திருத்தணிகை - 0274. கிறிமொழிக் கிருதரை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கிறிமொழிக் கிருதரை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
திருவடியில் அணுக அருள்.

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான


கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
     கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
     கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
     றறவுநெக் கழிகருக் ...... கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
     றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
     பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
     புகலியிற் கவுணியப் ...... புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
     தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்
  
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
     தணியினிற் சரவணப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கிறிமொழிக் கிருதரை, பொறிவழிச் செறிஞரை,
     கெடுபிறப்பு அற விழிக் ...... கிற பார்வைக்

கெடு மடக் குருடரை, திருடரை, சமய தர்க்
     கிகள் தமை, செறிதல் உற்று, ...... அறிவு ஏதும்

அறிதல் அற்று, யர்தல் உற்று, விழ்தல்அற்று, ருகல்உற்று,
     அறவும் நெக்கு, ழி கருக் ...... கடல் ஊடே

அமிழ்தல் அற்று, ழுதல் உற்று, ணர் நலத்து உயர்தல் உற்று,
     அடியிணைக்கு அணுகிடப் ...... பெறுவேனோ?

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதர, பறிதலைப்
     பொறிஇல் அச் சமணர் அத் ...... தனைபேரும்

பொடிபட, சிவமணப் பொடி பரப்பிய, திருப்
     புகலியில் கவுணியப் ...... புலவோனே!

தறி வளைத்து உற, நகைப் பொறி எழ, புரம் எரித்-
     தவர் திருப்புதல்வ! நல் ...... சுனைமேவும்

தனிமணக் குவளை நித்தமும் மலர்த் தரு, செருத்
     தணியினில் சரவணப் ...... பெருமாளே.


பதவுரை


      பொறி உடை செழியன் --- அறிவு உள்ள பாண்டியனுடைய,

     வெப்பு ஒழிதர --- வெப்புநோய் நீங்கவும்,

     பறிதலை --- தலைமயிரைப் பறிப்பவரும்,

     பொறி இல் --- அறிவில்லாதவருமாகிய,

     அ சமணர் அத்தனை பேரும் --- அந்தச் சமணர்கள் அத்தனை பேர்களும்,

     பொடிபட --- அழியவும்,

     சிவமண பொடி பரப்பிய --- சிவமணம் கமழும் திரு நீற்றைப் பரவச் செய்த,

     திருபுகலியில் --- சீகாழி என்ற திருத்தலத்தில் தோன்றிய,

     கவுணிய புலவோனே --- கவுணியர் குடியில் வந்த புலவரே!

      தறி வளைத்து உற --- தறிபடுதல் சூழும்படி,

     நகை பொறி எழ --- சிரிப்பினால் நெருப்புப் பொறியை எழுப்பி,

     புரம் எரித்தவர் --- முப்புரத்தை எரித்த சிவபெருமானுடைய,

     திருப் புதல்வ --- திருக்குமாரரே!

      நல் சுனை மேவும் --- சிறந்த சுனையில் உள்ள,

     தனிமணம் குவளை நித்தமு மலர் தரு --- ஒப்பற்ற நறுமணம் வீசும் குவளை நாள் தோறும் மலரைத் தருகின்ற,

     செருத்தணியில் = போர்த்தணிந்த இடமாகிய திருத்தணியில் எழுந்தருளி உள்ள,

     சரவண பெருமாளே --- சரவண மூர்த்தியாகிய பெருமையின் மிகுந்தவரே!

      கிறிமொழி கிருதரை --- பொய் மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை,

     பொறிவழி செறிஞரை --- ஐம்பொறிகளின் வழியே செல்லுபவர்களை,

     கெடுபிறப்பு அற --- கெட்ட இப்பிறப்பு நற்பிறப்பு ஆகாமல் தொலையுமாறு,

     விழிக்கிற பார்வை கெடுமட குருடரை --- விழிக்கின்ற பார்வையுடைய அறிவில்லாத தீய குருடர்களை,

     திருடரை --- திருடர்களை, சமய தர்க்கிகள் தமை ---சமயவாதிகளை,

     செறிதல் உற்று --- அடியேன் நெருங்கிச் சேர்ந்து,

     அறிவு ஏதும் அறிதல் அற்று --- அறிவு ஒன்றும் அறிதல் இல்லாமல்,

     அயர்தல் உற்று --- தளர்ச்சியடைந்து,

     அவிழ்தல் அற்று --- உள்ளம் அன்பினால் நெகிழ்தல் இன்றி,

     அருகல் உற்று --- குறைபாடு அடைந்து,

     அறவும் நெக்கு --- மிகவும் கெட்டு,

     அழி கருக் கடலூடே --- அழிவு தரும் பிறவிக்கடலுள்ளே,

     அமிழ்தல் அற்று --- அமிழ்ந்து போதல் நீங்கி,

     எழுதல் உற்று --- மேல் எழுதலை அடைந்து,

     உணர்வு நலத்து உயர்தல் உற்று --- நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்பாடு அடைந்து,

     அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ --- இரு திருவடியைச் சேரப் பெறுவேனோ?


பொழிப்புரை


         அறிவுடைய பாண்டியனுடைய சுரநோய் நீங்கவும், தலை மயிரைப் பறிக்கும் அறிவிலிகளாகிய அந்தச் சமணர்கள் எல்லோரும் கழுவில் ஏறியழியவும் சிவமணங்கமழும் திருநீற்றின் நெறியை எங்கும் பரவச் செய்த-சீகாழியில் வந்த கவுணியப் புலவர் பெருமானே!

     அழிவு உண்டாகும்படி புன்சிரிப்பினால் நெருப்புப் பொறியை உண்டாக்கி முப்புரத்தை எரித்த சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறுமணம் வீசும் குவளை நாள்தோறும் மலரைத் தருகின்ற திருத்தணியில்  மேவும்  சரவண! பெருமிதம் உடையவரே!

         பொய்மொழி  பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்பொறிகளின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு நற்பிறப்பு ஆகாமல் தொலையும்படி விழிக்கின்ற பார்வையை உடைய அறிவில்லாத கெட்ட குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை அடியேன் நெருங்கிச் சேர்ந்து, அறிவு சற்றும் இல்லாதவனாகி, தளர்ச்சி அடைந்து, உள்ளம் அன்பினால் நெகிழ்தல் இன்றி குறைபாடு அடைந்து, மிகவும் கெட்டு, அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போகாமல் நீங்கி, மேலோங்கி, நல்லுணர்வு பெறும் நல்வழியில் மேம்பாடு அடைந்து உமது இரு சரணங்களை அடியேன் அணுகப் பெறுவேனோ?

விரிவுரை

கிறிமொழிக் கிருதரை ---

கிறி-பொய்; கிருது-செருக்கு. பொய்யே பேசுகின்ற செருக்கு (அகங்காரம்) உள்ளவர்கள். வாய் கூசாமல் ஒருவர் மீது பழிகளைச் சுமத்திப் பொய் கூறுவது. பொய் சொல்லுவது மிகப் பெரிய பாவம்.

நூறு பசுக்களைக் கொன்ற பாவம் ஓர் அந்தணனைக் கொன்றால் வரும்;

நூறு அந்தணர்களைக் கொன்ற பாவம் ஒரு பெண்ணைக் கொன்றால் வரும்;

நூறு பெண்களைக் கொன்ற பாவம் ஒரு குழந்தையைக் கொன்றால் வரும்;

நூறு குழந்தைகளைக் கொன்ற பாவம் ஒரு பொய் சொன்னால் வரும்.

ஆன் அந்தணர் மகளிர் அன்பாம் குழந்தை வதை
மானம் தரும் பிசி வார்த்தை, இவை - மேல்நிரையே
கூறவரும் பாவம் குறையாது, அவ் ஒன்றுக்கு
நூறுஅதிகம் என்றே நுவல்.                 --- நீதிவெண்பா

எல்லா விளக்கும் விளக்குஅல்ல, சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.       --- திருக்குறள்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.            --- திருக்குறள்.

சூர்ப்பனகையைக் கொடியவள் என்று கூற வந்த கம்பர் பாலைவனத்தைக் காட்டிலும் கொடியவள்; வடவைத் தீவினுங் கொடியவள், ஆலகாலவிடத்தினுங் கொடியவள் என்று கூறவில்லை. “பொய்தங்கு நெஞ்சில் கொடியாள்” என்றார்.

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே”         --- தாயுமானவர்.

பொல்லாதவன், நெறிநில்லாதவன், ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன், கச்சி ஏகம்பனே. --- பட்டினத்தார்.

கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள்களவு
கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே.      --- பட்டினத்தார்.

பொறிவழிச் செறிஞரை ---

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறிகளின் வழி செல்லுகின்றவர்கள் துன்புறுவார்கள்.

சென்ற இடத்தால் செலவிடாது, தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.            --- திருக்குறள்.

உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்குஓர் வித்து       ---- திருக்குறள்.


கெடுபிறப்பற விழிக்கிற பார்வைக்..........குருடரை ---

கெடுதலான இப்பிறப்பு நன்மைக்கு ஆகாதபடி திருட்டு விழி விழித்து, கெடுதியும் அறிவின்மையும் உடைய குருடர் அறிவுக்கண் இல்லாதவர்.

திருடர் ---

பிறர் பொருளைக் கவர்பவர்கள்.

சமய தர்க்கிகள் ---

தத்தம் மதமே பெரிதென்று வாதம் புரியும் விதண்டாவாதிகள்.

கலகலகலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்கயவாதிகள்  --- (அலகிலவுணரை) திருப்புகழ்


செறிதல் உற்று ---

முன்கூறிய தகாதவர்களுடன் சேரக் கூடாது. சேர்பவர் முத்தி நெறி சேரார்.

சேரிடம் அரிந்து சேர்”               --- ஒளவையார்.                            


அறிவு ஏதும் அறிதல் அற்று ---

அறிவு சற்றும் அறிதலன்றிக் கெடுவர். அறிவையறிவது பொருளாகும்.

அறிவை அறிபவர் அறியும் இன்பந்தனை”     --- (அகரமுதலென) திருப்புகழ்.

அறிவால்அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார்”  ---(விறல்மார) திருப்புகழ்.

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே”
                                                                   ---(குமரகுருபர குணதர) திருப்புகழ்.

அயர்தல் உற்று ---

அதனால் வளர்ச்சியின்றித் தளர்ச்சி யெய்தித் தடுமாறுவர்.

அவிழ்தல் அற்று ---

அவிழ்தல்-உள்ளம் நெகிழ்தல்.

...        ....       ....       அவிழ்ந்த அன்பால்
குரப்புனை தண்டையம் தாள் தொழல் வேண்டும்.            --- கந்தரலங்காரம்.

உரைஅவிழ உணர்வுஅவிழ உளம்அவிழ
   உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்”               --- சீர்பாத வகுப்பு.

அருகல் உற்று ---

அருகல்-சுருங்குதல். அரிவு முதலியன சுருங்கி விடுதல்.

அறவுநெக் கழிகருக் கடலூடே அமிழ்தல் அற்று ---

மிகவும் கெடுதலை யடைந்து பிறவிப் பெருங்கடலில் மூழ்கி யழியாமல் நன்னெறிச் சேர்தல்.

எழுதல் உற்று ---

மேல் நிலைக்கு எழுதலை யடைதல்.

உணர் நலத்து உயர்தல் உற்று ---

உணர் நலம் பெற்று மேம்பாட்டை யடைதல்.

அடியிணைக்கு அணுகிடப் பெறுவேனோ ---

முருகனுடைய திருவடியில் இரண்டறக் கலந்து இன்புறுவதே முத்தியாகும்.


பொறியுடைச் செழியன் வெப்பொழி தர ---

திருஞானசம்பந்தர், பாண்டியன் வெப்பு நோயைத் தீர்த்தது.

திருஞானசம்பந்த சுவாமிகள் பதினாயிரம் அடியார் குழாத்துடன் மதுரைக்கு எழுந்தருளித் திருமடத்தில் தங்கியிருந்தார்.

பொறாமையால் வெதும்பிய சமணர்கள் தங்கள் மந்திரங்களைக் கூறித் தீயை ஏவினார்கள். அத் தீ திருமடத்திற்குச் செல்லாதாயிற்று.

ஆதிமந்திரம் அஞ்செழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திரவிதி வருமோ
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியாவகை கண்டமண் குண்டர்கள் தளர்ந்தார்.

கருணை சிறிதும் இல்லாத சமணர்கள் திருமடத்தில் தீ வைத்தார்கள். இதனை யறிந்த அடியார்கள் தீயை அகற்றி சீகாழிப் பிள்ளையாரிடம் இதனைத் தெரிவித்தார்கள். குடிகள் செய்த பாவம் அரசனைச் சேரும். குடிகளை நன்னெறியில் நிறுத்தாமையால் என அறிக.

சிவஞானிகட்கு இட்ட அத் தீ அதிக வேகமாக அரசன் மேல் தாவிச் சென்றது. அருளாளராகிய திருஞான சம்பந்தர் அத்துணை வேகமாகச் சென்று அரசனை அணுகுமானால் பாண்டி மாதேவியின் மங்கல நாண் அகலும் என்று திருவுளம் பற்றி,

செய்யனே திரு ஆலவாய் மேவிய
 ஐயனேஅஞ்ச லென்றருள் செய்யெனைப்
 பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
 பையவே சென்று பாண்டியற் காகவே”

என்று பாடியருளினார்.

தீ, வெப்பு நோயாகச் சென்று பாண்டியனைப் பற்றியது. வெப்பு நோயின் வெம்மையால் அருகிலிருந்தவர் உடம்புகளும் கருகின. வாழைக் குருத்துகள், சாம்பலாயின.

சமண முனிவர்கள் மந்திரம் உச்சரித்தனர். வெப்பு நோய் மேலும் அதிகரித்தது. குலச்சிறையாரும், மங்கையற்கரசியாரும் மன்னனை வணங்கி, “இது தீய அமணர் தூய அடியார்க்குச் செய்த தீங்கின் பயனே யாகும். திருஞானசம்பந்தப் பெருமான் அருளால் இது தீரும்” என்றார்கள்.

மீனவன் செவியின் ஊடு மெய்யுணர்வு உடையோர் கூற
ஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரமும் செல்ல
ஆனபோது அயர்வு தன்னை அகன்றிட, அமணராகும்
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்.

திருஞானசம்பந்தர் என்ற திருமந்திரமானது, உத்தமர்கள் கூறச் செவியில் நுழைந்தபோது மன்னவனுக்குச் சிறிது அயர்வு தீர்ந்தது. அவரை அழைத்து வருமாறு பணித்தான்.

திருஞானசம்பந்தர் அங்கு எழுந்தருளினார். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெப்பு நோய் சிறிது தீர்ந்தது. “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகம் ஓதி திருநீற்றைச் சுவாமிகள் பூசியவுடன் வெப்புநோய் நீங்கி மீனவன் உய்வு பெற்றான்.

சமணர் அத்தனை பேரும் பொடிபட ---

நாங்கள் தோற்றால் கழுவில் ஏறுவோம்’ என்று சமணர் கூறியபடி, அனல் வாதம் புனல் வாதம் புரிந்து தோற்றபடியால், குலச்சிறையாரது ஆணையால் எண்ணாயிரம் சமணர்களும் கழுவில் ஏறினார்கள்.

பண்புடை அமைச்சனாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடியிட்ட
எண்பெருங் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்.    --- பெரியபுராணம்.

சிவமணப்பொடி பரப்பிய திருப்புகலியிற் கவுணியப் புலவோனே ---

மன்னவனுக்கு திருஞானசம்பந்தர் திருநீறு வழங்கினார். அவன் அதனை இருகரத்தும் ஏந்தி அணிந்து இன்புற்றான். அதனைக் கண்ட மக்கள் அனைவரும் திருநீறு இட்டு சைவர்கள் ஆனார்கள்.

தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்,
முன்னவன் பணிந்து கொண்டு, முழுவதும் அணிந்து நின்றான்,
மன்னன் நீறு அணிந்தான் என்று, மற்று அவன் மதுரை வாழ்வார்,
துன்னி நின்றார்கள் எல்லாம் தூயநீறு அணிந்து கொண்டார்.   --- பெரியபுராணம்.

சிவமாய்த் தேன்அமுது ஊறும்
திருவாக்கால் ஒளிசேர்வெண்
திருநீற்றால் அமராடும் சிறியோனே...         --- தவர்வாள் (திருப்புகழ்)

குவளை நித்தமு மலர்தரு செருத்தணி ---

செரு-போர். சூராதி யவுணருடன் செய்த போரின் வேகந் தணிந்தபடியால் ‘செருத்தணி’யெனப் பேர் பெற்றது. இத்திருத்தலத்தில் செங்கழுநீர் சுனையில் தினம் தினம் மலர் மலர்ந்து அர்ச்சனைக்கு ஆகும். அற்புதமான அரிய பெரிய திருத்தலம் திருத்தணிகை.

கருத்துரை

தணிகேசா! பிறவித்துயர் அகல உனது பதமலரைச் சேர அருள்செய்.


No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...