அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குலைத்து மயிர்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பொதுமாதர் உறவு அற அருள்
தனத்த
தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான
குலைத்து
மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்பு ரளக்
குவித்த விழிக் கயற்சு ழலப் ...... பிறைபோலக்
குனித்த
நுதற் புரட்டி நகைத்
துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
குழைச்செ வியிற் றழைப்ப பொறித் ......
தனபாரப்
பொலித்து
மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்ப ளெனப்
புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர்
புயத்தில்
வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கி லறப் பசப்பி மயற்
புகட்டி தவத் தழிப்ப வருக் ...... குறவாமோ
தலத்த
நுவைக் குனித்தொ ருமுப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்து கிலைப் ...... பரமாகத்
தரித்து
தவச் சுரர்க்கண் முதற்
பிழைக்க மிடற் றடக்கு விடச்
சடைக்க டவுட் சிறக்க பொருட் ...... பகர்வோனே
சிலுத்த
சுரர்க் கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா
தினைப்பு
னமிற் குறத்தி மகட்
டனத்தின் மயற் குளித்து மகிழ்த்
திருத்த ணியிற் றரித்த புகழ்ப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குலைத்து
மயிர்க் கலைத்து, வளைக்
கழுத்து மணி, தனப்புரள,
குவித்த விழிக் கயல் சுழல, ...... பிறைபோலக்
குனித்த
நுதல் புரட்டி, நகைத்து
உருக்கி, மயல் கொளுத்தி, இணைக்
குழைச் செவியில் தழைப்ப, பொறித் ...... தனபாரப்
பொலித்து, மதத் தரித்த கரி,
குவட்டு முலை பளப் பள என,
புனைத்த துகில் பிடித்த இடைப் ...... பொதுமாதர்,
புயத்தில், வளைப் பிலுக்கில், நடைக்
குலுக்கில், அறப் பசப்பி, மயல்
புகட்டி, தவத்து அழிப்பவருக்கு ...... உறவு ஆமோ?
தலத்
தநுவைக் குனித்து, ஒரு முப்-
புரத்தை விழக் கொளுத்தி, மழுத்
தரித்து, புலி, கரி, துகிலைப் ...... பரமாகத்
தரித்து, தவச் சுரர்க்கள் முதல்
பிழைக்க, மிடற்று அடக்கு விடச்
சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே!
சிலுத்த
அசுரர்க் கெலித்து, மிகக்
கொளுத்தி, மறைத் துதிக்க, அதில்
செழிக்க, அருள் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா!
தினைப்புனமில்
குறத்தி மகள்
தனத்தின் மயல் குளித்து மகிழ்,
திருத்தணியில் தரித்த புகழ்ப் ...... பெருமாளே.
பதவுரை
தல தநுவை குனித்து --- பூதலத்தின்
நடுவில் உள்ள மேருமலையை வில்லாக வளைத்து,
ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி --- ஒப்பற்ற
மூன்று புரங்கள் பொடிபட்டு விழுமாறு எரித்து,
மழு தரித்து --- மழு ஆயுதத்தைத் தரித்து,
புலி கரி துகிலை --- புலி யானை இவைகளின் தோலை,
பரமாக தரித்து --- ஆடையாக உடுத்தி,
தவ சுரர்கள் முதல் பிழைக்க --- தவஞ்செய்த
தேவர்கள் முதலானவர்கள் பிழைக்குமாறு,
மிடற்று அடக்கு விட --- நஞ்சைக் கண்டத்தில்
அடக்கிய,
சடை கடவுள் --- சடை முடியுடைய
சிவபெருமானுக்கு,
சிறக்க பொருள் பகர்வோனே ---
மகிழ்ச்சிறக்குமாறு பிரணவப்பொருளை உபதேசித்தவரே!
சிலுத்த அசுரர் கெலித்து --- சண்டையிட்ட
அசுரர்களை வென்று,
மிக கொளுத்தி --- மிகவும் அவர்களை எதிர்த்து,
மறை துதிக்க --- வேதம் துதி செய்ய,
அதில் செழிக்க --- அதனால் தேவர்கள் தழைக்க,
அருள் கொடுத்த -- அருள் பாலித்த,
மணி கதிர் வேலா --- தங்கமணி கட்டிய
ஒளிசெய்யும் வேலாயுதக் கடவுளே!
தினை புனமில் --- தினைப்புனத்தில்,
குறத்தி மகள் தனத்தில் --- குறமகளாகிய
வள்ளிநாயகியின் தனத்தில்,
மயல் குளித்து மகிழ் --- மோகத்தில் முழுகி மகிழுகின்ற,
திருத்தணியில் தரித்த புகழ் ---
திருத்தணியில் நிலைத்து உறைகின்ற புகழ்மிகுந்த,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
மயிர் குலைத்து கலைத்து --- கூந்தலை
அவிழ்த்துப் பிரித்து,
வளை கழுத்தில் மணி தனப் புரள --- சங்கு போன்ற
கழுத்தில் உள்ள மணிமாலை கொங்கைமேல் புரள,
குவித்த விழி கயல் சுழல --- குவிந்த கண்கள்
கயல் மீன் போல் சுழல,
பிறை போல குனித்த நுதல் புரட்டி --- பிறை
மதியைப் போல் வளைத்த நெற்றியை நெறித்து உருட்டி,
நகைத்து --- புன்னகை புரிந்து,
உருக்கி --- ஆடவர் மனதை உருகச் செய்து,
மயல் கொளுத்தி --- மோகக் கனலைப்
பற்றவைத்து,
இணை குழை செவியில் தழைப்ப --- இணையான தோடுகள்
காதுகளில் விளங்க,
பொறி தனபார பொலித்து --- தேமல் படர்ந்த
தனங்கள் பொலிவுற்று,
மதம் தரித்த கரி --- மதங்கொண்ட யானை போலவும்,
குவட்டு முலை --- குன்று போலவும் உள்ள
கொங்கைகள்,
பளப்பளென --- பளபள என்று ஒளிசெய்ய,
புனைத்த துகில் பிடித்த இடை --- ஆடையைத் தரித்த
பிடியில் அடங்கும் இடையை உடைய,
பொது மாதர் --- பொது மகளிரின்,
புயத்தில் --- புயத்தாலும்,
வளை பிலுக்கில் --- வளையலின் பகட்டாலும்,
நடை குலுக்கில் --- நடையின் அசைவாலும்,
அற பசப்பி --- மிகவும் பசப்பி,
மயல் புகட்டி --- மயக்கத்தை ஊட்டி,
தவத்து அழிப்பவருக்கு --- தவத்தை
அழிப்பவர்களான அம்மாதர்களின்,
உறவு ஆமோ --- உறவு ஆகுமோ? (ஆகாது).
பொழிப்புரை
பூதலத்தில் நடுவில் விளங்கும் மேரு
மலையை வில்லாக வளைத்து ஒப்பற்ற முப்புரங்கள் பொடிபட்டு அழிய எரித்து, மழுவைத் தரித்து, புலியையும், யானையையும் உரித்து அவற்றின் தோலை
ஆடையாகத் தரித்து, தம்முடைய அமரர்கள்
உய்யும் பொருட்டு ஆலகால விடத்தைக் கழுத்தில் நிறுத்திய சடை முடியையுடைய
சிவபெருமான் மகிழ பிரணவப் பொருளை உபதேசித்தவரே!
போர்புரிந்த அசுரர்களை வென்று, அவ்வசுரர்களை நிரம்ப எரி செய்து, துதிக்க, தேவர்கள் செழிக்க அருள்பாலித்த மணியுடன்
கூடிய வேலையுடையவரே!
தினைப்புனத்தில் குறமகளாகிய வள்ளி
பிராட்டியின் தனபாரத்தின் மீதுள்ள மயலாகிய நீரில் முழுகி மகிழ்கின்ற திருத்தணி
மலையில் நிலைத்து வாழ்கின்ற புகழ் மிகுந்த பெருமிதம் உடையவரே!
தலைமயிரை அவிழ்த்துப் பிரித்தும், சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலையைத்
தனத்தின்மீது புரள விட்டும் குவிந்த கண்களாகிய கயல்மீனைச் சுழற்றியும், பிறைமதி போன்ற வளைந்த நெற்றியை
நெறித்தும், புன்னகை புரிந்தும், ஆடவர் உள்ளத்தை யுருக்கியும், ஆசைத் தீயை ஏற்றியும், ஒன்றுபோன்ற செவியில் தோடுகள் விளங்கவும், தேமல் படர்ந்த கொங்கைகள் பொலியவும், மதயானை போலவும் மலை போலவும் உள்ள
அத்தனங்கள் பளபள என்று விளங்கவும்,
உடுத்த
துகிலுடன் கூடிய பிடியில் அடங்கும் இடையுடனும் கூடிய பொது மாதர்களின், புயத்தாலும், வளைகளின் ஒயிலாலும் நடையழகின்
குலுக்கினாலும், மிகவும் பசப்பி, மோக மயலை ஊட்டி தவத்தை அழிப்பார்கள்; அத்தகைய அம் மகளிருடைய உறவு ஆகுமோ? ஆகாது.
விரிவுரை
இத்திருப்புகழில்
முன்னுள்ள நான்கு அடிகளில் பொது மகளிரின் தன்மைகளைக் கூறியுள்ளார்.
பொலித்து
மதத் தரித்த கரி ---
இந்த
7-வது வரியை பொலிந்து
மதந்தரித்த கரி எனக் கொள்க. பொலிவுற்று மதங்கொண்ட யானை.
பிடித்த
இடை
---
பிடியில்
அடங்கும் சுருங்கிய இடை.
தலத்தநுவை ---
தலத்துக்கு
நடுலில் உள்ள மேருகிரியை வில்லாக வளைத்து என வருவிக்க, அல்லது தலத்தில் மேரிகிரியை வில்லாக
என்றும் பொருள் செய்யலாம்.
“மாநிலத்திடை
நின்றோங்கிய நெடுநிலைமேரு” --- சிலப்பதிகாரம்.
“மாமேரு பூதரத்
தநுப்பிடித்து” --- (ஆனாத)
திருப்புகழ்.
பரமாக ---
அம்பரம்-ஆடை.
முதற்
குறைந்து அம்பரம் என்ற சொல் பரம் என வந்தது.
தாருகவனத்து
முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள்.
கர்மாவே
பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை யென்று கூறும் கொள்கையர்.
“விரதமே பரம் ஆக
வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரங் காட்டினர்” --- திருவாசகம்.
சிவபெருமானைக்
கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக
ஏவினார்கள்.
புலியை
உரித்து தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் கரத்தில் தரித்துக் கொண்டார்.
பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள்
புரிந்தார். கயமுகாசுரனை வதைத்துத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
மிடற்று
அடக்கு விட:-
அமரர்கள்
பாற்கடல் கடைந்த போது விநாயகரை வணங்காமையால் ஆலகாலவிடம் தோன்றியது. அமரர்கள்
அனைவரும் நடுங்கி ஒடுங்கிக் கயிலை சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.
பெருமான் அந்தக் கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தரித்து எல்லோருடைய கண்டங்களையும்
தீர்த்தருளினார்.
ஆண்டவன்
கழுத்தில் விடத்தைத் தரித்ததால் தேவமாதர்கள் கழுத்தில் மங்கல நாண் தரித்தார்கள்.
மால்எங்கே? வேதன்உயர் வாழ்வுஎங்கே?இந்திரன் செங்
கோல்எங்கே? வானோர் குடிஎங்கே?-கோலஞ் செய்
அண்டங்கள்
எங்கே? அவனி எங்கே? எந்தைபிரான்
கண்டம்அங்கே
நீலம்உறாக் கால். ---
திருஅருட்பா
கருத்துரை
திருத்தணிகைத்
தேவா! மாதர் உறவு நீங்கத் திருவருள் செய்.
No comments:
Post a Comment