திருத்தணிகை - 0275. குயில் ஒன்றுமொழி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குயில் ஒன்று (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உன்னை விரும்பும் இவளைத் தழுவிக் கொள்வாய்


தனனந் தனனத் தனனந் தனனத்
     தனனந் தனனத் ...... தனதான


குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
     கொலையின் பமலர்க் ...... கணையாலே

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
     கொடிகொங் கையின்முத் ...... தனலாலே

புயல்வந் தெறியக் கடனின் றலறப்
     பொருமங் கையருக் ...... கலராலே

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
     புயம்வந் தணையக் ...... கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்
     சமனின் றலையப் ...... பொரும்வீரா

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
     தனமொன் றுமணித் ...... திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
     பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே

பரமன் பணியப் பொருளன் றருளிற்
     பகர்செங் கழநிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலையக்
     கொலை இன்ப மலர்க் ...... கணையாலே,

குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக்
     கொடி கொங்கையின் முத்து ...... அனலாலே,

புயல் வந்து எறிய, கடல் நின்று அலறப்
     பொரு மங்கையர் உக்க ...... அலராலே,

புயம் ஒன்ற, மிகத் தளர்கின்ற தனி,
     புயம் வந்து அணையக் ...... கிடையாதோ?

சயிலம் குலைய, தடமும் தகர,
     சமன் நின்று அலையப் ...... பொரும்வீரா!

தரு மங்கை, வனக் குறமங்கையர் மெய்த்
     தனம் ஒன்றும் மணித் ...... திருமார்பா!

பயிலும் ககனப் பிறை தண் பொழிலில்
     பணியும் தணிகைப் ...... பதிவாழ்வே!

பரமன் பணியப் பொருள் அன்று அருளில்
     பகர் செங்கழநிப் ...... பெருமாளே.

பதவுரை


      சயிலம் குலைய --- கிரவுஞ்ச மலை அழியவும்,

     தடமும் தகர --- மற்றைய குலமலைகள் பொடிபடவும்,

     சமன் நின்று அலைய --- இயமன் இங்கும் அங்குமாக அலையவும்,

     பொரு வீரா --- போர் செய்த வீர மூர்த்தியே!

      தரு மங்கை --- கற்பகத் தருவின் நிழலில் வளர்ந்த தெய்வயானையம்மை,

     வன குற மங்கையர் = வனத்தில் வளர்ந்த வள்ளிபிராட்டியென்ற இருவரது,

     மெய் தனம் ஒன்றும் --- திருமேனியின் தனங்கள் பொருந்துகின்ற,

     மணி திருமார்பா --- இரத்தின மணிகளுடன் கூடிய அழகிய மார்பினரே!

      பயிலும் ககன பிறை --- ஆகாயத்தில் பயில்கின்ற பிறைமதி,

     தண் பொழிலில் பணியும் --- குளிர்ந்த சோலைகளுக்குக் கீழாக விளங்கும்,

     தணிகைப் பதி வாழ்வே --- திருத்தணி மலையில் வாழ்கின்றவரே!

      பரமன் பணிய --- சிவபெருமான் பணிந்து கேட்க,

     பொருள் அன்று அருளில் பகர் --- அன்று அருளுடன் பிரணவப் பொருளை உபதேசித்த,

     செங்கழுநி --- செங்கழுநீர் மலர்கின்ற தணிகை மலைக்கு இறையாகிய,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      குயில் ஒன்று மொழி --- குயிலைப் போன்ற இனிய மொழியையுடைய இவள்,

     குயில் நின்று அலைய --- குயிலானது ஒருபுறங் கூறி அழைக்கவும்,

     கொலை இன்ப மலர் கணையாலே --- கொலை புரியவல்ல இன்பமலராகிய மன்மதனுடைய கணையாலும்,

     குளிரும் தவள குல சந்த்ர ஒளி --- குளிர்ச்சியும் வெண்மையும் சிறப்பும் பொருந்திய சந்திர ஒளியானது,

     கொடி கொங்கையின் முத்து அனலாலே --- கொடி போன்ற இவளுடைய தனபாரங்களின் மீது அணிந்துள்ள முத்து மாலையிற்பட்டு அதன் மூலம் வெளிப்படும் நெருப்பாலும்,

     புயல் வந்து எறிய --- தென்றல் காற்று வந்து வீசவும்,

     கடல் நின்று அலற --- சமுத்திர ஒலியாலும்,

     பொரு மங்கையர் உக்க அலரால் --- இவளுக்கு நிகரான மாதர்கள் தூற்றுகின்ற அலர்மொழியாலும்,

     புயம் ஒன்ற --- உமது திருத்தோளைத் தழுவும் பொருட்டு,

     மிக தளர்கின்ற --- மிகவுந் தளர்கின்ற,

     தனி --- தனித்த இத்தலைவிக்கு,

     புயம் வந்து அணைய கிடையாதோ? --- உமது புயாசலம் வந்து அணைப்பதற்குக் கிட்டாதோ?

பொழிப்புரை


         கிரவுஞ்ச மலை அழியவும், மற்றைய குலமலைகள் பொடி படவும், இயமன் இங்கும் அங்கும் அலையுமாறு போர் புரிந்த வீரமூர்த்தியே!

     கற்பக மரத்தின் கீழ் வளர்ந்த தெய்வயானையம்மை, வனத்தில் வளர்ந்த வள்ளிபிராட்டியார் என்ற இரு மாதர்களின் தனங்கள் பொருந்துகின்ற இரத்தின மணிகளுடன் கூடிய அழகிய திருமார்பினரே!

     விண்ணில் பயிலுகின்ற பிறைச் சந்திரன் கீழே நுழையுமாறு உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தணியில் வாழ்பவரே!

     சிவபெருமான் பணிந்து கேட்க பிரணவப் பொருளை அருளுடன் உபதேசித்த செங்கழுநீர் மலைக்குத் தலைவரான பெருமிதம் உடையவரே!

         குயில் போன்ற மொழியையுடைய இத் தலைவி, குயில் ஒருபுறம் நின்று அலைக்கவும், கொலைபுரியவல்ல இன்ப நீலமலராகிய மன்மதனுடைய கணையாலும், குளிர்ந்த வெண்மையான சிறந்த சந்திர வொளியானது கொடிபோன்ற இவளது தனத்தின் மீதுள்ள முத்துமாலையில் பட்டு வெளிப்படுகின்ற நெருப்பினாலும், தென்றல் காற்று வந்து எரியவும், கடல் ஓசை துன்புறுத்தவும், இவளுக்கு ஒப்பான மாதர்கள் கூறும் வசைமொழியாலும், தளர்ந்து உமது புயத்தைச் சேர விரும்பியுள்ள இவளுக்கு உமது திருப்புயம் வந்து தழுவுவதற்குக் கிடைக்காதோ?


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் எழுந்தது.


குயிலொன்று மொழி ---

குயில் போன்ற மொழியையுடைய தலைவி. அன்மொழித் தொகையாகத் தலைவியைக் குறிக்கின்றது.


குயில் நின்று அலைய ---

தலைவனையடைய விரும்புந் தலைவிக்குக் குயிலோசை கொடுமையாக இருக்கும். அலைக்க என்பது அலைய என வந்தது.

மெள்ளவரு சோலைக் குயிலாலே
 மெய்உருகு மானைத் தழுவாயே”      --- (துள்ளுமதவேள்) திருப்புகழ்

கொலையின்ப மலர்க் கணையாலே ---

இன்பம் போல் மகிழ்ச்சியைத் தந்து கொல்லுகின்ற கணை மன்மதனுடைய நீலமலர்.


குளிரும் தவளக் குல சந்த்ர ஒளி ---

சந்திரனுடைய அமிர்த கிரணம் காமுகர்க்குப் பெரிய வேதனையைத் தரும்.

எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்கும் நீ,
நஞ்சினை உகுத்தி,நண் ணலரில் தப்பியே
உஞ்சனன், இவனுயிர் ஒழிப்பன் யான் எனா,
வஞ்சினம் பிடித்தியோ மதியமே என்பான்.   --- கந்தபுராணம்

புயல் வந்து எறிய ---

தென்றல் காற்றும் காமுகர்க்குப் பெருந்துயரத்தை விளைவிக்கும்.

வன்திறல் கொலைஞர்கள் மானில் கூவி,மான்
ஒன்று அறக் கவர்தல்போல், உயிர் என் காலினை
இன்று அது போலவும் துன்புக்க் ஈர்த்தலால்
தென்றலுக்கு யான் செய்த தீது உண்டோ? என்பான்.     --- கந்தபுராணம்

கடல் நின்று அலற ---

சமுத்திர ஒலியும் காமுகர்க்குத் துயர் செய்யும்.

துன்னலராகிய தொகையினோர் தமைத்
தன்னிடை வைத்தெனைத் தளர்வு கண்டதால்
அன்னதும் அன்றியின் றாவிகொள்ளவும்
உன்னிய தோகடல் உறங்கலா தென்பான்      --- கந்தபுராணம்
  
பொரு மங்கயைருக்கு அலராலே:-

பொரு-சமானம். தனக்கு நிகரான மாதர்கள், அலர் தூற்றுகின்ற-வகைச் சொல் கூறுவர்.

தெருவினில் நடவா மடவார்
     திரண் டொறுக்கும் வகையாலே”.   --- திருப்புகழ்

புயம் வந்து அணையக் கிடையாதோ ---

இவ்வாறு குயிலாலும் மலர்க்கணையாலும், நுலவாலும், புயலாலும், கடலாலும் அலராலும் கவல்கின்ற இத்தலைவிக்கு முருகா! உமது புயம் வந்து தழுவிக் கொள்ளும் பேறு கிட்டாதோ?

தளர்கின்ற இத்தலைவி உன்னைத் தழுவித் துன்பம் நீங்கி இன்பத்தை யடைய அருள்செய்” என்று நாயகீ-நாயக பாவத்தில் பாடுகின்றார் அருணகிரியார்.

சயிலம் குலைய ---

சயிலம்-மலை. சிலா-சிலையின் தொடர்புடையது சைலம். சிலா-சிலை-கல்.

தாரகனுடைய வஞ்சனைக்குத் துணை செய்த கிரவுஞ்ச மலையை முருகன் வேலாயுதத்தால் துகள் படுத்தி யருளினார்.

தடமும் தகர ---

தடம்-மலை. முருகன் வேலின் வேகத்தால் குலமலைகள் எட்டும் தகர்ந்தன.

வேல் வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே” --- கந்தரலங்காரம்.

பயிலுங் ககனப்பிறை தண்பொழிலிற் பணியும் ---

சந்திரன் கீழே தாழ்ந்து செல்லுமாறு வானளாவி நீண்டிருக்கின்ற சோலை. இது உயர்வு நவிற்சியணி.

செங்கழநி ---

செங்கழுநீர் என்ற சொல் செங்கழநி என மருவியது.


கருத்துரை


திருத்தணிகேசா! உன்னை மருவ விரும்பும் இவளை நீ தழுவிக்கொண்டருள் செய்.


No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...