அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கூர்வேல் பழித்த
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
மாதர் மயக்கம் அற அருள்
தானா
தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
கூர்வேல்
பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல ...... ரணைமீதே
கோபா
விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்
கார்போல்
குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங்
காமா
மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக ...... மொழியாதோ
வீரா
ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் ...... கடல்போல
வீறாய்
முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி ...... லுறைவோனே
மாரோ
னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் ...... குருநாதா
மாலோ
னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கூர்வேல்
பழித்த விழியாலே மருட்டி, முலை
கோடால் அழைத்து, மலர் ...... அணைமீதே,
கோபா
இதழ்ப் பருக, மார்போடு அணைத்து, கணை
கோல்போல் சுழற்றி, இடை ...... உடைநாணக்
கார்போல்
குழல் சரியவே, வாய் அதட்டி, இரு
காதோலை இற்றுவிழ ...... விளையாடும்,
காமா
மயர்க்கியர்கள் ஊடே களித்து, நம
கான் ஊர் உறைக் கலகம் ...... ஒழியாதோ?
வீராணம்
வெற்றி முரசோடே, தவில் திமிலை
வேத ஆகமத்து ஒலிகள், ...... கடல்போல
வீறாய்
முழக்க வரு சூரார், இறக்க விடும்
வேலா! திருத்தணியில் ...... உறைவோனே!
மாபோன்
இறக்க நகை தாதா திருச்செவியில்
மா போதகத்தை அருள் ...... குருநாதா!
மாலோன்
அளித்த வளியார் மால் களிப்ப, வெகு
மாலோடு அணைத்து மகிழ் ...... பெருமாளே.
பதவுரை
வீராணம் --- வீராணம் என்ற வாத்தியம்,
வெற்றி முரசொடு --- வெற்றி முரசுடன்,
தவில் --- தவில் வாத்தியம்,
திமிலை --- திமிலை என்ற பறை,
வேத ஆகமத்து ஒலிகள் --- வேதம் ஆகமம் இவற்றின்
ஒலிகள்;
கடல் போலே --- இந்த எல்லா ஒலிகளும் சேர்ந்து
கடல் போல,
வீறு ஆய் முழக்க வரு --- மிகச்சிறப்பாக
முழக்கிக்கொண்டு எதிர்த்து வந்த,
சூரார் இறக்க விடும் --- சூரர்கள் இறக்குமாறு
செலுத்திய,
வேலா --- வேலாயுதக் கடவுளே!
திருத்தணியில் உறைவோனே ---
திருத்தணிமலையில் உறைகின்றவரே!
மாரோன் இறக்க நகை --- மன்மதன்
இறக்கும்படி சிரித்த,
தாதா திரு செவியில் --- தந்தையாகிய
சிவபெருமானுடைய திருச்செவியில்,
மா போதகத்தை அருள் --- சிறந்த ஞானோபதேசத்தை
அருளிய,
குருநாதா --- குருநாதரே!
மாலோன் அளித்த --- திருமால் பெற்ற,
வள்ளியார் --- வள்ளியம்மையார்,
மால் களிப்ப --- அன்புடன் மகிழ,
வெகுமாலோடு அணைத்து மகிழ் --- மிகுந்த
அன்புடன் தழுவி மகிழ்கின்ற,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
கூர்வேல் பழித்த விழியாலே மருட்டி ---
கூரிய வேலாயுதத்தைப் பழித்த கண்களினாலே மயக்குவித்து,
முலை கோடால் அழைத்து --- தனமாகிய மலையினால்
வரவழைத்து,
மலர் அணை மீதே --- மலர்ப்படுக்கையின் மீது,
கோபா இதழ் பருக --- இந்திர கோபம் என்ற
தம்பலப் பூச்சியைப் போல் சிவந்துள்ள அதரத்தைப் பருகும்படி,
மார்போடு அணைத்து --- மார்புடன் சேர்த்துத்
தழுவி,
கணை கோல் போல் சுழற்றி --- கண்களை அம்புபோல்
சுழற்றி,
இடை உடை நாண --- இடையில் உள்ள ஆடை நெகிழவும்,
கார்போல் குழல் சரியவே --- மேகம் போன்ற கரிய
கூந்தல் சரியவும்,
வாய் அதட்டி --- வாய் அதட்டும் சொற்களைக்
கூறவும்,
இருகாது ஓலை இற்று விழ --- காதில் உள்ள
ஓலைகளும் கழன்று விழவும்,
விளையாடும் --- விளையாடுகின்ற,
காமா மயக்கியர்கள் ஊடே --- காம மயக்கத்தைத்
தருகின்ற பொதுமகளிருடன்,
களித்து --- நான் களிப்புற்று,
நம கான் ஊர் உறை கலகம் --- இயமனுடைய காடுபோல்
அச்சந்தரும் தரகில் சேர்ந்து உறைகின்ற குழப்பம்,
ஒழியாதோ --- அடியேனை விட்டு விலகாதோ?
பொழிப்புரை
வீராணம், வெற்றி முரசு, தவில், திமிலை, வேதாகம் ஓசைகள் இவைகள் கடல்போல்
பெருமையுடன் ஒலிக்க, எதிர்த்து வந்த
சூராதி யவுணர்கள் மாயுமாறு விடுத்த வேலாயுதரே!
திருத்தணிகை மலைமீது எழுந்தருளியிருப்பவரே!
மன்மதனைப் பொடியாகச் சிரித்துப் பார்த்தருளிய
சிவபெருமானுடைய திருச்செவியில் சிறந்த ஞானோபதேசத்தையருளிய குருநாதரே!
திருமாலின் மகளாகிய வள்ளி நாயகி அன்புடன்
மகிழுமாறு மிகுந்த அன்புடன் தழுவி மகிழ்கின்ற பெருமிதம் உடையவரே!
கூரிய வேலைப் பழித்த கண்களால் மயக்கி, மலையனைய தனங்களால் அழைத்து, மலர் நிறைந்த படுக்கையின் மீது, தம்பலப் பூச்சியைப் போல் சிவந்த இதழைப்
பருக, மார்புடன் இறுகித்
தழுவி, கண்களை அம்புபோல்
சுழற்றி, இடையின் உடை
நெகிழவும், மேகம் போன்ற கரிய
கூந்தல் சரியவும், வாய்ச் சொற்களால்
அதட்டிப் பேசியும், இரு காது ஓலைகள்
கழன்று விழவும் விளையாடுகின்ற காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்களுடன்
களிப்புற்று, இயமனுடைய ஊராகிய
காடுபோல் பயங்கரமான நரகில் உறைகின்ற கலக்கம் அடியேனை விட்டு அகலாதோ?
விரிவுரை
கோபா
இதழ்
---
கோபம்-இந்திர
கோபம். இது சிவந்த பூச்சி, இது பெண்களின்
இதழுக்கு உவமிக்கப்படும்.
கணை ---
"கண்ணை"
என்பது "கணை" என வந்தது.
நம
கானூர் உறைக் கலகம் ---
நமனுடைய
உலகத்தில் உள்ள நரகங்கள் கானகம் போல் அச்சத்தைத் தருவன.
வீராணம் ---
வீராணம்
என்பது ஒரு வகையான தோற்கருவி.
வெற்றி
முரசு:-
காட்டில்
தன் விருப்பம் போல் திரிகின்ற எருது, வேங்கையைத்
தன் வச்சிரம் போன்ற கொம்பினால் குத்திக் கொல்லும் ஆற்றல் படைத்தாக இருக்கும்.
அப்படி வேங்கையைக் கொன்ற ஒரு வீர எருது வாழ்நாள் முடிந்து இ்றந்தபின் அதன் தோலைக்
கொண்டு சந்தன மரத்தில் செய்த வாத்தியம் முரசு எனப்படும். அவ்வகை முரசை முற்காலத்து
மன்னர்கள் கட்டிலில் வைத்து மலரிட்டுப் பூசிப்பார்கள். பகைவரை வென்றபின் அம்முரசை
முழக்குவார்கள். அதற்கு வெற்றி முரசு என்று பெயர்.
“முரசறைய நிசிசரரை
வென்றிந்திரற் கரசளித்த பெருமாளே”
--- (அகரமுதலென) திருப்புகழ்.
மாரோன்
இறக்க நகை
---
மாரன்-மன்மதன்.
இவன் எரிய எம்பெருமான் சிரித்துத் தமது திருவிழியால் சிறிது பார்த்தார். மன்மதன்
சாம்பரானான்.
மாலோன்
அளித்த வளியார் ---
"வள்ளி"
என்பது "வளி" என வந்தது.
திருமால்
திருபாற்கடலி்ல் அரவணையின் மீது பள்ளிகொண்டிருந்தார். தாருகாவனத்தில் சிவபெருமான்
முயலகனை மிதித்து ஆடிய திருநடனத்தை எண்ணி எண்ணி இரு கண்களிலும் ஆனந்த நீர்
சொரிந்தார்.
கண்களின்
அடியில் வருவது அழுகை நீர். அது உப்புக் கரிக்கும்.
கண்களின்
நுனியில் வருவது ஆனந்த நீர். அது இனிக்கும்.
திருமாலின்
ஆனந்தக் கண்துளியில் இரு பெண்மணிகள் தோன்றினார்கள். அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற அவ்விருவரும், முருகனை வேண்டி அரும்பெருந் தவஞ்
செய்தார்கள். அப்பெருமானுடைய ஆணையின்படி, இளையாளாகிய
சுந்தரவல்லி, வள்ளிமலையில் மான்
வயிற்றில் தோன்றி வள்ளிபிராட்டியென வளர்ந்து வடிவேலிறையை மணஞ்செய்து கொண்டார்.
கருத்துரை
தணிகை
மேவுந் தனிப்பெருங் கடவுளே! மாதர் வசமாகி நரகிடை புகுதாவண்ணம் அருள் செய்யும்.
No comments:
Post a Comment