திருக் கருகாவூர்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர்
வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள திருத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர்
பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்,
கும்பகோணத்திலிருந்தும்
நகரப் பேருந்துகள் உள்ளன.
இறைவர்
: கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவிவனேசுவரர்.
இறைவியார்
: கர்ப்ப ரட்சாம்பிகை, கருக் காத்தநாயகி.
தல
விநாயகர் : கற்பக விநாயகர்.
தல
மரம் : முல்லை.
தீர்த்தம் : க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் முதலியன.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - முத்தி லங்குமுறுவல்
2. அப்பர் - குருகாம்
வயிரமாம்.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி
வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக்
காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
இங்கு தலவிநாயகராக
கற்பகவிநாயகர் உள்ளார்.
முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என்பன இத்தலத்தின் வேறு
பெயர்கள்.
கருச்சிதைவுற்று
மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
இத்தலத்தை
வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி
அம்பாள் விளங்குகிறாள்.
காவிரியின் தென்கரையிலுள்ள
பஞ்ச ஆரண்யங்களுள் இதுவும் ஒன்று;
அவை:-
1. கருகாவூர் -
முல்லைவனம், 2. அவளிவணல்லூர் -
பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி -
வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் -
வில்வவனம் என்பனவாம். (இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய
காலங்களில் வழிபடும் பழக்கமும் வழக்கில் உள்ளது.)
ஸ்காந்தத்தில்
க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர்
கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
இக்கோயிலில்
ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.
மூலவர் சுயம்பு
மூர்த்தி; மேற்புறம்
பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக
இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
இங்குள்ள நந்தி -
உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
இத்தல அம்பாளுக்கு
சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள்
திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை
மக்களிடையே உள்ளது.
கருவுற்ற
பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷம்பிகையின் திருவடியில்
வைத்து, மந்திரித்து
விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப்பிரசவமாகும்.
சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால
கல்வெட்டுக்கள் உள்ளன.
முதலாம் இராசராசன்
கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்
" என்று தலம் குறிக்கப்படுகின்றது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மிக்க அருகா ஊர் சூழ்ந்து அழகு பெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 371
நீடும்
அப்பதி நீங்குவார் நிகழ்திரு நல்லூர்
ஆடுவார்
திருஅருள்பெற அகன்றுபோந்து,
அங்கண்
மாடும்
உள்ளன வணங்கியே, பரவிவந்து அணைந்தார்
தேடும்
மால்அயற்கு அரியவர் திருக்கரு காவூர்.
பொழிப்புரை : நிலை பெற்ற
திருநல்லூர் என்னும் அப்பதியினின்றும் நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அத்திருநல்லூரில் எழுந்தருளிக்
கூத்தியற்றும் இறைவரின் திருவருளைப் பெற்று, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று, அருகிலுள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம், தம்மைத் தேடிய திருமாலுக்கும்
நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார்.
பாடல்
எண் : 372
வந்து
பந்தர்மா தவிமணம் கமழ்கரு காவூர்ச்
சந்த
மாமறை தந்தவர் கழல்இணை தாழ்ந்தே,
"அந்தம் இல்லவர்
வண்ணம்ஆர் அழல்வண்ணம்" என்று
சிந்தை
இன்புஉறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
பொழிப்புரை : வந்து, பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம்
கமழ்கின்ற `திருக்கருகாவூரில்' எழுந்தருளியிருக்கும் இசையமைதி உடைய
பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும்
சிவபெருமானின் நிறம் தீயின் நிறமேயாம் என்ற கருத்தும் முடிபும் உடையதாய
செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் மகிழப் பாடினார்.
இப்பதியில் பாடியருளிய
பதிகம் `முத்தி லங்கும்' (தி.3 ப.46) எனத் தொடங்கும் கௌசிகப்
பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும் `இறைவனின்
வண்ணம் அழல் வண்ணமே' என்னும் கருத்து
முடிபுடையதாக அமைந்திருத்தலின்,
ஆசிரியர்
சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.
3. 046 திருக்கருகாவூர் பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முத்து
இலங்குமுறு வல்உமை அஞ்சவே
மத்த
யானைமறு கவ்வுரி வாங்கி,அக்
கத்தை
போர்த்தகட வுள்கரு காவூர்எம்
அத்தர்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை :முத்துப் போன்ற
புன்னகை கொண்டு விளங்கும் உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப்
போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர். அவர் வண்ணம்
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 2
விமுத
வல்லசடை யான் வினை, உள்குவார்க்கு
அமுத
நீழல்அக லாததுஓர் செல்வமாம்
கமுத
முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை :கங்கையைத் தாங்கிய
சடைமுடியுடைய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே. நும் பணி ஆனது
அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற
முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று
இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 3
பழக
வல்லசிறுத் தொண்டர்பா இன்னிசைக்
குழகர்
என்றுகுழை யாஅழை யாவரும்
கழல்கொள்
பாடல்உடை யார்கரு காவூர்எம்
அழகர்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை :பழகுவதற்குரிய
சிறப்புடைய சிறுத்தொண்டர்கள் இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து, அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட
பாக்களைப் பாட, திருக்கருகாவூரில்
வீற்றிருந்தருளும் அழகரான சிவ பெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணமாகும்.
பாடல்
எண் : 4
பொடிமெய்
பூசி,மலர் கொய்து
புணர்ந்து,உடன்
செடியர்
அல்லாஉள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்
முல்லைகம ழுங்கரு காவூர்எம்
அடிகள்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை : திருவெண்ணீற்றைத்
திருமேனியில் பூசி, மலர் கொண்டு தூவிப்
போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான
சிவபெருமான், நறுமணம் கமழும்
முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார். அவருடைய
வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 5
மையல்
இன்றிமலர் கொய்துவ ணங்கிட,
செய்ய
உள்ளம்மிக நல்கிய செல்வத்தர்,
கைதல்
முல்லைகம ழுங்கரு காவூர்எம்
ஐயர்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே .
பொழிப்புரை : மயக்கமில்லாமல்
மலர்கொய்து போற்றி வணங்கும் அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும்
செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும்
மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய
வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 6
மாசுஇல்
தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட,
ஆசை
ஆரஅருள் நல்கிய செல்வத்தர்,
காய்சி
னத்தவிடை யார்,கரு காவூர்எம்
ஈசர்
வண்ணம்எரி யும்எரி வண்ணமே.
பொழிப்புரை : மாசில்லாத தொண்டர்கள்
மலர்தூவி வணங்கிட அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவபெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக்
கொண்டு திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும்
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 7
வெந்த
நீறுமெய் பூசிய வேதியன்,
சிந்தை
நின்றுஅருள் நல்கிய செல்வத்தன்,
கந்த
மௌவல்கம ழுங்கரு காவூர்எம்
எந்தை
வண்ணம்எரி யும்எரி வண்ணமே.
பொழிப்புரை : திருநீறு பூசிய
வேதியராய், அடியவர்தம்
சிந்தையுள் நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகள் மலரும்
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாவார். அவர் வண்ணம் எரியும்
நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 8
* * * * * * * *
பாடல்
எண் : 9
பண்ணின்
நேர்மொழி யாளைஓர் பாகனார்,
மண்ணு
கோலம்உடை அம்மல ரானொடும்
கண்ணன்
நேடஅரி யார், கரு காவூர்எம்
அண்ணல்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை : பண்போன்று இனிய
மொழிபேசும் உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், அலங்கரிக்கப்பட்ட கோலமுடைய அழகிய மலரில்
வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும்
காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார்.
அவனது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
பாடல்
எண் : 10
போர்த்த
மெய்யினர், போதுஉழல் வார்கள்சொல்
தீர்த்தம்
என்றுதெளி வீர்,தெளி யேன்மின்,
கார்த்தண்
முல்லைகம ழுங்கரு காவூர்எம்
ஆத்தர்
வண்ணம்அழ லும்அழல் வண்ணமே.
பொழிப்புரை : மஞ்சட் காவி ஆடையால்
போர்த்த உடம்பினர்களும், பொழுதெல்லாம்
அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும்
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணம்.
பாடல்
எண் : 11
கலவ
மஞ்ஞைஉல வும்கரு காவூர்
நிலவு
பாடல் உடையான்தன நீள்கழல்
குலவு
ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ
லார்அவர் தொல்வினை தீருமே.
பொழிப்புரை : மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப்பாக்கள் கொண்டு போற்றி
வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி ஞானசம்பந்தன்
அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின் தொல்வினை தீரும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 197
நாவுக்கு
மன்னர்திரு நல்லூரில் நம்பர்பால்
மேவுற்ற
திருப்பணிகள் மேவுறநா ளும்செய்து
பாஉற்ற
தமிழ்மாலை பலபாடிப் பணிந்துஏத்தித்
தேவுற்ற
திருத்தொண்டு செய்துஒழுகிச் செல்லுநாள்.
பொழிப்புரை : நாவரசர், திருநல்லூரில் வீற்றிருக்கும் சிவ
பெருமானிடம் மனம் பொருந்தத் திருப்பணிகள் பலவற்றை நாளும் செய்தும், தமிழ்மாலை பலவற்றையும் பாடி வணங்கிப்
போற்றியும், தெய்வத் திருத்தொண்டைச்
செய்துவரும் நாள்களில்,
பெரிய
புராணப் பாடல் எண் : 198
கருகாவூர்
முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்துஅருளும்
திருஆவூர்
திருப்பாலைத் துறைபிறவும் சென்றுஇறைஞ்சிப்
பெருகுஆர்வத்
திருத்தொண்டு செய்துபெருந் திருநல்லூர்
ஒருகாலும்
பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.
பொழிப்புரை : நெற்றியில்
திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள
திருஆவூர், திருப்பாலைத்துறை
முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம்
பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து,
திருநல்லூரை
ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.
இப்பாடற்கண்
குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய
இரண்டாம்:
1. திருக்கருகாவூர்: `குருகாம்` (தி.6 ப.15) - திருத்தாண்டகம்.
2. திருப்பாலைத் துறை: `நீலமாமணி` (தி.5 ப.51) - திருக்குறுந்தொகை.
இனிப்
`பிறவும் சென்றிறைஞ்சி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள்
மூன்றாம்:
2. திருவெண்ணியூர்:
(அ).
`முத்தினை` (தி.5 ப.17) - திருக்குறுந்தொகை.
(ஆ). `தொண்டிலங்கும்` (தி.6 ப.59) - திருக்குறுந் தொகை.
3. திருப்பூவனூர்: `பூவனூர்ப் புனிதன்` (தி.5 ப.65) - திருக்குறுந்தொகை.
6. 015 திருக்கருகாவூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குருகாம், வயிரமாம், கூறு நாளாம்,
கொள்ளும் கிழமையாம், கோளே தானாம்,
பருகா
அமுதமாம், பாலின் நெய்யாம்,
பழத்தின் இரதமாம், பாட்டில் பண்ணாம்,
ஒருகால்
உமையாள்ஓர் பாகனும் ஆம்,
உள்நின்ற நாவிற்கு
உரையாடியாம்,
கருவாய்
உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம், கருகாவூர் எந்தை
தானே.
பொழிப்புரை :கருகாவூரில்
உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும்
விண்மீன்கள் , ஞாயிறு முதலிய
கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில்
நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில்
பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி
மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும்
நடத்தும் கண் போன்றவன் .
பாடல்
எண் : 2
வித்தாம், முளையாகும், வேரே தானாம்,
வேண்டும் உருவமாம், விரும்பி நின்ற
பத்தாம்
அடியார்க்குஓர் பாங்க னுமாம்,
பால்நிறமு மாம்,பரஞ் சோதி தானாம்,
தொத்தாம்
அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
தோன்றாது, என் உள்ளத்திள் உள்ளே
நின்ற
கத்தாம், அடியேற்கும் காணா
காட்டும்
கண்ணாம், கருகாவூர் எந்தை தானே.
பொழிப்புரை :வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற
உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் .
செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும்
தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது
அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம்
தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் .
பாடல்
எண் : 3
பூத்தானாம், பூவின் நிறத்தா
னுமாம்,
பூக்குளால் வாசமாய்
மன்னி நின்ற
கோத்தானாம், கோல்வளையாள் கூறன்
ஆகும்,
கொண்ட சமயத்தார்
தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு
என்றும் இடரே துன்பம்
ஈவானாம், என்நெஞ்சத்து உள்ளே
நின்று
காத்தானாம்
காலன் அடையா வண்ணம்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய்
நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன்
. ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு
ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து
காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் .
பாடல்
எண் : 4
இரவனாம், எல்லி நடமாடியாம்,
எண்திசைக்கும்
தேவனாம், என்னு ளானாம்,
அரவனாம், அல்லல் அறுப்பானுமாம்,
ஆகாச மூர்த்தியாம், ஆன்ஏறு ஏறும்
குரவனாம், கூற்றை உதைத்தான்
தானாம்,
கூறாத வஞ்சக்
குயலர்க்கு என்றும்
கரவனாம், காட்சிக்கு எளியா
னுமாம்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :கருகாவூர் எந்தை, இராப்பொழுதாகவும், இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும்
உரிய தேவனாகவும், என் உள்ளத்தில்
உறைபவனாகவும் , பாம்பினை
அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும், ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும், இடபத்தை இவரும் தலைவனாகவும், கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ்
கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு
எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் .
பாடல்
எண் : 5
படைத்தானாம்
பாரை இடந்தான் ஆகும்
பரிசுஒன்று அறியாமை
நின்றான் தானாம்,
உடைத்தானாம்
ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்அழலால் மூட்டி
ஒருக்கி நின்று,
அடைத்தானாம்
சூலம், மழுஓர் நாகம்
அசைத்தானாம், ஆன்ஏறுஒன்று
ஊர்ந்தான் ஆகும்,
கடைத்தானாம்
கள்ளம் அறிவார் நெஞ்சில்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :உலகைப்படைத்த
பிரமனும் , அதனை ஊழி
வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப்
பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை ,
பகைவருடைய
மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப்
பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர்
நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் .
பாடல்
எண் : 6
மூலனாம், மூர்த்தியாம், முன்னே தானாம்,
மூவாத மேனிமுக் கண்ணி
னானாம்,
சீலனாம், சேர்ந்தார் இடர்கள்
தீர்க்கும்
செல்வனாம், செஞ்சுடர்க்குஓர்
சோதி தானாம்,
மாலனாம், மங்கையோர் பங்க
னாகும்,
மன்றுஆடி யாம்,வானோர் தங்கட்கு
எல்லாம்
காலனாம், காலனைக் காய்ந்தா
னாகும்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :முதற்பொருளாய் வடிவு
கொள்வோனாய் , எல்லாப்
பொருள்களுக்கும் முற்பட்டவனாய் ,
என்றும்
மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை
அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன்
திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும்
வழங்குபவனாய் , மன்றங்களில்
கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம்
இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக
இருப்பவன் .
பாடல்
எண் : 7
அரைசேர்
அரவனாம், ஆலத் தானாம்,
ஆதிரை நாளானாம், அண்ட வானோர்
திரைசேர்
திருமுடித் திங்க ளானாம்,
தீவினை நாசன்என்
சிந்தை யானாம்,
உரைசேர்
உலகத்தார் உள்ளா னுமாம்,
உமையாளோர் பாகனாம், ஓத வேலிக்
கரைசேர்
கடல்நஞ்சை உண்டா னாகும்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :கருகாவூர் எந்தை
பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை
நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு ,
ஆகாய
கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான்
. அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில்
தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு
வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .
பாடல்
எண் : 8
துடியாம், துடியின் முழக்கந்
தானாம்,
சொல்லுவார்
சொல்எல்லாம் சோதிப் பானாம்,
படிதானாம், பாவம் அறுப்பா னாகும்,
பால்நீற்ற னாம், பரஞ் சோதி தானாம்,
கொடியானாம்
கூற்றை உதைத்தா னாகும்,
கூறாத வஞ்சக்
குயலர்க்கு என்றும்
கடியானாம், காட்சிக்கு அரியா
னாகும்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :கருகாவூர் எந்தை உடுக்கையாகவும்
உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும், அவ்வொலி
யிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச்
சோதிப்பவனாகவும், நன்னெறியாகவும், பாவத்தைப் போக்குபவனாகவும், வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய
கூற்றுவனை உதைத்தவனாகவும், உண்மை கூறாத
வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய், அவர்களை ஒறுப்பவனாகவும், அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும்
உள்ளான்.
பாடல்
எண் : 9
விட்டுஉருவம்
கிளர்கின்ற சோதி யானாம்,
விண்ணவர்க்கும்
அறியாத சூழ லானாம்,
பட்டுஉருவ
மால்யானைத் தோல்கீண் டானாம்,
பலபலவும் பாணி
பயின்றான் தானாம்,
எட்டுஉருவ
மூர்த்தியாம், எண்தோ ளானாம்,
என்உச்சி மேலானாம், எம்பி ரானாம்,
கட்டுஉருவம்
கடியானைக் காய்ந்தா னாகும்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :கருகாவூர் எந்தை
செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத
நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட
யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு
ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம்
தலைவனாய் , இளைய வடிவினை உடைய
மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு
வழிகாட்டியாக உள்ளான் .
பாடல்
எண் : 10
பொறுத்துஇருந்த
புள்ஊர்வான் உள்ளா னாகி
உள்ளிருந்துஅங்கு
உள்நோய் களைவான் தானாய்,
செறுத்துஇருந்த
மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத்
தீமுட்டும் திண்மை யானாம்,
அறுத்துஇருந்த
கையானாம் அம்தார் அல்லி
இருந்தானை ஒருதலையை, தெரிய நோக்கிக்
கறுத்துஇருந்த
கண்டம் உடையான் போலும்,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :தன்னை இடபமாய்த்
தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப்
போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத்
தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் .
தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த
கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .
பாடல்
எண் : 11
ஒறுத்தானாம்
ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்அழலை மாட்டி, உடனே வைத்து
இறுத்தானாம்
எண்ணான் முடிகள் பத்தும்,
இசைந்தானாம்
இன்னிசைகள் கேட்டான் ஆகும்,
அறுத்தானாம்
அஞ்சும் அடக்கி அங்கே,
ஆகாய மந்திரமும் ஆனா
னாகும்,
கறுத்தானாம்
காலனைக் காலால் வீழ,
கண்ணாம் கருகாவூர்
எந்தை தானே.
பொழிப்புரை :கருகாவூர் எந்தை
பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள்
பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில்
ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள
வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து
உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் .
திருச்சிற்றம்பலம்