திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்.




திரு ஆவூர்ப்பசுபதீச்சுரம்
(ஆவூர்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீச்சுரம் என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இறைவர்                  : பசுபதீசுவரர், அஸ்வத்தநாதர்ஆவூருடையார்

இறைவியார்               : மங்களாம்பிகை, பங்கஜவல்லி.

தல மரம்                   : அரசு

தீர்த்தம்                    : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - புண்ணியர் பூதியர்


     ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

         வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகிற்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகிலுள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது.

     கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஆவூர் பசுபதீசுவரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிட்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.

         இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணையால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வனையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும. தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர்.

         இத்தலத்தில் தசரதர் சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை உட்பிரகாரத்தில் நாம் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உட்பிரகாரத்திலுள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

         தலவிருட்சமாக அரசமரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகியவை உள்ளன. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனுதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் ஆர்ந்த மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 375
பழுதுஇல் சீர்த்திருப் பரிதிநன் னியமமும் பணிந்து, அங்கு
எழுது மாமறை ஆம்பதி கத்துஇசை போற்றி,
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே, முறைமை
வழுஇல் சீர்திருப் பூவனூர் வணங்கிவந்து அணைந்து.

         பொழிப்புரை : குற்றங்கள் இல்லையாகச் செய்யும் சிறப்புடைய `திருப்பரிதி நியமத்ததை' வழிபட்டு, அங்கே எழுதும் மறையாகும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி, முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய `திருப்பூவனூரை' வந்து சேர்ந்து,


பெ. பு. பாடல் எண் : 376
பொங்கு காதலில் போற்றி, அங்கு அருளுடன் போந்து,
பங்க யத்தடம் பணைப்பதி பலவும் முன் பணிந்தே,
எங்கும் அன்பர்கள் ஏத்துஒலி எடுக்கவந்து அணைந்தார்
அங்க ணர்க்குஇடம் ஆகிய பழம்பதி ஆவூர்.

         பொழிப்புரை : வளரும் விருப்ப மிகுதியினால் போற்றி அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, தாமரை மலர்களையுடைய பெரிய வயல்கள் சூழ்ந்த பதிகள் பலவும் போற்றி, அன்பர்கள் யாண்டும் ஒலிபெருக வாழ்த்தி வரச் சிவபெருமான் அமர்ந்தருளும் பழைய பதியான `திரு ஆவூரினை' அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 377
பணியும் அப்பதிப் பசுபதீச் சரத்துஇனிது இருந்த
மணியை உள்புக்கு, வழிபடும் விருப்பினால் வணங்கி,
தணிவுஇல் காதலில் தண்தமிழ் மாலைகள் சாத்தி,
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.

         பொழிப்புரை : பணியும் அப்பதியில், பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்தருளும் மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரின்கண் மீண்டும் வந்தடைந்தார்.

         திருஆவூர் - ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் - கோயில் பெயர். இங்கு அருளிய பதிகம் `புண்ணியர்' (தி.1 ப.8) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.008  திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்           பண் –  நட்டபாடை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புண்ணியர், பூதியர், பூதநாதர் ,
         புடைபடு வார்தம் மனத்தார், திங்கள்
கண்ணியர் என்றுஎன்று, காதலாளர்
         கைதொழுது ஏத்த இருந்தஊராம்,
விண்உயர் மாளிகை, மாடவீதி,
         விரைகமழ் சோலை சுலாவி, எங்கும்
பண்இயல் பாடல் அறாத, ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப் பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.

பாடல் எண் : 2
முத்தியர், மூப்புஇலர், ஆப்பின்உள்ளார்,
         முக்கணர், தக்கன்தன் வேள்விசாடும்
அத்தியர், என்றுஎன்று அடியர்ஏத்தும்
         ஐயன், அணங்கொடு இருந்த ஊராம்,
தொத்துயி லும்பொழில் மாடு,வண்டு
         துதைந்து, எங்கும் தூமதுப் பாய் அக்கோயில்,
பத்திமைப் பாடல் அறாத, ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்பு இலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச் சரத்தை நாவே தொழுது பாடுவாயாக.

பாடல் எண் : 3
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்,
         போம்வழி, வந்துஇழிவு, ஏற்றம்ஆனார்,
இங்குஉயர் ஞானத்தர் வானோர் ஏத்தும்
         இறையவர் என்றும் இருந்தஊராம்,
தெங்குஉயர் சோலைசேர் ஆலை, சாலி
         திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வான வரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர், உயரமாக வளர்ந்த தென்னஞ்சோலைகளும், கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள் சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
  
பாடல் எண் : 4
தேவியொர் கூறினர் ஏறுஅதுஏறும்
         செலவினர், நல்குரவு என்னைநீக்கும்
ஆவியர், அந்தணர்,  அல்லல்தீர்க்கும்
         அப்பனார், அங்கே அமர்ந்தஊராம்,
பூஇய லும்பொழில் வாசம்வீச,
         புரிகுழ லார்சுவடு ஒற்றிமுற்ற,
பாஇயல் பாடல் அறாத, ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :உமாதேவியை ஒரு பாதியாக உடையவர், இடப வாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர், பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே பாடுவாயாக.

பாடல் எண் : 5
இந்துஅணை யும்சடை யார்,விடையார்,
         இப்பிறப்பு என்னை அறுக்கவல்லார்,
வந்துஅணைந்து இன்னிசை பாடுவார்பால்
         மன்னினர், மன்னி இருந்த ஊராம்,
கொந்துஅணை யும்குழ லார்விழவில்
         கூட்டம் இடைஇடை சேரும்வீதி,
பந்துஅணையும் விர லார்தம் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.
  
பாடல் எண் : 6
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார் ,
         கும்பிடு வார்தமக்கு அன்புசெய்வார்,
ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார்,
         உறைபதி ஆகும், செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
         சொல்கவி பாட, நிதானம் நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக்கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக்காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவிபாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.

பாடல் எண் : 7
நீறுஉடை யார், நெடு மால்வணங்கும்
         நிமிர்சடை யார்,நினை வார்தம் உள்ளம்
கூறுஉடை யார்,உடை கோவணத்தார்,
         குவலயம் ஏத்த இருந்த ஊராம்,
தாறுஉடை வாழையில் கூழைமந்தி
         தகுகனி உண்டு, மிண் டிட்டு, இனத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்தாற்றில் உண்ணத்தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
  
பாடல் எண் : 8
வெண்தலை மாலை விரவிப்பூண்ட
         மெய்உடை யார், விறல் ஆர்அரக்கன்
வண்டுஅமர் பூமுடி செற்றுஉகந்த
         மைந்தர் இடம்,வளம் ஓங்கிஎங்கும்,
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்,
         கதிஅருள் என்றுகை ஆரக்கூப்பிப்
பண்டுஅலர் கொண்டு பயிலும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும் வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக்கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
  
பாடல் எண் : 9
மாலும் அயனும் வணங்கிநேட ,
         மற்றுஅவ ருக்குஎரி ஆகிநீண்ட
சீலம் அறிவுஅரிது ஆகிநின்ற
         செம்மையி னார்,அவர் சேரும்ஊராம்,
கோல விழாவின் அரங்குஅது ஏறிக்
         கொடிஇடை மாதர்கள் மைந்தரோடும்
பால்என வேமொழிந்து ஏத்தும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :திருமாலும் பிரமனும் வணங்கித் தேட, அவர்கட்குச் சோதிப்பிழம்பாய் நீண்டு தோன்றிய, அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர், அழகிய விழாக்காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப் பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
  
பாடல் எண் : 10
பின்னிய தாழ்சடை யார், பிதற்றும்
         பேதையர் ஆம்சமண் சாக்கியர்கள்
தன்இய லும்உரை கொள்ளகில்லாச்
         சைவர் இடம், தளவு ஏறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
         சுனைஇடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப்
         பசுபதி யீச்சரம் பாடுநாவே.

         பொழிப்புரை :பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப் பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

பாடல் எண் : 11
எண்திசை யாரும்வ ணங்கி ஏத்தும்
         எம்பெரு மானை, எழில்கொள் ஆவூர்ப்
பண்டுஉரி யார்சிலர் தொண்டர்போற்றும்
         பசுபதி யீச்சரத்து ஆதிதன் மேல்,
கண்டல்கள் மிண்டிய கானல்காழிக்
         கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டு,இனிதா இசை பாடிஆடிக்
         கூடும் அவர்உடை யார்கள்வானே.

         பொழிப்புரை :எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால் போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.
                                             திருச்சிற்றம்பலம்

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...