திருத்தணிகை - 0278. குவளைக் கணை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குவளைக் கணை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உன் மீது மால் கொண்ட பேதைக்கு,
உன் மணம் நாறும் மார் தங்கு மாலையைத் தந்து அருள்.


தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான


குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
     குடையிட் டகுறைப் ...... பிறையாலே

குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
     குயிலுக் குமினித் ...... தளராதே

இவளைத் துவளக் கலவிக் குநயத்
     திறுகத் தழுவிப் ...... புயமீதெ

இணையற் றழகிற் புனையக் கருணைக்
     கினிமைத் தொடையைத் ...... தரவேணும்

கவளக் கரடக் கரியெட் டலறக்
     கனகக் கிரியைப் ...... பொரும்வேலா

கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
     கலவிக் கணயத் ...... தெழுமார்பா

பவளத் தரளத் திரளக் குவைவெற்
     பவையொப் புவயற் ...... புறமீதே

பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குவளைக் கணை தொட்டவனுக்கு முடிக்
     குடை இட்ட குறைப் ...... பிறையாலே,

குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கும், மொழிக்
     குயிலுக்கும் இனித் ...... தளராதே,

இவளைத் துவளக் கலவிக்கு நயத்து
     இறுகத் தழுவிப் ...... புயமீதெ,

இணையற்ற அழகில் புனையக் கருணைக்கு
     இனிமைத் தொடையைத் ...... தரவேணும்.

கவளக் கரடக் கரி எட்டு அலறக்
     கனகக் கிரியைப் ...... பொரும்வேலா!

கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக்
     கலவிக் கண் நயத்து ...... எழு மார்பா!

பவளத் தரளத் திரளக் குவை, வெற்பு
     அவை ஒப்பு வயல் ...... புறம் மீதே

பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப்
     பதியில் குமர! ...... பெருமாளே.

பதவுரை


       கவள கரட --- உருண்டையாக உணவை உண்பதும் மதம் பொழிவதுமாகிய,

     கரி எட்டு அலற --- யானைகள் எட்டும் அஞ்சி அலறும் படி,

     கனக கிரியை பொரும் வேலா --- பொன்மயமான கிரவுஞ்ச மலையுடன் போர்புரிந்த வேலாயுதரே!

      கருதி ---  வள்ளியை நினைந்து,

     செயலை புயனுக்கு உருகி --- அசோக மலர்க்கணையைக் கைக்கொண்ட மன்மதனுக்கு உருகி,

     கலவி கண் நயத்து எழும் மார்பா --- வள்ளிபிராட்டியுடன் சேர்வதற்கு விரும்பி எழுகின்ற திருமார்பினரே!

பவளத் தரள --- பவளமும், முத்துக்களும்,

திரள குவை வெற்பு அவை ஒப்பு --- திரண்டுள்ள குவியல்கள் மலை போலக் கிடக்கும்,

வயல்புறம் மீது --- வயல்புறங்களில்,

பணிலத் திரள் மொய்த்த --- சங்கின் கூட்டங்கள் நெருங்கியுள்ள,

திருத்தணியில் குமர --- திருத்தணிகையம்பதியில் எழுந்தருளியுள்ள குமாரக்கடவுளே!
  
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      குவளை கணை தொட்டவனுக்கு --- நீலோற்பல மலரைக் கணையாகச் செலுத்த தொட்டுள்ள மன்மதனுக்கு,

     முடி குடை இட்ட குறை பிறையாலே --- முடிமீது குடையாக அமைந்துள்ள குறவையுடைய சந்திரனது வெப்பத்தாலும்,

     குறுகுற்ற அலர் --- நெருங்கி வரும் பழிச்சொல் பேசுகின்ற,

     தெரிவைக்கும் --- மங்கையர்க்கும்,

     மொழி குயிலுக்கும் --- இனிய குரல் படைத்த குயிலுக்கும்,

     இனி தளராதே --- இனி இப்பெண் தளர்ச்சியடையாதவாறு,

     இவளை துவள் அ கலவிக்கு நயத்து --- இவளை துவள்கின்ற அந்தச் சேர்க்கைக்கு விரும்பி,

     புயமீது இறுக தழுவி --- உமது திருத்தோள்களால் இறுகத் தழுவி,

     இணை அற்ற அழகில் புனைய --- ஒப்பில்லாத அழகுடன் இவள் தரித்துக்கொள்ள,

     கருணைக்கு இனிமை தொடையை தரவேணும் --- உமது கருணைக்குச் சின்னமாக இனிய மாலையைத் தந்தருள வேண்டும்.

பொழிப்புரை


         உணவை உருண்டையாக உண்பதும், மதம் பொழிவதும் உடைய எட்டுத்திசை யானைகள் அஞ்சி அலறுமாறு, பொன்மயமான கிரவுஞ்ச மலையுடன் போர் புரிந்த வேலாயுதரே!

       வள்ளி நாயகியை நினைந்து, அசோக மலர்க்கணையை உடைய மன்மதனுக்கு உருகி, அவ்வள்ளியுடன் சேர்வதற்கு விரும்பி எழுகின்ற தோள்களை உடையவரே!

       பவளம் முத்து என்ற இரண்டும் மலைபோல் குவிந்துள்ள வயல்களில், சங்கின் கூட்டம் நெருங்கியுள்ள திருத்தணிகையில் வாழும் குமாரக் கடவுளே!

     பெருமிதம் உடையவரே!

         நீலோற்பல மலரைப் பாணமாகத் தொடுவதற்கு முயலும் மன்மதனுடைய முடிக்கு மேல் குடையாக விளங்கும் சந்திரனுடைய வெப்பத்தாலும், நெருங்கி வந்து பழிச்சொல் பேசுகின்ற பெண்களுக்கும், இனிய குரலையுடைய குயிலுக்கும், இப்பெண் தளர்ச்சியடையாமல், துவள்கின்ற அச்சேர்க்கைக்கு விரும்பி இவளை அழுத்தமாகத் தழுவி நிகர் இல்லாத அழகும் இனிமையும் உடைய உமது மலர் மாலையை இவள் தரிக்கும்படித் தந்தருள்வீர்.

விரிவுரை


         இத்திருப்புகழ் அகப்பொருள் துறையில் எழுந்தது. முருகன் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணின் தாய் முருகனை நோக்கி முறையிடுவதாக அமைந்தது.

குவளைக்கணை தொட்டவனுக்கு முடிக்குடையிட்ட குறைப் பிறையாலே ---

நாயகனை விரும்பும் நாயகியை மன்மதன் பூங்கணையால் மென்மேலும் வருத்துவான்.

அவனுக்கு மூன்று வில்லுகள். அமரர்கள் மீது கணை செலுத்தும் போது மலர் வில்லும், மனிதர்கள் மீது கணை செலுத்தும் போது கரும்பு வில்லும், அரக்கர் மீது கணை செலுத்தும் போது இரும்பு வில்லும் தரிப்பான்.

கரும்பு வில், சுரும்பு நாண், மலர்க்கணை, அவனுடைய கணைகள் ஐந்து; தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம்; கடைசியில் தொடுக்குங் கணை நீலோற்பலம். அது மரணத்தைத் தரவல்லது.

மன்மதனுடைய குடை சந்திரன். அவன் வளர்வதும் தேய்வதுமான குறையுடையவன். குளிர்ந்த சந்திரனுடைய ஒளி காமுகரை மிகுந்த வெப்பமாக வருத்தும். நெருப்பைக் கொப்பளித்து உமிழ்வது போல் இருக்கும்.

குறுகுற்ற அலர்த் தெரிவை ---

ஊர்ப் பெண்கள் பழி பல கூறுவர். ‘இவள் போயும் போயும் இவனை விரும்பினாளே? இவள் பித்துப் பிடித்தவள்’ என்பனவாதி பழியுரை பகர்வர். அவ்வாறு கூறுகின்ற மொழி அலர் எனப்படும்.

மொழிக் குயிலுக்கும் இனித் தளராதே ---

இனிய குயிலின் ஓசை தலைவிக்கு நாராசம் போல் வேதனையைத் தரும். எனவே, “சந்திரனாலும், ஊர் வர உரைக்கும் அலர் மொழியாலும், குயிலின் குரலாலும், முருகா! இவள் மெலிகின்றாள்” என்று முருகனை நோக்கித் தாய் பரிவுடன் கூறுகின்றாள்.

இனிமைத் தொடையைத் தரவேணும் ---

முருகா! உன் மீது காதல் கொண்ட இவளிடம் இரக்கம் புரிந்து, இவளை இறுகத் தழுவி, இவளது விரக நோயைத் தணித்து, உனது திருமார்பில் உள்ள மணமாலையைத் தந்தருள்க.

கவளக் கரடக் கரியெட்டலறக் கனகக் கிரியைப் பொரும் வேலா ---

கவளம்-வாயளவு கொண்ட உணவின் உருண்டை.

   கவளந்தனையுண்டு வளர்ந்திடு கரி” --- (கனகந்திரள்) திருப்புகழ்.

கரடம் ---     

யானையின் மதம் பாய்கின்ற சுவடு.

கரியெட்டு ---

திக் கயங்கள் எட்டு; ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்ரதீபம். இவை முறையே கிழக்கு முதலிய திசைகளில் பூமியைத் தாங்குபவை.

கனகக் கிரி ---

கிரவுஞ்ச மலை பொன்மயமானது.

       பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன்”
       சொன்னக் கிரவுஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்”  --- கந்தரலங்காரம்.

கருதி ---

வள்ளியம்மைக்கு அருள் புரிய வேண்டும் என்று முருகவேள் நினைத்து.

செயலைப் புயனுக்கு உருகி ---

செயலை-அசோகு. அசோகு மலரையுடைய மன்மதனுக்கு உருகினான் போல் பெருமான் நடித்தருளினான்.

பவளத் தரளத் திரளக் குவை ---

திருத்தணியில் அருள் உள்ள வயல்களில் பவளம் முத்து இவைகள் குவிந்திருக்கின்றன.

பணிலத்திரள் மொய்த்த திருத்தணி ---

பணிலம்-சங்கு. சங்கினங்கள் நிறைந்துள்ள வயல். நீர் வளத்தை இது காட்டுகின்றது.


கருத்துரை


திருத்தணிக் குமரா! உன் மீது காதல் கொண்ட இவளுக்கு உன் மார்பில் உள்ள மணமாலையைத் தந்தருள்வாய்.




No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...