திருப் பாலைத்துறை
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில்
சென்றால் இத்தலத்தை அடையலாம் - கோயில் வாயிலில் இறங்கலாம். கும்பகோணம் - தஞ்சை
இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி. மீ. வடகிழக்கில் சென்று இத்திருத்தலத்தை
அடையலாம்.
இறைவர்
: பாலைவனேசுவரர், பாலைவனநாதர்.
இறைவியார்
: தவளவெண் நகையாள். (தவளாம்பிகை, தவளாம்பாள்)
தல
மரம் : பாலை. (இப்போதில்லை)
தீர்த்தம் : வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் முதலியன.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - நீல மாமணி
கண்டத்தர்.
பாண்டவர்களின் வனவாச
காலத்தில், தௌமிய முனிவரின்
ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து
வந்தான் என்று சொல்லப்படுகிறது.
தாருகாவனத்து
முனிவர்கள், இறைவனைப்
புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி,
தீயவேள்வி
செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து
உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.
இத்தலம் பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்களால்
சிறப்புறப்படுகிறது. வேதங்களின்
நடுவணதாகிய யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய
அப்பர் தேவாரத்துள், திருக்குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும்.
இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து " என்று தொடங்கும்
பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய
(பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும்.
கோயில் கீழ்ப்பகுதி
கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கல்
கட்டமைப்பிலும் காணப்படுகிறது.
கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம்
உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு
அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது.
(தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.)
பிராகாரத்தில்
விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட
சிவலிங்கள் உள்ளன.
சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத்
திருக்கோலத்தில் விளங்குகின்றனர்.
இக்கோயிலில் முதலாம்
குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய
காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டுக்களில்
இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு
நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் " என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர்
" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
(முதற் குலோத்துங்கன்
காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது
ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.)
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "முருகு ஆர்ந்த சோலைத்
துறையில் சுகம் சிவநூல் வாசிக்கும் பாலைத்துறையில் பரிமளமே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தப் பெருமான் இத் திருத்தலத்திற்கு எழுந்தருளியதாகப் பெரியபுராணம் கூறுகின்றது. ஆயினும் திருப்பதிகம் கிடைக்கப் பெறவில்லை.
திருஞானசம்பந்தர் புராணம்
பெரிய
புராணப் பாடல் எண் : 363
தலைவர்தம்
சக்கரப் பள்ளிதன் இடைஅகன்று,
அலைபுனல்
பணைகளின் அருகுபோய், அருமறைப்
புலனுறும்
சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும்
ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
பொழிப்புரை : அரிய மறையின்
உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின்
திருச்சக்கரப்பள்ளியினின்றும் நீங்கி, அலையும்
நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, `திருப்புள்ளமங்கை' என்ற திருப்பதியில் விளங்கும் `திருவாலந்துறை' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 364
மன்னும்அக்
கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்அடித்
தலம்உறப் புரிவொடும் தொழுது,எழுந்து,
இன்னிசைத்
தமிழ்புனைந்துஸ இறைவர் சேலூருடன்
பன்னு
பாலைத்துறைப் பதி பணிந்து ஏகினார்.
பொழிப்புரை : நிலைபெற்ற
அக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் மான்கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திருவடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப்
பாடி, இறைவர்
வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் `திருப்பாலைத் துறை' என்ற பதியையும் வணங்கினார்.
திருப்புள்ளமங்கையில்
அருளியது, `பாலுந்துறு திரளாயின' (தி.1 ப.16) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
திருச்சேலூரிலும், திருப்பாலைத்துறையிலும் அருளிய
பதிகங்கள் கிடைத்தில.
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 198
கருகாவூர்
முதலாகக்
கண்ணுதலோன்
அமர்ந்துஅருளும்
திருஆவூர், திருப்பாலைத்
துறைபிறவும்
சென்றுஇறைஞ்சி,
பெருகுஆர்வத்
திருத்தொண்டு
செய்துபெருந்
திருநல்லூர்
ஒருகாலும்
பிரியாதே,
உள்உருகிப்
பணிகின்றார்.
பொழிப்புரை : நெற்றியில்
திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள
திருஆவூர், திருப்பாலைத்துறை
முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம்
பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து,
திருநல்லூரை
ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.
இப்பாடற்கண்
குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய
இரண்டாம்:
1. திருக்கருகாவூர்: `குருகாம்` (தி.6 ப.15) - திருத்தாண்டகம்.
2. திருப்பாலைத் துறை: `நீலமாமணி` (தி.5 ப.51) - திருக்குறுந்தொகை.
இனிப்
`பிறவும் சென்றிறைஞ்சி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள்
மூன்றாம்:
2. திருவெண்ணியூர்:
(அ). `முத்தினை` (தி.5 ப.17) - திருக்குறுந்தொகை.
(ஆ). `தொண்டிலங்கும்` (தி.6 ப.59) - திருக்குறுந் தொகை.
3. திருப்பூவனூர்: `பூவனூர்ப் புனிதன்` (தி.5 ப.65)திருக்குறுந்தொகை.
5. 051 திருப் பாலைத்துறை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நீல
மாமணி கண்டத்தர், நீள்சடைக்
கோல
மாமதி கங்கையும் கூட்டினார்,
சூல
மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய்
ஆடுவர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , நீலமாமணி போலும் திருக்கழுத்தினர் ; நீண்ட சடையில் அழகுமிக்க பெரிய
மதியையும் கங்கையையும் கூடவைத்தவர் ; சூலம்
, மான் , மழு ஏந்தித் தம் ஒளி முடியில் பாலும்
நெய்யும் திருவபிடேகம் கொள்வர் .
பாடல்
எண் : 2
கவள
மாகளிற் றின்உரி போர்த்தவர்,
தவள
வெண்நகை மங்கையொர் பங்கினர்,
திவள
வானவர் போற்றித் திசைதொழும்
பவள
மேனியர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , சோற்றுக்கவளம் கொள்ளும் யானையின்
உரியைப் போர்த்தவர் ; வெள்ளிய நகைப்பை உடைய
உமைமங்கையை ஒருபங்கிற் கொண்டவர் ;
தேவர்கள்
போற்றித் திசைநோக்கித் தொழும் பவளம் போன்று சிவந்த மேனியர் .
பாடல்
எண் : 3
மின்னின்
நுண்இடைக் கன்னியர் மிக்குஎங்கும்
பொன்னி
நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ,
மன்னி
நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி
னார்அவர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , மின்னலையொத்த நுண்ணிடையை உடைய
கன்னிப்பெண்கள் எங்கும் பலராய்க்கூடிக் காவிரியில் நீராடிப்போற்றித்
திருவடிகளைத்தொழ நிலைபெற்று , நான்கு வேதங்களும் பல
கீதங்களும் பன்னிய சிறப்புடையவராவர் .
பாடல்
எண் : 4
நீடு
காடுஇட மாய்நின்ற பேய்க்கணம்
கூடு
பூதம் குழுமிநின்று ஆர்க்கவே,
ஆடி
னார்,அழ காகிய நான்மறை
பாடி
னார், அவர் பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , சுடுகாடே இடமாய் நீண்டு நின்ற பேயின்
தொகுதிகளும் , கூடிய பூதங்களும்
தம்மில் இணைந்து நின்று ஆர்க்குமாறு ஆடியவர் ; அழகாகிய நான்மறை பாடியவர் .
பாடல்
எண் : 5
சித்தர்
கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர்
நான்மறை வேதியர் பேணிய
அத்த
னே,நமை ஆள்உடை யாய்,எனும்
பத்தர்
கட்குஅன்பர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , சித்தரும் , கன்னியரும் , தேவரும் , தானவர்களும் , பித்தர்களும் , நான்கு மறைகளில் வல்ல வேதியரும் பேணிய
அத்தனே ! நம்மை ஆளுடையாய் ! என்று கூறும் அன்பர்களுக்கு அன்பராய் இருப்பர்.
பாடல்
எண் : 6
விண்ணி
னார்பணிந்து ஏத்த வியப்புறும்,
மண்ணி
னார்மற வாதுசி வாய என்று
எண்ணி
னார்க்குஇட மா,எழில் வானகம்
பண்ணி
னார்,அவர் பாலைத் துறையரே.
பொழிப்புரை : தேவர்கள் பணிந்து
ஏத்த , ( அதுகண்டு )
வியப்புறும் மண்ணுலகத்தோர் , மறவாது ` சிவாய ` என்று தியானிக்க , அவர்களுக்கு இடமாக எழில் மிகும்
வானகத்தைப் படைத்தருளியவர் , திருப்பாலைத்துறைப்
பிரானே .
பாடல்
எண் : 7
குரவ
னார்கொடு கொட்டியும் கொக்கரை
விரவி
னார்,பண் கெழுமிய வீணையும்
மருவு
நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு
நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.
பொழிப்புரை : மருவிய
புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய
பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர் , கொடுகொட்டி , கொக்கரை, பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின்
இசையினை விரவியவரும் , குரவரும் ஆவர் .
பாடல்
எண் : 8
தொடரும்
தொண்டரைத் துக்கம் தொடந்துவந்து
அடரும்
போது,அர னாய்அருள்
செய்பவர்,
கடலின்
நஞ்சுஅணி கண்டர், கடிபுனல்
படரும்
செஞ்சடைப் பாலைத் துறையரே.
பொழிப்புரை : நறுமணமுடைய கங்கை
படரும் செஞ்சடை உடைய திருப்பாலைத்துறையர் , தம்மைத்தொடரும் தொண்டரைத் துன்பங்கள்
தொடர்ந்துவந்து வருத்தும் போது அரனாகத் தோன்றி அருள் செய்பவர் ; கடலினின்றெழுந்த நஞ்சினை உண்டு
அணிசெய்யப் பெற்ற திருக்கழுத்தினர் .
பாடல்
எண் : 9
மேகம்
தோய்பிறை சூடுவர், மேகலை
நாகம்
தோய்ந்த அரையினர், நல்இயல்
போகம்
தோய்ந்த புணர்முலை மங்கைஓர்
பாகம்
தோய்ந்தவர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச்
சூடுவர் ; மேகலையாக நாகம்
தோய்ந்த அரையினை உடையவர் ; நல்லியலுடைய போகம்
தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர் .
பாடல்
எண் : 10
வெங்கண்
வாள்அரவு ஆட்டி வெருட்டுவர்,
அங்க
ணார் அடியார்க்கு அருள் நல்குவர்,
செங்கண்
மால்அயன் தேடற்கு அரியவர்,
பைங்கண்
ஏற்றினர், பாலைத் துறையரே.
பொழிப்புரை : திருப்பாலைத்துறையர் , வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி
அச்சுறுத்துவர் ; அழகிய கண்ணை உடையவர் ; அடியார்க்கு அருள் வழங்குபவர் ; செங்கண்ணை உடைய மாலும் அயனும் தேடற்கு
அரியவர் ; பைங்கண்ணை உடைய
இடபத்தை வாகனமாக உடையவர் .
பாடல்
எண் : 11
உரத்தி
னால்அரக் கன்உயர் மாமலை
நெருக்கி
னானை நெரித்து,அவன் பாடலும்,
இரக்க
மாஅருள் செய்தபா லைத்துறை,
கரத்தி
னால்தொழு வார்வினை ஓயுமே.
பொழிப்புரை : தன் ஆற்றலினால்
இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து , அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த
திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும்.
திருச்சிற்றம்பலம்