திருத்தணிகை - 0273. கிரி உலாவிய




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கிரி உலாவிய (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
மாதர் மயலைவிட்டு, உமது திருவடி பெற மயில் மீது வருவாய்

தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான


கிரியு லாவிய முலைமிசை துகிலிடு
     கபட நாடக விரகிக ளசடிகள்
          கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே

க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள்
     முழுது நாறிக ளிதமொழி வசனிகள்
          கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் .....பொருளாலே

பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்
     அதிக மாவொரு பொருள்தரு பவரொடு
          பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே

பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
     தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை
          பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே

அரிய ராதிபர் மலரய னிமையவர்
     நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ
          அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக .....இளையோனே

அரிய கானக முறைகுற மகளிட
     கணவ னாகிய அறிவுள விதரண
          அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
     சரிவு றாநிலை பெறுதவ முடையவர்
          தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர்

சகல லோகமு முடையவர் நினைபவர்
     பரவு தாமரை மலரடி யினிதுற
          தணிகை மாமலை மணிமுடி யழகியல் .....பெருமாளே.


பதம் பிரித்தல்


கிரி உலாவிய முலைமிசை துகில் இடு
     கபட நாடக விரகிகள், சடிகள்,
          கெடு வியாதிகள் அடைவு உடை உடலினர், ...... விரகாலே

க்ருபையின் ஆரொடும் மணமிசை நழுவிகள்,
     முழுது நாறிகள், தமொழி வசனிகள்,
          கிடையின் மேல் மனமு உருகிட தழுவிகள், .....பொருளாலே

பரிவு இலா மயல் கொடு சமர் புரிபவர்,
     அதிகமா ஒரு பொருள் தருபவரொடு
          பழைய பேர் என இதம்உற அணைபவர், .....விழியாலே

பகழி போல் விடு வினை கவர் திருடிகள்,
     தமை எணாவகை, உறு கதி பெரும்வகை,
          பகர மாமயில் மிசைவர நினைவதும் ......ஒருநாளே?

அரி அர அதிபர் மலர்அயன், மையவர்
     நிலைபெறாது, டர் பட, உடன் முடுகியெ
          அசுரர் தூள்பட, அயில் தொடும் அறுமுக!..... இளையோனே!

அரிய கானகம் உறை குறமகள் இட
     கணவன் ஆகிய, அறிவு உள, விதரண
          அமரர் நாயக! சரவணபவ! திறல் ......உடையோனே!

தரும நீதியர், மறைஉளர், பொறைஉளர்,
     சரிவு உறா நிலைபெறு தவம் உடையவர்,
          தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் .....பரராஜர்

சகல லோகமும் உடையவர், நினைபவர்
     பரவு தாமரை மலரடி இனிது உற
          தணிகை மாமலை மணிமுடி அழகியல் .....பெருமாளே.


பதவுரை


      அரி அர அதிபர் --- திருமால் உருத்திரன் என்னுந் தலைவர்,

     மலர் அயன் --- தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவர்,

     இமையவர் --- தேவர்கள் ஆகிய இவர்கள்,

     நிலைபெறாது இடர் பட --- தத்தம் தொழில்களில் நிலைபெற வொட்டாமல் அசுரர்களால் துன்பப்பட,

     உடனே முடுகி --- உடனே விரைந்து சென்று,

     அசுரர் தூள்பட --- சூராதியவுணர்கள் பொடிபட,

     அயில் தொடும் அறுமுக --- வேலாயுதத்தை விடுத்தருளிய ஆறுமுகப் பெருமானே!

       இளையோனே --- என்றும் இளையவரே!

       அரிய கானகம் உறை --- அருமையான காட்டில் வாழ்கின்ற,

     குறமகள் இட கணவன் ஆகிய --- வள்ளி பிராட்டியின் நாயகர் ஆகிய

      அறிவு உள விதாரண ய--- ஞானமுள்ள வழங்குந் தன்மையுடையவரே!

      அமரர் நாயக --- தேவர்கட்குத் தலைவரே!    
          
     சரவணபவ --- சரவணப் பொய்கையில் தோன்றியவரே!

      திறல் உடையோனே --- ஆற்றல் படைத்தவரே!

      தரும நீதியர் --- தரும நீதி வாய்ந்தவர்களும்,

     மறை உளர் --- வேதங்களைக் கற்றவர்களும்,

     பொறை உளர் --- பொறுமை வாய்ந்தவர்களும்,

     சரிவு உறாநிலை பெறு தவம் உடையவர் --- தவறுதல் இன்றி நிலைத்த தவத்தில் உறுதி பெற்றவர்களும்,

     தளர்வு இலா மனம் உடையவர் --- தளர்ச்சியில்லாத மன உறுதியுடையவர்களும்,

     அறிவினர் --- அறிஞர்களும்,

     பர ராஜர் --- மேலான அரசர்களும்,

     சகல லோகமும் உடையவர் --- எல்லா உலகங்கட்குந் தலைவர்களும்,

     நினைபவர் --- நினைந்து போற்றும் அடியார்களும்,

     பரவு தாமரை மலர் அடி இனிது உற --- துதி செய்கின்ற தாமரை மலர் போன்ற திருவடி இனிது பொருந்த,

     தணிகை மாமலை மணிமுடி அழகு இயல் --- சிறந்த திருத்தணி மலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும்,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

      கிரி உலாவிய முலைமிசை துகில் இடு --- மலை போன்ற தனத்தின்மீது ஆடையை அணிந்துள்ள,

     கபட நாடக விரகிகள் --- கள்ளத்தனமாக நடிக்கும் உபாயக்காரிகளும்,

     அசடிகள் --- அறிவில்லாதவர்களும்,

     கெடு வியாதிகள் அடைவு உடை உடலினர் --- கெட்ட நோய்கள் இடங்கொண்டுள்ள உடம்பையுடையவர்களும்,

     விரகாலே --- தங்கள் சாமர்த்தியத்தாலே,

     க்ருபையினரொடு மணமிசை நழுவிகள் --- தங்கள் மீது கருனை வைத்தவர்களோடு கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறி பின்பு அதிலிருந்து நழுவுகின்றவர்களும்,

     முழுதும் நாறிகள் --- முழுதும் துர்நாற்றம் வீசுபவர்களும்,

     இதமொழி வசனிகள் --- இனிமையாகப் பேசுபவர்களும்,

     கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் --- படுக்கை மீது மனம் உருகும்படி தழுவுகின்றவர்களும்,

     பொருளாலே பரிவு இலா மயல் கொடு சமர் புரிபவர் --- பொருள் காரணமாக அன்பு இல்லாத மயக்கத்துடன் சண்டை பிடிப்பவர்களும்,

     அதிகமாக ஒரு பொருள் தருபவரொடு --- அதிகமாக ஒரு பொருளை யார் தருகின்றார்களோ அவர்களுடன்,

     பழைய பேர் என --- பழைய உறவினர் போலே,

     இதம் உற அணைபவர் --- இன்பம் உண்டாகும்படி அனைபவர்களும்,

     விழியாலே பகழிபோல் விடு வினை கவர் திருடிகள் தமை
--- கண்கள் அம்புபோல் செலுத்திக் காரியத்தை வெல்லுகின்ற திருடிகளும் ஆகிய பொது மாதர்களை,

     எணா வகை --- அடியேன் எண்ணாதபடி,

     உறுதி பெறும் வகை --- அடையக் கூடிய
நற்கதியைப் பெறுமாறு,

     பகர மாமயில் மிசை --- அழகிய சிறந்த மயிலின்மீது

     வர நினைவதும் ஒரு நாளே --- வருவதைத் தேவரீர் நினைக்கும்படியான ஒரு நாள் உண்டாகுமோ?


பொழிப்புரை


         திருமால் உருத்திரன் என்ற தலைவர்களும், தாமரையில் இருக்கும் பிரமதேவரும், மற்ற தேவர்களும், தத்தம் தொழில் நிலைபெற ஒட்டாமல் அசுரர்களால் துன்பப்பட, அவர்களது துன்பம் நீங்கும்படி உடனே விரைந்து சென்று, அசுரர்கள் துகள் படும்படி வேலாயுதத்தை விடுத்தருளிய ஆறுமுகப் பரம்பொருளே!

     என்றும் இளையவரே!

     அருமையான வனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் கணவராகிய ஞானமிகுந்த கொடையாளியே!

     தேவர்களின் தலைவரே!

     சரவணபவரே!

     பேராற்றல் படைத்தவரே!

     தரும நீதியரும், வேத வித்தகர்களும், பொறுமை உள்ளவர்களும், தவறுதல் இன்றி நிலைத்த தவசீலர்களும், தளர்ச்சியில்லாத மனம் உடையவர்களும், அறிஞர்களும் மேலான அரசர்களும், எல்லா உலகங்கட்கும் தலைவர்களும், நினைந்து போற்றும் அடியார்களும் துதி செய்கின்ற தாமரை மலர் போன்ற திருவடி இனிது பொருந்தச் சிறந்த திருத்தணி மலையின்மீது உச்சியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         மலைபோன்ற தனத்தின்மீது ஆடையை அணிந்துள்ள கபடநாடகம் ஆடுகின்ற உபாயக்காரிகளும், அறிவு இல்லாதவர்களும், கெட்ட நோய்கள் இடங் கொண்டுள்ள உடம்பை உடையவர்களும், தங்கள் சாமர்த்தியத்தால் தங்கள் மீது கருணை வைத்தவர்களோடு கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று கூறி பின்பு நழுவுகின்றவர்களும்; முழுதும் துர்நாற்றம் வீசுகின்றவர்களும், இனிமையாகப் பேசுகின்றவர்களும், படுக்கையின் மீது மனம் உருகும்படி அணைபவர்களும், பொருள் காரணமாக அன்பில்லாமல் மயக்கத்தோடு சண்டை போடுபவர்களும், நிரம்பப் பனம் தருகின்றவர்களிடம் பழைய உறவினரைப் போல், இன்பம் உண்டாகும்படித் தழுவுகின்றவர்களும், கண்களாகிய அம்புகளை விடுத்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்ற திருடிகளும், ஆகிய விலைமாதர்களை அடியேன் நினையாமல், அடையக் கூடிய முத்தி வீட்டைப் பெறுமாறு, அழகிய சிறந்த மயிலின் மீது நீர் வருவதை நினைக்கின்ற ஒருநாள் எனக்குக் கிடைக்குமோ?


விரிவுரை

இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகளில் விலை மகளிரின் சாகசங்களை அடிகளார் கூறுகின்றார்.

அரிஅர அதிபர் மலர்அயன் இமையவர் நிலைபெறாது இடர்பட ---

நாராயணர், உருத்திரன், பிரமன், இந்திராதி இமையவர் ஆகிய இவர்கள் தங்கள் கருமங்களை ஒழுங்காகச் செய்யாதபடி சூராதியவுணர்கள் துன்புறுத்தினார்கள். மூவருந் தேவரும் துன்புறுவதைக் கண்டு முருகவேள் வேல்விட்டு சூராதியவுணர்கைளைப் பொடியாக்கிப் பழையபடி மும்மூர்த்திகளையும் தத்தம் தொழிலில் இருத்தி அருள் புரிந்தார்.

அறுமுக ---

1. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேல், கீழ் என்ற ஆறு திசைகலையும் பார்க்கின்ற ஆறுமுகங்களை உடையவர்.

2. பராசக்தி, ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, குடிலா சக்தி என்ற ஆறு சக்திகளும் ஆறுமுகங்கள் என்க.

3. , , , நாதம், விந்து, கலை என்ற ஆறும் ஆறுமுகங்கள் என்ப.

4. மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை, தத்துவம் என்ற ஆறு அத்துவாக்களே ஆறுமுகங்கள் என்ப.

5. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்களே ஆறுமுகங்கள் என்ப.

6. சருவஞ்ஞிதை, திருப்தி, அநாதிபோதம், அலுப்தசக்தி, அநந்த சக்தி, சுவதந்திரத்வம் என்ற ஆறு அருட் குணங்களே ஆறுமுகங்கள் என்ப.

ஏவர்தம் பாலும் இன்றி எல்லை தீர் அமலர்க்கு உள்ள
 மூவிருகுணனும் சேய்க்கு முகங்களாய் வந்தது என்ன”        --- கந்தபுராணம்.

இளையோனே ---

முருகன் என்றும் இளையவர். அதனால் அவர் குமாரசுவாமி எனவும், பாலசுப்ரமண்யர் எனவும், வட நாட்டாரால் பாலாஜி எனவும் அழைக்கப்படுகின்றார்.

என்றும் அகலாத இளமைக்கார”  ---(சந்தன சவாது) திருப்புகழ்.

அறிவுள விதாரண---

விதாரணம்-நன்கொடை. முருகன் ஞானாகரனாக இருந்து தன் அடியார்கட்கு எல்லா நலன்களையும் அருள வல்லான் “யார் வேண்டினாலும் கேட்ட பொருளீயும் தியாகாங்க சீலன்” முருகன்

அடியவர் இச்சையில் எவை எவை யுற்றன
   அவைதரு வித்தருள் பெருமாளே”               -– (கலகலென) திருப்புகழ்

தருமநீதியர் ---

தருமநெறி நின்று நீதி தவறாது ஒழுகுபவர்கள்.

சரிவுறா நிலைபெறு தவமுடையவர் ---

இடையில் அழிந்து போகாத நிலைபெற்ற உறுதியான தவமுடையவர்கள்;

தவம் ஆசையாலும் கோபத்தாலும் அழிந்துவிடும். விசுவாமித்திரர் பல்லாண்டு தவம் செய்தார். காமத்தாலும், கோபத்தாலும் அவருடைய தவம் இடையிடையே அழிந்து விட்டது.

தவஞ் செய்வோர்கள் வெருவரச் சென்றடை காமவெகுளி என” என்று அவரே கூறுகின்றார்.

தளர்விலா மனமுடையவர் ---

ஒரு கருமஞ் செய்யும்போது மனத்தில் தளர்ச்சி வரக் கூடாது. விடாப்பிடியாக உறுதியுடன் செய்யவேண்டும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் சிவத்தைத் தரிசிக்க வேண்டும் என்று திருக்கயிலை மலைக்குச் சென்றார். கால்கள் தேய்ந்தன; கையால் ஊன்றிச் சென்று கைகள் தேய்ந்தன; மார்பில் தவழ்ந்தார். திருமேனியுந் தேய்ந்தது. அப்போதும் அவருடைய மனந் தளரவில்லை. மன உறுதி மேலும் வலுப்பட்டது. அங்கே சிவபெருமான் ஒரு மாதவ வேதியராகத் தோன்றி, “நீர் எங்கு செல்கின்றீர்?” என்று கேட்டார். “ஐயா! நான் கயிலாய மலைக்குச் செல்லுகின்றேன்” என்றார் அப்பர் பெருமாங் “அன்பரே! கயிலையங்கிரியை மண்ணூலகத்தோர் அடைய முடியுமோ? அது எளிதன்று. அது அமரரும் அடைவதற்கு அரிது. வெப்பத்தால் கொதிக்கின்ற இவ்விடத்திற்கு வந்தீரே! திரும்பிப் போம் என்றார்.

"கயிலை மால்வரையாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ?
அயில்கொள் வேற்படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில்கொள் வெஞ்சுரத்து என்செய்தீர் வந்து" என விளம்பி.    --- பெரியபுரானம்.

இதனைக் கேட்ட அப்பர்பெருமான், “அருந்தவ முனிவரே! என்று இருந்தாலும் ஒரு நாள் இவ்வுடல் மாண்டு ஒழியும். ஆதலால் கயிலையில் கண்ணுதற் பெருமானைக் கண்டால் அல்லது திரும்பேன்” என்றார். எத்தனை உறுதி?

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என, விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல்முனி சொல்ல,
"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டுஅல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என மறுத்தார்.         --- பெரியபுராணம்

இத்தகைய உறுதியுடையவரே பெரியோர்.

பரவு தாமரை மலரடி இனிதுற தணிகை ---

முனிவர், மறையோர், ஞானிகள், பக்தர்கள், அரசர்கள் முதலிய அனைவரும் துதிசெய்யும் தகைமை வாய்ந்தது திருத்தணிமலை.


கருத்துரை


திருத்தணி மலை நாயக! மாதர் வசப்படாது நற்கதி பெற மயில்மிசை வந்தருளி யாட்கொள்வாய்.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...