திருத்தணிகை - 0279. கூந்தல் அவிழ்த்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
பொதுமாதர் உறவு விடுத்து, பரகதி அடைய அருள்.
  

தாந்தன தத்தன தத்தன தத்தன
     தாந்தன தத்தன தத்தன தத்தன
          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான


கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
     பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
          கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் .....புயமீதே

கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
     வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
          கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் ...... பலநாளும்

ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
     ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ
          ரீங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் ....பொருள்தீரில்

ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட ......     லருள்வாயே

காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
     வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
          காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் ...... மருகோனே

காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி .....யிளையோனே

தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை
     வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ
          தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை .....குவைவானந்

தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு
     வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர்
          சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை ......பெருமாளே.


பதம் பிரித்தல்


கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்,
     பாய்ந்த விழிக்கு மை இட்டு மிரட்டிகள்,
          கோம்பு படைத்த மொழிச்சொல் பரத்தையர், ....புயமீதே

கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்,
     வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர்,
          கூன்பிறை ஒத்த நகக்குறி வைப்பவர், ...... பலநாளும்

ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர்,
     ஆம் துணை அற்ற அழுகைக் குரல் இட்டவர்,
          ஈங்கிசை உற்ற அவலக் குண மட்டைகள், .... பொருள்தீரில்,

ஏங்கி இடக் கடையில் தளி வைப்பவர்,
     பாங்கு கல, கருணைக் கழல் பெற்றிட
          ஈந்திலை, எப்படி நற்கதி புக்கிடல் ......    அருள்வாயே.

காந்தள் மலர்த்தொடை இட்டு, எதிர் விட்டு ஒரு
     வேந்து குரக்கு அரணத்தொடும் அட்டிடு
          காண்டிப அச்சுதன், த்தம சற்குணன் ...... மருகோனே!

காங்கிசை மிக்க மறக் கொடி, வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய,
          கான்கனி முற்கு இயல் கற்பக மைக்கரி .....இளையோனே!

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை
     வேங்கை மரத்து எழிலைக் கொடு நிற்பவ!
          தேன்சொலியைப் புணரப் புனம் உற்றுஉறை- ..... குவை! வானம்

தீண்டு கழைத் திரள் உற்று, து துற்றிடு
     வேங்கை தனில் குவளைச்சுனை சுற்று, லர்
          சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்புஉறை ...... பெருமாளே.


பதவுரை

         காந்தள் மலர்த் தொடை இட்டு --- சுக்கிரீவனுக்கு காந்தள் மலர் மாலையைச் சூட்டி,

     எதிர் விட்டு --- வாலிக்கு முன்னே போருக்கு அனுப்பி,

     ஒரு குரக்கு வேந்து --- ஒப்பற்ற குரங்கரசனாகிய வாலியை,

     அரணத்தொடும் அட்டிடு --- அவன் கவசத்தோடுங்கொன்ற,

     காண்டிப அச்சுதன் --- காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,

           உத்தம சற்குணன் --- உத்தமமான நற்குணம் வாய்ந்தவரும் ஆகிய ஸ்ரீராமபிரானுடைய,

         மருகோனே --- திருமருகரே!

           காங்கிசை மிக்க --- உம் மீது விருப்பம் அதிகங்கொண்ட,

         மறக்கொடி --- வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியை,

         வெற்றியில் வாங்கிய --- வெற்றி பெற்று ஏற்றுக் கொண்டவரே!

முக்கனி --- மா, பலா, வாழை என்ற மூவகைப் பழங்களையும்,

சர்க்கரை மொக்கிய --- சர்க்கரையையும் நிரம்ப உண்ணுபவரும்,

கான்கனி --- கானகத்துக் கன்னியாகிய வள்ளியம்மைக்கு,

முற்கு இயல் --- முன்னர் வந்த,

கற்பகம் --- கற்பகத்தரு போன்றவரும்,

மை கரி --- கருநிறங் கொண்ட யானை முகவருமான விநாயகரது,

இளையோனே --- இளையவரே!

தேம் திணை வித்தினர் --- இனிமையான தினையை விதைத்த வேடர்கள்,

உற்றிட --- வருவதைக் கண்டு,
  
வெற்று இலை வேங்கை மரத்து எழிலைக் கொடு நிற்பவ --- வெறும் இலைகளாகவே நிறைந்துள்ள வேங்கை மரத்தின் அழகு விளங்க நின்றவனே!

      தேன் சொலியை புணர --- தேன் போல இனிக்கும் சொற்களை உடைய வள்ளியைச் சேர்வதற்காக,

     புனம் உற்று உறைகுவ --- அந்தத் தினைப்புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவரே!

      வானம் தீண்டு --- ஆகாயத்தைத் தொடுகின்ற,

     கழை திறள் உற்று அது துற்றிடு --- மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும்,

     வேங்கை தனில் --- பொன் போல் ஒளிர்கின்றனவுமான,

     குவளை சுனை சுற்று அலர் சேர்ந்த --- குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் மலர்கின்ற தன்மையைச் சேர்ந்த,

     திருத்தணிகை பதி வெற்பு உறை --- திருத்தணிகைத் தலமாகிய மலையின்மீது எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

       கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் --- கூந்தலின் அழகும் மணமும் மக்கள் காணும் பொருட்டு (வேண்டும் என்றே) அவிழ்த்து முடிக்கும் மினுக்குபவர்கள்,

     பாய்ந்த விழிக்கு மை இட்டு மிரட்டிகள் --- பாய்கின்ற கண்களுக்கு மையை இட்டு மிரட்டுபவர்கள்,

     கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் --- கோபக் குறிப்புடன் கூடிய வார்த்தைகளைக் கூறுகின்ற பொதுமாதர்கள்,

     புயமீது கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் --- தங்களிடம் வந்தவர்களின் தோளின்மீது கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளை அழுத்துபவர்கள்,

     வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர் --- அன்பு மிகுதிப்பட தழுவிக் கொண்டு பின்னர் சண்டையிடுபவர்கள்,

     கூன்பிறை ஒத்த நக குறி வைப்பவர் --- வளைந்த பிறைபோன்ற நகக்குறியை வைப்பவர்கள்,

     பல நாளும் ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் --- பல நாளும் கொடுத்து வந்த பொருளைப் பின்னும் பின்னும் பெருவதற்கு வேண்டி தங்கள் விருப்பத்தை எடுத்துக் கூறுபவர்கள்,

     ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர் --- தங்கட்கு ஆகும் விருப்பம் நிறைவேறும் வழியற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள்,

     ஈங்கிசை உற்ற அவலம் குணமட்டைகள் --- இம்சை செய்யும் குணம் படைத்த பயனற்ற அறிவிலிகள்,

     பொருள் தீரில் --- பொருள் தீர்ந்து போனால்,

     ஏங்கி இட --- மனம் ஏங்குமாறு

     கடையில் தள்ளி வைப்பவர் --- வீட்டின் வெளிப் புறத்தில் தள்ளிவைப்பவர்கள் ஆகிய பொது மகளிரது,

     பாங்கு அகல --- நட்பு நீங்குமாறு,

     கருணை கழல் பெற்றிட --- உமது கருணைத் திருவடியை அடியேன் பெறும்படி,

     ஈந்திலை --- தேவரீர் தரவில்லையே!

     எப்படி நல்கதி புக்கிடல் --- அடியேன் எப்படி நல்ல கதியில் புகுதல் உண்டாகும்?

     அருள்வாயே --- அருள் செய்வீராக!


பொழிப்புரை


         சுக்ரீவனுக்கு காந்தள் மலர் மாலையைச் சூட்டி வாலியுடன் எதிர்த்துப் போர் புரியுமாறு விட்டு, ஒப்பற்ற வாநர வேந்தனாகிய வாலியை அவனுடைய கவசத்துடன் அழித்த காண்டிபம் என்ற வில்லை ஏந்திய அச்சுதரும், உத்தமமான நற்குணம் பொருந்தியவருமாகிய ஸ்ரீ ராமபிரானுடைய திருமருகரே!

     உம்மீது விருப்பம் வைத்த குறமகளாகிய வள்ளியை வெற்றியுடன் ஏற்றருளிய இளையவரே!

     மா, பலா, வாழை யென்ற முக்கனிகளையும் சர்க்கரையையும், நிரம்ப உண்ணுபவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும் கற்பகம் போன்றவரும் கரிய யானை முகத்தையுடையவரும் ஆகிய விநாயகமூர்த்தியின் இளையவரே!

     இனிய தினையை விதைத்த வேடர்கள் வருவதையறிந்து, தனி வேங்கை மரமாகி அழகாக நின்றவரே!

     தேன் போன்ற இனிய சொற்களையுடைய வள்ளியைச் சேரும் பொருட்டு அந்தத் தினைப் புனத்தையடைந்து அங்கு இருந்தவரே!

     விண்ணளவு ஓங்கியுள்ள மூங்கிலின் கூட்டத்துக்கு அருகில் நெருங்கி பொன் போல் ஒளிர்கின்ற குவளை மலர்கள் சுனையெங்கும் மலர்கின்ற திருத்தணிகை மலையின்மீது வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

         கூந்தலை அவிழ்த்து முடித்து மினுக்குபவர்கள்; பாய்கின்ற கண்களுக்கு மையிட்டு மிரட்டுபவர்கள்; கோபக் குறிப்பான சொற்களை சொல்லுகின்ற பொது மாதர்கள்; தம்மை அணுகினவர்களின் தோள்மீது கோங்கின் அரும்பு போன்ற முலைகளை அழுத்துபவர்கள்; அன்பு மிகுதிப்பட தழுவிப் பின் சண்டையிடுபவர்கள்; வளைந்த பிறைபோன்ற நகக்குறி வைப்பவர்கள்; பல நாளும் கொடுத்து வந்த பொருளைப் பின்னும் பெறுதற்கு வேண்டி, தங்கள் விருப்பத்தை எடுத்துக் கூறுபவர்கள்; அவ்வாறு தங்கட்கு ஆன விருப்பம் நிறைவேறாத போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள்; இம்சை செய்யும் பயனற்ற குணமுடைய அறிவிலிகள்; பொருள் வரண்டு விட்டால் அவர்கள் ஏற்குமாறு வாயிலுக்கு வெளியே தள்ளிவைப்பவர்கள்; ஆகிய விலை மகளிரது நட்பு நீங்குமாறு - கருணையுடைய உமது திருவடியை அடியேன் பெறுமாறு தந்தீரில்லையே? எப்படி அடியேன் நற்கதி புகுவேன்? அருள் புரிவீராக.


விரிவுரை


கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் ---

கூந்தலின் வாசனை வெளிப்படும் பொருட்டும், அதன் அழகு தோன்றுமாறும் அதனை அவிழ்த்து அப்படிக் கோதி, அழகாக முடித்து மினுக்குபவர் பரத்தையர்.

பாய்ந்த விழி ---

அம்பு வேகமாகப் பாய்வதுபோல், இளைஞர்களின் உள்ளத்தில் பாய்ந்து தைக்கின்ற கண்கள்.

மையிட்டு மிரட்டிகள் ---

மையிடுவதனால் கண் மேலும் அழகு பெறும். மைப்படிந்த கண்ணால் ஆடவரை மிரட்டிப் பார்த்து வசஞ் செய்வார்கள்.

கோம்பு படைத்த மொழிச்சொல் பரத்தையர் ---

கோம்பு-சினக் குறிப்பு. கோபக் குறியுடன் பேசி மென்மேலும் வசஞ் செய்து மயக்குவர்.

ஈங்கிசை ---

"இம்சை" என்ற சொல் "ஈங்கிசை" என வந்தது.

உற்ற அவலக் குணமட்டைகள் ---

உற்ற அவல குண என்று பிரிக்கவும். அவலம்-பயன் அற்ற குணம்

பாங்கு அகல ---

பாங்கு-நட்பு. பொதுமகளிரின் நட்பு அகலுமாறு உமது பதமலரைத் தந்தருள்வீர்.

காந்தள்மலர்த் தொடை இட்டு ---

வாலியும் சுக்ரீவனும் போர் செய்தபோது, அடையாளந் தெரியும் பொருட்டு சுக்ரீவனுக்கு மலர் மாலையிட்டு அனுப்பினார் இராமர்.

காங்கிசை ---

காங்கிசை-விருப்பம். இது வடசொல்.

கான்கனி ---

கன்னி என்பது கனி என வந்தது. காட்டில் வாழ்ந்த வள்ளியாகிய கன்னி.

வேங்கைமரத் தெழிலைக் கொடு நிற்பவ ---

முருகன் வேங்கை மரமாக நின்றார். அது காட்டு மரமன்று. கல்வி ஞானமில்லாத வள்ளிக்கு கல்வி ஞானம் விளையும் பொருட்டு அபர ஞானமேயாகிய மரம்.

ஆங்கது காலை அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்.


கருத்துரை

தணிகேசா! மாதர் உறவு அற உன் பாதமலரைத் தந்தருள்.


No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...