திருத்தணிகை - 0272. கனைத்து அதிர்க்கும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனைத்து அதிர்க்கும் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உன்னை நினைந்து உருகும் ஆன்மாவாகிய இந்த தலைவியை 
உன்னுடன் சேர்த்து அருவாய்.

தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
     தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான


கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
     கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே

தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
     தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ

தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
     திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே

பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
     படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு கார்க் கடல் ...... ஒன்றினாலே,
     கறுத்து அறச் சிவத்து, ங்கி வாய்த்து எழு ...... திங்களாலே,

தனிக் கருப்பு வில் கொண்டு வீழ்த்த  ...... சரங்களாலே,
     தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை ......சழங்கலாமோ?

தினைப் புனத்தினைப் பண்டு காத்த, ...... மடந்தை கேள்வா!
     திருத்தணிப் பதிக் குன்றின் மேல்திகழ் ...... கந்தவேளே!

பனைக் கரக் கயத்து அண்டர் போற்றிய ...... மங்கைபாகா!
     படைத்து அளித்து, ழிக்கும் த்ரிமூர்த்திகள் ...... தம்பிரானே.


பதவுரை

      தினைப் புனத்தினை --- தினைப்பயிர் விளையும் கொல்லையை,

     பண்டு காத்த --- முன்னாள் காவல் புரிந்த,

     மடந்தை கேள்வா --- வள்ளி பிராட்டியாரின் கணவரே!

      திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் --- திருத்தணி என்ற திருத்தலமாகிய மலைமீது திருவுருவந்தாங்கி நின்றருளும்,

     கந்தவேளே --- கந்தக்கடவுளே!

      பனை கர கயத்து அண்டர் --- பனைமரம் போன்ற தும்பிக்கையை உடைய வெள்ளையானைக்கு உரியவர்களான தேவர்கள்,

     போற்றிய மங்கை பாகா --- வளர்த்த தெய்வயானையம்மையை ஒரு பாகத்தில் வைத்தவரே!

      படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் --- ஆக்கி அளித்து ஒடுக்கும் மும் மூர்த்திகளின்,

     தம்பிரானே --- தலைவரே!

      கனைத்து அதிர்க்கும் --- ஒலித்து அதிர்கின்ற,

     இப் பொங்கு கார்கடல் ஒன்றினாலே --- இந்தப் பொங்குகின்ற கரிய கடல் ஒன்றினாலும்,

     கறுத்து அற சிவத்த --- கோபித்து மிகவும் சிவந்து,

     அங்கி வாய்த்து எழும் திங்களாலே --- நெருப்புத் தன்மையைப் பூண்டு உதித்த நிலவினாலும்,

     தனி கரும்புவில் கொண்டு வீழ்த்த --- ஒப்பற்ற கரும்பு வில்லையேந்தி மன்மதன் செலுத்திய,

     சரங்களாலே --- அம்புகளாலும்,

     தகைத்த ஒருத்தி எய்த்து --- வாட்டமடைந்த தனித்த ஒருத்தியாம் தலைவியாகிய இவள் இளைப்புற்று,

     இங்கு யாக்கை சழங்கலாமோ --- இங்கு உடல் சோர்வு அடையலாமோ?

பொழிப்புரை

         முன்னாள் தினைப்புனங்காத்த வள்ளிநாயகியின் கணவரே!

     திருத்தணி என்ற திருப்பதியின் மீது திருவுருவுடன் நின்றருளும் கந்தக் கடவுளே!

     பனைபோன்ற துதிக்கையையுடைய ஐராவத யானைக்கு உரியவரான தேவர்கள் வளர்த்த தெய்வயானையம்மையை ஒரு பக்கத்தில் கொண்டவரே!

     படைத்துக் காத்து ஒடுக்கும் மும்மூர்த்திகளுக்குந் தனிப்பெருந் தலைவரே!

         ஒலித்து, அதிர்ந்து பொங்குகின்ற இந்தக் கருங்கடலாலும், கோபித்து மிகச் சிவந்து நெருப்பைப்போல் உதிக்கின்ற சந்திரனாலும், ஒப்பற்ற கரும்பு வில்லை யேந்தி மன்மதன் ஏவுகின்ற மலர்க்கணையாலும், வாடித் தனித்த இவள் இளைத்து இங்கு உடம்பு சோர்வு அடையலாமோ?


விரிவுரை


இந்தத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. நாயகீ நாயக பாவத்தில் பாடியருளியது. ஆன்மாவை நாயகியாகவும் முருகனாகிய பரமான்மாவை நாயகனாகவும் வைத்து அமைந்த திருப்புகழ்ப் பாடல்கள் பல; அவற்றுள் இது ஒன்று.

கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு கார்க்கடல்
ஒன்றினாலே ---

நாயகனைச் சேர விரும்பும் நாயகிக்குக் கடலோசை மேலும் மேலும் இன்ப வேட்கையை அதிகப்படுத்தும். மன்மதனுக்கு முரசு கடல். “தொல்லை நெடு நீலக்கடலாலே மெய்யுருகு மான்” என்று வள்ளிமலைத் திருப்புகழ்ப் பாடலிலும் கூறுகின்றார்.

றுத்த அறச் சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே ---

பிரிவுத் துன்பத்தை ஒன்றுக்கு ஆயிரமாக அதிகப்படுத்துவது முழுநிலா. காமுகர்க்கு பூரண சந்திரனுடைய அமிர்த கிரணம் நெருப்பையள்ளி வீசுவதுபோல் துன்பத்தைத் தரும். “தினகரனென வேலையிலே சிவந்துதிக்கும் மதியாலே” என்கின்றார் சுவாமிமலைப் பாடலில்.

தனிக் கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே ---

மன்மதன் ஒப்பற்ற கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் மாட்டி, அரும்புக்கணை தொடுத்துத் துயரை விளைவிப்பான்.

தகைத்து ஒருத்தி எய்த்துஇங்கு யாக்கை சழங்கலாமோ ---

ஒருத்தியாகிய தனிமாது உம்மை மருவாது, இளைத்து வாடி உடல் மெலிவது நியாயமோ! முருகா! நீர் வந்து இவளைத் தழுவி விரகநோயைத் தணித்து ஆட்கொள்ளும்.

பனைக்கரக் கயத்து அண்டர் ---

யானையின் கை பனைபோல் திரண்டு உருண்டு நீண்டு இருக்கும்.

       பனைக்கைமுக படக்கரட மதத் தவள கசக் கடவுள்”           --- வேல்வகுப்பு

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரான் ---

சூட்சுமத்திலிருந்து உலகைத் தூலமாகச் செய்வது சிருட்டி. அதை நிலைபெறுத்திச் சில காலம் வைத்திருப்பது இரட்சகம். மீளவும் தூலத்திலிருந்து சூட்சுமத்தில் ஒடுக்கி விடுவது சம்மாரம்.

உலகை இறைவன் நூதனமாக உண்டாக்குவது கிடையாது. உயிர்களின் நன்மைக்காக சூட்சுமத்தைத் தூலமாக்குகின்றான். இந்த முத்தொழில்களையும் முறையே அயன், அரி, அரன் என்ற முத்தேவர்களைக் கொண்டு செய்விக்கின்றான். மூவர்க்குந் தேவர்க்கும் முழுப்பெரும் தலைவன் முருகன்.

   படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
       புரக்கக் கஞ்சைமன்             பணியாகப்
   பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
       பரத்தைக் கொண்டிடும்        தணிவேலா”     --- (தடக்கைப்) திருப்புகழ்.

கருத்துரை

திருத்தணித் தெய்வநாயகனே! ஆன்மாவாகிய இந்த நாயகியை உன்னில் சேர்த்து அருள் செய்ய வேண்டும்.








12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...