த நீண்ட குரா மர அடியிலும், அடியார்களுடைய இதய தாமரையிலும், பல நெறிகளைக் கூறுகின்ற வேத முடிவிலும், விளங்குகின்ற குருநாதரே!

     கொங்கு நாட்டில் அழகுடன் திகழும் பழநி மலையில் வாழும் ஆறுமுகக் கடிவுளே!

     திருச்செந்திலம்பதியில் வீற்றிருக்கும் காப்பதில் வல்லவரே!

     திருத்தணிகையில் எழுந்தருளியுள்ள இணையில்லாதவரே!

     கூட்டமாகத் திரண்டு “கா” என்று கதறிக் கொண்டு தருக்கம் புரிந்து விரோதித்து யுக்தி வாதங்கள் பேசும் சமயவாதிகளால் பெறுவதற்கு அரியதும், அன்னியர்கள் அணுக முடியாததும், பரம்பரையாகத் தனக்கே உரியதாக வருவதுமாகிய உண்மைப் பொருள் இது என்று அடியேனுக்கு உபதேசித்து, ஒலியும், பொன்னாலாகிய கிண்கிணிகளும் விளங்க, உயிர்களுக்கு இதத்தைச் செய்யும் திருவடிகளைத் தந்த தேவரீரது பெரிய திருவருளை அடியேன் கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன்.


விரிவுரை


கொந்துவார் குரவு அடியினும் ---

கொந்து-பூங்கொத்து; வார்-நீளம். குரவு என்பது ஒரு மரம், குராமரத்தின் அடியில் முருகப் பெருமான் எழுந்தருளி யிருப்பர். திருவிடைக்கழி என்ற தலத்தில் முருகவேள் குராமரத்தின் கீழ் விளங்குகின்றார் என்பதை அத்தலத் திருப்புகழால் அறிக.

செழுமலர்ப் பொழிற் குரவமுற்றபொன்
     திருவிடைக்கழிப் பெருமாளே”                    --- (பகருமுத்) திருப்புகழ்.

திருக்குராவடி நிழல்தனி லுறைவோனே
     திருக்கை வேல்வடிவு அழகிய பெருமாளே”     --- (மருக்குலா) திருப்புகழ்.

பழநியம்பதியில் இடும்பனுக்கு அருள் புரிந்த மூர்த்தி குரா அடிவேலர் எனப்படுவார்.

குராமலர் முருகனுக்கு உகந்த மலர் ஆகும், அடியிற் கண்ட அமுத வாக்குகளால் இதனை அறிக.

விழைவு குராப்புனை யுங்குமாரா”      --- (விரகற) திருப்புகழ்

குராப்புனை தண்டையந் தாள் தொழல்வேண்டும்”  --- கந்தர் அலங்காரம்.

அடவியில் விளவு தளவளர் துளவு குராமகிழ்
   கோடல் பாடல்அளிமுரல் செச்சை
     அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன --- புய வகுப்பு


அடியவர் சிந்தை வாரிச நடுவினும் ---

வாரி-தண்ணீர். ஜம்-பிறப்பு; தண்ணீரில் பிறப்பதனால் தாமரைக்கு வாரிஜம் என்று ஒரு பேருண்டு. இடையறாது நினைந்து நினைந்து உருகும் அடியவர் உள்ளக்கமலமிசை இறைனவன் எழுந்தருளியிருப்பன்.

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும்எனது
    இதயமும் மணக்கும்இரு பாதச்சரோருகனும்”    --- வேடிச்சி காவலன் வகுப்பு

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
    மரகத மயூரப்  பெருமான் காண்”                --- (திருமகளுலாவு) திருப்புகழ்.

துரியநிலையே கண்ட முத்தர் இதயா கமலம்
     அதனில் விளையா நின்ற புத்தமிர்த போதசுக
         சுயபடிக மாஇன்ப பத்மபதம்”               --- (சுருதிமுடி) திருப்புகழ்.

நெறிபல கொண்ட வேத நல் முடிவினும் ---

வேதத்தில் கர்ம நெறி, பக்தி நெறி, யோக நெறி, ஞான நெறி, முதலிய பல நெறிகள் கூறப்படுகின்றன. ஒரு பெரிய ஊர், பெரிய மாளிகை என்றால் பல வழிகள் இருப்பது இயற்கை. ஆகவே முத்தி வீட்டிற்குச் செல்லும் நெறிகளும் பல. “சேதாமபலதுறை” என்று கந்தரந்தாதியிலும் அடிகள் கூறி அருளினார். ஏன்? ஒரு நெறியிருந்தால் என்ன? என்ற வினா எழும். ஒரு பெரிய கலாசாலையில் வகுப்பு ஒன்றாக இருக்கலாமோ? பல வகுப்புகள் இருக்க வேண்டும். ஏன்? மாணவர்களது அறிவின் பரிபக்குவத்துக்குத் தக்கவாறு நெறிகளும் பல இருத்தல் வேண்டும். வேதம் என்பது அறிவுநூல் எனப்படும், “வித்” என்ற பகுதியடியாக அச்சொல் பிறந்தது.

வேத முடிவு உபநிஷதம். வேத முடிவில் விளங்கும் பரம் பொருள் வெற்றிவேற்பரமன் என்க.

கொங்கில் ஏர் தரு  பழநி ---

பழநி கொங்கு நாட்டின் திலகமாக விளங்குவது கொங்கு-வாசனை, ஞானமனங் கமழ்கின்ற நாட்டில் ஞான பண்டிதன் எழுந்தருளியிருக்கின்றனன். காசியின் மீறியது பழநியம்பதி. இகபர நலன்களை எளிதில் தரவல்ல தலம் அது. என்றும் ஒன்றுபோல் அடியார்கள் திரளாக வந்து வழிபட்டு வரம் பெறுவர்.

செந்தில் காவல ---

திருச்செந்தூர் முருகவேள் சூரசங்காரத்தின் பொருட்டுச் சென்று வீரவாகு தேவரைத் தூது அனுப்பி விட்டுத் தங்கியிருந்த திருத்தலம். கடற்கரையில் இயற்கையழகு கொலு வீற்றிருப்பது போல் கண்டார்களது கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாய் விளங்குகின்றது.

கடலைக் கடப்பதற்கு இன்றியமையாத கருவியாக இருப்பது தோணி; பிறவிப் பெருங்கடலில் விழுந்து கரை காணாது கலங்கி நிற்கின்ற ஆன்மகோடிகளுக்கு முருகவேளுடைய திருவடியே சிறந்த தோணி (புணை) யாகும். தோணியப்பருடைய புதல்வர் அன்றோ அவர். அவருடைய திருவடி பிறவிக் கடலுக்குப் புணையென்பதை அடிகள் சீர்பாத வகுப்பில் உரைத்தருளினார்.

உறவு முறை மனைவிமகவு எனும்அலையில் எனதுஇதய
  உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும் உறுபுணையும்”     --- சீர்பாதவகுப்பு.

தன்னைச் சிந்திக்கும் அடியவர்களைத் தமது திருவடியாகிய ஓடத்தைக் கொண்டு பிறவிப் பெருங்கடலை கடக்குமாறு செய்து முத்திக் கரை சேர்த்து அருளுவதனால் அப்பரம பதியை “ஓடக்காரன்” என்றும் அடிகள் அறிவிக்கின்றனர்.

யாது நிலைஅற்று அலையும் ஏழுபிறவிக்கடலை
   ஏறவிடும் நற்கருணை ஓடக்காரனும்”      --- திருவேளைக்காரன் வகுப்பு

எனவே பிறவிப் பெருங்கடலைக் கடக்க எண்ணும் அடியவர்கள் முருகவேளுடைய திருவடியாகிய ஓடத்தில்ஏறுவதற்கு ஒரு துறைமுகம் வேண்டும் அல்லவா? அத்துறைமுகந்தான் திருச்செந்தூர் என்று அறிக.

செந்திலம்பதியாகிய கடற்கரையில் வந்து கந்தவேளாகிய எனது சந்நிதியை அடைந்த மாத்திரத்திலேயே அடியவர்களைப் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வைப்பேன்” என்ற குறிப்பை யுணர்த்தும் பொருட்டே ஆறுமுகப் பரமன் “அலைவாய்” என்ற அந்த அரிய தலத்தில் இடையறாது இனிது வீற்றிருக்கின்றான். இதனை ஆதிசங்கரரும் உரைக்கின்றனர்.

யதா சந்நிதானம் கதாமாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்சயன் சிந்து தீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.      --- சுப்பிரமணியபுஜங்கம்

பெருவேலை ஓரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கோர் உயிர்செம்பொன் அடிபற்று வோமே.
                                    (திரு. கு. நடேசக்கவுண்டர் P.O.L.. மொழிபெயர்ப்பு)

காவலன்-காப்பதிலே வல்லவன் தொழுது-வழிபடு மடியர் காவற்காரப் பெருமாள் ஆதலின் "செந்தில்காவல" என்று கூறியருளினார்.

திருத்தணிகை மிகச் சிறந்த திருத்தலம்.. வள்ளியம்மையாரைத் திருமணம் புரியும் பொருட்டு இறைவன் வந்து தங்கியிருந்த அருமையுடையது.

புவிக்கு உயிராகிய தணிமலை” என்று அடிகளார் புகல்கின்றனர். வந்து வழிபடும் அடியவர் வினைகளைத் தணியச் செய்யவல்ல மகிமையுடைய திருத்தலம் ஆதலின் இது தணிகை எனப்பெற்றது.

அடிகளார் இத்திருப்புகழில் மூன்று தலங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பழநி, செந்தில், தணிகை என்பன.

மனிதனுடைய உடம்பில் எழுபத்தீராயிரம் நரம்புகள் இருக்கின்றன. அவற்றுள் சிறந்தவை பத்து நாடிகள். அவற்றுள் சிறந்தவை மூன்று நாடிகள்; இடை, பிங்கலை, சுழுமுனை என்பன என்று அறிக. இவைகளை சூரிய நாடி, சந்திர நாடி, அக்கினி நாடிகளாகும். இந்த உலகிற்கு இடாநாடி தணிகை; சுழுமுனை நாடி பழநி; பிங்கலை நாடி செந்தில் ஆகும்.

இடை பிங்கலையில் செல்லும் பிராணவாயுவை யோக நெறியினால் மறித்து சுழுமுனை வழியாகச் செலுத்துபவர் யோகிகள். சுழுமுனை நாடித்தலம் பழநியாதலின் அது யோகத்தலம் என உணர்க.

கொந்துகாவென.........தந்த்ரவாதிகள் பெற அரியது ---

சமய வாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கதறிப் பதறி கலகமிடுவார்கள். அவர்கள் உண்மைப் பொருளை உணராதொழிவர்.

ஆதலினால் விபரீதத்தை விளைவிக்கும் சமய கலைகளும் போதும் போதும் என்று அடிகள் பிறிதொரு பாடலில் கூறுகின்றனர்.

விபரித சமய கலைகளும் அலம்அலம்”    --- (அருவமிடை) திருப்புகழ்

அலம்-போதும்.


பிறர் சந்தியாதது ---

அன்பு நெறியினை அறியாதவர்களைப் பிறர் என்று சுருக்கமாகக் கூறிய அழகு மிகவும் சிறப்புடையது. சிவநெறியே தவநெறியாகும். அத்தெய்வ நெறியே உய்யு நெறியென உணராதார் பிறர் எனப்படுவர். அவர்கள் இத்திருவளர் விளக்கத்தை ஒரு போதும் அணுக இயலாதவர்களாகின்றனர். இவர்களையே மணிவாசகர் “முத்திநெறி யறியாத மூர்க்கர்” என்று மொழிகின்றனர்.

தனது எனவரும் ஒரு சம்ப்ரதாயம் ---

சிவநெறிக்கே உரியதாகிய தகைமை; வேறு ஒன்றானும் பொருந்த முடியாதது. அத்தகைமை வழிவழியாக வருவது சந்தானம் என்பர். அதுவே சம்ப்ரதாயம் எனப்படுவது. இந்த பரம்பரையைத் தான் வடலூர் இராமலிங்க அடிகள் “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபு” என்று இயம்புகின்றனர்.

தங்கள்ஆணவமாயை கருமண,
     லங்கள் போய்உப தேச குருபர
     சம்ப்ர தாயமொடு ஏயும் நெறியது பெறுவேனோ? --- (ஐந்து பூதமு) திருப்புகழ்.

இது என உரைசெய்து ---

அருணகிரிப் பெருமானுக்கு அறுமுகப் பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி இதுதான் உண்மைப் பொருள் என்று விளக்கமாக உபதேசித்தருளினார். சுவாமிமலைத் திருப்புகழில் அடிகளார் முருகவேளை நோக்கி, “இதுதான் உண்மைப் பொருள் என்று அடிமைக்கு உபதேசிக்க வேண்டும்” என்று முறையிட்டனர்.

கருதி யொரு பரம்பொருள் ஈது என்று என்
   செவியிணையின் அருளி உருவாகி வந்த என்
      கருவினையொடு அருமலமும் நீறுகண்டு”      --- (ஒருவரையும்) திருப்புகழ்.

அதுபடியே கருதுவார் கருத்தறிந்து முடிக்குங் கந்தவேள் அடிகளுக்கு உபதேசித்தருளினார்.

பத யுக மலர் தந்த பேரருள் கனவிலும் நனவிலும் மறவேனே ---

அருணகிரிநாதருக்கு ஆறுமுகக் கடவுள் வயலூர் என்னுந் திருத்தலத்திலே மயில்மீது காட்சி தந்து பாதக மலத்தைத் தீர்க்கும் பாத கமலத்தைத் தந்தருளினார்.

வயலி நகரியில் அருள் பெறல் மயிமிசை
   உதவு பரிமள மதுகர வெகுவித
     வனச மலரடி கனவிலும் நனவிலும் மறவேனே”    --- (குருவுமடியவ) திருப்புகழ்.

முருகவேள் திருவடி தேவருக்கும் மூவருக்கும் மற்ற யாவருக்கும் எட்டாதது. அத்தகைய அருட்பாதம் அருணகிரியாருக்கு எளிதில் கிடைத்தது.

அரிய பிரம ரளப்பரிய பதக்கமலம்”              --- (குறிப்பரிய) திருப்புகழ்.

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள்
     துகள்இல் இருடி எழுபேர்கள் ...... சுடர்மூவர்

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
     தொலைவில் உடுவின் உலகோர்கள் ...... மறையோர்கள்

அரிய சமயம் ஒருகோடி அமரர் சரணர் சதகோடி
     அரியுமு அயனும் ஒருகோடி ...... இவர்கூடி

அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்
     அறிவுள் அறியும் அறிவுஊற ...... அருள்வாயே...          --- திருப்புகழ்

அண்டத்து இறைவன் பொன்முடிக்கும்
     அமலக்கமலன் மணிமுடிக்கும்
அமரர்முனிவர் தலைகளுக்கும்
அணியப் பணியக் கிடைக்காத
   தண்டைப் பதம்...                                    --- திருமலை பிள்ளைத் தமிழ்

மறவாமையே பிறவாமைக்கு ஏதுவாகும். ஆதலினால்தான் இறைவன்பால் ஆன்றோர்கள் மறவாத வரத்தை வற்புறுத்தி வேண்டுகின்றார்கள். “உன்னை என்று மறவாமை வேண்டும்” என்றும் காரைக்காலம்மையாரும், “மறக்கு மாறிலாத” என்று திருஞானசம்பந்தரும், “தினைத்துணைப் பொழுதும் மறந்துய்வேனோ? என்று அப்பரும், “எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை” என்று சுந்தரரும், “உனதடியிணை என துயிருதவி எனவுனை நினைவது மொழிவது மறவேனே” என்று அருணகிரியாரும், “இணையடிகள் மறவாத மனமொன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும்” என்று இராமலிங்க அடிகளும் கூறியருளிய ஒருமைப்பாட்டை உன்னுக.

மறத்தல் இறத்தலுக்குச் சமானமாகும்; நினைத்தல் பிறத்தலுக்குச் சமானமாகும்.

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பு ஆகும், மனம் அது ஒன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பு ஆகும், இப் பேய்ப்பிறவி
இறக்கின்ற எல்லைக்கு அளவில்லையே, இந்தச் சன்ம அல்லல்
துறக்கின்ற நாள் எந்த நாள், பரமே, நின் தொழும்பனுக்கே.   --- தாயுமானார்.

எனவே மறத்தலும் நினைத்தலும் இறப்பு பிறப்பு ஆகும். ஒரு நாளைக்கு நாம் பலமுறை மறப்பது நினைப்பதுமாக இருக்கின்றோமாதலின் இறந்து இறந்து பிறக்கின்றோம். கணந்தோறும் இறக்கின்றோம்; கணந்தோறும் பிறக்கின்றோம். என்னே கொடுமை? இந்த இறப்பு பிறப்பு நீங்க வேண்டுமாயின் நினைத்தலையும் மறத்தலையும் நீக்கவேண்டும். இதனையே அநுபூதி,

கருதா மறவா நெறிகாண் எனக்கு
   இருதாள் வனசம் தரஎன்று இசைவாய்”

என்று உபதேசிக்கின்றது.

ஆனபடியால் ஆண்டவனுடைய திருவருளைக் கனவிலும் நனவிலும் மறவேன் என்று அடிகள் இத்திருப்புகழில் உறுதி பெற அறுதியிட்டுரைக்கின்றனர்.


மடலிடை எழுதிய பெருமாளே ---

மணம் இரண்டு வகைப்படும். ஒன்று களவு. மற்றொன்று கற்பு. பண்டைக்காலத்தில் களவு மணம் நிகழ்ந்தபின் கற்பு மணம் நிகழும். தமிழ்க் கடவுளாகிய முருகவேள் இந்த இருமணங்களுக்கு இலக்கியமாகவே கற்பு நெறியினாலே தெய்வயானை- யம்மையாரையும், களவு நெறியிலே வள்ளியம்மையாரையும் மணஞ்செய்து கொண்டருள் புரிந்தனர்.

களவு என்பது பிறர்க்குரிய பொருளை வௌவுதல் போன்றது அன்று. ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் ஊழ்கூட்டத்தனியிடத்திற் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒருமைப்பட்டு அன்பு வெள்ளத்தில் திளைத்துப் புணர்தலேயாகும். வேதத்தை மறையொன்றாற் போல இம்மணத்தை களவு என்று கூறுவர்.

களவு எனப்படுவது யாதுஎன வினவின்,
வலைகெழு முன்கை வளங்கெழு கூந்தலு
முனைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைவுஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடமென வேறுமலைச் சாரல்
மானிளம் குழவியொடு கடிந்து விளையாடும்
ஆயமும் தோழியும் மருவி நன்கறியா
மாயப் புணர்ச்சி மென்மனார் புலவர்.

இக்களவு மணத்தைக் காந்தர்வ மணம் என்றுங் கூறப்படும்.

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
  துறையமை நல்லயாழ்த் துணைமையோ ரியல்பே”

என்று தொல்காப்பிய சூத்திரத்தினால் அறிக.

இனி மேற்கண்ட சூத்திரத்துள் மன்றல் எட்டு எனப்பட்டதால், அந்த எட்டு மணத்தின் தன்மையையும் சிறிது விளக்குவாம்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று மணம் எட்டாகப் பேசப் படுகின்றது. இவற்றுள்;

1. பிரமம்; ஒத்த கோத்திரத்தவனாய் நாற்பத்தியெட்டு யாண்டு இளமையில் கழித்த (பிரமசரியவிரத மிருந்த) ஒருவனுக்குப் பன்னிரண்டு யாண்டுடையவளாய்ப் பூப்பு எய்திய ஒருத்தியைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தா முன் அணிகலன் அணிப்பித்து தானமாகக் கொடுப்பது.

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
   ஆறினில் கழிப்பிய அறம் நவில் கொள்கை”        --- திருமுருகாற்றுப்படை

2. பிரசாபத்தியம்; உரிய கோத்திரம் உடைய தலைமகனை அழைத்து அவனுக்குரியார் தந்த பரிசத்திற்கு இரட்டி தம்மகட்குத் தந்து தீ முன் மணஞ்செய்து தருவது.

3. ஆரிடம்; தாம் புரியும் வேள்வியாதி கருமங்களின் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு, பசு எருது இவைகளைப் பெற்றுக்கொண்டு மகளை மணஞ்செய்து தருவது.

4. தெய்வம்; வேள்வியில் வந்த கன்னியைத் தக்க தலைமகனுக்குத் தருவது; அல்லது தம் மகளை வேள்விவேட்பித்துத் தரும் ஆசானுக்குத் தக்கணையாகத் தருவது.

5. ஆசுரம்; கொல் ஏறு கோடல், திரி பன்றி யெய்தல், வில்லேற்றுதல் செய்து வீரத்தால் மிக்க ஒருவனுக்கு மகளைத் தருதல். இவைகளில் கொல் ஏறு தழுவுதல் என்பது முரட்டு எருதை வீரத்தால் அடக்குதல்; இது ஆயர்க்குரியது. மற்ற இரண்டும் அரசர்க்குரியது.

6. இராக்கதம்; பெண் வீட்டாரிடம் தனது வலிமையைக் காட்டி அவர்கள் இணங்காதிருப்பினும் போராடி தலை மகளை வலிதிற் கொள்வது. (இது அரசர்க்கு உரியது).

7. பைசாசம்; துயில்பவளை சென்று கூடுதல் பிசாச மணமாகும். இனி வயதில் மூத்தவளைப் புணர்தலும், இழிந்தவளைப் புணர்தலும் இதன் இனமாகும்.

8.    காந்தர்வம்; கொடுப்பாரும் கேட்பாருமின்றி ஒத்த ஆணும் ஒத்த பெண்ணும் பண்டை ஊழ் கூட்ட தனியிடத்தில் சந்தித்து உள்ளமும் உணர்வும் ஒன்றக் கூடுவது ஆகும். இந்த காந்தர்வ மணம் மிகவும் இனிமையானது என்க. அன்பின் பெருக்கினால் நிகழ்வது.

தான் களவொழுக்கத்தினால் எய்திய தலைவியை, இடையில் எய்துதற்குக் காவல் முதலிய தடைகள் நேர்ந்தபோது தலைவன் பெரிதும் வருந்துவன் தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறி வேண்டுவான் அவள் உள்ளம் இரங்கித் தலைவியைக் கூட்டி வைப்பாள். ஒருக்கால் அவ்வாறு செய்திலளாயின், இறுதியாக மடலேறியாவது விரும்பிய கரும்பனைய காரிகையையடைய முயலும்.

காமம்உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.                ---- திருக்குறள்.

மடல் ஏறுதலாவது ---

காதலியைப் பெற விரும்பிய காதலன், அவளது உருவத்தையும், பெயரையும், ஒரு படத்தில் எழுதி, தன் ஊரையும் பேரையும் அதன் மேல் எழுதி, அப்படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, எருக்கம்பூ மாலையைச் சூடிக்கொண்டு, பழுத்த இலைகளைத் தலையில் சூடி, வாள் போல் கூர்மையாகவுள்ள பனை மடலாற குதிரைபோல் கட்டி அதன் மீது ஊர்ந்து காதலியின் ஊர்நடுவிற் சென்று, நாற் சந்தியில் நின்று, ஒன்றும் பேசாமல்; பிறர் வசைக்கும் கூசாமல், படத்தில் எழுதிய உருவையே நோக்கி, பகலிரவெனாது உறுதியுடன் நிற்பன். அவனது காதலின் உறுதியைக்கண்ட காதலியின் உறவினர், உழுவலன்புடைய அவனுக்குத் தமது திருமகளை மணஞ்செய்து தருவர்.


ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே.
                             --- தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல்.

காய்சின வேல்அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுஉள்ள மீன் இழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து, ஓர் கிழிபிடித்து,
பாய்சின மாஎன ஏறுவர், சீறூர்ப் பனைமடலே,         --- திருக்கோவையார்.

வாமத்து உமைமகிழ் வெங்கைபுரேசர் மணிவரைமேல்
தாமக்குவிமென் முலைமட்டுவார்குழற் றையல்நல்வாய்
நாமக்கடலைக் கலம் இவர்ந்தேறுவர் நானிலத்தோர்
காமக்கடலை மடல்மா இவர்ந்து கடப்பர்களே.     --- திருவெங்கைக்கோவை.

மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிழுகிழ் எருக்கம் கண்ணியுஞ் சூடுப;
மறுகி னார்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமங்காழ்க் கொளினே.   --- குறுந்தொகை

எனவே முருகவேள் வள்ளியம்மையாரைக் களவு ஒழுக்கத்தினால் அடைந்து, இடையே தடை யெய்தியதாகக் கொண்டு, தோழியிடம் போய் மடலேறுவேன் என்று கூறியருளிய திருவிளையாடல் கந்தபுராணத்துள் வருமாறு காண்க.

தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
கூட்டிடா யெனில் கிழிதனில் ஆங்கவன் கோலம்
தீட்டி மாமடல் ஏறிநும் ஊர்தெரு வதனில்
ஓட்டுவேன் இது நாளையான் செய்வதென் றுரைத்தான்.

இந்தளம் ---    

இந்தளம் என்பது ஒருவகை யாழ்.

இந்த்ரகோபம் ---  

இது ஒரு சிவந்த பூச்சி. இது அதரத்திற்கு உவமையாகப் பேசப்படும்.

இந்த்ர சாபம் --- 

இது வானவில். புருவங்களுக்கு உவமை.

இந்த்ர நீலம் --- 

இந்திர நீலம் என்பது நீலமணி. இது கண்ணிற்கு உவமை.

உவமையாகு பெயராக இம்மூன்றும் முறையே பெண்களின் அதரத்தையும் புருவத்தையும் விழியையும் தெரிவிக்கின்றன.

கருத்துரை

சிவகுமாரரே! வள்ளி மணவாளரே! குருநாதரே! ஒருவரும் உணராத உண்மைப் பொருளை உபதேசித்து திருவடியைத் தந்த அளவற்ற கருணையை ஒருபோதும் மறக்க மாட்டேன்.











No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...