அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கனத்து அற
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
அழியாத முத்திப் பேற்றை
அடியேனுக்கு அருள்.
தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கனத்தறப்
பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் ......
குழலார்தங்
கறுத்தமைக்
கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே
இனப்பிணிக்
கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால்
எடுத்தபொய்க்
கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும்
பனைக்கரச்
சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா
பருப்பதச்
செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா
தினைப்புனப்
பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே
திருப்புரப்
புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
பதம் பிரித்தல்
கனத்து, அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி,
கனத்தை ஒத்து மொய்த்த மைக் ...... குழலார் தம்
கறுத்த
மைக் கயல்கணில் கருத்து வைத்து, ஒருத்த நின்
கழல் பதத்து அடுத்திடற்கு ...... அறியாதே,
இனப்
பிணிக் கணத்தினுக்கு இருப்பு என, துருத்தி ஒத்து,
இசைத்து அசைத்த சுக்கிலத் ...... தசை, தோலால்
எடுத்த பொய்க் கடத்தினைப் பொறுக்கும் இப் பிறப்பு அறுத்து,
எனக்கு நித்த முத்தியைத் ...... தரவேணும்.
பனைக்
கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப்
பயத்தினில் பயப்படப் ...... பொரும் வேலா!
பருப்பதச்
செருக்கு அற, துகைக்கு முள்
பதத்தினைப்
படைத்த குக்குடக் கொடிக் ...... குமர ஈசா!
தினைப்
புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச்
செருக்கு உறத் திருப்புயத்து ...... அணைவோனே!
திருப்புரப்
புறத்து இயல் திருத் தகுத்து, நித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
பதவுரை
பனை கர சினத்து இபத்தனை --- பனைமரம்
போன்ற தும்பிக்கையையும் கோபத்தையும் உடைய ஐராவத யானையின் தலைவனாகிய இந்திரனை,
துரத்து அரக்கனை --- துரத்தி ஓட்டிய
சூரபன்மனை,
பயத்தினில் பயப்பட --- கடல் நீரில்
அச்சப்படுமாறு,
பொரும் வேலா --- போர் செய்த வேலாயுதரே!
பருப்பதச் செருக்கு அற --- மலைகளின்
இறுமாப்பு அழியும்படி,
துகைக்கும் --- மிதித்துப் பொடிபடுத்துகின்ற,
முள்பதத்தினை படைத்த --- முள்போன்ற
விரல்களையுடைய கால்களைக் கொண்ட,
குக்குட கொடி --- கோழிக் கொடியையுடைய,
குமர ஈசா --- குமாரக் கடவுளே!
தினைபுன பருப்பதத்தினில் குடி குறத்தியை
--- தினைப் புனத்தையுடைய மலையில் குடியிருந்த வள்ளிநாயகியை,
செருக்கு உற திருபுயத்து அணைவோனே ---
மகிழ்ச்சியடையுமாறு அழகிய புயங்களில் தழுவிக் கொண்டவரே!
திருபுர புறத்து --- அழகிய நகரத்தின்
வெளிப்புரத்தில்,
இயல் திரு தகுத்து --- (வயல்களில்)
இயல்பான அழகும் தகுதியும் தூய்மையும் உள்ள,
நித்தில --- முத்துக்கள் விளங்கும்படி,
திருதிசை --- புண்ணிய வடதிசையின்
எல்லையில் திகழும்,
திருத்தணி --- திருத்தணி மலையின்மீது
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கனத்து அற பணைத்த --- திண்மையுடன்
மிகவும் பருத்துள்ள,
பொன் கழை புய --- அழகிய மூங்கில் போன்ற
தோள்களும்,
தன கிரி --- தனங்களாகிய மலைகளையும்,
கனத்தை ஒத்து மொய்த்த --- மேகத்தை ஒத்து
நெருங்கிய,
மை குழலார் தம் --- கரிய கூந்தலையும் உடைய
மாதர்களுடைய,
கறுத்த மை கயல் கணில் --- கரிய மையிட்ட
மீன்போன்ற கண்களில்,
கருத்து வைத்து --- எனது எண்ணத்தை வைத்து,
ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு
அறியாதே --- ஒப்பற்ற தேவரீரது வீரக்கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல்,
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என ---
தொகுதியான பிணிகளின் கூட்டத்துக்கு உறைவிடம் என்று சொல்லும்படி,
துருத்தி ஒத்து இசைத்து --- துருத்தியைப்போல்
ஒலிசெய்து,
அசைத்த சுக்கிலம் --- கட்டுண்ட சுக்கிலம்,
தசை தோலால் எடுத்த --- தோல் இவைகளால்
ஆக்கப்பட்ட,
பொய் கடத்தினை --- நிலையில்லாத உடம்பை,
பொறுக்கும் --- சுமக்கின்ற,
இப்பிறப்பு அறுத்து --- இந்தப் பிறவியை
ஒழித்து,
எனக்கு நித்த முத்தியை தரவேணும் ---
அடியேனுக்கு அழியாத நலத்தைத் தந்தருளுவீராக.
பொழிப்புரை
பனைமரம் போன்ற தும்பிக்கையையும் கோபத்தையும்
உடைய ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனாகிய தேவேந்திரனைப் போரில் துரத்திய
சூரபன்மன்மனைக் கடல் நீரில் அஞ்சுமாறு போர்புரிந்த வேலாயுதரே!
மலமகளின் இறுமாப்பு அடங்கும்படி இடிக்கின்ற
முள்போன்ற நகங்களுடன் கூடிய கால்களையுடைய கோழிக் கொடியையுடைய குமாரக் கடவுளே!
தினைப்புனத்தையுடைய மலையில் வசிக்கும்
வள்ளிநாயகியை அவள் மகிழுமாறு அழகிய மார்பில் அணைத்தவரே!
தூய முத்துக்கள் விளங்கும்படி தமிழ்நாட்டின்
வடக்கு எல்லையாகத் திகழும் திருத்தணி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமிதம்
உடையவரே!
திண்ணியதாய் மிகவும் பருத்துள்ள அழகிய
மூங்கிலைப்போன்ற தோள்களையும், கொங்கைகளாகிய
மலகளையும் மேகத்தையொத்த நெருங்கிய கரிய கூந்தலையும் உடைய மாதர்களின், கரிய மையிட்ட கண்களில் என் உள்ளத்தை
வைத்து, ஒப்பற்ற உமது
வீரக்கழல் தரித்த திருவடிகளை யடைவதற்கு அறியாமல், தொகுதியான நோய்களின் வட்டத்திற்கு
உறைவிடமான இவ்வுடலில் துருத்திபோல் பெருமூச்சு விட்டு, சுக்கிலம், தசை, தோல் இவைகளால் ஆக்கப்பட்ட நிலையில்லாத
இந்த உடம்பைச் சுமக்கின்ற இப்பிறப்பை ஒழித்து அடியேனுக்கு அழியா முத்தியைத்
தந்தருளுவீர்.
விரிவுரை
கனத்தறப்
பணைத்த பொற் கழைப்புய ---
மாதர்களது
தோள்களுக்கு நன்கு விளைந்த மூங்கிலை உவமையாக உரைப்பது மரபு. மூங்கில் நல்ல
மினுமினுப்பும் உருட்சியும் திரட்சியும் உடையதாய் இருக்கும்.
“வேய் மொழி வேய்த்தோள் வல்லி” - வில்லிபாரதம்.
கனத்தை
ஒத்து மொய்த்த மைக்குழலார் ---
கனம்-மேகம்; மேகம் போன்ற இருண்ட கூந்தல்.
கருத்தமைக்
கயற்கணிற் கருத்து வைத்து ---
மையணிவதால்
கண் குளிர்ச்சியும் ஒளியும் பெறும்.
கரிசலாங்கண்ணி
என்ற பச்சிலைச் சாற்றில் ஊறவைத்த துணியைத் திரியாக இட்டு தூய சிற்றாமணக்கெண்ணெயை
வார்த்து, எரியவிட்டு, காற்று புகுமாறு வழிவிட்டு மேலே ஒரு
பானையை மூடி பின்னர் அதில் படிந்த மையை எடுத்து, நறு நெய்யில் குழைத்து கண்களுக்கு
இடுவார்கள்.
இட்டுக்
கெட்டது காது; இடாது கெட்டது கண்.
கேட்டுக்
கெட்டது குடி, கேளாது கெட்டது கடன்
பார்த்துக்
கெட்டது பிள்ளை; பாராமல் கெட்டது
பயிர்.
உண்டு
கெட்டது வயிறு; உண்ணாது கெட்டது
உறவு.
என்னும்
பழமொழிகளை நோக்குக.
1. குச்சியைச் சதா
காதில் இட்டுக் குடைவதால் காது கெடும்.
2. மையை இடாததால் கண்
கெடும்.
3. பிறர் கூறும் கோள்
வார்த்தகைகளைக் காது கொடுத்துக் கேட்பதனால் குடும்பம் சீரழியும்.
4. அடிக்கடி கேளாமையால்
கடன் திரும்பி வராது அழியும்.
5. தயவு தாட்சண்யம்
பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால் பிள்ளைகள் திருந்தாது கெடுவர்.
6. அடிக்கடி போய்ப்
பார்க்கவில்லையானால் பயிர் கெடும்.
7. அடிக்கடி நிரம்ப
உண்பதனால் வயிறு கெடும்.
8. உறவினருடைய வீடுகளில்
விசேட காலங்களில் நாம் சென்று கலந்து உண்ணவில்லையானால் உறவினருடைய நட்பு
கெட்டுவிடும்.
மையணிந்த
மாதர்களின் கரிய விழிகளில் கட்டுண்டு மயங்கி ஆடவர் அழிவர்.
நிற்கழல் ---
முருகனுடைய
வீரக் கழலை யணிந்துள்ள திருவடிகளை யடைவதற்கு அறியாமல் மாந்தர் கெடுகின்றார்கள்.
ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடு முருகனுடைய சரணாரவிந்தங்களே யாகும்.
அதனைப்
பற்றாதார் பற்றுக்கோடு இன்றி பரதவித்துப் பருவரால் உற்றுக் கெடுவார்கள்.
இனப்பிணிக்
கணத்தினுக்கு இருப்பென ---
வாதம், ஈளை, காசம், காய்ச்சல் முதலிய நோய்க் கூட்டங்கள்
உறைகின்ற வீடு இந்த உடம்பு.
பொய்க்கடம் ---
பொய்-நிலையில்லாதது.
இன்றிருந்து நாளையழியும் இயல்புடையது.
இப்பிறப்பு
அறுத்து
---
உயிர்
எண்ணொல்லாத காலமாக இறப்பதும் பிறப்பதுமாக நிலைபேறின்றி அலைந்து உலைந்து
உழல்கின்றது. பிறவாப் பெற்றியையுடைய பெருமானை அடைந்தாலன்றி பிறவி நோய் நீங்காது.
நித்த
முத்தியைத் தரவேணும் ---
முத்தி-வீடுபேறு.
முத்தி நலமே நிலைபேறுடையது. என்றுமுள்ள அந்த இன்பமயமான முத்தி நலத்தை யருள வல்ல
தெய்வம் முருகவேள்.
உயிருக்கு
வேண்டிய நலங்கள் மூன்று; (1) இகநலம் (2) பர நலம் (3) முத்திநலம். இந்த மூன்றையும், தன்னை வழிபடும் அடியார்கட்கு
வழங்கும்பொருட்டு எந்தை கந்தவேள் மூன்று சக்திகளையுடையவராக விளங்குகின்றார்.
இகநலம்
வழங்கும் பொருட்டு இம்மண்ணுலகில் அவதரித்த வள்ளியாகிய இச்சாசக்தியையும்,
பரநலம் தரும் பொருட்டு சுவர்க்கத்தில்
அவதரித்த தெய்வயானையாகிய கிரியாசக்தியையும்,
வீட்டு நலத்தினை வழங்கும் பொருட்டு வேலாகிய
ஞான சக்தியையும் எம்பெருமான் தன்பால் அமைத்திருக்கின்றான்.
“இகமொடு பரமும் வீடும் ஏத்தினார்க்கு
உலப்பு உறாமல்
அகன் அமர் அருளால் நல்கும் அறுமுகத்தவற்கு" --- கந்தபுராணம்
பனைக்கரச்
சினத்திபத்தன்
---
யானையின்
துதிக்கை பனைபோல் நீண்டும் பருத்தும் இருக்கும்.
“பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்” --- அப்பர்.
“பனைக்கை முக படக்கர மதத்தவள
கசக் கடவுள்” ---
வேல்வகுப்பு
வெள்ளை
யானைக்கு இறைவன் இந்திரன்
இபத்தனைத்
துரத்து அரக்கன் ---
இந்திரனைப்
போரில் துரத்தித் துரத்தித் துன்புறுத்தியவன் சூரபன்மன்
பயத்தினில்
பயப்படப் பொரும்வேலா ---
பயம்-நீர்.
சூரபன்மன் முருகவேளுக்கு அஞ்சி முடிவில்கடல் நீரில் ஒளிந்தான் எம்பெருமான் வேலை
ஏவி கடல் நீரை வற்றச் செய்து அவனுடைய வலிமையை அடக்கி யருளினார்.
பருப்பதச்
செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப் படைத்த குக்குடம் ---
குக்குடம்-கோழி; ஆண்கோழி சேவல் எனப்படும். இதற்குக் காலே
ஆயுதம். காலால் போர் புரியும். அதனால் காலாயுதம் எனப்படும். வீரவுணர்வுள்ளது
சேவல். சேவல் போர் கண்டு மகிழ்பவர் இன்றும் உளர்.
“வாள கிரியைத் தனது தாளில் இடியப் பொருது
வாகை புனை குக்குட பதாகைக் காரனும்” --- திருவேளைக்காரன் வகுப்பு
இறுமாந்து
நிற்கின்ற மலைகளைச் சேவல் தன் முள் போன்ற கால்களால் இடித்துத் துகள்படுத்துமாம்.
அத்துணை வீரமும் வலிமையும் படைத்தது சேவல்.
திருப்புரப்
புறப்பியல் திருத்தகுத்து நித்திலம்---
திருபுரம்
புறத்து இயல் திரு தகு துநித்திலம்.
நித்திலம்-முத்து; து-தூய்மை.
சிறந்த
ஊர்ப்புறங்களில் உள்ள வயல்களில் அழகும் தகுதியும் தூய்மையுமுடைய முத்துக்கள்
விளங்குகின்றன. இத்தகைய வளமையான ஊர்கள் சூழ்ந்த மலை திருத்தணி.
கருத்துரை
திருத்தணி
மேவும் வேலவரே! நித்திய முத்தியைத் தந்தருள்வீர்.