திருச் சக்கரப்பள்ளி




திருச் சக்கரப்பள்ளி
(ஐயம்பேட்டை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலைத் தடத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது.

         அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று கூறுகின்றனர். ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.


இறைவர்              : சக்கரவாகேசுவரர்.

இறைவியார்          : தேவநாயகி

தல மரம்              : வில்வம்

தீர்த்தம்               : காவிரி.

தேவாரம்              : சம்பந்தர் - படையினார் வெண்மழு


         திருச்சக்கரப்பள்ளி பாடல் பெற்ற திருத்தலத்தை முதலாவதாகக் கொண்ட சப்தமங்கைத் தலங்களுள் இது முதலாவது தலம்.

     சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கைத் தலங்கள் ஆகும்.

----------------------------------------------------------------------------------------------------------
சப்த ஸ்தானங்களின் விவரம்----

திருவையாறு சப்தஸ்தானம்   
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானம்  
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி

சக்கரப்பள்ளி சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)   
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை

மயிலாடுதுறை சப்தஸ்தானம்
        
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை,  துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
        
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
        
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்

திருநல்லூர் சப்தஸ்தானம்
        
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை

திருநீலக்குடி சப்தஸ்தானம்
        
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
        
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை,  ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

----------------------------------------------------------------------------------------------------------


     மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் திருசக்கரப்பள்ளி என்று பெயர் பெற்றது. சக்கரவாளப் பறவை வழிபட்டதால் இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.

     இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகர் ஆகியோர் உள்ளனர். கொடிமரமில்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது.

     மூலவர் கருவறைக்குச் செல்லும் இரண்டாவது நுழைவாயிலிலும் மேலே சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்துள்ள சிவன், பார்வதி, ஒருபுறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துள்ள விநாயகர், மறுபுறம் மயில் வாகனத்தில் அமர்ந்துள்ள தண்டபாணி ஆகியோரைக் காணலாம்.

     கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

         தேவேந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் இத்தல இறைவனை பூசித்த தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர்.

         இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் முருகப்பெருமானின் முன்புறம் உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கள்ளம் இலு அஞ்சு அக்கரப் பள்ளி தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் சக்கரப்பள்ளி தனில் தண்ணளியே" என்று போற்றி உள்ளார்.

         காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 361
மொய்தரும் சோலைசூழ் முளரிமுள் அடவிபோய்
மெய்தரும் பரிவுஇலான் வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர் திருச் சக்கரப் பள்ளிமுன்பு
எய்தவந்து அருளினார் இயல்இசைத் தலைவனார்.

         பொழிப்புரை : நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தாமரைத் தண்டுகளின் முட்காடு எனப்படுகின்ற பொய்கைகள் மிக்க மருதநிலத்தில் சென்று, மெய்ப்பொருளை உணர்ந்து செய்யும் அறிவும் அன்பும் இல்லாத தக்கனின் வேள்வியை அழியச் செய்த சிவபெருமான் வீற்றிருக்கும் `திருச்சக்கரப்பள்ளி' என்ற பதியில், இயல் இசை வல்ல பிள்ளையார் வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 362
சக்கரப் பள்ளியார் தம்தனிக் கோயில்உள்
புக்கு,அருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்து,
அக்குஅரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.

         பொழிப்புரை : திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவரின் ஒப்பற்ற கோயிலுள் புகுந்து, விருப்பத்துடன் அழகிய மலரனைய திருவடிகளை வணங்கி, எலும்பு மாலையைச் சூடிய அரையை உடைய இறைவரிடத்து, அன்புமிகும் ஆற்றல் மிக்க சொற்களாலான தமிழால், நான்மறைப் பொருள்களையும் உள்ளீடாகக் கொண்ட திருப்பதிகத்தையும் பாடியருளினார்.

         திருசக்கரப்பள்ளியில் அருளிய பதிகம் `படையினார்' (தி.3 ப.37) என்று தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 363
தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் இடைஅகன்று,
அலைபுனல் பணைகளின் அருகுபோய், அருமறைப்
புலன்உறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.

         பொழிப்புரை : அரிய மறையின் உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச்சக்கரப்பள்ளியினின்றும் நீங்கி, அலையும் நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, `திருப்புள்ளமங்கை\' என்ற திருப்பதியில் விளங்கும் `திருவாலந்துறை\' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.

         திருப்புள்ளமங்கை ஊர்ப்பெயர். ஆலந்துறை கோயில் பெயர்.

3. 027    திருச்சக்கரப்பள்ளி               பண் - கொல்லி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
படையினார் வெண்மழு, பாய்புலித் தோல்அரை
உடையினார், உமைஒரு கூறனார், ஊர்வதுஓர்
விடையினார், வெண்பொடிப் பூசியார், விரிபுனல்
சடையினார், உறைவிடம் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர் . பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும்.


பாடல் எண் : 2
பாடினார் அருமறை, பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன்எருக்கு அதனொடும்,
நாடினார் இடுபலி, நண்ணிஓர் காலனைச்
சாடினார், வளநகர் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . மண்டை யோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர் . திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும் .


பாடல் எண் : 3
மின்னின்ஆர் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்,
துன்னினார் உலகெலாம் தொழுதெழ, நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது , ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும் , பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர் . உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 4
நலமலி கொள்கையார், நான்மறை பாடலார்,
வலமலி மழுவினார், மகிழும்ஊர் வண்டுஅறை
மலர்மலி சலமொடு வந்துஇழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர் . நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர் . வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர் . அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர் , வண்டுகள் ஒலிக்கின்ற , தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச , வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும் , மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 5
வெந்தவெண் பொடிஅணி வேதியர், விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடு அமரும்ஊர்,
கந்தம்ஆர் மலரொடு கார்அகில் பல்மணி
சந்தினோடு அணைபுனல் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர் . கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர் , நறுமணம் கமழும் மலர் , அகில் , பலவகை மணிகள் , சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 6
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமைஒரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார், உறைவிடம் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி , கோபத்துடன் , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர் . தேவர்களும் , அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர் . உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்

பாடல் எண் : 7
பாரினார் தொழுதுஎழு பரவுபல் லாயிரம்
பேரினார், பெண்ஒரு கூறனார், பேரொலி
நீரின்ஆர் சடைமுடி நிரைமலர்க் கொன்றைஅம்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 8
முதிர்இலா வெண்பிறை சூடினார், முன்னநாள்
எதிர்இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்
அதிர்இலா வல்அரக் கன்வலி வாட்டிய
சதிரினார், வளநகர் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர் . முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 9
துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்,
பணிபடு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர், வளநகர் சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர் , மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . திருமாலும் , பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .


பாடல் எண் : 10
உடம்புபோர் சீவரர் ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரைஅவை மெய்அல, விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

         பொழிப்புரை :உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும் , உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை . மெய்ம்மையானவை அல்ல . அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா . விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும் , மலர் மாலைகளைச் சார்த்தியும் , குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக !


பாடல் எண் : 11
தண்வயல் புடைஅணி சக்கரப் பள்ளிஎம்
கண்ணுதல் அவன்டிஅக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

         பொழிப்புரை :குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய , நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை , திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் .
                                             திருச்சிற்றம்பலம்



12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...