திருத்தணிகை - 0276. குருவி எனப்பல




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குருவி என (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
திருப்புகழைப் பாடி வழிபட்டு,  
எனக்குச் சிறந்த இருப்பிடமாகிய உமது திருவடியை அடைய இனியாவது அருள்

தனன தனத்தன தனன தனத்தன
     தனன தனத்தன தனன தனத்தன
          தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான


குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
     அரிய வனத்திடை மிருக மெனப்புழு
          குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா

குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
     கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
          குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் .....நகையாமல்

மருவு புயத்திடை பணிக ளணப்பல
     கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு
          மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன்

வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
     அமையு மெனக்கிட முனது பதச்சரண்
          மருவு திருப்புக ழருள எனக்கினி ......     யருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
     விதமி திமித்திமி திமித திமித்திமி
          விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம்

வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
     நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
          மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ......விடும்வேலா

அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
     அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
          அகில மனைத்தையு முயிரு மளித்தவ ....னருள்சேயே

அமண ருடற்கெட வசியி லழுத்திவி
     ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
          டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ....பெருமாளே.


பதம் பிரித்தல்


குருவி எனப் பல கழுகு நரித் திரள்
     அரிய வனத்திடை மிருகம் என, புழு
          குறவை என, கரி மரமும் எனத் திரி ...... உறவாகா

குமரி கலித்துறை முழுகி, மனத் துயர்
     கொடுமை என, பிணி கலகம் இட, திரி
          குலையன் என, புலை கலியன் எனப் பலர் .....நகையாமல்

மருவு புயத்திடை பணிகள் அண, பல
     கரி பரி சுற்றிட, கலைகள் தரித்து, ரு
          மதன சரக்கு என, கனக பலக்குடன் ...... அது தேடேன்,

வரிய பதத்தின் இன் அருவி இருப்பிடம்
     அமையும், எனக்கு இடம் உனது பதச்சரண்,
          மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி ......அருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
     விதமி திமித்திமி திமித திமித்திமி
          விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு ......   வெகுதாளம் 

வெருவ, முகிழ்த் திசை உரகன் முடித்தலை
     நெறுநெறு என, திசை அதிர அடைத்திட,
          மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட ....விடும்வேலா!

அரிய திரிப்புரம் எரிய விழித்தவன்,
     அயனை முடித்தலை அரியும் மழுக் கையன்,
          அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் ....அருள்சேயே!

அமணர் உடல் கெட ,வசியில் அழுத்தி, விண்
     அமரர் கொடுத்திடும் அரிவை, குறத்தியொடு
          அழகு திருத்தணி மலையில் நடித்தருள் ....பெருமாளே.


பதவுரை


      விருது --- வெற்றிச் சின்னங்கள்,

     தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி குகு என --- இத்தகைய ஓசைகளை உண்டாக்கி சப்திக்கவும்,

     வெகு தாளம் --- அநேக வகையான தாளங்கள்,

     வெருவ முகிழ்த்து --- அச்சப்படுமாறு போடவும்,

     இசை உரகன் முடி தலை நெறுநெறு என --- புகழ்பெற்ற ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் நெறு நெறு என்று நெரியவும்,

     திசை அதிர --- எட்டுத் திக்குகளும் அதிரவும்,

     அடைத்திட --- இடமின்றி எங்கும் நெருங்கவும்,

     மிகுதி கெட --- அசுரர்களுடைய அக்கிரமங்கள் அழியவும்,

     பொரு அசுரர் தெறித்திட --- போர் செய்த இராக்கதர்கள் பிளந்து மாண்டொழியவும்,

     விடும் வேலா --- விடுத்தருளிய வேற்படையை உடையவரே!

      அரிய திரிபுரம் எரிய --- அழிப்பதற்கு அரிய முப்புரங்களும் வெந்தொழிய,

     விழித்தவன் --- அனற்பொறி பரக்க நகைத்தவரும்,

     அயனை --- தருக்குற்ற பிரமதேவனுடைய,

     முடி தலை --- மணிமகுடத்தோடு கூடிய சிரத்தை,

     அரியும் மழுகையன் --- அரிந்த மழுவாயுதத்தை ஏந்திய திருக்கரத்தையுடையவரும்,

     அகிலம் அனைத்தையும் --- பூமி முழுவதையும்,

     உயிரும் அளித்தவன் --- உயிர்களையும் ஈன்றருளிய ஜகத் பிதாவுமாகிய சிவபெருமான்,

     அருள் சேய --- பெற்றருளிய திருக்குழந்தையே!

அமணர் உடல்கெட --- (பல தீங்குகள் புரிந்த) சமணர்களது உடல் பிளந்தழியுமாறு,

வசியில் அழுத்தி --- (திருஞானசம்பந்தராக வந்து) கழுலில் ஏற்றி,

விண் அமரர் கொடுத்திடும் அரிவை --- தேவலோகத்தில் வாழ்கின்ற தேவர்கள் தந்த தெய்வயானை அம்மையாருடனும்,

குறத்தியோடு --- வள்ளிபிராட்டியாருடனும்,

அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் --- அழகுமிக்க திருத்தணி மாமலையின் மீது திருநடனம் புரிந்து அடியேனுக்கு அருள்புரிந்த,
  
 பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      குருவியென --- குருவியைப் போலவும்,

     பல கழுகு --- பலவகைப்பட்ட கழுகுகளைப் போலவும்,

     நரி திரள் --- நரிக்கூட்டம் போலவும்,

     அரிய வனத்து இடை மிருகம் என --- சொல்லுதற்கு அரிய காட்டுக்குள் வாழும் விலங்குகளைப் போலவும்,

     புழு --- புழுவைப் போலவும்,

     குறவை என --- குறவை மீனைப் போலவும்,

     கரி --- யானையைப் போலவும்,

     மரமும் என --- மரத்தைப் போலவும்,

     திரி உறவு ஆகா --- திரிகின்ற மனிதர்களுடைய சிநேகம் ஒருபோதும் ஆகாது;

     குமரி கலி துறை முழுகி --- இளம் பெண்ணின் மோகத்தாலுண்டாகும் மகிழ்ச்சியாகிய நீர்த்துறையிலே முழுகி,

     மன துயர் --- அதனால் மனத்தில் துன்பமுண்டாகி,

     கொடுமை என --- கண்டவர் இது மிகவும் கொடுமையான வியாதி என்று கூறுமாறு,

     பிணி கலகம் இட --- நோய்கள் வந்து ஒன்றோடொன்று பிணக்கமுற்று போராடவும்,

     திரி குலையன் என --- வீணே அலைந்து உழல்கின்றவன் என்றும்,

     புலை கலியன் என --- புலால் உண்ணுகின்ற அகங்காரி என்றும் கூறி பரிகசித்து,

     பலர் நகையாமல் --- பலபேர் சிரிக்காமல்,

     மருவு புயத்து இடை --- தழுவுகின்ற தோள்களுக்கு நடுவில்,

     பணிகள் அண --- பொன்னாபரணங்கள் பொருந்தவும்,

     பல கரி பரி சுற்றிட --- அநேக யானைகள் குதிரைகள் முதலிய பரிவாரங்கள் சூழவும், 

     கலைகள்  தரித்து --- பொற்  சரிகை ஆடைகளைப் புனைந்தும், 

     ஒரு மதன சரக்கு என --- ஒப்பற்ற மன்மதனுடைய வாணிபப் பண்டம் என்று கண்டோர் கூறவும்,

     கனக ப(ல்)லக்குடன் அது --- பொன்னாலாகிய பல்லக்குடனும் உலாவுகின்ற இடம்ப வாழ்வினை,

     தேடேன் --- அடியேன் விரும்பமாட்டேன்,

     வரிய பதத்தின் அருவி இருப்பிடம் --- வரிவடிவான எழுத்துக்களாகிய சொற்கள் மிகுதியால் தண்ணீர் அருவிபோல் இடைவிடாது சொரிகின்ற அருவிபோல் விளைவதற்கு உறைவிடமாகிய,

     உனது பத சரண் --- தேவரீர் உடைய திவ்ய சரணாரவிந்தங்கள்,

     எனக்கு அமையும் இடம் --- அடியேனுக்கு அமைந்த பற்றுக்கோடான இடமாம்; (ஆதலால்)

     மருவு திருப்புகழ் அருள --- உமது திருவடியைப் பொருந்தியுள்ள திருப்புகழைப் பாடியருள,

     எனக்கு இனி அருள்வாயே --- அடியேனுக்கு இனியாவது அருள்புரிவீர்.


பொழிப்புரை


         வெற்றிச் சின்னங்களானவை, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி குகு என்ற ஒலியுடன் ஒலிக்கவும், அநேகவகையான தாளங்கள் அச்சப்படுமாறு சப்திக்கவும், உலகத்தைத் தாங்கிப் புகழ்பெற்ற ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்களும் நெறு நெறு என்று நெறியவும், எட்டுத் திசைகளும் நடுங்கவும், இடமின்றி எங்கும் நெருங்கவும், அவுணர்களாலாகிய அதிக்கிரமங்கள் கெடவும், போர் புரிந்த அசுரர்கள் அழியவும் ஏவிய வேலாயுதத்தையுடையவரே!

         ஏனையோர்களால் வெல்லுதற்கரிய மூன்று புரங்களும் எரிந்தொழிய நகைத்தருளியவரும், தருக்குற்ற பிரமனுடைய முடியுடன் கூடிய தலையை நகத்தாற் கிள்ளி எடுத்த மழுவேந்திய திருக்கரத்தினரும், உலக முழுவதையும் உயிர்களையும் பெற்றருளிய உலக தந்தையுமாகிய பரமேசுவரருடைய திருக்குமாரரே!

         திருஞானசம்பந்தராக வந்து அமணர்களது உடல்கெட கழுக்களில் ஏற்றி, விண்ணுலகில் வாழுகின்ற விபுதர்கள் தந்த தெய்வ குஞ்சரியம்மையாருடனும் வள்ளியம்மையாருடனும் அழகு மிக்க திருத்தணிகை மலையின் மீது அனவரத அனந்தத் தாண்டவம் புரிந்து அடியேனுக்கு அருள்புரிந்த பெருமிதம் உடையவரே!

         குருவியைப் போலவும், பலவகையான கழுகுகளைப் போலவும், நரிக்கூட்டங்களைப் போலவும், சஞ்சரிப்பதற்கரிய காட்டில் வாழும் விலங்குகைளைப் போலவும், புழுவைப் போலவும், குறவை மீனைப் போலவும், யானயைப் போலவும், மரத்தைப் போலவும், திரிகின்ற மனிதர்களுடைய சிநேகம் எனக்கு வேண்டாம்; இளம் பெண்களது ஆசைக் கடலில் முழுகி அதனால் மனத்தில் துன்பமுண்டாகி, “கொடுமையான நோய்” என்று பார்த்தவர்கள் வெறுக்கத்தக்க பல நோய்கள் உண்டாகி அவை ஒன்றுக்கொன்று கலகமிட்டு போராடவும் திரிகின்ற வீணன் என்றும், புலாலுண்ணுகின்ற தரித்திரன் என்றும் பலர் அடியேனைப் பார்த்து எள்ளி நகையாடாமல் இருக்கவேண்டும், தழுவுகின்ற தோள்களில் பொன்னாபரணங்கள் பொருந்தவும் பல யானை குதிரை முதலியன சூழ்ந்து வரவும், சிறந்த ஆடைகளை யுடுத்தும் மன்மதனுக்கு ஒப்பற்ற வாணிபப் பண்டம் என்று கூறுமாறு பொன்னாலாகிய பல்லக்குடன் கூடி யுலாவுகின்ற டம்ப வாழ்வையும் விரும்பமாட்டேன்.

வரிகளுடன் கூடிய எழுத்துக்களாகிய பதங்கள் அருவிபோல் பெருகி யோடுவதற்கு இருப்பிடமானது உமது திருவடியே.

அத்திருவடிக் கமலமே அடியேனுக்கு இனிது தங்கி இளைப்பாறுதற்குச் சிறந்த உறைவிடம்.

ஆதலால் அச் சரணாரவிந்தத்தினை மருவுகின்ற திருப்புகழை அடியேன் பாடி உய்யுமாறு இனியாவது அருள்புரிவீர்.


விரிவுரை

குருவியென ---

மனிதப் பிறப்பு எடுத்ததனால் மட்டும் மனிதர்களாக மாட்டார்கள்; மனிதப் பண்பு இருந்தால்தான் மனிதர்களாக முடியும். மக்கட் பண்பு இல்லாத மனிதர்களெல்லாம் மனித விலங்குகள்.

மனிதர்களுக்குள் பறவையுண்டு; விலங்கு உண்டு; மரமுண்டு; மனிதனுமுண்டு. தேவரும் உண்டு. திருவள்ளுவர் முதலியோர் மனித உடம்பெடுத்த தேவர். “தேவர் குறளும்” என்ற திருவாக்கே இதற்குச் சான்று பகரும் அதாவது எந்த எந்த தன்மைகளைப் பொருந்தியுளரோ அவரவர் அந்தந்த வகையாகின்றனர்.

தக்க இன்ன தகாதன இன்னவென்று
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும் விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல் விலங்கும் புத்தேளிரே.         --- கம்பராமாயணம்

ஆதலால், மனிதர்களுள் குருவிகளும் உண்டு; அதாவது குருவியின் தன்மையையுடைய மனிதர். குருவிகள் ஏரியில் தண்ணீர் உள்ளவரை அங்கேயே அகலாமல் வாழும்; ஏரி நீர் வற்றிவிட்டால் அதிலுள்ள மீன் முதலியவற்றைத் தின்று ஏரியை விட்டு நீங்கிவிடும். அதுபோல் நம்மிடம் செல்வமுள்ளவரை வட்டமிட்டுக் கொண்டிருந்து வறுமை வந்தபின் திரும்பிக்கூடப் பாராமல் விலகிச் செல்கின்ற மனிதர்கள் குருவிகள்.

கண்ணுவர் ஆசிரமத்தில் இருந்த சகுந்தலையைக் கலந்து நல்லுரை கூறி நீங்கிய துஷ்யந்தன், பின்னர் சகுந்தலையைப் பார்த்து, “உன்னைக் கண்டது மில்லை, கலந்தது மில்லை” என்று கூறியபோது சகுந்தலை கூறுவதை நோக்குக.

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் வாழ்வன்றி நல்குரவில்
தாழ்ந்தாலும் ஒக்கச் சமைந்தான் மனம்நோவ
வீழ்ந்துஆடி நீர்துளையும் வெம்பறவை போன்றவர்பால்
ஆழ்ந்தாய் எடுத்தாற்றி யார்காக்க வல்லாரே.  --- மகாபாரதம்


கழுகு ---

கழுகு பினங்களைப் பிடுங்கித் தின்னும். அது போல பிறருடைய சொத்தைப் பிடுங்கித் தின்பவரும், செத்துப் போனவைகளைத் தின்பவரும் கழுகுகள்.

நரி ---

குள்ள நரி தந்திரம் மிக்கது. குள்ள நரி ஆடு மந்தைக்கு இரவில் வந்து, ஆடுமேய்ப்பானுடைய தொந்தரவை நீக்கிக்கொள்ளும் பொருட்டு, ஆட்டைக் கத்தவொட்டாமல் ஊட்டியைப் பிடித்து அதன்மேல் சாய்ந்து கொண்டு வாலால் அடிக்கும்; ஆடு பயந்து நரியைத் தூக்கிக்கொண்டு ஓடும். சிறிது தூரம் சென்றபின் ஆட்டைக் கடித்துக் கொன்று தின்னும். அதுபோல் தந்திரமாக வந்து “அங்கே ஒரு அதிசயமுளது” என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி அழைத்துக் கொண்டு போய் யாருமற்ற இடத்தில் வாயில் துணியை அடைத்துக் கொல்லும் கொடுமையோர் குள்ள நரிகள்.

அரிய வனத்திடை மிருகம் ---

விலங்குகள் புண்ணிய பாவங்களைப் பகுத்துணராது திரியும், தாய் தங்கை என்ற பகுப்பின்றி வாழும்; ஒன்றை யொன்று அடித்துத் தின்னும். அதுபோல் பகுத்துணர்வு இன்றித் திரிந்தும், முறைமை இன்றி ஒழுங்கீனமாக இன்பத்தைத் துய்த்தும், ஆடு கோழி மீன் முதலிய வாயில்லாதவைகளைக் கொன்று தின்றும் திரிகின்றவர்கள் மனித உடம்போடு கூடிய விலங்குகள்.

விலங்கு அல்லேன், விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்”     --- அப்பர்.

மிருகமதென உயிர் வதைத்த தெத்தனை”         --- (சினத்திலத்தனை) திருப்புகழ்.

புழு ---

புழு புண்ணில் இருந்து குடையும் தன்மையையுடையது. அதுபோல நம்மை அதைக் கொடு இதைக் கொடு என்று குடையும் இயல்புடையவர்கள் புழுக்கள்.

குறவை ---

குறவை என்பது ஒருவகை மீன்; அது சேற்றிலேயே இருக்கும். காமமயக்கமாகிய சேற்றிலும் அநாசாரமாகிய சேற்றிலும் உள்ளவர்கள் குறவைகள்.

கரி ---

யானை மதங்கொண்டு திரியும்; பலநாள் உணவு கொடுத்து வளர்த்த பாகன் ஒருநாள் உணவில் ஒரு கவளத்தை எடுத்துக் கொண்டால் அப்பாகனை யானை கொன்றுவிடும். அதுபோல், செருக்குற்றுத் திரிபவரும், பற்பல நன்றி செய்த நல்லவர்களை ஒரு சிறு தீமையைக் குறித்துக் கொல்லும் தன்மை யுடையவர்களும் யானைகள்.

மரம் ---

மரம் தன்னையும் அறிந்து கொள்ளாது; தன்னையுடைய தலைவனையும் அறிந்து கொள்ளாது. அதுபோல், தன்னையும், தனது தலைவனையும் அறியாது, “கடவுளில்லை; முத்தியில்லை; மறுமையில்லை” என்று பிதற்றித் திரிபவர்கள் மனித மரங்கள்.

"மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர் " --- வள்ளுவர்

இன்னும் மனிதர்களுக்குள் நாய்கள், பேய்கள், எருமைகள், தேள்கள், நாட்டுவாக்காலிகள், புலிகள், பூனைகள், முதலிய பலப்பல வகையுண்டு. அநுபவத்தில் “அவன் எருமையாயிற்றே?” “அவன் நாய்”, அவன் பூனை” என்றெல்லாம் பேசுவது கண்கூடு.

அயல் உடைமைக்குப் பேயாய் பறப்பவன் பேய்;

பிச்சைக்காரன் மேல் வீழ்ந்து அதட்டி குலைக்கின்றவன் நாய்;

பிறர் இரகசியம் பேசும்போது ஒற்றுக் கேட்பவன் சுவர்க் கோழி;

பிறர் துன்பம் தெரியாதவன் தேள்;

நல்ல விஷயத்தில் பதுங்கிப் பின் வாங்குபவன் பூனை;

உறுதியில்லாமல் இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கையாக மாறுபவன் பச்சோந்தி;

சமயம் மாறுபடுபவன் ஆடு.

இப்படிப் பலவகை உள. விரிவஞ்சி விடுக்கின்றோம். அன்பர்கள் ஆய்ந்து நட்புகொள்ள வேண்டும்.


குமரி கலித் துறை முழுகி ---

இளம் பெண்களின் மீதுள்ள ஆசையாகிய துறையில் மூழ்குதல்; மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் மூழ்கினார்; சுந்தரமூர்த்திநாயனார் திருவருட்டுறையில் மூழ்கினார். சம்பந்த சுவாமிகள் திருத்தோனிபுரந்துறையுள் மூழ்கினார். இன்னும் பல மெய்யன்பர்கள் பூசத்துறையிலும், கடம்பர் துறையிலும், திருவாடுதுறையிலும், குரங்காடு துறையிலும், சிந்தூ பூந்துறையிலும், குறுக்குத் துறையிலும், மூழ்கி முத்தி பெற்றனர். அவ்வாறு நற்றுறையில் மூழ்காது “குமரிகலித் துறையில் மூழ்கிக் கேடுற்றேன்” என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றனர்.


மருவு புயத்திடை..........தேடேன் ---

பொன்னாபரணங்கள், யானை, குதிரை ஆள் முதலிய பரிவாரங்கள், திவ்வியமான உடைகள், ஊர்திகள் முதலியவைகளுடன் டாம்பீகமாகத் திரிவதை வெறுத்து உரைக்கின்றனர்.

வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் ---

வரிவடிவுகள் பெற்றுள்ள எழுத்துக்கள் கூடிச் சொற்களாகின்றன; அச்சொற்கள் அருவிபோல் பிரவாகமாகப் பெருகுகின்றன. அவைகட்கு உறைவிடம் இறைவன் திருவடியே.

திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே ---

திருப்புகழே எல்லா நலங்களையும் தரவல்லது. முத்தியையும் சித்தியையும் வழங்குவது அதுவே. அப்பரமபதியின் பொருள்சேர் புகழ் புரிந்தார்மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா; திருப்புகழ் படிப்பவர்க்கு பிறவிப் பிணி தானே நீங்கும். ஆதலால் திருப்புகழைப் பாடும் தன்மையை இறைவன்பால் சுவாமிகள் வேண்டுகின்றனர்.


அயனை முடித்தலை அரியும் மழுக்கையன் ---

பிரமதேவன் “நாம் உலகைப் படைக்கின்றோ”மென்று தருக்குற்றனன் அதனை யுணர்ந்த சிவபெருமான் பிரமனை விளித்து நடுத்தலையை நகத்தாற் கிள்ளியெடுத்து “நீ உலகினைப் படைத்தியேல் உன் தலையைப் படைத்துக் கொள்” என்றனர். அப் பிரமன், இதுகாறும் தன் தலையைப் படைத்துக் கொள்ளுந் திறனின்றி வாளா இருக்கின்றனன்.

படைப்பானும் காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான்அயன் என்னல் பாவம், - படைக்கில்அயன்
தன்தலையைச் சோணேசன் தான்அரிந்த போதினிலே
தன்தலையைப் பண்ணஅறியான் தான்.    --- அருணகிரியந்தாதி

நல்ல மலரின் மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஉஎன்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற.           --- திருவாசகம்

சிவபெருமான் தமது கரத்தில் மழுவாயுதத்தை ஏந்தியிருந்தும், அம்மழுப் படையால் பிரமன் தலையை யறுக்காது, தமது பெருமையும் பிரமனது சிறுமையும் புலப்படுமாறு நகத்தாலேயே கீரை கிள்ளுவதுபோற் கிள்ளி எடுத்தனர் என்ற குறிப்பை விளக்கும் பொருட்டு “மழுக்கையன்” என்ற அருமையான பதத்தையும் சுவாமிகள் அதியற்புதமாக அமைத்தனர்.


அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் ---

மேலே கூறிய அரிய விஷயத்தை அநுவதித்து உலகையும் உயிரையும் பெற்ற ஜெகத்பிதா சிவபெருமானே என்றும் கூறி மேற்போந்த விஷயத்தை நிறுவுகின்றனர்.

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி ---

இது திருஞானசம்பந்தர் சமணரைக் கழுவேற்றிய வரலாறு. இதனைத் திருப்புகழ் விரிவுரை ஆறாம் தொகுதி “வஞ்சக லோப” என்ற பாடலின் விரிவுரையில் காண்க.

       பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்பது அநுபூதியின் அருள்வாக்கு. ஒரு கடவுள் பிறந்தது என்றால் அது கடவுளாக ஆகமாட்டாது. பிறப்பிறப்பற்றது கடவுள். பிறப்பிறப்பற்ற பெருந்தகையாம் முருகக் கடவுள் திருஞானசம்பந்தராக வந்தார் என்பதனுடைய கருத்துதான் யாதோ வெனின், கூறுதும்.

     சுப்ரமண்ய சாரூபம் பெற்றவர்கள் பலர். அவர்கட்கு வேலும், மயிலும் ஆறுமுகமும் பன்னிரு தோள்களும் உண்டு. அவர்கட்கு அபரசுப்ரமண்யர் என்று பேர். அவ்வாறு சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளுள் ஒருவர் பரசுப்ரமண்யமாகி - பெருமானுடைய திருவருள் தாங்கி திருஞானசம்பந்தராகத் திருவவதாரஞ்-செய்தனர்.

அதனைப் பரசுப்ரமண்யத்தின் பேரில் ஏற்றிச் சொல்வது ஆன்றோர் மரபு. எங்ஙனமெனின், அயந்தலையரிந்து, தக்கன் மகம் அழித்தது முதலியவைகள் ஸ்ரீகண்ட ருத்திரருடைய செயல்கள்; ஸ்ரீகண்ட ருத்திரருடைய செயல்களைப் பரசிவத்தின் செயலாக ஏற்றித் தமிழ் மறைகளாகிய தேவார திருவாசகங்கள் கூறுமாறு கண்டு தெளிக. ஆதலால் மூவருந் தேவருங் காணாத முழுமுதற் கடவுளாம் முருகவேள் யோனிவாய்ப்பட்டுப் பிறந்தனர் என்று மயங்கற்க.

உக்கிரப் பெருவழுதி, உருத்திரசன்மர் முதலிய அவசரங்கட்கும் இதே நியாயம் என்று உய்த்துணர்க.


அழகு திருத்தணிமலையில் நடித்தருள் பெருமாளே ---

அருணகிரிநாத சுவாமிகட்குத் திருத்தணிகை மலையில் திருவேலிறைவன் திருநடன தரிசனங் கொடுத்தருளினார். இதுவேயுமன்றி, சிதம்பரம், திருச்செந்தூர், கொடுங்குன்றம் முதலிய திருத்தலங்களிலும் அருணகிரியார்க்கு நடனதரிசனங் காட்டியருளினார் என்பது,

செந்திலிலு மென்றன்முன் கொஞ்சி நடனங் கொளுங்
   கந்தவேளே”                 ---(தண்டையணி) திருப்புகழ்.

என்ற அருமைத் திருவாக்குகளால் புலப்படுகின்றது.


கருத்துரை

அசுரரை அழித்த வேலாயுதரே! சிவகுமாரரே! தணிகாசலரே மனிதப் பண்பில்லாதவர் உறவு வேண்டா; அவநெறியிற் புக்கு அலையேன்; டாம்பீக வாழ்வை விரும்பேன்; திருப்புகழைப் பாடி உமது திருவடியைப் புகலிடமாக அருள்புரிவீர்.






No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...