திரு நல்லூர்




திரு நல்லூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள ஊர் பாபநாசம். பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற ஊரில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. பாபாநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக கோவிந்தக்குடி செல்லும் சாலை வழியிலும் செல்லலாம்.

இறைவர்          : கல்யாணசுந்தரேசுவரர், பஞ்சவர்ணேசுவரர்பெரியாண்டேசுவரர்.

இறைவியார்      : கல்யாணசுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.

தல மரம்          : வில்வம்.

தீர்த்தம்           : சப்தசாகர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர். 1. கொட்டும் பறைசீரால்,
                                                      2. பெண்ணமரும் திருமேனி,
                                                      3. வண்டிரிய விண்டமலர்

                                        2. அப்பர் -  1. அட்டுமின் இல்பலி யென்றன்,
                                                               2. நினைந்துருகும் அடியாரை.

     இவ்வாலயம் கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய ஒரு மாடக்கோயிலாகும். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும், அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார்.

     இதையடுத்து வடதுபுறம் வசந்த மண்டபமும், தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. அம்பாள் கிரிசுந்தரி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர், காசி விநாயகர், பாணலிங்கம், விஸ்வநாதர், முருகன், நால்வர், குந்திதேவி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரை மண்டபங்களிலும், பிரகாரத்திலும் தரிசிக்கலாம். தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது. இதை "ஆதிமரம்' என அழைக்கின்றனர்.

         நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.

அமர்நீதி நாயனார் வரலாறு

         சோழ நாட்டிலே, பழையாறை என்னும் பழம்பதியிலே, வணிகர் குலத்தின் தோன்றியவர் அமர்நீதியார். அளவில்லாச் செல்வம் அவருக்கு உண்டு. அச் செல்வத்தை, அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்தல், அவர்களுக்குக் கோவணம், கீள், கந்தை, உதை அளித்தல் முதலிய திருத்தொண்டுகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

         திருநல்லூர் என்னும் திருத்தலத்திலே நடைபெறும் திருவிழாவைக் காணச் செல்வது வழக்கம். அவ்விடத்தில் அடியவர்களுக்கு அமுது செய்விக்குப் பொருட்டு  நாயனார் திருமடம் ஒன்றினைச் சமைத்தார். நாயனார் சுற்றத்தவர்களுடன் அத் திருமடத்தில் தங்கித் தம் தொண்டுகளை ஆற்றி வரலானார்.

         நாயனாருக்கு அருள் சுரக்க வேண்டி, சிவபெருமான் ஒரு வேதியராய் பிரமசாரி வடிவம் தாங்கி, இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பையும் கட்டப்பட்ட ஒரு தண்டினை ஏந்தித் திருமடம் நோக்கி வந்தார்.  அமர்நீதி நாயனார் அவரை முறைப்படி வணங்கினார்.  வேதியர் நாயனாரை நோக்கி, "உமது திருத்தொண்டைக் கேள்வியுற்று உம்மைக் காண வந்தோம்" என்றார். அது கேட்ட நாயனார், "இங்கே அந்தணர்கள் அமுது செய்ய அந்தணர்களால் சமைக்கப் பெற்ற அமுதும் உண்டு" என்று வணங்கினார். பிரமசாரியார், "காவிரியில் நீராடி வருவோம். ஒருவேளை மழை வரினும் வரும்.  இந்த உலர்ந்த கோவணத்தை வைத்திருந்து கொடும்" என்று, தண்டில் உள்ள ஒரு கோவணத்தை அவிழ்த்து, "இதன் பெருமையை உமக்குச் சொல்ல வேண்டுவது இல்லை.  இதனை இகழாமல் வைத்துக் கொடும்" என்று அதனை நாயனாரிடம் அளித்துச் சென்றார்.  நாயனார், அக் கோவணத்தை ஒரு தனி இடத்தில் சேமித்து வைத்தார்.

         திருவருளால் அக் கோவணம் மறைந்தது.  வேதியர் நீராடி மழையில் நனைந்து வந்தார். திருமடத்தில் திருவமுதும் சித்தமாய் இருந்தது.  வேதியராக வந்த சிவபெருமான், 'தொண்டர் அன்பு என்னும் தூய நீர் ஆடுதல் வேண்டி', நாயனாரைப் பார்த்து, "ஈரத்தை மாற்றல் வேண்டும். தண்டில் உள்ள கோவணமும் ஈரமாய் இருக்கிறது. ஆதலால், உம்மிடம் அளித்த கோவணத்தைக் கொண்டு வாரும்" என்றார்.  நாயனார் கோவணத்தைக் கொண்டுவரச் சென்றார்.  கோவணத்தைக் கண்டாரில்லை. பாவம். தேடுகிறார். திகைக்கிறார்.  ஓடுகிறார். அலைகிறார். "துன்பம் வந்ததே" என்று அலமருகிறார்.  நிற்கமாட்டாதவராய் வேறொரு கோவணத்தைக் கொண்டு வந்து, "அடிகள் அளித்த கோவணம் கெட்டு விட்டது. தேடித் தேடிப் பார்த்தேன். அதை எங்கும் கண்டேனில்லை. வேறொரு கோவணம்  கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்டது அல்ல. புதிதாக நெய்யப்பட்டது. இதனை ஏற்று, என் பிழையைப் பொறுத்தருளும்" என்று வேண்டினார். "இன்று கொடுத்த கோவணம். அது எப்படிக் கெடும். அதனைக் கவர்ந்து வேறு கோவணம் கொடுக்கவா துணிந்தீர். அடியார்களுக்கு நல்ல கோவணம் கொடுப்பதாகச் சொன்னது, என்னுடைய கோவணத்தைக் கவருவதற்கே போலும். உமது வாணிபம் நன்றாய் உள்ளது" என்று கூறினார். நாயனார் நடுநடுங்கி, ஐயரைப் பணிந்து, "இப் பிழையைத் தெரிந்து செய்தேனில்லை. இக் கோவணம் அன்றி நல்ல பட்டாடைகளையும், மணிகளையும் கொடுக்கிறேன். ஏற்று அருளல் வேண்டும்" என்று வேண்டினார்.  அடிகள் சினம் தணிந்து, "எமக்கு ஒன்றும் வேண்டாம். எமது கோவணத்துக்கு ஒத்த எடை உள்ள கோவணம் ஒன்று கொடுத்தால் போதும்" என்றார். நாயனார், "எதன் எடைக்கு ஒத்து இருத்தல் வேண்டும்" என்றார். வேதியர், "இக் கோவண எடைக்கு" என்று தண்டில் கட்டி உள்ள கோவணத்தை அவிழ்த்துக் காட்டினார். 

         நாயனார் விரைந்து ஒரு துலையை நாட்டினார்.  வேதியர் தமது கோவணத்தை ஒரு தட்டில் இட்டார். நாயனாரும் தாம் கொண்டு வந்த கோவணத்தை வேறு ஒரு தட்டில் இட்டார்.  நிறை ஒத்து வரவில்லை. நாயனார், வேதியரின் ஆணை பெற்று, தம்மிடத்திலே உள்ள கோவணங்களையும், பட்டாடைகளையும் ஒவ்வொன்றாகவும், பொதிப் பொதியாகவும் இட்டுப் பார்த்தார்.  தட்டு நேர் நிற்கவில்லை.  தம்மிடமுள்ள பொன், வெள்ளி முதலான பிற பொருள்களையெல்லாம் கொண்டு வந்து தட்டில் சேர்த்தார். தட்டு நேர் நிற்கவில்லை. அதைக் கண்ட நாயனார், "அடிகளே, என்னிடத்து உள்ள எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டேன். இனி, நானும், என் மனைவியும், புதல்வனும் தான் எஞ்சி உள்ளோம்.  திருவுள்ளம் இருந்தால் நாங்களும் தட்டிலே ஏறுகிறோம்" என்றார். வேதியரும் இசைந்தார். 

     அமர்நீதியார் பெரிதும் மகிழ்ந்து, மனைவியுடனும், மைந்தனுடனும் துலையை வலம் வந்து, "இதுகாறும் நாங்கள் நிகழ்த்தி வந்த திருத்தொண்டில் தவறு ஏதும் இல்லையென்றால், நாங்கள் ஏறினதும் இந்தத் துலை நேர் நிற்பதாக" என்று சொல்லி, திருவைந்தெழுத்து ஓதித் தட்டில் ஏறினார். தட்டுகள் நேர் நின்றன. அதைக் கண்ட மண்ணவர் வாழ்த்தினர். விண்ணவர் மலர் மாரி சொரிந்தனர். வேதியராக வந்த சிவபெருமான் மழவிடைமேல் அம்மையுடன் தோன்றினார். தட்டிலே நின்ற நாயனாரும், அவர்தம் மனைவியாரும், புதல்வனும் ஆண்டவன் திருக்கோலத்தைக் கண்டு போற்றினர். 

     சிவபெருமான் மூவருக்கும் தம்மைத் தொழுதுகொண்டு இருக்கும் வான்பதம் அருளினார்.  திருவருளால் துலையே விமானமாகி மேலே சென்றது.  நாயனார், தம் மனைவியுடனும், மைந்தருடனும் சிவலோகம் சேர்ந்தார்.

         இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

     ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன் பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தான். அம்மலைச் சிகரமே நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேசுவரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

         இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து ஜீவகோடிகளும் திரண்டு சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், "நீ வேண்டும் போது நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்"'என்றார் சிவன். அதன்படி அகத்தியர் சிவனின் திருமணக்கோலம் கண்ட பல தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்றாகும். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

         இங்குள்ள கல்யாண சுந்தரேசுவரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சி தருகிறார். எனவே இவர் பஞ்சவர்ணேசுவரர் என கூறப்படுகிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில் அகத்திய லிங்கம் உள்ளது.

         முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது, இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார் என்ற பெருமையை உடையது இக்கோயில். இரண்டு பிரகாரங்களை உடைய இக்கோயிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள அஷ்டபுஜ காளி சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத் தக்கது. கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

         பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும், கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள். ஒரேநாளில் ஏழு கடலில் நீராடினால் மனநிம்மதி கிடைப்பதுடன் செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது, ஏழுகடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலந்த "சப்தசாகர தீர்த்தம்" தென்னகத்தில் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் இருப்பதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவபூஜை செய்து இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி மனநிம்மதி அடைந்தாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றது ஒரு மாசிமக நாளாகும். எனவே இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடுவதால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.

         திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றம் என்னும் திருத்தலத்தினை அடைந்து, "கோவாய் முடுகி" என்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, "பூவார் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்து வை" என்று முறையிட்டார். அப்பொழுது சிவபெருமான் "திருநல்லூருக்கு வா" என்று அருளிச்செய்தார்.திருநாவுக்கரசர் திருநல்லூரை அடைந்து, இறைவனை வணங்கி எழுந்தார். சிவபெருமான் "உன்னுடைய நினைப்பு அதனை முடிக்கின்றோம்" என்று, தனது திருவடியை, அப்பர் பெருமானுடைய திருமுடி மீது சூட்டி அருளினார்.  அப்பர் பெருமான் "திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே" என்று திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

     இதன் காரணமாக பெருமாள் கோயிலைப்போல, சிவன் பாதம் பொறித்த சடாரியை இத்தலத்தில் பக்தர்களுக்கு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சீலத்தர் சொல் ஊர் அடி, அப்பர் தூய முடி மேல் வைத்த நல்லூர் அமர்ந்த நடுநாயகமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 364
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்அடித் தலம்உறப் புரிவொடும் தொழுதுஎழுந்து,
இன்னிசைத் தமிழ்புனைந்து, இறைவர்சே லூருடன்
பன்னு பாலைத்துறைப் பதிபணிந்து ஏகினார்.

         பொழிப்புரை : திருப்புள்ளமங்கையில் உள்ள ஆலந்துறை என்னும் நிலைபெற்ற அக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் மான்கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திருவடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் `திருப்பாலைத் துறை' என்ற பதியையும் வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 365
காவின்மேல் முகில்எழும் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீடு அலவன்வாழ் பெடைஉடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.

         பொழிப்புரை : பொய்கைகளில் பொருந்திய ஆண் நண்டுகள், பெண் நண்டுகளுடன், மலரும் நல்ல மணமுடைய தாமரை மலரின் மேல் விரும்பி இருத்தற்கிடனாய சீகாழித் தலைவரான பிள்ளையார், சோலைகளின் மீது மேகங்கள் தவழ்கின்ற மணம் கமழும் நல்ல முல்லை நிலத்தின் வழியிலே சென்று, ஆனேற்று ஊர்தியின் மேல் எழுந்தருளும் இறைவரின் திருநல்லூரை வந்து அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 366
மன்றல்அம் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்,
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொள,
பொன்தயங்கு ஒளிமணிச் சிவிகையில் பொலிவுறச்
சென்றுஅணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்.

         பொழிப்புரை : பிள்ளையார், மணம்கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வாழும் மறையவர்கள், நெருங்கிய மங்கலப் பொருள்களின் நிறைவுடனே வரவேற்கப் பொன் விளங்கும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையின் மீது அழகு விளங்கச் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 367
நித்திலச் சிவிகைமேல் நின்றுஇழிந்து அருளியே,
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களும்உடன் பரவவே,
அத்தர்தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்.

         பொழிப்புரை : முத்துச் சிவிகையினின்றும் இழிந்த பிள்ளையார், சூழ இருந்த அந்தணர்கள் முன் செல்லப் பின் செல்கின்ற அடியவர்களும் அருகிருந்து பணிசெய்து வரும் தொண்டர்களும் தம்முடன் ஒருங்கிருந்து போற்றிவர, இறைவரின் கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 368
வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில், பெருகுசீர்
வெள்ள ஆனந்தம் மெய் பொழிய, மேல் ஏறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.

         பொழிப்புரை : வெள்ளி மலையைப் போல விளங்கும் ஒளியையுடைய அக்கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுது, பெருகிய சிறப்பு மிக்க ஆனந்தக் கண்ணீர் வழிந்து திருமேனி எங்கும் பொழிய, அம்மாடக் கோயிலின் மேல் ஏறிச் சென்று, கங்கை நீர் பெருகப் பொருந்திய சடையையுடைய இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று வணங்குவாராய்,


பெ. பு. பாடல் எண் : 369
பரவுசொல் பதிகம் முன் பாடினார், பரிவுதான்
வரஅயர்த்து உருகும் நேர் மனனுடன் புறம்அணைந்து,
அரவு உடைச் சடையர்பேர் அருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதி அமர்ந்து அருளியே மேவினார்.

         பொழிப்புரை : போற்றத்தகும் சொற்களாலான பதிகத்தினைப் பாடியவராய், மிக்க அன்புடன் மேலிட்டதால் தம்மையும் மறந்து உருகும் நேர்மைபெற்ற உள்ளத்துடன் கோயில் புறத்தை அடைந்து பாம்புகளைப் பூண்ட சடையையுடைய இறைவரின் திருவருளைப் பெறும் பெருமையால், இறைவர் வீற்றிருக்கும் அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந்தார்.

         திருநல்லூரில் பாடியது, `வண்டிரிய' (தி.3 ப.83) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 370
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி,
மின்னு செஞ்சடை விமலர்தாள் விருப்பொடு வணங்கி,
பன்னும் இன்னிசைப் பதிகமும் பலமுறை பாடி,
நல்நெ டுங்குல நான்மறையவர் தொழ நயந்தார்.

         பொழிப்புரை : அவ்வாறு அப்பதியில் தங்கி, மின் போன்ற சிவந்த சடையையுடைய இறைவரின் திருவடிகளை விருப்புடன் வணங்கிப் புகழ்ந்து சொல்லப்படுகின்ற இனிய இசையுடன் கூடிய பல்வேறு யாப்பமைவுகளும் இசைக் கட்டளைகளும் பொருந்தப் பாடி, நன்மை நீடிய மறையவர்கள் வணங்கி நிற்ப, அங்குத் தங்கியிருந்தார்.

         இவ்வாறாய இன்னிசைப் பதிகம் பல பாடி என்றாரேனும், இதுபொழுது இசைத்தருளியனவாகக் கிடைத்துள்ள பதிகங்கள் இரண்டேயாம்.

1. `கொட்டும் பறை': (தி.1 ப.86) - குறிஞ்சிப் பண்.
2.`பெண்ணமரும்': (தி.2 ப.57) - காந்தாரப் பண்.


பெ. பு. பாடல் எண் : 371
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற அகன்று, போந்து, அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவிவந்து அணைந்தார்,
தேடும் மால்அயற்கு அரியவர் திருக்கரு காவூர்.

         பொழிப்புரை : நிலை பெற்ற அப்பதியினின்றும் நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அத்திருநல்லூரில் எழுந்தருளிக் கூத்தியற்றும் இறைவரின் திருவருளைப் பெற்று, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று, அருகிலுள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம், தம்மைத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார்.

         மாடும் உள்ளன பதிகள் எவை எனத் தெரிந்தில.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

3.    083   திருநல்லூர்      திருவிராகம்    பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வண்டுஇரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை ஏறிப்
பண்டுஎரிகை கொண்டபர மன்பதிஅது என்பர் அதன் அயலே
நண்டுஇரிய நாரைஇரை தேரவரை மேல்அருவி முத்தம்
தெண்திரைகள் மோதவிரி போதுகமழும் திருந லூரே.

         பொழிப்புரை : வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடை தொங்கச் சிவபெருமான் இடபவாகனத்திலேறி , பண்டைக்காலந் தொட்டே கையில் நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது , பக்கத்தில் நண்டு ஓட , நாரை தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்க , காவிரியின் தெள்ளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 2
பல்வளரும் நாகம்அரை ஆர்த்துவரை மங்கைஒரு பாகம்
மல்வளர்பு யத்தில் அணை வித்துமகி ழும்பரமன் இடமாம்
சொல்வளர் இசைக்கிளவி பாடிமட வார்நடம் அதுஆடிச்
செல்வமறை யோர்கள்முறை ஏத்த வளரும் திருந லூரே.

         பொழிப்புரை : நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி , மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி , அவற்றிற்கேற்ப நடனமாடுவதும் , வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
நீடுவரை மேருவில் அதுஆகநிகழ் நாகம் அழல் அம்பால்
கூடலர்கள் மூஎயில் எரித்தகுழ கன்குலவு சடைமேல்
ஏடுஉலவு கொன்றைபுனல் நின்று திகழும் நிமலன் இடமாம்
சேடுஉலவு தாமரைகள் நீடுவயல் ஆர்திருந லூரே.

         பொழிப்புரை : பெரிய மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , அக்கினியை அம்பாகவும் கொண்டு , பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும் , கங்கையும் விளங்குகின் றன . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
கருகுபுரி மிடறர்கரி காடர் எரி கைஅதனில் ஏந்தி
அருகுவரு கரியின்உரி அதளர்பட அரவர்இடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயில் ஆலமரம் ஏறித்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர் , சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர் . தம்மைத் தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட , அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி , மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம் .


பாடல் எண் : 5
பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்குஅரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை ஏறுமுத லாளர் அவர் இடமாம்
இடிகொள்முழவு ஓசைஎழில் ஆர்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை அகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர் . முப்புரிநூல் அணிந்தவர் . கங்கையையும் , பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர் . இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இடி போன்ற முழவோசை ஒலிக்க , தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க , அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல , இனிய மன முடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
புற்றுஅரவர் நெற்றிஓர்கண் ஒற்றைவிடை ஊர்வர் அடையாளம்
சுற்றம்இருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலே
கற்றமறை ஊற்றுஉணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுனல் ஆர்திருந லூரே.

         பொழிப்புரை : சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர் . நெற்றியில் ஒரு கண் உடையவர் . இடப வாகனத்தில் அமர்ந்தவர் . இவையே அவரது அடையாளமாகும் . அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம் புரிபவர் . விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர். பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி சினந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 7
பொங்குஅரவர் அங்கமுடன் மேல்அணிவர் ஞாலம் இடுபிச்சை
தங்குஅரவ மாகவுழி தந்துமெய் துலங்கிய வெண் நீற்றர்
கங்கை அரவம்விரவு திங்கள்சடை அடிகள்இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அதுஆர்திருந லூரே.

         பொழிப்புரை : இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர் . எலும்பையும் திருமேனியில் அணிந்தவர் . பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர் . தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . கங்கையையும் , பாம்பையும், சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 8
ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனை அருவரையில்
சீறி அவனுக்கு அருளும் எங்கள்சிவ லோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடிவலம் வந்துஅயரும் அருவிச்
சேறு கமரான அழியத் திகழ்தரும் திருந லூரே.

         பொழிப்புரை : மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளும் , வெற்றிதரும் வீரவாளும் அளித்து அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது , பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புக்களில் விழ , வெடிப்புக்கள் நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
மாலும்மலர் மேல்அயனும் நேடிஅறி யாமை எரிஆய
கோலம் உடையான் உணர்வு கோதுஇல்புக ழான் இடமது ஆகும்
நாலுமறை அங்கமுதல் ஆறும் எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடை யார்கள் நெடு மாடம்வள ரும்திருந லூரே.

         பொழிப்புரை : திருமாலும் , தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும் , இயற்கையுணர்வும் உடையவனும் , குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நான்கு வேதங்களும் , ஆறு அங்கங்களும் , மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
கீறும்உடை கோவணம் இலாமையில் ஓல்ஓவிய தவத்தர்
பாறும் உடன் மூடுதுவர் ஆடையர்கள் வேடம்அவை பாரேல்
ஏறுமட வாளொடு இனிது ஏறிமுன் இருந்த இடம்என்பர்
தேறுமன வாரம் உடை யார்குடிசெ யும்திருந லூரே.

         பொழிப்புரை : கிழித்த துணியும் , கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும் , அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா . சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி , தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும் , அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
திரைகள்இரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தன்இசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.

         பொழிப்புரை : காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத் தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை , வயல் வளமிக்க , தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள் , பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள் .

                                             திருச்சிற்றம்பலம்

1.086    திருநல்லூர்                      பண் - குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கொட்டும் பறைசீரால் குழும அனல்ஏந்தி
நட்டம் பயின்றுஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டுஇன்றி இருபோதும் முனியாது எழுந்துஅன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.

         பொழிப்புரை :பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக்கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது.


பாடல் எண் : 2
ஏறில் எருது ஏறும் எழில் ஆயிழையோடும்
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர்என்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே.

         பொழிப்புரை :ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.

  
பாடல் எண் : 3
சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதாழ
ஓடுஉண் கலன்ஆக ஊர்ஊர் இடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே.

         பொழிப்புரை :இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச்செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.


பாடல் எண் : 4
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

         பொழிப்புரை :உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும், அந்நெறி நிற்பாரைக் காத்தருள் பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை.


பாடல் எண் : 5
ஆகத்து உமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் அசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்து அண்மித் தாள்கள் தொழும்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

         பொழிப்புரை :தனது திருமேனியில், கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வர்.


பாடல் எண் : 6
கொல்லும் களியானை உரிபோர்த்து உமைஅஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே.

         பொழிப்புரை :தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய், நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.


பாடல் எண் : 7
எங்கள் பெருமானை இமையோர் தொழுதுஏத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவுஇல்லாத்
தம்கை தலைக்குஏற்றி ஆள்என்று அடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

         பொழிப்புரை :எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து, நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.


பாடல் எண் : 8
காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாது எழும்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.

         பொழிப்புரை :மன்மதனது உருவஅழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காணஎழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.


பாடல் எண் : 9
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ணம் மலர்தூவித் தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே.

         பொழிப்புரை :செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப்பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.


பாடல் எண் : 10
பிச்சக் குடைநீழல் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

         பொழிப்புரை :மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.


பாடல் எண் : 11
தண்ணம் புனல்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

         பொழிப்புரை :குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.

                                    திருச்சிற்றம்பலம்


2.057 திருநல்லூர்                பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பெண்அமரும் திருமேனி உடையீர் பிறங்கு சடைதாழப்
பண்அமரும் நான்மறையே பாடிஆடல் பயில்கின்றீர்
திண்அமரும் பைம்பொழிலும் வயலும்சூழ்ந்த திருநல்லூர்
மண்அமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 2
அலைமல்கு தண்புனலும் பிறையும்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும் அனலும்ஏந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையால் புரமூன்றுஎரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி, அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.


பாடல் எண் : 3
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோடு ஆடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச் சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.


பாடல் எண் : 4
கூன்அமரும் வெண்பிறையும் புனலும்சூடுங் கொள்கையீர்
மான்அமரும் மென்விழியாள் பாகம்ஆகும் மாண்பினீர்
தேன்அமரும் பைம்பொழிலின் வண்டுபாடும் திருநல்லூர்
வான்அமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.


பாடல் எண் : 5
நிணங்கவரும் மூஇலையும் அனலும்ஏந்தி நெறிகுழலாள்
அணங்குஅமரும் பாடலோடு ஆடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடுஅரவும் பிறையும்சூடித் திருநல்லூர்
மணங்கமழும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.


பாடல் எண் : 6
கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகம்ஆகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகள்ஆடும் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயில்ஆக இருந்தீரே.

         பொழிப்புரை :கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.


பாடல் எண் : 7
ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமே்ஏந்தி உமைகாண
மீன்தோயும் திசைநிறைய ஓங்கிஆடும் வேடத்தீர்
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடும் திருநல்லூர்
வான்தோயும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத்திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.


பாடல் எண் : 8
காதுஅமரும் வெண்குழையீர் கறுத்தஅரக்கன் மலைஎடுப்ப
மாதுஅமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணம் கண்டுகந்தீர்
தீதுஅமரா அந்தணர்கள் பரவிஏத்துந் திருநல்லூர்
மாதுஅமரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.


பாடல் எண் : 9
போதின்மேல் அயன்திருமால் போற்றிஉம்மைக் காணாது
நாதனே இவன்ென்று நயந்து ஏத்த மகிழ்ந்தளித்தீர்
தீதுஇலா அந்தணர்கள் தீமூன்றுஓம்புந் திருநல்லூர்
மாதரா ள்அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக்காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைகின்றீர்.


பாடல் எண் : 10
பொல்லாத சமணரொடு புறங்கூறும் சாக்கியர்ஒன்று
அல்லாதார் அறவுரைவிட்டு அடியார்கள் போற்றுஓவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளும்ஏத்தும் திருநல்லூர்
மல்ஆர்ந்த கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.


பாடல் எண் : 11
கொந்துஅணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்துஅணவு மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம்சேர்ந்து இருப்பாரே.

         பொழிப்புரை :பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.

                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 193
சென்று சேர்ந்து திருச்சத்தி முற்றத்து இருந்த சிவக்கொழுந்தை,
குன்ற மகள்தன் மனக்காதல் குலவும் பூசை கொண்டுஅருளும்
என்றும் இனிய பெருமானை, இறைஞ்சி, இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து, தமிழ் மொழிமா லைகளும் சாத்துவார்.

         பொழிப்புரை : சென்றவர், திருச்சத்திமுற்றம் என்ற பதியில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தீசரை, மலையரசன் மகளாரான உமை அம்மையாரின் உள்ளத்தில் எழுந்த அன்பால் விளங்கும் பூசனையை என்றும் ஏற்றருளுகின்ற இனியவரான இறைவரைத் தொழுது, திருமுற்றத்தினை அடைந்து, தம் இயல்பாய்ச் செய்துவரும் திருப்பணிகளான உழவாரப் பணிகளைச் செய்து, சொல் மாலைகளையும் சாத்துவாராய்,


பெ.பு. பாடல் எண் : 194
         "கோவாய் முடுகி" என்று எடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன்
         பூவார் அடிகள் என்தலைமேல் பொறித்து வைப்பாய்" எனப்புகன்று,
         நாஆர் பதிகம் பாடுதலும், நாதன் தானும் "நல்லூரில்
         வாவா" என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.

         பொழிப்புரை : `கோவாய் முடுகி` எனத் தொடங்கிக் கூற்றம் வந்து உயிரைக் கொண்டு போதற்கு முன்பு, பூவார்ந்த உம் திருவடியை என் தலைமேற் பொறித்து வைத்தருளுக! என விண்ணப்பிக்கும் நாவில் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடவும், இறைவரும் `நீ திருநல்லூருக்கு வா` எனக் கூறியருள, திருநாவுக்கரசரும் மகிழ்ந்து வணங்கி.


பெ. பு. பாடல் எண் : 195
         நன்மைபெருகு அருள்நெறியே வந்துஅணைந்து, நல்லூரின்
         மன்னுதிருத் தொண்டனார் வணங்கி,மகிழ்ந்து, எழும்பொழுதில்,
         "உன்னுடைய நினைப்பு அதனை முடிக்கின்றோம்" என்று, அவர்தம்
         சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

         பொழிப்புரை : உலகுயிர்களுக்கெல்லாம் நன்மை பெருகுதற் கேதுவாய திருவருளின் வழியே நல்லூருக்கு வந்து சேர்ந்து, நிலையான திருத்தொண்டை ஆற்றிவரும் நாவரசரும் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் சிவபெருமானாரும், `உம் நினைவை யாம் முடிக்கின்றோம்` என்று அருள் செய்து, திருநாவுக்கரசரின் தலைமீது தம் திருவடிகளைச் சூட்டியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 196
         "நனைந்துஅனைய திருவடி என் தலைமேல் வைத்தார்"என்று
         புனைந்த திருத் தாண்டகத்தால் போற்றுஇசைத்து, புனிதர்அருள்
         நினைந்து, உருகி, விழுந்து, எழுந்து , நிறைந்து,மலர்ந்து, ஒழியாத
         தனம்பெரிதும் பெற்று உவந்த வறியோன்போல் மனம்தழைத்தார்.

         பொழிப்புரை : `நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்` எனும் பொருள் அமைந்த திருத்தாண்டகத்தால் போற்றித் துதித்துப், புனிதரான இறைவரின் திருவருளை எண்ணி மனம் உருகி, நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, உள்ள நிறைவும் மலர்ச்சியும் பெற்றுக், குறையாத செல்வத்தைப் பெரிதும் பெற்றுக் களிக்கும் வறியவன் போல மனம் மகிழ்ந்தார்.

         `நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்` (தி.6 ப.14 பா.1) எனும் குறிப்புடைய பாடல், நினைந்துருகும் அடியாரை எனத் தொடங்கும் திருப்பாடலாகும், இத்தொடக்கத் திருத்தாண்டகத்தில் வரும் பதினொரு பாடல்களிலும் திருவடிச் சிறப்பும் அதனைத் தம் தலைமேல் வைத்த கருணைக்குறிப்பும் காணக்கிடக்கின்றன. தம் இல்லத்திற்கு வந்தவர் வாகீசர் என அறிந்து வணங்கிய அப்பூதிஅடிகளார், தம் மகிழ்ச்சிப் பெருக்கிற்கு `அற்றவர்கள் அருநிதியம் பெற்றார் போல்` (தி.12 பு.2பா.18) எனப் பின்னர்ச் சேக்கிழார் அருளுவதும் இங்கு நினைவு கூரத் தக்கதாம்.


பெ. பு. பாடல் எண் : 197
நாவுக்கு மன்னர், திரு நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற திருப்பணிகள் மேவுறநா ளும்செய்து,
பாஉற்ற தமிழ்மாலை பலபாடி, பணிந்துஏத்தி,
தேவுற்ற திருத்தொண்டு செய்துஒழுகிச் செல்லுநாள்.

         பொழிப்புரை : நாவரசர், திருநல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமானிடம் மனம் பொருந்தத் திருப்பணிகள் பலவற்றை நாளும் செய்தும், தமிழ்மாலை பலவற்றையும் பாடி வணங்கிப் போற்றியும், தெய்வத் திருத்தொண்டைச் செய்துவரும் நாள்களில்,

         தமிழ்மாலை பல பாடிய குறிப்பு இதனால் பெறப்படுகின்றது எனினும் `அட்டுமின்` (தி.4 ப.97) எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.


பெ. பு. பாடல் எண் : 198
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்துஅருளும்
திருஆவூர் திருப்பாலைத் துறைபிறவும் சென்றுஇறைஞ்சிப்
பெருகுஆர்வத் திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும் பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.

         பொழிப்புரை : நெற்றியில் திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள திருஆவூர், திருப்பாலைத்துறை முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம் பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து, திருநல்லூரை ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.


பெ. பு. பாடல் எண் : 199
ஆள்உடைய நாயகன்தன் அருள்பெற்றுஅங்கு அகன்றுபோய்
வாளைபாய் புனல்பழனத் திருப்பழனம் மருங்குஅணைந்து
காளவிடம் உண்டுஇருண்ட கண்டர்பணிக் கலன்பூண்டு
நீள்இரவில் ஆடுவார் கழல்வணங்க நேர்பெற்றார்.

         பொழிப்புரை : தம்மை ஆளாகவுடைய இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, வாளை மீன்கள் பாயும் நீர்வளமுடைய திருப்பழனத்தைச் சேர்ந்து, திருநீலகண்டரும், பாம்புகளை அணிந்து ஊழிக் காலத்தில் ஆடுபவருமான இறைவரின் திருவடிகளை நேரே வணங்கும் பேற்றை அடைந்தார்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

6. 014     திருநல்லூர்            திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நினைந்துஉருகும் அடியாரை நைய வைத்தார்,
         நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினம்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்,
         செழுமதியின் தளிர்வைத்தார், சிறந்து வானோர்
இனம்துருவி மணிமகுடத்து ஏறத்து உற்ற
         இனமலர்கள் போதுஅவிழ்ந்து, மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர் . சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் . பிறை சூடியவர் . தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி , அரிதின் கிட்டி , அவர்கள் , தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார் . இஃது அவர் பேரருளின் தன்மையாம் .


பாடல் எண் : 2
பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்,
         புலிஉரியின் அதள்வைத்தார், புனலும் வைத்தார்,
மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்,
         வார்காதில் குழைவைத்தார், மதியும் வைத்தார்,
மின்நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார்,
         வேழத்தின் உரிவைத்தார், வெண்ணூல் வைத்தார்,
நல்நலத்த திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திருவடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.


பாடல் எண் : 3
தோடுஏறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்,
         துன்எருக்கின் வடம்வைத்தார், துவலை சிந்தப்
பாடுஏறு படுதிரைகள் எறிய வைத்தார்,
         பனிமத்த மலர்வைத்தார், பாம்பும் வைத்தார்,
சேடுஏறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்,
         சிலைவைத்தார், மலைபெற்ற மகளை வைத்தார்,
நாடுஏறு திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி , எருக்கம் பூ மாலை பூண்டு , தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு , அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு , கையில் வில் ஏந்தி , யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 4
வில்அருளி வருபுருவத்து ஒருத்தி பாகம்
         பொருத்துஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்,
கல்அருளி வரிசிலையா வைத்தார், ஊராக்
         கயிலாய மலைவைத்தார், கடவூர் வைத்தார்,
சொல்அருளி அறம்நால்வர்க்கு அறிய வைத்தார்,
         சுடுசுடலைப் பொடிவைத்தார், துறவி வைத்தார்,
நல்அருளால் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி , மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி , முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.


பாடல் எண் : 5
விண்இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்,
         வினைதொழுவார்க்கு அறவைத்தார், துறவிவைத்தார்,
கண்எரியால் காமனையும் பொடியா வைத்தார்,
         கடிக்கமல மலர்வைத்தார், கயிலை வைத்தார்,
திண்எரியும் தண்புனலும் உடனே வைத்தார்,
         திசைதொழுது மிசைஅமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்அரிய திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி , அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி , நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து , தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு , அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து , மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 6
உற்றுஉலவு பிணிஉலகத்து எழுமை வைத்தார்,
         உயிர்வைத்தார், உயிர்செல்லும் கதிகள் வைத்தார்,
மற்றுஅமரர் கணம்வைத்தார், அமரர் காணா
         மறைவைத்தார், குறைமதியம் வளர வைத்தார்,
செற்றமலி ஆர்வமொடு காம லோபம்
         சிறவாத நெறிவைத்தார், துறவி வைத்தார்,
நல்தவர்சேர் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர் . குறைந்த சந்திரனை வளரவைத்தவர் . பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 7
மாறுமலைந் தார்அரணம் எரிய வைத்தார்,
         மணிமுடிமேல் அரவுவைத்தார், அணிகொள் மேனி
நீறுமலிந்து எரிஆடல் நிலவ வைத்தார்,
         நெற்றிமேற் கண்வைத்தார், நிலையம் வைத்தார்,
ஆறுமலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார்,
         ஆர்வத்தால் அடிஅமரர் பரவ வைத்தார்,
நாறுமலர்த் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர் . அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர் . அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர் . நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர் . தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர் . மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 8
குலங்கள்மிகு மலை,கடல்கள், ஞாலம் வைத்தார்,
         குருமணிசேர் அரவைத்தார், கோலம் வைத்தார்,
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்,
         உண்டுஅருளிவிடம்வைத்தார், எண்டோள் வைத்தார்,
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்,
         நிமிர்விசும்பின் மிசைவைத்தார், நினைந்தார் இந்நாள்
நலங்கிளரும் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர் . இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர் . திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு , அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர் . எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர் . நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர் . அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 9
சென்றுஉருளும் கதிர்இரண்டும் விசும்பில் வைத்தார்,
         திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்,
நின்றுஅருளி அடிஅமரர் வணங்க வைத்தார்,
         நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்,
கொன்றுஅருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக்
         குரைகழற்சே வடிவைத்தார், விடையும் வைத்தார்,
நன்றுஅருளுந் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர் . இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர் . நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர் . கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .


பாடல் எண் : 10
பாம்புஉரிஞ்சி மதிகிடந்து திரைகள் ஏங்கப்
         பனிக்கொன்றை சடைவைத்தார், பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்குஎல்லாம் அருளும் வைத்தார்,
         அடுசுடலைப் பொடிவைத்தார், அழகும் வைத்தார்,
ஓம்பஅரிய வல்வினைநோய் தீர வைத்தார்,
         உமையைஒரு பால்வைத்தார், உகந்து வானோர்
நாம்பரவும் திருவடிஎன் தலைமேல் வைத்தார்
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் , பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க , கங்கை அலை வீச , அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர் . தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர் . சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர் . நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர் . உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர் . விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர் .


பாடல் எண் : 11
குலம்கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்,
         குருமணிசேர் மலைவைத்தார், மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
         ஒருவிரலால் உறவைத்தார், இறைவா என்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்,
         புகழ்வைத்தார், புரிந்துஆளாக் கொள்ள வைத்தார்,
நலங்கிளரும் திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
         நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.

         பொழிப்புரை :நல்லூர் எம்பெருமானார் , கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர் . கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர் . இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர் . தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து , நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர் .

                                             திருச்சிற்றம்பலம்


4. 097    திருநல்லூர்                 திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அட்டுமின் இல்பலி என்றுஎன்று அகங்கடை தோறும்வந்து
மட்டுஅவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகைஎன்கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள்அரவும்
நட்டம்நின்று ஆடிய நாதர், நல் லூர்இடம் கொண்டவரே.

         பொழிப்புரை : ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய் , நிலையாக நடனமாடும் தலைவராய் , நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் ` உணவுக்குரிய பிச்சையிடுமின் ` என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ ?


பாடல் எண் : 2
பெண்இட்டம் பண்டையது அன்று, இவை பெய்பலிக்கு என்றுஉழல்வார்
நண்ணிட்டு வந்து, மனை புகுந்தாரும், நல் லூர்அகத்தே
பண்இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி நோக்கி நின்று
கண்இட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக்கண்டரே.

         பொழிப்புரை : நீலகண்டப் பெருமானார் , பெண்கள் ஆசைப்படும்படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று ; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கி நின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு .


பாடல் எண் : 3
படஏர் அரவுஅல்குல் பாவைநல் லீர்,பக லேஒருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர் போலவந்து, இல்புகுந்து
நடவார் அடிகள், நடம்பயின்று ஆடிய கூத்தர்கொலோ,
வடபால் கயிலையும் தென்பால்நல் லூருந்தம் வாழ்பதியே.

         பொழிப்புரை : படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல் குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே ! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார் . அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும் .


பாடல் எண் : 4
செஞ்சுடர்ச் சோதி, பவளத் திரள்,திகழ் முத்துஅனைய,
நஞ்சுஅணி கண்டன்நல் லூர்உறை நம்பனை, நான்ஒருகால்
துஞ்சிடைக் கண்டுகனவின் தலைத்தொழு தேற்கு,அவன்தான்
நெஞ்சுஇடை நின்றுஅக லான்,பல காலமும் நின்றனனே.

         பொழிப்புரை : சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும் , நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான் .


பாடல் எண் : 5
வெண்மதி சூடி விளங்கநின் றானை,விண் ணோர்கள்தொழ
நண்இல யத்தொடு பாடல் அறாதநல் லூர்அகத்தே
திண்நில யம்கொண்டு நின்றான், திரிபுரம் மூன்றுஎரித்தான்,
கண்உளும் நெஞ்சத்துஅகத்தும் உளகழல் சேவடியே.

         பொழிப்புரை : வெண்பிறை சூடி உலகு விளங்க நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல்கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன .


பாடல் எண் : 6
தேற்றப் படத்திரு நல்லூர் அகத்தே சிவன்இருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர், துன்மதியால்
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப்போல்
காற்றில் கடுத்துஉலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே.

         பொழிப்புரை : எல்லார் உள்ளத்தும் தெளிவு ஏற்படச் சிவ பெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய் , தம் பொருத்தமல்லாத புத்தியினால் , ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல , எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர் .


பாடல் எண் : 7
நாள்கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்தநல் லூர்அகத்தே
கீள்கொண்ட கோவணம் காஎன்று சொல்லிக் கிறிபடத்தான்
வாள்கொண்ட நோக்கி மனைவி யொடும், அங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும்அன் றோஇவ் அகலிடமே.

         பொழிப்புரை : காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சனையாக அதனை மறைத்து , ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள் .


பாடல் எண் : 8
அறைமல்கு பைங்கழல் ஆர்ப்பநின் றான்,அணி ஆர்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தார்உடை யானும்,நல் லூர்அகத்தே
பறைமல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசுஅழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்று ஆடிய பிஞ்ஞகனே.

         பொழிப்புரை : பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய , தலைக்கோலத்தை உடைய பெருமான் , ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று , அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான் .


பாடல் எண் : 9
மன்னிய மாமறை யோர்மகிழ்ந்து ஏத்த, மருவிஎங்கும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது,நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவிடை உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர், அங்கண னேஅருள் நல்குஎன்பரே.

         பொழிப்புரை : நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க , எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ , நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம் விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு , பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர் .


பாடல் எண் : 10
திருஅமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல்
குருஅமர் கோங்கம் குராமகிழ் சண்பகம் கொன்றைவன்னி
மருஅமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கள்நல்லூர்
உருஅமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே.

         பொழிப்புரை : திருமகள் தங்கும் தாமரை , சிறப்பு வளரும் செங்கழுநீர் , பறித்துச் சூடும் நெய்தல் , நிறம் பொருந்திய கோங்கம் , குரா , மகிழ் , சண்பகம் , கொன்றை , வன்னி , நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக.


பாடல் எண் : 11
செல்ஏர் கொடியன், சிவன்பெரும் கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும், மதில்சூழ் இலங்கையர் காவலனைக்
கல்ஆர் முடியொடு தோள்இறச் செற்ற கழல்அடியான்,
நல்லூர் இருந்த பிரான்அல்ல னோநம்மை ஆள்பவனே.

         பொழிப்புரை : இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புகவல்லேன் அடியேன் . மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதியுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடிகளை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான் .
                                             திருச்சிற்றம்பலம்






12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...